Friday, December 31, 2010

வரவேற்போம்...புத்தாண்டை!!!!!!!!!



இல்லாமை இல்லாத நிலை பெற வேண்டும்
இறைவனே இன்று ஒரு வரம் தர வேண்டும்

கல்லாத மக்களுக்கு கற்பித்தல் வேண்டும்
எல்லார்க்கும் வேலை கிடைத்திடல் வேண்டும்

பொல்லாத சாதி சண்டை ஒழிந்திட வேண்டும்
பொறுமை எனும் குணம் இங்கு பொங்கிட வேண்டும்

தள்ளாடும் பாரதத்தை நிமிர்த்திடல் வேண்டும்
தரணியில் நம் புகழ் சுடர் விட வேண்டும்


மறுகி மயங்கியது போய், கருக வேண்டும் கீழ்மை, அருகி நின்ற நற்குணம் யாவும் மலர, வருக,வருக என வரவேற்போம்,புத்தாண்டை!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

Thursday, December 30, 2010

தினந்தோறும் ஒரு ஓடல்!

வைத்ததை எடுக்கப்
போவது போல்,
தினம்..தினம்..
ஓடல்..
பின்,
களைத்துப் போய்..
வீடு திரும்பல்...
மறுபடியும்,
ஓடல்..
இப்படியாகத்
தான்
போய்க் கொண்டிருக்கிறது,
வாழ்க்கை!
இளைப்பாறுதலுக்குப்
பிறகு,
ப்ரிய ஸகியைக் கூட்டிக்
கொண்டு,
காசி,ராமேஸ்வரம் செல்லும்
எண்ணம்
எனக்கு
இல்லை!!
ஒவ்வொரு வருடமும்,
ஒவ்வொரு மாதம்,,
ஒவ்வொரு கண்டம்..
முதல் வருடம் ஐரோப்பா,
பின் அமெரிக்கா,
அதன் பின்,
ஆஸ்திரேலியா...
என்று உலகம் சுற்றப் போகிறேன், ஸகியோடு!
அந்த பரவச
நினைப்பே என்னுள்,
ஆக்ஸிஜனைத் தூவ,
துள்ளலுடன் என்
ஓடல் தொடர்கிறது,
ஆஃபீசுக்கு!

Saturday, December 25, 2010

சாதகம் செய்பவரைக் கண்டால்......????

இது சங்கீத சீசன். நம் பங்கிற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற தார்மீகப் பொறுப்பு நம் தலை மேல் விழுந்ததால் எழுதுகிறோம்!
பொதுவாக, ஸபாக் கச்சேரிகள் என்றால் எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு! சங்கீதப் பிரியர்கள் புதிது, புதிதாய் துக்கடாக்கள் கேட்கலாமே என்கிற ஆர்வம்..சாப்பாட்டுப் பிரியர்களுக்கு சபாக் கேண்டீன் பக்கோடாக்கள் மீது ப்ரேமை.. நாகரீக யுவதிகளுக்கு பாடகிகள் போட்டுக் கொண்டு வரும் லேட்ட்ஸ்ட் ஸாரி..புதுப் புது மோஸ்தரில்
நகைகள் என்று ஆர்வம்..பாடகிகளுக்கோ ஆரபிக்கு ஆரஞ்சு கலர்...சிந்து பைரவிக்கு சிகப்பு..ஸாவேரிக்கு சாக்லேட் கலர் என்று விதம்,விதமாய் பட்டுப் புடவை கட்டி அசத்த வேண்டும் என்கிற கட்டுக்கு அடங்காத ஆசை..
அந்த காலத்தில், தலை நிறைய மல்லிகைப் பூச் சூடி,மலைக்கோட்டை தாம் செல்ல, அகத்துக் காரர்கள், இங்கே ஆண்டார்வீதி மொட்டை மாடியில் நின்று கொண்டு,தம்தம் மூக்கை வான் நோக்கி காட்டி அந்த மல்லிகைப் பூ ஸ்வாசத்தை ஊக்கத்துடன் வாங்க வேண்டுமே என்கிற கவலையில், ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கும் பத்தினிப் பெண்டிர் போல,பணத்தை கொள்ளை..கொள்ளையாய் கொட்டிக் கொடுக்கும் NRI களுக்கு தாம் சபாக் கச்சேரிகளில் பண்ணும் தர்பார்களை...அங்க சேஷ்டைகளை..கொனஷ்டைகளை.. நம் அமெரிக்க நண்பர்கள் அங்கே,SKEPE ல் காண வேண்டுமே என்கிற கவலை..
சபா செக்ரட்டரிகளுக்கோ, கல்லா கட்டியாக வேண்டுமே என்கிற படபடப்பு...
இப்படியாகத் தானே இங்கு சங்கீதங்கள் தழைத்துக் கொண்டிருக்கின்றன!
நானும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..புதிது..புதிதாக ஆட்கள் தான் வருகிறார்கள்..
பாடுவதற்கும் சரி..கேட்பதற்கும் சரி..ஆனால், சங்கதிகள் என்னவோ அரதப் பழசு தான்..அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அனைவரும்! . ஒரு மோஹனம்..பைரவி..தோடி..சஹானா..ஷண்முகப்ரியா மட்டும் இல்லையென்றால் இங்கே பாதிப் பேர்களுக்கு பைத்தியமே பிடித்து விடும்..
இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லியாக வேண்டும்..வித்வான்களுக்கும்,சங்கீத கலா ரசிகர்களுக்கும் ஒரு பாலமாக ஸபாக்கள் இருந்த காலம் போய்..இப்போதெல்லாம் யார்யாரோ வருகிறார்கள்..யார்யாரோ பாடுகிறார்கள்..மொத்தத்தில் ஒரு சினிமா தியெட்டர் போல ஆகி விட்டது சங்கீத சபாக்கள்!
ஒரு பிரபல சபாவில் மாலி கச்சேரி..சொதப்பிக் கொண்டிருந்தார்..அவர் கச்சேரி என்றால் அந்த காலத்திலேயே நூறு ரூபாய் எண்ட்ரன்ஸ் ஃபீஸ்! சொதப்பிய சொதப்பலில்
ஒரு கிழவர் எழுந்தார். எழுந்தவர் எரிச்சலுடன் கத்தினார்..”கட்டேலப் போறவனே வள்ளிசா,
நூறு ரூபாய் கொடுத்து உன் கச்சேரி கேட்க வந்தேன் பாரு..என்னை ஜோட்டால அடிக்கணும்..”
எல்லாருக்கும் பயம்! மாலிக்கு கோபம் ஜாஸ்தி..விருட்டென்று ஃப்ளூட்டை கடாசி விட்டு போய் விடப் போகிறாரோ என்று, ஆத்திரத்தில் அந்த கிழவரைப் பார்க்க..ஒரு நிமிடம் மெளனம்.. ஒரு நிமிடம் தான்..
பிறகு அங்கு கோலோச்சியதோ கர்ணாமிர்த ஸாகரம்!
” என்ன சொல்றேள்?” என்று மாலி அந்த கிழவரைப் பார்க்க “ அப்பா நீ ஸ்ரேயஸா இருக்கணும்”னு ஆசிர்வதித்தாராம் அந்த கிழவர்..
அந்த மாதிரி ரசிகாளுக்கும்..பாடகனுக்கும் உள்ள ஒரு அன்யோன்யம் இப்பல்லாம்
கிடையாது..
மாலி மாதிரியெல்லாம் சோபிக்கணும்னா அதுக்கு அசுர சாதகம் பண்ணனும்..வித்தை கை கூடி வர்ரது என்பது பகவத் ஸங்கல்பம்..எல்லாருக்கும் அவ்வளவு இலகுவில் வந்து விடாது..அது!
இப்படியாகத் தானே என் பக்கத்து வீட்டுக் காரருக்கு சங்கீதப் பைத்தியம் பிடிக்கப் போய்..
அர்த்த ராத்திரியில் அவர் அபாரமாய் சாதகம் பண்ண..அடியேனுக்கு அது பாரமாய் போய்..
நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே..அப்பப்பா....
அதற்காக ‘சாதகம் செய்பவரைக் கண்டால்..பயம் கொள்ளலாகாது பாப்பா..மோதி மிதித்து விடு பாப்பா..’ என்று அந்த முண்டாசு கவிஞனைப் போல் பாடவா முடியும்?
இராத்தூக்கம் போய் கண்கள் வீக்கியது தான் மிச்சம்!

Wednesday, December 22, 2010

இனி ஒரு விதி செய்வோம்!!!!

நாடு அவல நிலையை நோக்கிப்
போய்க் கொண்டிருக்கிறது...
காரணம் யார்?
ஆளும் கட்சியா...
காவல் துறையா...
அராஜகக் கும்பலா...
சமூக விரோத சக்திகளா...
பிஸினஸ் முதலைகளா...
கட்டைப் பஞ்சாயத்தா..
எதிர் கட்சிகளா.....
யோசித்துப் பார்த்தேன்...
யாரும் இல்லை..
பின்,
யார் காரணம்?
நான் !!!!!!!
நானா????????
ஆம், நான் தான் !!!
நான் என்ன ஒழுங்கா,
பிறரை விமர்சனம் செய்ய?
பட்டியலிட்டேன்.
காலையில்,
இரண்டு ஊழியர்களைப்
புறம் தள்ளி,
கால் மிதித்து,
பஸ்ஸில் ‘சீட்’டைக்
கைப்பற்றினேன்..
ஆஃபீஸ் டைம் அரை மணி
எடுத்துக் கொண்டேன்,
டிஃபன் சாப்பிட!
முக்கால் மணி நேரம்,
ஆஃபீஸ் ஃபோனில்,
வீட்டிற்குப் பேசினேன்..
ஆஃபீஸ் பேப்பரில்,
பசங்கள் ஸ்கூல் புஸ்தகங்களுக்கு,
ஆஃபீஸ் நேரத்தில்,
அட்டை போட்டேன்..
எனக்கு என்ன தகுதி
இருக்கிறது,
பிறரை குறை சொல்ல?
இனி,
நாம்...
இல்லையில்லை...
நான்
நேர்மையாய் இருக்க...
முயற்சி செய்வேன்..
இப்படி,
நம்மில் ஒத்த
கருத்துடைய ஒவ்வொருவரும்,
இருப்போம்..
யார் எப்படிப் போனால் என்ன..
நாம் இருப்போம்,
நேர்மையாய்...
ஆத்திரக்காரன் தான்,
சுடு சோற்றில்,
நடுவில் கை வைப்பான்...
நாம்,
மெதுவாய்,
பக்கவாட்டில் சாதம்,
ஆறிய பிறகு,
எடுப்பது போல்,
ஜீவாதாரமான,
கிராமங்களுக்குச்
செல்வோம்....
ஒவ்வொருவரும்
தம்தம் நடத்தையை
வைத்து,
மற்றொருவரை,
பின் தொடர வைப்போம்..
ஒரு பொது நலத்திற்கு,
மிலியனாய்க் குவிவோம்!
கதவுகள் இல்லா,
வீடுகள் சமைப்போம்!!!
ராணுவம் இல்லா,
நாட்டினை அமைப்போம்...
அகில உலகுக்கும்,
நம் இனிய பாரதமே,
தலைமையாய்.........

Wednesday, December 15, 2010

நூல் அறிமுகம்!!


எமக்கு ’அம்மா..உன் உலகம்’ என்கிற கவிதை தொகுப்பு வந்தது.திருமதி தனலட்சுமி பாஸ்கரன் என்ற கவிதாயினியின் கவிதைச் சொட்டுகள்.அப்பப்பா..என்னதொரு சொற்கட்டு..
வீரியமான வார்த்தைகள் அதனதன் பீடத்தில் அற்புதமாய் அமர்ந்து கொண்டு..
ஒரு அற்புதமான இரட்டை வட சங்கிலிக்கு நடுவில் பதித்த மாணிக்கக் கல் போல, நெய்வேலி பாரதிக்குமாரின் முன்னுரை வெகு நேர்த்தியாய்...
வாருங்களேன், கொஞ்சம் என்னுடன்!!
*
ஒன்றிரண்டு மாதுளை முத்துக்களை சுவைப்போமா.......?

# தலைப்பு : புதுமைப் பெண்
கவிதை :
”ஆகவே
பதட்டத்தோடு
அச்சந்தவிர்த்து
வீர நடை போடு பெண்ணே!”
பலத்த கைத்தட்டலுடன்
பேச்சை முடித்தபின்
பரபரக்கிறாள் இரவுக்குள் வீட்டையடைய....
# தலைப்பு: பொங்கல் சீருடை
கவிதை :
சீருடையே புத்தாடைகளாயின
சேரி சிறுவர்களுக்கு...
# தலைப்பு: க(நே)ச சதுர்த்தி
கவிதை :
கரைக்க மனமில்லை
வீடு திரும்பிய பிள்ளையார்
வணங்கியது பக்தனை!
# தலைப்பு: மனிதம்
கவிதை :
ஜன நெரிசல் மிக்க
சாலையின் நடுவில் குருதி வெள்ளத்தில்..
பிரசவித்த பிச்சைக்காரியைச்
சூழ்ந்து மறைத்த பெண்கள்..


*
நச் நச்சென்று கவிதைகள்..சொல்லிக் கொண்டே போகலாம். ஈரோடு தமிழன்பன் கூறியது போல ‘ பசையான வரிகள் படிப்பவரை இழுத்தணைத்துக் கட்டிக் கொள்ளும்’
ஆனால் ஒன்று..
இந்த கவிதைப் புத்தகம் உங்களிடம் இருந்தால்.....
1. பெரிய மாமரத்து நிழலில் போட்ட பெஞ்ச்.
2. கூச்சலிடும் தேன் சிட்டுகள்.
3. ஒரு டேப் ரிகார்டர்.அதிலிருந்து காற்றில் கசிந்து வரும்
பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட்டு..
4. ஒத்த கருத்துடைய மூன்று இலக்கிய நண்பர்கள்..
5. கொறிக்க கொஞ்சம் முந்திரி பக்கோடா..
6. ப்ளாஸ்க் நிறைய கள்ளிச் சொட்டு காஃபி.
நேரம் வெகு ஸ்வாரஸ்யமாய் போய்க் கொண்டிருக்கும்..
ஒரு பிரபல இலக்கிய வாதி சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.
...இந்த ஜனசமுத்திரத்தில் நான் ஒரு துளி.எம் எழுத்து மாபெரும் அலை..
அந்த அலை போல வளர வாழ்த்துக்கள்

புத்தகம் கிடைக்கும் இடம்:
உலா பதிப்பகம்,
30/23,ஜெ.எம். வளாகம்,
சின்னக் கடை வீதி,
திருச்சி-620 002.
விலை : ரூபாய் 50/-

Tuesday, December 7, 2010

மாதா,பிதா,குரு,கிரி!

ஆங்கரை ஷண்முகா பாடசாலையில், தேவசகாயம் வாத்யார், எங்களுக்கு மூணாம்ப்புக்கு.
விட்டார்னா, செவுனி ’ங்கோய்’னு அரை மணி நேரம் கேட்கும். வாய்பாடு தெரியாட்டா,
அப்படியே, அலாக்கா தூக்கி ஐயன் வாய்க்காலில் போட்டுடுவார்.ஆனா, ரொம்ப நல்ல வாத்யார். நல்லா
படிக்கிற பசங்களை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.
நாலாப்பு, செருப்பாலூர்..அஞ்சாப்பு கோதையாறு லோயர் கேம்ப் மிடில் ஸ்கூல்!
ஆறாம்ப்பு...மறுபடியும் ஆங்கரை!
இந்த ஸ்கூல் ஆங்கரையில் இல்ல..லால்குடி போர்டு ஐஸ்கூல். இரண்டு,மூன்று கிலோ
மீட்டர் நடந்து போகணும்.
எங்க ஊர் பசங்க எல்லாம் சேர்ந்து போவோம்.அப்ப அலுமினிய டிபன் பாக்ஸ் தான்.பாவம்,கிரி தேமேன்னு அதில டிபனை (டிபன் என்ன..தயிர்சாதம்,வடுமாங்கா தான்)எடுத்துண்டு வர,நான் அடம் பிடிச்சு,பார்சல் கட்டச் சொல்லி, அண்ணா பார்சல் கட்டித் தருவா..!ஊர்ல நிறைய பேருக்கு விதம்,விதமா பேரு..ஒருத்தம் பேரு சாம்பார் அம்பி..பட்டம்பி.. நான் டெய்லி பொட்டலம் கட்டிண்டு வரதுன்னால, எம் பேரு பொட்டலம் அம்பி!
எங்க சாப்பிடுவோம் தெரியுமா?
லால்குடி ஸ்கூல் போற வழியில சந்தைப் பேட்டை வரும்..அப்புறம் செருதூர்.
செருதூர் அக்ரஹாரத்தில டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் கோபால கிருஷ்ண மாமா வீடு!
அங்க தான், வரிசையா ஆங்கரை பசங்க எல்லாம் டிபன் பாக்ஸ் வைச்சிருப்போம்.
சாப்பிட்டுவிட்டு எச்சலிடுவது போல பாவ்லா பண்ணுவோம்.’ஆங்கரை குழந்தைகள் இவ்வளவு சமர்த்தா?’ என்று அந்த தாடிக் கார கோபாலகிருஷ்ண மாமா ஆச்சர்யப் படுவார்.
ஆங்கரையிலிருந்து எங்க ஸ்கூலுக்கு வர பஸ்ஸில் பத்து காசு தான். அந்த காசை மிச்சம்
பண்ணி,லால்குடி பூங்காவனத்துல சினிமா பார்ப்போம்..
’அம்மா..அம்மா சினிமா போய்ட்டு வரோம்மா.. ’
‘ பரிட்சை வந்தாச்சு..சினிமால்லாம் போகக் கூடாது..’
‘ அம்மா..வந்து படிக்கிறோம்மா..’
துணைக்கு தாத்தா வருவார்.’குழந்தைகள் தான் போய்ட்டு வரட்டுமேம்மா..ஒரு
ரிலாக்சேஷன் வேண்டாமா’ என்று சொல்ல, நான் கிரி சினிமாக்கு ஜுட்..சிவாஜி படம்
பேர் தெரியலே..ஆனா, அதில ஒரு பாட்டு வரும் ‘ யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா, போங்க..என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க..’
ரோடில சிரிச்சு பேசிண்டே போவோம்..அப்ப சிண்டிகேட், இண்டிகேட் வந்த புதிசு.
சினிமாக்கு போகவேண்டாம்னு சொன்ன அம்மா...இந்திரா காந்தி..பர்மிஷன் கொடுத்த தாத்தா மொரார்ஜி தேசாய் !!
இப்படித்தான் அபூர்வமா ’லட்சுமி கல்யாணம்’ சினிமா போக பர்மிஷன் கிடைச்சது.ஆனா, மழை கொட்டப் போறா மாதிரி இருந்தது.
நானும், கிரியும் விபூதியை குழைச்சு இட்டுண்டு ஸ்வாமி படம் முன்னால..
‘ததோயுத்த பரிஸ்ராந்தம்’னு ஆதித்ய ஹ்ருதயம் ஆரம்பித்தோம். அந்த ஸ்தோத்ரம் சொன்னா
மழை போய் வெயில் வந்துடும்னு நம்பிக்கை! அண்ணா எங்களுக்கு கோதையாறுல சொல்லிக் கொடுத்த ஸ்லோகம். அது ஒண்ணு தான் எனக்கு தெரியும், இன்னிக்கும்!
108 நெ. வீட்டுக்கு எதிர்த்தாற்போல், கண்ணன் என்று ஒரு ஆள்..எங்க சித்தப்பா வயசு இருக்கும்.எப்ப பார்த்தாலும் ‘டைட்ஸ்’பேண்ட் தான்! அதனால,அவருக்கு
ஒட்டடை குச்சி டைட்ஸ்னு பேர் வைச்சோம்.
அவங்க அப்பா, இப்ப போட்டுக்கிறா மாதிரி ஒரு முக்கால் ட்ராயர்ல் காட்சி தருவார்!
ரொம்ப நாள் பம்பாயில் இருந்துட்டு, இங்க வந்திருக்கா..அவங்க எங்கள வினோதமாய்
பார்க்கிறா மாதிரி நாங்களூம் அவங்களைப் பார்ப்போம்!மிருக காட்சி சாலைல,குரங்கு நம்மளப்
பார்க்குமே அது போல நாங்க பார்ப்போம், டைட்ஸை!
லீவ்ல குரு வருவான்..அதான் எங்க கிட்டு சித்தப்பா பையன். அவன் வந்தா ஜாலி தான்..கிரியை விட ஒரு வயசு சின்னவன்..
எங்க ஃபேமிலிக்கே மூத்த பேரன் நான் தான்.. நான் தான் முத்தண்ணா..
மூத்தவனாப் பொறந்த பாவத்தினால, இந்த கிரி,குரு,சசி,ரமா எல்லாரையும் ஊஞ்சல்ல
உட்கார்த்தி வைச்சு, நான் தான் காலம் பூரா ஊஞ்சலை ஆட்டிண்டு இருப்பேன்!
பெரிய மர டேபிள்..டிராயருக்கு கீழே, சாமான் வைக்கிறதுக்கு பெரிசா இடம் இருக்கும்..
அதே மாதிரி அந்த பக்கமும்!
எங்களுக்கு நாகர்கோவிலுக்கு ஸ்டேட் எக்ஸ்ப்ரஸ்ல போன ஞாபகம் வந்து விடும்..
நான்,கிரி,குரு எல்லாரும் அதில உட்கார்ந்துண்டு, ’டோரை’ சாத்தி விடுவோம்.
பஸ் போற மாதிரி சவுண்ட் விடுவான் கிரி..அந்த சவுண்ட் நின்னா, மதுரை வந்தாச்சுன்னுஅர்த்தம். அப்புறம் டின்னவேலி, நாங்குனேரி, நாகர்கோவில்னு வண்டி போகும்.
கடம்பூர் வந்தா போளி சாப்பிடறதா பாவ்லா !மதுரையில டிஃபன்!
பக்கத்து அகம் பாட்டி எங்க எல்லார் மேலும் ரொம்ப ப்ரியம்! வாய் அலுக்காம எப்ப
பார்த்தாலும்,கிரி ராஜா, குரு நாதா என்று சொல்லிக் கொண்டே இருப்பாள்..எங்கள் மீது
அவ்வளவு பாசம்..
நானும்,கிரியும் நவராத்திரி கொலுவுக்கு எல்லார் வீட்டிலும் போய் அழைப்போம்..ராம, லெக்‌ஷ்மண வேஷம் போட்டுக் கொண்டு அக்ரஹாரத்தில் நடந்தால்,அடையாளம் தெரியாமல் தெரு நாய் கூட குரைக்கும்!
அவ்வளவு தத்ரூபமாய் இருக்கும் வேஷம்!
லீவு வந்தால் ஜாலி தான்.
லவா..லவா..லக்கி ப்ரைஸ்!
பெரிய கார்ட்போர்டை எடுத்துக் கொள்வோம்.அதில் இரண்டாகப் பிரித்து, மேல் பாகத்தில்
கார் பொம்மை, பலூன்,ஒவ்ரங் உடாங் ஊசி பட்டாசு வெடிப்பது போன்ற படம், கரடி பொம்மை..எல்லாம் ஒட்டியிருக்கும். கீழ் பக்கம் பேப்பரை சுருட்டி ஒட்டி இருப்போம்.
ஒவ்வொன்றிலும் ஒரு நம்பர். ஒரு பேப்பர் கிழிக்க ஐந்து பைசா. அந்தந்த நம்பர் கிடைத்தால்,
அந்தந்த நம்பர்களுக்கு உரிய பரிசுப் பொருள் கிடைக்கும்!
ஆனால் எல்லா நம்பருக்கும் ஆரஞ்சு மிட்டாய் தான் போட்டிருக்கும் விஷயம் ஸ்ரீதராகிய
எனக்கும், கிரிக்கும் மட்டும் தான் தெரியும்!
எல்லாமே...போ..............................ச் !!!!!!!!!!!!!!!

Saturday, December 4, 2010

பெண்ணே.......!!!


பெண்ணே!
என் அன்பை,
நீ நிராகரித்து விட்டாய்...
பரவாயில்லை..
ஒரு வேளை..
என்னை,
ஏற்றுக் கொண்டிருந்தால்,
நம்,
காதல் நிறைவேறி,
கடிமணம் புரிந்து,
இல்லறம் நடத்தி,
பிள்ளைகள் பெற்று,
வளர்த்து ஆளாக்கி,
அவையும் ஆளாகி,
ஒவ்வொன்றும்,
ஒரு திசைக்குப்
பறந்து..
எனக்கு அப்பா..
உனக்கு அம்மா..
என்று,
முதுமையில்,
நம்மைப்
பிரித்து விடுமே!
அதற்கு இது,
எவ்வளவோ..
பரவாயில்லை...
புத்திக் கொள் முதல்,
தாடியோடு போகட்டும்!!!!

Friday, December 3, 2010

சிவன்!


” சிவன் என்ன பண்றீங்க?”
” சிவன் ஒரு நிமிஷம் வந்துட்டுப் போங்களேன்”
” மிஸ்டர் சிவன்..இதை எப்படிங்க போஸ்ட் பண்றது?”
அது ஒரு மத்திய அரசு அலுவலகம்...
சென்னை..
எதிர்த்தாற் போல் ஜிலுஜிலுவென கடல் காற்று வீசும் சூழல்.
நார்த் பீச் ரோடு!
அத்தனை பேரும் சிவன் சிவன் என்று அழைக்க, அந்த மனிதரோ ’சிவனே’ என்று இராமல்..கொஞ்சம் கூட கோபப் படாமல், பம்பரமாய் சுழன்று கொண்டு...அவர்கள் அனைவருக்கும்.. ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார்.
கட்டையாய்..மா நிறத்துக்கும் சற்று மாற்று கம்மியாய்..எல்லாரிடமும் வாஞ்சையாய்..
பரிவுடன்... பாசத்தை பொழிந்து...
அது தான், சிவன்!
நான் என் சகோதரருடன், ஒரு பத்து,பதினைந்து வருடத்திற்கு முன்னால் அங்கு சென்ற போது நடந்தது .....

“ சார் யாரு?”
“ என் ப்ரதர், சிவன்”
“ சாருக்கு திருநெல்வேலி பக்கமா?”
“ எப்படி சார் கண்டுபுடிச்சீங்க?”
வெள்ளந்தியாய் சிரித்தார், சிவன். கறுத்த அவர் உதடுகள் ஊடே, பளிச்சென்ற வெண்பற்கள்!
“ அந்த ஊர் பக்கத்தில தான், இப்படி சிவன்னு பெயர் வைப்பாங்க. லால்குடில ஸ்ரீமதி
கன்யாகுமரில தாணுன்னு..”
என்னோட மேதா விலாஸத்தை நான் காண்பிக்க..
”சார்..உங்க பிரதர் ரொம்ப இண்ட்ரஸ்டிங்”
”சிவன் வாங்க நேரமாச்சு!”
“ ஒரு நிமிஷம் இருங்க, சார். சாருக்கு ’ஹானரோரியம்’ கொடுத்துட்டு
வந்துடறேன்..”
” நாங்க குடுக்க மாட்டோமா?”
”இனிமே.. நீங்க தானே கொடுக்கப் போறீங்க”
சிரித்தார்,சிவன்.
“ சிவன்..சார் கூப்பிடறாருங்க..எல்லாரும் வந்தாச்சு!”
“ தோ..வரேன்..”
“ என்ன சார்..பார்ட்டி.. ட்ரான்ஸ்வரா?”
“ ஈஸ்வரா..இன்னிக்கு நான் ரிடையர்ட்ஆறேன், சார்”
அடுத்த நாளும் அந்த ஆஃபீஸ் சென்றேன்.
ஆனால், அந்த ஆஃபீஸில் “ஜீவன்” இல்லை!!!!!

Tuesday, November 30, 2010

தளிர்கள், வேர்களையும் பார்க்கும்!

”வனஜா”
” சொல்லுங்க”
” சொன்னா, கோச்சுக்க மாட்டியே..”
“ என்ன பீடிகை பலமா இருக்கு?”
“ நான் கேட்டதற்கு முதல்ல பதில் சொல்லு”
“ கோச்சுக்க மாட்டேன், சும்மா சொல்லுங்க..”
” உடனே வேண்டாம். நிதானமா யோசிச்சு பதில் சொன்னாப் போறும் “
“என்னங்க சொல்லப் போறீங்க?”
ஆர்வத்துடன், கேட்டாள், வனஜா.
”அது வந்து..அது வந்து..”
“ அட, சும்மா சொல்லுங்க”
கிரிக்கு பிரளயம் நடக்குமோ என்று ஒரு பயம்.அந்த பயத்தை பாசம் வென்றது!
“ வனஜா.. நீ இப்ப இருக்கிற நிலையில, யாராவது பெரியவங்க வீட்ல இருந்தா
நல்லா இருக்குமில்ல..அதான்..எங்க அப்பா,அம்மாவை மறுபடியும் வீட்டுக்குக்
கூட்டிகிட்டு வரலாமான்னு தான்..கொஞ்ச நாளைக்கு மட்டும் ”
கிரியின் குரல் தழுதழுத்தது.
வனஜா செல்லமாக வள்ர்ந்த பெண்..அவன் அம்மாவிற்கும்,அவளுக்கும் ஒத்து
வராததினால், திருமணம் ஆன ஆறாவது மாசமே, அவள் ஆஃபீஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர்
மூலம் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டாள்.
அதற்குத் தான் கிரிக்கு இத்தனை தயக்கம்!
” வாவ்.. ”
துள்ளிக் குதித்தாள், வனஜா..
”பார்த்து..பார்த்து...குழந்தை..”- பதறினான், கிரி.
” நானே உங்க கிட்ட சொல்லணுன்னு நினைச்சேன்..குட்டிப் பாப்பாக்கு கதை சொல்ல
தாத்தா, பாட்டி இருந்தாத் தானே நல்லா இருக்கும்..அவங்க இனிமே எங்கேயும் போக வேண்டாம்..இனிமே அவங்க எப்ப்வும் இங்க தான் இருப்பாங்க..”
“எதனால இந்த திடீர் மாற்றம்?”
கெமிஸ்ட்ரி புரியாமல்,முழித்தான், கிரி.
“...இந்த ஆம்பளைங்களையே.. நம்ப முடியாது. நேற்று வந்த பொண்டாட்டி பேச்சக் கேட்டு பெத்தவங்களையே, முதியோர் இல்லம் அனுப்பிச்ச ஆளு தானே, நீங்க..? நாளைக்கு
உங்க புள்ளையும் இப்படி செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்? அதுக்குத் தான் ஒரு கூட்டுக் குடும்ப சூழலில் அவனை வளர்க்கப் போறேன்”
செல்லமாக அவன் குமட்டில் வனஜா குத்த, மயங்கி விழுந்தான், கிரி!

வேர்கள்..தளிர்களையும் பார்க்கும்!!!

Thursday, November 25, 2010

யாதும் ஊரே...யாவரும் கேளிர்...

யாதும் ஊரே..
யாவரும் கேளிர்!
நீங்களும்...கரட்டாம்பட்டி..
நானும் கரட்டாம்பட்டி..
நீங்க படிச்சது
ஷண்முகா பாடசாலை..
நான் படிச்சதும்
ஷண்முகா பாடசாலை
நீங்க என் சித்தப்பா பிள்ளை..
நான் உங்க பெரியப்பா பிள்ளை...
அப்ப, பையைத் திறந்து,
பிஸ்கெட்டைக் கொடுங்க..
நம்பி சாப்பிடலாம்..!
( தொலை தூர ரயில் வண்டி பிரயாணத்தில் இருவரின் உரையாடல்)

Tuesday, November 23, 2010

விரல் நுனியில்...


" ஐயையோ...என் பர்ஸ்"
" பிக் பாக்கெட்"
" விடாதே.."
" பிடி"
" குத்துங்கடா எல்லாரும்."
பிடிபட்டேன், நான்.
அதுவும் முதல் தடவையாய்!
ஆளாளுக்கு நொக்கி எடுக்கிறார்கள். எவனிடமோ, திருட்டு கொடுத்தவனெல்லாம்
என்னிடம் வந்து பழி தீர்த்துக் கொள்கிறான் போல....
அடித்த அடியில் மயக்கம் வருகிறது....
.. விட மாட்டான்கள் போல இருக்கிறதே!
கண்கள் சொருகிக் கொண்டே போக...
தண்ணீ...தண்ணீ...
வாய் முணுமுணுக்க....
நான் மட்டும் ஏன் இப்படி?
என்ன செய்வது? பாழும் பசி, தேவை மேலும் சூழ்நிலை.. அடுத்தடுத்து இறந்த பெற்றோர்...எங்கே பாரமாய் ஒட்டி கொண்டு விடுவானோ என்ற உறவுகளின் உதாசீனம்.....

இப்படி இருக்கிறேனே..அந்த நாளில் நாங்கள் விளையாடும் விளையாட்டே..'திருடன் போலீஸ் அதில் நான் தான் போலீஸ் . பாக்கி பசங்க எல்லாம் திருடன். ஒவ்வொருத்தனையும் கப்பு..கப்புன்னு பிடிப்பேன். அதிலும் அந்த ராஜேஷை சொல்லி வைச்சு புடிப்பேன்..எல்லா விளையாட்டிலுன் நான் போலீஸ்..அவன் திருடன்.

மணி..வெங்கிட்டு...பாலு...எல்லா திருட்டுப் பசங்களையும் (விளையாட்டுல தான்)பார்த்தாச்சு. எல்லாப் பசங்களும் கௌரவமாய் இருக்க, நான் மட்டும் அவலமாய்...சமூகத்தின் கிழிசலாய்......
ஐயோ..ஆண்டவன் என்ன மட்டும் ஏன் இப்படி படைச்சான்?
போன வாரம் கூட ரகு கண்ணில் பட்டான். .ப்ரொஃபஸராய் இருக்கிறானாம்.
"நீ.......?" - என்றான்....
"விரல் நுனி வித்தகன் "
" அப்டீன்னா?"
முழிப்பு வந்து விட்டது.
தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்திருப்பார்களோ?
திருட்டுப் பயலுக்கு மரியாதை? எவன் தருவான்?
கைகளில் சிராய்ப்பு....ரத்த கசிவு..உதடு கிழிந்து...சட்டை..கைலி ...டர்.....ர்....ராகி
பிறாண்டி இருக்கிறார்களே!
அட ...இதென்ன.. B 2 போலீஸ் ஸ்டேஷனா?....எஸ். ஐ. வளையாபதி... ஒரு கொலைகார பாவி ஆச்சே..
கொன்னு போட்டுவானே...அட கடவுளே!
கண்களை சிரமப் பட்டு திறக்கிறேன்...
வெளிராய்..
எதிரில்....
.வளையாபதி இல்லை..
அப்ப இது யாரு...
புது ஆளா?...
கண்களை மீண்டும் சிரமப் பட்டு, அகலமாய் விரிக்க...
... ராஜேஷ் ?

Saturday, November 20, 2010

என்னுள் எழுந்த ஏன்கள்????



( கற்றறிந்த பெரியவர்களின் விளக்கத்திற்காக...... )

* மலையை ‘அவனா’கவும், நதியை ‘அவளா’கவும் கூறல் மரபு.பின்
அந்த நதிக்கு மட்டும் பிரம்மபுத்ரா என்கிற பெயர். ஏன்?
* பொய்யான இவ் யாக்கையை மெய் என்று கூறுகிறார்களே, அது ஏன்??
* ’ஐயம் இட்டு உண்’ என்பது முது மொழி. அவ்விடத்தில் ’இட்டு’ என்பது
சற்றே இழி நிலையைக் குறிப்பதல்லவா? ‘ விருந்தினர் போற்றுதும்..’
’அதிதி தேவோ பவ..’ என்று விருந்தினர்களை உயர்வாய் மதிக்கும் போது
அந்த ‘இட்டு’ இங்கு ஏன்???
* ‘ கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்கிறான் கம்பன். அனுமனின்
வாயிலாக ‘கண்டேன் சீதையை’ என்று சுருக்கமான சொன்ன அந்த
’சொல்லின் செல்வன்’ ’கண்டனன்...கண்களால்’ என்கிறானே. கண்களின்
வரவு அங்கு தேவை இல்லையே? அது ஏன்????

Friday, November 19, 2010

சாரல்.....


வற்றாத காவிரியைப்
பார்க்கையிலே பரவசம் போல்,
நற்றாமரைக் குளத்தில்,
நறுமணமும் பூத்தது போல்,
கற்றாரைக் காண்கையிலே...
புலமை நம்முள் புகுந்தது போல்,
உற்றாரை உவகைக் கொள்ளும்,
உதவி செய்யும் பாங்கினைப் போல்,
குற்றால அருவி தனில்,
குளிக்குமந்த பரவசத்தை...
முற்றாத தமிழினிலே,
முயலுகின்றேன்...முடியவில்லை !!!!

Friday, November 12, 2010

மசால் தோசையும்...'மைசூர் கேஃப்'பும்...........

ஏற்கனவே கோதையாறு லோயர் கேம்ப் பற்றி
சொல்லி இருக்கிறேன். நாகர் கோவிலில் இருந்து அம்பாடி எஸ்டேட் வழியாகப் போக வேண்டும். 'கர்ரூஸ்' மாதிரி வீடுகள்..ஒரு அடுக்கில் ஐந்து வீடுகள்..அதற்குப் பிறகு பத்து
படி மேல் ஏறினால், அடுத்த அடுக்கு. இப்படியே
போய்க் கொண்டிருக்கும்.
கொஞ்சம் மேலே சென்றால், அங்கு ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷெட். மேலே புகை போக்கியில் இருந்து எப்போதும் புகை வந்து கொண்டிருக்கும்.விடாமல் பாட்டு தான்.
அப்போது ஃபேமஸாய் இருந்த 'முத்துச்
சிப்பி மெல்ல, மெல்ல நடந்து வரும் ' என்ற
சினிமா பாட்டு..அது விட்டால் ஒரு கிறிஸ்டியன் கரோல்..' ஸர்வ லோகாதிப நமஸ்காரம்..' என்று..அதை விட்டால் ' தேவாதி தேவனே வா..கார்த்திகேயனே வா..எந்தன் உள்ளம் அழைக்குதிங்கு வாராய்' என்ற பாடல்..
அது தான் எங்கள் மைசூர் கேஃப் !
அண்ணா முதல் தடவையாய் அங்கு எங்களுக்கு டிஃபன் வாங்கி தந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அண்ணா ப்ராஜக்ட்டில் அட்மினிஸ்ட்ரேஷன் பார்த்ததினால் ஏக மரியாதை!
" ஸார்...உங்க பசங்களா? "
" தம்பி என்ன படிக்கிறீங்க.."
" தம்பி நீங்க.."
என்று பொடியன்களான எங்களுக்கும்
மரியாதை. ஆலையில்லா ஊருக்கு அது ஒன்று தான் இலுப்பப் பூ என்பதால் எப்போது பார்த்தாலும் செம கூட்டம் இருக்கும்.
அந்த சமயத்தில் தான், நாங்கள் ராணி படிக்க ஆரம்பித்தோம்..தினத்தந்தியில் 'கன்னித் தீவு' படிக்க ஆரம்பித்தோம். ராணியில் உள்ள
படங்களைப் பார்த்து, படம் வரைய பழகினோம். இன்னமும் ராணியில் வந்த அந்த 'குரங்கு குசலா'
கார்ட்டூன் ஞாபகம் இருக்கிறது.
ஆஹா..அந்த மைசூர் கேஃப் ஐ அம்போ என்று விட்டு விட்டோமா? இல்லை..இல்லை..இதோ, விஷயத்துக்கு வருகிறேன்
அந்த ப்ராஜக்டின் ஹெட் ஒரு 'எக்ஸிக் யூட்டிவ் எஞ்சினீர்'. அவர் ஒரு நாள் 'ரவுண்ட்ஸ்'
போகும் போது, பசித்தது போல இருந்தது. ' வாய்யா' என்று அண்ணாவையும் கூப்பிட்டுக் கொண்டு 'மைசூர் கேஃப்' சென்றார்.
சூடாக மசால் தோசை ஆர்டர் செய்து இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, அந்த 'எக்ஸிக் யூட்டிவ் எஞ்சினீர்' வினோதமாய் ஒரு காரியம் செய்தார். அவர் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் போண்டா வைத்திருந்த பேப்பரை யாரும் பார்க்காத போது 'லபக்' செய்தார். அண்ணா பார்த்தவுடன் 'உஸ்'என்று சைகை காண்பித்து, 'ஆஃபீசுக்கு வா சொல்றேன்' என்றார் மெதுவாக.
அண்ணாவிற்கு ஒரே குழப்பம்!
ஆஃபீஸ் போனதும் முதல் வேலையாய்
அந்த EE , ப்யூனைக் கூப்பிட்டு STORE KEEPER ட்ட, நான் கேட்டதா இந்த STORE RECEIPT VOUCHER ஐ வாங்கிண்டு வா' என்றவர், அண்ணாவைப் பார்த்து 'இப்ப கூத்தை பாரு' என்று சிரித்தார்.
கொஞ்ச நேரத்தில அந்த 'எஸ்.கே' 'துண்டைக் காணோம்..துணியைக் காணோம்'
என்று ஓடி வந்தார்.
' ஸார்..அந்த வவுச்சர் இல்லியே ஸார்..உங்க கிட்ட கையெழுத்துக்கு வைச்சிருக்கேனோ'
' எனக்கு பார்த்த ஞாபகம் இல்லியே,
நீயே பாரு என் டேபிள்ள..'
' ஸார்...இல்லியே..ஸார்..'
' எங்கே போச்சு, அது?'
'எஸ்.கே' யின் முகம் பரிதாபமாக இருந்தது.
கொஞ்ச நேரம் அவரை தவிக்க விட்டு, அந்த EE 'இதுவா, பாரு' என்று பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர் எடுத்தார்.
அது மைசூர் கேஃபில் பக்கத்து நபர் போண்டா சாப்பிட்டு போட்ட பேப்பர்..
அந்த SRV !
' என்னய்யா ஆஃபீஸ் நடத்திறீங்க..இதோ இப்பவே உனக்கு ஒரு 'மெமோ' கொடுக்கப் போறேன்..'
ஒரு 'மெமோ'வில் ஆரம்பித்து கொஞ்சம் அடங்கி, ஒரு 'வார்னிங் லெட்டர்' குடுக்கலாம்னு, தீர்மானிச்சு, கடைசியில ஒரு காட்டுக் கத்தலோட விஷயம் முடிஞ்சது!
அன்னி ராத்திரி அண்ணா இந்த விஷயம் சொல்லிட்டு ஒன்று சொன்னது, இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
' ஆஃபீஸர்ங்கிறவன் சீறலாம்..ஆனா கடிக்கக் கூடாது ! '

Tuesday, November 9, 2010

கருந்தேள்...!!!!!!


வாயகன்ற பாத்திரத்தில் வைத்திடலாம், மூடி
திறக்கின் முகம் காட்டும் - கவிழ்த்திட்டால்,
கொட்டும்; நல் மருந்துக்குமாகும்,ஆதலினால்,
கருந்தேளைக் கவின் தேனெனக் காண்!

Thursday, November 4, 2010

விடிந்தால் தீபாவளி!

அவிங்க இருக்கிற இருப்புக்கு, அவிங்க ஆத்தா, அப்பன் அவிங்களுக்கு வைச்ச பேரு கொஞ்சம் ஓவர் தான். ஏளாம் பொருத்தம்! ஆனா, ரொம்ப, ரொம்ப சந்தோசமாவே இருக்காங்க. எப்படீங்கிறீங்களா?
இதோ சாட்சியா ரெண்டு புள்ளைங்க...
ஆறாம்ப்பூ படிக்கும் வள்ளி,
நாலாப்பூ படிக்கும் ராசு...குஞ்சு,குளுவாங்களாக!
இந்த வருசம் தீபாளிக்கும் போனசு கிடையாதுனுட்டாங்க...போன வருசம் பட்ட
பாடு நியாபகம் வந்துச்சு..இந்த வாட்டி கொஞ்சம் சுதாரிப்பா இருந்துட்டான்,ரத்தினம்.
பய, புள்ளங்களுக்கு முன்னாடியே துணி வாங்கி தைக்கக் கொடுத்துட்டான். அதுவும் ரெடி!
வள்ளி புள்ள கொஞ்சம் விவரம் தெரிஞ்சதுனால 'சரி'ன்னுடுச்சு. இந்த ராசுப் பய மட்டும் 'ங்கொய், ங்கொய்' ன்னுட்டு இருந்தான். இன்னொரு சொக்கா வேணுமாம்.
பட்டாசு ஒரு நூறு ரூபாய்க்கு வாங்கி கொடுத்து அவனையும் சமாளிச்சுட்டான். மாணிக்கத்துக்கும் புடவை இருக்கு. அவனுக்கும் வேட்டி, துண்டு முதலாளி குடுத்துட்டாக..
இனி என்ன கவலை. ஜோரா தீவிளி கொண்டாட வேண்டியது தான்!
இருந்தாலும்....
அவனுக்கு அவசரமாய் ஒரு இரு நூறு ரூபாய் தேவையாயிருந்தது. தீவிளி சமயத்தில் யாரிடம் போய்க் கேட்பது? அவன் சேக்காளிகளும் அவனைப் போல சம்சாரிங்க தான்.
என்ன செய்யலாம்?
யோசித்துக் கொண்டிருந்த ரத்தினத்துக்கு
திடீரென்று அழைப்பு.
'ரத்னம், கேஷியர் உன்னைக் கூப்பிடறாருய்யா?'
பதட்டத்துடன் ஓடினான்.
'எதுக்காக கூப்பிடறாக? சம்பளம் கூடப் போச்சுன்னு எதாவது புடிச்சுத் தொலைக்கப் போறாங்களோ பண்டிகை சமயத்துல ?'
'இந்தாப்பா, ரத்னம். இதுல ஒரு கை எளுத்துப் போடு'
' எதுக்குங்க ஐயா?'
' போடச் சொன்னா, போடுய்யா' - சிரித்துக் கொண்டே சொன்னான் பக்கத்து ஆள்.
'என்னமோ, ஏதோ தெரியலேயே, சாமி நீ தான் காப்பாத்தணும்'
கையெளுத்துப் போட்டான், ரத்னம்.
சர சரவென்று நான்கு புத்தம் புதிய ஐம்பது ரூபாய் நோட்டுகளை நீட்டினார்.
' எதுக்குங்க, ஐயா?'
' போன வாரம் ரத்தம் கொடுத்தேயில்ல.
அதுக்கு ஒரு நாள் 'வேஜ்' சாங்க்ஷன்' ஆயிருக்கு'
சுத்தமாய் மறந்தே விட்டான். மில்லில் ரத்த தானம் செய்பவருக்கு ஒரு நாள் கூலியும், ஹார்லிக்ஸ், ஆரஞ்சு என்று தருவார்கள். அந்த பணம் இது. சரியான சமயத்தில் வந்திருக்கு.
ரத்தினத்துக்கு கால் தரையில் பாவவில்லை. எப்படா சங்கு ஊதும் என்று காத்திருந்தான்.
சங்கு ஊதியதும் கிளம்பி விட்டான்.
அடுத்த அரை மணி நேரத்தில் கடைத் தெருவில் நின்றது, அவன் சைக்கிள்!
பணம் கிடைச்சாச்சு. ஆனா, பொருள் கிடைக்கணுமே. ஒரு வாரம் முன்னால, அந்த வெலை சொன்னான். இன்னிக்கு அந்த விலைக்கு கொடுப்பானா? அது இத்தன நா விக்காம வேற இருக்கணும். கடவுளே....
ரத்தனத்துக்கு அதிஷ்டம் இருக்கு.
அவன் எதிர்பார்த்த வெலையிலேயே அது சொன்னான். டொக்குனு, பையில வாங்கிட்டு,
ஒரே அழுத்து தான். ஒரே மிதி தான்!
அவன் குடிசை வந்தாச்சு!
புள்ளங்க காணலே..பக்கத்து வூட்ல வெளையாடப் போயிருக்கும். இந்த மாணிக்கத்தை எங்கே காணோம்?
" மாணிக்கம்..மாணிக்கம் "
ஊஹூம்...எங்கே போனாளா?
'ச்சே..சமயத்தில் இருக்க மாட்டா'
அலுத்துக் கொண்டே டீ போடும் போது, மாணிக்கம் வந்தாள், வாயெல்லாம் பல்லாக..
' மச்சான்..என்ட்ட வித்யாசமா எதாவது தெரியுதா?'
'தெரியலேயே, தாயீ'
' நல்லா கைய உத்துப் பாரு, மச்சான்'
ரத்தனத்துக்கு அவ்வளவு தான் பொறுமை!
'அது கிடக்கட்டும், களுதை, இந்தா இத எடுத்துக்கோ'
வெகு ஆசையாய் அந்த அட்டை பெட்டியை நீட்டினான்.
திறந்து பார்த்தவளுக்கு ஆச்சர்யம்!
' அடி, ஆத்தி. காசுக்கு என்ன பண்ணினே மச்சான். கடன் கூட வாங்க மாட்டியே நீ ?'
' முன்னாடி இத களுத்தில மாட்டிக்க'
' ஊஹும்...நீ சொன்னா தான் '
' அது ஒண்ணும் இல்ல புள்ள. அன்னிக்கு கடை வீதில நீ இந்த செயினை வாங்க ஆசைப் பட்ட இல்லியா? எப்படியும் தீவிளிக்குள்ள உன் களுத்துக்கு இது வந்துடணும்னு எனக்கு வெறி?'
' இந்த கதையெல்லாம் வாணாம்..காசுக்கு என்ன பண்ணினே சொல்லு. போனசு போட்டுட்டாங்களா?'
' நல்லா போடுவாங்களே..போனவாரம் ரத்த தானம் செஞ்சேனில்ல.... சுத்தமா மறந்து போச்சு. அதுக்கு ஒரு நா சம்பளம் குடுத்தாங்க..ஒரே ஓட்டம் தான். அந்த செயினு கடையில தான்
ஐயா நின்னாரு...அது சரி, நீ என்னமோ சொன்னியே, இன்னாது'
' கையப் பாரு'
' அடங்கொப்புறானே...வாச்சு..ஆம்பள வாச்சு போல கீது? '
' உனக்குத் தான் மச்சான், அது. அன்னிக்கு ஒரு தபா பேசும் போது கைல வாச்சு இருந்தா நல்லா இருக்குன்னியே..அதுக்குத் தான்..இந்தா கட்டிக்கோ'
' பணத்துக்கு என்ன பண்ணினே புள்ளே? '
' நம்ம ராசுவோட இசுக்கூல்ல படிக்கிறானே அந்த பெரிய வீட்டுப் பக்கம் போயிருந்தேன். அந்த அம்மா ரொம்ப நல்லவங்க..செடியெல்லாம் காயுது பாருன்னு வருத்தப்பட்டாங்க..ரெண்டு குடம் தண்ணி ஊத்தினேன்..கஸ்டமே இல்ல மச்சான்..ரொம்ப சுளுவாத் தான் இருந்தது. அவங்க தான் நூறு ரூபாய் கொடுத்தாங்க...'
' காசு வாங்கினியா? ' - வேதனையுடன் கேட்டான், ரத்தனம்.
' உம் பொஞ்சாதி மச்சான் நா. கூலி எல்லாம் கொடுத்து கேவலப் படுத்தாதீங்க.. ன்னுட்டேன்..பட்டுனு..ஆனா, அவிங்க விடலியே?'
' என்ன சொன்னாக?'
' அசடே, உனக்கு யாரு இங்க கூலி கொடுத்தா..தீபாவளி செலவுக்கு அக்கா கொடுக்கிறதா வைச்சுக்கோன்னுட்டாங்க..அதான்....'
' .... புள்ள.. என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்..நாலு குடம் தூக்கினா, கை வலிக்குமேம்மா உனக்கு?'
' அடப் போ மச்சான் எனக்கு ரத்தத்தை
வித்துல்ல நகை வாங்கியிருக்கே நீ.....'
குலுங்கி..குலுங்கி அழுதாள், மாணிக்கம்!
' அளுவாத புள்ளே '
ரத்தனமும் அழுதான்.
வீட்டுக்கு ஓடி வந்த புள்ளைங்க இவங்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பிக்க,
இப்போது மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்தார்கள் பொஞ்சாதி, புருசன் ரெண்டு
பேருமே!!

(பின் குறிப்பு: ஓ.ஹென்றியின் 'THE GIFT OF MAGI' படித்ததின் பாதிப்பு இச்சிறுகதை)

Saturday, October 30, 2010

வறுமையும், எருமையும்...


எருமையைக் கூட,
விரட்ட மனம்
இல்லாதவர்கள்,
எல்லாரும்,
கூட்டமாய் சேர்ந்து,
கூச்சல் போட்டார்கள்,
'வறுமையை
விரட்டுவோம்'

*
தாரை, தப்பட்டை ஒலிகள்..
காதை கிழிய வைக்கும்,
சீழ்க்கை....
படீரென்று சத்தம்
போடும் பட்டாசுகள்!
உள்ளே ஊற்றப் பட்ட
'குவார்ட்டரால்'
வெளியே
தள்ளாடியபடி...
குடி மகன்கள்....
பாடையிலிருந்து
விருட்டென்று,
எழுந்து,
எரிச்சல் தாங்க முடியாமல்
பிணம் ஒன்று
சொன்னது:
' தா, சும்மா கிட! '
*
வீட்டை விட்டு,
விரட்டப் பட்ட,
பெற்றோர்களுக்கு,
முதியோர் விடுதியில்
பரிசாரகனாக
வேலை பார்க்கும்,
மகன்
உணவு
பரிமாறினான்,
பரிவோடு!
*

Wednesday, October 27, 2010

மாற்றி யோசி....

" செய்யும் தொழிலே தெய்வம்"
யாருக்கு?
பூசாரிகளுக்கு !
அர்ச்சகர்களுக்கு !!
பட்டர்களுக்கு....!!!
*
அண்ணலும் 'நோ..கீ' னான்...
அவளும் ' நோ.. கீ'னாள்...
கடைசியில்,
காம்பவுண்ட் சுவர்,
பால் பாக்கெட்
பையில்,
வீட்டு சாவி!!!
*
ஓசிப் பேப்பர்
படிக்க வரும்,
நபர் போல்,
நாள் தவறாமல்,
வந்து விட்டுப்
போகிறது,
மின்வெட்டும்!!!
*

Friday, October 22, 2010

கலிஃபோர்னியா உறவுகள்!!

கலிஃபோர்னியாவில்
மகன் வயிற்றுப் பேத்தி
கனடாவில்
மகள் வயிற்றுப் பேரன்..
வேர்களோ
இங்கு..
விழுப்புரத்தில்!!
உறவுகளைப் பற்றிக்
கொள்ள 'ஸ்கைஃப்'
தான்
தொப்புள் கொடி!!
நினைத்துப் பார்க்கிறன்..
இப்படிப் பட்ட உத்யோகம் !
அது கொடுத்த மனைவி..
மக்கள்..உறவு....
ஒன்றும் வேண்டாம்..
ஒரு அத்துவானப்
பட்டிக் காட்டில்,
மூணாம் க்ளாஸ்
வாத்யார் வேலை!
அங்கு அஞ்சாம் க்ளாஸ்
வாத்யார் வேலை
காலி இருந்தாலும்
அது கூடாது!
மூணாம் க்ளாஸ்னா
மூணாம் க்ளாஸ் தான்!
அந்த வேலை கொடுக்கும்,
எளிமையான
வாழ்க்கைத் துணை!
அதனால் வரும்
மக்கட் செல்வம்..
அதுகளும்
பக்கத்து..பக்கத்து...
குடில்களில்..
' தாத்தாவ்..பணியாரம் இந்தா
அம்மா கொடுக்க
சொல்லிச்சு..'
பச்சிளம் தளிர்கள்
வேர்களின்
அதி பக்கத்திலேயே
அதீத பாசத்துடன்..
கரெண்ட் கட் என்றால்,
கட் ஆகி விடும்,
அந்த கலிஃபோர்னியா
உறவுகள்!!
நினைத்துப் பார்க்கிறேன்..
எளிமையாய் வாழ்வது
ஒரு சுகம்..
சுகமல்ல..அது ஒரு தவம்..
தவமுமல்ல..
அது ஒரு வரம்...
இறைவனாய்ப் பார்த்து,
ஒரு சில
புண்ணியாத்மாக்களுக்கு,
கொடுத்த வரம்!!!!!!!!

Thursday, October 21, 2010

அழகு!!!!


அடி வயிறு குழிந்து,
டொக்கு விழுந்த
கன்னத்துடன்,
கவித்வம் மிக்க
குறு நில விவசாயி,
ஒருவன்
குறுஞ்சிரிப்புடன்,
குடும்பத்துடன்,
பாடினான்:
' மாடு கட்டிப்
போரடித்தால்,
மீளாது செந்நெல்
என்று,
ஆடு கட்டிப்
போரடிக்கும்,
அழகான,
தமிழகமே!!!!!!!'

Friday, October 15, 2010

வீடு கட்டியாச்சு!!

" என்ன மிஸ்டர் கோபால், வீடு கட்டிகிட்டு இருக்கீங்களாமே.."
" ஹி..ஹி..யார் சொன்னது?"
" யார் சொன்னா என்ன? நீங்க சொல்லலை.."
குற்றம் சாட்டும் தொனியில் சொன்னார், வந்தவர்.
" அது வந்து..சார்.." அசடு வழிய சமாளித்தான், கோபால்.
" எவ்வளவு ஆச்சு?"
" அறுபது, எழுபதாவது ஆகும்னு நினைக்கிறேன்..."
" அடேங்கப்பா...பணத்துக்கு என்ன பண்ணினீங்க.. லோன் போட்டிருப்பீங்க...எல்.ஐ.சி.யா..?"
அவன் சொல்வதற்குள் அவரே முந்திக் கொண்டார்.
" எதுவா இருந்தா என்ன..பாதி சம்பளம் 'லோனு'க்கே பிடிச்சுடுவாங்க..அப்படித்தானே..!
காலம் தள்ளறது கயத்தில நடக்கிற சர்க்கஸ் காரன் மாதிரி இருக்கும்.."
அவனைப் பேசவே விடவில்லை.
" அதுக்கென்ன பண்றது? கூழுக்கும் ஆசை..மீசைக்கும் ஆசைன்னா முடியுமா? அது சரி..யாராவது தெரிஞ்ச 'காண்ட்ராக்டு' காரங்க இருக்காங்களா?"
" இரும்பே டன் பன்னிரெண்டாயிரம் ரூபாய் விக்குதே! கொத்தனார் கூலி...அது..இதுன்னு ஏகத்துக்கு இழுக்குமே..."
" கஷ்டம் தான்"
" கஷ்டமா...கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல..
நம்ம இஷ்டத்துக்கு யாரும் வேலை செய்ய மாட்டாங்க..நாம ஒண்ணு சொன்னா..அவங்க ஒண்ணு செய்வாங்க..ஒரே நாளில மூணு..நாலு இடத்துல ஒத்துப்பாங்க...சொல்லவும் முடியாது..சொல்லாம இருக்கவும் முடியாது..எல்லாத்துக்கும நாம நேரடியா 'சூபர்வைஸ்' பண்ணனும்..ஆளில்லாட்டி..ஆஃபீஸ்க்கு லீவ் போடணும்..லீவுக்கு லீவும் வேஸ்ட்..அது சரி..எங்கே தான் கட்டியிருக்கீங்க..? "
' மனசுல தான் '
சொல்லிவிட்டு வெகு சந்தோஷமாக துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு ஹாய்யாக
நடந்தான், அந்த கோபால்.!!!

Tuesday, October 12, 2010

ஹல்லோ...ஹல்லோ...

"ஹல்லோ...யார் பேசறது?"
" நா தானுங்க சம்முகம்..அதாவது எளுத்தாளர் ஏகாம்பரத்தோட விசிறிங்க.. ஐயா
இருக்காருங்களா?"
" அவர் பத்திரிகை ஆஃபீசில வேலை செய்யலேப்பா..பொழுது போக்குக்காக எழுதறவரு..என்ன விஷயம்?"
" ஒண்ணுமில்லீங்க..அவரு உங்க பத்திரிகை ஆஃபீசுக்கு வருவாங்களா?"
" வருவாரு "
" ஒண்ணுமில்லீங்கய்யா..அவரு ..அவரு எளுதின ' ஒரு கனகாம்பரம் கண் சிமிட்டுகிறது' ங்கற கதையில, கதாநாயகன் மகேசை அநியாயமா சாகடிச்சுட்டாருங்க..இந்த மாதிரி சாவடிக்கற கதையெல்லாம் அவரை எளுத வேண்டாம்னு சொல்லணும்ங்க. அதுக்குத் தாங்க ஃபோன் பண்ணினேனுங்க.."
" தம்பி, உங்க பேரு என்ன?"
" சம்முகம்"
" யோவ் சம்முகம், அந்த கதையில மகேசு சாகாட்டி கதை செத்துடும்யா..அது சரி..அவரு கதைங்கள்ளாம் உனக்கு பிடிக்குமா?"
" புடிக்குமாவது? உசுருங்க..சொல்லப் போனா, ஐயா கோச்சுக்காட்டி ஒண்ணு சொல்லட்டுங்களா ?"
" சும்மா சொல்லு, சம்முகம் "
" நான் உங்க பத்திரிகையை காசு கொடுத்து வாங்கறதே, நம்ம ஐயாவோட கதைங்களுக்காகத்தான்.."
" அப்படியா?"
" ஆமாமுங்க...'ராணி முத்துல சொல்லுவாங்களே, புத்தகத்தை விரிச்சா, படிச்சு முடிக்காம கீளே வைக்கறதில்லேன்னு..' அந்த மாதிரி டைப்புங்க..ஐயாவோட கதையெல்லாம்.."
" ஓஹோ!"
" ஐயா, ஒரு சின்ன விண்ணப்பமுங்க.."
" சொல்லு, சம்முகம்?"
" ஐயாவோட அட்ரசை சொல்லுங்கய்யா, நானே நேர போய் பார்த்துக்கறேன்.."
" அட்ரஸ்ல்லாம் சொல்லக் கூடாதுய்யா.. அவுரு இன்னிக்கு, நாளைக்கு வருவாரு..அப்ப சம்முகம்ங்கற உங்க ரசிகர் ஃபோன் பண்ணினாருன்னு சொல்றேன்"
" சந்தைபேட்டை சம்முகம் ஃபோன் பண்ணினாருன்னு சொல்லுங்கய்யா.."
"ஆகட்டும், சொல்றேன், சம்முகம்"
ஃபோன் டக்கென்று வைக்கப் பட்டது.
ஒரு பெரிய 'பில்ட் அப்' செய்த திருப்தியில், அந்த பப்ளிக் ஃபோன் பூத்திலிருந்து, வெளியே வந்தார், சம்முகம் என்கிற ஏகாம்பரம்.
ஆனால்...
பாவம், அவருக்குத் தெரியாது, இத்தனை நேரம் அவருடன் அரட்டை அடித்தது எடிட்டரின் ப்யூன் என்று!!!

Saturday, October 2, 2010

பாலகிருஷ்ணன் வீடு..

அது ஒரு ஸ்டோர். முன்னும்,பின்னுமாய் ஆறு குடியிருப்புகள். காமன் லெட்ரின். பொதுவாக ஒரு கிணறு. அந்த காலத்தில், திருச்சியில் ஸ்டோர் குடியிருப்புகள் பிரசித்தம். சனி,ஞாயிறு சாயங்கால நேரங்களில், பொழுது போகாமல், பாச்சா என்கிற பார்த்தசாரதியும், கோண்டு என்கிற கோதண்டராமனும் விளையாட்டாக ஆரம்பித்த 'வாலி பால் ப்ளே'
இன்று களை கட்டி,நெட்..ஸ்பேர் பந்து..ஷார்ட்ஸ்..என்று பத்து, பதினைந்து மெம்பர்களாக வளர்ந்து விட்டது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை, வாலி பால் விளையாடும் போது ஆரம்பித்தான், ரகு.
' ஏன் சார், பாலகிருஷ்ணன் வீடு ஒரு மாசமாப் பூட்டிக் கிடக்கே..யாராவது வராங்களா?'
பாலகிருஷ்ணன் அந்த வாலிபால் டீமில் ஒரு ஆக்டிவ் மெம்பர். 'சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா'வில் க்ளார்க். திடீரென்று ஆஃபீஸர் ப்ரமோஷன் கொடுத்து, பம்பாய்க்கு அவனை ட்ரான்ஸ்பர் பண்ணி விட்டார்கள். பையன் ஸ்கூல் ஃபைனல் முடித்து விட, ஆர்டர் வந்த மூன்றாம் நாளே கிளம்பி விட்டான், பாலு.
' வெஜிடேரியன் வந்தா பரவாயில்ல..'
' வெஜ்ஜோ..நான்வெஜ்ஜோ.. அதுவா முக்கியம்? செட்டியாருக்கு டோக்,டோக்கா மாசம் ஐநூறு ரூபாய் வாடகை வந்தால் போறும். யாரு கொடுத்தா என்ன?'
' இப்ப, நம்ம பாலு வீட்டுக்கு அறு நூறு ரூபாய்க்கு ஆள் வந்தாச்சு.'
'அப்படியா'
' ஆள் வந்தாச்சா?'
' அறுநூறு ரூபாயா?'
' அச்சச்சோ ...அப்ப நமக்கும் நூறு ரூபாய் ஏத்திடுவாரே, செட்டியார்'
' யாரு வராங்களாம்?'
ஏக குரலில் கேட்டனர் ரகுவும், நாணாவும்.
' யாரோ லேடியாம்..'
' ஆஃபீஸ் கோயரா?'
' அவங்க ஆஃபீஸ் போக மாட்டாங்க. ஆனா, ஆஃபீஸ் அவங்களைத் தேடி வரும்' -நக்கலாகச் சொன்னான், கோண்டு.
' சமூக சேவகியா?'
' ஊஹும்..'
' அரசியல் வாதியா?'
' ஊஹூம்..'
' யாராக இருந்தால் என்ன? நம்ம ஸ்டோர் மொத்தத்தில நாறப் போறது..'
' கொஞ்ச நேரம் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டார்கள். வாலிபால் ஆட்ட
விறுவிறுப்பில் அது மறந்து போயிற்று.


ஒரு திங்கட்கிழமை, தெருவையே அடைத்துக் கொண்டு லாரி ஒன்று வந்து, அதிலிருந்து கண்டா, முண்டா சாமான்கள் இறங்கும் போது தான், பாலகிருஷ்ணன் வீடு பூட்டிக் கிடக்கும் விஷயமும், அந்த வீட்டிற்கு யார் குடி வரப் போகிறார்கள் என்கிற சுவாரஸ்யமும், மறுபடியும் வந்து ஒட்டி கொண்டது, அங்குள்ளவர்களுக்கு!
' யார் அவள்?'
' என்ன வயசு இருக்கும்?'
' பார்க்க எப்படி இருப்பாள்?'
ஆனால், வந்தது என்னவோ கட்டை, குட்டையாய் முண்டாசு கட்டிக் கொண்டு, இரண்டு,மூன்று ஆட்கள்!
பொறுப்பாக எல்லா சாமான்களையும் வீட்டினுள் எடுத்து வைத்து, பார்க்கும் எல்லார்
முகங்களிலும், அறைகிறார்போல், வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு சென்ற விதம், யார் அந்த வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்கிற ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தான் தூண்டி விட்டது.
' ரொம்ப வசதி பட்டவா போல இருக்கு' - இது பார்வதி மாமி.
' வசதிப் பட்டவான்னா, ஸ்டோருக்கு எதுக்கு வரணும்? தனி வீடு பார்த்துக்க வேண்டியது தானே..' - பேபி.
' என்னமோடிம்மா..தெரியாம சொல்லிட்டேன்' - பார்வதி மாமி சட்டென்று ஜகா வாங்கவும், ஒரு புதுச் சண்டையை எதிர்பார்த்து ஆவலோடு காத்துக் கொண்டிருந்த அத்தனை பேர் முகங்களிலும் 'பேஸ்து' வழிந்தது!
சாமான்கள் வந்து இறங்கி, கரெக்டாக பத்தாவது நாள், இரவு ஒன்பது மணிக்கு பால கிருஷ்ணன் வீட்டு 'லைட்' எரிந்தது.
காலையில் வீட்டைப் பார்த்தால் பெரிய பூட்டு!
ஒரு வாரமாகவே இப்படித்தான். இரவு ஒன்பது மணிக்கு வீடு திறக்கும். பன்னிரெண்டு மணி வரை லைட் எரிதல். காலையில் பூட்டிக் கிடக்கும். வீட்டில் யார்..யார்..இருக்கிறார்கள் ..எப்போது வருகிறார்கள்..எப்போது போகிறார்கள்..என்று ஒன்றும் புரியாத நிலை!
அப்புறம் ஒரு மாதம் பூட்டியே கிடந்தது.
பொதுவான லைட் ஒன்றிற்கு எலெக்ட்ரிக் சார்ஜ், தெரு கூட்டும் பெண்ணிற்கு மாசச் சம்பளம் போன்ற சில செலவுகளை 'காமனாக' செய்வார்கள். பாலகிருஷ்ணன் வீட்டைச் சேர்த்துக் கொள்வதா, வேண்டாமா என்கிற குழப்பம். யாராவது வீட்டில் இருந்தால் தானே... யாரிடம் போய் வசூல் செய்வதாம்?
வாடகை வாங்க வரும் செட்டியாரிடம், கேட்டுப் பார்த்தால், ' அதெல்லாம் நீங்களே சேர்த்துப் போட்டுக்குங்க..அவங்க கிட்ட யாரும், எதுவும் கேட்கக் கூடாது' என்று ஒரே போடாகப் போட்டார்.
செட்டியாரைப் பற்றி இங்கு ஒன்று சொல்ல வேண்டும். நாம் சொல்லும் குறைகளை பொறுமையாகக் கேட்பார். பிறகு 'இஷ்டம் இருந்தா இருங்க..இல்லாட்டி வீட்டைக் காலி பண்ணிடுங்க...ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வர எனக்கு ஆள் காத்துக்கிட்டு இருக்காங்க..யாரும் ரொம்ப கஷ்டப் பட்டு இங்கு இருக்க வேண்டாம்'னு கூலாக சொல்வார்.
அப்படிப் பட்ட செட்டியாரையே 'இம்ப்ரஸ்' பண்ற ஆள் யாராக இருக்கும்?
அங்குள்ளவர்களுக்கு ஆர்வம் இன்னமும் அதிகரித்தது.
குசுகுசுவென்று ஆண்கள் எல்லாரும் பேசிக் கொண்டார்கள். அவர்கள் ஆர்வம் அப்படியே பெண்களுக்கும் தொற்றியது.ஒரு வழியாய் சஸ்பென்ஸ் தீர்ந்தவுடன் 'அடச்சீ' என்றாகி விட்டது, எல்லாருக்கும்.
' வர வர செட்டியாருக்கு புத்தி பொடனியை விட்டு கீழே போயிடுத்துப் போல இருக்கு. நாலு பேர் கௌரவமாய் வாழற இடத்தில 'இவளை' குடி வைக்க எப்படி இவருக்கு மனசு வந்தது.... வாடகை வாங்க செட்டியார் வரட்டும்..நான் இதைக் கேட்காம விட மாட்டேன்..'
கோடி வீட்டுக் கோனார் குதிகுதியென்று குதித்தார்.
' நம்ம கிட்ட ஒத்துமை இல்ல..ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் அவர்ட்ட கோள் சொல்றோம். அவருக்கு அது சாதகமாப் போயிடுத்து. நம்ம கிட்ட ஒத்துமை இருந்தா, அவர் இப்படி செய்வாரா?'
ஆதங்கத்துடன் சொன்னார், அனந்து.
அனந்து சொல்வதிலும் நியாயம் இருக்கத் தான் செய்தது. நன்றுடையான் கோவிலில், விடிய விடிய மதுரை சோமு கச்சேரி கேட்டு விட்டு, விடிகாலை மூன்று மணி வாக்கில் சுவரேறி குதித்து, வீட்டிற்கு வந்ததை யாரோ செட்டியாரிடம் போட்டுக் கொடுத்து விட்ட வருத்தம் அவருக்கு!
எல்லாரும் கூடி ஒரு தீர்மானம் போட்டார்கள்.
யாரும் பாலகிருஷ்ணன் வீட்டில் பேசக் கூடாது. முக்கியமாக பேபி காஃபிப் பொடி கடன் கேட்டு அந்த வீட்டு வாசல் படி மிதிக்கக் கூடாது. செட்டியார் வேண்டுமானால் ஈஷிக் கொள்ளட்டும் ஈஷி!
' ஈஷிக் கொள்ளட்டும் ஈஷி! '
நாணி கோணிக்கொண்டு நாணா செட்டியார் மாதிரி 'மிமிக்ரி' பண்ணியது அனவரும் ரசிக்கும் படியாய் இருந்தது.
அந்த 'அவள்' ..அது தான் அந்த பாலகிருஷ்ணன் வீட்டில் குடி வந்தவளுக்கு யாரைப் பற்றியும்..எதைப் பற்றியும் கவலையில்லை. அவள் உண்டு..அவள் 'வேலை' உண்டு.. என்று இருந்தாள். எல்லாரும் சேர்ந்து உதாசீனப் படுத்தியதை, அவள் உதாசீனப் படுத்தியது அவர்கள் எல்லாருக்கும் மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது! எங்கிருந்தோ ஒருவன் வந்து அவள் வீட்டிற்கு பால் ஊற்றினான். கீரைக் காரி..பூக்காரி என்று அவள் வீட்டிற்கு மட்டும் புதிது,புதிதாய் ஆட்கள்!
' முறையில் வந்து தண்ணி பிடிக்கணும்கிற அவசியம் அவங்களுக்கு இல்ல..அவங்க எப்ப வந்தாலும், நீங்க தண்ணிக்கு விடணும்' என்று செட்டியார் ஆர்டர் போட்டு விட்டார். கரெக்டாக ஏழு இருபதுக்கு வேலைக்காரி வந்து இரண்டு குடம் தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அத்துடன் சரி..
பொச பொசவென்று வந்தது அத்தனை பேருக்கும். 'அவளுக்கு இருக்கிற ராங்கியப் பாரேன்' என்று ஆளாளுக்குப் பொருமினார்கள்.
செட்டியார் கூட அவளோட ' கஸ்டமரோ' என்று சந்தேகப் படவும் ஆரம்பித்தார்கள்.
அந்த ஸ்டோருக்கு அந்த 'அவள்' வருகையினால் வந்த நன்மை யாதெனில், அவரவர் தம்தம் வேற்றுமைகளை மறந்து ஒரு பொது எதிரியை ஒழித்துக் கட்ட ஒன்று கூடி நின்றது தான்!
எவ்வளவு நாள் அவளால் இங்கு தாக்கு பிடிக்க முடியும் என்று நினைத்தது போக, நாம இங்கு எவ்வளவு நாள் தாக்கு பிடிப்போம் என்று அவளுடைய அலட்சியம் ஒவ்வொருவரையும் நினைக்க வைத்தது. போதும் போதாததிற்கு செட்டியார் வீட்டை அவளிடம் விற்று விட்டார் என்று கூட ஒரு வதந்தி கிளம்பியது!
ஸ்டோரை விட்டு ' வாலி பால்' ஆட்டம் போயே போய் விட்டது. அவரவர் வீட்டு ஆண்களை, பெண்கள் பொத்தி,பொத்தி காத்து வந்தார்கள். ஆண்களோ, குடியரசு தின அணி வகுப்பின் போது, ஜவான்கள் வலது புறமாக சடாரென்று தலையை சாய்த்துக் கொண்டு 'பேரேடு' செய்வார்களே, அது போல ஆஃபீசுக்குப் போகும்போதும்.சரி...ஆஃபீஸ் விட்டு வரும்போதும்..சரி..அவள் வீடு இருந்த பக்கம் அனிச்சையாய் தலையை சாய்த்துக் கொண்டு, ஆஃபீஸ் நோக்கியோ...தம்தம் வீடு நோக்கியோ... சென்று கொண்டிருந்தார்கள்!
ஸ்டோரே கனத்துக் கிடந்தது!
தண்ணிச் சண்டை...பால் காரன் சத்தம்...காய்கறிகாரியுடன் பேரம்..'லஸ்மீ..கிஸ்ண மூர்த்தி..ப்போஸ்ட்ட்' என்ற போஸ்ட்மேன் கூவல்...'குருவை வணங்கக் கூசி நின்றேனோ..கொண்டவர் பாவத்தை சுமக்க மறந்தேனோ..பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ..' என்று வள்ளலார் போல பளிச்சென்று வெள்ளை உடை உடுத்தி, காலை சாய்த்துக் கொண்டு வருபவர்..
போச்சு!!
நேஷனல் ஹைஸ்கூல் க்ரவுண்டில் கீரன் கதை, தூப்புல் காலட்சேபம்..கும்பகோணம் சங்கர் பஜனை...ராதா கல்யாணம்..சீதா கல்யாணம்...பாகவத சம்மேளனம்...ஆச்சார்யரின் பட்டினப் ப்ரவேசம்..
எல்லாமே போச்சு!
இப்ப அந்த இடத்தில லேடீஸ் காலேஜ் கட்டப் போறாங்களாம்!
வடக்கு ஆண்டார் வீதியே தன் சுயத்தை இழந்து கொஞ்சம்,கொஞ்சமாய் மாறிக் கொண்டு வர, மாற விருப்பம் இல்லாதவர்கள், திசைக்கு ஒருவராய் பிரிந்து செல்ல ஆரம்பித்தார்கள்.
ஒரு கால கட்டத்தில், இந்த இடத்துக்கு இவள் தான் சாஸ்வதம் என்று எல்லாராலும் பேசப் பட்ட அந்த 'அவள்' கூட வீட்டைக் காலி செய்து கொண்டு போய் விட்டாள்!


மும்பை சென்ற பாலகிருஷ்ணன் அங்கேயே 'ரிடையர்டா'கி விட்டான். பையனுக்கும் அங்கேயே வேலை கிடைத்து விட்டது. வேலை.வெட்டி எதுவும் அவனுக்கு இல்லாததினால், மனசு பழைய நினைவுகளைப் புரட்டிப் பார்க்கும். ஸ்டோர் ஞாபகம் வந்து விடும், அடிக்கடி!
ஹாலில் மாட்டியிருக்கிறானே, இந்த பழைய 'வால் க்ளாக்' . இது இவனிடம் வந்ததே ஒரு தனிக் கதை!
ஒரு நாள் பக்கத்து வீட்டு மாலுக்குட்டி காணாமல் போய் விட்டாள். ஏக அமர்க்களம்..ஸ்டோரே அல்லோல..கல்லோலப் பட்டது. இரண்டு மணி நேர அலக்கழித்தலுக்குப் பிறகு, குழந்தை கிடைத்தவுடன் எல்லார் முகங்களிலும் நிம்மதி!
அடுத்த நாள் குழந்தை சொன்னாள்.
" இதோ பாருங்கோ,எல்லாரும்..நா இனிமே காணாமப் போக மாட்டேன்.."
" எப்படிடா, கண்ணு"
முகத்தை வெகு சீரியஸாய் வைத்துக் கொண்டு, 'நர்ஸரி ரைம்' போல் பாட ஆரம்பித்தாள்.
எம் பேரு மாலு..
எங்கப்பா பேரு பாலு..
முப்பத்தெட்டு பை மூணு..
மூக்கப் பிள்ள லேனு..
மணிவாசகம் ஸ்டோரு..
வடக்கு ஆண்டார் வீதி..
தெப்பக் குளம் போஸ்ட்டு..
திருச்சி ரெண்டு ....
" பாட்டு ஜோரா இருக்கே..யார் சொல்லித் தந்தா?"
" தோ...பால கிருஷ்ணன் அங்க்கிள். அப்பா
நான் இனிமே காணாமப் போயிட்டா, நீங்க யாரும் கவலைப் படாதீங்க..இந்த பாட்டை பாடினாப் போறும்..போலீஸ் மாமா இங்கு என்னை கொண்டு வந்து சேர்த்திடுவார்.."
குழந்தையை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான், அந்த பால கணேசன். மாலுக் குட்டியின் அப்பா!
இவன் ஸ்டோரைக் காலி செய்யும் போது அந்த பால கணேசன் ஒரு 'வால் க்ளாக்' ப்ரஸண்ட் பண்ணினான்.
அது தான் இது!
" ஹாலின் 'ரிச்னஸ்' க்கு இது திருஷ்டிப் பூசணிக்காய்' என்று மருமகள் சொன்னாலும், 'இது இங்க தான் இருக்கணும்'ங்கிற பால கிருஷ்ணனின் பிடிவாதமே வென்றது!
இங்கேயும் தான் மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் கிடையாது..அடுத்தவர் உதவியும் தேவை இல்லை...முகத்தை எப்போது பார்த்தாலும் இறுக்கமாக வைத்துக் கொண்டு...இயந்திர மனிதர்கள் !
ஃப்ளாட்டில் பக்கத்து வீட்டுக் காரர் பெயர் கூடத் தெரியாமல்..பத்து வருடங்களாக என்ன ஒரு ஜீவனே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!
பழையபடி, திருச்சிக்கே போய், அந்த ஸ்டோரிலேயே, 'செட்டில்' ஆகி விடலாமா என்று ஒரு நப்பாசை..
அந்த சமயம் பார்த்து, திருச்சியில் ஒரு கல்யாணம் வர, அப்பா, பிள்ளை இருவரும் கிளம்பி விட்டார்கள்.
பிரயாணத்தின் போது பையன் கேட்டான்:
' அப்பா..ஸ்டோர்ல உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருப்பாங்களா?'
' தெரியாதுப்பா..அப்பவே அனந்து பின்னவாசல் பக்கம் போயிடப் போறதா சொன்னார். கோனார் காலமாயிட்டார்னு தெரியும். பார்வதி மாமி இருக்க சான்ஸே இல்ல..நாணா, கோண்டு, பாச்சா, பேபி யாராவது இருக்கலாம்...இல்லாமலும் இருக்கலாம். ஆனா, அந்த ஸ்டோர் அங்க நிச்சயமா இருக்கும்'
கல்யாணம் முடிந்தவுடன், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ஆண்டார் வீதி வந்தார்கள், இருவரும்.
என்ன ஒரு ஏமாற்றம்!
அவன் குடி இருந்த இடத்தில் ப்ரம்மாண்டமாய் ஒரு அடுக்கு மாடி குடி இருப்பு!
அவனுக்காக அந்த ஸ்டோர் இன்னமும் காத்துக் கொண்டு இருக்கவில்லை. அந்த இடம்..சக மனிதர்களுடன் அவன் வாழ்ந்த அந்த இனிமையான நிகழ்வுகள்.. . ஒரு .ஒற்றை ரூபாய் நாணயம் உருண்டோடிப் போவது போல், போயே போய் விட்டது !

Monday, September 27, 2010

நச்.. !..நச்...!...நச்...!!!.....

*
பள்ளிக்குச்
செல்லும்
செல்லப்
பிள்ளைகளே!
அரசிடம்,
மட்டும்
வாங்குங்கள் !
ஆசிரியரிடம்,
வாங்காதீர்கள் !!
முட்டைகளை!!!

**
ஒரு அவசரச் சட்டம்
போட்டு,
ஊழலையும்..
விளையாட்டாக்குவோம்!
காமன் வெல்த் கேம்ஸில்,
அதிகத்
தங்கப் பதக்கங்கள்,
நமக்குத் தான்!!
***
தனிப்பட்ட ஒருவருக்கு
சொந்தமான,
டாடா குழும..
குடும்ப கம்பெனிகளை
நிர்வகிக்க
வெளியிலிருந்து..
கைகள்..
நம் எல்லாருக்கும்
சொந்தமான
நாடோ ?
குறிப்பிட்ட
குடும்பங்களின்
கைகளில் !!!

Saturday, September 25, 2010

வளிக்கு ஒரு வந்தனம்!


மரங்களின் அசைவை,
காற்று தான்
தீர்மானிக்கிறது,
என்றான் மா.சே.துங்.
மரங்களின் அசைவை,
மட்டுமல்ல..
மனிதர்களின் அசைவையும்,
ப்ராணனாக,
அபாணனாக..
உபாணனாக...
காற்று தான்,
தீர்மானிக்கிறது.
இனிமையாய்,
அது,
நம்மைத்
தீண்டும் போது
தென்றல்...
புரட்டிப் போடும்
போது புயல்..
கவர்ச்சிகரமான
பெயரில்
அலைக்கழிக்கும் போது,
அதன் பெயர்,
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
வளியே,
உன்னை,
வணங்குகிறேன்..
என்னை
இது வரை,
வாழ வைத்ததிற்கு..
மட்டுமல்ல...
இனி,
வாழ வைப்பதற்க்கும் !!!!!

Wednesday, September 22, 2010

நான் கடவுள்...!!!!!!!


எல்லாம் கர்ம
வினைப்படி..
விதிப்படித்
தான் நடக்கும்....
நடக்கிறது.....
நியூட்டனின்
மூன்றாவது விதிக்
கோட்பாடின் படி,
தான்
உலகமே
சுழல்கிறது...
பின்
கடவுள் இங்கு
எங்கு வந்தான்
என்றான்,
பகுத்தறிவாளன்
ஒருவன்!
அட ..ஆமாம்...
போல இருக்கே
என்று,
நான் நினைக்கையில்,
வயோதிகன் ஒருவன்
பெரிய மரத்தை,
இழுக்க முடியாமல்..
இழுத்துக் கொண்டும்,
உஸ் உஸ்ஸென்று
பெரு மூச்சு விட்டுக் கொண்டும்,
'அடக் கடவுளே' என்று,
புலம்பிக் கொண்டும்
ஆற்றுப் பாதையில்
வர...
இது இவனுக்கு
இடப் பட்ட விதி..
இங்கு
கடவுள் எங்கு
வருவான் என்று
நான் யோசித்தேன்....
திடீரென்று ஒரு
பெரு மழை பெய்து...
வெள்ளமாய் பெருகி,
மரம் இழுக்கும்
அவன் வேலையை,
அது..
மிக மிகச்
சுலபமாக்க...
' நான் கடவுள்'
என்றது மழைத்துளி,
அப்போது,
சிறிதும் கர்வமின்றி!!!

Monday, September 20, 2010

ஆட வரலாம்.....


' ஆடவரெல்லாம்..ஆட வரலாம்....'
ஏதோ ஒரு அரதப் பழசான சினிமாவில, ஏதோ ஒரு கவர்ச்சி நடிகை , ஏதோ ஒரு சீனில், ஏதோ ஒரு ஆட்டம் போட்டது, எல்லாருக்கும் ஞாபகம் வருகிறதோ இல்லையோ..ஆனால், பின்னணி பாடிய அந்த கவர்ச்சி கரமான குரலுக்குச் சொந்தக் காரரான எல்.ஆர்.ஈஸ்வரியை அத்தனை பேருக்கும் ஞாபகம் இருக்கும் என்பதே அழுத்தமான உண்மை!
எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்துக்களில் வாழ்கிறார்கள் என்று சொன்னால் அதை யாரும் உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். அத்தனையும் கப்ஸா! சுத்த ஹம்பக்!!
உதாரணத்திற்கு , இந்த பாட்டையே எடுத்துக் கொள்ளுங்களேன். உயிரைக் கொடுத்து ஒருவர் பாடல் எழுதுகிறார்..உயிரைக் கொடுத்து ம்யூசிக் டைரக்டர் ஒருவர் அதற்கு மெட்டு போடுகிறார். குறைந்தது, ஆறிலிருந்து பத்து பேராவது அந்த பாட்டிற்கு இசைக் கருவிகளில் உயிரைக் கொடுத்து, இனிய இசை எழுப்புகிறார்கள். உயிரைக் கொடுத்து, ஒருவர் அத்தனையையும் படம் எடுக்கிறார். உயிரைக் கொடுத்து நீங்களும் இதை படித்துத் தொலைக்கிறீர்கள்!
ஆனால், எட்டே நிமிடத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பெயரைத் தட்டிக் கொண்டு செல்கிறார்.
அது போலத் தான், பிள்ளையார் சதுர்த்தி இருக்கும் வரை பிள்ளையார் இருப்பார். பிள்ளையார் இருக்கும் வரை சீர்காழி கோவிந்தராஜனும் ஏதோ ஒரு 'லவுட் ஸ்பீக்கரில்'
'வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தார்' போன்ற தன் கணீரென்ற குரலில் வாழ்ந்து கொண்டிருப்பார்!
மற்றபடி..பாடல் பாடியவர்..மெட்டுப் போட்டவர்..வாத்ய கோஷ்டி..அத்தனை பேரும் அம்பேல்!
எதற்கு இத்தனையும் சொல்கிறேன் என்றால், நல்ல குரல் வளம் உள்ளவர்கள் நாளும் வாழ்கிறார்கள், அவர்களது இனிமையான குரலால்!
அந்த குரலுக்கு எது தேவை?
அந்த 'லிங்க்' இந்த கட்டுரையின் கடைசியில் !
அது இருக்கட்டும்.
விட்ட ஆட்டத்திற்கு வருவோம். யாராவது ஆடினால் பார்க்க குஷியாகத் தான் இருக்கிறது. சர்க்கஸில் 'பாரில்' ஆடிகிறார்கள். கழைக் கூத்தாடி ஆடுகிறான். கவர்ச்சி நடிகைகள் ஆடுகிறார்கள்....பரத நாட்டியம்.. ரத்ன சபையில் அந்த ஞானக் கூத்தன் ஆடுகிறான். கண் குளிர தரிசிக்கிறோம். ரசிக்கிறோம்..ஆனந்தப் படுகிறோம் !
ஆனால், இத்தனை ஆட்டங்களும் வெளியில் தான்.
உள்ளே ????
உதாரணத்திற்கு பல் ஒன்று ஆடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்...அதுவும் கடைவாய் பல்.. கழைக் கூத்தாடி போல்...சிற்சபேசன் போல் ....அழகாய்த் தான் ஆட்டம் போடுகிறது.ஆனால் அதை ரசிக்க முடிகிறதா?
வலி ப்ராணன் போகிறது.
சூயிங்கம் போட்டு அதற்கு விடுதலை கொடுக்கலாமென்றால், புத்திர சிகாமணி அதை தடுக்கிறான்.
' அப்பா..டாக்டர்ட்ட போ..அப்பத் தான் ஆணி வேரோட எடுக்க முடியும். அதுவும் கடவாய் பல்லுங்கறே '
எனக்கு பயம்!
ஆனால், பயத்தை வலி ஜெயிச்சது!
விளைவு. சகல விதமான ஆயுதங்கள் புடை சூழ நின்ற ஒருபல் டாக்டர்
அவர் முன்னால் நிராயுதபாணியாய் நான்!
' என்ன செய்யுது?'
பல்லைக் காட்டினேன். அது விவஸ்தை இல்லாமல்..ஆபத்து எதிரில் இருப்பது தெரியாமல் ஆட்டம் போட்டது!
'கவலைப் படாதீர்கள், ஸார். மரத்துப் போவதற்கு ஒரு ஊசி போடறேன்'.
ஊசியும் போட்டார்!
உஸ்...ஸென்று ஜிவ்வென்று என்னுள் புகுந்து கொள்ள...
ரொம்பவும் சந்தோஷமாய்..நம நமவென்று...
'அட சுத்தமா வலிக்கலியே! ஐந்து ரூபாய் சைஸ் உச்சந்தலை வழுக்கை..குழி விழுந்த கண்கள்..ஒடுங்கிய கன்னம்..முகத்தையே திருகி வேறோரு அழகான முகத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரி செஞ்சுடலாம்
போல் இருக்கே'
கற்பனை குதிரை தறி கெட்டு ஓடும் போது டாக்டரின் குரல் கடிவாளமாய்...
குறடுடன் அவர்!
பல்லுடன் நான்!!
ஒரு நொடி..
ஒரு நொடி தான். இரண்டுமே இடம்
மாறி விட்டன!
இப்போது....
எண்பது ரூபாய் டாக்டருக்கும், நூற்றி இருபது ரூபாய் மருந்துக்காகவும் மாசக் கடைசியில் என் பர்ஸிலிருந்து பிடுங்கப் பட்டது!
நீங்களே சொல்லுங்கள்.
உள்ளே ஆடும் ஆட்டம் அவ்வளவு சுவாரஸ்யமானதா, என்ன?

Wednesday, September 15, 2010

ஒரு மனைவியின் மறு பக்கம் !


வழக்கம் போல் 'ஹிண்டு'வை ஒரு ''க்ளான்ஸ்' புரட்டி விட்டு சாப்பிட உட்கார்ந்தான்,தியாகு. சாப்பிடும் போது தான் இருவருக்கும் குருக்ஷேத்திரம் நடக்கும். மனதை சந்தோஷமாக வைத்துக் கொண்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட சாப்பாடு ஒட்டும் என்று அவளும் சொல்லிச் சொல்லி அலுத்து விட்டாள்.
" ஏண்டி, புருஷனுக்கு இருக்கிற ரோஷம் போறும்னுட்டு தீர்மானம் பண்ணிட்டியா?'
காட்டுக் கத்தலாகக் கத்தினான், தியாகு.
"என்ன ஆச்சு..ஏன் இப்படி கத்தறீங்க?"
" ஆமாம்..நான் அலர்றது மட்டும் தெரியுதாக்கும். சாம்பார்ல, உப்பே போடல்லே"
" உப்பு இல்லாட்டி போடறேன். அதுக்கு இப்படி கத்தணுமா? அண்டை அசல்லே மனுஷங்க இருக்காங்க..மெதுவாத் தான் பேசுங்களேன், ப்ளீஸ் !"
இதையும் அவள் பயந்து கொண்டு தான் சொன்னாள்.
அவளை ஒரு முறை முறைத்தான், தியாகு.
" சம்பாதிக்கிற திமிர்டி, உனக்கு. பேச மாட்டே நீ ? இருக்கிற இடத்தில உன்னை வைச்சிருந்தா தெரியும்?"
" எல்லாம் இருக்கிற இடத்தில தான் இருக்கேன்"
மெல்ல முணுமுணுத்தாள். அவனுக்கு அது கேட்டிருக்க வேண்டும்.
" சமைக்க வக்கு இல்லாத கழுதைக்கு பேச்சு வேறயா.....?"
ஆத்திரத்துடன் சாப்பாட்டுத் தட்டை வீசி எறிந்தான். கத்தரிக்காய் 'தான்'கள் மொசைக் தரையில் சிதறிக் கொண்டு ஓடின. எரிச்சலுடன் குழம்பு பாத்திரத்தை எட்டி ஒரு உதை விட்டான்.
.... எங்கிருந்து தான் நமக்குன்னு இப்படி ஒண்ணு வாய்ச்சிருக்கோ.. சனியன்..இத்தனை அண்ணன்,தம்பி,தங்கைகளோடு பிறந்தாளே..அவளை யாரும் 'டீ' போட்டுப் பேசியதே கிடையாது.
விக்கித்து நின்றாள், மாலதி. ஒரு வினாடி நேரம் தான். பிறகு என்ன தோன்றியதோ..கண்களை புறங்கையால் துடைத்து விட்டு, பொங்கி எழுந்த விசும்பலையும் அடக்கிக் கொண்டு ஒரு வித வீராப்புடன் பாத்திரங்களை ஒழுங்கு படுத்தி வைத்தாள்.
" என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு? கேள்வி கேட்கிறவன் என்ன மடையனா? வேலையை 'ரிசைன்' பண்ணிட்டு ஒழுங்கா வீட்டு வேலையைப் பாரு. நீ சம்பாதிச்சு குப்பைக் கொட்டினது போதும்"- தியாகு வெடித்தான்.
"இரண்டு பேர் சம்பாதிக்கும் போதே, கஷ்டமா இருக்கு. வேலைலேர்ந்து நின்னா இன்னும் கஷ்டப் படுவோம்."
" ஏதாவது எதிர்த்துப் பேசினே, பல்லை உடைச்சுடுவேன், ராஸ்கல்" கையை ஓங்கிக் கொண்டு வந்தான்.
" கலர் டிவி.,ஃப்ரிட்ஜ்,ஃப்ளாட் இதுக்குத் தவணை கட்டத் தான் உங்க சம்பளம் வரும். சாப்பாட்டுக்கு திருவோடு ஏந்திகிட்டுப் போக வேண்டியது தான்"
யதார்த்தமாய் சொன்னாள், மாலதி.
" சரி தான் வாயை மூடுடி..உள்ள சம்பளத்துல குடித்தனம் பண்றதுக்கு வக்கில்லே. உனக்கு பேச்சு ஒரு கேடு?"
உறுமியவாறு ஆஃபீசுக்குக் கிளம்பி விட்டான், தியாகு.

லஞ்ச் அவர்!
சக அலுவலர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான், தியாகு.திடீரென்று அவனை 'பாஸ்' கூப்பிட்டதால் சற்றே கலந்தது அந்த அரட்டைக்குழு.
தயங்கியவாறே ரூம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான், தியாகு.
" எஸ். கம். இன்.."
சேரில் பட்டும், படாமலும் உட்கார்ந்தான், தியாகு.
" அந்த விஜய் அண்ட் கம்பெனி லெட்டரை "டைப்" பண்ணிட்டீங்களா, மிஸ்டர் தியாகு?"
" இல்ல..."
" இன்னும் பண்ணலியா? நாளைக்குப் போயாகணும், மிஸ்டர். முதல்ல அதைப் பாருங்க."
மெள்ள எழுந்து கொள்ள எத்தனித்தான்.
" பொறுங்க..அந்த பாட்லிபாய் காண்ட்ராக்டர் பில்லைப் 'பாஸ்' பண்ணியாச்சா?"
" பண்ணிடறேன்.."
சொல்லும் போதே குரல் பிசிறியது, தியாகுவிற்கு.
" சரி..அந்த விவேக் கம்பெனி டெண்டர் டாக்குமெண்ட்ஸை ஃபோட்டோ காப்பியாவது எடுத்தாச்சா? மூன்று நாள் முன்னால சொன்னது, அது ?"
இயலாமையுடன் பார்த்தான், தியாகு.
" என்ன மேன், பார்க்கறீங்க? வெட்டிப் பொழுதைப் போக்கிட்டு, வெத்திலையைப் போட்டுக்க ஆஃபீஸில சம்பளம் தரல்லே..இன்னிக்குள்ள இந்த மூணு வேலைகளும் முடிச்சாகணும். என்ன பண்ணுவீங்களோ தெரியாது. அப்புறம் எம்மேல வருத்தப் பட்டுப் பிரயோசனமில்ல.."
பொரிந்து தள்ளினாள், மாலதி. அவன் ஹவுஸ் பாஸ் !
" எஸ் மேடம் "
வெளிறிய முகத்துடன், வெளியே வந்து விழுந்தான், தியாகு !!

பின் குறிப்பு: அச்சில் வெளிவந்த என் இரண்டாவது கதை இது.03.02.1985 தாய் இதழில் வெளி வந்தது.

Monday, September 13, 2010

தாழ்ந்தது தட்டு!!


(போஜ ராஜனின் அரசவை.எல்லாரும் அவரவர் ஆசனத்தில் வீற்றிருக்க..வாசலில் சிறு சலசலப்பு)
அவர் :மன்னவனைப் பார்க்க வேண்டும்நான்
காவலன்: தாங்கள் யார்?
( போஜராஜனின் அரண்மனையில் சாதாரண காவல் காரனுக்குக் கூட மரியாதை தெரிந்திருக்கிறது)
அவர் : சொன்னால் தான் விடுவீர்களோ?
காவலன் : ஆம்..தாங்கள் யாரோ?
அவர் : பார் புகழும் பவபூதி வந்திருக்கிறேன்
என்று போய் சொல், உன்
மன்னவனிடம்.
(காவலன் செல்கிறான்..சொல்கிறான்)
போஜன் : வரச் சொல்!
காவலன் : தங்களை வரச் சொல்கிறார், எம்
மா மன்னர்.
போஜன் : (எழுந்து நின்று) வாருங்கள்
ஆசனத்தில் அமருங்கள்..
பவபூதி : மன்னவனும் நீயோ..?
வள நாடும் உனதோ?
அமர வரவில்லை மன்னா,
சமர்புரிய வந்திருக்கிறேன்
சொற்போர் புரிய உம் அரசவையில்
ஆள் இருந்தால் எம்மிடம் சொல்
அதன் பின் அமர்வோம் யான்!!

(போஜனுக்கு வியப்பு! அதனினும் வியப்பு
அவையோர்க்கு!! அந்த அவையில் இது வரை யாரும் இவ்வளவு அநாகரீகமாய் நடந்து கொண்டதில்லை. வந்தவன் விருந்தாளி என்பதால் மன்னவனும் பொறுத்துக் கொள்கிறான்)
(மிஹிரன்...பாணன்...ஆர்ய பட்டன்..மகுடத்தில் சூடிய மாமணி போல் காளிதாஸன்..போஜராஜன் அவையில் ஒவ்வொருவரும் மஹா ரத்னங்கள்.எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். முடிவில் அனைவரும் காளி தாஸனைப் பார்க்கிறார்கள். மன்னனும் 'என்ன சொல்கிறாய்?' என்பது போல் காளி தாஸனைப் பார்க்க, அவன் ஆசனத்திலிருந்து எழுந்து கொள்கிறான்.)
காளிதாஸன் : மன்னனின் ஆக்ஞை அவ்வாறு
இருப்பின் நான் வருகிறேன்
வாதிற்கு.
பவபூதி : எப்போது?
போஜன் : சற்று பொறுங்கள் புலவரே!
அமருங்கள் ஆசனத்தில்!
(வருகின்ற சித்ரா பௌர்ணமி அன்று வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப் படுகிறது)
************************
அன்று சித்ரா பௌர்ணமி! ஆவலுடன் அரசவை கூடுகிறது. எல்லார் முகங்களில் ஆவல் கொப்பளிக்கிறது.
பவபூதி: நான் தான் முதலில் ஆரம்பிப்பேன்.
அரசன்: மெத்த சரி.
பவபூதி கவிதை பாட ஆரம்பிக்கிறான். அப்படியே பொழிகிறது. அம்மன் மேல் ஒவ்வொரு சர்க்கமாக அத்தனையும் கேட்பவர் காதுகளில் சர்க்கரையாய்..தேனாய்...தீம் பழமாய்...கற்கண்டாய்....
சரக்கு இருப்பதினால் தான் இவ்வளவு செருக்கு என்று மனம் தெளிகின்றனர், அவையோர்.
அடுத்து காளிதாஸன்...
அனைவரின் பார்வையும் காளிதாஸன் மேல் குத்திட்டு நிற்கிறது.
ஒரு சிறிய மௌனம்..
மன்னவன் பயந்தான்.எங்கே நம் சபை அவமானப் பட்டு விடுமோ என்று அல்ல!
காளிதாஸனால் முடியுமா என்கிற சஞ்சலம் அவனுள்.
மன்னவனின் கணிப்பு தவிடுபொடியாவது போல கணீரென்று காளிதாஸன் வாயிலிருந்து வந்தன வார்த்தைகள்..
கவி எழுத காளிதாஸனுக்குச் சொல்லியா தர வேண்டும்?
மடகு திறந்து வெள்ளம் வருவது போல் ப்ரவஹித்து விழுந்த வார்த்தைகள்..
அதில் உள்ள கவி நயம்!!
இருந்தாலும் எது உயர்வு எது தாழ்வு என்று அறுதி யிட்டுக் கூற முடியவில்லை, அரசனால்! அவையோரால்!!
'முடிவு நாளை, சபை கலையலாம்'
அப்போதைக்கு தப்பித்துக் கொண்டான், போஜன்!

மன்னவனுக்கு ஒரே சஞ்சலம்! 'எப்படியடா இதைத் தீர்த்து வைக்கப் போகிறேன்' என்கிற மனக்கவலை !!
உறக்கமும் வரவில்லை.
" தேவி நீயே துணை"
மனத்துள் ஒரு பீடம் வைத்து,அதில் தேவியை ஆவாஹனம் செய்து, காலில் விழுந்தான்!
தேவி அவன் கனவில் வந்தாள் !!
************************
விடிந்தது.
மன்னனின் ஆணைகள் எல்லாமே விசித்திரமாய் இருந்தது.
' கூட்டம் அரண்மனையில் வேண்டாம். எல்லாரும் உஜ்ஜயினி காளி கோவிலுக்கு வாருங்கள்'
' யாரங்கே?'
' மன்னவா?'
' ஒரு தராசு கொண்டு வரச் சொல்!'
ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
தராசும் வந்தது!
மன்னன் தராசை உஜ்ஜயினி காளி தேவி முன்பு நிமிர்த்திப் பிடித்துக் கொண்டான்.
' பவபூதி எழுதிய பாட்டின் ஓலைச் சுவடிகளை வலது தட்டில் வை'
'காளி தாஸன் ஓலைச் சுவடிகளை
இடது தட்டில் வை'
இரண்டு ஓலைச் சுவடிகளும் வைக்கப் பட்டன.
அப்போது காளி தாஸன் தட்டுத் தாழ்ந்தது.
பிரமிப்புடன் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, கண் சிமிட்டும் நேரத்தில் ஒரு அதிசயம்!
ஒரு கணம்!
ஒரு கணம் தான்!!
தேவி தனது வலது சுண்டு விரலால், வலது காதில் சூட்டப்பட்ட செங்குவளை மலரின் தேன் துளி எடுத்து, பவபூதி தட்டில் வைக்க, சட்டென்று காளிதாஸன் தட்டுக்கு சமமாயிற்று, அது!
பவபூதிக்கு உடம்பு அதிர்ச்சியினால் தூக்கிப் போட்டது!
" தெய்வமே!!!"
காளி தாஸன் காலில், தன் கர்வம் பங்கப் பட்டுப் போய், நெடுஞ்சாண்கிடையாய் அஸக்தனாய் விழ,
காளி தாஸனுக்கு ஒன்றும் தெரியவில்லை,
பாவம்!
கைகள் இரண்டையும் மேல் தூக்கி ஒரு பித்தனைப் போல் தேவி மீது கவிதை மழை பொழிந்து கொண்டிருந்தான் !
***************

Tuesday, September 7, 2010

யாம் பெற்ற இன்பம் .......



.... ஸார்..மேடம்...
ஒரு நிமிஷம் ப்ளீஸ்..
உங்கள் கையில் நாற்பது ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்யலாம் அதை வைத்து?

ஒரு மசால் தோசை ஆர்டர் பண்ணலாம். அதன் தாக்கம் சில மணித்துளிகள்!

திருச்சியிலிருந்து தஞ்சாவூர் போய் பெரிய கோவில் பார்த்து விட்டு ஒரு இரண்டு மணி நேரத்தில் திருச்சி திரும்பலாம்.

அதன் தாக்கம் கொஞ்ச நாட்கள் !!

நான் நாற்பது ரூபாய் கொடுத்து இந்த புஸ்தகம் வாங்கினேன். வாவ்...
என்ன ஒரு கருத்துக் களஞ்சியம்!!

இதன் தாக்கம் ரொம்ப நாள் இருக்கும் !!!

இதற்கு தலைமைப் புரவலர் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார். குறிஞ்சிப் பாடியிலிருந்து
வெளி வருகிறது. மொழியாக்கக் காலாண்டிதழ்.
ஆசிரியர் குறிஞ்சி வேலன்.
என்ன ஒரு வருத்தம் என்றால் இதற்கு அவ்வளவாய் patronage இல்லையாம். என்ன கொடுமை சரவணா இது?
புத்தகத்தின் முதல் பக்கமே கன ஜோராய்.... ......
" .......இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் தலையாய இடம் ஒரு தமிழனுக்குத் தான். ஆர்.கே. நாராயணின் படைப்பு உலகம் கடலளவு...ஏழு கடலளவு. இவரது மால்குடி ஒரு தனி உலகம். அதில் நீங்களும் உண்டு.நானும் உண்டு. அதோ இருக்கிறாரே அவரும் உண்டு. சிந்தனையிலே செம்மை உண்டானால் சொல்லிலே செம்மை இருக்கும் என்பார்களே.அதைப் போல வாழ்க்கையின் மிக உன்னதமான நிகழ்ச்சிகளை எல்லாம் மிக அற்புதமாகப் படமெடுத்து " பாமரனுக்கும் புரிய வேண்டும் கவிதை" என்று சொன்ன பாரதியின் வழியிலே மிக எளிமையான ஆங்கிலத்திலே எழுதி இருப்பது சிலாகித்துப் பேசத் தக்கது.
.......... ராஜ்ஜா "

NATIONAL BOOK TRUST போல ஒரு ரிச்சான லே அவுட். உள்ளே புதையல், உண்மையிலேயே!!!
சென்றிடுவீர் எட்டு திக்கும் என்று பாடினானே அவன் இன்று இருந்தால் மிகவும் சந்தோஷப் படுவான்.

குஷ்வந்த் சிங் தெரியும்? எப்படி எழுதுவார்
என்பதும் தெரியும். விஷ்ணு பாதம் என்கிற ஒரு குணச் சித்திரக் கதை எழுதியிருக்கிறார். படித்து முடித்தவுடன் பிரமிப்பு என்னுள்! தமிழில் ரா.ரகு என்பவரின் மொழிபெயர்ப்பில் அருமை !!
கவினுறு கவிதைகளும் உண்டு. 'மத்திய தரைக் கடல் குட்டித் தூக்கம்' என்ற தலைப்பிட்ட கவிதை மனதை கொள்ளைக் கொண்டது.
இதன் அடுத்த இதழ் ஸ்கேண்டி நேவியன் இலக்கியச் சிறப்பிதழாம்! பலே !!
திரு 'இமயவன்' என்ற நம் இலக்கிய நண்பரின் அனுபவம் இது.


Subject: THISAI ETTUM EXCELLS
To: thisaiettum@yahoo.co.in
Date: Thursday, 28 January, 2010, 10:06 AM

Excellent firms dont believe in Excellence...
...Only in constant improvement and constant change
-Tom Peter

Dear Sir,

You have a rupee and I have one.We exchange it with each other.We still have a rupee each.This is transaction.
I have an idea and you have an idea,we exchange the idea between us.Now both of us have two ideas.This is transformation.
On this basis THISAI ETTUM is evolving transactional oppurtunities into transformational opportunities through translations.
Now we are blessed with numerous literary thoughts of various languages because of the valuable twenty five measured steps of THISAI ETTUM..
Twentyfifth issue of Thisai Ettum is Hundred percent memorable one.
The novel idea of Introduction of supplementary issue is highly appreciable.
When THISAI ETTUM is honoring the great poet who gave us this title to this literary world why not we honor
Sri Kurunjivelan and his team who gave us THISAI ETTUM to our Tami Literary world?
I was geratly impressed by the exemplary translation of Dr.P. Raja which is in perfect matching of the great poet.
From the first to the last I have enjoyed all the pages of THISAI ETTUM.
May God bless everyone connected with this publication and I pay my Obesiance to the THISAI ETTUM team.

Lovingly yours,
S.RAVI( Imayavan)

என் குறிப்பு
*************
இது விளம்பரமல்ல. என் சுஹானுபவத்தை என் பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே!!
பிரயாணத்திலும் இனிமையான,
பிற மொழி இலக்கியம் படிப்போம் !
பேணி பொக்கிஷமாய் அதை காப்போம்!!
பிரிய நண்பர்க்கும் பரிசளிப்போம் !!!
அது சரி, வெந்ததைத் தின்று விதி வந்தால் மாளும் வாழ்வா நம்முடையது?

என்றென்றும்,
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.

Monday, August 30, 2010

பதிவுலக நண்பர்களுக்கு.........


"ஆரண்ய நிவாஸ"த்துக்கு வருகை தரும் என் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய,
ரிஷபன், வை.கோபால கிருஷ்ணன் ஸார்,வசந்த முல்லை ரவி, சித்ராமேடம், ராகவன் நைஜீரியா,வாசன், வெங்கட் நாகராஜ், தேனம்மை மேடம், வானம்பாடிகள், பா.ராஜாராம், பூங்குன்றன், ராமலக்ஷ்மி மேடம்,
K.B.JANARTHANAN, மோகன் குமார், பத்மாமேடம்,முனவர் இரா. குணசீலன், சீதா சாம்பசிவம் மேடம், மனோ சாமினாதன் மேடம், வித்யா சுப்ரமணியம் மேடம், டாக்டர் கந்தசாமி ஸார்,டாக்டர் முனியப்பன் ஸார், ரேகா ராகவன் ஸார், ஸ்ட்ராஜன் மற்றும் நம் அனத்து தள நண்பர்களுக்கும்..

இதோ என் ஆசை...........


கண் பாவை விரிய கவினுறும் இடுகை தரும்,
என்பால் பிரியமுள்ள எழுத்துலக நண்பர்களே!
முன்போலில்லாமல் மறு மொழி நான் தரவே,
வெண்பாவில் வரவா இனி!

- அன்பன் ஆர்.ராமமூர்த்தி.

Saturday, August 28, 2010

பறவையும்....மனிதனும்.....


என்னால் அல்லவா...
உங்களின் அபரிமிதமான
வளர்ச்சி...
மனிதனைப்
பார்த்துக் கொண்டு,
விண்ணோக்கிப்
பரவசமாய்
பறந்து சென்றன
பறவைகள்..
அவை போட்ட
எச்சத்தில் விழுந்த
விதைகளல்லவா..
விருட்சங்களாகி..
மில்லியனும்..
பில்லியனுமாய்
பெருகிய
நம் குலத்தைக்
காக்கின்றன..
மனிதனுக்கு
அது
தெரிவதில்லை..
அதனால்.....
அவன்
பறவைகளைப் பார்ப்பதில்லை!!!

Tuesday, August 24, 2010

ஆவணி அவிட்டமும்..ஆங்கரை தாத்தாவும்...

ஆங்கரை என்பது திருச்சியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள ஒரு சிறிய அழகிய கிராமம். லால்குடிக்கு முன்னாலே வந்து விடுகிறது. ஐயன் வாய்க்கால்..கரை ஓரமாய் ஷண்முகா பாடசாலை... பக்கத்தில் கோயில் நந்தவனம்...அரசரடி..அங்கு ஒரு பிள்ளையார்...

ஆடி பதினெட்டுக்கு புளியோதரை..தேங்காய்சாதம்..கருவடாம்...தயிர்சாதம் என்று கலவை சாதங்களுடன் நான், கிரி,சகுந்தலா அத்தை.பாலு சித்தப்பாஎல்லாரும் கும்பலாய் ஆற்றுக்குச் சென்று அங்கு படித்துறையில் சாப்பிட்டு விட்டு வருவோம். அந்த ஆற்றுத் தண்ணீர் ஸ்படிகமாக இருந்த காலம் அது!

ஷண்முகா ஸ்கூலில் துளசி டீச்சர்..கந்த சார் இவர்களையெல்லாம் மறக்க முடியுமா ? எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்பது ஒரு ஐ.ஐ.எம். ப்ரொஃபெஸர் கிடையாது. ஹரி ஓம் என்று நெல்லில் நம் விரலில் வைத்து எழுதக் கற்றுக் கொடுத்தார்களே அவர்கள் தான் இறைவன்! அவர்களை அவ்வளவு சுலபத்தில்
மறக்க முடியுமா, என்ன?

ஆடிப் பெருக்கிற்கு பிறகு வருவது ஆவணி அவிட்டம்! அன்று தாத்தாவை பிடிக்க முடியாது. ஏக பிசி தாத்தா..

எங்கள் எல்லாருக்கும் ஸ்கூல் லீவ். ஜாலி. மெள்ள எழுந்திருப்போம்..காஃபி குடிச்சுட்டு கொஞ்ச நேரம் வாசல்ல போய் நிப்போம்.
இன்னிக்கு ஆவணி அவிட்டம் சாப்பாடு கொஞ்சம் லேட்டாகும்னு சொன்னவுடனே எங்களுக்கெல்லாம் குஷி கிளம்பிடும். ஹைய்யா..ஹோட்டல்னு..
" ... அதெல்லாம் கூடாது. இதோ இட்லி வார்க்கப் போறேன்"னு அம்மா சொன்னதும் எங்களுக்கு தலை தொங்கிடும்.
இந்த ஆவணி அவிட்டம் ஒன்று தான் நாங்க எல்லாரும் ஹோட்டல்ல சாப்பிடாத ஃபங்க்ஷன்.
பாக்கி எல்லாத்துக்கும் சிகா சித்தப்பா எங்களை கூட்டிண்டு போயிடுவார். பாலு சித்தப்பா அங்க சத்தம் போடாம சாப்பிட்டுண்டு இருப்பார்!
அதுக்கு பனிஷ்மெண்ட் நாங்க எல்லாரும் பாலு சித்தப்பா தலையில் பில்ல கட்டிடுவோம்!
தாத்தாக்கு ஏக டிமாண்ட். கிழக்கால போய்ட்டு வருவார். வந்தவுடனே பெரிய ஆத்துக்கு கிளம்பிடுவார்.நடுவுல ஒரு டோஸ் காஃபிக்கு மட்டும் இங்க வருவார். எல்லாரும் ஆத்தங்கரைக்கு வந்துடுங்கோன்னு எங்களை எல்லாம் உஷார் படுத்தி விட்டுப் போவார்.
நாங்கள்ளாம் கிண்டலா சொல்லுவோம் அன்னிக்கு தாத்தாக்கு போனஸ்னு. தாத்தாவும் ரொம்ப பெருமையா சொல்வார்: ' என்னடா, இப்பல்லாம் ஆவணி அவிட்டத்துக்கு தஷிணையை அள்ளி தராங்களே'ன்னு!
ஒரு தடவை நாங்கள்ளாம் சிறுவாச்சூர் போயிருந்தோம். எங்கள் குலதெய்வம் அது. அபிஷேக ஆராதனை எல்லாம் முடிந்து பஸ்ஸுக்கு காத்துக் கொண்டு நிற்கிறோம். ஆங்கரை பெரிய மனிதர் ஒருத்தர் ஒருத்தருக்கு காரில் இடம் இருக்கு என்று சொல்ல,நாங்கள் வயதான தாத்தாவை அனுப்பினோம். நாங்கள் பஸ் பிடித்து வீட்டிற்கு வந்து பார்த்தால் தாத்தா எல்லாருக்கும் சமைத்து வைத்திருந்தார்! தாத்தாக்கு சமையல் தெரியும் என்பது குழந்தைகள் எங்களுக்கெல்லாம் தெரியாது!

தாத்தா நிறைய வேத புஸ்தகங்கள்ளாம் படிப்பார். புஸ்தகப் பிரியர். அது போல ஆனந்த விகடன் வாசிப்பார். 1950 வாக்கில் ஆனந்த விகடனில் ஒரு குறுக்கெழுத்துப் போட்டியில் பரிசு கிடைத்தது, அவருக்கு! பாட்டிக்கு அப்படியே அந்த பணத்தில் காஃபிக் கொட்டை செயின் வாங்கிப் போட்டார்!
எனக்கு நினைவு தெரிந்து தாத்தா படித்த புஸ்தகம் என்ன தெரியுமா?
சாண்டில்யனின் கடல் புறா!
சிறு வயதில் தாத்தா பண்ணிய குறும்புகள் ஜாஸ்தி! சாம்ப்பிளுக்கு இரண்டு.
1. சிறு வயதில் தாத்தா வேத பாடசாலையில் படிக்கும் போது அவருடைய பொடி மட்டை காணாமல் போய் விடும். இதை அவர் எப்படி கண்டு பிடித்தார் தெரியுமா? ராத்திரி பன்னிரெண்டு மணி சுமாருக்கு ஒரு நாள் தாத்தா பக்கத்தில ஒருத்தர் லபோ..திபோன்னு அலறல்! யாருன்னு பார்த்தா பாடசாலை சமையல் கார சுப்பண்ணா! கண்ணு..மூக்கெல்லாம் ஜிவுஜிவுன்னு.. என்னடான்னு பார்த்தா தாத்தா திருடனை பிடிக்க பொடிமட்டையில மிளகாய் பொடி போட்டு வைக்க...' என்ன ராமையா இப்படி பண்ணிட்டியேன்னு அவர் கத்த...
நல்லெண்ணைய பாதாதி கேசம் அபிஷேகம் பண்ணிண்டும் அந்த எரிச்சல் லேசில போகலே சுப்பண்ணாவுக்கு!
( ஸாரி...கொஞ்சம் ஓவர் இல்ல..)
2. தாத்தா பாடசாலையிலிருந்து லீவுக்கு ஊருக்கு வரும் போது நடந்து தான் வருவார்.அப்பல்லாம் பஸ் கிடையாது. 1920 வாக்கில். திருப்பராய்த்துறையிலிருந்து அரியூர் வரை நடை. அப்பொழுதெல்லாம் வீட்டு வாசலில் பூசணிக் காய் சூடம் ஏற்று வைத்திருப்பார்களாம். அதை தொட்டாலே நமக்கு பாபம் வந்து விடும் என்று ஒரு பயம் அந்த காலத்தில்! சூன்யம் வைத்திருப்பார்கள் என்று பயம் வேறு!
தாத்தா என்ன செய்வார் தெரியுமா?
அதில் புதைத்து வைத்துள்ள காலணாவை இடுப்பில் முடிந்து கொண்டு பூசணிக்காயை காலால் எட்டி உதைப்பாராம். அவ்வளவு அசாத்ய தைர்யம்!
பாட்டி,தாத்தாவுக்கு சதாபிஷேகம் பண்ணினோம். எனக்கு இன்று FAMILY TREE போட வேண்டும் என்ற ஆர்வத்தின் வித்து அந்த சதாபிஷேகம். எங்கிருந்தோ முகம் தெரியாத உறவினர்கள் எல்லாம் வந்து தாத்தாவிடம் ஆசி வாங்கினார்கள், அன்று!
இந்த சமயத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.FAMILY TREE யில் நம் உறவுகள் இணைவோமா?
நாங்கள்.........
-----------------------------------
ஆணி வேர் : அனந்த ராம ஐயர்.
தெரிந்த பெயர்: மோட்டார் ராமையா.
( TVS பஸ் டிரைவர் ஆக இருந்ததால் அந்த பெயர்)
பூர்வீகம் : அரியூர்
வகுப்பு : வடமர்
கோத்ரம் : விஸ்வாமித்ர
ஆபஸ்தம்பம்
மூன்று ரிஷி : வைஸ்வாமித்ர
தேவராத,
ஓளதல
தொடர்புக்கு : sridar57@gmail.com
------------------------------------
தாத்தா போய் கிட்டதட்ட இருபத்தைந்து வருடங்கள் ஆகி விட்டன. இருந்தாலும் ஒவ்வொரு ஆவணி அவிட்டம் வரும்போதும் தாத்தா ஞாபகம் வந்து விடும் எங்களுக்கு!!!

Saturday, August 21, 2010

இரயில் பயணங்களில்......


இப்பொழுதெல்லாம் யார் ரயிலில் ஃபர்ஸ்ட்
க்ளாசில் பயணம் செய்கிறார்கள். ஆஃபீஸ் டூர் என்றால் செகண்ட் ஏ.ஸி. பர்ஸனல் என்றால் செகண்ட் க்ளாஸ்.. நான் சொல்லப் போவது ஒரு இருபது இருபத்தைந்து வருடம் முன்பு....

ஒரு பெரிய மனிதர் (அந்தஸ்து+வயது+உருவம்)(எல்லாவற்றிலும்)(இப்போது மேத்தமடிக்ஸ் ஃபெஸ்டிவல் என்பதால் இந்த பிராக்கெட்டுகள்..நம்ம அல்ஜிப்ரா கணக்குபோலவே..) சரி..சரி..கதைக்கு வருவோம்.மெட்றாசிலிருந்து கும்பகோணத்துக்கு பிரயாணப்பட்டு இருந்தார். அவர் பூர்வாஸ்ரமத்தில் ரயில்வேயில் உத்யோகம் என்பதால் ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் பாஸ்.
வழக்கமாய் சென்னை சென்றார் என்றால்..அந்த இரவு நேர ரயிலைத் தான் பிடிப்பார், எப்போதும். சென்னையில் வேலையை முடித்து விட்டு இரவு பத்து மணிக்கு ரயிலில் படுத்தாரானால், மறு நாள் காலை எட்டு மணிக்கு டாணென்று முழிப்பு வந்து விடும். அப்போது ரயிலும் கும்பகோணம் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டு இருக்கும்!
ஒரு டிகிரி காஃபி குடித்து விட்டு வீட்டுக்கு நடை கட்ட வேண்டியது தான். ரயில்வே ஜங்க்ஷன் பக்கத்திலேயே வீடு என்பதால் பரம சௌகர்யம்!
அப்படித் தான் அன்றும் மெட்றாஸில் வேலையை முடித்து விட்டு வந்து சேர்ந்தார், எக்மோருக்கு. ரயிலிலும் படுத்தார். வழக்கம் போல் தான் எல்லாமுமே ! ஆனால் வழக்கம் போல் வரும் தூக்கம் தான் வரவில்லை !!
காரணம்!
(மூட்டைபூச்சிகள்+கொசுக்கள்)!!
பாவம் அவை இரண்டும் அவரை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டன.
கும்பகோணத்து கொசு கடித்தால் தான் ஸார்வாளுக்குத் தூக்கமே வரும். அப்படி ஒரு பழக்கம்!
ஆனால் இந்த ரயில் கொசுக்கள் கும்பகோணத்து கொசுக்கள் போல இல்லாமல் கொஞ்சம் வித்யாசமாய் இருந்தன. ஆளை அலாக்காக அப்படியே தூக்கி கொண்டுபோய் ப்ளாட்ஃபாரத்தில் போட்டு விடும் போல இருந்தது!
ஆனால் அப்படி எதுவும் அசம்பாவிதம் நடக்க விடாமல் மூட்டைபூச்சிகள் அவரை படுக்கையுடன் இழுத்துப் பிடித்துக் கொண்டு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தன அந்த இரவு முழுவதும்!
அப்பாடா..ஒரு வழியாய்...
கும்பகோணமும் வந்தது!
எரிச்சலுடன் எழுந்தார்.
டிகிரி காஃபியை மறந்தார்.
வீட்டிற்குப் போனவுடன் பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு ஒரு முழ நீளத்திற்கு ஆங்கிலத்தில் காரசாரமாக லெட்டர் எழுதினார், ரயில்வே நிர்வாகத்திற்கு.
ரயில்வே காரர்களுக்கு இங்க்லீஷில் லெட்டர் எழுத சொல்லித் தர வேணுமா என்ன?
அது அவர்கள் பரம்பரை சொத்து அல்லவா?

' .. ஒன்றுக்கு மூன்று மடங்கு காசு வாங்குவதில் குறைச்சல் இல்லை. ஆனால் சௌகர்யம் என்பது துளிக்கூட இல்லை. உங்கள் மேல் நான் ஏன் கன்ஸூமர் கவுன்சிலில் புகார் செய்யக் கூடாது ..' என்று விளாசித் தள்ளி விட்டார், விளாசி!
அது இங்கு விசேஷமில்லை!
ஆனால் அவருடைய ஸ்கட் ஏவுகணைத் தாக்குதலுக்கு 'பேட்ரியாட்' போல ரயில்வேயிலிருந்து ஒரு கடிதம்!
' .. MY DEAR FIRST CLASS PASSENGER..' என்று ஆரம்பமே வெகு ஜோராய் .... அசௌகர்யத்திற்கு மன்னிக்கவும்.இது போல ஒரு அசம்பாவிதம் இனி தங்களுக்கு ஏற்படாது என்று உறுதி கூறுகிறேன்.. கடிதத்தின் கீழ் ஆச்சர்யம்!
ரயில்வே ஜெனரல் மேனேஜரே கையெழுத்துப் போட்டிருந்தார்!
மனிதருக்கு சந்தோஷத்தில் தலை..கால்..புரியவில்லை!!
அவரை மதித்து ஒரு ஜெனரல் மேனேஜர் லெட்டர் எழுதுகிறாரென்றால்.....
அது கூட ஆச்சர்யமில்லை.
அந்த கவரில் இன்னும் ஒரு கடிதம்!
அவர் எழுதியது அது.
ஆனால் கடிதத்தின் ஒரு ஓரத்தில்
' send the idiot the usual bugs letter' என்று GM ஸ்டெனோ அட்டெண்டருக்கு மார்க் பண்ணியதும் இருந்து தொலைத்தது!
..மனிதருக்கு முகத்தில் ...ஈ ..சாரி..கொசு ஆடவில்லை...
பாவம்!!!

Tuesday, August 17, 2010

ஒளவை சொன்னது!


ஸ்வாமிஜி வருகிறாராம்!
ஊர் பூராவும் இதே பேச்சு!!
ஸ்வாமிஜி ஒரு வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். அரசாங்க உத்யோகத்தை..அருமை மனைவியை..அழகுக் குழந்தைகளை.. ஒரு நொடியில்...ஒரே நொடியில் ... துறந்து... துறவியானவர்!
அவர் சொன்னது சொன்னபடி நடக்கிறது.எதையும் யூகமாய் சொல்வது அவர் வழக்கம்!
' சாமி குழந்தை இல்லை' என்று ஒருவன் வந்தான். 'தெற்கே போ' என்றார். ராமேஸ்வரம் சென்று விட்டு வந்தான். அடுத்த வருடம் குழந்தை பிறந்தது!
இன்னொருவன் ' சாமி என்ன தொழில் செய்வது' என்று அவரிடம் ஆலோசனைக் கேட்க, 'மண்ணிலே போடு காசை' என்றார். இன்று அவன் ஒரு பிரபல REAL ESTATE BUSINESS MAN!
நல்ல நிறம்... மழுங்க மொட்டை அடித்து..பளபளவென்றிருக்கும் தலை..தீட்சண்யமாய் அருளைப் பொழியும் கண்கள்...ஒற்றை நாடியான உடம்பு...துவராடை...எல்லாவற்றுக்கும் மேல், அவரைப் பார்த்தவுடனே எழுந்து நின்று கை கூப்ப வைக்கும் கம்பீரம்..!
பழங்கள்..கல்கண்டு என்று கார் கொள்ளாமல், வாங்கிக் கொண்டு..அவர் பாதங்களில் வைத்து விட்டுப் போவார்கள்.. பக்தர்கள்..!
ஏறெடுத்தும் பார்க்காமல் அத்தனையையும் பக்கத்திலுள்ள குடிசைகளுக்கு விநியோகம் செய்து விடுவார்,அவர்!
பிரதி சாயந்திரம் அவருடைய சொற்பொழிவைக் கேட்க மக்கள் திரளாக வருவார்கள். தமிழ்..ஆங்கிலம்..சமஸ்க்ருதம் என்று மூன்று மொழிகளிலும் சரளமாய் பேச வல்லவர்!
அவருடைய பேச்சு சாதாரண மனிதனுக்கும் புரியும் அளவில் எளிமையாக இருக்கும். அதற்குப் பிறகு தீர்த்தம் கொடுப்பார்.
அவரிடம் தீர்த்தம் வாங்குவதற்கு மக்கள் 'க்யூ' வில் வருவார்கள். தீர்த்தம் வாங்கிக் கொண்டு குறைகளைச் சொல்வது வழக்கம்.
அவரும், அவரவர்களுக்குத் தகுந்த யோசனைகளைச் சொல்லி ஆறுதல் அளிப்பார்.
அப்படித் தான் ஒரு நாள் தீர்த்தம் கொடுக்கும் போது.....
" சாமி...வூட்ல சொன்ன பேச்சு கேட்க மாட்டேங்குது..எதுக்கெடுத்தாலும் சண்டை...ரொம்பவும் கஷ்டமாயிருக்கு..நீங்க தான் ஒரு வழி சொல்லணும்...."
காலில் விழுந்து குலுங்கி...குலுங்கி..அழுதான் ஒருவன்..
அவனவன் பெண்ணுக்கு வரன் குதிரவில்லை...பையனுக்கு அட்மிஷன் கிடைக்கவில்லை..என்று தான் வருவான்.
இப்படியும் ஒரு குறையா?
அங்குள்ள அனைவருக்கும் ஆச்சர்யமான ஆச்சர்யம்!
சரெலன்று கால்களை இழுத்துக் கொண்ட ஸ்வாமிஜி...
' பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை யாமானால்,
எத்தாலும் கூடி வாழலாம்..சற்றே
ஏறுக்கு மாறாக நடப்பாளாகில்..
கூறாமல் சன்யாசம் கொள்..'
என்று கணீரென்று ஒளவை பாடிய பாடலை, கேட்பவர்கள் உள்ளம் உருகுமாறு பாடத் தொடங்கினார்.
அந்த கூட்டத்தில் அவர் ஒருவருக்கு மட்டும் தான் அவனுடைய வேதனை புரிந்தது.
பூர்வாஸ்ரமத்தில் பெண்டாட்டியின் தொல்லை தாங்க முடியாமல் தானே புஜங்க ராவ் என்கிற சாதாரண மனிதர்
புருஷோத்தம ஸ்வாமிஜியாக மாறினார்!!!

Friday, August 13, 2010

கடவுளும்...மனிதனும்...


கடவுள் படைத்தான்..
எல்லாரையும்.....
அரசனாய்...ஆண்டியாய்..
வீரனாய்...கோழையாய்..
ஆணாய்..பெண்ணாய்..அலியாய்..
எறும்பாய்..ஒட்டகச் சிவிங்கியாய்
விதம்..விதமாய்..
சோர்வேயில்லாமல்..
படைத்தான்.
அத்தனையையும்...
கிழித்துப் போட்டான்,
காலன்!
பிறந்து வந்த மனிதன்..
படைத்தான்...
சாகுந்தலம்..
ரோமியோ ஜுலியட்..
வில்லி பாரதம்..
போன்ற எண்ணற்ற
இலக்கியங்கள்...
காலன் என்ற
அந்த கொம்பினால்,
கை கூட
வைக்க முடியவில்லை!!!!

Tuesday, August 10, 2010

அந்தக ஓவியம்


விதம்விதமாய்
பூங்கொத்துக்களை
விற்றவள் தலை
மொட்டை..
கேட்டால்,
நேர்த்திக் கடனாம்!

**************

ஒருவனின் கீழ்
வேலைப் பார்க்க
மாட்டேன்,
என்று கித்தாய்ப்பாய்
சொல்லிவிட்டு,
மளிகைக் கடை
வைத்தான்...
போகிறவன்..வருகிறவன்
எல்லாம்
அவனை
விரட்ட ஆரம்பித்தான்..
உப்பு கொடு...
பருப்பு கொடு ..
என்று!!

*
கண்கள் விரிய..
பிரமாதமாய்..
அந்த ஓவியம்!
பாராட்டத்
திரும்பினால்...
கம்பியால்,
டக்டக்கென்று
தட்டி
நடந்து போய்க்
கொண்டிருந்தான்,
அவன் !!!

Friday, August 6, 2010

உன்னை அறிந்தால்......


அந்த காலத்தில் இவ்வளவு கோவில்கள் இருந்தாலும், கோவில்களில் இவ்வளவு கூட்டம் கிடையாது. விச்ராந்தியாய் கோவிலுக்குப் போவோம், தரிசனம் முடிந்து வருவோம் என்றிருக்கும். இப்போது கோவிலுக்குப் போனால், குறைந்தது சினிமா பார்க்கும் நேரம் ஆகி விடுகிறது. செலவும் அப்படித் தான்!
பிரதோஷ காலம் இருக்கிறதே..எங்கிருந்து தான் மக்கள் புற்றீசல் போல வருவார்களோ தெரியவில்லை. வெறிச்சோடிக் கொண்டிருக்கும் கிராமத்து சிவன் கோவில் கூட அன்று சற்று சுறுசுறுப்பாய் காணப்படும்!
பௌணர்மி அன்று இன்னும் மோசம். கையில் ஊதுபத்தி ஏந்திக் கொண்டு ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டு நம்மை குத்தி விடுவது போல அன்பர்கள் வருவார்கள். நாம் தான் ஜாக்கிரதையாய் ஊதுபத்தியின் தாக்குதலுக்குத் தப்பித்துக் கொண்டு போகவேண்டும்.
விசேஷ காலங்களில் தரிசனம் பண்ண ஸ்பெஷல் கட்டணம்.நாம் நூறு ரூபாய் கொடுத்து கட்டண சேவைக்குச் சென்றால், நம் அதிர்ஷ்டமும் நம் கூட வரும். தர்ம சேவைக் கும்பல் விறுவிறு என்று போய்க் கொண்டிருக்கும் அப்போது !
இப்படித் தான் ஒரு ஆடி வெள்ளியன்று நானும் கோவிலுக்குக் கிளம்புவோமென்று கிளம்பினேன். சரியான கூட்டம். எங்கெங்கெல்லாமோ தடுப்பு போட்டு வைத்திருந்தார்கள். ஆர்டினரி கட்டண சேவை..ஸ்பெஷல் கட்டண சேவை..தர்ம சேவை.. என்று அது பாட்டுக்கு ஜரூராய் போய்க் கொண்டிருந்தது.
எப்படியடா போய் தரிசனம் பண்ணப் போகிறோம் என்று நாம் மலைத்த போது, நண்பர் இரண்டு பத்து ரூபாய் டிக்கெட்டுகளுடன் வந்தார். ஆனால் பத்து ரூபாய் க்யூ மலைப் பாம்பு வால் போல் செம நீளம்! நண்பர் செயற்கரிய காரியம் ஒன்று செய்தார். 'பேசாம என்னோட வாங்க' என்று அன்பு கட்டளை இட, அகத்திக் கீரைக் கட்டைக் கண்ட பசு மாடு போல் நானும் ஆசையுடன் தொடர்ந்தேன் !
வடக்கு வாசல் குறுக்கே அவர் செல்ல, நானும் தொடர, 'சார், பத்து ரூபாய் க்யூ அங்கே' என்று ஒரு போலீஸ்காரர் கை காட்ட 'நாங்க இந்த தெருக்காரங்க' என்று சொல்லிவிட்டு நண்பர் நுழைய நானும் நுழைந்து அடுத்த அரை மணி நேரத்தில் வெகு சுலபமாய் திவ்ய தரிசனம்!
ஆனால் என்ன பிரயோசனம்! 'பிளாக்'கில் சினிமா பார்த்தது போன்ற உணர்வு என்னுள்! 'ஒரு ஸ்வாமி தரிசனம் கூட உன்னால் ஸ்ரத்தையாய் செய்ய முடியவில்லை பார்' என்று மனம் வேறு குத்திக் காண்பித்தது!
ஏன் இவ்வளவு கூட்டம்?
ஆன்மீகத்தில் நம் மக்களுக்கு இவ்வளவு ஈடுபாடா என்றால் ...ஊஹூம்....பிறகு கோவிலில் அப்படி என்ன தான் நடந்து கொண்டு இருக்கிறது என்கிறீர்களா?
' என் பையனுக்கு எஞ்சினீயரிங்க் சீட் கிடைத்தால் நூறு தேங்காய் உடைக்கிறேன்..அந்த ஆஸ்பத்திரி அவ்வளவு ராசியானதாய் இல்லை என்று தான் அங்கு அட்மிட் பண்ணினோம். போகிற போக்கைப் பார்த்தாள் பிழைத்து விடுவாள் போல இருக்கிறதே, மாமியார் மண்டையை போட்டால், இரு நூறு தேங்காய் உடைக்கிறேன் என்று பேரம் நடந்து கொண்டிருக்கும்.

இதைப் பார்க்கும் போது கோவிலுக்கு வந்திருக்கிறோமா இல்லை , மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறோமா என்று நமக்குள் ஒரு சம்சயம்!

தானாக வந்தது...நாம் இழுத்துக் கொண்டு வந்தது என்று பலவித பிரச்னைகள் மனிதனை சூழ்ந்து கொள்ள அவன் என்ன தான் செய்வான், பாவம்!
இன்றைய காலக் கட்டத்தில் எளிமையாய் வாழ்வதே ஒரு தவம் தான்! யார் எளிமையாய் வாழ்கிறார்கள்...யார் எளிமையாய் வாழ ஆசைப் படுகிறார்கள்?
ஆடம்பரமாய் வாழ வேண்டியது..அதனால் வரும் அடுக்கடுக்கான தொல்லைகளை சமாளிக்க முடியாமல் திணறி, அதனை இறக்கி வைக்க ஒன்று சாமியார்களை நாடுகிறார்கள். இல்லாவிட்டால் கோவில்களுக்குப் படையெடுக்கிறார்கள். இப்போது மீடியாக்கள் சாமியார்களைத் தோலுரித்துக் காட்ட, மனத்துள் பயம் வர கோவில்களில் கூட்டம் அதிகப் படியாய்!
இந்த கண்றாவிகளைக் காணச் சகியாமல் தான் ஆண்டவனும் கல்லாய் போய் விட்டான், போலும்!

இந்த கூத்துக்கு என்ன தான் முடிவு?

1. எளிமையாய் வாழ எண்ணுவோம். எண்ணமே செயலுக்கு ஆதாரம்.(உதாரணம்: அறம் செய் என்று ஒளவை சொல்லவில்லை. அறம் செய விரும்பு என்று தான் சொல்கிறாள்)

2. பேதமின்றி அனைத்து உயிர்க்கும் அன்பு செய்வோம்!

3. மனதில் உள்ள அழுக்குகளை அகற்றுவோம். தூய்மை ஆக்குவோம்.

4. தூய்மையான ஆழ்மனத்துள் முங்கிக் குளிப்போம்.தெய்வீகமெனும் முத்துக்களை அள்ளுவோம்......உள்ளுக்குள் ஆனந்திப்போம்...........

5. ஒவ்வொரு செங்கல்லாய் மனம் என்னும் பீடத்தில் பதிய வைப்போம்! சிறுக..சிறுக ..கல் சேர்த்து, பூசலார் நாயனார் போல, மனத்துள் பிரம்மாண்டமானதொரு கோவில் கட்டுவோம்! இறைவனை அதில் ப்ரதிருஷ்டை செய்வோம்!!

இன்று நாம் படும் பாடு அன்றே திருமூலருக்குத் தெரிந்திருக்கிறது. இல்லாவிட்டால் அவர் தான் இப்படி ஒரு பாடல் பாடியிருப்பாரா?

" நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சாற்றியே,
சுற்றி வந்து
மொணமொணவெமன்று,
சொல்லும் மந்திரம் ஏனடா?
நட்ட கல்லும் பேசுமோ,
நாதன் உள்ளிருக்கையில்...
சுட்ட சட்டி சட்டுவம்,
கறிச்சுவை அறியுமோ???.."

ஆம்...
வெளியே கஷ்டப்பட்டு தேடுவதை விட்டு விட்டு நம்முள்ளே சுலபமாய் இறைமையைத் தேட இன்று முதல் ஆரம்பிப்போமா??

Wednesday, August 4, 2010

மனிதம்...!!!



இங்கு எல்லாமே
வியாபாரமாகி
விட்டது...
இவருடன் பேசினால்,
நமக்கு என்ன லாபம்..
என்று சாதாரண மனிதன்
கூட யோசிக்க,
ஆரம்பித்து விட்டான்..
எல்லாமே ஒரு
எதிர்பார்ப்புடன்..
இயங்கிக் கொண்டிருக்கிறது..
எளிமையும், இனிமையும்
தூய்மையும் நிறைந்த
கிராமங்கள் நகர்ந்து,
நகரங்கள் ஆகி விட்டன....
மனிதமே இல்லாத
மனிதன் ஆகி விட்டோம்..
நாம்
எல்லாரும்!!!!!!!!!!

Saturday, July 31, 2010

ராகவ புரம் ரயில்வே ஸ்டேஷன்!


'க்ராண்ட் ட்ரங்க்' நிதானமாக ஓடிக் கொண்டு இருந்தது. ஒன்பது மணி பகல் பொழுதில், அந்த குளிரூட்டப் பட்ட ' ஏசி சேர் காரி'ன் 'ஸ்க்ரீனை' விலக்கி, மூடியிருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன்.
ராகவ புரம் ரயில்வே ஸ்டேஷன்!
கண நேரத்தில் வந்து மறைந்து போனது ஸ்டேஷன்.
ராகவ புரம்.
என்ன ஒரு அழகான ஊர்! என்ன ஒரு அழகான பெயர்!
'சௌத் சென்ட்ரலி'ல் என்னை மாற்றிய போது, முதன் முதலாக அங்கு தான் 'போஸ்டிங்'. அதை விட்டு வந்து ஒரு பத்து வருடம் இருக்குமா? ஏன் அதற்கு மேலும் கூட இருக்கலாம்.
ஆந்திராவில் ' கரீம் நகர்' ஜில்லாவைச் சேர்ந்த அந்த ஊரில் இருந்த அந்த இரண்டு வருடங்களும்..வருடங்களா .வருடங்கள் அல்ல...என் வாழ்வின் வசந்த உத்சவங்கள்...அல்லவா அவை!
' காஃபி சாப்பிடறேளா?'
' கொஞ்சம் குடேன்'
லலிதா 'ஃப்ளாஸ்க்'கிலிருந்து காஃபி கொடுத்தாள்.அந்த நேரத்திற்கு, அது ரொம்ப சுகமாக இருந்தது.
மனம் மெள்ள பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது.
லலிதாவை நான் ராகவபுரம் கூட்டிக் கொண்டு போகவில்லை.அவள் அப்போது திருச்சி 'ஜங்ஷனி'ல் புக்கிங் க்ளார்க்.
குடித்த காஃபியில் லைட்டாக ஒரு கசப்பு.
அசை போடும் பழைய நினைவுகளூடே ஒரு வித சோகம்...
எனக்குக் குழந்தைகள் என்றால் ரொம்ப இஷ்டம். குழந்தையே இல்லாத பாவி நான்... இந்த வம்சம்...அரியூர் அனந்த நாராயண கனபாடிகள் என்கிற பாரம்பர்யமான வம்சம்...
அரியூர் அனந்த நாராயண கனபாடிகள் என்கிற அந்த ஆணி வேரின்... காய்ந்து..... தீய்ந்து போன கடைசி வேர்க்கட்டை தான்
அனந்த ராமனாகிய நான் .....

இந்த ஆதங்கத்தினால் கூட குழந்தைகள் மீது எனக்கு பாசம் இருக்கலாம்.
மேலும் குழந்தைகள் தானே என்று அலட்சியப் படுத்தாமல், நாம் மட்டும் கொஞ்சம் பொறுமையாய் இருந்தோமானால், அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்! ஏராளம் !!
வந்து சேர்ந்த முதல், இரண்டு நாட்களுக்கு மிகவும் சிரமப் பட்டேன். மூன்றாம் நாள், காலைப் பொழுதில் ஒரு வாண்டு மெள்ள கதவைத் தள்ளி எட்டிப் பார்த்தது.
' அங்க்கிள்....மீரு கொத்தக ஒச்சாரா?'
' ம்'
அதை தாஜா பண்ண பழைய பேப்பர் ஒன்று கிழித்து, ஏரோப்ளேன் செய்தேன்.
குழந்தை போய் விட்டாள்!
' நாக்கு அங்க்கிள்'
' நாக்கு அங்க்கிள்'
பழைய ஆங்கில தினசரி பேப்பரை எடுத்துக் கொண்டு நாலைந்து நண்டு,சிண்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டன!
அவர்களுக்கும் ஏரோப்ளேன் வேண்டுமாம்!
கொஞ்சம்,கொஞ்சமாய் அவர்களுடன் ஐக்யமானேன். அவர்களில் திவாகர் தான் பெரியவன். ஆறாம் க்ளாஸ். ஷிரவந்தி யு.கே.ஜி. டிங்கு என்கிற ரவி காந்த்...டிட்டு என்கிற அவன் தம்பி சசி காந்த்..ஆஷா..ரூபா...வம்சிகிஷோர்..ரவிச்சந்திர ஸ்வரூப்..ரவா லட்டு என்று கூப்பிட்டால் கோபித்துக் கொள்ளும் ரவிக்குமார் என்கிற பொடியன்....
அந்த ரயில்வே க்வார்ட்டஸில், வந்து சேர்ந்த சில நாட்களிலேயே, நான் ஹீரோ ஆகி விட்டேன்!
' அங்க்கிள்..ஒக்க கதை செப்பண்டி?'
டி.வி.யின் தாக்கம் இல்லாத நாட்கள், அவை!
வாலறுந்த நரி கதை சொன்னேன்...ட்ரீமர்...லிலிபுட்...சாம்ஸன் அண்ட் டிலைலா...ஏக சக்கராபுரத்தில் பாண்டவர்கள் பகாசுரனை வதம் பண்ணியது.....
நான் பட்லர் இங்க்லீஷில் வெளுத்து கட்ட, அதை திவாகர் தெலுங்கில் மொழி பெயர்ப்பான்!
சூழ் நிலையைக் கலைத்தாள்,லலிதா.
' என்ன யோஜனை?'
'ஒண்ணுமில்லே'
அவளுக்கு ஒன்றும் தெரியாது, பாவம்!
மறுபடியும்
ராகவபுரம்!
சில நாட்கள் பாட்டும்...கூத்துமாய் பொழுது ஓடி விடும்!
நான் பாட ஆரம்பிப்பேன்.
'....... அங்கார
இங்கார....
நாமம் சாத்தி,
அனுதினமும்,
அனுதினமும்,
கரம் கூப்பி...
சிங்கார
தேவனே
சீனிவாசா...
சீரங்கத்துப்
பெருமாள
சேவிக்கப்
போறோம்..
ஆமா..
சேவிக்கப் போறோம்..
ஆஹா..
சேவிக்கப் போறோம்...
அந்த கடைசி இரண்டு வரிகளை..'ஆஹா..சேவிக்கப் போறோம்' என்று ஒரு மாத்திரை அழுத்தம் அதற்குக் கொடுத்து, நான் பாட, அத்தனை குழந்தைகளும் 'ஆமா...
சேவிக்கப் போறோம்..ஆஹா..சேவிக்கப் போறோம் என்று கத்த...ஏக குஷி!
அடுத்த பாட்டு..
' நன்னே முன்னே பஜ்ஜதீரே..
முடீ..மே க்யா ஹே....'
அடுத்தது...
' ஸாரே...சஹாங்கே அச்சா...'
'சுன்...சுன் கர்த்தி ஆயே சிடியா..' சொல்லிக் கொடுத்தேன்.
கட்டோ கடைசியாய்...
' ஏக் தோ தீன்...'
கோரஸாய் ஒரே கத்தல்!!
திவாகர் மிமிக்ரி நல்லா பண்ணுவான். ப்ரேக் டான்சும் ஆடுவான்.
சில நாள் எனக்கு 'மூட் அவுட்' டாகி விடும். 'போங்கடா, என்று எல்லாரையும் விரட்டி விடுவேன்.
அடுத்த நாள் சாயங்காலம் ஆஃபீஸ் விட்டு வந்து பார்த்தால், வீட்டு பூட்டைத் திறக்க முடியாது!
சாவி திறக்கும் ஓட்டையில் ஈர்க்குச்சி செருகி இருக்கும்!
ஷிரவந்தியாய் இருக்கும்!
இந்த மாதிரி வேலைகளை அவள் தான் சூப்பராய் செய்வாள்!
ஜி.டி ஓவென்று பெருங்குரலெழுப்பி ஒரு பாலத்தைக் கடந்து செல்ல.....
எனக்கும் ஓவென்று வாய் விட்டு அழ வேண்டும் போல்....
லலிதாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன், ஆதரவாய் !
எனக்கு குழந்தை அவள்!
அவளுக்கு குழந்தை நான்!!!!