Tuesday, February 24, 2015

ஶ்ரீரங்கம் பதிவர் மாநாடு!

22.02.15 ஶ்ரீரங்க பதிவுலக நட்புகள் சந்திப்பு
-------------------------------------------------
விவரம் தெரிந்த புதிதில் வெவ்வேறு எம்பஸிகளுக்கு கடிதம் அனுப்பி அங்கிருந்து வரும் வழவழப்பான புத்தகங்களை தபால் காரரிடமிருந்து வாங்குவது பரம ஆனந்தமாக இருந்தது...
"டேய்..எனக்கு ஜெர்மன்லேர்ந்து புஸ்தகம்....உனக்கு ப்ரான்ஸா.." என்று ஒவ்வொரு பையனாக கேட்போம்....அதற்கு பிறகு வந்தது pen friends. முன் பின் தெரியாதவர்களிடமிருந்து நம்மை அங்கீகரித்து வரும் கடிதங்களுக்கு ஒரு மௌஸ்...
       இப்போதும் கூட, சற்றேறக்குறைய  ஆறு மணி நேரத்திற்கு முன்,முக நூல் சகோதரி ஒருவர் கொஞ்சம் கூட அறிமுகம் இல்லாத என்னிடம், சகஜமாக....கொஞ்சம் கூட விகல்பமில்லாமல் 
சொந்த சகோதரனிடம் பேசுவது போல் பேசினார்....நான் யார்...என்ன ஒரு நம்பிக்கை என் மேல்...இதை ஏன் என்னிடம் சொல்கிறார்....இதை ஏன் என்னிடம் சொல்ல வேண்டும் என்று ஆயிரம் கேள்விகள் என்னுள்....இருந்தாலும் அவருடைய அன்பு என்னை நெகிழ்த்தி விட்டது...
அவருடைய நம்பிக்கைக்கு உரியவனாக ஆக வேண்டும் என்கிற ஆசை என்னுள் துளிர்க்க ஆரம்பித்து விட்டது....
             அது போல் ஒரு பதிவுலக நண்பர் ஹைதை காரர்..சென்னையில் பையனுக்கு கல்யாணம் அவசியம் வரவும் என்றார்...ஏதோ ஒரு தைர்யம் .....போனேன்...எக்மோரில் இறங்கியதுமே வயிற்றை கலக்க ஆரம்பித்து விட்டது...என்ன ஒரு அசட்டு தைர்யம்..."யாரையா நீ?"என்று கேட்டால், என்ன சொல்வது? சரி....வந்தது வந்தோம் முதலில் ஹோட்டலில் சாப்பிடுவோம் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரிடமிருந்து போன்.."சார்...எங்கே இருக்கீங்க....ஒங்களுக்காக நான் வெயிட்டிங்" என்றார் அவர்..என்ன ஒரு பாசம்.....ரொம்பவே சங்கோஜியான நான் தைரியமாக கல்யாண மண்டபம் சென்றேன்..
என்னை பார்த்தவர்..."வாங்க மூவார்,," என்று அன்போடு வரவேற்று, "திருச்சீலேர்ந்து நம்ம கல்யாணத்துக்கோசரம் வந்திருக்காராக்கும்" என்று பெருமையுடன் அறிமுகப் படுத்தியதுடனல்லாமல், தாம் மண மேடையில் இருப்போம் என்று தன்னுடைய சொந்தக்கார
மாமாவை....அவர் கொஞ்ச நாள் திருவானைக்காவலில் இருந்தவர்...எனக்கு கம்பெனி கொடுக்கச் சொல்ல, அவரும் ஏதோ ரொம்ப நாள் பழகியவர் போல வாஞ்சையாய் பழகினார்...
            இந்த ஆரண்ய நிவாஸ் புஸ்தகம் போட்டவரும் ஒரு பதிவுலக நண்பர் தான்...ஒப்பற்ற சிரத்தையையும்...உழைப்பையும் நாம் கொடுத்த பணத்தால் ஈடு செய்ய முடியாது என்பதை அவரிடமிருந்து உணர்ந்தேன்...அது போல, சென்னையில் என் வீட்டு பங்க்‌ஷனுக்கு போகும் போது பார்க்க வந்த நண்பர்...மற்றொரு முறை என் பெண்ணை கூட்டிக் கொண்டு வர சென்னை சென்ற போது..குடும்பத்துடன் சென்னை GH வந்த என் அன்பு பதிவுலக நண்பர்...
திருச்சி வந்த ஒரு பதிவுலக குடும்பம்....
           இப்போது சிகரம் வைத்தார் போல, இந்த ஶ்ரீரங்கத்தில் நடந்த இந்த மினியேச்சர் சந்திப்பு...
          ஒருவர் தன் காரில் இரண்டு பதிவர்களை அழைத்து வருகிறார்...இரண்டு பேர் ஸ்வீட் தருகிறார்கள்....தாம் அச்சிட்ட புத்தகங்களை பரிசாகத் தருகிறார்கள்....வீட்டிற்கு வந்த நண்பர்களுக்கு சுவையாக சிற்றுண்டி அளிக்கிறார், அழைத்த பதிவுலக நண்பர்...பளிச் பளிச் என்று போட்டோ எடுக்கிறார்கள்...இந்த அன்பு மழையில் ஒரு குட்டி தேவதை...பெண் பதிவர்களுக்கு ரவிக்கை...குங்குமச் சிமிழ் வேறு!
         ஓரிருவர் தவிர ஒருவருக்கும் மற்றவர் பழக்கமில்லை....மேன்மையானதொரு நட்பு....
ஆனாலும் என்ன ஒரு பாச மழை....அந்த இரண்டு மணி நேரம் உண்மையிலேயே உன்னதாமாகத் தான் இருந்தது, ஒவ்வொருவருக்கும்.....
         ஓ.....எழுத்து தான் மனிதர்களை என்னமாய் இணைக்கிறது!