Friday, October 22, 2010

கலிஃபோர்னியா உறவுகள்!!

கலிஃபோர்னியாவில்
மகன் வயிற்றுப் பேத்தி
கனடாவில்
மகள் வயிற்றுப் பேரன்..
வேர்களோ
இங்கு..
விழுப்புரத்தில்!!
உறவுகளைப் பற்றிக்
கொள்ள 'ஸ்கைஃப்'
தான்
தொப்புள் கொடி!!
நினைத்துப் பார்க்கிறன்..
இப்படிப் பட்ட உத்யோகம் !
அது கொடுத்த மனைவி..
மக்கள்..உறவு....
ஒன்றும் வேண்டாம்..
ஒரு அத்துவானப்
பட்டிக் காட்டில்,
மூணாம் க்ளாஸ்
வாத்யார் வேலை!
அங்கு அஞ்சாம் க்ளாஸ்
வாத்யார் வேலை
காலி இருந்தாலும்
அது கூடாது!
மூணாம் க்ளாஸ்னா
மூணாம் க்ளாஸ் தான்!
அந்த வேலை கொடுக்கும்,
எளிமையான
வாழ்க்கைத் துணை!
அதனால் வரும்
மக்கட் செல்வம்..
அதுகளும்
பக்கத்து..பக்கத்து...
குடில்களில்..
' தாத்தாவ்..பணியாரம் இந்தா
அம்மா கொடுக்க
சொல்லிச்சு..'
பச்சிளம் தளிர்கள்
வேர்களின்
அதி பக்கத்திலேயே
அதீத பாசத்துடன்..
கரெண்ட் கட் என்றால்,
கட் ஆகி விடும்,
அந்த கலிஃபோர்னியா
உறவுகள்!!
நினைத்துப் பார்க்கிறேன்..
எளிமையாய் வாழ்வது
ஒரு சுகம்..
சுகமல்ல..அது ஒரு தவம்..
தவமுமல்ல..
அது ஒரு வரம்...
இறைவனாய்ப் பார்த்து,
ஒரு சில
புண்ணியாத்மாக்களுக்கு,
கொடுத்த வரம்!!!!!!!!

15 comments:

மோகன்ஜி said...

மிகச் சரியான கருத்து! எளிமை ஒரு வரம்.. எளிமை சுகம்.. எளிமை ஒரு சௌகரியம்..
வணிக மயமாகிப் போன உலகமும் உறவும்.. நிறைய பொருள் தேடி.. நிறைய சுகங்களை அல்லவா பறி கொடுத்து விட்டோம்.. சுடும் உண்மை!

ஸ்ரீராம். said...

பொருள் பெரிதா....வாழ்வின் பொருள் பெரிதா?

RVS said...

பொருளற்ற வாழ்வு.... ;-)

R. Gopi said...

நானும் கூடத் திரும்பிக் கும்பகோணம் போய் விடலாம் என்று இருக்கிறேன்.

ADHI VENKAT said...

எளிமையாய் இருப்பதே சிறந்தது , அவசியமானதும் கூட. இன்று உலகம் இருக்கும் நிலையில்.

vasan said...

ம‌ர‌த்தை வெட்டிவிட்டு ஏசி போடுகிற‌ ஏமாளிக‌ள்.
ஏசி விற்கிற‌வ‌ன் கொடுக்கும் ஓசி ஸ்டெபுளசைருக்காக‌.
எளிமை எல்லோருக்கும் கிடைத்திருக்கும் வ‌ர‌ம்.
அத‌னால் தான் அத‌ன் அருமை தெரிவ‌தில்லை.
இது தான் வ‌ச‌தியென்னும் வாலை நறுக்கிக் கொண்ட‌ ந‌ரியின்,
பின்னால் நாம்.
பார‌தியின் `க‌ண்க‌ளை விற்று சித்திர‌ம் வாங்கும்' அறிவிலிக‌ள்

வெங்கட் நாகராஜ் said...

எதார்த்தத்தை பிரதிபலிக்கும் அற்புதக் கவிதை. புதுமை புதுமை என்று நிறைய இழந்து கொண்டிருக்கிறோம்.

வெங்கட்.

வார்த்தை said...

நல்லாருக்கு

எல் கே said...

அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் என்று ஆரம்பிக்கும் வாத்யார் படப்பாட்டில்,
”மண்குடிசை வாசலென்றால்...தென்றல் வர மறுத்திடுமா” ... என்ற அருமையான வரிகளைக் கேட்டு ரசித்தேன் சற்று முன்பு.

பிறகு உடனே இந்த தங்களின் பதிவைப் படிக்க நேர்ந்தது. நாம் பிறந்து வளர்ந்த நம் தாய் திரு நாடு, நம் தமிழ்நாடு, நம் ஊர், நம் கிராமம், நம் மண் குடிசை, நம் மக்கள், நம் உறவினர், நம் தோட்டம், நம் வயல், நம் கோவில், நம் தாய், நம் தந்தை, நம் உடன் பிறப்புகள், நம் அத்தை, நம் மாமா, நம் குழந்தைகள், நம் பேரன் பேத்திகள் என்ற பல வேர்களுடனும், விழுதுகளுடனும் கூடிய ஆலமரம் போன்ற வாழ்க்கையில் தான் எத்தனை சுகங்கள். [கலிபோர்னியாவாவது கத்திரிக்காயாவது]
அனைத்து சுகங்களையும் எளிமையாக இனிமையாக இங்கேயே அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமய்யா !

சூடான சுவையான மணமான வெங்காய வற்றல் குழம்பு, சூப்பர் டேஸ்டான இளசான முளைக்கீரை
மசியல் தேங்காய் துருவலுடன், புளிப்பில்லாத கெட்டித் தயிர், நல்ல பூப்போன்ற பொன்னிப் பச்சரிசி சாதம், தொட்டுக்க வடு மாங்காய் எல்லாம் அன்புடன் பரிமார எனதருமை வேர்களும் விழுதுகளும் என்னருகே ரெடியாக - அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

அன்பரசன் said...

//தவமுமல்ல..
அது ஒரு வரம்...//

உண்மைதாங்க

a said...

அலுவல் நிமித்தம் அயல்நாடுகளில் இருக்கும் என்னைப்போன்றவர்கள் நீங்கள்
கூறியுள்ள விசயங்களை நினைக்காத நாங்கள் இருக்காது....

ரிஷபன் said...

எளிமையாய் வாழ்வது
ஒரு சுகம்..
சுகமல்ல..அது ஒரு தவம்..
தவமுமல்ல..
அது ஒரு வரம்...

எளிமையாய் எழுதுவதும் ஒரு சுகம்.. அல்ல.. வரம்.. அருமை.

ராம்ஜி_யாஹூ said...

கிராம வாழ்வும் ஆறு ஏறி வயல் என்று இயற்கை சார்ந்த வாழ்வுமே சிறந்தது.
வெளிநாட்டு வாழ்க்கை செயற்கை இன்பம் மட்டுமே தரும்

பத்மநாபன் said...

என்ன தான் சொன்னாலும் ..அந்த செயற்கை சுகத்தில் சிக்கியவன் மீள்வதில்லை .. தொடர்வண்டி இரைச்சலில் படுத்து பழகியவன் போல..

எளிமையாய் வாழ்வது ஒரு தவம் /வரம் -- மதிப்பு மிக்க வரி