Thursday, January 27, 2011

தாய் மண்ணே வணக்கம்!!

( எங்கள் கார்த்திகேயன் கார்டன் காலனியில் இந்த குடியரசு தினமன்று கொடி ஏற்றிக் கொண்டாடினோம். எமது நீண்ட நாள் கனவு இது! மாலையில் ஃபேன்ஸி ட்ரஸ், மியூசிக் போட்டி..அந்தாக்ஷரி என்று ஏக அமர்க்களம்.அதை நம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறோம்..சிறப்பு விருந்தினர்
எங்கள் வார்டு கவுன்ஸிலர் திரு கனக ராஜ் அவர்கள் )
படம் 1

கொடி ஏற்றுவதற்கு முன்பு எங்கள் காலனி வாண்டுகள் அழகாக MARCH PAST செய்தது
கண் கொள்ளாக் காட்சி! ஒவ்வொருத்தனையும் பார்த்தா மிலிடரி ஜவான் போல இருந்தது.அதிலும் அந்த வைகுந்த் சூப்பர்!
படம் 2


அனைவருக்கும் ஆரஞ்சு மிட்டாய்!
படம் 3


தாயின் மணிக்கொடி பாரீர்!
படம் 4


குட்டிக் கிருஷ்ணன் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' என்று அந்த பனியில் பாடியது செம கலக்கல்!
படம் 5

விவேகானந்தரின் சிகாகோ உரை! ஐஸ்வர்யா சூப்பர்!!
படம் 6


கட்டபொம்மன் வீர வசனம் கேட்டு, அந்த ஜாக்ஸன் துரை நொந்து நூடில்ஸ் ஆகி துப்பாக்கியை வீசி விட்டு ஓட .......
படம் 7கன்னடத்துப் பைங்கிளி கேள்விப் பட்டிருக்கிறோம்.இது கேரளத்துப் பைங்கிளி!
படம் 8வன தேவதை!
"நீங்கள்ளாம் ரொம்ப சந்தோஷமாய் இருக்கீங்க..உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்க!" என்று தேவதை சொன்னது தான் தாமதம்..ஆடியன்ஸ் எல்லாரும் "ஆளுக்கொரு கிலோ வெங்காயம் கொடு தேவதையே" என்று
கோரஸாகக் கத்த, தேவதை எஸ்கேப்!!
கவுன்சிலர் உரை!
ரொம்ப சந்தோஷமாய் இருக்கு! இனிமே அடுத்த கொண்டாட்டம் சமத்துவ பொங்கல் என்று சொன்னவுடன்........
திடீரென்று ஒரு உருவம் கருப்புத் துணி பார்த்தி..'சமத்துவ பொங்கலா கொண்டாடணும்...அதை இப்பவே கொண்டாடலாம்' என்று ஒரு மண் பானை,விறகுடன் ஓடி வந்தவுடன் நாங்கள் பயந்து விட அட..
அது நம்ம தாசில்தார் ஸார்!!!
We are happy to be in such an environment!!!!!!

Monday, January 24, 2011

திண்ணை பேச்சு!


கண்ணே ! கண்மணியே !
கற்கண்டே ! கனி ரசமே!
உந்தன் பாட்டன், முப்பாட்டன்,
காலத்தில் செல்விருந்தும்,
வரு விருந்தும்....
மேனி சிலிர்க்குதடா...
உள்ளம் விம்முதடா...
தொன்னையிலே நீர் மோராம்,
துணைக்குக் கொஞ்சம்
வெள்ளரி பிஞ்சாம்...
பக்கத்தில் பானகமாம்,
பானை நீரும் அங்குண்டாம்!
களைத்து வந்த வழிப் போக்கன்,
அத்தனையும் அருந்தி விட்டு,
களிப்புடனே செல்வதை நான்
கண் குளிரப் பார்த்திருக்கேன்,
கண் மணியே மேலும் கேள்!
மதிய நேரம் வந்து விட்டால்,
மனம் குளிர விருந்துண்டு!
தாம்பூல உபசாரம்
தடபுடலாய் நடக்குமிங்கே!
உன் தந்தை காலத்தில்,
என்னை சிறை வைத்து,
ஏக்கத்துடன் வெறிப் பார்வை,
பார்க்க வைத்து விட்டானே!
இன்னுமா தெரியவில்லை கண்ணே!
திண்ணை என்று அழைப்பார்கள் என்னை!!

Thursday, January 20, 2011

எதனால் இந்த முடிவு?

வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சப்தம்!
“ஆட்டோ வந்தாச்சு..”
ஒரு பரபரப்பு எல்லாரிடமும் தொற்றிக் கொள்ள,
“..ஹோட்டல்ல, அடிக்கடி சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதேப்பா.. நேரத்துக்கு ஆஃபீஸ் விட்டதும்,வீட்டுக்கு வந்துடு. க்ளப்ல போய்’பிரிட்ஜ்’ விளையாடிட்டு, நேரம் கெட்ட நேரத்துல வீட்டிற்கு வந்தால், அவளுக்குத் தான் கஷ்டம்..பொறுப்பா நடந்துக்கோ..புள்ளைங்க காலேஜ்ல படிக்குதுன்னு அசட்டையா இருக்காதே.. நாம படிக்க சொன்னாத் தான் அதுங்களும் படிக்கும்.
சனிக்கிழமை தவறாம எண்ணெய் தேச்சுக்கோ..அடிக்கடி எங்களை வந்து பாருப்பா..முடியலேன்னா, ஃபோனாவது பண்ணு..’
இப்படி எதுவும் அட்வைஸ் பண்ணாமல்,விருட்டென்று ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டாள்,காந்திமதி. நெல்லையப்பரும் இரண்டு சூட்கேஸ்களுடன் வந்து உட்கார்ந்து கொள்ள, ஆட்டோ கிளம்பியது.
முதல் இரண்டு நாட்கள் சிரமமாகத் தான் இருந்தது. போகப் போக பழகி விட்டது.
காலையில் சுப்ரபாதம் அல்லது விஷ்ணு சஹஸ்ர நாமம். சுடச் சுட காஃபி அல்லது டீ..
காலை டிஃபன் இட்லி, உப்புமா, பொங்கல், பூரி , தோசை என்று ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மெனு. மதியம் உணவுடன் எதாவது ஒரு பழம். இரவு சப்பாத்தி டால்..பிறகு பால்!
வாரம் ஒரு நாள் பஜன்..கூட்டுப் பிரார்த்தனை..தோட்ட வேலை..கேரம் போர்டு,பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இயற்கை உணவு..பூப்பந்து விளையாட்டு..எண்ணெய்க் குளியல்...
முதுமையை, உறவுகள் உதிர்க்கும் பருவம் என்று யார் சொன்னது? உறவுகளை உதிர்க்கும்
பருவமல்லவா முதுமை?
நெல்லையப்பருக்கு திகைப்பான திகைப்பு..பிள்ளையின் மீது கண்,மண் தெரியாமல் பாசத்தை பொழிபவளால், எப்படி திடீரென்று வெட்டிக் கொண்டு வர முடிந்தது? அதுவும் நாம்
ரிடையர்டாகி முழுசாக ஒரு மாதம் கூட ஆகாத இந்த நிலையில் எதற்கு இந்த திடீர் முடிவு?
பொறுக்க முடியாமல் கேட்டே விட்டார், நெல்லையப்பர்.
“ என்ன காந்திமதி ஏன் திடீர்னு இப்படி ஒரு முடிவு?’ அவரால் பேச முடியவில்லை.
குரலில் அப்படி ஒரு தழுதழுப்பு!

CHOICES

(1) “ அதுவா, ஒண்ணுமில்லீங்க.ரொம்ப நாளா நினைச்சது தான் இது! இப்ப தான் கை கூடி இருக்கு..நம்ம ரகு நம்மையே சார்ந்து இருந்துட்டான்..இத்தனை வருசமாகியும், தலைக்கோசர புள்ளங்க இருந்தும் எதையும் சுயமா முடிவெடுக்க முடியாம நம்மளையே சுத்தி,சுத்தி வந்தா அவனுக்கு எப்படிங்க பொறுப்பு வரும்? நாளைக்கே நமக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா புள்ள தவியாய் தவிச்சு போயிடும். அது கூடாதுன்னு தான் இந்த பிரிவு!அவன் சுயமா தன் காலில் நிற்கணும்னா, நாம வெளியே போய்த் தான் ஆகணும். இல்லீங்களா?”
(OR)

(2) " நீங்க இப்ப ரிடயர்ட் ஆகிட்டீங்க.. உங்களைப் பற்றி உங்களுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை.... கூட்டுக் குடும்பத்தில யாராவது எதாவது சொன்னாக் கூட நம்மள பத்தி தான் சொல்றாங்களோன்னு உங்களுக்கு தோண ஆரம்பிச்சுடும்..சாதாரணமா காய்கறி வாங்கிண்டு வரச் சொன்னால் கூட ’வேலை, வெட்டி இல்லாமல் சும்மா தானே இருக்காரு..போய்ட்டு வரட்டுமேன்னு தானே சொல்றாங்கன்னு உங்களுக்குள்ளே ஒரு கழிவிரக்கம் வந்துடும்! இந்த சமயத்தில நாம ஒதுங்கி இருந்தா அனாவசியமா சண்டையும் வராது..உறவும் பலப்படும் ..’தூர இருந்தால் சேர உறவு’
இல்லையா?”
(OR)

(3) ” எத்தனை நாள் தான் நானும் உழண்டுண்டே,உழைச்சுண்டே இருக்கிறது? நீங்க ரிடையர்டாகிட்டீங்க.. நான் ரிடையர்டாக வேண்டாமா?”

( இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு சந்தோஷப் படுகிறேன் )

அன்பு தாய் மார்களே !
அருமை தந்தை மார்களே !!
எனதருமைத் தோழர்களே..தோழியர்களே !!!
இந்த மூன்று CHOICE களில் ஏதாவது ஒன்றை MATCH செய்து கொள்ளவும். பெருவாரியான முடிவையே கதையின் கடைசி பாராவாக சேர்த்துக் கொள்வோமா? சரி தானே?

Sunday, January 16, 2011

எங்கே போகிறோம்????

எல்லாவற்றையும் சமன் செய்கிறது இயற்கை. அதோடு ஒத்து வாழ்ந்தால் ஒரு துன்பமும் கிடையாது.வயலில் விளை பொருள்..அதைத் தின்ன எலிக் கூட்டம்..எலியை பலகாரம் பண்ண பாம்பு என்று ECOLOGY BALANCE ஆகப் போய்க் கொண்டு தான் இருக்கிறது. மனிதன் சும்மா இருந்தாலே போதும். இவன் போய் பாம்பை அடிக்க,எலிகள் பல்கி பெருகி,அதனால் விளைச்சல் பாழ்!

எல்லாம் பேலன்ஸ் ஆகி விடும். இவன் போய் மரத்திற்கு ஆசை பட்டு காடுகளை அழிக்க, யானைக்கூட்டம் இருப்பிடம் தொலைந்தமையால், நகர்ப் புறம் வந்து
துவம்சம் செய்ய.. நமது முன்னோர்களுக்கு இது நன்றாகவே தெரியும். அவர்கள் இயற்கையோடு வம்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள். நாம் தான் அதை சீண்டிப் பார்த்து
சீரழிந்துக் கொண்டு இருக்கிறோம்!
NATIONAL HIGHWAY போட்டு மரங்களையெல்லாம் வெட்டி எறிந்து விட்டோம். BOULEWARD ROAD என்றால் இருபுறமும் அடர் மரங்கள் அடர்ந்த சாலை என்று அர்த்தம்.இன்று BOULEWARD ROAD இருக்கிறது. ஆனால் மரங்கள் தான் இல்லை!
தார் ரோடு மரங்களில்லாமல் தார் பாலைவனமாய் காட்சி அளிக்கிறது!ரோடின் இரு மருங்கிலும் பூச்செடிகள் வைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.இந்த NH ரோட்டினால் தான் எத்தனை சிரமம்? கிராம மக்கள், ஸ்கூல் பிள்ளைகள் என்று கிராமத்தில் இருக்கும் எல்லாருக்கும் ரொம்பவும் கஷ்டம்! முன்னைப் போல் ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு ஒரு சிறு வியாபாரி கிராமத்திலிருந்து நகர்ப் புரம் அவ்வளவு சுலபமாய் இப்போதெல்லாம் வர முடியாது. நகர்ப் புற மக்கள் சுலபமாய் போய் வர,கிராமங்களை காவு
கொடுத்துக் கொண்டிருக்கிறோம்!
எல்லா தரப்பினருக்கும் அது சினிமா என்றாலும் சரி..அரசு அலுவலகம் என்றாலும் சரி..
எல்லாமே நகர வாசிகளுக்குத் தான்! கிராமத்து மக்கள் இரண்டாம் பட்சம்!அவர்களும் இதை பெரிசாக எடுத்துக் கொள்ளாமல், வெகு சுலபமாய் நகரத்துப் பக்கம் MIGRATE ஆகி விடுகிறார்கள்! இதனால் நகர்ப் புற வாசிகளுக்கு சுமை மேலும் கூடி, கடைசியில் அது க்ளோபல் வார்மிங்கில் போய் முடிகிறது!
முதலில் இயற்கையைத் தொலைத்தோம்.. கிராமங்களைத் தொலைத்தோம்.. ...இருப்பது எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் தொலைத்துக் கொண்டு....
யோசித்துப் பாருங்கள்..ஆரோக்யமான மனிதர்கள் என்ன ஆனார்கள்? பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்!
நம்மிடம் இருந்த...............
சுவையான குடி நீர் போயிற்று!
ஆரோக்யமான காற்று போயிற்று!!
விஸ்தாரமான இடம் போயிற்று!!!
விவசாய நிலங்கள் போயிற்று !!!!
இழப்பதற்கு ஏதுமில்லாத சூழ் நிலையில்....
எங்கே தான் போகிறோம், நாம் ?

Friday, January 14, 2011

வருகவே.. வருக..வருகவே!!!!!!!!!!!!!!!!!!!!!!!தாளாமையுடன் தட்டு தடுமாறி நின்றாலும்,
வேளாண்மை செய்யும் விவசாயப் பெருங்குடியே,
விருப்பத்துடன் நீ செய்த இவ்வுழவுத் தொழிலால்,
இருக்குதய்யா இவ்வுலகம் இந்த மட்டில்!
பருப்புடன் பானையிலே பொங்கி வந்த பொங்கலிது,
பிம்பமாய் உன் உருவம் அதில் எனக்குத் தெரிகிறது!
உழவென்னும் பெருந்தொழிலை வந்தனை செய்து,
உறவெல்லாம் சேர்ந்திங்கு உல்லாசம் பொங்கி வர
செந்நெல் செழிக்க, செங்கதிரோன் வருகையினை,
எல்லாருமாய் ஒன்று கூடி எழுச்சியுடன் வரவேற்போம்!

Monday, January 10, 2011

கர்ணனும், நாகர்கோவிலும்!

இன்னமும் தெளிவாய் ஞாபகம் இருக்கிறது. நாகர்கோவிலில் நாங்கள் குடியிருந்த வீடு! 1963-64 வாக்கில் என நினைக்கிறேன். அன்று எங்கள் குடும்பம் அண்ணா,அம்மா, நான்,கிரி,முரளி அப்புறம் பாலு சித்தப்பா.
தாத்தா,பாட்டி,சிகாமணி சித்தப்பா,சகுந்தலா அத்தை எல்லாரும், குலசேகரம் பக்கத்தில் செருப்பாலூர் என்கிற ஊரில் இருந்தார்கள். அப்போது, இரவு டெய்லி சப்பாத்தி தான். உருளைக் கிழங்கு சப்ஜி சித்தப்பா செய்ய,அம்மா சப்பாத்தி இட, அண்ணா அதை ரோஸ்ட செய்ய,அந்த கால கட்டம் செம ஜாலி!
நாங்கள் இருந்த இடம் பெயர் வடிவீஸ்வரம்.இரண்டு பக்கமும் வீடுகள். எதிர்த்த பக்கத்தில் கால் மனை.எங்கள் பக்கம் அரை மனை என்பார்கள்.எங்கள் வீட்டுக்கு பத்து வீடு தள்ளி ஒரு பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரை எல்லாரும் ஊர் மாமா என்று அன்போடு அழைப்பார்கள். எல்லாருக்கும் நல்லது செய்வாராம், அவர்.
எங்கள் பக்கத்து வீட்டில் நாராயண வாத்யார் இருந்தார். பெரிய பையன் அந்த காலத்திலேயே, துர்காபூருக்கு போனதினால், கணேசன் அண்ணா எங்களுக்கு அவ்வளவாய் பழக்கம் கிடையாது. நாகராஜண்ணா செம ஜாலி.அப்புறம் கீதா, பாலா அக்காக்கள்.
’அம்மா உனக்கு காஃபிபொடி..அப்பாக்கு மூக்குப் பொடி மாமீ உங்களுக்கு என்ன
வேணும்’ என்று அந்த நாகராஜண்ணா நீட்டி முழக்கிக் கேட்பது எங்களுக்கெல்லாம் வேடிக்கையாய் இருக்கும்.
அங்கு பேர்களே வேடிக்கையாய் இருக்கும் .அடிக்கடி குழந்தை பிறந்து, இறந்தால்,அந்த குழந்தை தக்க, நம் பக்கத்தில் பிச்சை என்று பெயர் வைப்பார்கள். நாகர்கோவில் பக்கம் மண்ணாங்கட்டி என்று பெயர் வைப்பார்கள். இப்படியும் வினோதமாய் ஒரு பெயர்.மூக்காண்டி! என் ஃப்ரெண்ட் ஒருத்தன் பேர் மூக்காண்டி!
இந்த பக்கம் வீட்டில் யாரோ செட்டியார் இருந்தார்கள் என்று மங்கலாக ஞாபகம். அந்த வீட்டில் ஒரு சிறிய பெண் செத்துப் போய் விட்டாள்.அப்போது தான் எனக்கு சாவு என்றால் என்னவென்றே தெரியும். இன்னமும் எனக்கு பசுமையாய் ஞாபகம் இருக்கிறது. இறந்து போன அந்த பெண்ணைப் போல், ஒரு பெண்ணை நாங்கள் ரெயிலில் திருச்சி வரும் போது நான் பார்த்தேன்.செம ஆச்சர்யம். அடித்துச் சொல்வேன்.அதே பெண்! ரயில் மணியாச்சி..கடம்பூர் என்று போய்க் கொண்டிருக்கும் போது,அந்த குடும்பம் டிஃபன் பாக்ஸைத் திறந்தது.. தயிர் சாதம்(கடுகு தாளித்தது), தொட்டுக் கொள்ள எலுமிச்சை ஊறுகாய்!
பங்குனி உத்தரமோ அல்லது ஏதோ ஒரு திரு நாள். அன்று சாஸ்தாவைக் கொண்டாடுவார்கள். பக்கத்தில் ஒரு கிருஷ்ணன் கோவில்! அங்கிருந்து ஒவ்வோர் வீட்டிற்கும் எண்ணெய் கொடுப்பார்கள்.அதைத் தேய்த்து குளித்து,மடியாய் கிருஷ்ணன் கோவில் வருவோம். பூஜை நடக்கும். பூஜை முடிந்ததும் வடை,பாயசத்தோடு,முக்கனிகள் சேர்த்து, ஒரு சாப்பாடு போடுவார்கள்.அடேங்கப்பா..அத்தனைப் பதார்த்தங்கள்! மலைத்துப் போகும் அளவிற்கு விருந்து, திரட்டுப் பாலோடு!
ஆயுத பூஜை அன்று தடபுடலாய்,பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் விஜய தஸமி கொண்டாடுவார்கள். நிஜமாகவே, ஒரு பெண்ணை லக்‌ஷ்மி தேவி போல் அலங்காரம் செய்து,
ஒரு தாமரைப் பூ செட் செய்து,லைட்கள் அமர்க்களப் படுத்த...பிரமாதம்!
நாகராஜா கோவில் போனது ஞாபகம் வரவில்லை.
கீதா அக்கா, பாலா அக்காக்களோடு நானும், கிரியும் கர்ணன் படம் போனது இன்னமும்
தெளிவாய் இருக்க... மனம்,
‘இரவும், பகலும் மலரட்டுமே...
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே’
என்று ஏக்கத்துடன் அசை போட..வாவ் என்ன ஒரு அருமையான நாட்கள் அவை!!!!

Saturday, January 8, 2011

ஆதலினால்......’எல்’ போர்டு மாட்டி,
ஓட்டி வந்த காரை,
எங்கிருந்த்தோ வந்த
ஆட்டினை தவிர்க்க,
டமாலெனச் சத்தம்!
ஆட்டோ ஒன்று
காரில் மோத,
தண்டம் அழுதான்,
ஆயிரம்,
கார் வைத்த செலவு,
மூவாயிரம்,
இன்ஸ்யூரன்ஸோ,
நான்காயிரம்,
ஆதலினால்,
நண்பர்களே!
மோதல் செய்வீர்!!!!

Tuesday, January 4, 2011

அட..இது தானா சேதி?

“ அண்ணாச்சி”
“என்ன அண்ணாச்சி ”
முதலாளி அப்படி பேசுகிறார் என்றால்,ஐயா ஜாலி மூடில் இருக்கிறார் என்று அர்த்தம்.
“ ஒண்ணு கேட்கலாமா?” என்றான் கடைப் பையன், மீண்டும்.
“சொல்லுலே”
“ இப்ப வந்துட்டுப் போனாரே “
“ ஆமா, நம்ம ஃப்ரெண்ட் பரந்தாமன்..அவனுக்கு என்ன?”
” அவர் எவ்வளவு தபா நம்ம கடைக்கு வராரு..”
” நிறைய தடவை வரான்..அதுக்கென்ன?”
“ அவர் உங்க கிட்ட என்ன கேட்டாரு?”
” சும்மா பேசிட்டுப் போனான்..எம்மேல அவனுக்கு பிரியம் “
“ இல்ல..அவர் உங்க கிட்ட ஸ்வீட் கேட்கறாரு..ஒவ்வொரு தபாவும் நீங்க மளுப்பி
அவரை அனுப்பறீங்க..என்கிட்ட சொல்றீங்க யாராவது சும்மா பேசினாக் கூட கால் கிலோ
ஸ்வீட் பாக்கெட்ட அவிங்க தலையில கட்டுங்கீறீங்க.. நீங்க என்னடான்னா சும்மா பேசி அனுப்பறீங்க..உங்களுக்கு ஒரு நியாயம் ..கடைக்கார பசங்க எங்களுக்கு ஒரு நியாயமா
சொல்லுங்க அண்ணாச்சி “
”அட மடப் பய மவனே”
விழுந்து..விழுந்து சிரித்தார், அண்ணாச்சி.
“ அவனுக்கு ஷுகர்டா..ஸ்வீட் சாப்பிட்டா சக்கரை எகிறிடும்..அவனுக்கு லட்ச ரூபாய்
கடன் கொடுத்திருக்கேண்டா...மக்குப் பயலே..ஸ்வீட் கொடுப்பேனா, நான்?”