ஆங்கரை என்பது திருச்சியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள ஒரு சிறிய அழகிய கிராமம். லால்குடிக்கு முன்னாலே வந்து விடுகிறது. ஐயன் வாய்க்கால்..கரை ஓரமாய் ஷண்முகா பாடசாலை... பக்கத்தில் கோயில் நந்தவனம்...அரசரடி..அங்கு ஒரு பிள்ளையார்...
ஆடி பதினெட்டுக்கு புளியோதரை..தேங்காய்சாதம்..கருவடாம்...தயிர்சாதம் என்று கலவை சாதங்களுடன் நான், கிரி,சகுந்தலா அத்தை.பாலு சித்தப்பாஎல்லாரும் கும்பலாய் ஆற்றுக்குச் சென்று அங்கு படித்துறையில் சாப்பிட்டு விட்டு வருவோம். அந்த ஆற்றுத் தண்ணீர் ஸ்படிகமாக இருந்த காலம் அது!
ஷண்முகா ஸ்கூலில் துளசி டீச்சர்..கந்த சார் இவர்களையெல்லாம் மறக்க முடியுமா ? எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்பது ஒரு ஐ.ஐ.எம். ப்ரொஃபெஸர் கிடையாது. ஹரி ஓம் என்று நெல்லில் நம் விரலில் வைத்து எழுதக் கற்றுக் கொடுத்தார்களே அவர்கள் தான் இறைவன்! அவர்களை அவ்வளவு சுலபத்தில்
மறக்க முடியுமா, என்ன?
ஆடிப் பெருக்கிற்கு பிறகு வருவது ஆவணி அவிட்டம்! அன்று தாத்தாவை பிடிக்க முடியாது. ஏக பிசி தாத்தா..
எங்கள் எல்லாருக்கும் ஸ்கூல் லீவ். ஜாலி. மெள்ள எழுந்திருப்போம்..காஃபி குடிச்சுட்டு கொஞ்ச நேரம் வாசல்ல போய் நிப்போம்.
இன்னிக்கு ஆவணி அவிட்டம் சாப்பாடு கொஞ்சம் லேட்டாகும்னு சொன்னவுடனே எங்களுக்கெல்லாம் குஷி கிளம்பிடும். ஹைய்யா..ஹோட்டல்னு..
" ... அதெல்லாம் கூடாது. இதோ இட்லி வார்க்கப் போறேன்"னு அம்மா சொன்னதும் எங்களுக்கு தலை தொங்கிடும்.
இந்த ஆவணி அவிட்டம் ஒன்று தான் நாங்க எல்லாரும் ஹோட்டல்ல சாப்பிடாத ஃபங்க்ஷன்.
பாக்கி எல்லாத்துக்கும் சிகா சித்தப்பா எங்களை கூட்டிண்டு போயிடுவார். பாலு சித்தப்பா அங்க சத்தம் போடாம சாப்பிட்டுண்டு இருப்பார்!
அதுக்கு பனிஷ்மெண்ட் நாங்க எல்லாரும் பாலு சித்தப்பா தலையில் பில்ல கட்டிடுவோம்!
தாத்தாக்கு ஏக டிமாண்ட். கிழக்கால போய்ட்டு வருவார். வந்தவுடனே பெரிய ஆத்துக்கு கிளம்பிடுவார்.நடுவுல ஒரு டோஸ் காஃபிக்கு மட்டும் இங்க வருவார். எல்லாரும் ஆத்தங்கரைக்கு வந்துடுங்கோன்னு எங்களை எல்லாம் உஷார் படுத்தி விட்டுப் போவார்.
நாங்கள்ளாம் கிண்டலா சொல்லுவோம் அன்னிக்கு தாத்தாக்கு போனஸ்னு. தாத்தாவும் ரொம்ப பெருமையா சொல்வார்: ' என்னடா, இப்பல்லாம் ஆவணி அவிட்டத்துக்கு தஷிணையை அள்ளி தராங்களே'ன்னு!
ஒரு தடவை நாங்கள்ளாம் சிறுவாச்சூர் போயிருந்தோம். எங்கள் குலதெய்வம் அது. அபிஷேக ஆராதனை எல்லாம் முடிந்து பஸ்ஸுக்கு காத்துக் கொண்டு நிற்கிறோம். ஆங்கரை பெரிய மனிதர் ஒருத்தர் ஒருத்தருக்கு காரில் இடம் இருக்கு என்று சொல்ல,நாங்கள் வயதான தாத்தாவை அனுப்பினோம். நாங்கள் பஸ் பிடித்து வீட்டிற்கு வந்து பார்த்தால் தாத்தா எல்லாருக்கும் சமைத்து வைத்திருந்தார்! தாத்தாக்கு சமையல் தெரியும் என்பது குழந்தைகள் எங்களுக்கெல்லாம் தெரியாது!
தாத்தா நிறைய வேத புஸ்தகங்கள்ளாம் படிப்பார். புஸ்தகப் பிரியர். அது போல ஆனந்த விகடன் வாசிப்பார். 1950 வாக்கில் ஆனந்த விகடனில் ஒரு குறுக்கெழுத்துப் போட்டியில் பரிசு கிடைத்தது, அவருக்கு! பாட்டிக்கு அப்படியே அந்த பணத்தில் காஃபிக் கொட்டை செயின் வாங்கிப் போட்டார்!
எனக்கு நினைவு தெரிந்து தாத்தா படித்த புஸ்தகம் என்ன தெரியுமா?
சாண்டில்யனின் கடல் புறா!
சிறு வயதில் தாத்தா பண்ணிய குறும்புகள் ஜாஸ்தி! சாம்ப்பிளுக்கு இரண்டு.
1. சிறு வயதில் தாத்தா வேத பாடசாலையில் படிக்கும் போது அவருடைய பொடி மட்டை காணாமல் போய் விடும். இதை அவர் எப்படி கண்டு பிடித்தார் தெரியுமா? ராத்திரி பன்னிரெண்டு மணி சுமாருக்கு ஒரு நாள் தாத்தா பக்கத்தில ஒருத்தர் லபோ..திபோன்னு அலறல்! யாருன்னு பார்த்தா பாடசாலை சமையல் கார சுப்பண்ணா! கண்ணு..மூக்கெல்லாம் ஜிவுஜிவுன்னு.. என்னடான்னு பார்த்தா தாத்தா திருடனை பிடிக்க பொடிமட்டையில மிளகாய் பொடி போட்டு வைக்க...' என்ன ராமையா இப்படி பண்ணிட்டியேன்னு அவர் கத்த...
நல்லெண்ணைய பாதாதி கேசம் அபிஷேகம் பண்ணிண்டும் அந்த எரிச்சல் லேசில போகலே சுப்பண்ணாவுக்கு!
( ஸாரி...கொஞ்சம் ஓவர் இல்ல..)
2. தாத்தா பாடசாலையிலிருந்து லீவுக்கு ஊருக்கு வரும் போது நடந்து தான் வருவார்.அப்பல்லாம் பஸ் கிடையாது. 1920 வாக்கில். திருப்பராய்த்துறையிலிருந்து அரியூர் வரை நடை. அப்பொழுதெல்லாம் வீட்டு வாசலில் பூசணிக் காய் சூடம் ஏற்று வைத்திருப்பார்களாம். அதை தொட்டாலே நமக்கு பாபம் வந்து விடும் என்று ஒரு பயம் அந்த காலத்தில்! சூன்யம் வைத்திருப்பார்கள் என்று பயம் வேறு!
தாத்தா என்ன செய்வார் தெரியுமா?
அதில் புதைத்து வைத்துள்ள காலணாவை இடுப்பில் முடிந்து கொண்டு பூசணிக்காயை காலால் எட்டி உதைப்பாராம். அவ்வளவு அசாத்ய தைர்யம்!
பாட்டி,தாத்தாவுக்கு சதாபிஷேகம் பண்ணினோம். எனக்கு இன்று FAMILY TREE போட வேண்டும் என்ற ஆர்வத்தின் வித்து அந்த சதாபிஷேகம். எங்கிருந்தோ முகம் தெரியாத உறவினர்கள் எல்லாம் வந்து தாத்தாவிடம் ஆசி வாங்கினார்கள், அன்று!
இந்த சமயத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.FAMILY TREE யில் நம் உறவுகள் இணைவோமா?
நாங்கள்.........
-----------------------------------
ஆணி வேர் : அனந்த ராம ஐயர்.
தெரிந்த பெயர்: மோட்டார் ராமையா.
( TVS பஸ் டிரைவர் ஆக இருந்ததால் அந்த பெயர்)
பூர்வீகம் : அரியூர்
வகுப்பு : வடமர்
கோத்ரம் : விஸ்வாமித்ர
ஆபஸ்தம்பம்
மூன்று ரிஷி : வைஸ்வாமித்ர
தேவராத,
ஓளதல
தொடர்புக்கு : sridar57@gmail.com
------------------------------------
தாத்தா போய் கிட்டதட்ட இருபத்தைந்து வருடங்கள் ஆகி விட்டன. இருந்தாலும் ஒவ்வொரு ஆவணி அவிட்டம் வரும்போதும் தாத்தா ஞாபகம் வந்து விடும் எங்களுக்கு!!!
11 comments:
super.. I enjoyed the whole narration. I can recollect my own old memories.. what a personality he is..
ஒரு புது மாதிரியான அனுபவங்களை அனுபவித்ததுபோல் இருந்தது.
உங்கள் நடை அற்புதம்!!
பேரன்களுக்கு தாத்தாக்கள் எப்பவுமே கடவுள் மாதிரி ,திட்டலாம்,ஒட்டலாம், கிண்டலாக ஓட்டவும் செய்யலாம். அவர்களிடம் பாண்டித்யமும் பெற்றுக்கொள்ளலாம்,பாண்டியும் விளையாடலாம்.
உங்கள் அனுபவிப்பு எழுத்தில் நன்றாக தெரிகிறது.
உங்கள் குடும்ப மரத்தின் கிளைகள் விரைவில் இணைந்து கொண்டாட வாழ்த்துக்கள்.
அழகான நனவோடை:)
சுவாரசியமான தொகுப்பு..... பகிர்வுக்கு நன்றி.... இன்ட்லியில் problem என்று நினைக்கிறேன்... வோட்டு போட இயலவில்லை.
என் மூதாதையரின் சொந்தக் கிராமமாகிய ஆங்கரையை கண் முன் நிறுத்தி கலங்கச் செய்து விட்டீர்கள்.
பதிவில் வரும் பெரியாத்து பெண் குழந்தைக்கு அடுத்த மாதம் விவாஹம் என்று பத்திரிகை கொடுத்து நேற்று நேரில் வந்து அழைத்துச் சென்றார்கள்.
பொடிமட்டைத் திருட்டைக் கண்டு பிடிக்க செய்த துப்பறியும் யுக்தி காரசாரமாக T A S ரத்தினம் பட்டிணம் பொடி போல அருமையாக இருந்தது.
ஆரம்ப நேரேஷன் அசத்தல். நான் கள்ளப் பூணூல் போட்டுக்கொள்ளும் காலத்தில், பூணல் போட்டு வைக்க வந்த வாத்யார் இன்னும் நாலு வீடு போகணும் என்பதற்காக மந்த்ரங்களை முழுங்க... என் தாத்தா வி.எஸ்.மணி ஐயருக்கு எல்லா மந்திரமும் அத்துப்படி. அவரை வாய்க்கு வந்தபடி திட்டி விரட்டி அடித்துவிட்டு அவரே பூணூல் போட்டு வைத்தது ஞாபகம் வருகிறது... நல்ல பதிவு.. நன்றி..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
http://mannairvs.blogspot.com
அருமையான படம். அதைவிட ஆதர்சமான வார்த்தைகள். தங்கள் தாத்தாவைப் பார்க்கமுடியவில்லையே என்றிருக்கிறது.எங்களுக்கும் சதர்ன் ரோட்வேய்ஸுக்கும் சிலகாலம் தொடர்பு இருந்ததால். அதுவும் 33 வருடங்கள் ஆகிவிட்டது:)
உங்கள் உலகமும் உறவுகளும் கிளைகளும் ,கனிகளுமாக வளர மனம் நிறைந்த வாழ்த்துகள்
சில தாத்தாக்கள் காலத்தை நிற்கச்செய்தவர்கள்.. நல்ல நிகழ்வு போங்க..
Anna, enakku theriyadha vishayamellam ungal blog parthu therindhu kondeyn... full family tree poda vendum about thatha ramaiyah... superb..
அய்யா நானும் ஆங்கரை தான். வயது 26. என் தாத்தாவின் பெயர் கீழ தெரு வடமலை. உங்களுக்கு அவரை தெரியுங்கள? உங்களுக்கு எங்கள் ஊரில் (ஆங்கரை) யாதேனும் உதவி தேவை பட்டால் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு உதவி செய்வதை பெரிதாக எண்ணுவேன். நன்றி.
Email id:- laltamil@yahoo.co.in
thitamil@gmail.com
mobile :- +91 9943945325
+91 7373738969
Post a Comment