Wednesday, December 15, 2010

நூல் அறிமுகம்!!


எமக்கு ’அம்மா..உன் உலகம்’ என்கிற கவிதை தொகுப்பு வந்தது.திருமதி தனலட்சுமி பாஸ்கரன் என்ற கவிதாயினியின் கவிதைச் சொட்டுகள்.அப்பப்பா..என்னதொரு சொற்கட்டு..
வீரியமான வார்த்தைகள் அதனதன் பீடத்தில் அற்புதமாய் அமர்ந்து கொண்டு..
ஒரு அற்புதமான இரட்டை வட சங்கிலிக்கு நடுவில் பதித்த மாணிக்கக் கல் போல, நெய்வேலி பாரதிக்குமாரின் முன்னுரை வெகு நேர்த்தியாய்...
வாருங்களேன், கொஞ்சம் என்னுடன்!!
*
ஒன்றிரண்டு மாதுளை முத்துக்களை சுவைப்போமா.......?

# தலைப்பு : புதுமைப் பெண்
கவிதை :
”ஆகவே
பதட்டத்தோடு
அச்சந்தவிர்த்து
வீர நடை போடு பெண்ணே!”
பலத்த கைத்தட்டலுடன்
பேச்சை முடித்தபின்
பரபரக்கிறாள் இரவுக்குள் வீட்டையடைய....
# தலைப்பு: பொங்கல் சீருடை
கவிதை :
சீருடையே புத்தாடைகளாயின
சேரி சிறுவர்களுக்கு...
# தலைப்பு: க(நே)ச சதுர்த்தி
கவிதை :
கரைக்க மனமில்லை
வீடு திரும்பிய பிள்ளையார்
வணங்கியது பக்தனை!
# தலைப்பு: மனிதம்
கவிதை :
ஜன நெரிசல் மிக்க
சாலையின் நடுவில் குருதி வெள்ளத்தில்..
பிரசவித்த பிச்சைக்காரியைச்
சூழ்ந்து மறைத்த பெண்கள்..


*
நச் நச்சென்று கவிதைகள்..சொல்லிக் கொண்டே போகலாம். ஈரோடு தமிழன்பன் கூறியது போல ‘ பசையான வரிகள் படிப்பவரை இழுத்தணைத்துக் கட்டிக் கொள்ளும்’
ஆனால் ஒன்று..
இந்த கவிதைப் புத்தகம் உங்களிடம் இருந்தால்.....
1. பெரிய மாமரத்து நிழலில் போட்ட பெஞ்ச்.
2. கூச்சலிடும் தேன் சிட்டுகள்.
3. ஒரு டேப் ரிகார்டர்.அதிலிருந்து காற்றில் கசிந்து வரும்
பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட்டு..
4. ஒத்த கருத்துடைய மூன்று இலக்கிய நண்பர்கள்..
5. கொறிக்க கொஞ்சம் முந்திரி பக்கோடா..
6. ப்ளாஸ்க் நிறைய கள்ளிச் சொட்டு காஃபி.
நேரம் வெகு ஸ்வாரஸ்யமாய் போய்க் கொண்டிருக்கும்..
ஒரு பிரபல இலக்கிய வாதி சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.
...இந்த ஜனசமுத்திரத்தில் நான் ஒரு துளி.எம் எழுத்து மாபெரும் அலை..
அந்த அலை போல வளர வாழ்த்துக்கள்

புத்தகம் கிடைக்கும் இடம்:
உலா பதிப்பகம்,
30/23,ஜெ.எம். வளாகம்,
சின்னக் கடை வீதி,
திருச்சி-620 002.
விலை : ரூபாய் 50/-

15 comments:

மோகன்ஜி said...

மூவார் முத்தே! கவிதை முத்துக்களை ரசித்தேன்.அந்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்.

அதே கவிதானுபவம் உங்கள் விமரிசனத்திலும் அல்லவா எனக்கு கிடைத்தது.

வசந்தமுல்லை said...

கவிதை அனுபவம் என்னவென்று சொல்ல? இம்ம்ம் !!!!

Chitra said...

அருமையான கவிதை தொகுப்பு. பகிர்வுக்கு நன்றிங்க.

raji said...

நற்கவிதை தொகுப்பு.நன்றி

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தனலக்ஷ்மி பாஸ்கரனை நான் கடந்த இரு வருஷங்களாக அறிவேன்.

ஆழ்ந்த ரசனையும் பன்முகத் திறமையும் விடா முயற்சியும் நெகிழ வைக்கும் அன்புகாட்டுதலுக்கும் உடையவர்.

பையனும் பெண்ணும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் விடாது வீணை கற்றுக்கொண்டு போன வருடம் அரங்கேற்றமும் செய்து முடித்தார்.

மத்திய அரசின் நிறுவனத்தில் ஊழியராக இருக்கும் தனலக்ஷ்மியின் முதல் தொகுப்பு இது.

என்னுடைய பல கவிதைகளுக்கு அவர் தந்த விமர்சனங்களை நான் மறவேன்.

சில கவிதைகளுக்கு நானே பார்த்திராத கோணங்களில் விமர்சனம் கொடுத்து அசத்தியவர்.

இவரின் கவிதைகள் பார்க்கும் பார்வை புதியது.இதுவரை பார்க்கப்படாதது.

இவரின் எழுத்துக்கள் இவரின் ரசனையை ஒப்பிடுகையில் இன்னும் கொஞ்ச தூரம் கடக்க வேண்டியதாய் உணருகிறேன்.அது போகப் போக- எழுத எழுத-மெருகேறிவிடும் என்ற நம்பிக்கையும் தருகிறது.

நல்ல எழுத்து வெளியாகத் தொடங்கும்போது எப்படி எழுதக் கூடாது என்பதையும் அது தானே முடிவுசெய்து கொள்ளும்.

உங்களின் ஊக்குவிப்பும் அறிமுகமும் ஒவ்வொரு புதிய கலைஞருக்கும் சந்தோஷமளிப்பது.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

I will buy

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கவிதை நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. தில்லியில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதில்லை என்ற வருத்தம் எப்போதுமே. அடுத்த முறை திருச்சி வரும்போது வாங்க வேண்டும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மேற்படி கவிதைத்தொகுப்பினை கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் அவர்களின் திருக்கரங்களால் பெற்றுக் கொள்ளும் ச்ந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. அனைத்துக் கவிதைகளுமே அருமையாக உள்ளன. இருப்பினும் நான் மிகவும் ரசித்த ஒரு சில கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்:

*அம்மா உன் உலகம்*
அபூர்வமாய் அம்மா முகத்தில் சந்தோஷப்ப்ரவாகம்..! பால்யதோழிகள் புடைசூழ்ந்திருக்க,
நாசூக்காய் நகர்கின்றேன் நான்
சிரிப்பு,அழுகை,மெளனம், என நீடித்த கணங்கள்
அடையாளம் காட்டின, இதுவரை
நாங்கள் அறிந்திராத அம்மாவின் உலகத்தை.

*கிழிசல்*
தாறுமாறாய் நீர் கிழித்து நீந்தும் மீன்கள்; கால்களால் கிழிசல்கள் தைத்தபடி மிதக்கும் வாத்துகள்.

*மின்வெட்டு*
முழு நிலா இத்தனை அழகா;
வியக்க வைத்தது மாலை நேர மின்தடை.

*விழலுக்கு நீ(மோ)ர்*
உழைத்துக்களைத்தவனிடம்
ஒரு சொம்பு மோர் கொடுக்கிறான்
முதலாளியிடம் தரச்சொல்லி......

பிச்சைக்காரனின் பிணம்
வருந்தி அழுதது
வளர்ப்பு நாய் மட்டும்.....

*உறவு பேதம்*
என் புடவை கட்டி அழகு பார்த்துக்கொள்ளும்
செல்ல மகளிடம் எப்படிச் சொல்வேன்?
பொழுதுகளில் கண்மறைக்கும்
போதையுடன் வருபவனுக்கு
உறவு பேதம் விளங்காது
என்ற உண்மையை, சூசகமாய்...

இன்னும் எத்தைனையோ எழுதிக்கொண்டே போகலாம்

பிறருக்கும் இடம் அளித்து
பிரிகின்றேன் இத்துடனே

ADHI VENKAT said...

நல்லதோர் நூல் அறிமுகம்….. உங்கள் விளக்கத்தில் இன்னும் அருமை. நன்றி சார்.

ரிஷபன் said...

நூல் அறிமுகம் அருமை.
வாசிக்கத் தூண்டும் வகையில் அழகான பதிவு.

Kousalya Raj said...

கவிதை தொகுப்பு அருமை...! அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..... i will try to buy

Thenammai Lakshmanan said...

வாழ்த்துக்கள் தனலெக்ஷ்மிக்கும் பகிர்ந்த உங்களுக்கும்..:))

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இது உங்களுக்கான பிரத்யேகக் கடிதம்.

நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் ராமமூர்த்தி சார்.

யாரின் பின்னும் இனிச் செல்லாது நாம் முன்நின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.

எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக் காலங்களிலோ ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையும் லாப நோக்கற்ற நெடுந்தூரப் பயணத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.

மதம் மொழி இனம் ஜாதி இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.

நம் கவனம் இனி திசைதிருப்புதல்களுக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் தமிழகத்திலிருந்து இந்தச் சுடரை ஏற்றுவோம்.

பிற மாநிலங்களுக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.

முதலடி எடுத்து வைக்க முனைவோம்.நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம்.அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

காத்திருக்கிறேன் அருமை ஆர்.ஆர்.ஆர். சார்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

கவிதைகள் நறுக்குத் தெறித்தாற்போல் இருந்தன. உங்கள் அறிமுக விமரிசனமும் நறுக். ( ஆர்.ஆர்.ஆர்.சார் ட்விட்டர் ஜோதியில் நீங்கள் கலந்திருப்பதாக ஓர் அறிவிப்பு கண்டேன். facebook -ற்கும் வருகை தாருங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.)

வசந்தமுல்லை said...

ஏது! கவிதை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள்!!!!
பரதத்துக்கு சுப்புடு விமர்சனம் போல் இருக்குமா? கார சாரமாய்!!!