Saturday, July 30, 2011

மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!


ரொட்டீனாகப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் முதலில் பல் வலி வரும்..அதை rupar, அல்லது zupar போட்டு ஓரளவு சமாளிப்பேன்.மாத்திரை ஜாஸ்தி வாங்க மாட்டேன்..மூன்று தான் வாங்குவேன்..அதற்கு முடியாமல் போனால் தான், டாக்டரிடம் போவேன்..இந்த மாத்திரை ப்ளஸ் கார்கில் (அதாவது உப்பு வென்னீர் போட்டு கொப்பளிப்பது) செய்து சமாளித்து விடுவேன்.
அதிலிருந்து தப்பித்து விட்டால்,அடுத்து வருவது வயிற்று வலி! முன்னே மாதிரி காரம் எல்லாம் சாப்பிட முடிவதில்லை..ஆந்திரத்து சகோதரர்களுடன் ஊறுகாயை பச்சிடி என்று செல்லப் பேரிட்டு கபளீகரம் பண்ணிய நாட்களெல்லாம் GONE! ஹோட்டலுக்குச் சென்றால், சர்வருக்கு போதுமான டிப்ஸ் கொடுத்து, எங்கள் டேபிளில் சாம்பாரை வாளியுடன் பக்கத்தில் வைத்துக் கொள்வோம். நாங்கள்....இப்போது எல்லாம் போய் விட்டது..வயிற்றை கடபுடா பண்ணினால் கை வைத்தியம் தான்.கொஞ்சம் ஜீரகத்தை மெல்வேன்.அது அகத்தை(வயிறை!) சீராக்கி விடும்! இருக்கவே இருக்கிறது இஞ்சிச் சாறு..அல்லது சுண்டைக் காய் சூரணம்!அன்று மெனுவே தயிர்சாதமும், நார்த்தங்காய் ஊறுகாயும் தான்.வயிறு ஆட்டோமேட்டிக்காக சரியாய் போய் விடும்..டாகடரிடம் இதற்காக போய் அவருக்கு அனாவஸ்யமாக எல்லாம் தொந்தரவு கொடுக்க மாட்டேன்!
எனக்கு டாக்டர் என்றாலே அலர்ஜி!அதை விட அலர்ஜி இந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக் காரர்கள்! டாக்டரிடம் சாதாரண தலைவலிக்குப் போனால், உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்று தான் ஆரம்பிப்பார்கள்!(எனது followers யாராவது டாக்டராக இருந்தால் மன்னிக்கவும்! நான் சொல்வது எதுவும் உங்களுக்குப் பொருந்தாது.அது கண்டிப்பாக உங்களைத் தவிர்த்துத் தான்!!)ஆனால் இந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக் காரர்கள் இருக்கிறார்களே அவர்கள் ... அப்பப்பா..எடுத்த உடனேயே”..ஸார்...உங்களுக்கு ஏதாவது திடீரென்று..”என்று தான் அபசகுனமாக ஆரம்பித்துத் தொலைப்பார்கள்! இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்காரர்களைப் பார்க்கும் போது அந்த எமன் கூட தேவலாம் போல இருக்கிறது! அவன் ஒரு தடவை தான் உயிரை எடுப்பான்!
சரி..சரி..விஷயத்துக்கு வருவோம்..இந்த பல் வலி..வயிற்று வலி..இது ரெண்டும் போய்ச் சேர்ந்த சில நாட்களில் வாழ்க்கையே போரடித்துப் போனால் என்ன செய்வது? அதற்குத் தான் இருக்கவே இருக்கிறது மூட்டு வலி! .வாராது வந்த மாமணி போல் சமயத்தில் வரும்!மூட்டு வலியை அவ்வளவாய் நான் பொருட்படுத்துவதே இல்லை..காரணம் கை வைத்தியத்தாலே காலை சரிப் படுத்திக் கொண்டு விடுவேன்...தினம்..தினம் கால் மூட்டுகளில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் மூட்டு வலி போய் விடுமாம்..யாரால் முடிகிறது, அந்த காரியம்!அதை சட்டை பண்ணாமல் விட்டு விட,அது அவ்வப்போது வந்து நானும் இருக்கிறேன் என்று சொல்கிறது..அதுவும் பல் வலி போல் தான்! முடியாமல் போனால் தான் டாக்டரிடம் போவேன்..டாக்டரும் ரொம்பவும் பக்கத்தில்... கால் கோடியில் தான் இருக்கிறார்!
அது சரி..தலைப்புக்கும் உன் வலிகளுக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்பீர்கள்..அதை கடைசியில் சொல்லலாம் என்றால் அதைச் சொல்ல முடியாமல் போய் விடுமோ என்கிற பயத்தில் இப்போதே சொல்லி விடுகிறேன்...மும்தாஜும் என்னைப் போல் மூட்டு வலியால் ரொம்பவும் சிரமப் பட்டவளாம்.மஹாராஜா ஷாஜஹானுக்கு எவ்வளவு கருணை உள்ளம் பாருங்கள்..அந்த அழகு ராணி கஷ்டப் படக் கூடாது என்று தான் தாஜ்மஹாலில் குறுகலாய் படிகள் வைத்தானாம் என்று ஒரு செவி வழிச் செய்தி!
இப்படித் தான் ஒரு நாள் என் கை வைத்தியத்திற்கு கேட்காமல் போகவே, டாக்டரிடம் போனேன்!
மூன்றாவது டோக்கன் தான்....முப்பது நிமிஷங்களில் டாக்டர் ரூமில் நான்!
டாக்டர்: முன்னாடியே வந்திருக்கீங்களா?
நான் : மூன்று மாசம் முன்னாடி வந்திருக்கேன்.
( லாப்டாப்பில் ஏதோ பார்க்கிறார்...இப்போதெல்லாம் எந்த டாக்டர் ஸ்டெத் வைத்துக் கொள்கிறார்? எல்லாமே லாப்டாப் தான்!)
டாகடர் : ( தலையை தூக்கி) என்ன பண்றது?
நான் : மூட்டு வலி டாக்டர்.
டாக்டர் : எத்தனை நாள்?
நான் : ஒரு வாரமா..
டாக்டர் : வெயிட் பார்க்கலாமா?
( பார்த்தார்...எழுபத்தி நான்கு கிலோ!)
டாக்டர் : வெயிட் கொஞ்சம் குறைக்கணும்..இது ஓவர் வெயிட்..இன்னும் ஐந்து கிலோ கூடினால் ‘ஒபிசிடி’ ஆயிடும். அதனால...
நான் : அதனால?????
டாக்டர் : பால் சேர்த்துக்கக் கூடாது.....
நான் : சரி டாக்டர்..
டாக்டர் ; அரிசி சாதத்தை குறைக்கணும்..கோதுமை சேர்த்துக்கலாம்.. நைட் சப்பாத்தி எடுத்துக்குங்க...எல்லாம் அளவு குறைச்சலா இருக்கணும்..
நான் : சரி..சப்பாத்திக்கு உருளைகிழங்கு மஸால் தொட்டுக்கலாமா?
டாக்டர் : கூடவே..கூடாது..உருளைக்கிழங்கை அடியோட மறந்துடணும்..டால் சைட் டிஷ்ஷா சேர்த்துக்கலாம்..
நான் : (மனத்துள்>>உருளைகிழங்கு மேல் உயிரையே வைச்சிருக்கேன்..இப்படி தொடவேக் கூடாதுங்கறாரே..) சரி டாக்டர்...
டாக்டர் : அப்புறம் அந்த வாழைக்காய்...
நான் : போச்சுடா?
டாக்டர் : எண்ணெய்யில் பொரிச்சது எதையும் தொட்டுக் கூட பார்க்காதீங்க..கரு வடாத்தையெல்லாம் கட்டோட மறந்துடணும்..
நான் : அடக் கண்றாவியே!
டாக்டர் : இந்த மாத்திரையை எழுதித் தரேன்..இரண்டு நாளைக்குப் போட்டுக்குங்க..
அப்புறம் இரண்டு நா கழிச்சு வாங்க..சில எக்ஸர்ஸைஸ் சொல்லித் தரேன்..
நான் : வரேன், டாக்டர்.
நான் ஏன் அங்கு போறேன்? மூட்டு வலியே தேவலை என்ற முடிவுக்கு வந்து மூன்று நாட்களாகிறது!!!!!

Wednesday, July 27, 2011

பகைவனுக்கும் அருள்வாய்!!!



ரஃப்பான நம் பக்கத்து வீட்டில்,
ஹைனா ரப்பானி!!!
அன்பு ததும்பும் கண்கள்..
அறிவுச் சுடரென முகம்..
பெண்மையை போற்றுதும்!
பெண்மையை போற்றுதும்!!
பெண்கள் பேசட்டும்..
பெண்களே பேசட்டும்..
அன்பு அங்கு பொங்கட்டும்...
பண்பு கொஞ்சம் பரவட்டும்...
இரக்கம் எழும்பட்டும்..பிரச்னையின்,
ஆணிவேரையே அவர்கள்
அசைத்திடுவர்
தம் ஆற்றலிலே..
நட்பு எங்கும் பெருகட்டும்..
வன்முறையும் ஒழியட்டும்..
பயங்கரவாதமெனும் பெருஞ்சுடர்..
பைய..பைய...
அணையட்டும்...
வளமை நம்முள் பெருகட்டும்..
நம்மை பிடித்த அந்த பிசாசு,
நன்றாக ஓடட்டும்!!
ஆசியா கண்டத்தில்..
அற்புத ஜோதியாய்,
பாரதம் மிளிரட்டும்...
அதன் புகழ்
பாரெங்கும் பரவட்டும்!!!

Sunday, July 24, 2011

கர்ச்சீஃப் காதல்!!!!!!


மக்குப் பிளாஸ்திரிக்கு,
பக்கத்து வீட்டுப் பெண் பணிவுடன் எழுதிக் கொள்வது. நான் எங்கள் வீட்டுக் கொடியில் உலர்த்திய என்னுடைய கர்ச்சீஃப்பைக் காணவில்லை.உங்கள் வீட்டில் தான் யாரோ மறதியாக எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள். திருப்பி அனுப்பவும்.
இப்படிக்கு,
அபீதா.
அன்புள்ள அபீத குஜாம்பா அவர்களுக்கு,
கர்ச்சீஃப்பா...யாரிடம் கேட்கிறீர்கள் கர்ச்சீஃப்.. பருத்தி பறித்து வந்தீரா? துணி நெய்து கொடுத்தீரா..?எதற்குக் கேட்கிறீர் கர்ச்சீஃப்? கப்சிப்!!
(பி.கு.: “பாண்ட் எய்ட்” கம்பெனியில் வேலை செய்வதால் “மக்குப் பிளாஸ்த்திரி“ என்று என்னைக் கூப்பிட வேண்டாம். இதோ என்னைப் பற்றிய “பயோ டேட்டா”)
பெயர் : கணேஷ்.
உயரம் : ஆறு அடி ஒண்ணரை அங்குலம்.
தொழில் : மெடிக்கல் ரெப்.
சம்பளம் : கிட்டத் தட்ட ஆயிரத்து ஐநூறு!
( வாவ் என்று வாயைப் பிளக்காதீர்கள்!)
வயது : இருபத்தி எட்டு
குறிப்பு : இன்னும் திருமணம் ஆகவில்லை :(
அன்புடன்,
கணேஷ்.
கணேஷுக்கு,
உங்கள் காயலாங்கடை கட்டபொம்மன் வசனமெல்லாம் எனக்கு எதற்கு? நீங்கள் “பாண்ட் எய்ட்” கம்பெனியில் வேலை பார்த்தால் எனக்கு என்ன? ”பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸி”ல் வேலை பார்த்தால் எனக்கு என்ன? எனக்கு தேவை என்னுடைய தொலைந்து போன கர்ச்சீஃப்! மரியாதையாய் கொடுத்து அனுப்பவும்!
பி.கு.: அபீதா என்று கெஜட்டில் பெயரை மாற்றி ஐந்து வருடங்களாகி விட்டது.இனியும் பழைய பெயரில் கூப்பிடாதீர்கள்...
விசும்பலுடன்,
அபீதா.
அன்பே அபீதா,
அழாதே! எனக்கு சத்தியமாக உன் பெயர் தெரியாது.உங்கள் வீட்டு வாண்டுப் பயல் தான் அவ்வாறு சொன்னான். நிற்க..எங்கள் வீட்டில் மேற்படி கர்ச்சீஃபை யாரும் மறந்து கூட எடுத்துக் கொண்டு வரவில்லை..திருட்டு குணம் எங்களுக்கு கிடையாது.
இப்படிக்கு,
கணேஷ்.
ஐயோ,
உங்களை யார் இப்போது திருடன் என்று சொன்னது? உங்கள் வீட்டில் எங்காவது தவறுதலாக விழுந்திருக்கும்..கொஞ்சம் தேடித் தான் பாருங்களேன்..ப்ளீஸ்..அன்பே..கின்பே என்று எழுதாதீர்கள்..அண்ணாவிடம் சொல்லி விடுவேன்..ஜாக்கிரதை!
எச்சரிக்கும்,
அபீதா.
நச்சரிக்கும் அபீதாவிற்கு,
உங்கள் கர்ச்சீஃப் எங்கு தொலைந்து போயிருக்கும் என்று எனக்குத் தெரியாது..எப்படியும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் (ஸாரி.. டாக்டர்களிடம் பழகி..
பழகி..எதற்கும் இருபத்தி நான்கு மணி நேரம் வாய்தா கொடுத்து பழக்கமாகி விட்டது!)கர்ச்சீஃபைத் தேடித் தருகிறேன். கவலை வேண்டாம்.அண்ணாவிடம் சொல்லி விடுவேன்..மன்னியிடம் சொல்லி விடுவேன் என்ற பயமுறுத்தல் எல்லாம் என்னிடம் வேண்டாம்.. நான் ஒன்றும் சின்ன பப்பா இல்லை!
வீரன்
கணேஷ்.
கணேஷ் என்ற வீரருக்கு,
உங்கள் பிரதாபத்தை எல்லாம் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்..எனக்கு என்னுடைய கர்ச்சீஃப் வந்தாக வேண்டும். அண்ணாவிடம் சொல்ல மாட்டேன்..சும்மா உங்களை பயமுறுத்தினேன்..அவ்வளவு தான்..
இப்படிக்கு,
அபீதா.
அபீதா அம்மையாருக்கு,
கர்ச்சீஃப்..கர்ச்சீஃப்..கர்ச்சீஃப்....ச்சே!!! எப்பப் பார்த்தாலும் கர்ச்சீஃப் தானா? இவ்வளவு ’சீப்’பாக நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்று எனக்கு தெரியாது. போலீஸ் நாய் போல் மோப்பம் பிடித்துக் கொண்டு போனதில் மூக்கை சுவரில் இடித்துக் கொண்டு ரத்தம் வந்தது தான் மிச்சம்..ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்......சே!
இனி மருந்துக்குக் கூட உங்கள் வீட்டுப் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்!
நஷ்ட ஈடு கோரும் நண்பன்,
கணேஷ்.
கணேஷ் ஸாருக்கு,
மூக்கிலிருந்து ரத்தம் வருகிறதா? சாரி..மன்னித்துக் கொள்ளுங்கள்..எவ்வளவு கஷ்டம்..ஏதாவது தொலைந்து போனால்,அது கிடைக்கும் வரை எனக்கு நிம்மதி இருக்காது.கடவாய் பல்லில் மாட்டிக் கொண்ட கடுகு துணுக்கை எடுக்க நாக்கு எவ்வளவு கஷ்டப் படுமோ, அப்படி மனம் கிடந்து அலை பாயும்...பாவம் என்னால் உங்களுக்குத் தான்
எவ்வளவு சிரமம்.
அழுது கொண்டே,
அபீதா.
அபீதா,
கண்டேன் கர்ச்சீஃப்பை! மறுபடியும் அழாதே.இதோ..இதோ...உன்னுடைய கர்ச்சீஃப்பினால் கண்ணை துடைத்துக் கொள்..இதெல்லாம் ஒரு சிரமமா? அது சரி..சார்..மோரெல்லாம் ஒரே தடபுடலா இருக்கு?
அன்பன்,
கணேஷ்.
கணேஷுக்கு,
கண்டு கொண்டேன் கர்ச்சீஃப்பை! ரொம்ப சந்தோஷம்..வேறு ஒன்று தொலைந்து போய் விட்டது. கண்டு பிடித்துத் தருகிறீர்களா?
குறும்புடன்,
அபீதா.
அம்மா பரதேவதை,
ஆளை விடு..வேறு வீட்டுக்கு குடி மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அப்பாவி கணேஷ்.
அப்பாவி கணேஷுக்கு,
ப்பூ...இது கூட தெரியவில்லையா..இத்துடன் என் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன்..
உங்கள் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு திருவானைக் காவல் ஜோஸ்யரிடம் போய்ப் பார்க்கவும். எல்லாம் நல்ல படியாக முடிந்தால், நீங்கள் வாடகையே கொடுக்க வேண்டாம், இனிமேல்!
வேறு வீட்டிற்கு குடி போகும் ஆசையை விட்டு விடுங்கள்..உங்கள் சம்பளம் முழுவதும் வாடகையாகவே எடுத்துக் கொண்டு விடுவார்கள்..ஜாக்கிரதை!
என்றும் உங்கள்,
அபீதா.
அபிதா கண்ணிற்கு,
கண்ணே! மக்கு பிளாஸ்திரி என்று மறுபடியும் சொல்லாமல் சொல்லி விட்டாய்..
பரவாயில்லை..ஜாதகம் கிடைத்தது.இதோ..இப்போதே ஜோஸ்யர் வீட்டிற்கு போய் விட்டு உன் அப்பாவைப் பார்க்கிறேன், என் அம்மாவோடு! வேறு வேலை?
கிளம்பி கொண்டேயிருக்கும்,
கணேஷ்.
( நான் எழுதிய அச்சில் வந்த முதல் சிறுகதை இது! நவம்பர் 1984 குங்குமம் இதழில் வெளி வந்தது)

Wednesday, July 13, 2011

மூன்று...மூன்று....மூன்று...


( நான் பாட்டுக்கு ‘தேமே’ன்னு தான் இருந்தேன்..இந்த ரிஷபன் இருக்காருங்களே..அவுரு தான் என்ன உசுப்பேத்தி விட்டிட்டாருங்கோ..பாவம் ... நானில்லே!!! நீங்க தான்!)

1)விரும்பும் மூன்று விஷயங்கள்?
அ) டிரஸ் ஆ) சிட்ரஸ் ஃப்ரூட்ஸ் இ) க்ளாஸிகல் ம்யூஸிக்.

2) விரும்பாத மூன்று விஷயங்கள்?
அப்படி எதுவும் இல்லை.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
அ) பொய் ஆ)புறம் கூறுதல் இ) நரஸ்துதி

4) புரியாத மூன்று விஷயங்கள்:
அ) ஒன்றுக்கும் உதவாதவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவது !
ஆ) திறமைசாலிகளை மட்டம் தட்டுவது !!
இ) முன்னேற்றத்திற்கும், உழைப்பிற்கும் உள்ள தொடர்பின்மை!!!

5) மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
அ) கைப் பேசி;
ஆ) SOFTWARE ENGINEERING BY ROGER PRESSMAN;
இ) MAGIC JACK.

6)சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லது மனிதர்கள்?
அ) நான் ! ஆ) நானே !!இ) நானே தான் !!!

7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?அ) AICWA FINAL படிக்க ஆயத்தம் செய்து கொண்டு இருக்கிறேன்;
ஆ) நச்சென்று எல்லாரும் திரும்பி பார்க்கும் விதமாய் நான்கே நான்கு வார்த்தைகளில் ஒரு ஹைகூவிற்கு வார்த்தைகள் தேடிக் கொண்டு இருக்கிறேன்.
இ)ஒரு ட்வீட் போடப் போகிறேன் இன்று இரவிற்குள் ( ie., 13.07.2011)

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
அ)காளிதாஸனின் சாகுந்தலம் மூலம் சிதையாமல் சமஸ்க்ருதம் தெரிந்த பண்டிதருடன் ஒரு இலக்கிய உரையாடல் தினம் ஒண்ணரை மணி நேரம்..ஒரு வருட காலம்;
ஆ)என் குழந்தைகளுடன் ஒரு நாற்பது நாட்கள் WEST EUROPE TOUR;
இ) ஜெயகாந்தன்..தோப்பில் முகமது மீரான் ஆகிய இருவரிடமும் என் சிறுகதைகளைப் பற்றிய கருத்துக் கீறல்கள்;

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
அ)மோகன்ஜி, சுந்தர்ஜி,ஆர்.வி.எஸ்,ரிஷபன் ஆகியவர்களுடன் காரில் ஒரு கேரளா டூர்; ஆ)என்னைச் சுற்றி ஒரு சந்தோஷ அலை எப்போதுமே சுற்ற வைத்துக் கொண்டிருத்தல்;
இ) நாம் இழந்த கூட்டுக் குடும்பம் பற்றி பத்தே..பத்து நிமிடத்தில் ஒரு ART FILM மிக..மிகக்குறைந்த வசனங்களுடன்!!

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
அ)உறவுகளின் துயரம்; ஆ) தற்பெருமை இ)பிழையான தமிழ்.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
அ) எளிமை; ஆ) அடக்கம் இ) ஸ்திதப்ரக்ஞம்.

12) பிடித்த மூன்று உணவு வகை?
அ) பழைய சாதம்-தொட்டுக் கொள்ள எரிச்சக் குழம்பு;
ஆ) நெய்முறுகலுடன் முருங்கக் கீரை அடை+ மிளகாய்ப் பொடி எண்ணெய்;
இ) ஐயங்கார் புளியாதரை+உருளைக்கிழங்கு கறி+ கருவடாம்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
அ)தண்டபாணி தேசிகரின் ’என்னப்பனல்லவா’..
ஆ)’பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா?’
இ)’அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேண்டும் கேளம்மா?’
14) பிடித்த மூன்று படங்கள்?
அ)கெளவரம் ஆ)வியட்னாம் வீடு இ) புதிய பறவை

15)இது இல்லாமல் வாழ முடியாதென்று சொல்லும்படியான மூன்று விஷயங்கள்?
அ) சோப்பு; ஆ)சீப்பு ; இ) கண்ணாடி.
16)வாழ்வின் லட்சியங்கள்..
அ) பெற்றோரை ஒவ்வொரு கணமும் சந்தோஷமாய் வைத்துக் கொள்ளுதல்;
ஆ) பெரியவள் நோபல் பரிசு வாங்க வேண்டும்;
இ) சிறியவள் HARVARD ல் STRATEGIC MANAGEMENT ல் P.hd. (ரொம்ப பேராசையோ?)
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
அ) ஹரிணி ஆ) அப்பாத் துரை இ)பாஸ்டன் ஸ்ரீ ராம்!

Thursday, July 7, 2011

அங்கார...இங்கார.....(3)


கடிதத்தை வார்டன் படித்து முடித்ததும், ஒரு கனத்த மெளனம்!
அது ஒரு ஐந்து வினாடி..
ஐந்தே வினாடி தான்!
அதை பிச்சுவையர் கலைத்தார்.
பிறகு ஒவ்வொருவராய் பேச ஆரம்பித்தார்கள்...
”...பாவம், இந்த வயசுல, இப்படி ஒரு ஏமாற்றம் கூடாது!”-ஒருவர்.
“நம்பிக்கைத் துரோகமில்லையா?” - இது இன்னொருவர்.
“பெண்டாட்டி செத்துப் போனவுடனே என்ன பண்ணுவான், மனுஷன்..அதுவும் அவ்வளவு பெரிய வீட்டில..வீட்டின் ஒவ்வொரு அசைவும் அவங்க ஞாபகமா இருக்கும் போது...”
“ பையன் குடும்பம் வந்தது...கடைய வித்த பணத்தை டெப்பாசிட்டா வைச்சிருந்தார்..அதை கொடுத்ததோட நிறுத்தியிருக்கலாம்..இத்தனைக்கும் பாட்டி பேரைக் கூட வைக்கலை, பேத்திக்கு”.
“ பையன் ஏதோ பிஸினஸ் பண்றேன்னு கேட்டதுக்குத் தானே கொடுத்தாரு?”
” ஆமா....மாம்....’இப்ப கம்பெனி வேலையில நான் இல்ல..சொந்தமா சிலிக்கன் வேலில, பிஸினஸ் ஆரம்பிக்கப் போறேன்னு கேட்டதுக்குத் தான் கொடுத்தார். நீங்க சொன்னா மாதிரி அத்தோட நிறுத்தியிருக்கலாம்”
”அசட்டுத்தனம் பண்ணிட்டார்”
“அப்படின்னு சொல்ல முடியாது..அந்த சமயத்தில என்ன தோணிச்சோ தெரியல...பையனை இனிமே, எப்ப பார்ப்போமான்னு ஆயாசமா இருக்கும்.. அதனால நாம நல்ல நிலையில.. அதாவது.. நம்ம உடம்பு நல்ல நிலையில இருக்கும் போதே. வீட்டை பையன் பேருக்கு ரிஜிஸ்டர் பண்ணியிருக்கலாம்னு தோணியிருக்கும். அதனால் மாற்றிக் கொடுத்திருப்பார்..”
”அது தப்பில்லையே..எல்லாரும் பண்றது தானே அது!”
“ஆமாம்...ஆமாம்..அதுக்காக, ’அப்பா நாங்க ஊருக்குப் போனவுடன் நீ இங்கே தனியா இருக்க வேண்டாம். உனக்கு உடம்புக்கு ஏதாவது வந்தாக்கூட என்னால அங்கேர்ந்து உடனே வர முடியாது..அதனால, இரண்டு நா கழிச்சு இந்த வண்ணாரப் பேட்டை கடைசீல, ஒரு ‘ஓல்ட் ஏஜ் ஹோம்’ இருக்கு..அதில போய் ’ஜாய்ன்’ பண்ணிடு.. நான் அதுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டேன்..சாவியை நாடார் கடையில் கொடுத்துட்டு போ...இந்த வீட்டை, வாடகைக்கு விட்டுடலாம்..ஆளை நானே ஏற்பாடு பண்ணிட்டேன்..’ன்னு பையன் உடனேயே சொல்லியிருக்கவும் வேண்டாம்...இவரும்,’பரவாயில்லையே..பையன் நல்லா ’திங்க்’ பண்றானேன்னு சந்தோஷப் படவும் வேண்டாம்..”
“ஆமா...ம்”
“ இவரும், அவங்க போன கையோட, நம்ம விடுதிக்கு வந்திருந்தா, நல்லா மணக்க மணக்க ...இருந்திருப்பாரு..ஹூம்....பாழும் விதி....”
“ கரெக்டா சொன்னீங்க..இவர், அவங்க அமெரிக்கா போனதும், உடம்பு சரியில்லாம படுக்கணுமா...பேச்சு மூச்சில்லாம இருந்தவரைப் பாக்க நாதி இல்ல...பத்து நாள் கழிச்சு, கண் முழிச்சுப் பார்த்தா..திடீரென்று ஒரு லாரி நிறைய சாமான்கள் வந்திறங்க..இவரு நினைச்சிருக்காரு.. நம்ம பையன் வாடகைக்கு ஏற்பாடு பண்ணிண ஆள் அவங்க தான்னு ”
“ ஆனா, வந்தவங்க...இவரையும்...இவரோட முண்டாசையும்..திண்ணையில கிடந்த அந்த கயிற்றுக் கட்டிலையும் பார்த்துட்டு, ’வாட்ச்மேன் நாங்க வீடு வாடகைக்கு வல்ல..உங்க எசமான் எனக்கு வீட்டை வித்துட்டாரு...இத்தனை நாள் பார்த்துக் கொண்டதிற்கு நன்றி..இந்தாங்க நூறு ரூபாய்..இனிமே எங்களுக்கு ஆள் வேண்டாம்னு சொன்ன வுடனே....”
“பாவம்..என்ன ஒரு ’ஷாக்’காயிருக்கும்! அந்த ஏமாற்றம் தான் மனசு ஒடிஞ்சிருக்கும் போல..”
“ நம்பிக்கைத் துரோகமில்லையா இது?பையன் அவரை ‘கன்ஸல்ட்’ பண்ணியிருந்தாக் கூட’ஓக்கே’ன்னு தான் சொல்லியிருப்பாரு..ஆனா, இப்ப ஏமாந்தாப் போலத் தானே ஆச்சு!”
“ அதான் நேற்று நடு ராத்திரி நினைச்சு.. நினைச்சு..அழுதிருக்கார்..பாவம்!”
” நம்மோட முடிவு நெருங்கிடுச்சுன்னு தோணியிருக்கும்..அதான், அந்த லெட்டர் கடைசியில்,எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா..பையனுக்குத் தெரியப் படுத்த வாணாம்..வீணாக் கஷ்டப் படுவான்னு எழுதியிருக்கார்...தன் மரணத்தில கூட பையனுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு என்ன ஒரு நல்ல எண்ணம்?..”
“ பாவம்.. நல்ல் ஆத்மா..”
“ அது சரி..இப்ப என்ன பண்றது?”
“ அதான் அவரோட கடைசி ஆசைப் படி, மெடிக்கல் காலேஜ்க்கு ‘டொனேட்’ பண்ணிட வேண்டியது தான்..”
வார்டன் அடுத்து நடக்கும் விஷயங்களை ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வர அவர்கள் ஒவ்வொருவரும் ’அவரை’..சாரி..அந்த ‘பாடியை’ ’டிஸ்போஸ்’ பண்ணும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தார்கள்..
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன்!

Friday, July 1, 2011

அங்கார...இங்கார.....(2)


ஸ்ரீதர் எது கேட்டாலும் உடன் வாங்கி தந்து விடுவார்கள்..அவன் எது செய்தாலும் அங்கீகாரம் தான்..மறுப்பே கிடையாது..அவனுக்கு விருப்பமான வாழ்க்கைத் துணை உட்பட..
ஆம்...பையன் காலேஜ் பர்ஸ்ட் வந்தவுடன் அமெரிக்காவில் மேல் படிப்பு படிக்க விரும்பினான்..படித்து முடித்ததும் அங்கேயே வேலை...பையன் தனக்குப் பிறகு கடையை பார்த்துக் கொள்வான் என்கிற நினைப்பில் விழுந்த அடி அது! இருந்தாலும் சமாளித்துக் கொண்டார்..
“ எந்த ஊர்லப்பா வேலை?”
“ லாஸ் ஏஞ்சல்ஸ் “
“ டேய்...எனக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் பார்க்கணும்னு ஆசை..என்னையும், உங்க அம்மாவையும் ஒரு தரம் கூட்டிட்டுப் போப்பா”
“ அப்பா,இப்பத் தான் நானே வேலைல சேர்ந்திருக்கேன்..அப்புறம் பார்க்கலாம், அதை!”
” நம்மூர் எப்பப்பா வருவே...”
“ ஒரு ரெண்டு வருஷமாவது ஆவும்!”
ஆனால், திடுதிப்பென்று வந்தான்,ஒரு நாள் . கூடவே ஒரு பெண்! இருவரும் சொல்லி வைத்தாற்போல் காலில் விழ, இவர்களிருவரும் திடுக்கிட, “ அப்பா..அம்மா..இது தான் ஜூலியட்..இவளை அங்கேயே சர்ச்சில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டாகி விட்டது..உங்கள் ஆசிகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூற, முதலில் சமாளித்துக் கொண்டவள் பார்வதி தான்!
”என்னங்க மசமசன்னு நிக்கறீங்களே..மருமக வந்திருக்கா..போய் முந்திரி பருப்பு, பால் வாங்கியாங்க..பால் பாயசம் பண்ணறேன்” என்று சொன்னவுடன் சுதாரித்துக் கொண்டு ஓடினார், நாடார் கடைக்கு!
மனம் மெள்ள அசை போடும்போது வலித்தது. ’ நம்ம குடும்ப பாரம்பர்யம் என்ன ...எத்தன வருட வேர் இது! எல்லாருக்கும் இப்படி ஒரு அவமானம் பண்ணி விட்டானே!’
மனம் குமையும் போது அவரை சமாதானம் பண்ணியது, பார்வதி தான்! “ வருத்தப் படாதீங்க..எல்லாத்தையும் விட நம்ம பையன் சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்!
ஆமாம்...பையன் சந்தோஷம் தான் முக்கியம்...
அந்த வருகைக்குப் பிறகு, மாதம் ஒரு தடவை தான் பேசுவான்...அப்புறம் கொஞ்சம்..கொஞ்சமாகக் குறைந்து....எப்போதாவது தான் பேசுவான்..அவராலும் அவனை தொடர்பு கொள்ளத் தெரியவில்லை..ஏதோ ஒரு நம்பர் கொடுத்தான்..பெரும்பாலும் அவன் ஃபோனை எடுப்பதே இல்லை..அந்த வெள்ளைக் கார பெண் தான் எடுக்கிறாள் அவள் பேசும் இங்க்லீஷ் அவருக்கு சுத்தமாய் புரிவதே இல்லை..
அவர்கள் இருவரும் கடைசியாய் ஃபோனில் பேசிக் கொண்டது இது தான்:
“அப்பா..அப்பா..ஒரு குட் நியூஸ்...ஜூலியட் கன்ஸீவ் ஆகியிருக்கா....”
” டேய் ஸ்ரீதர்....உங்க அம்மா செத்துப் போயிட்டாடா..!!!!!”
அவ்வளவு தான்.
தொடர்பு துண்டிக்கப் பட்டு விட்டது!

* * * * *
வார்டன் கடிதத்தை படிக்க ஆரம்பித்தார்..
“ அன்புள்ளம் கொண்டவர்களுக்கு ..”என்று ஆரம்பமே அசத்தலாக இருந்தது..சத்தம் போட்டு படிக்கட்டுமா என்று அவர் அங்கு கூடி இருந்தவர்களைக் கேட்க, எல்லாரும் சரி என்றார்கள்...
திடீரென்று வார்டனுக்கு சந்தேகம் வந்தது.
அவர் எந்த ஊர்?”
“ இந்த ஊர் தான்.. நம்ம வண்ணரப் பேட்டை தான்..இரும்பு யாபாரம்..மளிகைக் கடை நாடார் சொல்லக் கேள்வி”
“அவருக்கு சொந்தக் காரங்க யாராவது?”
” போன வருஷம் தான் இவங்க சம்சாரம் செத்துப் போனாங்களாம்..இதுவும் அந்த நாடார் தான் சொன்னார்.....”
”காயிதத்தை மேல படிங்க, வார்டன் சார்”
கடிதத்தை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார், வார்டன்.