Sunday, December 29, 2013

டிக்...டிக்.....டிக்....

டிக்...டிக்.....டிக்.....
 எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி கடிகாரம் செவ்வனே தன் கடமையை செய்து
கொண்டிருந்தது.
 குழுமியிருந்த யாரும் பேசவில்லை.
 ஒரு மெல்லிய சோகம் எல்லார் முகங்களிலும்!
 ஆழ்மௌனத்தை கலைத்தான் ஒருவன்.
  "இன்னும் இரண்டு மணி நேரம் தாங்கினாலே ஜாஸ்தி"
 கட்டிலைப் பார்த்தோம். அவன் சொன்னது சரி. மூப்பு கொஞ்சம் கொஞ்சமாக
ஆக்கிரமித்து கொண்டிருக்க, அதனால், கொஞ்சம்,கொஞ்சமாக குறுகிக் கொண்டிருக்க....
  "எப்டி dispose பண்றது?"
   ச்சே ....என்ன மனுஷன் இவன்...
    " It will take it's own course"
    இன்னும் விடியவில்லை...
    நேரம் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருந்ததை எல்லாராலும் உணர முடிந்தது.
     கவிந்திருந்த சோகத்தை சட்டென்று புறம் தள்ளுவதைப் போல...      "க்வா....க்வா...."            அனிச்சையாய் ஒரு வித உற்சாகம்
     கவ்விக் கொள்ள......
     குரல் வந்த திசையை நோக்கி எல்லாரும் ஓட...
      அதே சமயம்,
       "It will take it's own course" என்று
      சொன்னதிற்கு ஏற்றார் போல்.....
      கற்பூர கட்டி காற்றில் கரைவது மாதிரி....
       கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது 2013.
       
         
       
       

     
     
    

Thursday, December 19, 2013

இலக்கிய விருந்து.....

குன்று போல் யானை பல தழுவி,வாள் சுழற்றி
கன்று போல் துள்ளி சமர் புரிந்த நாயகனை,
என்றுமிலா போதை விழி பாய்ச்சி,வீழ்த்தி விட்டு
'இன்று போய் நாளை வா' என்றாள், இனிந்து!          போரில் குன்று போன்ற யானைகளைத் தழுவி, தன் கூர்மையான வாளை நாலாபக்கமும் சுழற்றி தாய் பசுவின் மடி
கண்ட கன்று போல் துள்ளி குதித்து போர் புரிந்து எதிரிகளின் தலைகளை சாய்த்து, எல்லை இல்லா களிப்புடன்
தலைவியைக் காண வருகிறான் தலைவன். அப்போது வெற்றி பெற்ற செருக்கால் அவன் கால்கள் சற்றே 
தடுமாறுகின்றன.தன் பிரதாபங்கள் அத்தனையையும் அவள் முன் கொட்டி விட வேண்டும் என்கிற அவசரம்
அவனுக்கு.
    தாபத்துடன் காத்திருக்கிறாள் தலைவி. அவள் முன் தோழி வந்து அவனுடைய வீர, தீர பராக்ரமங்களை
இயம்ப, சட்டென தலைவி துணுக்குற்றாள்.' என்ன இது? அவருக்காகவே காத்திருக்கும் என்னைப் பற்றி
ஏதாவது பேசுவாரோ என்கிற ஏக்கத்தில் இங்கு நான் இருக்க,வெற்றி பெற்ற தாக்கத்தால் தன்னைப்
பற்றி பேசத் தான் வருகிறாரோ...' 
   அச்சம் ஊடலாக மாறியது உடனே! 
   'போகட்டும்....வெற்றி எனும் போதை தெளியட்டும். பொறுத்தது தான் பொறுத்தோம். இனி ஒரு நாள்
பொறுப்போம்' என தீர்மானம் செய்து கொண்டிருக்கும் போதே தோழி வந்து 'தலைவன் வந்து விட்டான்'
எனக் கூறுகிறாள்.
  தலைவி விரைகிறாள் வாசலுக்கு...
 அதோ தலைவன் வந்து கொண்டிருக்கிறான்....
  வந்தே விட்டான்....
  தலைவன் நோக்கினான்; தலைவியும் நோக்கினாள்.
  ஆ....இதென்ன, 
தாபத்தின் முன் பிரதாபம் எங்கே போய் விட்டது?
   கூர் விழி பார்வையின் முன் வாள் முனை மழுங்கி விட்டதா?
எதிரிகளை சாய்த்த கரங்கள் இதோ சாய்ந்து விட்டதே!
 விழிகளின் எழிலில் வீரம் தான் விடை பெற்றுக் கொண்டதோ?
இதைத் தான் 'புறத்தினை புறமுதுகு காட்டிடும் அகம்' என்கிறார்களோ தமிழறிந்த சான்றோர் பெருமக்கள்!
தடுமாறி நின்ற தலைவனைப் பார்த்து, தலைவி கூறுகிறாள்.
'வத்ச, களைத்துப் போய் இருக்கிறீர்கள்..களைப்பாற்றிக் கொண்டு நாளை வாருங்கள்!'
              கண் முன் விரிந்த இவ்வரிய காட்சியை ஒரு வெண்பாவில் வடிக்க முயன்ற என் சிறுமதியைத் தான்

என்னவென்பது?

Wednesday, December 4, 2013

MISSING........


விடியல் நாலு மணி.
கனத்த சூட்கேஸ்கள் புடை சூழ, அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள் பரபரப்புடன்
நுழைந்தான், ஜிம்.
"ஹலோ....ஹலோ....இங்க இன்ஸ்பெக்டர் யாரு?"
"எஸ் ப்ளீஸ்" 
"என்னோடது தொலைந்து போய் விட்டது"
"எது?"
இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் சொன்னதை அவன் சுத்தமாக காதில் வாங்கிக் கொள்ளவே
இல்லை.
"ரொம்ப ஜாக்கிரதையாகத் தான் இருந்தேன், இன்ஸ்பெக்டர். இங்க இருந்தவரைக்கும்
என் கிட்ட தான் இருந்தது அது"
"எது என்று சொன்னால் தானே கண்டு பிடிக்...  " - மிகவும் கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டார்,
இன்ஸ்பெக்டர் லாரன்ஸ்.
"ம் சொல்லுங்க."
இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் பொறுமைக்கு பெயர் போனவர்.போதாததிற்கு போன வாரம் தான் 
'போலீஸ் உங்கள் நண்பன்' அவார்ட் வாங்கியுள்ளார்.
"ம்ம்ம்ம்ம்...    எதுல விட்டேன்" என்று யோசித்தவனுக்கு ஞாபகம் வந்து விட்டது."ஆங்..ஆமா,
நடுவில தோஹா வந்தது....அப்பவே எனக்கு லைட்டா சந்தேகம்..மனப் பிராந்தின்னு 
விட்டுட்டேன்...."
'.....பிராந்தியா......தண்ணி கிண்ணி போட்டுட்டு வந்திருக்கானோ...'
"இன்ஸ்பெக்டர் கேட்கறீங்களா?"
"ம்...சொல்லுங்க"
"HOUSTON போய் 'லேண்ட்' ஆகி, நம்மூருக்கு செல்லில பேசின அப்புறம் தான் 'கன்பர்ம்' ஆச்சு..."
"அங்கேயே கம்ப்ளைண்ட் கொடுத்திருக்க வேண்டியது தானே..."
'.........ஏன்யா சாவு கிராக்கி நான் தான் உனக்கு கிடைச்சேனா.... ' மனசுக்குள் நினைத்துக் கொண்டார்
அந்த இன்ஸ்பெக்டர்.
"பண்ணியிருக்கலாம் தான்... ஆனா நம்மூரு மாதிரி அங்க 'ப்ராப்பரா ரெஸ்பான்ஸ்' பண்ணுவாங்கன்னு
தோணல" என்றவன் மேலும் தொடர்ந்தான்.
 "பத்தாயிரம் ரூபாய்க்கு வத்தி பெட்டி வாங்கினா பாரின் டூர்
இலவசம்னு சொன்னாங்க...  எல்லாம் சரியாகத் தான் போய்க் கிட்டு இருந்தது...18ம் தேதி விடியல்
காலை நாலு மணிக்கு ப்ளைட். அங்க லேண்ட் ஆகும் போது 19 ம் தேதி மாலை நாலரை. நம்மூர்ல டைம்
கேட்டா, 20 ம் தேதி விடிகாலை நாலரைங்கறான்.அன்னிக்கு மட்டுமில்ல....அங்க இருந்த அத்தனை
நாளும் கார்த்தால ஏழு மணின்னா,நம்மூர்ல சாயங்காலம் ஏழுங்கறாங்க.....அங்ஙன சாயங்காலம் ஏழுன்னா,
இங்ஙன அடுத்த நாள் காலலை ஏழு மணி.ஆபீஸ் போய்ட்டிருக்கேன்...டிஸ்டர்ப் பண்ணாதே ப்ளீஸ்ங்கறான்.
ஒரு நாள்.... ரெண்டு நாள் இல்லை...டெய்லியே பன்னிரெண்டு மணி நேரம் எங்கே போச்சுன்னே
தெரியல....காணாமல் போன என்னோட அந்த பன்னிரெண்டு மணி நேரத்தை கண்டுபிடிச்சு தாங்க
இன்ஸ்பெக்டர் ப்ப்.ளீ.ஸ்"
சட்டென்று, நாற்காலியை விட்டு எழுந்து பரபரவென இன்ஸ்பெக்டரின் தோள்களை குலுக்கினான்,ஜிம்.
சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டரின் பொறுமை எல்லை மீறி போய் விட்டதால் பொளேரென்று பிடரியில்
ஒன்று போட்டார்.
திடீரென விழுந்த தாக்குதலினால் நினைவு தப்பியஜிம்மிற்கு  "யோவ் 109, இந்த விடியா மூஞ்சியை
கீழ்ப் பாக்கம் ஹாஸ்பிடல்ல சேர்த்துடு"என்று நூறு டெசிபல்லுக்கு மேல் போன அந்த இன்ஸ்பெக்டரின்
அலறல் நல்ல வேளையாகக் காதில் விழவில்லை! 

Tuesday, November 19, 2013

இதனால்........

இதனால், சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.......
”மசால் தோசையும்,மசாசுசெட்சும்” என்கிற தலைப்பில் நான் எழுதிய சிறுகதை தவிர்க்க இயலாத காரணங்களினால்,தற்போது வெளியிட இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.. 

Tuesday, October 29, 2013

ஓர் அறிவிப்பு.....

                                                         

( இருதயம் பலகீனமாக உள்ளவர்கள், PRAGNANT LADIES, பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் தயவு செய்து இதனை படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது )
  என்னுடைய சிறுகதை தொகுப்பை ஏகப் பட்ட ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறு பதிப்பு வெளியிட இருக்கிறேன்..மேலும் ஐந்து லட்சம் பிரதிகளுக்கு MINISTRY OF DEFENCE    லிருந்து புதிதாய் ஆர்டர் ஒன்று வந்துள்ளது.
   எல்லையில் பல்லாயிரக் கணக்கில் குவிந்துள்ள சீன படைகளுக்கு பதிலளிக்கும் விதமாய் RAW AND ANALYSIS WING பரிந்துரையின் பேரில், என் சிறுகதை பிரதிகளை ஹெலிகாப்டர் மூலம் தூவ முடிவு செய்திருக்கிறார்கள்.சீன மொழி பெயர்ப்புக்கு லூலாலீ என்ற சீன அறிஞருடன் ஒப்பந்தம் ஒன்று போடப் பட்டுள்ளது.
      இந்த சிறுகதை தொகுப்பு உங்கள் கைகளில் தவழும் போது நான் பாதுகாப்பாக வாஷிங்டனிலோ,ஹூஸ்டனிலோ அல்லது லாஸ் ஏஞ்சல்ஸ் லிலோ இருப்பேன் என்பதை நாடறியும் என்பதை சொல்லிக் கொள்ளக் கூட என் அடக்கம் தடுக்கிறது!.
      ஏற்கனவே முதல் பதிப்பு விற்பனையின் சிகரத்தை எட்டியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.அது சம்பந்தமாய் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
  எனது நண்பரின் பையனுக்கு ரொம்ப வருடமாய் வரன் குதிராமல்,கட்டோ கடைசியாய் ஒரு பெண் வீட்டார் 'பிள்ளை' பார்க்க‌  வந்தார்கள். நண்பர் என்னையும் அழைத்திருந்தார். பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு, சொஜ்ஜி,பஜ்ஜிகளின் ஊடே, என் சிறுகதை தொகுப்பையும் திணித்தோம்.'போய் கடிதம் போடுகிறேன்' என்று சொல்லி விட்டுப் போனவர்கள் தான்! 'அட, இதுவும் பூட்ட கேஸ்' என்று தீர்மானித்த சில நொடிகளிலேயே, பெண் வீட்டாரிடமிருந்து போன்! "பொண்ணுக்கு உங்க பையனைப் பிடிச்சிருக்கு..அந்த புஸ்தகம் தான் பிடிக்கவில்லை!" என்று.
   இது நடந்த ஒரு வாரம் கழித்து நண்பர் என்னைப் பார்க்க அலறிக் கொண்டே வந்தார். "டேய்.. ஆராரார்...ஆயிரம் பிரதிங்க அர்ஜெண்ட்டா வேணும்...இப்பத் தான் பெண் வீட்லே சொன்னாங்க "அவங்க சொந்தக் காரங்க,ப்ரெண்ட்ஸ்ங்கன்னு கல்யாணத்திற்கு நிறைய பேர் வருவாங்களாம்!  அவங்களை நல்ல படியாய்,திருப்தியாய் கவனிச்சக்கணும்னு!"
அந்த என்னோட ஆயிரம் பிரதிகள் அந்த கல்யாணத்துல என்னன்னவெல்லாம் செய்தது என்பதை என் தன்னடக்கம்  மறுபடியும் தடுப்பதால்  நேயர்களின் கற்பனைக்கு  விட்டு விடுகிறேன்.
   ஒரு சமயம், மீன் பிடிக்கச் சென்ற நம் மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர், சுட எத்தனிக்க, நம் மீனவ நண்பர்கள் என் சிறுகதை தொகுப்பை அவர்கள் மீது, வீச‌ அந்த இலங்கை கடலோரக் காவல் படையினர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாய்ந்ததை  நான் சொல்லா விட்டால் வரலாறு என்னை மன்னிக்காது!
   இது போல் தான் பாகிஸ்தானில் சிறைப் பிடிக்கப் பட்டுள்ள நம் படை வீரர்கள் அந்த சிறை அதிகாரிகளிடம் நம் புத்தகங்களின் ஆங்கிலப் பதிப்பைக் கொடுக்க,அடுத்த வாரமே அவர்கள் ராஜ மரியாதையோடு இந்தியா வந்ததை
அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா என்ன?
   எதற்காக இதை இங்கு சொல்கிறேன் என்றால்,
   நாடு ரொம்ப மோசமாய் போய்க் கொண்டிருக்கிறது..தற்காப்புக்கு நீங்கள் இனி வரும் என்னுடைய ஒன்றிரண்டு பிரதிகளை வாங்கி வைத்துக் கொண்டீர்களென்றால், உங்களுக்கு ஏதாவது இடுக்கண் வரும் போது,  அது உங்களைக் காப்பாற்றும் என்பது திண்ணம்! ஒரு சாதாரண பிஸ்டல் வாங்குவதற்குக் கூட  லைசென்ஸ் வாங்க வேண்டும். என் சிறுகதை தொகுப்பிற்கு அத்தகைய லைசென்ஸ் எதுவும் வாங்கத் தேவையில்லை  என்கிற விஷயம் உங்களுக்கு நான் அளிக்கும் ஒரு உபரி தகவல்!     

                                                          -----------  


Saturday, October 26, 2013

சொல்லவா........

”விஜயா, நாளைக்கு கார்த்தால,அப்பா,அம்மா நம்ம வீட்டிற்கு வராங்களாம்”
“இப்ப எதுக்கு அவங்க வராங்க?”
“தெரியலையே”
“என்னங்க, ரெண்டு நாள் லீவ் சேர்ந்தாற்போல வருது..புள்ளைங்களை வெளியே கூட்டிக் கிட்டுப் போய் ரொம்ப நாள் ஆச்சு..இந்த லீவில நாம புள்ளைங்களை கூட்டிக் கிட்டு எங்காவது போகலாம்னா...” இழுத்தாள், விஜயா.
“அதுக்குன்னு வரவங்கள நாம எப்படி வர வேண்டாம்னு சொல்றது?”
“எனக்கு இப்ப உடம்பு சரியில்லைன்னு சொல்லிடுங்க”
“என்னால சொல்ல முடியாது.. நீயே சொல்லிக்க”
“சரி”
மனதிற்குள் கறுவிக் கொண்டாள், விஜயா.கிழங்களுக்கு இவரை விட்டா
வேற புள்ளையா இல்லே? லீவ் நாளில் அத்தி பூத்தாப்பல,
 நாம எங்காவது போகலாம்னா, சனியங்க வந்து கழுத்தை அறுக்குதுங்க.... நாம ஒண்ணும் சொல்ல வேண்டாம்..அதுங்களா வந்து பூட்டின வீட்டைப் பார்த்துட்டு ஏமாந்துட்டு போகட்டும்.....
அடுத்த நாள் காலையில் பிடிவாதமாக, புள்ளைகளையும் புருஷனையும் கூட்டிக் கொண்டு, விஜிபி கோல்டன் பீச் விஜயா செல்ல...
“எங்கேடி போனே விஜயா,வீடு பூட்டி கிடக்கே...மாப்பிள்ளை கிட்ட நாங்க வரோம்னு சொன்னோமே....உங்கிட்ட சொல்லலியா அவர்”
   விஜயாவின் அம்மா பேச..பேச...
   விக்கித்து நின்றாள், விஜயா.

Wednesday, September 25, 2013

கடவுள் மனிதனாய் பிறக்க வேண்டும்........!!!!!!!!!!
(முன் குறிப்பு : கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞன், தன்னை GOVT.COMPANY STAFF ஆக குறுக்கிக் கொண்டு, GOVT.
AUDITOR களிடம் என்ன பாடு படுவான் என்கிற கற்பனையின் விளைவே இக்கவிதை..இது யார் மனதையாவது புண் படுத்தினால்,அவர்கள் ஏதாவது ஒரு பெட்டிக் கடைக்கு சென்று, என் பெயர் சொல்லி, கையில் உள்ள காசை கொடுத்து விட்டு சிகரெட் வாங்கி, அந்த புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றவும்!)
கடவுள் GOVT. COMPANY யில் பிறக்க வேண்டும்...
அவன் REPLY எழுதி, கை ஒடிந்து சாக வேண்டும்...
QUERY என்றால், என்னவென்று உணர வேண்டும்...
IR * என்றால் அலறிக் கொண்டு ஓட வேண்டும்...
எத்தனை QUERY கொடுத்தான்....
அத்தனைக்கும் REPLY செய்தான்...
அத்தனை REPLY யிலும் REJOINDER
எனும் பொடி வைத்தான்......
படுத்துவான்...
படுத்துவான்...
படுத்திக் கொண்டே தான் இருப்பான்...
பாவி அவன் ஆடிட்டரை படைக்காமல்
விட்டிருப்பான்.......
(மறுபடியும் பல்லவி)
கடவுள் GOVT. COMPANY யில் பிறக்க வேண்டும்...
அவன் REPLY எழுதி, கை ஒடிந்து சாக வேண்டும்...
----
* INSPECTION REPORT
(பின் குறிப்பு: என்னுடைய ‘சேட்டை’ மன்னிக்கப் படுவதாக!)

Sunday, September 22, 2013

ஆயிரமாயிரமாய் துப்பும் மெஷின்.....(AATM)


அவர்களின் பெண் அவர்கள் நினைத்தது மாதிரியே, கம்ப்யூட்டர் சயின்ஸ் இஞ்ஜினீயர் ஆகி விட்டாள்..ஆகி கொஞ்ச நாட்களிலேயே, அவர்கள் விரும்பிய அந்த கம்பெனியில் வேலையும்  கிடைத்து விட்டது..அவர்கள் எண்ணம் போல கை நிறைய சம்பளம்!
   இனி என்ன, அவளுடைய ஜாதகக் கட்டை தூக்க வேண்டியது தான்!
  வந்த அத்தனை வரன்களை ஜோஸியரிடம் பார்த்ததில் இரண்டு தான் பொருத்தமாய் இருந்தது..
  முதல் வரன் இவளை மாதிரியே ஐ.டி.கம்பெனியில் வேலை ..வயசு இவளை விட நான்கு மாதம் தான் பெரியவன்.......அடுத்த ஐந்து மாதங்களில் யு.எஸ். பறக்கப் போகிறவன்..ஒரே பையன் ..அப்பா ரிட்டயர்ட் கவர்ன்மெண்ட் ஆஃபிசர்..அம்மா ரிடய்ர்ட் பாங்க் ஆஃபீசர்..லக்சுரி ப்ளாட்..கார்..என்று அவர்கள் இருக்க, பையன் பெங்களூரில்..
    அடுத்த வரன் சற்று நெருடல்!
    அதை அவளிடம் காண்பிக்க வேண்டாம் என்று தான் அவர்கள் நினைத்தார்கள்..இருந்தாலும் இதை நாம் எடுத்துக் கொண்டது போல அவளும் வேடிக்கையாக எடுத்துக் கொள்வாள் என்று அந்த வரனைப் பற்றியும் சொன்னார்கள்...
    ரொம்ப அசுவாரசியமாய் தான் அவளும் கேட்டுக் கொண்டிருந்தாள்..
    “என்னம்மா சொல்றே?..எப்படி எல்லாம் மனுஷனுக்கு ஆசையைப் பாரேன்..ஏதோ அந்த காலத்துல தான் இப்படி எல்லாம் நடந்தது என்றால், இப்பவும் அப்படியே எதிர்பார்க்கறாங்களே..”
    “ஏங்க, நம்ம ரெண்டு பேருக்குக் கூட வித்யாசம் ஒரு  வருஷம் தானே”
    “ஆமாம்...அதுக்கே, எங்க அப்பா குதிச்சார்....”
    ” ஒரு ஒத்துமை பார்த்தியா. நம்ம கல்யாணம் முடிஞ்சதும், உங்க அப்பா அந்த காஞ்சிபுரம் வீடு வாங்கினார்.. நாமளும், அதே மாதிரி, நம்ம பொண்ணு கல்யாணம் முடிஞ்சப்புறம் மைலாப்பூர்ல FLAT வாங்கப் போறோம்..”
    “ அப்ப EMI க்கு பென்ஷனா?”
    “ நீ வேற...புதுசா ஒரு ASSIGNMENT கிடைச்சிருக்கு..இவ கல்யாணத்திற்கு பிறகு ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கேன்...அதுல வர்ர பணம் EMI க்கு அட்ஜஸ்ட் ஆயிடும்..”
     “ நாமளும் வெளில..வாசல்ல போய் நாளாச்சு..இவ கலியாணம் முடிஞ்சதும் அப்படியே ஸ்விஸ் போலாம்னு..”
    “ என்ன, செகண்ட் இன்னிங்க்ஸா..”
    “ அது சரி.. நாம பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கோம்...உன் பொண்ணு கல்யாணத்தைப் பார்ப்போம், முதல்ல..என்னம்மா சொல்றே?
அந்த ஐ.டி.கம்பெனி வரனைப் பார்ப்போமா?”
“வேண்டாம்பா”
“என்னம்மா இது..கல்யாணமே வேண்டாமா? என்ன சொல்றே, நீ?”
“அப்பா..அந்த ரெண்டாவது வரன்..”
“என்னது” - இருவரும் அதிர்ந்து போய் கேட்டனர்..
சமாளித்துக் கொண்டு அவர் சொன்னார்:
“அம்மா, வரனுக்கு வயசு ஐம்பத்தைந்து”
“தெரியும்”
“VRS வாங்கினவர்”
“சரி”
“WIDOWER"
"தெரியும்"
“சின்ன..சின்னதாஇரண்டு பெண் குழந்தைகள்....”
“அப்புறம்?”
“கல்யாணம் ஆனதும் பெண் வேலைக்குப் போகக் கூடாது”
“ரொம்ப சரி”
” நீ அந்த வீட்டுக்கு ஆயாவா போகப் போறே”
“தெரியும்”
“என்னம்மா ...உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா..”
“இல்லப்பா..தெளிஞ்சிருக்கு... நீங்க ரெண்டு பேருமே OFFICE GOERS.ஒரு சராசரி குழந்தைக்கு வேண்டிய அன்பு எனக்கு கிடைக்கல...மாறா, ரேஸ் குதிரைக்கு செய்யறாப்பல தான் எனக்கு எல்லாம் செஞ்சீங்க..அந்த ரேஸ்குதிரையும் நீங்க நினைக்கற மாதிரி,ரேஸுக்கு ரெடியாயிடுச்சு..இன்னொரு குதிரையும் அதோட கட்டி விட்டா அதுங்க மாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும் என்று தான் உங்கள் நினைப்பு..ஆசை..ஆனா, எனக்கு கிடைக்காத.. நான் இழந்த  அந்த அன்பை, அந்த பாசத்தை அந்த குழந்தைகளுக்கு நான் கொடுக்கலாம்னு இருக்கேன்.....வாய்க்கு ருசியா அவருக்கு சமைத்துப் போட போகிறேன்...அவருக்கு மனைவியா பணிவிடை செய்யப் போகிறேன்...மொத்தத்திலே ஒரு மனுஷியா வாழலாம்னு ஆசைப் படறேன்..
BREAK FAST ஐ உட்கார்ந்து கொண்டு கூட சாப்பிட முடியாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்பா..என்னையும் ஒங்கள மாதிரி’ஆயிரமாயிரமாய் துப்புற மெஷினா ஆக்காதீங்க ப்ளீஸ்”
    அவள் சொல்லிக் கொண்டே போக, விக்கித்து நின்றனர், அந்த ரிடையர்ட் ஐ.ஐ.டி. ப்ரபொசரும்....அவரின் மனைவியான அந்த ரிடய்ர்ட் பப்ளிக் செக்டார் ஜெனரல் மேனேஜரும்!

Monday, September 2, 2013

வீடு வரை போலீஸ்!

”என்னங்க... நம்ம வூட்டுக்கு போலீஸ் வந்துச்சாம்” “எதுக்கு?..எப்படி உனக்குத் தெரியும்?” கேள்விக் கணைகளை அடுக்கினேன்.. வீட்டுக்குள் வரும்போதே தெரு வாசலில் நாராயண ராவ் துக்கம் விசாரிப்பது போல் இதை கேட்டு விட்டார்.. அதாவது பரவாயில்ல..”உங்கவூட்டுக்கு போலிஸ் காரங்க வந்தா சொல்லுங்க நானும் பார்க்கணும்?” என்று ஒரு வேண்டு கோள் வேற! அது சரி..கமலாவிற்கு எப்படி இது தெரியும்? அவளும் என்னை மாதிரி OFFICE GOER. ”பக்கத்து வீட்டு பரிமளா சொல்லிச்சு” ஐயோ...என்று வாய் வந்த வார்த்தைகளை கஷ்டப் பட்டு அடக்கி கொண்டேன். பரிமளா என் எழுத்துக்களின் ரசிகை..அவளைப் பார்ப்பதற்கு முன், மூணு இஞ்ச் பவுடரை நான் கொட்டிக் கொள்வதும், இரண்டு அவுன்ஸ் செண்ட் பாட்டிலை விரயம் செய்வதும், முன் வழுக்கையை மறைக்க பின்னால் உள்ள மூணு முடிகளை முன்னுக்கு கொண்டு வர நான் பாடு படுவதும்..... எத்தனையோ ‘.....தும்,........ தும்’ ”பரிமளா என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? அவள் முன் போலீஸ் என் கைகளில் விலங்கு மாட்டிக் கொண்டு போவதென்றால்.. சேச்சே முகத்தை கர்ச்சீப்பினால் மூடிக் கொண்டு போக வேண்டியது தான்..” ஹிண்டுவில் அப்படித் தானே கிரிமினல்ஸ் முகத்தை மூடிக்கிறாங்க.. ” என்னங்க.. நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீங்க பேசாம இருக்கீங்க?” நிகழ்வுலகத்திற்கு சட்டென வந்தேன். ”ஆமாம்..என்ன கேட்டே?” “என்ன தப்பு பண்ணினீங்க..லஞ்சம் வாங்கினீங்களா?..அது சரி இந்த மூஞ்சிக்கு எவன் லஞ்சம் குடுப்பான்? என்ன பண்ணினீங்க நீங்களே சொல்லுங்க?” “அதான் .. நீயே சொல்லிட்டியே..எனக்கு எவன் லஞ்சம் கொடுப்பான்?” “அப்ப வேற என்ன பண்ணினீங்க?” “ட்ராஃபிக்ல சிக்னலை மதிக்காம போனீங்களா?” “நான் ஆபீஸ் போற பாதையில சிக்னலே இல்ல..” “பின்ன...வேற என்ன தப்பு பண்ணினீங்க?” ”கமலா..இன்னுமா நீ என்னை புரிஞ்சிக்கலை.. தப்பு,தண்டாக்கலாம் போறதுக்கு ரொம்ப தைர்யம் வேணும்..எனக்கு அது கிடையாதுங்கிறது தான் உனக்குத் தெரியுமே?” ” அதெல்லாம் சரி தான்.. எதுக்கு போலீஸ் உங்களைத் தேடணும்?” “அது தான் எனக்கும் தெரியலையே கமலா” டாலருடன் நடக்கும் போட்டியில் தேய்ந்து போன ரூபாய் போன்று என் குரலும் தேய்ந்து போனது..... வாசலில் சத்தம்..”சார்..சார்” கதவைத் திறந்தேன்...கவுண்டமணி ஜாடையில் முகமும், செந்தில் தொப்பையாடும் ஒரு போலீஸ் காரர்! சொரேர் என்று வயிற்றுக்குள் கமலா காலையில் செய்த எலுமிச்சம்பழ ரசம் ஹைட்ரோக்ளோரிக் ஆஸிட் ஆக சுரக்க.. ..இருந்தாலும் சமாளித்துக் கொண்டு உளறினேன்.. ”வாங்க சார் வாங்க ...கமலா இங்க வந்து யார் வந்திருக்காங்கன்னு பாரு?’ “டீ சாப்டறீங்களா..இல்ல காஃபி...” அவர் எனக்கு ஏதாவது தண்டனை கொடுப்பதற்கு முன் நாம அவருக்கு ஏதாவது கொடுத்து விட வேண்டும் என்கிற அவசரம் எனக்கு! “அதெல்லாம் வாணாமுங்க..” சட்டென்று அவர் கையைப் பார்த்தேன்..கைகளில் விலங்கு ஒன்றும் இல்லை.. அப்பத் தான் எனக்கு உயிரே வந்தது. ஒரு நிமிடம் மெளனம்.. அதை அந்த போலீஸ் காரரே உடைத்தார்.. “ நீங்க நல்லா கதை எளுதுவீங்களாமே நம்ம ரைட்டர் ரகு தான் சொன்னாரு..எங்க ரிக்ரியேஷன் க்ளப்புக்கு ஒரு நல்ல நாடகமா எளுதித் தாங்க..ரகு தான் இங்க அனுப்பிச்சாரு” வந்தவர் போய் விட்டார்! ஆனால், சிரியாவை அமெரிக்கா ’லபக்’காகி விடுமோ என்கிற ஆவலில் வாசல் வரை வந்து ஒட்டு கேட்ட நாராயண ராவின் முகம் தான் பேஸ்து அடித்தது போல ஆகி விட்டது!

Friday, July 12, 2013

வாழ நினைத்தால் வாழலாம் !!!"  இப்ப என்ன பண்றது?"
"அது தான் என் கேள்வியும் !"
"யாராவது ஒருத்தர் வீட்டிலாவது,  பச்சை கொடி காட்டினா
கொஞ்சமாவது சந்தோஷமாக இருக்கும் ..இப்படி ரெண்டு
பேர் வீட்டிலுமா எதிர்ப்பார்ங்க ?"
" உனக்காவது பரவாயில்ல ..என்னை, நீ கம்ப்யூட்டர் கத்துக் கிட்டது
போதும்...பேசாம வீட்டில இருன்னு சொல்லிட்டாங்க "
"கவலை விட்டது "
"என்ன கவலை விட்டது? உனக்கு எப்ப தான் விளையாடறதுன்னு ஒரு
விவஸ்தை இல்லையா?"
"சாரிடா"
"சரி என்ன தான் முடிவு ?"
"இதோ பாரு .நம்மை பெற்றவங்க எல்லாருமே வாழ்ந்து விட்டவங்க ..
இனிமே வாழப் போறவங்க நாம் தான் ...முடிவு எடுக்க வேண்டியவங்க
நாம தான்.."
"என்ன தான் முடிவு ?"
"கோச்சுக்க மாட்டியே ..."
"சொல்லு"
"இதை விட்டா வேற வழியும் எனக்கு தெரியலே"
"பீடிகை போடாம சொல்லு "
"ஒண்ணுமில்ல .. நாம ரெண்டு  பேரும் சொல்லாம, கொள்ளாம சென்னை
கிளம்பறோம் .."
"அச்சச்சோ "
"பயப்படாதே ....நாம நிச்சயம் நல்ல நிலைமைக்கு வருவோம் ..அப்ப நம்ம
இருப்பை அவங்க கிட்ட தெரியப் படுத்துவோம் .நம்ம மேல இருந்த கோபம் அப்ப குறைஞ்சு போயிடும் ..நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சிருக்கிற பரஸ்பர
நம்பிக்கையும், அன்பும் நம்ம எல்லாரையும் ஒண்ணு சேர்த்திடும் ...நீ செய்ய வேண்டிய
தெல்லாம் ஒண்ணு தான் ..'
"என்ன?"
"நீ உன் கையில் உள்ளது, கழுத்தில் உள்ள  செயின் எல்லாவற்றையும்
வீட்டில் வைத்து விடு ....பணத்திற்காக நான் உன்னை விரும்பவில்லை என்பது
உன் வீட்டு மனிதர்களுக்கு தெரிய வேண்டும்..'
"சரி.."
" இந்த பரந்த உலகில் நான் படித்த படிப்பிற்கு ஒரு சின்ன வேலை கூட கிடைக்காமலா போய்  விடும்? எனக்கு, உன்னை  கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன் நான் ..நீ, எனக்கு   கட்டிய வேட்டியுடன் மட்டும்
வந்தால் போதும் !"
       


Thursday, July 11, 2013

IS IT A CRIME?

களியக்காவிளையில் பஸ் நின்றது.
சிட்டுக் குருவி போல் கலகலவென்று சிரித்துக் கொண்டு
மாணவர் கூட்டம் ஒன்று பஸ்ஸில் ஏறியது.
ஒரே கும்மாளம் தான்.
அவர்களுக்குள் ஒரு சலசலப்பு.
பஸ் டிக்கெட்டை யார் ஸ்பான்சர்  செய்வது என்று !
அதில் ஒரு பையன் துணிந்து சொன்னான்.
'நான் எடுக்கிறேன் ..நாம எத்தனை பேர் என்று சொல்லு? "
அதற்கு ஒருவன் கணக்கெடுக்க ஆரம்பிக்க,
இன்னொரு பையன் சொன்னான்.
"மச்சி எனக்கு டிக்கெட் எடுக்க வேண்டாம்டா...நான்
இங்க, தக்கலைல இறங்கப் போறேன் ..நான் எனக்கு
எடுத்துக்கறேன் "
சொன்ன பையனைப் பார்த்தால் படு சூட்டிகையாக இருந்தான்.
"சரிடா '
அந்த பையனை விட்டு பாக்கி பேருக்கு டிக்கெட் வாங்கினான் ஸ்பான்சர்
செய்தவன்.
அந்த பையன் கடைசி வரை டிக்கெட்டே எடுக்கவில்லை!
தக்கலையும் வந்தது!
என்ன நடந்தது தெரியுமா?
அந்த பையன் கண்டக்டரிடம் சென்றான் ..
"கண்டக்டர் பாக்கி சில்லறை/"
"எவ்ளவ் ?"
 கண்டக்டரோ  படு  டென்ஷனில் !
"அம்பது ரூபா கொடுத்தேன்.. குழித்துறையில் ஏறினேன். ஆறு ரூபாய்
டிக்கெட் காசு போக பாக்கி நாற்பத்தி நாலு ரூபாய்  தரணும் !
கண்டக்டர் நாற்பத்தி நான்கு ரூபாய் எண்ணிக் கொடுத்தார். பாவம் !
  'தில்'லாக டிக்கெட்டில்லாமல் டிராவல் செய்தது போக, டிபனுக்கும்
காசை தேத்திக் கொண்டு இறங்கினான் அந்த பையன்!
   சீட்டு இல்லாமல் பயணம் செய்தால், மோட்டார் வாகன விதிப் படி
ரூ 500 அபராதமோ, அல்லது  மூன்று  மாத சிறை தண்டனையோ அல்லது
இரண்டுமோ விதிக்கப் படும் என்ற நோட்டிஸ் போர்டு பஸ்ஸுக்குள்ளிருந்து சிரித்தது !


           

Sunday, May 19, 2013

காதல் வெண்பாக்கள் (3)

*
கூர் விழிப் பார்வையிலே கூழாக்கி, என்னை
ஊர் சிரிக்க வைத்து விடாதடி, பெண்ணே!
கார் மேகம் கூடி ககன நீர் விழுந்தது போல்,
வார் அறுந்த பையாய் வீழ்த்தி விட்டாயென்னை!
**
உமிழ் நீரில் உறைகின்ற கற்கண்டே! உந்தன் 
குமிழ் சிரிப்பைக் காணும், தகை சால் 
சான்றோர்க்கும், தமிழ் இனிதா என்ற சந்தேகம்,
தன்னாலே வந்து விடும்!
***
இழப்பதற்கு இல்லா இந்நிலையில் நானும்,
இழந்து விட்டேன் என்னை உன்னிடமே, பஞ்சம்
பிழைப்பதற்கு வந்த அசலூர் காரன் போல்,விழியால்
பிழிந்து எடுத்து விட்டாய் என்னை!

Saturday, April 27, 2013

TO LET!


"இன்னும் ஒரு மாசத்துல வீட்டை காலி பண்றேன்”
“சரி...எப்ப சொல்றீங்களோ அப்ப அட்வான்ஸ் தந்துடறேன்”
எனக்கும், எங்க வீட்டுக் காரருக்கும் (சாரி HOUSE OWNER க்கும்) நடந்த உரையாடல் இது..
இந்த B 305 இரண்டாவது மாடி! அதற்கு மேல் மொட்டை மாடி..அதனால் வெயில் ஏகத்துக்கு அடிக்கும் ..”கூல் பெயிண்ட் அடிச்சுத் தாங்க” என்று சொல்லிப் பார்த்தாகி விட்டது..மனுஷன் கூசாம மாசம் சுளையா எட்டாயிரம் ரூபாய் வாடகை வாங்குகிறார்..ஒரு சின்ன செளகர்யம் கூட செய்து தர மாட்டேன் என்கிறார்.செளகர்யபடா விட்டால் வீட்டை காலி செய்து கொள்ளுங்கள்..எனக்கு பத்தாயிரம் ரூபாய் வாடகைக்கு ஆள் இருக்கிறது என்று சொல்கிறார்.
பொறுத்துப் பொறுத்து பார்த்து, அது முடியாமல் போனதால் தான் மேல் கண்ட டயலாக் ஒரு நாள் நடந்தது..
“ என்ன சார்..வீடு மாற்றப் போறீங்களாமே..”
“ ஆமாம் சார்”
“ ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை போல பழகினோம்..இப்ப நீங்க வீட்டை காலி பண்ணப் போறீங்க.. நினைச்சாலே கஷ்டமா இருக்கு..
சார் ..ஒரு சின்ன ஹெல்ப்.. நீங்க வீடு பார்க்கும் போது எனக்கும் சேர்த்துப் பாருங்களேன்.. நீங்க இல்லாம எங்களுக்கும் போர் அடிக்கும்”
எனக்கோ ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த B 304 எனக்கு எதிர்த்த வீடு.அவர் வந்து ஆறு வருடங்களாகிறது..இது வரை ஒரு தடவை கூட என்னுடன் பேசியதே இல்லை..மூன்று நாட்களுக்கு ஒரு முறை , முருங்கைக் காய் சீப்பாக கிடைக்கிறதென்று ஆண்டார் வீதி சின்ன மார்க்கெட்டிலிருந்து வாங்கி வரும் ஆசாமி, எதிர்த்தாற்போல் நான் வரும் போது ஒரு நாள் கூட பேசியது கிடையாது..ஏன் தெரிந்தவர் என்கிற பாவனையில் ஒரு அசட்டு சிரிப்பு கூட கிடையாது..
இப்போது என்னவென்றால்...இந்த பேச்சு பேசுகிறார்..என்ன ஒரு ஆச்சர்யம்!
அதை விட ஆச்சர்யம் என்னவென்றால், என்னைப் பார்க்கும் போதெல்லாம் இப்போதெல்லாம் ஏதாவது பேசுகிறார்...சீனா ஊடுருவல் வரை கூட இரண்டு பேரும் பேசியாகி விட்டது... கடைசியில் “வீடு கிடைச்சாச்சா” என்று தான் எங்கள் உரையாடல் முடியும்!
இப்படியாக ஒரு மாதம் ஓடியே விட்டது..எனக்கும் வீடு கிடைத்த பாடில்லை...எங்கு விசாரித்தாலும் எக்கச் சக்கமாய் வாடகை!
ஒரு நாள் வீட்டுக் காரரைப் பார்த்து சொன்னேன்:
“ சார் ... நான் வீடு காலி பண்ண வில்லை”
“ ரொம்ப சரி.. தெரியாத பிசாசுக்கு தெரிஞ்ச பேயே மேல்!..நீங்களே இருங்க...” என்று அவரும் பெரிய மனசு பண்ணி சொல்லி விட்டார்..
பிறகு தான் தெரிந்தது அந்த பத்தாயிரம் ரூபாய் வாடகை தருவதாக சொன்னவர் வீட்டில் அரை டசனுக்கு மேலே உருப்படிகளாம்!
எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது ..
ஒன்றைத் தவிர!
அது, மூன்று நாட்களுக்கு ஒரு முறை , முருங்கைக் காய் சீப்பாக கிடைக்கிறதென்று ஆண்டார் வீதி சின்ன மார்க்கெட்டிலிருந்து வாங்கி வரும் அந்த B 304 , எதிர்த்தாற்போல் நான் வரும் போது இப்பொழுதெல்லாம் ஒரு நாள் கூட பேசுவது கிடையாது..ஏன் தெரிந்தவர் என்கிற பாவனையில் ஒரு அசட்டு சிரிப்பு கூட கிடையாது..
நான் நினைக்கிறேன்...
நான் வீடு காலி பண்ண வில்லை என்கிற விஷயம் அவர் காதுகளுக்கும் எட்டி இருக்க வேண்டும்!

Saturday, April 13, 2013

ரவா உப்புமாவும், ராப்பிச்சைக் காரனும் ...........

காமெடி சானல் பார்க்கலாமா.. நியூஸ் சானல் பார்க்கலாமா எதுல காமெடி ஜாஸ்தி என்று ரொம்பவும் போர் அடித்ததினால் நான் பூவா தலையா போட்டு பார்த்துக் கொண்டிருக்கும் போது, வாசலில் சலசலப்பு..
பார்த்தால்...
ராப்பிச்சை!
அடச்சே என்றாகி விட்டது எனக்கு!
கொஞ்ச நேரம் முன் தான் நினைத்தேன்..குடுகுடுப்பைக் காரன், ராப்பிச்சை, சிட்டுக் குருவி, மூட்டை பூச்சி என்று நம் இளம் பருவ காலத்தில் நம்முடன் இருந்த இவர்கள் எல்லாம் இப்போது எங்கே தொலைந்து போய் விட்டார்கள் என்று பிலாக்கில் எழுதலாம் என்று இருந்தேன்..
கெடுத்து விட்டானே இந்த ராப்பிச்சை!
என்னை எதையும் சிந்திக்க விடாமல் வாசலில் கமலா அந்த ராப்பிச்சையுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தாள்..
அதுவும் ரொம்ப நேரம் நீடிக்க வில்லை..
குக்கர் தைர்யமாக (அதற்கு இருக்கும் தைர்யம் கூட எனக்கு கிடையாது) விசில் அடித்து கமலாவை கூப்பிடவே அவள் உள்ளே ஓடினாள்..
ஓடினவள் சும்மா ஓடவில்லை!
‘வாசலில் இருந்த அந்த ராப்பிச்சையை துரத்துங்க..’ என்று கத்திக் கொண்டே ஓட, நான் ஏதோ பெரிய ஹீரோ போல் வாசலுக்கு விரைந்தேன்..
அந்த ராப்பிச்சை ஏதோ கத்திக் கொண்டிருந்தான்..
சட்டென்று அவன் வாயை அடைக்க, சட்டைப் பையில் இருந்து, பத்து ரூபாய் நோட்டை அவன் தட்டில் போட்டேன்..
“சா...மீ............இந்த வூட்டு சாமி நீங்களா...” என்று பெரிதாய் கும்பிடு ஒன்று போட்டான்..
அட..ஒரு வெறும் பத்து ரூபாய்க்கா இந்த கும்பிடு என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே...’சா...மீ... நீங்க நல்லா இருக்கணும்.....” என்று தன் கைகளை தலைக்கு மேல் தூக்கினான்..
எனக்கு லைட்டாக இப்போது தான் சந்தேகம் தட்டியது..இந்த கூழைக் கும்பிடு...இந்த வணக்கம் இதெல்லாம் இந்த வெறும் பத்து ரூபாய்க்கு இருக்காதே... ...
அட்லீஸ்ட் ஒரு நூறு ரூபாயாவது தட்டில் விழுந்திருக்க வேண்டும்..
ஏதாவது ஞாபக மறதியாய் நூறு ரூபாய் நோட்டு ஏதாவதை போட்டு விட்டேனா...என்ன?
சந்தேகத்துடன் தட்டைப் பார்த்தேன்..
சந்தேகமே இல்லை
பத்து ரூபாய் தான்!
சாமி...சாமி....என்று நாத் தழுதழுக்க குழறினான்...கண்களில் மாலை மாலையாய் கண்ணீர் .....
கொஞ்சம் விட்டால் அழுது விடுவான் போல இருந்தது..
ஏதோ அந்த கால ஹிந்தி படத்தில் அரதப் பழசு பாடல் ஒன்று ஐம்பது வருடமாய் பிரிந்த அண்ணன்,தம்பிகளை ஒன்று சேர்ப்பது போல, இவன் ஏதோ என்னோட அண்ணன் என்று சொந்தம் கொண்டாடி விடுவானோ என்று மனதுக்குள் லேசாய் பயம் எட்டிப் பார்க்க......
நல்ல வேளை..
குக்கர் வாயை அடைத்து விட்டு கமலா வந்தாள்!
அதற்குள் அவன் போய் விட்டான்..
“ஏதாவது காசு,கீசு போட்டீங்களா?”
“சேச்சே”
“அவனுக்கு ரவா உப்புமா வேண்டாமாம்..காசு தான் வேணுமாம்..”
என்றாள் கமலா.
“அப்டியா?”
“ ஏம்ப்பா.. நேத்திக்கு மட்டும் ரவா உப்புமா வாங்கிண்டியேன்னு கேட்டேன்”
“அதுக்கு அவன் என்ன சொன்னான்?”
“ நேத்திக்கு உங்க வீட்ல ரவா உப்புமா வாங்கிண்டதினால் தான் சொல்றேன்... உங்க வீட்டில பண்ணின எதுவுமே எனக்கு வேண்டாம்..காசு கொடுங்கங்கறான்..என்ன கொழுப்பு பாருங்களேன் அவனுக்கு!”
அடக் கடவுளே!
அந்த பிச்சைக் காரன் இத்தனை நேரம் என்னைப் பார்த்து இதற்காகவா பரிதாபமாப் பட்டிருக்கான்?...
”வாங்க நாம ரவா 

 உப்மா சாப்டலாம்” என்றாள் கமலா!

Monday, April 8, 2013

ஆரண்ய நிவாஸம் (2)

" உம் ..சொல்லுங்க "
ஒரு பெருமூச்சு என்னிடமிருந்து பதிலாகக் கிளம்பியது .....அதன் பின் ஒரு ஆழ்ந்த மெளனம் ...இனி மேல் பேசாமல் இருந்தால் அவ்வளவு மரியாதை இல்லை என்று தோன்றவே, தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச
ஆரம்பித்தேன்....
   "உங்களுக்கு களியக்காவிளை தெரியுமோ?"
   "கேரளாவா?"
   "கன்யாகுமரி  டிஸ்ட்ரிக்ட்..கேரளா பார்டர் !"
   "அந்த பக்கம் கொஞ்ச நாள் நான் இருந்தேன்"
   "அப்படியா?"
   "என் தம்பியும் அங்க மார்த்தாண்டத்தில இருந்தான்..."
   "ம்"
   "ஒரு இரண்டு நாள் சேர்ந்தாற்போல் லீவ் கிடைத்தது.. ஆபீஸ் ஜீப் எடுத்துண்டு பேச்சிப் பாறை ....பெருஞ்சாணி டேம்....திப்பரப்பு ஃபால்ஸ்...
திருவெட்டாறு என்று சுற்றினேன்...”
  இதிலென்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்பது போல் பார்த்தார் வரதன்.
   ”அப்புறம் மார்த்தாண்டத்தில் தம்பியைப் போய் பார்க்கலாமென்று தோன்றியது..  செல்ஃப் ட்ரைவிங் தான்!”
  “தம்பியைப் பார்த்தீங்களா?”
   “ அந்த பக்கமெல்லாம் ஏக வறட்சி...கோடை வெயில் வேற....எங்க பார்த்தாலும் பாலை வனம் போல பொட்டல் காடு...கொஞ்ச நேரம் முன்னால,
பசுமையா  நான் பார்த்த பச்சை பசேலென்ற வயல்வெளிகளும்..வெள்ளக் காடாய் சுழித்துக் கொண்டு ஓடும் ஆறும் எங்கேயோ காணாமல் போனது போல ஒரு பிரமை!...அட...ஒரே நாளில் இவ்வளவு வித்யாசமா என்று கோடையின் வெப்பம் தாளாமல் கண் எரிச்சலில் நான் ஜீப் ஓட்டிக் கொண்டு போகும் போது...”
    வரதன் பேசவில்லை...உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
    “ஒரே பொட்டல் காடா....தார் ரோடு தகதகவென மின்னியது...தார் எங்கே குழம்பாக உருகி விடுமோ என்ற பயம் வந்தது எனக்கு...எங்கு பார்த்தாலும்
வெட்ட வெளி...கொஞ்ச தூரத்தில் ஒரு குடிசை..எனக்குள் ஏதோ தோன்றியது..
அந்த குடிசை வாசலில் ஜீப்பை நிறுத்தினேன்..         
   உள்ளிருந்து தீனமாய் ஒரு குரல்...யாரோ உடம்பு முடியாமல் படுத்துக் கொண்டு, வலியின் வேதனை தாங்காமல் எழும் அழு குரல்...உள்ளேப் போய்ப்
பார்த்தேன்...ஒருவரும் இல்லை..ஆனால் சப்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது..
  வாசலுக்கு மறுபடியும் வந்தேன்..குடிசையின் வலது பக்கமிருந்து தான் அந்த சப்தம் வந்து கொண்டிருந்தது..போய் பார்த்தால் ஒரு வயோதிகர் அனத்திக் கொண்டிருந்தார்...”
“ம் அப்புறம்”
“ஜன நடமாட்டம் துளிக் கூட இல்லாத இடம்! அவருக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியும்? பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிட்டல் இருக்கா? காரில தான் வந்திருக்கேன்..உங்க சொந்தக் காரங்களைக் கூப்பிடணுமா என்று நான் கேட்ட ஆயிரம் கேள்விகளுக்கு ஒன்றே ஒன்று தான் அவர்  சொன்னார் ”
“கொஞ்சம் தண்ணீர் வேண்டும்”
   துரதிர்ஷ்டவசமாய் என்னுடைய வாட்டர் பாட்டிலில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது..அதை எடுத்துக் கொண்டு போய் கொடுத்தேன்..
ஆவலுடன் அந்த பாட்டிலை வாங்கினவர், தண்ணீரைக் குடிக்க  வாயருகே கொண்டு போனார்..பிறகு என்ன தோன்றியதோ..அந்த பாட்டிலில் இருந்த தண்ணீரின் பெரும் பகுதியை அவர் கட்டிலுக்கு கீழே வாடிக் கொண்டிருந்த வாழைக் கன்றுக்கு தெளித்தார்...இப்போது பாட்டிலில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது..அதை அவர் அருந்துவதற்க்குள் அவர் தலை சாய்ந்து விட்டது..”
   “ அடடா...”என்றார் வரதன்.
   “ அப்புறம் என்ன...பக்கத்து ஊருக்குப் போய் தகவல் சொல்லி சில ஆட்களைக் கூட்டி வந்து கோவிந்தாகொள்ளி போட்டு வந்து விட்டோம்..”
      அதற்கும் நாம் சாப்பிட்ட ஏத்தம் பழத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது போல பார்த்தார், வரதன்..
    “ வரதன்
... நீங்க சாப்பிட்டீங்களே..அந்த ஏத்தன் வாழைப் பழம் அன்னிக்கு அந்த களியக்கா விளைக்கும், மார்த்தாண்டத்திற்கும் நடுவில அந்த குடிசையில குற்றுயிராய் கிடந்த கிழவர், தன் தண்ணீர் தாகத்தை தியாகம் செய்து கீழே கிடந்த காய்ந்து போன வாழைக் கன்றுக்கு ஊற்றினாரே, அதனோட பொண்ணோட பொண்ணு தான் இந்த கன்னு!”
      .”.களியக்கா விளையில இருந்து ட்ரான்ஸ்பரில் வரும் போது அந்த வாழையோட கன்றையும் பிடிவாதமா நம்மூருக்கு கொண்டு வந்து நட்டேன்...எல்லாரும் கிண்டல் பண்ணினாங்க...  நம்மூரில அந்த வாழை வர்ரதுக்கு சான்சே இல்லைன்னு  அடிச்சுச் சொன்னாங்க..அது உண்மையும்  கூடத் தான்..ஆனா, அந்த புண்யாத்மாவோட கரம் பற்றிய நீரின் மகிமையோ என்னவோ இது அதிசயமா இங்கே நம்மூரில வளர ஆரம்பித்து விட்டது!”
      கீழே படிகளில் இறங்கி சற்று தள்ளி, குலைப் போட்ட தளதளவென இருந்த வாழை மரத்தை தடவிக் கொடுத்தேன் .....
      பக்கத்தில் வரதன்!

Wednesday, March 27, 2013

ஆரண்ய நிவாஸம்.....

இனி ஓய்வு தான்... அதுவும் நிரந்தர ஓய்வு!
உனக்கு வயதாகி விட்டது, இனி நீ ஆஃபீஸ் வர வேண்டாம்..ரெஸ்ட் எடுத்துக் கொள் என்று ஆஃபீஸில் சொல்லி விட்டார்கள்....
பார்க்கப் போனால், ஞாயிற்றுக் கிழமை தான் ரிடய்ர்ட்மெண்ட் வர வேண்டும் எனக்கு! அன்று வார விடுமுறை என்பதால், சனிக் கிழமையே அவசர,அவசரமாய் ரிடய்ர்ட்மெண்ட் ஆக்கி விட்டார்கள்!
          ஆஃபீஸ் நண்பர்கள் வீட்டிற்கு வந்து, உபசாரத்திற்கு என்னை பார்ப்பதும், பதிலுக்கு  நான் அவர்களுக்கு டிஃபன், காஃபி என்று பிரதி உபசாரம் செய்வதுமாக  இரண்டு மூன்று நாள் பொழுது ஓடி விட்டது..
         இப்போது அவரவர்கள் அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்..என் மனைவி கூட ஆஃபீஸ்க்கு கிளம்பி விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
   
       தோட்டத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு, விஸ்ராந்தியாய் கொல்லைப் பக்கம் ஒரு குளியலும் போட்டு விட்டு ஸ்வாமிக்கு ஸ்லோகம் சொல்லி, டிஃபன் சாப்பிட்டு பேப்பர் படிக்கப் போகும் போது........,
      காலிங்பெல் அடிக்கும் சத்தம்!
      என் இலக்கிய நண்பர் வரதன்!
      பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது..எதேச்சையாய் இந்த பக்கம் வந்தாராம்..அப்படியே ஒரு எட்டு என்னைப் பார்த்து விட்டு போலாம் என்று வந்திருக்கிறார்..
     ஆஃபீஸ் இருக்குமே..போயிருப்பாரோ..இல்லாவிட்டால் ரிடையர்ட் ஆகியிருப்பாரோ என்ற சந்தேகம் எதுவும் துளிக்கூட இல்லாமல்..’என்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டதே..பார்த்தால் பேசி விட்டுப் போகலாம்’ என்று வந்திருக்கிறார்..ஆப்த நண்பர்!
     சுட்ட  ஏத்தம்பழம்  இரண்டு இருந்தது...ஒரு டீ கலந்து  குடுத்தேன்...
     ஏத்தம் பழமா...ஜோர்..ஜோர்...எனக்கு ரொம்பப் பிடிக்குமே” என்று ஆசையாக சாப்பிட்டார்...
    “வரதன் இந்த  ஏத்தன் பழத்துல ஒரு கதை ஒண்ணு இருக்கு.. நீங்க கிளம்பும் போது சொல்றேன்”
    “ சரி”
     “நிறைய விஷயங்கள் பேசினோம்...அவர் ஓய்வூதியம் வாங்க போராடிய
கதையை சொன்னார்..வாழும் வாழ்க்கையே ரொம்ப போராட்டமாகப் போய் விட்டது என்று ஏகத்துக்கு வருத்தப் பட்டார்...
       அவர் கவிதைத் தொகுப்பு ஒன்றை பரிசாகக் கொடுத்தார்..பையனுக்கு சரியாக வேலை அமையவில்லை என்று வருத்தப் பட்டார்..அவருடைய சிறு கதைத் தொகுப்பை M.A. க்கு வைத்துள்ளதைப் பற்றி சிறு  குழந்தை போல சந்தோஷப் பட்டார்.அவருடைய சிறுகதைகளை ஆராய்ச்சி செய்ய வந்த மாணவன் ஒருவன் ’டாக்டரேட்’ வாங்கியதை தன்னிடம் சொல்லவில்லை என்று ஏக்கப் பட்டார்...
      இரண்டு பேருக்கும் பேசுவதற்கு ‘சப்ஜெக்ட்’ இல்லாததினால் கொஞ்ச நேரம் மெளனம்..
      அவருடைய கவிதைத் தொகுப்பை வருடினேன்!
      அவருடைய கவிதைகளிலே எனக்குப் பிடித்த அம்சம் ஒரு அழகிய ஃபோட்டோவை எண்ணி நாலே   நாலு எளிமையான வரிகளில் கொண்டு வந்து விடுவது தான்!.
        உதாரணத்திற்கு....
       “.........கண்ணாடிக் குழல்களில்
       ஆரஞ்சு சாறு நிரப்பப் பட்டது
       போன்ற அழகிய விரல்கள்..”
       இதோ இன்னொரு கவிதை....
       அம்மா இனி இல்லை..அம்மா அன்போடு கொடுத்தனுப்பிய தயிர்சாதமும்,
வடு மாங்காயும் இனி கிடையாது என்பதை எவ்வளவு நாசுக்காய் வெளிப் படுத்துகிறார்!
       “ .........சுத்தமாய்த் தேய்த்து
          கழுவப் பட்ட
          அந்த கனமான
          எவர்சில்வர் டிஃபன் பாக்ஸ்
          வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது.....”
          ஒரு கவிஞரின் கவிதைகளை அவர் முன்னாலேயே படித்துக் கொண்டிருப்பது எவ்வளவு சுவாரஸ்யமான விஷயம்!
        லேசாய் கனைத்தார் வரதன்!
      “அப்ப வரட்டுமா?”
      புத்தகத்தை மூடவே மனதில்லாமல் ’சரி’ என்று  ஆரண்ய நிவாஸத்தின் வாசல் கேட் வரை சென்று  வழி அனுப்பி விட்டு வந்தேன்.
        சற்று நேரத்தில் வாசலில் காலிங்பெல் அடித்தது!
        லாண்டரிக்கு துணி எடுக்க வந்திருக்கிறார்கள் என்று நினைத்து கதவைத் திறந்தவனுக்கு ஆச்சர்யம்!
        மறுபடியும் வரதன்!
       “எதுக்கு வந்தேன் தெரியுமா?”
       “கண்ணாடி கூடு மறந்து போய் வைச்சிட்டீங்களா?”
       “ இல்லை..அந்த ஏத்தம் பழக் கதை?’’
       “ அட... நான் மறந்துட்டேன் இல்ல..”
        வாத்ஸல்யத்துடன் அவர் கையைப் பற்றிக்கொண்டு வாசலில் உள்ள
கார்டன் சேர்களில் அமர்ந்தோம்...அந்த உச்சி வெயிலிலும் பக்கத்தில் உள்ள
மாமரத்திலிருந்து ஜிலுஜிலுவெனக் காற்று வீசியது..
        ”ம் சொல்லுங்க”
        “சொல்றேன்”
          மனது பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது...அன்று நடந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கும்...யாரிடமும் இது வரை பகிர்ந்து கொணடதில்லை...வரதனிடம் சொல்லப் போகிறேன் என்று நினைக்கும் போது ஆழ்ந்த பெருமூச்சு வந்தது..
          ஆவலுடன் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார், நண்பர்.
                (இதன் தொடர்ச்சி 01.04.13 அன்று வெளிவரும்)
   
   
 .
   

Saturday, March 23, 2013

வழுக்கையால் விழுந்த தலை !
"விழுந்திடுத்துப்பா”
“என்னப்பா..என்ன?”
“வழுக்கை”
இடுப்பை குனித்து ஜப்பான்காரர்கள் வணக்கம் சொல்லும் வண்ணம், தன் வழுக்கை விழுந்த  தலையை வருத்தத்துடன்  காண்பித்தான் விஸ்வம்.
”இது தானா.. நான் கூட என்னவோ..ஏதோ என்று பயந்துப் போய் விட்டேன்”
“என்னப்பா இது நான் ஏதோ சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ கிண்டல் பண்றியே?”
“இது ஒண்ணும் கவலைப் படுகிற விஷயம் இல்லையப்பா..எல்லாருக்கும் தான் வழுக்கை விழறது..வாஷிங்டன்,ஐஸனோவர், நிக்ஸன், டிகால், குருச்ஷேவ்...”
  ” இருப்பா..இரு... நம்ம நாட்டுத் தலயில  யாருக்கும் வழுக்கை இல்லையா..?”
 “ பொறு அப்பேன்...ஜவஹர்லால்  நேரு..ராஜாஜி, ஏன் மஹாத்மா காந்தியே கூட..”
   “ இருப்பா..இது எவ்வளவு மனசுக்கு கஷ்டமா இருக்கு?”
   “தம்பி...வருத்தப் படாதே..இதுல ரொம்ப நல்லது இருக்கு..அழுக்கு சேராம தலை பளிச்னு இருக்கும்...ஐடி கார்டை தூக்கிட்டுப் போகிறார்போல சீப்பைத் தூக்கிண்டு போக வேண்டாம்...பேன் தொல்லை இல்லை...கண்ணாடி முன்னாடி ரொம்ப நேரம் நின்னு தலை வாரிக்க வேண்டாம்..அதனால, நேரத்துல பஸ்ஸை பிடிச்சுடலாம்...”
     ”என்னவோ போ” என்றான் அலுப்புடன்!
     உடனேயே ஒரு வெண்பாவை எடுத்து விட்டேன்..அதற்குப் பிறகு தான் அடங்கினான், அவன்!
அந்த வெண்பா இதோ:

அழுக்கு,பொடுகு,பிசிக்கினால் படும் பாடில்லை
வழுக்கி விழுந்திடுமே வந்துறையும் பேன்களெல்லாம்,
அழகன்  இவனென்று வயசுப் பெண்களும்  நேசிக்கும்,
வழுக்கையால்  விழுந்த தலை!


Wednesday, March 20, 2013

காணாமல் போனவர்கள் !!!!


”மாமி, எங்கம்மா ஒரு டம்ளர் காஃபி பொடி உங்காத்திலேர்ந்து வாங்கிண்டு வரச் சொன்னா, 
ஒண்ணாம் தேதி வந்ததும் கண்டிப்பா தருவாளாம்” என்று உரிமையுடன் காஃபி பொடி கடன் கேட்டு வரும் பக்கத்து வீட்டுச் சிறுமி........
************************************************
“ என்னடா அப்படிப் பார்க்கிறே.. கண்ணாடி சீசால தண்ணி கலந்து ‘சிரப்’னு சொல்லி ஏமாத்தற என்னையே உங்கப்பா ஏமாத்திட்டார்..”
“எப்டி டாக்டர்?”
“அப்ப அரச மரத்தடி தெரு மாடில என் க்ளினிக் இருந்தது..உங்கப்பா அப்ப குந்தால வேலை..ஊட்டிலேர்ந்து உங்களுக்கு ஸ்பெஷலா உருளைக் கிழங்கு வாங்கி வந்திருக்கேன்’னு சொல்லி கீழே வாசல்ல கடை போட்டிருந்தவன்ட்ட வாங்கி என் தலையில கட்டிட்டார்டா..”
“உங்களுக்கு எப்டி டாக்டர் தெரியும் அது?”
“ நான் மாடி ஜன்னலேர்ந்து பார்த்துக் கிட்டு இருந்தேன்லே...ஹஹ்ஹா”
பேஷண்டிடம் சினேகபாவத்துடன் இருக்கும் டாக்டர்
************************************************
“என்ன மாமி பாப்பா, பட்டணத்திலேர்ந்து வந்திருக்கா?”
“ ஆமா செட்டியார்”
“ நல்ல சமாசாரம் தானே”
“ ஆமா...முழுகாம இருக்கா”
“ கவலையேப் படாதீங்க... நம்ம தாய்மானவர் இருக்காரு...வாளத் தார் ஒண்ணு சாத்தறேன்னு வேண்டிக்குங்க..சுகப் பிரசவமாயிடும்” என்று சொல்லிக் கொண்டு வாத்ஸல்யத்துடன் வீசைக் கல்கண்டை மளிகைக் கடை சாமான்களுடன் இலவசமாய் கொடுக்கும் மளிகைக் கடைக் காரர்...
************************************************
”சாமண்ணா, ஒரு அல்வாத் துண்டு, நெய் ரோஸ்ட், ஒரு காஃபி என் கணக்கில எழுதிக்க “ என்று முதலாளியிடம் ஜம்பமாய் சொல்லிக் கொண்டே வெளியே வரும் ஹோட்டலில் ’அக்கவுண்ட்’ வைத்துக் கொண்டிருக்கும் ஆசாமி..
************************************************
“சார் போஸ்ட்... தம்பி உனக்கு நாளைக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தரேன் என்று வேலைக்கான ஆர்டர் வரும் என்கிற நம்பிக்கையில் தனக்காக காத்திருக்கும் வேலை இல்லா பட்டதாரியிடம் கனிவாய்ச் சொல்லும் போஸ்ட்மேன்!
************************************************

அம்பிப் பயலுக்கு விளக்கெண்ணையை புகட்டுவதற்குப் பாடுபடும் தாத்தா,பாட்டி, அத்தை,அத்திம்பேர் மற்றும் குடும்ப நபர்கள்.மூக்கைப் பிடித்துக் கொண்டு அடம் பிடிக்கும்
அந்த அம்பிப் பயல்.அவன் படும் பாட்டைக் கண்டு அழும் பாக்கி வாண்டுகள்... சின்னக் குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் கொடுக்கும் வைபவம் இப்போது 
இருக்கிறதா?   
************************************************
ஒரு முப்பது,முப்பத்தந்து வருடங்களுக்கு முன்னால் இருந்த இவர்கள் எல்லாம் இன்றைய கால கட்டத்தில் எங்கே போய் விட்டார்கள்?

Saturday, March 16, 2013

ரயில் ஸ்னேகா!


ஒரு நீண்ட நேர ஓட்டத்திற்குப் பிறகு அந்த ரயில் பெரிதாய் பெருமூச்சு விட்டுக் கொண்டு, ஸ்டேஷனுக்கு வந்து நின்றது.
  “சார்....காஃபி....சார்...காஃபி..”
  “டீ.........டீ........டீ.......”
 “இட்லி வடை....சார் உப்மா......உப்மா....”
 “ஹிண்டு...எக்ஸ்ப்ரஸ்....ஆனந்த விகடன்..”
“சார்...போளி....போளி.....”
      வியாபாரிகளின் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது.
      அந்த பருத்த மனிதர், மேல் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார்..அவருக்கு இது காறும் இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஆசாமி, ஒரு மரியாதைக்குக் கூட  அவரிடம் சொல்லிக்கக்  கூட மாட்டாமல் ஒரு வழியாய் இறங்கி விட்டான்..
      அந்த ஸீட்டில் நாம் உட்காரலாமா என்று நினைத்தார்...உடனே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்..அவன் உட்கார்ந்திருந்த இடம் கூட அவ்வளவு எரிச்சல் உண்டாக்குமளவுக்கு
அவரை ‘போர்’ அடித்து விட்டான் அந்த ஆள்!
    பசி வயிற்றை கவ்வவே, கையோடு கொண்டு வந்த டிபன் பாக்சைத் திறந்தார்.
    மிளகாய் பொடி தூவிய அந்த மல்லிகைப் பூ போன்ற இட்லிகள் ஒவ்வொன்றாய் அந்தர்த்யானமாகிக் கொண்டிருந்தது...
    “....பேச்சு கொடுத்தால் தானே பேசுகிறான்கள்..வாய் மூடி மெளனமாய் இருந்து விட்டால்....” என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, டக்டக்கென்று பூட்ஸ் கால்கள் சப்தமிக்க கோட்டு சூட்டுடன் ஒரு அழகிய இளம் பெண்  எதிர்த்தாற் போல் உட்கார்ந்தாள்....
    பரவாயில்லையே என்று  நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ஸ்டேஷனில் இறங்கின அந்த பழைய ஆள் மனதுக்குள் வந்து மறுபடியும் பயமுறுத்தினான்!
   ரயில் சினேகிதம் எல்லாம் நமக்கு செளகர்யமான ஸீட் கிடைக்காத வரை தான் கொண்டாடப் பட  வேண்டும்..வசதியாய் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது எதற்கு அனாவசியமாய் வாய்
வளர்த்துக் கொள்ள வேண்டும் அடுத்த ஆளிடம்?
    சட்டென கண்களை மூடிக் கொண்டு தூங்குகிறார்போல பாசாங்கு செய்யலாமா என்று எண்ணினார்..உடனே எண்ணத்தை மாற்றிக் கொண்டார்...
   டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எப்படி தூங்குவது?   
   இதற்குள் ரயில் கிளம்பி விட்டது.
   சினேகிதமாய் சிரித்தாள் அந்த இளம் அழகி.
   “அதற்குள் வெயில் ஆரம்பிச்சாச்சு...இல்லையா  சார்”
   ஆம் என்பது போல தலையை ஆட்டினார்..
   ”என் பெயர் ஸ்னேகா”
   இதற்கும் மெளனமே அவர் பதிலாய் இருந்தது! 
  ”சார்....மதுரைக்கா போறீங்க..”
  ”..”
 “சும்மா..பேச்சுக்குத் தான் சொல்றேன்...ஓடற ரயில்ல உங்களுக்கு ஏதாவது     ஆச்சுன்னா....நெருப்புன்ன உடனே வாய் வெந்துடுமா என்ன?”
  “..”
  “பரவாயில்ல.. நான் ஒரு இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்ட்..”
  ”..”
  “ஏதாவது நம்ம கிட்ட பாலிஸி போட்டீங்கன்னா..”
  ”..”
  “இது மார்ச் மாசம் நல்ல எண்டெளமோண்ட் பாலிஸி ஒண்ணு இருக்கு...போட்டீங்கன்னா...இன்கம்டாக்சுக்கு SAVE பண்ணினா மாதிரியும் ஆச்சு”
 “..”
 “முத ரெண்டு ப்ரீமியம் நான் கட்டறேன்..மூணாவதிலிருந்து நீங்க கட்டினாப் போறும்”
 “..”
 “பரவாயில்லை சார்..தெரிஞ்ச மனுஷனாப் போயிட்டீங்க..உங்களுக்காக மூணு பிரீயமும்  நானே கட்டறேன்..”
 “..”
  “என்ன சார்...பேனா வேணுமா...பேப்பரும் வேணுமா..இந்தாங்க”
  “..”
  “என்னது... நான் படிக்கணுமா...’சார் நான் ஒரு செவிட்டூமை... நீங்க பேசினது ஒண்ணுமே புரியவில்லை’...அடப் பாவமே... நான் வரேன் சார்”
அந்த இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்ட் இடத்தை காலி செய்ததும், இவர் ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா...என்று தன் சாமர்த்தியத்தை நினைத்து தனக்குத் தானே நன்றாக  வாய் விட்டு சிரித்தார்.
அதற்குப் பிறகு, அரை மணி நேரம் கழித்து,குய்யோ,முறையோ என்று கூச்சலும் போட்டார்.....
ரயிலை விட்டு இறங்கிய அந்த ஸ்னேகா சும்மா இறங்காமல்,இவர் சூட்கேசையும் கூட எடுத்துக் கொண்டு இறங்கியது தான் காரணம்!

Saturday, March 2, 2013

ஹ..ஹ..ஹஹ்ஹ்ஹாஹ் ஹா !


பஸ்ஸில் தொங்கிக் கொண்டு தான் வந்தேன் என்று சொல்ல வேண்டும்..
அப்போது என் பின்னால் யாரோ கை தட்டி கூப்பிடுவது போல் இருந்தது ..
பார்த்தால் நண்பர். அவரது வலது பக்கம் உள்ள நபர், எழுந்திருக்க,
முயற்சிக்க எனக்கு அந்த சீட்டை கொடுக்கத் தான் நண்பர் விரும்பியிருக்கிறார்..
நானும் ஒரு வித பரபரப்புடன் அந்த சீட்டைக் கைப்பற்றி உட்கார்ந்து கொண்டேன் .
     "சார், நான் தான் உங்களுக்கு இடம் கொடுத்தேன் .."என்றார் பெருமையாய் !
    " சார் மன்னிக்கணும் ..நீங்க எனக்கு இடம் கொடுக்க வில்லை!'
      இது என்னடாது வில்லங்கம்  பிடிச்ச ஆளை பக்கத்துல உட்கார  வைத்திருக்கிறோம்  என்று நினைத்தது
போல இருந்தது அவர் பார்வை..
     இருந்தாலும், சமாளித்துக் கொண்டு கேட்டார் ..
     " எப்டி சொல்றீங்க?"
     "சார்...நான் எங்கே உட்கார்ந்திருக்கேன் ?"
     "என் பக்கத்திலே .." -
     சொல்லும் போதே பயம் தெரிந்தது!
     " உங்களுக்கு அது எந்த பக்கம் சார்?"
     " வலப் பக்கம்..."
     "அப்ப வலத்தைக் கொடுத்துட்டு, இடம் என்று சொல்றீங்களே சார் .."
என்றேன் ..
    இறங்க வேண்டிய ஸ்டாப்புக்கு இரண்டு ஸ்டாப் முன்னாடியே, எனக்கு 'இடத்தை'க்கொடுத்து விட்டு மரியாதையாய்  இறங்கிக்   கொண்டார், நண்பர்.   
உங்களுக்கு நான் ரொம்பவே இடம் கொடுத்து விட்டேன் என்று சொல்லாமல்
சொல்வது போல் இருந்தது அவர் செய்கை !  
அதே நண்பர் மறு நாள் ஆபீஸில் என் சீட்டிற்கு வந்து 'குட்மார்னிங்' என்று சொல்ல,  நானும் குட்மார்னிங் என்றேன்.
"பரசு..ஒரு விஷயம் .." 
"சொல்லுங்க.."
"நாய் கிட்ட Tiger biscuit போட்டா அது உங்களை விட்டுட்டு பிஸ்கட்டை சாப்பிடும்..டைகர் கிட்ட நாய் பிஸ்கட் போட்டா அது பிஸ்கட்டை விட்டுட்டு உங்களை சாப்பிடும்...இதுலேர்ந்து என்ன தெரியறது ?"
"ஒன்று மட்டும் தெரியறது..'
"என்ன .."
"போயும்...போயும்..சீட்டிற்கு வந்து ஒங்களுக்கு குட்மார்னிங் சொன்னேனே ..
அது தப்புன்னு தெரியறது .."
  காலை உதைத்துக் கொண்டு சென்றார் பரசு...
 எனக்கு ஏக திருப்தி ... 
  "இதே பரசுவிடம் ஒரு வாரம் முன்பு நான் போய் குட்மார்னிங் சொல்ல,
அவர் அதற்கு விழுந்து விழுந்து சிரிக்க..எதற்கு அவர் சிரிக்கிறார் என்று நான் 
வழக்கம் போல் முழிக்க ...."சாரி சார்.நீங்க ஏதோ ஜோக் சொல்றீங்களோன்னு  
 நினைச்சேன்.." என்று அவர் போட்ட மொக்கைக்கு பதில் மொக்கை தான் 
   இன்று நான் செய்தது!
 .. 
     

Wednesday, February 20, 2013

குடியைக் கொடுத்த குடி !

"ம்மா அப்பா வருது !"
ஐயோ ..ஒண்ணும் இல்லையே ..அந்த எளவெடுத்தவன் வந்து அடிக்கப் போறானே என்கிற பயத்தில் கத்தினாள் மாரி !
"...ஏல மகேசு ஓடிப் போடா உங்கப்பன் வரதுக்குள்ள .."
"யம்மா நீ !"
"போடா சனியனே !  ..குடிச்சு ...குடிச்சு உங்கப்பன்
ஒடம்புல சத்தே இல்ல...அடி வலிக்காது ..நான் சமாளிச்சுக்குவேன்..நீ பச்ச மண்ணு ..ஓடிப் போ அப்பாலே !" - எரிச்சலுடன் கத்தினாள் மாரி.
   தண்ணி வண்டி வருவது போல் தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தான்
மருதை ...
   அவனுக்கு சரக்கடிக்க  காசு வேணும் ..அது தீர்ந்து போனா வீடு நியாபகம்
வந்துடும் ..இங்கன வந்து மாரியை  மிரட்டி..அடித்து .காசு வாங்கிக் கொண்டு
போவான் ..இப்போது சில நாட்களாக வீட்டிலும் பணம் பெயருவதில்லை ..
   எப்படி பெயரும் ?
   குந்து மணி தங்கத்தையும் வைத்து குடித்தாகி விட்டது ..முன்னெல்லாம்
மாரி வயல் வேலைக்குப் போய்க் கொண்டு தான் இருந்தாள்...கொஞ்ச நாளா அவளுக்கும் உடம்பு முடியவில்லை ..காசு எங்கிருந்து கிடைக்கும் ?
    போன தடவை வந்த போது மகேஸ்  கையில அரிசி வாங்க கொடுத்து வைத்த காசைப பிடிங்கிக் கொண்டு போய்  குடித்தான்....இந்த தடவை என்ன கிடைக்கப் போகுது ...
     நினைப்பு தந்த வெறுப்பில் தள்ளாட்டம் கொஞ்சம் கூடவே ஆனது ..
    "காசு தாடீ"
    "எங்கன இருக்கு?"
    வந்த ஆத்திரத்தில் பாத்திரங்களை காலால் உதைத்தான் அவள் தலைமயிரைப்  பிடித்துக் கொண்டு ஒரு  எத்து எத்தப் பார்ப்பதற்குள் ....
   "யப்பா அம்மாவை வுடு !"
    காட்டுக் கத்தலாக கத்தின மகேஸ் அப்பனைத் தள்ளினான் ...
    சுதாரித்து அவன் எழுவதற்குள் அவன் கையில் காசைத் திணித்தான் ..
    "போ...குடி...இங்ஙன வராதே"
     பணத்தைக் கண்டவுடன் மாரியை மறந்தான் ..மகனையும் மறந்தான் ...
ஓடிப் போய் விட்டான் குடிக்க ...
    அந்த வெறி அடங்கியவுடன் தான் அவனுக்கு புத்தி வேலை செய்ய ஆரம்பிக்க ..பையனிடம் அவ்ளாவ் பணம் ஏது எனக் கேட்கத் தோன்றியிருக்க வேண்டும் !
     திருடியிருப்பானோ ..என்று பயமாக இருந்தது மருதைக்கு.
 அடுத்த நாள் ..
" மகேசு எங்கே ?"
" இன்னாத்துக்கு ?"
"ஏன் புள்ள அவன்  இசுக்கூலுக்குப் போல?"
"இனிமே அவன் அங்ஙனப் போக  மாட்டான்"
"ஏம் புள்ள .." மருதைக்கு லேசான கலக்கம் ..பய புள்ள திருடிட்டு
தாணாக் காரன் கிட்ட மாட்டிக் கிட்டானோ !
  "என் உடம்புல முன்ன மாதிரி வலு இல்ல..ஒனக்கு குடிக்க காசு வேணும்
அவன் என்ன பண்ணுவான் ?மாடு மேய்க்கப்   போய்ட்டான்யா....நேத்து அவன் உனக்கு காசு கொடுத்தானே அது அவன் புஸ்தகத்தை வித்த பணம் "
   குலுங்கி குலுங்கி அழுதாள் மாரி.
   மருதையும் தான்!
   இப்போதெல்லாம் .அந்த எளிய குடிசையில் அடுப்பங்கரையில் பூனை தூங்குவதில்லை ...மாரி காலையில் சமையலை ஆரம்பிக்க ..பையன் படித்து விட்டு இசுக்கூலுக்குப் போக மருதையும்  ரொம்பவே மாறி விட்டான் ..காலையில் போனால் சாயந்திரம் தான் வருகிறான் .. உடம்பிலும் அந்த பழைய தள்ளாட்டம் இல்லை ..ஏனென்றால் அவன் இப்போதெல்லாம் குடிப்பதில்லை .
    அவன் மனம் திருந்தி வேலைக்கும்  போக ஆரம்பித்து விட்டான்.
    எங்கே என்று கேட்கிறீர்களா  ?
    டாஸ்மாக்கில் !