Thursday, June 23, 2011

அங்கார...இங்கார.....(கதை ஆரம்பிச்சாச்சு!!)


அந்த ’பத்துக்கு ஆறு’சைஸ் ரூமில் அவர்..சாரி..’அது’ அந்த மரக்கட்டிலில் மல்லாந்து கிடக்க, பக்கத்து டேபிளில் ஒரு பேப்பர் காற்றினால் படபடத்துக் கொண்டிருந்தது. விடுதி காப்பாளர் வந்த பின்பு அந்த பேப்பரை எடுக்கலாம் என்று பிச்சுவையர் சொல்லவே, அங்கு கூடியிருந்த எல்லோரும், விடுதி காப்பாளருக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
* * * *
"அங்கார..இங்கார நாமம் சார்த்தி,
அனுதினமும்..அனுதினமும் கரம் கூப்பி,
சிங்கார தேவனே சீனிவாஸா...
சீரங்கத்துப் பெருமாள..சேவிக்கப் போறோம்..போறோம்..அங்கார..
’போறோம் அங்கார..’என்பதில் ஒரு ஜெர்க் கொடுத்து, அந்த மரக்குதிரையை ரங்க சுந்தரம் ஆட்ட, குழந்தை ஸ்ரீதர் மழலையில் ’போதோம்..அங்காத..’என்று பாடினான்.
வண்ணாரப் பேட்டையில் ரங்கசுந்தரம் வீடு என்றால் சிறு குழந்தை கூட அடையாளம் காட்டும்,தன் கண்களை அகல விரித்துக் கொண்டு!பாகம் பிரித்து அவருக்கு வந்த வகை பணம்,அது தவிர கொஞ்சம் கடனும் வாங்கி ரங்கசுந்தரம் அந்த பழைய வீட்டை வாங்கினார்.அவர் அதிர்ஷ்டம் அந்த உத்திரத்து தேக்கின் மதிப்பு விற்பவனுக்குத் தெரியவில்லை!
’நமக்குத் தான் குழந்தை இல்லையே, எதுக்குங்க, இவ்வளவு பெரிய வீடு’ என்ற பார்வதியை சமாதானப் படுத்தினார்.அவர் நினைத்தது போலவே, அடுத்த ஐந்தாவது வருடம் பிசினசில் நல்ல லாபம்..வீட்டை கானாடுகாத்தான் நாட்டுக் கோட்டை செட்டியார் வீடு போல் ஆக்க, அடுத்த இரண்டாவது வருடம் ஸ்ரீதர் பிறந்தான்!
பெரிய குடை கவிழ்ந்தார்போன்ற கும்மிருட்டை ஒரு சிறு அகல் விரட்டுவதைப் போல் வீட்டின் அமைதியை தன் மழலையால் விரட்டி விட்டது குழந்தை சட்டென்று!
மத்தியானம் சாப்பிட வரும் போது ஒரு அரை மணி நேரம் அவனுடன் விளையாடி விட்டுத் தான் சாப்பிட அமர்வார்.வாராது வந்த மாமணி ஆதலால் அவனுக்கு அப்பாவும் செல்லம்..அம்மாவும் செல்லம்!
’அப்பா..அப்பா ஆததிச்சா..அம்மா அதிச்சா..எப்டீ அதிச்சா..பல்தி அதிச்சா’ என்று குட்டிக் கரணம் போட்டு குதூகலம் உண்டாக்குவான், சமயத்திலே!
* * * *
”வந்தாச்சு...சார் வந்தாச்சு வழி விடுங்க..”
வார்டன் வந்தார்.
“என்னாச்சு?”
“ ஒண்ணும் தெரியலே! போன வாரம் தான் வந்தார். வரும்போதே கண்ல சோகம் தெரிந்தது..’இது என்ன சந்தேகம்,எல்லார் வீட்லையும் போல், இவரும் புள்ள, மருமகளுக்கும் ஒத்துக்காமத் தான் இங்க வராருன்னு’ நினைச்சோம். ஆனா, நேத்து நைட்டு வாய் விட்டு அழுத சத்தம் கேட்டது..போய் பாக்கலாம்னா, உடம்பு இடம் கொடுக்கல..கார்த்தால பார்ப்போம்னு படுத்துண்டுட்டேன். கார்த்தாலப் பார்த்தா..இப்படி..”
“தற்கொலையா இருக்குமோ? போலீஸ்க்கு இன்ஃப்ர்ம் பண்ணனுமா?”
”அதெல்லாம் இல்ல..மாஸிவ் ஹார்ட் அட்டாக் டாக்டர் கன்ஃப்ர்ம் பண்ணினார்”
” உறவுக்காரங்க..யாராவது?”
”ஒருத்தரும் இல்லைன்னு தான் சொன்னார்..அந்த டேபிள் மேல் ஒரு காயிதம் இருக்கு..உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டு இருக்கோம்”
“கொண்டாங்க”
அதனை உரத்தக் குரலில் படிக்க ஆரம்பித்தார், வார்டன்.
* * * * * *
(இதன் தொடர்ச்சி அடுத்த 01.07.2011 அன்று வெளியிடப்படும்)

Friday, June 17, 2011

காது!


வர வர வைதேஹிக்கு காது சரியாய் கேட்பதில்லை..
அதுவும் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து எதையும் இரண்டு மூன்று தடவை சொல்ல வேண்டியுள்ளது..
இன்றைக்கு ‘டெஸ்ட்’ பண்ணிப் பார்த்து விட வேண்டியது தான்!
’கன்ஃப்ர்ம்’ ஆனா, சாயங்காலம் இரண்டு பேரும் காய்கறி வாங்கப் போகும் போது, காது டாக்டர்கிட்ட கூட்டிக் கிட்டு போக வேண்டியது தான்..
கடகடவென்று மாடிக்குப் போனேன்..
“ வைது, இன்னிக்கு டின்னர் என்ன?”
பதில் இல்லை!
பெட்ரூம் வந்தேன்.
“ வைது இன்னிக்கு நைட் என்ன பண்ணப் போறே?”
அதற்கும் பதிலில்லை.
ஹாலுக்கு வந்து கத்தினேன்.
“வைதேஹி.. நைட் மீல்ஸா...இல்ல டிஃபனா?”
ம்ஹூம்..
கடைசி சான்ஸ் .சமையல் ரூமில் கேட்டுட வேண்டியது தான்..
சமையல் ரூம் சென்று,வாயையைத் திறக்குமுன்....
வைதேஹி மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்..
“டேய் ராகவ்..உங்கப்பாக்கு நிஜம்மாவே காது ’டர்’ராயிடுத்து..மாடியிலிருந்து டின்னர் என்னன்னு கேட்டார்..இட்லின்னேன்..காதுல விழலப் போல இருக்கு..பெட்ரூம் வந்து கத்தினார்..அப்ப பொங்கல்னேன்..அதுவும் விழலை..இப்ப ஹாலுக்கு வந்து கத்தறார்..
உப்புமான்னேன்.இதுக்கும் ..உங்கப்பாட்டேர்ந்து ‘ நோ ரெஸ்பான்ஸ்’
நல்லாவே ’கன்ஃப்ர்ம்’ ஆயிடுச்சு.. சாயங்காலம் இரண்டு பேரும் காய்கறி வாங்கப் போகும் போது, காது டாக்டர்கிட்ட கூட்டிக் கிட்டு போக வேண்டியது தான்..”

Monday, June 6, 2011

தேவை கொஞ்சம் கரப்பான் பூச்சி!

ஏதோ ஒரு காது குத்தல் விழாவிற்குப் போயிருந்தேன்..அந்த சமயம் ஒரு வயசான தம்பதியர் காலில் விழுந்து எழுந்தான் ஒரு இளைஞன். அத் தம்பதி ‘குழந்தை பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழணும்’ என்று வாழ்த்தி விட்டு அகல, நான் அந்த இளைஞனைப் பிடித்துக் கொண்டேன்.
”அவங்க என்ன ஆசிர்வாதம் பண்ணினாங்க?” - நான்.
”பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழணும்னு” - அவன்.
“அந்த பதினாறு என்னன்னு தெரியுமா?”
“தெரியுமே!”
“சொல்லு”
சொல்லத் தொடங்கினான்..பாதியிலேயே எனக்கு தலை சுற்றியது..பக்கத்திலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டேன்..
இதோ அந்த பட்டியல்!
1. மஸ்ஸாசுஸெட்ஸில் எம்.பி.ஏ.
2. ஹார்வர்டில் பி.ஹெச்.டி.
3. முதல் வருடாந்திர சம்பளம் சுமார் ஐம்பது லட்சம் ரூபாய்.
4. அதுவும் டாலரில்!
5. லாஸ் ஏஞ்சல்ஸில் டபுள் பெட் ரூம் ஃப்ளாட்.
6. சிலிக்கன் வாலி பக்கத்தில் பண்ணை வீடு
7. பென்ஸ் அல்லது ஆடி.லோக்கலுக்கு வோல்ஸ் வேகன்!
8. ஹோனாலுலுவில் ஒரு ஹாலி டே ரிஸார்ட்
9. பஸிபிக் கடல் நடுவில் பத்து பனை மரங்களுடன் ஒரு சின்ன தீவு
10.முதல் டாப் பத்து கம்பெனிகளுக்கு கன்ஸல்டெண்ட்.
11. உலகின் முதல் பணக்கார ஐந்து கம்பெனிகளின் ஷேர்கள்.
12. ஸான் ஹோஸேயில் ஒரு ஹாலிடே ஹோம்!
13. இங்கிலாந்தின் ‘லார்ட்’ பட்டம் நம்ம ஸ்வராஜ் பால் போல்!
14. ஸ்விஸ் பேங்க்கில் கணிசமாய் கரன்ஸி
15. மைசூர் அருகே காஃபி எஸ்டேட்
16. நெய்யாற்றங்கரையில் செட்டி நாட்டரசர் வீடு!
இது எப்படி இருக்கு?
’ஆஃபீஸ் கோயரி’லிருந்து அரசியல் வாதிகள் வரை அனைவருமே குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைப் படுகிறார்கள். அவர்களுடைய இளமைப் பருவம் பணம் என்கிற மாபெரும் அசுரனால் அலைக்கழைக்கப் படுகிறது..என்ன சொல்ல?
’அப்பா, எப்ப கல்யாணம்?’
‘ முதல்ல லைஃப்ல செட்டில ஆயிட்டு தான்’
’...இவன் லைஃப்ல செட்டில் ஆகிறதுக்குள்ள, இவன் லைஃபே செட்டில் ஆயிடுமோ’ன்னு எனக்கு பயம்!
‘ உன் ஆசை நியாயம் தான்..அதுக்குள்ள வயசாயிடுமே அப்பா’
‘ஆனா, ஆகட்டும்’
’வயசானா, எந்த பெண்ணும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா’
‘ ..அப்ப வேண்டாம்..அது சரி..எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்?’
‘ என்ன இப்படி கேட்கிறே? வயசான காலத்துல உனக்கு உடம்பு முடியாமப் போனா, அந்த பொண்ணு ஒரு கால் வயத்து கஞ்சி வைச்சுத் தருமே..’
’... அட அஸத்தே..ஒரு கால் வயத்துக் கஞ்சிக்கா கல்யாணம் பண்ணிண்டாய்’ என்பது போல் அவன் என்னைப் பார்க்க....
அது சகிக்காமல் நகர்ந்தேன், நான்.
ஜப்பானில் இப்போதெல்லாம் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லையாம்..அது போல் இங்கும் ஆகி விட்டால்,ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஆயிரமாக இருந்த நாம், பத்து பதினைந்துக்குள் வந்து விடுவோம்..அப்பா,அம்மா தவிர எல்லா உறவுகளும் போய் விட,உறவுகள் என்ன..மனிதர்களுக்கு பெயரும் போய்..அவன் வலது கை கட்டை விரல் ரேகையை வைத்து ஆளுக்கு ஒரு ’ஆல்ஃபா நியூமரிக்’ யுஐடி நம்பர் ஒன்று கொடுத்து விடுவார்கள்..அப்புறம் ரோபோவிற்கும் நமக்கும் உள்ள இடைவெளி கம்மியாகப் போய்..
என்ன கஷ்டமடா சாமி?
பெண்கள் பாடு இன்னும் மோசம்! நன்றாகப் படித்து, நல்ல வேலை கிடைத்தவுடன் அப்பா VRS ஸில் வந்து விட,அண்ணன் ,தம்பிகள் சோம்பேறிகளாய் ஆகி..அத்தனை
குடும்ப பாரத்தையும் அவளே சுமக்க..சமயத்தில் தன்னை மெழுகுவர்த்தியாய் அவள் நினைத்துக் கொண்டு..தன்னைப் பற்றி ஒரு சுயபச்சாபத்தோடு...வாழ்நாள் முழுவதும் முதிர்கன்னியாய்...
ஆனால் ஒன்று..திருமண விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் பரவாயில்லை என்று நினைக்கிறேன்..சூழ்நிலை சாதகமாய் இருந்தால்,பெண்ணைப் பெற்றவன் ஜாதகக் கட்டை தூக்கலாம்!
அதில் ஒன்று தான் இது!
PEST CONTROL கம்பெனிகள் போல், PEST DEVELOPMENT கம்பெனிகள் நாட்டில்
உருவாகி, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமாய் கரப்பான்பூச்சிகளையும், பல்லிகளையும் சப்ளை செய்தால் இந்த பிரச்னை ஓரளவு தீரும்!
’ திடீர்னு என்ன ஸ்வாமி உளறுகிறீர்?’என்று வாசகன் கேட்க..
’உளறவில்லை ஐயா..லேட்டஸ்ட்டா ட்வீட் ஒன்று பார்த்தேன்..அதுல....’
‘ அதுல?’
‘ நீரும் தான் பாருமே!’
அந்த ட்வீட் இது தான் :
தன் வீட்டு சமையல் உள்ளில், நடமாடும் பல்லி,கரப்பான் பூச்சி,சுண்டெலிகளை வீழ்த்த,ஒரு ஆண் தேவைப்படுவதாலேயே,பெண் திருமணம் செய்து கொள்கிறாள்!

Wednesday, June 1, 2011

சும்மா கிடந்த சங்கை.....

அன்றொரு நாள் சரியான மழை..சூடாக கடை வீதியில் பக்கோடா வாங்கிக் கொண்டு வீடு வந்தேன். வந்ததும், கை,கால் அலம்பி, காஃபியுடன் பக்கோடா பொட்டலத்தை அவிழ்த்தேன். எனக்கு ஒரு பழக்கம். முதலில் பக்கோடா பேப்பரை படிப்பேன்..அப்புறம் தான் பக்கோடா!
அது போல் தான், அம்மா கொடுத்த காஃபி ஆறிக் கொண்டு இருக்க, அந்த பக்கோடா பேப்பரைப் படித்தேன். அதில் இருந்த ஒரு துணுக்கு என்னைக் கவர்ந்தது.அதாவது, திருமணத்திற்கு முன்,மேலை நாடுகளில் பாதாதி கேசம் வரை ’தரோவாக’ ’மெடிக்கல் செக்கப்’ செய்து கொள்வார்களாம்.எனக்கும் அது சரியெனப் பட்டது. திருமணம் நிச்சயம் ஆகி, இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது திருமணம் ஆக! நாமும் அந்த மாதிரி ’மெடிக்கல் செக்கப்’ செய்து கொண்டால் என்ன என்று தோன்றியது.ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆனால், இப்போதே அவர்களிடம் சொல்லி விடலாமே..அனாவஸ்யமாக ஒரு பெண்ணின் பாவத்தைக் கொட்டிக் கொள்ள வேண்டாமே’ என்கிற நல்லெண்ணம் தான் காரணம்!
எப்படா அண்ணா ஆஃபீஸிலிருந்து வருவார் எனக் காத்திருந்து, அண்ணா வந்ததும் “காஃபி குடிச்சுட்டு உடனே வா, சீக்கிரம் ஒரு இடத்திற்குப் போகணும்” என்றேன்.(என்னுடைய நிகழ்வுகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும் நாங்கள் அப்பாவை அண்ணா என்று தான் கூப்பிடுவோம் என்று!)
“ எங்கேடா, அண்ணா வந்ததும், வராததுமா?” - இது அம்மா.
“ வந்து சொல்றேன்” - இது நான்.
போகும் போதே அண்ணாவிடம் சொல்லி விட்டேன்..என்னை ஒரு மாதிரி பார்த்த அண்ணா ஒன்றும் சொல்லவில்லை.
எங்கள் தெருக் கோடியில் உள்ள டாக்டர் டிஸ்பென்ஸரிக்குச் சென்றோம்.
என் முறை வந்தது.
டாக்டரிடம் “ எனக்கு திருமணம் நடக்க இருக்கின்றது. அதற்கு முன், ஒரு ‘மெடிக்கல் செக்கப்’ செய்து கொள்ளலாம் என்று வந்திருக்கிறேன்’ என்று நான் சொல்ல, அவரும், ஒரு அரை மணி நேரம் முன்பு, அண்ணா பார்த்த மாதிரியே என்னைப் பார்த்தார்!
இருந்தாலும் டாக்டர் அல்லவா? உடனே சமாளித்துக் கொண்டு, “குட்..குட்..அப்படித் தான் இருக்கணும்” என்று சொல்லி விட்டு, “ நர்ஸ்” என்று ஒரு கூச்சல் போட, அதிரூப சுந்தரியாகவும்,அவலட்சணமாக இல்லாமலும் சற்று சுமாரான தோற்றத்துடன் ஒரு நர்ஸ் அங்கு பிரசன்னமானார்!
”சாருக்கு எல்லா டெஸ்டும் எடுக்கணும்.”
ப்ளட்?
ஷுகர்?
கொலஸ்ட்ரால்?
சால்ட்?
ஓகே!
ஓகே!!
ஓகே!!!
டாக்டருக்கு பரம திருப்தி..எனக்கும் மகிழ்ச்சி!
”இருங்க ஒண்ணே ஓண்ணு தான்!”
திடீரென்று விலாவில் ஒரு அழுத்து அழுத்தினார். பிறகு கேட்டார்.
“ வலிக்குதா?”
அழுத்தினால் வலிக்காதா?
“ வலிக்கிறது” என்றேன்.
சற்றே பரபரப்பான டாக்டர்,இன்னும் சற்று அழுத்தி,” இப்ப” என்றார்.
வலித்தது..
“வலிக்கிறது”
இன்னும் கூடுதலாய் பரபரப்பான, டாக்டர் வேறோருவரிடம் ஃபோனில் பேசினார்..உடனே அட்மிட் பண்ணிடுங்க” என்றெல்லாம் அவர் பேச்சில் அடி பட்டது
“என்ன சார்” என்று கவலையுடன் நானும், அண்ணாவும் ஒரு சேரக் கேட்டோம்.
“ சார் உங்க பையனுக்கு ’க்ரானிக் அப்பெண்டிசிடீஸ்’ இருபத்தி நாலு மணி நேரத்துக்குள்ள ஆப்பரேஷன் பண்ணியாகணும்..இல்லாட்டி..அவ்வளவு தான் சொல்ல முடியும் இப்ப ”
கனத்த இதயத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்..வீடு வரும் வரை அண்ணா ஒன்றும் பேசவில்லை!
வீட்டுக்கு வந்தவுடன் சரியான மண்டகப் படி!
’இந்த பைத்தியக் கார ஆட்டத்திற்கு நான் வரல்லே’ என்று அண்ணா சொன்னதினால், நான் மட்டும் இந்த டாக்டர் REFER செய்த அந்த ஸ்பெஷலிஸ்ட்டிடம் சென்றேன், சோகமாய்!
பத்து நிமிடம் காத்திருத்தல்!
பிறகு அழைப்பு.
“வாங்க”
“டாக்டர்... நான் ...இந்த ..”
“கொஞ்சம் பேசாம இரு, எனக்கு எல்லாம் தெரியும்” என்ற இந்த ஸ்பெஷலிஸ்ட் அந்த டாக்டர் பண்ணிய மாதிரியே விலாவை அழுத்தினார்.
“வலிக்குதா?”
வலித்தது.இருந்தாலும் சொன்னேன்.
“வலிக்கவில்லை”
உதட்டைப் பிதுக்கிக் கொண்ட அவர் இன்னும் பலமாக குத்தினார்.
“இப்ப?”
“ஊஹூம்”
இன்னும் பலமாய்....
“இப்ப சொல்லுங்க?”
கன்னா பின்னாவென்று வலித்தது.வலியில் அழுகையே வந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சொன்னேன்.
“வலிக்கவே இல்லையே!”
டாக்டருக்கு பிரமாதமான கோபம். என்னை வைத்துக் கொண்டே,அந்த டாக்டரை ஃபோனில் திட்ட, ஒரு வழியாய் வெளியே வந்து விழுந்தேன்!
அதற்குப் பிறகு?
அதற்குப் பிறகா??
அதற்குப் பிறகு தான் உங்களுக்குத் தெரியுமே.. நான் எப்போது பக்கோடா வாங்கினாலும், அது சுற்றியுள்ள பேப்பரை கண்ணை மூடிக் கொண்டு ’டஸ்ட் பின்’னில் போட்டு விடுவேன் என்பது!!!