Monday, September 13, 2010

தாழ்ந்தது தட்டு!!


(போஜ ராஜனின் அரசவை.எல்லாரும் அவரவர் ஆசனத்தில் வீற்றிருக்க..வாசலில் சிறு சலசலப்பு)
அவர் :மன்னவனைப் பார்க்க வேண்டும்நான்
காவலன்: தாங்கள் யார்?
( போஜராஜனின் அரண்மனையில் சாதாரண காவல் காரனுக்குக் கூட மரியாதை தெரிந்திருக்கிறது)
அவர் : சொன்னால் தான் விடுவீர்களோ?
காவலன் : ஆம்..தாங்கள் யாரோ?
அவர் : பார் புகழும் பவபூதி வந்திருக்கிறேன்
என்று போய் சொல், உன்
மன்னவனிடம்.
(காவலன் செல்கிறான்..சொல்கிறான்)
போஜன் : வரச் சொல்!
காவலன் : தங்களை வரச் சொல்கிறார், எம்
மா மன்னர்.
போஜன் : (எழுந்து நின்று) வாருங்கள்
ஆசனத்தில் அமருங்கள்..
பவபூதி : மன்னவனும் நீயோ..?
வள நாடும் உனதோ?
அமர வரவில்லை மன்னா,
சமர்புரிய வந்திருக்கிறேன்
சொற்போர் புரிய உம் அரசவையில்
ஆள் இருந்தால் எம்மிடம் சொல்
அதன் பின் அமர்வோம் யான்!!

(போஜனுக்கு வியப்பு! அதனினும் வியப்பு
அவையோர்க்கு!! அந்த அவையில் இது வரை யாரும் இவ்வளவு அநாகரீகமாய் நடந்து கொண்டதில்லை. வந்தவன் விருந்தாளி என்பதால் மன்னவனும் பொறுத்துக் கொள்கிறான்)
(மிஹிரன்...பாணன்...ஆர்ய பட்டன்..மகுடத்தில் சூடிய மாமணி போல் காளிதாஸன்..போஜராஜன் அவையில் ஒவ்வொருவரும் மஹா ரத்னங்கள்.எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். முடிவில் அனைவரும் காளி தாஸனைப் பார்க்கிறார்கள். மன்னனும் 'என்ன சொல்கிறாய்?' என்பது போல் காளி தாஸனைப் பார்க்க, அவன் ஆசனத்திலிருந்து எழுந்து கொள்கிறான்.)
காளிதாஸன் : மன்னனின் ஆக்ஞை அவ்வாறு
இருப்பின் நான் வருகிறேன்
வாதிற்கு.
பவபூதி : எப்போது?
போஜன் : சற்று பொறுங்கள் புலவரே!
அமருங்கள் ஆசனத்தில்!
(வருகின்ற சித்ரா பௌர்ணமி அன்று வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப் படுகிறது)
************************
அன்று சித்ரா பௌர்ணமி! ஆவலுடன் அரசவை கூடுகிறது. எல்லார் முகங்களில் ஆவல் கொப்பளிக்கிறது.
பவபூதி: நான் தான் முதலில் ஆரம்பிப்பேன்.
அரசன்: மெத்த சரி.
பவபூதி கவிதை பாட ஆரம்பிக்கிறான். அப்படியே பொழிகிறது. அம்மன் மேல் ஒவ்வொரு சர்க்கமாக அத்தனையும் கேட்பவர் காதுகளில் சர்க்கரையாய்..தேனாய்...தீம் பழமாய்...கற்கண்டாய்....
சரக்கு இருப்பதினால் தான் இவ்வளவு செருக்கு என்று மனம் தெளிகின்றனர், அவையோர்.
அடுத்து காளிதாஸன்...
அனைவரின் பார்வையும் காளிதாஸன் மேல் குத்திட்டு நிற்கிறது.
ஒரு சிறிய மௌனம்..
மன்னவன் பயந்தான்.எங்கே நம் சபை அவமானப் பட்டு விடுமோ என்று அல்ல!
காளிதாஸனால் முடியுமா என்கிற சஞ்சலம் அவனுள்.
மன்னவனின் கணிப்பு தவிடுபொடியாவது போல கணீரென்று காளிதாஸன் வாயிலிருந்து வந்தன வார்த்தைகள்..
கவி எழுத காளிதாஸனுக்குச் சொல்லியா தர வேண்டும்?
மடகு திறந்து வெள்ளம் வருவது போல் ப்ரவஹித்து விழுந்த வார்த்தைகள்..
அதில் உள்ள கவி நயம்!!
இருந்தாலும் எது உயர்வு எது தாழ்வு என்று அறுதி யிட்டுக் கூற முடியவில்லை, அரசனால்! அவையோரால்!!
'முடிவு நாளை, சபை கலையலாம்'
அப்போதைக்கு தப்பித்துக் கொண்டான், போஜன்!

மன்னவனுக்கு ஒரே சஞ்சலம்! 'எப்படியடா இதைத் தீர்த்து வைக்கப் போகிறேன்' என்கிற மனக்கவலை !!
உறக்கமும் வரவில்லை.
" தேவி நீயே துணை"
மனத்துள் ஒரு பீடம் வைத்து,அதில் தேவியை ஆவாஹனம் செய்து, காலில் விழுந்தான்!
தேவி அவன் கனவில் வந்தாள் !!
************************
விடிந்தது.
மன்னனின் ஆணைகள் எல்லாமே விசித்திரமாய் இருந்தது.
' கூட்டம் அரண்மனையில் வேண்டாம். எல்லாரும் உஜ்ஜயினி காளி கோவிலுக்கு வாருங்கள்'
' யாரங்கே?'
' மன்னவா?'
' ஒரு தராசு கொண்டு வரச் சொல்!'
ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
தராசும் வந்தது!
மன்னன் தராசை உஜ்ஜயினி காளி தேவி முன்பு நிமிர்த்திப் பிடித்துக் கொண்டான்.
' பவபூதி எழுதிய பாட்டின் ஓலைச் சுவடிகளை வலது தட்டில் வை'
'காளி தாஸன் ஓலைச் சுவடிகளை
இடது தட்டில் வை'
இரண்டு ஓலைச் சுவடிகளும் வைக்கப் பட்டன.
அப்போது காளி தாஸன் தட்டுத் தாழ்ந்தது.
பிரமிப்புடன் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, கண் சிமிட்டும் நேரத்தில் ஒரு அதிசயம்!
ஒரு கணம்!
ஒரு கணம் தான்!!
தேவி தனது வலது சுண்டு விரலால், வலது காதில் சூட்டப்பட்ட செங்குவளை மலரின் தேன் துளி எடுத்து, பவபூதி தட்டில் வைக்க, சட்டென்று காளிதாஸன் தட்டுக்கு சமமாயிற்று, அது!
பவபூதிக்கு உடம்பு அதிர்ச்சியினால் தூக்கிப் போட்டது!
" தெய்வமே!!!"
காளி தாஸன் காலில், தன் கர்வம் பங்கப் பட்டுப் போய், நெடுஞ்சாண்கிடையாய் அஸக்தனாய் விழ,
காளி தாஸனுக்கு ஒன்றும் தெரியவில்லை,
பாவம்!
கைகள் இரண்டையும் மேல் தூக்கி ஒரு பித்தனைப் போல் தேவி மீது கவிதை மழை பொழிந்து கொண்டிருந்தான் !
***************

24 comments:

Chitra said...

முதல் முதலில் இன்றுதான் அறிந்து கொள்கிறேன். கர்வம் கூடாது என்பதற்கு நல்ல உதாரணம்.

வானம்பாடிகள் said...

சின்னப்ப படிச்சது:)

DrPKandaswamyPhD said...

நன்றாக சொல்லப்பட்ட நீதி.

RVS said...

ஆர்.ஆர்.ஆர். சார் அருமை. அகங்காரத்தின் அழிவு, தெய்வ நம்பிக்கை, திறமை என்று எல்லாவற்றையும் சொல்லும் கதை. நன்றாக இருந்தது.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

VAI. GOPALAKRISHNAN said...

ஆஹா! அருமையான விறுவிறுப்பான ஒரு நீதிக்கதையை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய நீரே, விஷய ஞானமுள்ள பவபூதியாகவும், காளியின் அருள் பெற்ற மஹாகவி காளிதாஸனாகவும் எங்களுக்கு இன்று, இந்த ப்ளாக் மூலம் காட்சியளிப்பதும், அந்த காளி தேவியின் அருளல்லவோ ! பகிர்வுக்கு நன்றி !!

ரிஷபன் said...

படித்த கதைதான்! ஆனால் நினைவுக்குக் கொண்டு வந்த சரளமான எழுத்து. கர்வம் தவிர் என்று பொட்டில் அடித்த மாதிரி சொல்லப் பட்ட நயம்.

சின்னபாரதி said...

வணக்கம் ஆர்.ஆர்.ஆர் . பல மலர் கண்டெடுத்த தேன்துளிகள் போல் நிறைய படிக்கிறீர்கள் சிறப்பான பதிவுகளைத்தர ...

வாழ்த்துக்கள்....

பத்மநாபன் said...

எவ்வளவு பெரிய பண்டிதனாக இருந்தாலும் , தன்னடக்கம் முக்கியம் என்பதை , மஹாகவி காளிதாஸரின் செய்தி கொண்டு அருமையான ஓரங்க நாடகமாக அரங்கேற்றி உள்ளீர்கள்....
இதைத்தான் , கலைவாணி காளிதாசரின் நாவில் தேன் சொட்டு இட்டதாக சொல்வார்களா..... அருமை.

Muniappan Pakkangal said...

Senkuvalai malarin then thuli ewduthu-nice story Aaranya Nivas.

மோகன்ஜி said...

தன்னடக்கத்தின் தேவையை விளக்கும் மிக சிறப்பான
கதை இது. சுவாரஸ்யமாய் எழுதியிருக்கிறீர்கள். நம் கலாச்சாரத்தின் மேன்மையை விளக்கத்தான் எத்தனை முத்துக்கள்?!

vasan said...

கேட்ட‌றியா புதுக் க‌தை. இறுமாப்பால் க‌வியில் இனிமை குறைந்துவிட்ட‌தை
சூடிய ம‌ல‌ரின் தேனேடுத்து தேவி நிரை(ற‌)வு செய்தாது இனிமை.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஆமாம். கர்வம் கூடாது,சித்ரா மேடம்!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

அட..இந்த வார்த்தை சூப்பரா இருக்கே..’சின்னப்ப’ நானும் இதை USE பண்ணிக்கட்டுமா, வானம்பாடிகள்?
உங்க பதிவுக்குப் போனா நிறைய புதுசு, புதுசா வார்த்தைங்க கிடைக்குது. மிக்க நன்றி

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

கந்தசாமி சார். உங்களுக்கு முன்னாடி நானெல்லாம் ஜுஜுபி!!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நீதிக்கதை. பகிர்வுக்கு நன்றி.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

RVS சொன்னது:


ஆர்.ஆர்.ஆர். சார் அருமை. அகங்காரத்தின் அழிவு, தெய்வ நம்பிக்கை, திறமை என்று எல்லாவற்றையும் சொல்லும் கதை. நன்றாக இருந்தது.

மிக்க நன்றி RVS!!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

வை. கோபாலகிருஷ்ணன் சொன்னது:

”ஆஹா! அருமையான விறுவிறுப்பான ஒரு நீதிக்கதையை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய நீரே, விஷய ஞானமுள்ள பவபூதியாகவும், காளியின் அருள் பெற்ற மஹாகவி காளிதாஸனாகவும் எங்களுக்கு இன்று, இந்த ப்ளாக் மூலம் காட்சியளிப்பதும், அந்த காளி தேவியின் அருளல்லவோ ! பகிர்வுக்கு நன்றி !!”

ரொம்ப பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்கிறீர்கள்.என் மேல் உள்ள அன்பினால் தான் சொல்கிறீர்கள் என்று தெரியும்! யதார்த்தத்தில் நான்
அவ்வளவு தகுதியானவன் அல்ல!!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ரிஷபன் சொன்னது:
“படித்த கதைதான்! ஆனால் நினைவுக்குக் கொண்டு வந்த சரளமான எழுத்து. கர்வம் தவிர் என்று பொட்டில் அடித்த மாதிரி சொல்லப் பட்ட நயம்.”
- மிக்க நன்றி ரிஷபன் அவர்களே!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

சின்ன பாரதி சொன்னது:
“வணக்கம் ஆர்.ஆர்.ஆர் . பல மலர் கண்டெடுத்த தேன்துளிகள் போல் நிறைய படிக்கிறீர்கள் சிறப்பான பதிவுகளைத்தர ...

வாழ்த்துக்கள்..”

கொஞ்சம் தரமாகக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை தான் பாரதி!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

பத்ம நாபன் சொன்னது:
“எவ்வளவு பெரிய பண்டிதனாக இருந்தாலும் , தன்னடக்கம் முக்கியம் என்பதை , மஹாகவி காளிதாஸரின் செய்தி கொண்டு அருமையான ஓரங்க நாடகமாக அரங்கேற்றி உள்ளீர்கள்....
இதைத்தான் , கலைவாணி காளிதாசரின் நாவில் தேன் சொட்டு இட்டதாக சொல்வார்களா..... அருமை.”

- உண்மை தான் மிஸ்டர் பத்மநாபன்!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

முனியப்பன் சார் சொன்னது:
“Senkuvalai malarin then thuli ewduthu-nice story Aaranya Nivas”

--ரொம்ப தேங்க்ஸ்!!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

மோகன்ஜி சொன்னது:
“ தன்னடக்கத்தின் தேவையை விளக்கும் மிக சிறப்பான
கதை இது. சுவாரஸ்யமாய் எழுதியிருக்கிறீர்கள். நம் கலாச்சாரத்தின் மேன்மையை விளக்கத்தான் எத்தனை
முத்துக்கள்!!”

நம் கலாச்சாரம் தொன்மையானது! மேன்மையானது, ஸார்!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

vasan சொன்னது:
“கேட்ட‌றியா புதுக் க‌தை. இறுமாப்பால் க‌வியில் இனிமை குறைந்துவிட்ட‌தை
சூடிய ம‌ல‌ரின் தேனேடுத்து தேவி நிரை(ற‌)வு செய்தது இனிமை.”
தேவிக்குத் தான் தன் குழந்தையின் மீது எத்துணை பாசம், வாசன் அவர்களே !!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

வெங்கட் நாகராஜ் சொன்னது:
“நல்ல நீதிக்கதை. பகிர்வுக்கு நன்றி.”
அட..வாங்க, வெங்கட் நாகராஜ்!