Tuesday, August 17, 2010

ஒளவை சொன்னது!


ஸ்வாமிஜி வருகிறாராம்!
ஊர் பூராவும் இதே பேச்சு!!
ஸ்வாமிஜி ஒரு வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். அரசாங்க உத்யோகத்தை..அருமை மனைவியை..அழகுக் குழந்தைகளை.. ஒரு நொடியில்...ஒரே நொடியில் ... துறந்து... துறவியானவர்!
அவர் சொன்னது சொன்னபடி நடக்கிறது.எதையும் யூகமாய் சொல்வது அவர் வழக்கம்!
' சாமி குழந்தை இல்லை' என்று ஒருவன் வந்தான். 'தெற்கே போ' என்றார். ராமேஸ்வரம் சென்று விட்டு வந்தான். அடுத்த வருடம் குழந்தை பிறந்தது!
இன்னொருவன் ' சாமி என்ன தொழில் செய்வது' என்று அவரிடம் ஆலோசனைக் கேட்க, 'மண்ணிலே போடு காசை' என்றார். இன்று அவன் ஒரு பிரபல REAL ESTATE BUSINESS MAN!
நல்ல நிறம்... மழுங்க மொட்டை அடித்து..பளபளவென்றிருக்கும் தலை..தீட்சண்யமாய் அருளைப் பொழியும் கண்கள்...ஒற்றை நாடியான உடம்பு...துவராடை...எல்லாவற்றுக்கும் மேல், அவரைப் பார்த்தவுடனே எழுந்து நின்று கை கூப்ப வைக்கும் கம்பீரம்..!
பழங்கள்..கல்கண்டு என்று கார் கொள்ளாமல், வாங்கிக் கொண்டு..அவர் பாதங்களில் வைத்து விட்டுப் போவார்கள்.. பக்தர்கள்..!
ஏறெடுத்தும் பார்க்காமல் அத்தனையையும் பக்கத்திலுள்ள குடிசைகளுக்கு விநியோகம் செய்து விடுவார்,அவர்!
பிரதி சாயந்திரம் அவருடைய சொற்பொழிவைக் கேட்க மக்கள் திரளாக வருவார்கள். தமிழ்..ஆங்கிலம்..சமஸ்க்ருதம் என்று மூன்று மொழிகளிலும் சரளமாய் பேச வல்லவர்!
அவருடைய பேச்சு சாதாரண மனிதனுக்கும் புரியும் அளவில் எளிமையாக இருக்கும். அதற்குப் பிறகு தீர்த்தம் கொடுப்பார்.
அவரிடம் தீர்த்தம் வாங்குவதற்கு மக்கள் 'க்யூ' வில் வருவார்கள். தீர்த்தம் வாங்கிக் கொண்டு குறைகளைச் சொல்வது வழக்கம்.
அவரும், அவரவர்களுக்குத் தகுந்த யோசனைகளைச் சொல்லி ஆறுதல் அளிப்பார்.
அப்படித் தான் ஒரு நாள் தீர்த்தம் கொடுக்கும் போது.....
" சாமி...வூட்ல சொன்ன பேச்சு கேட்க மாட்டேங்குது..எதுக்கெடுத்தாலும் சண்டை...ரொம்பவும் கஷ்டமாயிருக்கு..நீங்க தான் ஒரு வழி சொல்லணும்...."
காலில் விழுந்து குலுங்கி...குலுங்கி..அழுதான் ஒருவன்..
அவனவன் பெண்ணுக்கு வரன் குதிரவில்லை...பையனுக்கு அட்மிஷன் கிடைக்கவில்லை..என்று தான் வருவான்.
இப்படியும் ஒரு குறையா?
அங்குள்ள அனைவருக்கும் ஆச்சர்யமான ஆச்சர்யம்!
சரெலன்று கால்களை இழுத்துக் கொண்ட ஸ்வாமிஜி...
' பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை யாமானால்,
எத்தாலும் கூடி வாழலாம்..சற்றே
ஏறுக்கு மாறாக நடப்பாளாகில்..
கூறாமல் சன்யாசம் கொள்..'
என்று கணீரென்று ஒளவை பாடிய பாடலை, கேட்பவர்கள் உள்ளம் உருகுமாறு பாடத் தொடங்கினார்.
அந்த கூட்டத்தில் அவர் ஒருவருக்கு மட்டும் தான் அவனுடைய வேதனை புரிந்தது.
பூர்வாஸ்ரமத்தில் பெண்டாட்டியின் தொல்லை தாங்க முடியாமல் தானே புஜங்க ராவ் என்கிற சாதாரண மனிதர்
புருஷோத்தம ஸ்வாமிஜியாக மாறினார்!!!

9 comments:

வசந்தமுல்லை said...

வீட்டுக்கு வீடு உள்ள பிரச்னைகளை, அதுவும் கணவன் மனைவிக்குள்ள சண்டைகளுக்காக சாமியாரானால், இந்த உலகம் முழுவதுமே சாமியார் மடங்கள் நிறைந்ததாக இருக்கும்.
வேண்டாமே! இந்த சண்டைகள்! ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்ந்தால் அது எவ்வளவு இன்பமான இல்லறமாக இருக்கும்.

Anonymous said...

வீட்டுக்கு வீடு உள்ள பிரச்னைகளை, அதுவும் கணவன் மனைவிக்குள்ள சண்டைகளுக்காக சாமியாரானால், இந்த உலகம் முழுவதுமே சாமியார் மடங்கள் நிறைந்ததாக இருக்கும்.
வேண்டாமே! இந்த சண்டைகள்! ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்ந்தால் அது எவ்வளவு இன்பமான இல்லறமாக இருக்கும்.

Muniappan Pakkangal said...

Nice practical post Ramamoorthy.

VAI. GOPALAKRISHNAN said...

சண்டை பூசலுடன் கூடிய இல்வாழ்க்கையில் தானய்யா காரசாரமும் விறுவிறுப்பும் இருக்கும். அங்கு தான் சுயம் வெளிப்படும். பல்வேறு தொல்லைகளுடன், பொறுமையாக, வீட்டிலேயே தாமரை இலைத் தண்ணீர் போல, எதிலும் ஒட்டாமல், காலத்தை ஓட்டிக்கொண்டு, ஏதோ நமக்கு வாய்த்து இவ்வளவு தான் என்று, மனப்பக்குவம் அடைந்து இருப்பவன் தான், உண்மையிலேயே சாமியார். சாமியார் உடையணிந்து, மனைவி மக்களையும், குடும்பத்தையும் அம்போ என விட்டுவிட்டுச் செல்பவன் போலிச்சாமியார், என்பது என் கருத்து.ந்னீர் போல இ ரௌ

பத்மநாபன் said...

சரேலென்று கால் எடுத்தது நல்ல நகைச்சுவை.

பல நாட்டு காரர்களின் வாழ்க்கைமுறைகளை கண்டு கேட்டதை வைத்து சொல்கிறேன்..நம் நாட்டின் இல்லற கலாச்சாரம் போல் மன அமைதி கொடுப்பது எதுவும் இல்லை. இதில் அய்யனது கூற்றுதான் உண்மை. இல்லறமல்லது நல்லறமன்று.

ரிஷபன் said...

அவரை மாட்டி விட்டுட்டீங்களே இப்படி.. மாமிக்குத் தெரிஞ்சு போய் தேடிகிட்டு வரதா தகவல்.

Vandhana said...

Ha ha!!!
very funny!!
gud one 2 :)

vasan said...

"ஔவை சொன்ன‌து,
அது, அர்த்த‌முள்ள‌து"
சும்மாவா சொன்னான்,
அனுப‌வ‌ஸ்த‌ன்,க‌ண்ண‌தாச‌ன்.

மனோ சாமிநாதன் said...

“பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை யாமானால்,
எத்தாலும் கூடி வாழலாம்..சற்றே
ஏறுக்கு மாறாக நடப்பாளாகில்..
கூறாமல் சன்யாசம் கொள்..'

ஒரு பெண் கவிஞர், அதுவும் ஒளவையார் இப்படிச் சொல்லியிருப்பதைக்குறித்து நானும் சில வருடங்களுக்கு முன் ஒரு தர்க்க விவாதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஒரு ஆணுக்குத்தான் அவர் இந்த புத்திமதி சொல்லியிருக்கிறார்.. ‘பெண்ணிடம் ‘ கூறாமல் சந்நியாசம் கொள்’ என்று சொல்லவில்லை. காரணம், எப்படிப்பட்ட நிலைமைகள் இல்லறத்தில் இருந்தாலும் சகிப்புத்தன்மையுடன் ஒரு பெண் இருந்தாக வேண்டும் என்ற இல்லற தர்மம் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

சிறுகதையை சுவைபட எழுதியிருக்கிறீர்கள்!