Sunday, January 31, 2010

குடும்பத் தட்டுப்பாடு !!


அன்னையோடு அறுசுவை
உணவு போம்!
அரும் தந்தையோடு,
அறிவு போம்!
முதியோர் இல்லத்தில்,
முடங்கிக் கிடக்கும்,
பாட்டன்,பாட்டியோடு,
பாசம் போம்!
அத்தை,மாமனோடு,
அன்பு போம்!
மாமன், மச்சானோடு,
மகிழ்ச்சி போம்!
அக்காள்,தங்கை...
உறவு போம்!
அண்ணன்,தம்பி...
உறவு போம்!
அனைத்தும் போம்...
போம்..போம்..
அற்புதமாய் நாம்
மட்டும் இங்கு
இருந்து கொண்டு...
முழங்குவோம்!
" நாம் இருவர்..
நமக்கு எதுக்கு ஒருவர்?"
என்று !!!!!!!!!

Friday, January 29, 2010

சில பழமொழிகளும்...சில புது மொழிகளும்...


" சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்", "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்" போன்ற
பழமொழிகளின் உள் அர்த்தம் தெரியும். ஆனால் "ஊரான் பிள்ளயை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழிக்கு நண்பர் ஒரு புது வித அர்த்தம் சொன்னார்.அதாவது ஊரான் பிள்ளை என்பது மனைவியாம். வேறு ஒருவரின் பிள்ளை தானே அவர்! அவரை மகிழ்ச்சியாய் வைத்திருந்தால், அவர் வயிற்றில் வரும் தன் பிள்ளை நன்றாக வளருமாம் ! வாஸ்தவம் தானே !!
கூடவே அவர் கேள்வி ஒன்றையும் எழுப்பினார். " சிவ பூஜையில் கரடி நுழைந்தாற்போல" என்ற பழமொழிக்கு அர்த்தம் கேட்டார். சிவ பூஜையில் கரடி தான் நுழையணுமா..சிங்கம், புலி, நாய்,நரி எல்லாம் நுழையக்கூடாதா...சரி.. விஷ்ணு பூஜையில் ஏன் அந்த கரடி நுழையக்கூடாது என்று ஏகப்பட்ட கேள்விகள்... விட்டால் போதும் என்று ஓடி வந்து விட்டேன். யாராவது அந்த பழமொழிக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லி என்னைக் காப்பாற்றுங்களேன்...!
இப்போது ..புது மொழியைப் பார்ப்போம்! புது மொழி என்று ஒன்றும் இல்லை. நாம் கேள்விப் படாத வார்த்தையெல்லாம் புது மொழிதான்!
தஞ்சாவூர் பக்கத்தில் மோடுமுட்டி என்று சொல்வார்கள். மோடு முட்டி என்றால் என்ன என்று சத்தியமாக எனக்குத் தெரியாது. ஆனால் அது ஒருவனை உயர்த்திச் சொல்லும் வார்த்தை இல்லை
என்ற அளவுக்குத் தெரியும். " அவன் ஒரு சரியான மோடுமுட்டி" என்றால் முட்டாளா.. ஃப்ராடா...
பொறம்போக்கா...ஊஹும்...ஒன்றும் தெரியவில்லை. ஆனால், அவ்வளவு நல்லவன் அல்ல... நம்பிக்கையானவன் அல்ல என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
அது போல இன்னொரு வார்த்தை. ஆபீசில் சீனிவாசன் என்பவர் வழுவட்டை என்று அடிக்கடி
சொல்வார். முதலில் நான் கொழக்கட்டை என்று தான் நினைத்தேன். அப்படி சொல்லப் படும் நபர் ரொம்ப ஸ்வீட்டாக பேசுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் தான் தெரிந்தது அது வழுவட்டை என்று. கொழுக்கட்டை தெரியும்.. வழுவட்டை என்றால் என்ன என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டேன். தலைவலி வந்தது தான் மிச்சம்!
சில மாவட்டங்களில் டம்ளர் என்று சொல்வார்கள். அதையே வேறு சிலர் லோட்டா என்று சொல்வார்கள். அது என்ன லோட்டாவோ..எந்த மொழியில் இருந்து வந்தது என்று தெரியவில்லை. சில பேர் மில்லில் போய் மாவறைத்துக் கொண்டு வந்தேன் என்று சொன்னால்,
வேறு சிலரோ மாவு திரித்துக் கொண்டு வந்தேன் என்று சொல்வார்கள்.
தென் மாவட்டங்களில் "ஆக்கங்கெட்ட கூவே" என்று யாரையாவது யாராவது திட்டிக் கொண்டிருப்பார்கள். இந்த மோடுமுட்டி,வழுவட்டை இவற்றோடு ஒப்பிடும்போது சற்று harsh
ஆன வார்த்தை அது! ஆனால் நான்-வெஜ் வார்த்தையில்லை!!
தருமமிகு சென்னையில் அடிக்கடி கசுமாலம் என்கிற வார்த்தை அநாயாசமாக அடிபடும். அது கஸ்மலம் என்கிற சமஸ்க்ருத வார்த்தையிலிருந்து மருவி வந்தது. "கஸ்மலம் பின்ன தந்தம்" என்று சொல்வார்கள். கஸ்மலம் என்றால் அரதப்பழசு என்று அர்த்தம். அதை திரித்து கஸ்மாலமாக்கி நம்மூர் ஜாம்பஜார் ஜக்குகளும்...சல்பேட்டா ராணிகளும்.. அட எழவே.. இது என்னடா புது வார்த்தை சல்பேட்டா...????
தலையை சுத்துது ...ஆள விடுங்க சாமி!!!

----- 0 ------

Saturday, January 23, 2010

விட்டு விடுதலையாகி....


அந்த ஃபைல் என்னாச்சு?
' ப்ரபோசல்' அனுப்பிச்சாச்சா..
சார்..'கார்ப்பரேட் அப்ரூவல்' வேணும்...
பேங்குக்கு போயிடுச்சு...வாங்கிக்கலாம்..
அட்வான்ஸ் செட்டில் பண்ணிடுங்க..
மார்ச் வந்தாச்சு...
ஓலை வந்தா என்ன கோச்சுக்கக்கூடாது..
அப்பா...இனிமே இதெல்லாம்
கிடையாது...
ஆஹா.....
இன்னிக்கு நாம ரிடயர்ட் ஆயாச்சு!!
முகத்தில் ஒரு சந்தோஷம் !!!
ஒரு பிக்கல்..பிடுங்கல் இல்லை...
இனிமேல் ஜாலி தான்...
இருந்தாலும்....
மனதுக்குள்
சின்னதாய் ஒரு நெருடல்....
அது என்ன ????

( அலுவலக நண்பர் ஒருவர் retired ஆனார், நேற்று. அதன் பாதிப்பு இந்த கவிதை)

கருப்பு நிறத்தில் ஒரு பலூன்


அந்த கிராமமே விழாக் கோலம் பூண்டது போல எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி.எல்லா வீடுகளிலும் பெரிதாக கோலம் போட்டு, மத்தியில் பூசணிப்பூ வைத்திருந்தார்கள்.மைக் செட் போட்டு, ஆசைப் பட்டவர்கள் எல்லாம் ஹல்லோ..ஹல்லோ என்று நொடிக்கு ஒரு தரம் கத்தினார்கள். கிராமத்து வாலிபர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, பூக்களால் தோரணம் கட்டினார்கள்.
ஒரு பெரிய ஆல மரம்,நிறைய விழுதுகளுடன். அதன் அடியில்
வட்ட வடிவில் ஒரு பெரிய திண்ணை. அங்கு தான் ஊர் பஞ்சாயத்து
நடக்கும். அது வரைக்கும் தான் பேருந்து வரும். அந்த இடத்திற்கு ஆலமர ஸ்டாப் என்று பெயர்! அந்த திண்ணைக்குக் கீழே நாலைந்து
ஃபோல்டிங் சேர்கள். அதில் இரண்டு சேர்களில், பெரிய ரோஜா
மாலைகள் காத்துக் கொண்டிருந்தன.
மணியக் காரர், ஊர் கணக்குப்பிள்ளை, தலையாரி என்று கிராம அரசாங்க அதிகாரிகள் ஒரு வரிசையிலும், ஊர் பெரியவர்கள் கிராமணி தாத்தா, சிவன் கோவில் குருக்கள், போஸ்ட் மாஸ்டர் வெங்கிட்டு ஐயர், ஃபாதர் பெர்டிணாண்ட் என்று மறு வரிசையிலும், நிற்க, இவர்களுடன் ஒட்டியும்,ஒட்டாமலும் சின்னாஞ்ஞான் நின்றிருந்தான். அவன் முகத்தில் பெருமிதம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
'சின்னாஞ்ஞான் , இப்படி முன்னாடி வாங்க..' - ஃபாதர்.
' சின்னாஞ்ஞான் இப்படி முன்னால வாப்பா..'
ஃபாதர் கூப்பிட்டதும், வேண்டாவெறுப்பாக கூப்பிட்டார் மணியக்காரர். இவர்கள் இருவரும் கூப்பிட்டதில் தன்னுடைய
இருப்பையும் நிலை நாட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில்,
வெங்கிட்டு ஐயர் சொன்னார்:
" முன்னால வாப்பா சின்னாஞ்ஞான். இன்னிக்கு ஊரில நீ தான்
ஹீரோ. நீ யாரு.. கலெக்டரோட அப்பாவாக்கும்"
சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரிக்க, அவர் மீது அபிமானம் கொண்டவர்களும் அப்போது சிரித்தார்கள்!
மிகச்சாதாரண நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் சின்னாஞ்ஞான் இன்று கிராமத்துப் பிரமுகர் அளவுக்கு உயர்ந்து விட்டான்.அவனை இந்த அளவிற்கு உயரச்செய்தது, அவனுடைய பையனுக்குக் கிடைத்த அங்கீகாரம். அவனுடைய பையன் சரவணன் 'UPSC EXAM' ல் அகில இந்திய அளவில், முதல் பத்து ரேங்க்குக்குள் வந்து, 'ட்ரைனிங்க்' முடித்து, இப்போது தான் அவன் பிறந்த மண்ணிற்கு வருகிறான்!
அவனை வரவேற்கத்தான் அவ்வளவு கூட்டம்!
அந்த பையன் சரவணின் முன்னேற்றத்தில் ஃபாதருக்கும்
பங்கு உண்டு. இந்த பையன் பிரமாதமாக வருவான் என்று அவருக்கு
அப்போதே தோன்றிவிட்டது. அவனுடைய துறுதுறுப்பும்..சட்டென
கிரகிக்கும் சக்தியும்... எல்லாவற்றையும் விட அவன் ஐந்தாவது படித்த
போது, அவரிடம் அவன்கேட்ட கேள்வி..மலைத்துப் போய்விட்டார்.
அதற்கான விடை தெரியாமல் அப்போது முழித்தார். ஆனால்,
அதற்கான விடைஇப்போது ..இருபத்தைந்து வருடம் கழித்து
கிடைத்து விட்டது. சரவணன் வந்த பிறகு, ஊரார் எல்லாரிடமும்
அதைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிற ஆவல் அவர் கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது!
கிராமத்தில், சேரியில் வசித்துக் கொண்டிருந்த சின்னாஞ்ஞானை மரியாதையோடு அழைக்கும் ஒரே பெரிய மனிதர் ஃபாதர்
பெர்டிணான்ட் தான். அவனை என்று இல்லை எல்லாரையும் அன்போடும், மரியாதையோடும் பழகும் அவரை அந்த கிராமமும் மிகவும் மதித்தது. மேலும், அங்குள்ள சின்ன பள்ளிக் கூடத்துக்கு ஹெட்மாஸ்டரும் அவர் என்பதால் கூடுதல் மரியாதை! அவரை
ஃபாதர் என்று கூப்பிடுவதா..அல்லது சார் என்று கூப்பிடுவதா என்று குழந்தைகள் திணறி கடைசியில் அவரை ஃபாதர் சார் என்று கூப்பிட, அதையே, அவரும் அன்புடன் அங்கீகரிக்க, எண்பது வயது கிராமணி தாத்தாவிலிருந்து, பல் முளைக்காத குழந்தைகள் வரை, எல்லாருக்கும் அவர் ஃபாதர் சார் தான்!
'மணி என்னப்பா எட்டேமுக்கா ஆகலியா?'
கணக்குப் பிள்ளை கேட்ட அடுத்த நிமிஷமே, பஸ் அங்கு வந்து
நிற்க ........
ஆ..... நம்ம சரவணன் ...
எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சரவணன்
ஒரு சின்ன ஹோல்டாலுடன் சிம்ப்பிளாக இறங்கினான்.
படபடவென்று பட்டாசு சத்தம் ஐந்து நிமிடம் வரை கேட்டுக்
கொண்டிருந்தது. ஊர் பெரியவர்கள் சரவணனுக்கு மாலையிட,
எல்லாரையும் பணிவுடன் வணங்கினான், சரவணன். ஃபாதர்
முறை வந்த போது, அவர் காலில் அவன் விழ எத்தனிக்க, அதைத்
தடுத்து, அவனை இறுகக் கட்டிக்கொண்ட ஃபாதர் பேச ஆரம்பித்தார்.
" ஃபாதர் சார் மேல ஏறிப் பேசுங்க.."
சரவணன் அவரை மேலே தூக்கி விட ஃபாதர் பேச ஆரம்பித்தார்.
" இதோ இந்த புள்ள சரவணன் இருக்கானே.. கெட்டிக்
கார பய புள்ள..அப்பவே தெரியும் இவன் பெரிய ஆளா வருவான்னு..
ஒரு நா இந்த தம்பி என்ன கேட்டது.. பாருங்க..அப்ப மாரியம்மன் கோவில் திருவிழா..சுத்தி வர வேடிக்கையும்,கொண்டாட்டமும். அப்ப தம்பி சரவணன் என்னையப் பார்த்து,"...ஃபாதர் சார்..ஃபாதர் சார்..சேப்பு..மஞ்சள்..நீலம்..பச்சை..ன்னு எல்லா கலர்லேயும்.. பலூன் பறக்குதே..கருப்பு கலர்ல பலூன் கிடையாதா..அது பறக்கவே பறக்காதா"ன்னு கேட்டான்.அப்ப எனக்கு பதில் சொல்லத் தெரியல.சாமி....இப்ப தெரியுது..தம்பி சரவணா கருப்பு கலர்ல பலூன் இருக்கு. அது மத்த கலர் பலூன் மாதிரி உசரத்தில
பறக்கும்.... பறக்குது.. அந்த பலூன்...அந்த பலூன்..
நம்ம சரவணன் தான்.. ..'
உணர்ச்சி வசப்பட்ட குரலில் ஃபாதர் பெர்டினாண்ட் பேசப்பேச
ஊர்மக்களின் கரகோஷம் வானைப் பிளந்தது!!

இந்த கதை யூத்ஃபுல் விகடனில் வெளியாகி உள்ளது...
refer: http://youthful.vikatan.com/youth/Nyouth/ramamoorthistory270110.asp

-------- 0 ----------

ஆடே.. உனக்கேன் வெட்கம் ?


ஆறறிவு படைத்த மனிதர்களே,
அத்தனை பாதகங்களையும்
செய்து விட்டு,
துளிக்கூட,
அதைப்பற்றிய லஜ்ஜை
இல்லாமல்,
நெஞ்சை நிமிர்த்தி,
நேர் கொண்ட பார்வை
வீசிச் செல்லும்போது,
ஐந்தறிவு படைத்த
ஆடே....
உனக்கேன் இந்த வெட்கம் !!
முதலில் இதை,
கழற்றி எறிந்து
உன் அடையாளம் காட்டு!
இல்லையேல்....
அடையாளம் இல்லாத
ஆடு மீது,
மனிதனுக்கு எப்போதுமே,
ஒரு கண் !
'டைனிங் டேபிளு'க்கு
கொண்டு போய் விடுவார்கள்...
ஜாக்கிரதை !!!

Tuesday, January 19, 2010

விளக்குகள் அணையும் போது...


கைகளும், கால்களும் கட்டப் பட்ட
நிலையில் தனது அகன்ற மார்புடன் படுத்துக்
கிடந்தார், உஸ்தாத் ஷாஹுல் ஹமீது சாஹேப் அவர்கள். அறுபது வருடங்கள்
அவருக்காக உழைத்த அந்த உடம்பு ஓய்வு
எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது. இராமநாத
புரம் மாவட்ட மண் போல, கடினமான அவருடைய முகம் இறுகிப் போய்க் கிடந்தது. வாய் ஓரங்களில், ஈக்கள் குளிர்
கால பார்லிமெண்ட் கூட்டத்தொடரை
நடத்திக் கொண்டிருந்தன. நான்கு நாட்கள்
வயதான தாடி,அந்த முகத்திற்கு கம்பீரத்தையே கொடுத்தது.
' இதோ பாருய்யா, பேப்பர்காரன் உனக்கு
மருவாதி கொடுத்துப் போட்டிருக்கான்" என்று செல்லி அவர் மீது தினசரியை வீசினாள்.அதில் " குத்து சண்டை வீரர் ஷாஹுல் ஹமீது மாரடைப்பினால் காலமானார்.அன்னாருக்கு வயது அறுபத்து மூன்று" என்ற விளம்பரம் வந்திருந்தது. இன்னமும், அவர் மீது விசுவாசமுள்ள, யாராவது சிஷ்யப் பிள்ளை, பத்திரிகைக்கு
அனுப்பி இருப்பான்.இருக்கும் வரை கவனிக்காமல், இறந்த பிறகு கூப்பாடு போடும் உலகம் தானே இது!
'மௌத்தாகி' தன்னுடைய கடைசி காரியத்துக்குக் கூட ஏழை செல்லியை எதிர்பார்க்கும் நிலயில் இருந்த போதும்,
அந்த முகம் தெளிவாகவே இருந்தது. அவருக்குத் தெரியும், செல்லி எந்த குறையும்
வைக்க மாட்டாளென்று!
ராத்திரி முழுக்க செல்லி, அந்த கட்டில்
காலையேப் பிடித்துக் கொண்டு, கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருந்தாள்.எந்த வித பயமும், அருவருப்பும் இல்லாமல் !
'உம்... காலம்' என்று அலுப்புடன் எழுந்தவள்,
தன்னுடைய குடிசையை விட்டு வெளியே வந்து பார்த்தாள். வானம் பொல பொலவென்று விடிந்திருந்தது.
அவர் வந்து எத்தனை நாட்கள் இருக்கும்? கணக்குப் போட்டுப் பார்த்தாள்,செல்லி. நேற்றைய தினத்தை சேர்த்து, நாற்பது நாட்கள் ஆகியிருந்தது. செல்லிக்கு அவரை
ஆரம்பத்தில் அடையாளம் தெரியவில்லை. மேட்டுத்தெருவில், கட்டிட வேலை முடிந்து, திரும்பிக் கொண்டிருந்தாள் அவள். கையில் ஒரு கிழிந்துப் போன சூட்கேஸுடன் அவர் வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.
என்னமோ, அவரைப் பார்த்தவுடனே,கேட்கவேண்டும் போலத்
தோன்றியது, அவளுக்கு.
'எங்கே போகணும், பெரீவரே' என்று அவள் கேட்டவுடன்,'எங்கேன்னு தெரியலே,
தாயி' என்று பரிதாபமாக அவர் பதில் சொன்னதை நினைத்துக் கொண்டாள்.
தினமும் இரண்டு ரூபாய்க்கு குறைவாகவே
சம்பாதிக்கும் சித்தாள் செல்லி, அவருடைய
பதிலைக் கேட்டதும், தன்னுடைய வீட்டிலேயே அவருக்கு தங்க இடம் கொடுத்தாள். அப்போது கூட அவளுக்குத்
தெரியவில்லை.
இரண்டு,மூன்று நாட்கள் கழித்து, அவளுக்கு லேசாக சந்தேகம் வர, அவரைக்
கேட்டாள்.' ஆமா தாயி, நான் தான் அது' என்று சொல்லும்போதே, அவருக்கு கையும், காலும் நடுங்கின. 'எப்படி இருந்த உடம்பு,
இப்படி ஆயிடுச்சேய்யா' என்று சொல்லி கண் கலங்கும் போதும், அவருடைய வரண்ட கண்களிலிருந்து, பொட்டுக் கூடக் கண்ணீர் வராது.
" உம்...நுப்பது வருஷம் வாள்ந்தவங்களும் இல்லே. நுப்பது வருஷம் தாள்ந்தவங்களும் இல்லேன்னு தெரியாமலா சொன்னாங்க..."
என்று குடிசைக்குள்ளே, திரும்பியவள், அந்த சிம்னி விளக்கைப் பற்ற வைத்தாள்.'குபுக்'கென்று எரிந்த விளக்கு, சிறிது நேரத்திலேயே, உஸ்தாது போலவே உயிரை விட்டது. 'அடச்சீ...' என்று கெட்ட
வார்த்தை சொல்லி விளக்கைத் திட்டியவள்,
அவருக்குக் கேட்டிருக்குமோ என்று பயந்து
கொண்டு கட்டிலைப் பார்த்தாள்.'நீ தான் செத்துப் பூட்டியே, உனக்கு எப்படி கேக்கும். நா ஒரு மடச்சி' என்று தனக்குள், அலுத்துக் கொண்டாள். 'இந்த நாப்பது நாளா, ஏதாவது,வாய் தவறிசொல்லிவிட்டு, கட்டிலப் பார்க்கறது பளக்கமா இல்லே போயிடுச்சு'
என்றாள்.
'யாருக்காவது சொல்லி அனுப்பனுமா' என்று யோசித்துப் பார்த்தாள், செல்லி. அவருக்கு நெருங்கிய சொந்தமென்று யாரும் கிடையாது என்று அவரே சொல்லியிருக்கிறார். 'ஏன்யா, உனக்கு புள்ள குட்டி எதாவது இருக்கா' என்று அவள் கேட்டதற்கு, 'பொண்டாட்டியே இல்ல தாயி''
என்று தன் பொக்கை வாய் தெரியச் சிரித்திரிக்கிறார், அவர்.
'பேச்சிமுத்து பயகிட்ட சொல்லியாகணும்' என்று நினத்தவளுக்கு உடனே 'பேச்சிமுத்து
என்ன செய்வான் என்பதுமில்லை தெரிஞ்சு
கிடக்கு' என்று இழுத்தாள்.ரெண்டு ரூபா காசைக் கொடுத்து,'ஏதாவது பண்ணிக்கோ, ஆயா, ஆள விடு' என்று கூசாமசொல்லிடுவானே அந்த பாவிப் பய.
உஸ்தாது வந்த புதிதில், பேச்சிமுத்துக்கு அவரைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று ஆவலோடு அவன் குடிசைக்குள் ஓடினாள் செல்லி. 'தோ பாரு நீ ஏதாவது வெவரம் கெட்டத்தனமா அந்தாள் கிட்ட சொல்லிடாதே' என்று அவளுடைய உற்சாகத்துக்கு 'ஃபுல் ஸ்டாப்' வைத்தவன்,
இரண்டு,மூன்று நாட்கள் கழித்து அவரைப் பார்க்க வந்தான். வந்தவன் சாதரணமாக வரவில்லை. ஏகக் கூச்சலுடன் வந்தான்.'பாயி, எனக்கு நல்ல பொளப்பை குடுத்தே. உனக்கு என்னால ஒண்ணும் செய்ய முடியாத நிலையில் இருக்கேனேன்னு ஏக அழுகை அழுதான். அத்தனையும் நடிப்பு. சொந்தமாக சைக்கிள் ரிக் ஷா. பொண்டாட்டியத் தவிர இரண்டு கூத்தியாரு வேற. அவனாலயா முடியாது...விசுவாசம் கெட்ட பய !
செல்லி, பேச்சிமுத்து போன்றவர்கள் தயவை நாடிக் கொண்டிருக்கும் உஸ்தாத் ஷாஹுல் ஹமீது சாஹேப் ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்தவர் தான். சுழன்று கொண்டிருக்கும் காலச்சக்கரம் மேலே இருப்பவரை கீழே தள்ளி விட்டது!
ஒரு இருபது,இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு குத்துச்சண்டை
உலகில் கொடி கட்டிப் பறந்தவர் இந்த உஸ்தாத். உடல் பயிற்சி சாலை ஒன்று வைத்திருந்தார். இவரிடம் குஸ்தி பயின்ற பையன்கள் ஒருவரும் சோடைப் போகவில்லை.
போட்டி, பந்தயம் என்று கலந்து கொண்டு,
எல்லாரையும் வெற்றி வாகைசூடி கொண்டு வருவார் உஸ்தாத். கலந்து கொண்டால், வெற்றி இவருக்குத் தான் என்ற நிலை இருந்தது. அந்த காலத்தில் பரிசுப் பணத்தை
ஏகமாகக் குவித்த அவர், அத்தனையும் தனக்காகச் செலவழித்து விடவில்லை. எத்தனையோ பிள்ளைகளுக்கு, ஸ்கூல் பீஸ் கட்டியிருக்கிறார். எத்தனையோ ஏழைகளுக் க்குச் சாப்பாடு போட்டிருக்கிறார். வெறும் சோற்றாளாகத் திரிந்து கொண்டிருந்த இந்த பேச்சிமுத்துவை, அதட்டி,உருட்டிப் பணிய
வைத்து, சைக்கிள் ரிக் ஷா வாங்கிக் கொடுத்து, அவன் வீட்டில் விளக்கெரியச் செய்திருக்கிறார்.
' நாம சாப்பிடற சாப்பாடு, நம்ம சாப்பாடு இல்ல தாயி, குர்பானி கொடுக்கிறதைத் தான்
பிறகால, நாமே சாப்பிடறோம்'னு வாய் ஓயாம சொல்லுவியே அந்த சொல்லு, உன் வாழ்க்கையிலே பொய்யாப் போச்சேய்யா என்று கட்டில் காலில் ' மொடேர் மொடேர்'
என்று அடித்துக் கொண்டாள், செல்லி. உஸ்தாதிடம் கை நீட்டிய ஒருவரும் அவருக்குக் கை கொடுக்கவில்லையே. வாஸ்தவம் தானே!
இந்த நாற்பது நாள் பழக்கத்தில செல்லியும்
உஸ்தாதும் ரொம்பவும் அன்னியோன்யமாகப் போய்விட்டார்கள்.
இருவருக்கும் மனுஷ ஆதரவு தேவை. ஆண்டவன் சேர்த்து வைத்தான்.
உஸ்தாது சொல்லுவார்,' நாம ஒதவி செஞ்சவங்ககிட்ட, ஒதவியை எதிர்பார்க்கக்
கூடாது. அந்த மாதிரி பிறகால உதவும்னு நினைச்சுக்கிட்டே உதவி எதுக்குச் செய்யணும்? அதுக்கு தென்ன மரத்த வளர்க்கலாமே'ன்னு.
'இப்பக் கூடப் பாரு தாயி, உஸ்தாது இந்த
மாதிரி ஒரு குடிசையில கஷ்டப் படறான்னு பேப்பரில ஒரு வார்த்தை போட்டாப் போறும். அத்தனை பயலுவளும் கதறிண்டு வந்துடுவானுங்க. பேச்சி முத்துவைப் பாத்தியா, தன்னால உதவ முடியல்லேன்னு எப்படி அழுதான்'னு அவர் சொல்ல கேட்கும் போது, செல்லி மனதுக்குள், குமைந்து கொண்டிருப்பாள்.
'அதெல்லாம் அந்த காலம்யா. இப்பல்லாம்
ஏற வைச்ச ஏணியை எட்டி உதைக்கிற காலத்தில இல்ல நாம பொழப்பை நடத்திக் கிட்டு இருக்கோம்....'
உஸ்தாது ஒவ்வொருத்தர்போல பழைய காலத்தை நினைத்து குமைந்து கொண்டிருக்க
மாட்டார். போன பொருளைப் பற்றி அவர் துளிக்கூட கவலைப்படவில்லை. ஆனால் புகழ் என்னும் போதைக்கு அவரும் அடிமை ஆனார்.
'இதோ பாரு தாயி, அந்த சூட்கேசை எடு, தொள்ளாயிரத்து அறுபதில தினமணிலே என் போட்டோவைப் போட்டிருக்கான் பாத்தியா
அறுபத்தி அஞ்சிலே தந்தில, என்னைப் பத்தி எழுதியிருக்கான் என்று அந்த 'பேப்பர் கட்டிங்'கை யெல்லாம் எடுத்து செல்லிக்கு காட்டுவார். செல்லியும் ஒவ்வொரு எழுத்தாக, எழுத்துக் கூட்டி அவருடைய பெருமைகளைப் படிப்பாள்.
' அந்த காலத்துல நான் பெரிய ஆளு. நம்ம சந்தில, நான் வந்தேன்னா..ஒரு பயலும் பேச மாட்டானுங்க. அவ்வளவு மரியாதி. நான் என்ன சொல்லப் போறேன்னுட்டு அத்தனை
ஜனங்களும், காத்துக் கிட்டு இருக்கும் தெரியுமா' என்று அவர் ஆரம்பித்தால், செல்லி திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பாள். செல்லிக்கு உஸ்தாது சீரும், சிறப்புமாக வாழ்ந்த விதம் தெரியாமலா இருக்கும். இருந்தாலும், அவர் சொல்லி, அதைக் கேட்பதில் ஒரு ஆனந்தம்.
நேற்று மதியத்திலிருந்து சாப்பிடவில்லை. ஆதலால் ஏகமாக பசி எடுத்தது செல்லிக்கு.இரண்டு பொறைக்கும், ஒரு டீ க்கும் அவளிடம் காசு இருக்கிறது.இருந்தாலும், 'அவரை' வைத்துக் கொண்டு சாப்பிடத் தோன்றவில்லை. வயிற்றை புரட்டுகிறார்போன்ற பசியை அடித்துத் துரத்தியது துக்கம்.
'ஏதாவது சில்லறை தேறுமா' என்று உஸ்தாதைப் புரட்டினாள் செல்லி. குற்ற உணர்வு நெஞ்சை அமுக்க,' எல்லாம் உன் காரியத்துக்குத் தான்யா' என்று உதட்டைப்
பற்களால் கடித்துக் கொண்டு, புரட்டினாள்.தலை மாட்டிலிருந்து நாலு ஐந்து ரூபாய் நோட்டுகள் விழுந்தன.பேச்சிமுத்துக்கு விவரத்தைத் தெரிவிக்க ஓடினாள். அவனுடைய இரண்டு ரூபாயும் அப்போது தேவையாக இருந்தது.

நன்றி : 11.5.1986 தினமணிகதிர்

Monday, January 18, 2010

இறை வழிபாடு !


ஹொண்டா சிடியில்
குடும்பம் சூழ...
கோவில் வந்து,
ஸ்பெஷல் தர்சனுக்கு,
ரூபாய் நூறு கொடுத்து..
அர்ச்சனை தட்டில்
ஐம்பது வைத்து...
போப்பா சில்லரை இல்லை
என்று விரட்டினான்
பிச்சைக் காரனை,
ஆண்டவன் வெகு அருகில்
இருக்கிறான் என்பதை
உணராமல் ..........!!!

Saturday, January 16, 2010

சங்கீத ஞானமு...


இந்த வருட சங்கீத சம்மேளனத்தை நிறைவு செய்யும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது.( இந்த பொறுப்பை யாரும் எனக்கு கொடுக்காமல், எல்லாப் பிரமுகர்களும் 'பிசியாக' இருப்பதால்,நானே
பெருந்தன்மையாக அதை எடுத்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம்!)
* ஒரு பிரபல வித்வானுக்கு, பலத்த சிபாரிசின் பேரில், ஒரு அமெச்சூர் மிருதங்கம்
பக்க வாத்தியமாக அமைந்தது. பையன் எப்படி என்று அந்த சிபாரிசு செய்தவர் கேட்க, அதற்கு, அந்த பிரபல வித்வான் சொன்னார்: " புள்ளையாண்டான், என் பாட்டுக்கு எங்கே வாசிச்சான். அவம்பாட்டுக்கில்ல, வாசிச்சான்!"
* ஒரு சபாவில் 'ஜுகல்பந்தி' நடந்து கொண்டிருந்தது. ஒரு ரசிகர் தன் நண்பரைக் கேட்டார்.அதற்கு நண்பர் சொன்ன பதில்:
' நம்மூர் இட்லிக்கு அந்த குஜராத்தி டிஷ்
mismatch.'
* அந்த வித்வான் தன் சிஷ்யர்களுடன் சேர்ந்து சபாவில் பாடுவது வழக்கம். தம்பூரா போட்டுக் கொண்டிருந்த பையன், கொஞ்சம் வேகமாகப் பாடுவதைப் பார்த்து, அவர் கொஞ்சம் பின்னால் திரும்பி,'கொஞ்சம் நின்னு பாடேன்' என்று சொன்னார். பையன் பாவம். கச்சேரி முடியும் வரை,அடுத்த இரண்டு மணி நேரமும், தம்புராவைத் தூக்கிக் கொண்டு, நின்று கொண்டே பாடினான் !!
* ஆபீஸ் முடிந்து ஃப்ளாட்டுக்கு வந்த கணவனைப் பார்த்து, மனைவி சொன்னாள்.
"இன்னிக்கு, ரெண்டு news சொல்லப் போறேன். ஒன்று good news இன்னொன்று
bad news. எதை முன்னாடி சொல்ல ?"
அவன் : முதல்ல good news சொல்லு.
அப்புறம் bad news.
அவள் : நம்ம கீழ் வீட்டுப்பையன் வயலினை
வித்துட்டான்.
அவன் : அப்பாடா...ரொம்ப ரொம்ப
good news இது. அப்ப bad news ?
அவள் : நம்ம பக்கத்து வீட்டுக் காரர் அந்த
வயலினை வாங்கிட்டார் !

* அது ஒரு பொன் மாலைப் பொழுது.
தென்றல் அருமையாக வீச, ஒரு பூங்காவில்
ஒரு சங்கீத வித்வானிடம் 'எக்குதப்பாக'
மாட்டிக்கொண்டார் ஒரு ரசிகர்.
வித்வான்: ஸார்..ரொம்ப ரம்யமா இருக்கு..
அப்படியே 'கரகரப்ரியா' ஒரு
சங்கதி வாசிக்கட்டுமா ?
ரசிகர் : வேண்டாம் ஸார், அந்த ராகம்
எனக்குப் பிடிக்காது.
வித்வான் : அப்ப.. ஷண்முகப்ரியா?
ரசிகர் : வேண்டவே வேண்டாம் சார்.
அது எனக்கு ரொம்பவே பிடிச்ச
ராகம்!!
இத்துடன் இந்த வருட சங்கீத சம்மேளனம் இப்படியாகத்தானே முடிய...
மங்களம் .......சுப மங்களம் ............

Thursday, January 14, 2010

உன் மடியில் குழந்தையாவது...


உன்னைப் பார்க்காத
நாட்களெல்லாம்
எதையோ
தொலைத்து விட்ட
வருத்தம் என்னுள்!
பார்த்த அந்த நொடியில்..
என் மனத்துள் சந்தோஷம்,
ப்ரவிகிக்கும் அந்த நொடி..
சொல்ல முடியவில்லை,என்னால்!
அடுத்த ஜன்மம்
என்றிருந்தால்..
உன் மடியில்
குழந்தையாகப் பிறக்க
பிறக்க வேண்டும் !!
உன்னுடைய அனுக்கம்
அவ்வளவு
தேவையாக இருக்கிறது...
எனக்கு !!

Wednesday, January 13, 2010

எது நடந்ததோ.....!


எந்த சமயத்தில் எதைச் சொல்ல வேண்டும்
என்று ஒரு வரையரை இருக்கிறது. அது மீறிப்
போனால் ரசாபாசம் தான். 'communication
skill' இல் இதை ' a b c' என்று சொல்வார்கள்.
' a b c ' என்றால், 'accuracy, brevity,clarity'
என்று அர்த்தம்.
அனுமன்சொல்லின்செல்வன்.இலங்கை
யிலிருந்து வந்த அனுமன் ராமனைப் பார்த்ததும்
முதலில் சொன்னது ' கண்டேன்' என்றான்.
ராமனின் காதில் தேன் பாய்ந்தது போல்
இருந்தது, அது! பிறகு தான் 'கண்டேன்...
கண்டேன்..கண்டேன் சீதையை ராகவா'
என்றான்.
மெத்தப் படித்தவர்கள் சுருங்கச் சொல்லி,
நிறைய விளங்க வைப்பார்கள்.'accounting'
என்றால் என்ன என்று ஒரு B.Com இடம்
கேட்டுப் பாருங்கள். அவன் ' It is an art of
recording business transactions in a set of
books' என்பான். அதையே MBA விடம்
கேட்டுப் பாருங்கள். ' It is a language of business.'
என்று நெத்தியடியாக பதில் வரும்! இன்றைக்கும்
திருக்குறளின் பாப்புலாரிட்டி என்றால்
அதன் size தான்.
எதையும் சுருங்கச் சொல்ல வேண்டும். அது
அந்த சூழ்நிலைக்குப் பொருத்தமாகவும் இருக்க
வேண்டும்.
அசுவமேத யாகத்தில், பூராப் பணத்தையும்
ஓடாத குதிரையின் மீது கட்டி, பேஸ்து அடித்த
முகத்துடன், இருப்பவரைப் பார்த்து, "எது
நடந்ததோ, அது நன்றாக நடந்தது" என்று
சொல்லிப் பாருங்கள்.
என்ன நடக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே
விட்டு விடுகிறேன்.
ஒரு துணுக்குடன் இதை முடித்துக் கொள்கிறேன்.
நண்பர் ஒருவர், அவரைப் பார்க்க வந்த நண்பரிடம்
அவருடைய நகைக்கடையில் நடந்த விஷயம் பற்றிச்
சொன்னார்:
" நம்ம கோபாலனை நம்பி கடையை
விட்டுட்டுப் போனது ரொம்ப தப்பா போச்சுங்க
பத்தாயிரம் ரூபாயை கடைலேர்ந்து எடுத்துட்டு
ஓடிப் போய்ட்டார்ங்க...."
அதுக்கு இவர் சொன்னார்.
" இப்ப நான் கூட சும்மாத் தான் இருக்கேன்.
நா வேணா அந்த வேலையைப்
பார்க்கட்டுமா?"
--------

Sunday, January 10, 2010

விமர்சனம்


"இனிய உதயம்" என்று ஒரு மாத இதழ். நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சப்தம் போடாமல் ஒரு இலக்கிய பணி செய்து வருகிறது.ரொம்ப நாட்களாகவே அந்த இதழ் பத்து ரூபாய் தான்.இப்போது பதினைந்து ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள். படித்துப் பார்த்தால் அதற்கு மேலும் கொடுக்கலாம் என்பீர்கள். ரவீந்திரநாத தாகூர், மாப்பசான், வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரப் பிள்ளை, லியோ டால்ஸ்டாய் போன்ற ஜாம்பவான்களை இனிய..எளிய ..தமிழில் நமக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். அதில் எப்போதோ வெளி வந்த முகுந்தன் என்ற மலையாள
இலக்கிய கர்த்தாவின் "வசுந்தரா" என்ற நாவலைப் படித்தவுடன் என்னுள் எழுந்த சிந்தனைச்சிதறல்களை ஒரு டைரியில் எழுதி வைத்தேன். அதனை இப்போது உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்வடைகிறேன்.
* * * *
விமர்சனம் பார்ப்போமா....

" ..... வித்யாசமான கரு. மிக மிக ஜாக்கிரதையாகக் கையாளப் பட வேண்டிய ஒன்று. மிக மிக ஜாக்கிரதையாகக் கையாளப் பட்டு இருக்கிறது. ஆபாசத்திற்கும், மெல்லிய, மிக உயர்ந்த ரசனைக்கும் இடையே உள்ள இடைவெளி மிகக் குறுகியது. அதனைக் கருத்தில் கொண்டு, சமுதாயப் பொறுப்புணர்வுடன் வரையப் பட்ட புதினம் இது.
வசுந்தராவை புதுமை கருத்துக்களைக் கொண்ட யுவதி என்றோ, மிகத் துணிச்சல் உடையவர் என்றோ அல்லது எல்லாமே சேர்ந்த கலவை என்றோ விவரிப்பது கடினம்.
ஒரு அல்ப விஷயம் எனக்கு ஞாபகம் வருகிறது.
நான் அப்போது 'டிகிரி பைனல்' படித்துக் கொண்டு இருந்தேன். நாங்கள் இருந்தது ஒரு 'ஸ்டோர்'. எதிரும், புதிருமாக ஆறு குடியிருப்புகள். காலை எட்டு மணி சுமார் இருக்கும். காரே,பூரே என்று புரியாத பாஷையில் கத்திக் கொண்டு, கைக்குழந்தையுடன் பிச்சைக் காரி ஒருத்தி வந்தாள்.' ஐயா, காசு தா..,உணவு தா..பசி ப்ராணன் போகுது. உடுத்திக் கொள்ளக் கூட கிழிசல் துணி தான்' என்று துணியை விலக்கினாள். எனக்கு பகீரென்றது! கண்களை மூடிக் கொண்டு,சட்டென்று திரும்பி விட்டேன். ஐயோ பாவம் என்ற இரக்கத்தினால் அல்ல அது! என்னைப் பார்க்கத் தூண்டிய...அல்லது..நான் பார்க்க விரும்பிய அவளுடைய அந்தரங்கத்தை, நான் பார்க்கும் போது, என்னை யாராவது
பார்த்து விடுவார்களோ என்கிற பயம் !
ஒரு விதத்தில் நாம் எல்லாருமே, மனிதத் தோல் போர்த்திக் கொண்ட மிருகங்கள் தான். இதனை வசுந்தராவும் உணர்ந்து இருப்பார்.அப்படி இருந்தும், அவர் நடிக்க ஒத்துக் கொண்டது, அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. மோதிரம் மாற்றிக் கொண்ட இந்த நிலையில், அவரின் முடிவு, ரசிகர்கள் பால் அவருக்கு இருந்த அசைக்க முடியாத மரியாதையைக் காட்டுகிறது! 'ஜே. கே.' யின் அக்னிப் பிரவேச நாயகி 'கங்கா'வை விஞ்சி நிற்கிறார், முகுந்தனின் 'வசுந்தரா' !
எனக்கு இனி மகள் பிறக்க சாத்யம் இல்லை.இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து, பேத்தி பிறந்தால், வசுந்தரா என்று கட்டாயம் பெயர் சூட்டுவேன். அந்த அளவு 'தாக்கம்' கொண்ட கதாபாத்திரம் இது!
நாராயணன் 'ஸ்க்ரிப்ட்'டைக் கொளுத்தும் போது, கோகுல் போட்ட மோதிரத்தை
வசுந்தரா நெருப்பினில் வீசவில்லை. மிருக..காம...உணர்ச்சி கொண்ட நம் ஒவ்வொருவர் மீதும் வீசுகிறார். நிர்வாணம் இங்கு நடைமுறை சாத்யமில்லை என்ற வெறுமையின் வெளிப் பாடாகக் கூட அது இருக்கலாம். அது நம் ஒவ்வொருவர் மீதும் வீசிய,..வீசும்..சவுக்கடி என்று கொள்வோமாக .....! "

----- 0 -------

திட்டம் !!


ஏழ்மையை விரட்ட,
நாம் வகுத்த திட்டங்கள்,
போகும் இடம்....
சில பணக்காரர்களை,
மிகப்
பெரிய பணக்காரர்கள்
ஆக்குகிறது..
ஆக்கட்டும், பரவாயில்லை..
ஆனால்....
குடிசையில் வாழும்..
குப்பனின் தாத்தாவுக்குக்
கூழில்லை...
குப்பனின் அப்பனுக்கும்,
கூழில்லை...
குப்பனுக்கும்
கூழில்லை...
குப்பனின் பேரனுக்கும்
கூழில்லா நிலையை
அல்லவா
உருவாக்கி விட்டோம்!
இந்த லட்சணத்தில்
2020ம் ஆண்டு .....
பசியில்லா வருடமாம்...
யாருக்கு ?

Friday, January 8, 2010

முல்லைக்குத் தேர்!


பேகன்,என்ற மன்னன். மழை வருவதை உணர்த்தும் விதமாய்
மயில் ஒன்று தோகை விரித்தாட, அதை அவன் சரியாக புரிந்து கொள்ளாமல், அதன் மீது போர்வை ஒன்றைப் போர்த்தி, அழியாப் புகழ் அடைந்தான் என்பது வரலாறு!
எத்தனையோ ஏழைப் பாழைகள் அவன் நாட்டில் இல்லையா ? அதை விட்டுவிட்டு, மயிலுக்கு மட்டும் ஏன் போர்வை போர்த்தினான். ஆய்ந்துப் பார்த்தால் ஒரு விஷயம் நமக்கு புலப்படும்.
நாம் மட்டுமல்ல..நம் முன்னோர்களும் ஆடம்பரத்துக்கும், ஆர்ப்பாட்டத்துக்கும் தான்
துணப் போயிருக்கிறார்கள். முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அது தான் வழிவழியாக
வந்திருக்கிறது. உழைப்புக்கு மதிப்பு கொடுப்பவனாய் இருந்தால் அவன் வயலில் நாள்
முழுதும் உழும் மாட்டுக்கல்லவா போர்வை போர்த்த வேண்டும்? மயிலினால்
மனிதனுக்கு என்ன பிரயோஜனம்? ஒரு பிரயோஜனமுமில்லை ! மாறாக அது வயலை
பாழ் படுத்தும். நாசம் செய்யும் மயிலுக்கு போர்வை..அங்கீகாரம். பாடுபட்டு உழைக்கும்
மாடுகளுக்கு ..!!!
பாவம், எளிமையும், உழைப்பும் . அதுகளை சீண்டுவாரில்லை !!
அது போல இன்னொன்று!
பாரி என்ற குறு நில மன்னன் ஒரு நாள் வேட்டைக்குச் செல்லும்போது, எங்கோ ஒரு குழியில் அவன் தேர் சிக்கிக்கொள்ள, அதை அவன் அதை அப்படியே விட்டுவிட்டுப் போக..( அவன் குறு நில மன்னன் அல்லவா, எடுக்க முடியவில்லை.ஈகோ தடுத்தது. அதனால் தேரை விட்டுவிட்டுப்போய்விட்டான்!நாம் use and throw பால்பாயிண்ட் பேனாக்களை விட்டுவிட்டுப் போவோமே, அது போலத் தான்!..) குழி பக்கத்தில் படர கொம்பு இல்லாமல் தவித்த முல்லைக் கொடி ஒன்று 'கண்டேன்.. கண்டேன்' என்று அந்த தேரின் மீது படர ஆரம்பிக்க..அதை எவனோ போக்கத்தவன் பொழுது போகாமல் பார்த்து விட்டுப் போயிருக்கலாம். அப்படி செய்யவில்லை. வந்தவன் கொஞ்சம் 'மார்க்கெட்டிங்க்' தெரிந்தவன் போல இருக்கிறது. அந்த நிகழ்வினை சற்று சொற்களால் சிலம்பம் விளையாடி, அழகுத் தமிழில் அரசன் முன் அதை பாடி தன் பையை நிரப்பிக் கொண்டான். விளைவு.. 'முல்லைக்குத் தேர் ஈந்த பாரி' என்று
அவன் மேல் முத்திரை குத்தி அவனை கடைஏழு வள்ளல்களில் ஒருவனாக ஆக்கி
விட்டார்கள்.
நம்ம ஊரில் எவனோ ஒருவன் வயிற்று வலி தாங்காமல் தற்கொலை செய்து
கொண்டிருப்பான்.. காதல் தோல்வியால் தற்கொலை என்று கவர்ச்சிகரமான தலைப்பில்
நாம் பேப்பரில் NEWS போடுவதில்லையா.. அது போலத்தான் இதுவும்!
ஆக, நிகழ்வு ஒன்று.. ஆனால் வரலாறோ அதை வேறு விதமாய் ஃபோகஸ் பண்ணித்
தொலைக்கிறது!!!

Wednesday, January 6, 2010

சொல்லாமலேயே.....


சாந்தா அலுப்புடன் 'ஸிஸ்டத்'தை 'ஷட் டவுன்' பண்ணிவிட்டு எழுந்தாள். இன்னும் இரண்டு நாட்கள் ஆபீஸ் வரவேண்டும். சூடாக காஃபி
குடித்தால் தேவலை.
கீழே தான் காண்டீன். ஆவி பறக்க வைத்த காஃபியை மிகவும் ருசித்துக்
குடித்தாள்.அந்த குளிருக்கு மிக இதமாக இருந்தது
அது!


குடித்து முடித்து மணி பார்த்தாள். இரவு
எட்டே முக்கால்.நல்ல வேளை, அவளை ரொம்பவும் காக்க விடாமல் பஸ் வந்தது.
கூட்டமில்லை. அவளுக்கு பிடித்த ஓர சீட் ரொம்ப ஈசியாகவே கிடைக்க,
உட்கார்ந்து கொண்டாள். மார்கழி காற்று ஜிலுஜிலுவென்று காதுகளை வருட, சுகமாக
அனுபவித்துக் கொண்டு வந்தாள், சாந்தா.

பஸ்ஸில் ஓர ஸீட்டில் அமர்ந்து வேடிக்கைப்
பார்த்துக் கொண்டே வந்தவள், அந்த காட்சியைப் பார்த்தவுடன் துணுக்குற்றாள்.

'அடடா...நாளைக்கு...நாளைக்குன்னு ஒவ்வொரு நாளையும் விட்டுட்டோமே
இன்னிக்கு எப்படியும் முடிச்சுடணும்..' ஒரு பரபரப்பு அவளைத் தொற்றிக்கொள்ள..
அவஸ்தையுடன் மணி பார்க்க ஆரம்பித்தாள்.
அவளின் அவசரம் புரியாமல் ஊர்ந்து கொண்டிருந்தது பஸ் !
அப்பாடா..ஒரு வழியாய் அவள் ஸ்டாப் வந்துவிட்டது. ஓட்டமும், நடையாய் ஃப்ளாட்டை
அடைந்தாள்.லிப்டில் மூன்றாவது மாடியும் வந்தாகி விட்டது. கதவைத் திறக்க வானிடி
பேக்கில் கை விட..மனசுக்குள்,...ஆமா இப்ப எதுக்கு பூட்டத்திறக்கணும்?...

'ஹாய் ஆண்ட்டி !'
எதிர்த்த ப்ளாக்கில் ரமா. B.TECH
முடித்து விட்டு வேலைக்குக் காத்துக்கொண்டு இருக்கிறாள். WIPRO வில் CAMPUS SELECTION
ஆகி கிட்டத் தட்ட ஒன்பது மாதங்கள் ஆகி விட்டது, பாவம் !
இங்கிருந்தே கூப்பிட்டாள்,சாந்தா.
"ரமா, ஒரு சின்ன ஹெல்ப்.கொஞ்சம் ஷாப்பிங் போணும்,வரியா?"
"ஓ..வரேனே.."
இந்த ராத்திரி குளிரில் கூப்பிடறாளே என்கிற
HESITATION துளிக்கூட இல்லை. ரொம்ப..ரொம்ப.. நல்ல பெண்.
ரமா ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய, பில்லியனில் அமர்ந்து கொண்டாள், சாந்தா.
"எங்க போறோம் ?"
"போர்வை வாங்கணும்"
அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒரு பெரிய கடையில் நல்ல கனமான கம்பளிப் போர்வை
ஆறு வாங்கினாள், சாந்தா.
"வீட்டுக்குத் தானே?" - இது ரமா.
" இல்ல ரமா..குக்கட்பள்ளி போணும்"
இருவரும் குக்கட்பள்ளி போனார்கள். அவள் ஆபீசிலிருந்து வந்தபோது அவள் மனசை
சங்கடப்படுத்திய இடத்தில் நிறுத்த சொன்னாள், சாந்தா. அங்கே...
சாலை ஓரமாய் ஆறு எளிய ஜீவன்கள் வெற்றுடம்புடன் தூங்கிக் கொண்டிருந்தார்கள்!
சாந்தாவும்,ரமாவும் அவர்கள் தூக்கத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் ஒவ்வொருவர் மேலும்
கம்பளிப்போர்வைளைப் போர்த்தினார்கள்.
" உஷ் ரமா, இத யார்ட்டயும் சொல்லக் கூடாது.."
நடு உதட்டில், ஆள் காட்டி விரலை வைத்துக்கொண்டு சாந்தா சொல்ல,
"ஓ"

சந்தோஷமாய் தலையை இப்படியும்,அப்படியுமாய் ஆட்டினாள், ரமா.
அவர்கள் யாரிடமும் சொல்லவில்லை.
சொல்லாமலேயே...
அடுத்த நாள் சாந்தா ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ட்ரான்ஸ்ப்ர்
ஆர்டர் வந்து விட்டது !
அதற்கு அடுத்த நாள் ரமாவிற்கு வேலைக்கான ஆர்டரும் வந்து விட்டது !!

இந்த கதை யூத்ஃபுல் விகடனில் வெளியானது...

Monday, January 4, 2010

நியாயம்


இன்றைக்கு ஏனோ மனம் மிகமிக சந்தோஷமாக இருக்கிறது.
குழந்தைகள் 'மன்த்லி டெஸ்ட்'டில் நல்ல மார்க்கா?
ஊகூம்....

பொதிகையில் காலை ஐந்தரை மணிக்கு ப்ளூட் ரமணியின்
'சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மாவா'
இல்லை.
நெடுநாள் பிரிந்த தோழி யாரையாவது பார்த்தோமா?
கிடையாது. கடிதப் போக்குவரத்து அடியொடு நின்று விட்டது.உறவுக்காரர்
கள் எல்லார் வீட்டிலும் ஃபோன்!
பிறகு எதுவாக இருக்கும்!

நானும் காலையிலிருந்து மூளையைக் கசக்கிக்கொண்டு இருக்கிறேன்.
ஒன்றும் தெரியவில்லை.ஆனால்,மனம் மிக மிக சந்தோஷமாக
இருக்கிறது என்பது நிஜம்.
கண்,மண் தெரியவில்லை எனக்கு.நவராத்திரி, ப்ளஸ் தீபாவளிக்கு என்று,
வாங்கிய இரண்டு செட் புடவைகளில்,ஒன்றை, இன்றே கட்டிக் கொண்டேன்.
என்னவோ தெரியவில்லை. தீபாவளிக்கு வேறொன்று வாங்கிக் கொண்டால்
போகிறது. புதுப்புடவைக்கு மேட்ச்சாக ப்ளவுஸ் கிடைத்தது இன்னொரு
சந்தோஷம்!

மேரிக்கு அவள் விரும்பியபடி மதுரைக்கு 'ட்ரான்ஸ்பர்' கிடைத்து விட்டதே?
அதுவா?
அவளுக்கு, போன வாரமே ஆர்டர் வந்து விட்டதே? இந்த சந்தோஷம்
காலையிலிருந்து தானே!
'மேரேஜ் டே'யா ?
'பர்த் டே'யா ?
ஆளாளுக்குக் கேட்டார்கள். எல்லாவற்றுக்கும் சந்தோஷமாகத் தலையை
அசைத்து வைத்தேன்.
'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ', மெள்ள 'ஹம்' செய்தேன். அதனுடன்
'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' என்ற கோபால கிருஷ்ண பாரதியின்
பாடலும், 'மா தமதா தஸ தம ததஸா' என்ற ஆபோகி ராக வர்ணத்தின் சரணமும்
அனிச்சையாய் கலந்தது மற்றொரு சந்தோஷம்!
என்ன ஆகி விட்டது எனக்கு?
மனத்துள் ஒரே சிரிப்பு ப்ரவாகம்.ஜாலியாய் அரை நாள் லீவு போட்டு, வீட்டுக்குப்
போய் நாள் முழுவதும் சிரிப்போமா?
பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைத்துக் கொள்ளப் போகிறார்கள், அக்கம்
பக்கத்து வீடுகளில்!

'இன்னும் பத்தே நாட்களில் அரியர்ஸ் பணம் வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பிற்கு
இன்னும் வலு ஜாஸ்தியாக இருந்தது. அதைப் போல, ' எதனால் இந்த சந்தோஷம்'
என்று மனது மெள்ள, மெள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியாக அசை போடுகிறதே, அந்த
அனுபவம் 'ஒரிஜினல்' சந்தோஷத்தை விட, சந்தோஷமாக இருக்கிறது, எனக்கு!
என்னடா இது? வயது ஆக ஆக மறதி ஜாஸ்தியாகி விட்டதா? இன்னும் என்னால்
கண்டுபிடிக்க முடியவில்லை? இவ்வளவு மோசமாகவா போய் விட்டேன்? ஞாபக
சக்திக்கென்று, பள்ளிக் கூடத்தில் சர்டிபிகேட்டுகள் குவிந்த காலம், அந்த காலம்!
'ஏய் எதாவது மாத்திரை சாப்பிடறயா? வல்லாரை கீரை சாப்பிடறயா?' என்று
தோழிகள் ஆவலுடன் வினவுவார்கள். அப்படி ஒரு ஞாபக சக்தி எனக்கு!
ஆனால் இன்று ...
எல்லாமே பஸ்மமாய் போய்விட்டது.
என் திறமைகள் எல்லாமே.
கல்யாணத்துக்குப் பிறகு...
இவரைக் கைப் பிடித்த பிறகு.....
மனுஷன் பல்வலி என்று என்ன பாடு படுத்திவிட்டார்? பார்க்கப் போனால், அது
பல்வலி கூட கிடையாது. ஈறுகளில் வலி. உப்பு, வென்னீர் போட்டுக் கொப்பளித்தால்
சரியாகப் போய் விடும். அதற்கு அவர் படுத்திய பாடு இருக்கிறதே.. துளிக் கூட
பொறுக்க முடியாத ஜன்மம்.
சின்னக் குழந்தை என்றால் இரண்டு அடி வைத்து விடலாம். இவ்வளவு பெரிய ஆளை
என்ன செய்வது?
'நல்ல நாளிலேயே நாழிப்பால். இப்போது கேட்கவே வேண்டாம். பல் வலி என்று
குப்புற படுத்துக் கொண்டு ...ச்சே....'
இதையாவது பொறுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் டிங்குவும்,டிட்டுவும் சுவாரசியமாக
டீ.வி. பார்த்துக் கொண்டு இருக்கும்போது, படீரென்று குழந்தைகள் முதுகில் அறைந்து...
என்ன ஒரு காட்டுமிராண்டித்தனமான சுயநலம். தாம் கஷ்டப் படும் போது, எல்லாரும்
மௌனமாக, துக்கம் காக்க வேண்டும் என்ற ஈனத்தனமான எதிர்பார்ப்பு.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் ... சப்பாத்தி கட்டையை டீ.வி.யின் மீது வீசி...
சிலீரென்று ஸ்க்ரீனின் கண்ணாடித் துண்டுகள் ஹாலில் சிதற.....
விக்கித்துப் போய் விட்டன குழந்தைகள்.
ஏன், நானும் தான்.
புதிதாக வாங்கிய கலர் டீ.வி.
அரியர்ஸ் பணத்தில் வாங்கியது.
இவருக்கு வேலைக்குப் போய் சம்பாதித்துக் கொடுத்து, சமையலும் செய்து,
குழந்தைகளுக்குப் பாடமும் சொல்லித் தந்து.....
ஆபீஸ் செல்லும் பெண்கள் எல்லாரும், போன்சாய் மரங்கள் தான். மரங்களைக்
குறுக்கி, பழங்களைப் பறிப்பது போல, பெண்மை என்னும் மகா சக்தியைக் குறுக்கி,
அவளிடமிருந்து பலன் பெறும் சுயநலமிகள் தானே இந்த ஆண்கள்.
தகப்பனாக... கணவனாக...மகனாக... அவளுக்கு எப்போதுமே, இந்த மூவரில் ஒருவரைச்
சார்ந்து நிற்கும் நிலை.
போன மாதம் எனக்குக் கைகளில் நகச்சுற்று வந்தது. என்ன..ஏது..என்று ஒரு வார்த்தை
ஆதரவாகக் கேட்கவில்லை, மனிதர். வலியுடனே எல்லா வேலைகளும் செய்ய வேண்டி
இருந்தது. லீவும் போட முடியாத சூழ்நிலை.. இரண்டு பக்கமும் மண்டை இடி!
வாங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. 'ஐவா' கலர் டீ.வி. அதற்குள் படீர் என்று
நெஞ்சில் அடி!
டீ.வி.பெட்டியை உடைக்கும் அளவுக்கு என்ன ஒரு குரூரம்? பார்த்துக் கொண்டிருக்கும்
குழந்தைகளின் மனநிலை எவ்வளவு தூரம் பாதிக்கப் படும்?
இதைத் தான் 'வீட்டு வன்முறை' (டொமஸ்டிக் வயலன்ஸ்) என்று சொல்கிறார்களோ?
பெண்கள்..குழந்தைகளுக்கு ... எதிராக பலாத்காரம்.... வன்முறை...வீடுகளிலேயே
நடக்கிறது. எங்கு செல்ல முடியும்? ஊமை அழுகையாய் அழுது, கரைந்து போக
வேண்டியது தானோ?
அட... சந்தோஷம் ...ஞாபகம் வந்து விட்டதே!
காலையில் செய்தித் தாளில் படித்தது.
'மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில், பல்வலி தாங்க முடியாமல் போனதால்,
ஒருவன் தன் மனைவியை பெல்ட்டால் அடித்து நொறுக்க, விவகாரம் போலீஸ் வரை
போக,அவனுக்கு எட்டு மாத சிறைத் தண்டனை.
எம் போன்ற பெண்களுக்கு, இந்த பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு
வகையில் ஒரு நியாயம் கிடைத்து விடுகிறதே!
அட!
அந்த செய்தி தான், என் ஜீவனில் கலந்து, என்னுள் பரவசம் உண்டாக்கி, அந்த
ஆனந்தத்தை இத்தனை நேரமும் சுவாசித்து வந்திருக்கிறேனோ!
மனம் நிம்மதி கொள்கிறது.
காரணம் தெரிந்த களிப்பில்!!