Thursday, December 31, 2009

எங்கிருந்தோ வந்து.............


பார்த்து,பார்த்து,
நம்பிக்கையான..
'நர்சரிகளி'ல் வாங்கி,
வேப்பம்புண்ணாக்கு,
'ஆர்கானிக் உரம்,
ஜீவாமிருதக் கரைசல்,
ஆட்டுப் புழுக்கை...
என்று
போஷாக்குக் கொடுத்து,
வளர்க்கப் பட்ட
ஒட்டு மரக் கன்றுகள்
எல்லாம்...
'சோமாலியா ' நாட்டு,
சோனி குழந்தைகள்,
போல்,
சுருங்கி விழ,
எங்கிருந்தோ வந்த
பறவையின்
எச்சத்தில்
விழுந்த விதை
ஒன்று,
விறுவிறுவென்று...
வளர்ந்து,,,
விருட்சமாய்
நின்றது !!

(இந்த கவிதை யூத்ஃபுல் விகடன் டிசம்பர் 2009 மின்னிதழில் வெளியானது.... )

Thursday, December 24, 2009

ஒரு விடியல்


கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாங்கள்
புதிது புதிதாக கட்டடங்கள் கட்டுவோம்
சாலைகள் அமைப்போம்
கதவே இல்லாத வீடுகள் அமைப்போம்
அன்பான மனிதர்களாய்
அதில் குடியேறுவோம்...
நம் பிரபஞ்சத்தின்
அனைத்து உயிர்களும்
நேசமாய் ஒன்று சேர்ந்து
ஒரே தேசத்தினை உருவாக்குவோம்.
அங்கு ராணுவம் இல்லை
பூட்டுகள் இல்லை
போலீஸ் இல்லை
திருடன் இல்லை
எதிரியும் இல்லை
சக மனிதன் என்ற
நிலை மாற்றி
'சகஹிருதயன்' என அன்பு செய்வோம் !
பணம் என்ற பகையை வழக்கொழித்து
மாறாக,
அன்பினைப் பண்டமாற்று செய்வோம்!
எங்களில் பேதமில்லை,
நிறமுமில்லை..
சாதியில்லை..
சண்டையில்லை !
ஆண்டையில்லை..
அடிமையில்லை..
ஏழை, பணக்காரன் என்ற நிலையும்
இல்லை.. இல்லை..இல்லையே !
அனைத்துமே
சம ஜீவன்கள்
என்கிற சகாப்தத்தினை
உருவாக்கி
வரக்கூடிய
இறை தூதனை
வரவேற்கக் காத்திருப்போம்!
ஏழைகளுக்கு மட்டுமே
அனுக்கமான அந்த
ஆண்டவரை
எம் எல்லோர்க்குள்ளும்
அமர்த்தி வைத்து
அழகு பார்ப்போம்..
இனி ஒரு விதி செய்து
எந்நாளும் காப்போம்!
இனி அந்த
தேவகுமாரன்
மாட்டுத் தொழுவத்தில்
பிறக்க வேண்டாம்..,
நம் எல்லோர் இதயங்களிலும்
பிறக்கவேண்டுமென்று
மனமுருகி ஜெபம் செய்வோம்
மாதா கோவில்
மணியோசை ஊடே
'சர்வலோகாதிப நமஸ்காரம்'
என்ற பாடலின்
சுகமான வரிகள்
காற்றிலே கலந்து
எம் காதுகளை
வருடட்டும்
அந்த
அற்புத சுகமளிப்பவரை
ஆனந்தமாய்
வரவேற்போம்
நாம் எல்லோருமே.

Monday, December 21, 2009

"க்ளோபல் வார்மிங்....."


நண்பர்களோடு,
எனக்கும்,
தெருக்கோடி
நாடார் வெற்றிலைப் பாக்கு
கடையில்,
அரசியல்..சினிமா..
"க்ளோபல் வார்மிங்....."
என்று அரட்டை அடிக்க
ஆசை தான்...
ஆனால்,
பிள்ளைகளுக்கு வீட்டுக் கணக்கு,
அழுக்குத் துணி தோய்க்க..,
நோட்டுகளுக்கு அட்டை போட..
ரேஷன் சாமான்கள் வாங்க,
என் சேவை தேவை இங்கு...
இதை விட்டுவிட்டு,
நான் அரட்டை அடிக்க
அங்கு வந்தால்,
இங்கே "ஹோம் வார்மிங்"
வந்து விடும்!
அதனைத் தணிக்க
எந்த
"ஹோபன்ஹேகன்" கொம்பனாலும்
முடியாது!!

Friday, December 18, 2009

ஊதி ஓடும் ரயில்....


நாங்கள் ஆங்கரையில் இருந்த காலம் ..... நாங்கள் என்றால்,
நான்,கிரி,ஜெயந்தி,ராஜு,மோகன்,அண்ணா( நாங்கள் அப்பாவை
அண்ணா என்று அழைப்போம்.),அம்மா,தாத்தா, பாட்டி,
பாலு சித்தப்பா. சிகாமணி சித்தப்பாக்கு கல்யாணம் ஆன புதிது. மண்டபம் கேம்ப்பில்
PWD யில் இருந்தார். தாத்தா,பாட்டி,பாலு சித்தப்பா என்று அந்த108ம் நெ. வீட்டில்
மொத்தம் பத்து டிக்கெட்! பக்கத்து வீடு சுப்ரமணிய மாமா. அவர் வீட்டுக் கொல்லையில்
ரோடு வந்து விடும். அங்கு அவருடைய சின்ன ஹோட்டல்!
காலையில் சுப்ரமணிய மாமா கடையில் போய் ஒரு மொக்கு மொக்கிவிட்டு வருவோம் எல்லாரும் ! வியாழக்கிழமை கடப்பா போடுவார்கள். ருசியான.ருசி..தோசைக்கு
கடப்பாவா அல்லது கடப்பாவுக்கு தோசையா என்று சொல்ல முடியாது. பின்னிப் பிடுவோம்..பின்னி! ஆனால் காசு கிடையாது. எங்கள் வீட்டு பசு மாட்டுப் பால் பூராவும் அந்த கடைக்குத் தான் கொடுப்போம். 'காசு வேண்டாம்..குழந்தைகள் வந்தால் டிபன் கொடுங்கோ' என்று அண்ணா, அம்மா சொல்லி விடுவார்கள். தவிர பக்கத்து வீட்டுக் குழந்தைகளான எங்களைக் கண்டால் அவருக்கும் உயிர்!
வீட்டுக் கொல்லைப்புரம்....
ஒரு கிணறு...அதன் பக்கத்தில் துளசி மாடம்.
நான்கைந்து தென்னைமரங்கள்...ஒரு சின்ன கொட்டில்..அதில் இரண்டு பசு மாடுகளும்,
அதன் கன்னுகுட்டிகளும்!
அந்த இடத்தில் நாங்கள் அடித்த லூட்டிகள் ...............
ஏதாவது விசேஷம் நடந்தால், அடுத்த நாள் நிறைய 'தான்'களுடன் மிஞ்சும்
பழங்குழம்பை சுட வைத்து, அதில் அச்சு வெல்லம் போட்டு எரிச்சக் குழம்பாக்கி,
பழைய அமுதுடன், வாழைப்பூ மடலில், எங்களுக்கெல்லாம் பாட்டி பரிமாறிய இடம்!
தாத்தா, பாட்டியுடன் நாங்கள் பல்லாங்குழி ஆடிய இடம்!
கோடை நாளில் வடாம் இடுவார்கள். அப்போது கை நிறைய வடாம் மாவு கிடைக்கும். அதைத் தவிர காக்கா வராமல் காவல் காக்கிறோம் என்று நாங்கள் திருடித் தின்னும் வெயிலில் பாதி காய்ந்துக் கொண்டிருக்கும் வடாம்! அந்த கொல்லைப் புரம் தான் வடாம் இடும் இடம்!
பாட்டி கால்களை நன்கு நீட்டி, வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு தலை வாரிப்
பின்னி, பூச்சுட்டும் இடம் !
"இச்சா...இனியா...
காயா...பழமா..."
என்று தன் குட்டி தலையை அண்ணாந்து பார்த்து, நெற்றியில் ஒரு ஓட்டு சில் வைத்து,
அதை கீழே விழ விடாமல், 'பேலன்ஸ்' பண்ணிக் கொண்டு,பச்சைப் பாவாடையை, நாலு 'இன்ச்சு'க்கு மேல் தூக்கி, போட்ட கோட்டினை மிதிக்காமல், கண்களை மூடி, தன் குஞ்சு கால்களால் லாவகமாக நடை பயிலும் கோமளிப் பாப்பாவுடன் நாங்கள் பாண்டி விளையாடிய இடம் !

நான்.. கர்ணன்..கிரி அர்ஜுனன்..குரு....கண்ணன்!
"டேய்...இவன் விழ மாட்டான் போல இருக்கு. கமர்கட் எல்லாத்தையும் கொடுத்து
தொலைடா..' குரு ஆத்திரத்தில் கத்த..கிரி கொடுத்த அத்தனை கமர்கட்டையும் ட்ராயரில் போட்டுக் கொண்ட பிறகு தான், கர்ணனாகிய நான் கீழே விழுவேன்!....
நான் விழுவதற்காகவே இது வரைக்கும் காத்துக் கொண்டிருந்து விட்டு,
" உள்ளத்தில் நல்ல உள்ளம்..உறங்காதென்பது...
வல்லவன் வகுத்ததடா..கர்ணா வருவதை எதிர் கொள்ளடா..'
என்று கைகளை இப்படியும், அப்படியும் ஆட்டி, கீச்சுக் குரலில், உச்சஸ்தாயியில், குரு கத்த ஆரம்பிக்க, சக்ரவாக ராகத்தில் அமைந்த அந்த அருமையான பாடல் அவனிடம் படாத பாடு படும்!
தென்னை மட்டைகள் சிதறி கிடக்கும். அதன் ஈர்க்குச்சிகளால் வில், அம்பு தயார் செய்து கர்ணன்,அர்ஜுனன் விளையாட்டு விளையாடிய இடம் அது !


* * * * * * * * *
" டேய் ஸ்ரீதர்,கொஞ்சம் நகர்ந்துக்கடா,ப்ளீஸ் கிரிக்கு வழி விடுடா"
வாசல் திண்ணையில் எங்கள் எல்லாருக்கும் " LILIPUT" கதை சொல்லிக்கொண்டிருக்கும், பாலு சித்தப்பா, திடீரென்று சம்பந்தமில்லாமல் பேச, எல்லாரும் பேந்த, பேந்த விழிக்க, நான் சட்டென்று உஷாராகி, வாசலில் போய்க் கொண்டிருந்த பெரிய எருமை மாட்டைப் பார்த்து
" சரி சித்தப்பா" என்று சொல்லிவிட்டு, என் சிண்டு, சித்தப்பா கைக்கு கிடைக்கு முன், நான் ஓடிப்போய் விட, அப்போது தான் எல்லாருக்கும் தெரியும், சித்தப்பா ரோடை அடைத்துக் கொண்டு வரும் நாலு எருமைக் கன்னுகுட்டிகளில் ஒன்றைப் பார்த்து ஸ்ரீதர் என்று கிண்டல் பண்ணியிருக்கிறார் என்று!
அந்த சித்தப்பாக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். முப்பத்து மூன்று செல்லப் பெயர்கள்
வைத்திருந்தார், எனக்கு.
..சங்கர்.....பொப்புலி மஹாராஜா...... முகமது அலி..இன்னும் என்னவெல்லாமோ.....!
( பாலு சித்தப்பா ஒரு பத்து வருடம் முன்னால் ASST. COMMISSIONER ஆக ஒரு
STATE GOVT. DEPARTMENTலிருந்து ரிடயர்டு ஆனார்.அப்போது அவர் சொன்னார்:
" ஸ்ரீதர், AC ங்கறதினால ரெண்டு,மூணு லேடீஸ் காலேஜில 'லெக்சர்' கொடுக்க கூப்பிட்டுருக்காங்க... இப்பன்னுப் பார்த்து மூணு மாசத்துல, ரிடயர்மெண்ட் வருது !")
சரி, விஷயத்துக்கு வருவோம்!

ஆவணி அவிட்டத்திற்கு எல்லாரும் ஆங்கரை வீட்டுக்கு வந்து விடுவார்கள்.
அஞ்சு வீடு தள்ளி உள்ள அத்தை வீட்டு பசங்களும் வந்து விட, வீடே அதிரும்!
அப்போது பார்க்க வேண்டுமே, ! சித்தப்பாக்களும் வேறு சேர்ந்து கொண்டு, அடிக்கும் லூட்டி .......சண்டிக் கீரை என்று தேக்கு இலைபோல் உள்ள கீரை. அந்த இலைக்குள் பருப்பு உசிலி ஃப்ரையை வைத்து , சுருட்டி..அதை ட்வைன் நூலால் கட்டி..அதை இட்லிப் பானையில் வேகவைத்து... அடடா..சாப்பிட்டுப் பார்த்தால் தான் தெரியும் அதன் ருசி!
தாத்தா பாடசாலையில் கனம் படித்தவர். வேதத்தில் கனம் என்று ஒரு பிரிவு. அதனை
பாடமாக படித்தவர்கள் கனபாடிகள். தாத்தா கனபாடிகள். விஷயம் தெரிந்தவர்.. வயதானவர்
என்பதால் அவருக்கு கிராமத்தில் தனி மரியாதை. ஊரே ஐயன் வாய்க்கால் அரச மரத்தடியில்
அவரிடம் பூணல் போட்டுக் கொள்ள காத்துக் கொண்டிருக்கும்.
நாங்கள் .......?
நாங்கள் ஏன் அங்கு போகிறோம் ?
அடுத்தது என்ன ?
ரயில் விளையாட்டு தான்!
ஒரு பெரிய சாக்கு எடுத்துக் கொள்வோம். அந்த பக்கம் சிகாமணி சித்தப்பா, இந்த
பக்கம் பாலு சித்தப்பா. நடுவில் .. நான்,கிரி,குரு,ராஜு,மோகன்,
இந்திரா,ஜெயந்தி,சசி,சுரேஷ், உஷா,ரமா எல்லாருமே...
சிகா சித்தப்பா பாட ஆரம்பிப்பார்......
" ஊதி ஓடும் ரயில்...
இந்த ஊரில் நிக்காது மெயில்...
இதன் நீளம் ஒண்ணரை மைல்...
இழுக்கறேன்...இழுக்கறேன்....
இழுக்கறேன்....."
என்று சாக்கை இழுக்க ஆரம்பிக்க...
நாங்களும் கோரஸாக அபஸ்வரத்தில் கத்துவோம்...
ரயில் வண்டியில் யார்,யாரெல்லாம் பயணம் செய்கிறார்கள்?
ஆனைக்குட்டி ரெண்டு.....
அல்சேஷன் பன்னிரெண்டு....
( இதை கிரி பன்னி... ரெண்டு என்று ஸ்பெஷலாக அழுத்தம் கொடுக்க அதற்கு
ஓன்னு சிரிப்பு! ...)
மந்திரிமார்கள் மூணு...
மகராஜாக்கள் தொண்ணூறு....
டிக்கெட்டில்லா 'வித்தவுட்டு'
ட்ரெயினுக்குள்ளே பதினெட்டு...
இழுக்கறேன்...இழுக்கறேன்..
இழுக்கறேன்...
' ரயில் எங்கேடா இன்னும் ஸ்டேஷனுக்கு வல்லே ?' - சித்தப்பா கேட்க...
நான் ஆரம்பிப்பேன்..
எருமை மாடு ஒண்ணு
கண்ணுகுட்டியைப்
போட்டிருப்பதாலே...
குட்டியைப் போட்டிருப்பதாலே..(இது கிரியும்,குருவும்)
எவனோ ஒருவன்
இசுக்குரு (SCREW) ஆணியைப்
பேர்த்திருப்பதாலே... (இது நான்)
ஆணியைப் பேர்த்திருப்பதாலே... (இது கிரியும்,குருவும்)
(இப்போது எல்லாருமே கோரஸாக கத்துவோம்)
அரை மணி நேரம் லேட்....
அடைச்சிருக்குது கேட்....
அப்பாடா! ஒரு வழியா ரயில் ஸ்டேஷனுக்குள் வந்து விட்டது !!
காப்பி...காப்பி..காப்பி..சூடா காப்பி.... (இது கிரி)
உப்மா...உப்மா..உப்மா...(இது குரு)
ட்டீ.....ட்டீ.....ட்டீ.....சூடா ட்டீ.... (இது நான்..)
ஹிண்டூ....எக்ஸ்ப்ரஸ் .... ஆனந்த விகடன்.....(கோரஸாக உஷாவும்,ரமாவும்)
"ஏய்...தாத்தா வந்தாச்சு..தாத்தா வந்தாச்சு...ஓடுங்கடா...சீக்கிரம்."
"பஞ்ச பாத்திரம் எடுத்துக்கோ... எனக்கு ஒண்ணு தா..தாம்பாளம் எங்கேருக்கு? "
இரண்டு சித்தப்பாக்களும் தட்டு தடுமாற...
" என்னடா, எல்லாரும் சந்தி பண்ணியாச்சா..பூணல் போடலாமா?"
வெளி வேலைகள் முடித்து தாத்தா அங்கு வர.. நாங்கள் எல்லோரும்
எஸ்கேப் !
நன்றாக மாட்டிக் கொண்டார்கள் சித்தப்பாக்கள்!!
* * * * * * * * * *
ஆம்... உறவுகள் ஒரு சுகமான அனுபவம்!!
இப்பவும் வருடம் ஒரு முறை, ஆவணி அவிட்டம் வந்து கொண்டுதான் இருக்கிறது
ஆனால்.......
அவ்வளவு சுவாரஸ்யமாக அல்ல !!!!

Friday, December 11, 2009

ரயில் திருடர்கள்??


அந்த பகல் நேர பாசஞ்சர் வண்டியில் நானும்,என் நண்பனும்.
எதிர்த்தாற்போல் இரண்டு நபர்கள். அந்த கம்பார்ட்மெண்ட்டே அவ்வளவு தான்.மேலும் 'ஒர்க்கிங்க் டே' என்பதால் வண்டியில் கூட்டம் அதிகம் இல்லை. நாங்களும் அப்போது தான் வேலைக்குச் சேர்ந்த புதுசு. எங்கள் எல்லாருக்கும் ஊரும் புதுசு.கவலையே இல்லாத வாழ்க்கை. படு ஜாலி.
நாங்கள் ஐந்து பேர் ஒரு ஸ்டோரில் வாசம். ஒரு காபி குடித்து விட்டு,காலை ஆறறைக்கே கிளம்பி விடுவோம். குளியல் ! பெப்சி உங்கள் சாய்ஸ் தான்! நினத்தால் குளிப்போம்.
மூடு இல்லாவிட்டால் இல்லை.கையில் கிரிக்கெட் பேட், பந்து சகிதம் கிளம்பி விடுவோம். பத்தே நிமிஷத்தில் செயிண்ட் மேரீஸ் காலேஜ் வந்து விடும். கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடுவோம். கரெக்டாக ஏழு மணிக்கு ஸ்டோர் வாண்டுகள் வந்து விடும். அதுகளுடன்
கொஞ்ச நேரம் விளையாடுவோம். ஏழரைக்கு ஆபீஸ் பஸ் அங்கு வரும் எங்களை
'பிக்கப்' செய்ய.. இது தான் எங்கள் வாராந்திர 'ரொட்டீன் லைஃப்'! சனி, ஞாயிறு ஆபீஸ் லீவ்!
முதல் வார சனியன்று, சொந்த ஊருக்குப் போய் விடுவாம். இரண்டாம் வார சனியன்று ஏதாவது பக்கத்து ஊருக்குப் போய் வருவோம். அங்குள்ள கோவில், மார்க்கெட் என்று ஊர் சுற்றுவோம். சமர்த்தாக அன்றிரவே ஊர் திரும்பி விடுவோம். சமயத்தில், ஜமா சேர்ந்தால், பாண்டி,பெங்களூர் என்று 'தீர்த்த' யாத்திரை செல்வதும் உண்டு. அப்போது
சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் கூத்தடித்து விட்டு, நல்ல பிள்ளைகளாக திங்கள் காலை
'டாணே'ன்று ஆபீஸ் வந்து விடுவாம்.
இந்த முறை நானும், சங்கரும் தான் பாக்கி. எல்லாருக்கும் ஒவ்வொரு 'அசைன்மெண்ட்'.
எங்கள் பஞ்ச பாண்டவரில் பாச்சாவும், நட்டும் ஆபீசில் ஓவர்டைம் பார்க்கப் போய்
விட்டார்கள். சுந்தாச்சு பெண் பார்க்க ஊரில் கூப்பிட, கம்பி நீட்டி விட்டான் !
சங்கர் கேட்டான்.
'லீவுக்கு என்னடா பண்ணலாம். எல்லாரும் போயாச்சு.?'
' அரவிந்த ஆஸ்ரமம் போலாமா?'
' போடா போ..இப்படியே போனோம்னா கூடிய சீக்கிரம் நாமளே சாமியாராப்
போயிடுவோம்! வேற எங்காவது போலாம்.'
' எங்கே போலாம்..நீயே சொல்லு?'
' பெங்களூர்'
' பெங்களூரா?'
' ஏன்?'
'சரி'
சங்கர் குடிக்க மாட்டான். சும்மா ஜாலிக்காக ஃப்ரெண்ட் ஜமா சேர்ந்தால் அவனுடைய
மேக்சிமம் தைரியமே ஒரு சின்ன 'பெக்' தான்! ஆனால் சிகரெட் குடிப்பான் ஓயாமல் ! இவன்
மட்டும் கொஞ்சம் முன்னால் பிறந்திருந்தால் ராமர் இலங்கையைக் கடக்க சிரமப்
பட வேண்டாம். இவன் குடித்துப் போட்ட சிகரெட் டப்பாவை சேர்த்து வைத்தால் போதும்!
தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு ஜம்மென்று பாலம் கட்டி விடுவார்!!
இப்படியாகத் தானே நானும்,சங்கரும் வெள்ளிக் கிழமை மத்தியானமே ஆபீசர் வராததினால்
'பங்க்' அடித்து கிளம்பி விட்டோம். இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம் இந்த
பகல் நேர பாசஞ்சர் வண்டியில்!
இந்த வண்டி ஒரு 'லொங்கடா' வண்டி. பெருமூச்சு விட்டுக்கொண்டு ஒவ்வொரு ஸ்டேஷனாக
நின்றுப் பின் மெதுவாக யோசித்துச் செல்லும். விடிகாலை ஆறேமுக்காலுக்கு பெங்களூர்
செல்லும். நாங்கள் பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ் வண்டியில் போய் தாலியா கட்டப் போகிறோம்.
ஆகவே இதில் வந்தோம்.
எதிர்த்தாற்போல் இருந்த இருவருமே பாராமுகமாக இருந்தார்கள். எங்களுடன் பேசாமலே
வந்தார்கள். நாங்களும் 'பிசினஸ் லைக்'காகவே இருந்தோம். எங்களுக்கு உள்ளூர பயம்.
எதாவது காலிப் பசங்களாக இருக்குமோ! இப்போது தான் ரயிலில் பிஸ்கெட் கொடுத்து,
அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு போய் விடுகிறார்களே!
அவர்கள் பார்வையே சரியில்லை. எங்களையே உற்று..உற்றுப் பார்த்தார்கள். நாங்கள்
பார்க்காத போது அவர்களிருவரும் நயன பாஷையில் வேறு பேசிக் கொண்டார்கள்.
எனக்கோ அடி வயிற்றைக் கலக்கியது. தேவையில்லாமல் கழுத்தில் உள்ள மைனர் செயினை
தொட்டுப் பார்த்துக் கொண்டேன். சங்கருக்கும் அப்படித் தான் போலும். பாவம் அவன்
அப்போது தான் புதிதாக 'கோல்ட் ப்ரேஸ்லெட்' ஒன்று வாங்கி கையில் கட்டிக் கொண்டிருந்தான்.
அவனுக்கும் பயமாக இருந்திருக்க வேண்டும். சோதனையாக எங்கள் பெட்டியில் வேறு யாருமே
ஏறவில்லை.அது வேறு கலக்கம்!
அவர்கள் எங்களை தாக்க வந்தால் 'செயின் புல்' செய்வது என்று தீர்மானம் செய்து
கொண்டோம். ராத்திரி முச்சூடும் தூங்காமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. அந்த
தடிப் பயல்களும் பெங்களூர் வரை வருவார்கள் போல இருக்கிறது! அடக் கடவுளே!
என்னத் தான் 'அலெர்ட்டாக' இருந்தாலும், எங்களையும் மீறி அசத்தி விட்டது.
சூரியனின் கதிர்கள் கண்களைத் தாக்கவே முழித்துக் கொண்டோம். பார்த்தால் எதிர்
சீட்டு காலி. அனிச்சையாக, எங்கள் கண்கள் கைகளையும், கழுத்தையும் பார்த்தன.
மைனர் செயின் காணேம்!
ப்ரேஸ்லெட்டையும் காணேம்!!
அலறி அடித்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் ஓடினேன்!!!
பயல்கள் அங்கு பதுங்கி இருப்பார்களோ... அங்கே.....
' சங்கரா........'
என் அலறல் கேட்டு அவனும் ஓடி வந்தான்.
'என்னடா...என்ன..'
பாத்ரூம் கதவு திறந்திருந்தது. உள்ளே...கண்ணாடியில் மழிக்கப் படாத என் முகம் !
ஏற்கனவே கறுப்பு...இதில் கறுப்பு ஜெர்கின்ஸ் வேற.. என்னப் பார்த்தா எனக்கே
பயமா இருந்தது.... சங்கர் என்னை விட மோசம்!! ஆள் சுத்தமா தீவிரவாதி மாதிரி
இருப்பான். அவனும் கறுப்பு ஜெர்கின்ஸ்!!
'அப்ப நம்ம நகைங்க...'
' மறந்துப் போய்ட்டியா..நாம தான் தலகாணிக்கு அடியில் பத்திரமா வைச்சிருக்கோமே'
நகைகளை எடுத்து வந்தான், சங்கர்.
அடப் பரதேசி நாய்ங்களா...எங்களைப் பார்த்து தான் களவாணிப் பசங்கன்னு
பயந்துப் போய்ட்டீங்களா!!!
விழுந்து விழுந்து சிரித்தோம், நாங்கள்!!!!

Thursday, December 10, 2009

போன்சாய் மரங்கள்!

ஒரு 'எலக்ட்ரிகல் எஞ்சினீய'ரும்..
'ஸிஸ்டம் அனலிஸ்ட்'டும்..
வாழ்க்கைப் பாதையில்,
இணைய..
வளங்கள் பெருகி...
வாழ்வினில் வசந்தம்!
ஹோண்டா சிவிக்,
'ஷகரான' இடத்தில்..
'டபிள் பெட் ரூம் லக்ஸுரி ஃப்ளாட்'..
ஹோம் தியெட்டர்..ஏ.சி..
வாஷிங் மெஷின்...
ஸிஸ்டம், மாடுலர் கிச்சன்..
வாக்வம் க்ளீனர்...
என்று,
வீட்டை நிரப்பிக்
கொள்ள,
(அவர்களின் செல்லங்கள்...
ப்ரீகேஜி ஒன்றும்..
நாலாங்க்ளாஸ் ஒன்றும்..
பூட்டிய வீட்டில்..
தினந்தோறும்..
பரிதாபமாகக்
காத்துக்கொண்டிருக்க..)
மனசு
வெறுமையாகி,
விட்டது !!!

Saturday, December 5, 2009

இது தான் இன்று....

கூழுக்கு...
பாழுக்கும் உழைத்த...
விவசாயப்பெருங்குடிகள்,
எல்லாம்...
இன்று,
'கவர்மெண்டின்..'
கவர்ச்சிகரமான
திட்டங்களினால்,
கலர் டி.வி. பார்த்து,
ஒரு ரூபாய் அரிசியில் சமைத்து ....
வருடத்தில்..
நூறு நாட்களுக்கு
வேலை ....
என்று
சொகுசாய்...,
வீட்டினுள்,
சோம்பேறிகளாய்,
முடங்கிப் போய்
கிடக்க...
இன்னமும்,
விலை போகாத,
நம்ம ஊர்
விளை நிலங்களெல்லாம்,
ஏக்கர் கணக்கில்...
கூலிக்கு ஆள்
கிடைக்காத
ஒரே
காரணத்தினால்,
ஏக்கத்துடன் பார்த்தன
வானத்தை...!!

Tuesday, December 1, 2009

சர்வே

சர்வேஸ்வரன் என்றால் அது பரமேஸ்வரனைக் குறிக்கும் என்று சின்னக் குழந்தையைக் கேட்டாலும் சொல்லும் என்று சொல்வார்கள். சின்னக் குழந்தை தான் சொல்லும். என்னைப் போன்ற அறிவு ஜீவிகளிடம் இதே கேள்வியை கேட்டுப் பாருங்கள்! பதில் வேறு விதமாக இருக்கும். அது சாட்சாத் ஸ்ரீ மகாவிஷ்ணுவைக் குறிக்கும் என்பேன்,நான். ஏன் என்றால்,அவர் தான் மகாபலி சக்ரவர்த்தி கொடுத்த நிலத்தை தமது காலால் 'சர்வே' செய்தவர். இந்த சர்வே எடுக்க அவர் வாமனன் என்று ஒரு அவதாரமே எடுக்க வேண்டி இருந்தது. ஆகவே அவரை சர்வேஸ்வரன் என்று சொல்வது தான் சரி.
இப்போது நாம் பேசும் போது திடீரென்று, இங்கு 'சர்வே' ஏன் வந்தது என்று கேட்கிறீர்
களா? அதற்கு காரணம் இல்லாமல் இல்லை..ஸ்வாமி!
எங்கள் 'ஆரண்ய நிவாஸில்' சர்வே நடந்தது. வந்தவர் ஒரு மாதிரியான ஆசாமி! படு ஜாக்கிரதையான பேர்வழியும் கூட! நான் யார்? இந்த வீட்டின் குடும்பத் தலைவன் ! என்னை அவர் துளிக் கூட லட்சியம் செய்தாரில்லை. மாறாக, அலட்சியமே செய்தார்! இங்கு நான்
ஒருவன் இருக்கிறேன் என்பதையே மறந்து விட்டார் போலும்! எனக்கு அஸாத்யமான கோபம் வந்தது. ஏதாவது செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்வதற்குள் அவர் செய்த செய்கை என்னை அப்படியே மடக்கிப் போட்டு விட்டது. தகதகவென்று தகித்துக் கொண்டிருக்கும் நெருப்புக் கங்குகள் மேல் தண்ணீர் ஊற்றினால் அது குளிர்ந்து போகுமே, அது போல் குளிர்ந்து
போகும் படியான காரியம் ஒன்று செய்தார், அவர்! அப்படியே, குளிர்ந்தும் போய் விட்டேன்
நான்!
அப்படி என்ன தான் செய்தார்,அவர் ?
எங்கள் வீட்டில் என்னை விட அதிகப் படியான அதிகாரம் உள்ள நபர் ஒருவர் இருக்கிறார். அது என் சகதர்மிணி என்று நான்சொல்லித் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை ! மேலும் நான் சொல்ல வந்த விஷயமும் அதுவல்ல!
பின் ...............????
வந்த ஆசாமிஅவரையும்... ஏன்..அவரையே..அலட்சியம் செய்து விட்டார்!!
என்ன ஒரு மகாதைரியம்?
சர்வே எடுக்க வந்தவர் சரியான போக்கிரி போல இருக்கிறது என்று மனதுக்குள் நினத்துக் கொண்டேன்!
இப்போது அவரிடம் எனக்கு கோபம் இல்லை. நான் கனவிலும் செய்ய இயலாத ஒரு காரியத்தை, மிக மிக அனாயாசமாக செய்ததினால், அவர் மீது எனக்கு ஒரு 'ஹீரோ ஒர்ஷிப்'
வந்து விட்டது.
என்ன தான் செய்கிறார் என்று பார்ப்போமே !
வந்தவரின் மூக்கு, ஊசி நுனி போல் கூர்மையாக இருந்தது. அதை இங்கும், அங்குமாய்
திருப்பி,எதையோ தேடிக் கொண்டிருப்பவர் போல் இருந்தது அவர் செய்கை. சர்ரென்று பறந்து மூன்றாவது சவுக்கு மரக் கிளையின் மீது அமர்ந்தார்!
ஆம்...
ஒரு சிட்டுக் குருவி தான் அது !
அட...இடம் கண்டுபிடித்தாகி விட்டது. வரிசையாக ஐந்து சவுக்கு மரங்கள் உள்ள இடத்தில், மூன்றாவது மரத்தை தேர்வு செய்து..அதில் ரொம்ப மேலேயும் போகாமல், அதல பாதாளமும் இல்லாமல், மேலிருந்து இரண்டு அடி கீழே தள்ளி அடுத்த அரை மணி நேரத்தில் நேர்த்தியாக
கூடு ஒன்றும் கட்டியாகி விட்டது!
எனக்கு அப்போது 'நேஷனல் ஹைவேஸ்' அருகில் மனை வாங்கி ,வீடும் கட்டி,அரசாங்கத்திலிருந்து 'நோட்டீஸ்' வந்தவுடன் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் ஆறறிவு படைத்த மனிதனின் ஞாபகம் ஏனோ வந்து தொலைத்தது !
இரண்டு குஞ்சு குருவிகள், தாய் குருவி, தகப்பன் குருவி என்று அளவான குடும்பம். அந்த
பெரிய குருவிகள் இரண்டும் ஓடி..ஓடி.. இரை கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டும்!
குஞ்சுகளும் சமர்த்தாக சாப்பிடும்.
விடுமுறை நாட்களில் இது தான் என் பொழுது போக்கு. அவ்வப்போது நெல், பொரி
என்று ஏதாவது போட்டு அவற்றுடன் ' ஃப்ரண்ட்ஷிப்' வைத்துக் கொண்டேன். அதுகளும்
நான் ஆபத்தில்லாதவன் என்பதைப் புரிந்து கொண்டு, எனக்கு மிக அருகில்
விளையாடும். குருவிகள் இவ்வளவு பாசமாக இருக்கிறதே என்று நினக்கும் போது ....
அதீத உணர்ச்சியினால் என் கண்கள் பனித்து......எனக்கு காகங்கள் நினைப்பு வந்து விட்டது.
இந்த காகங்களும் தான் இருக்கிறதே! ச்சே...!
எதற்கு இதை சொல்கிறேன் என்றால், 'ஆரண்ய நிவாஸ்' வருவதற்கு முன்பு 'சிட்டியில்'
நாங்கள் அடுக்கு மாடி வீட்டில் குடி இருந்தோம். காலை நேரத்தில் சில வீடுகளில் காகத்திற்கு சாதம் வைப்பார்கள். ஆயிரம் யோஜனை பண்ணிக் கொண்டு ஒரு காகம் ...அதுவும் ஒரே ஒரு காகம் தான்.... வரும். அப்போது துணிகளை உலர்த்த நான் மாடிக்கு வருவேன். சாப்பிடும்
காகத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ரொம்பவும் ஜாக்கிரதையாக துளிக்கூட சத்தம் போடாமல் துணிகளை உலர்த்துவேன். இருந்தாலும் அந்த காகம் நான் வந்தவுடன் சட்டென பறந்து போய் விடும்.
ஒரே ஏமாற்றம்!
இத்தனைக்கும் ' என்னங்க..எவ்வளவு தடவை சொல்றது, துணிகளை உலர்த்தறத்துக்கு
முன்னால ஒரு உதறு உதறுங்கன்னு...காய்ந்த துணியெல்லாம் இப்ப சுருங்கி போய் இருக்கு'
என்று என் மனைவி திட்டுவாள் என்று தெரிந்தும், அந்த காகத்தை 'டிஸ்டர்ப்' செய்யக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தானே அவ்வாறு செய்தேன் ?
அந்த முட்டாள் காகத்திற்கு ஏன் அது தெரியவில்லை!
சரி... போய் தொலையட்டும்..
நானும் அன்பானவன் தான் என்று, இங்கு என் இருப்பில் கூடு கட்டி, என் நட்பை அங்கீகாரம்
செய்தனவே குருவிகள்....
அது போதும் எனக்கு !!

------ 0 --------