அது ஒரு ஸ்டோர். முன்னும்,பின்னுமாய் ஆறு குடியிருப்புகள். காமன் லெட்ரின். பொதுவாக ஒரு கிணறு. அந்த காலத்தில், திருச்சியில் ஸ்டோர் குடியிருப்புகள் பிரசித்தம். சனி,ஞாயிறு சாயங்கால நேரங்களில், பொழுது போகாமல், பாச்சா என்கிற பார்த்தசாரதியும், கோண்டு என்கிற கோதண்டராமனும் விளையாட்டாக ஆரம்பித்த 'வாலி பால் ப்ளே'
இன்று களை கட்டி,நெட்..ஸ்பேர் பந்து..ஷார்ட்ஸ்..என்று பத்து, பதினைந்து மெம்பர்களாக வளர்ந்து விட்டது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை, வாலி பால் விளையாடும் போது ஆரம்பித்தான், ரகு.
' ஏன் சார், பாலகிருஷ்ணன் வீடு ஒரு மாசமாப் பூட்டிக் கிடக்கே..யாராவது வராங்களா?'
பாலகிருஷ்ணன் அந்த வாலிபால் டீமில் ஒரு ஆக்டிவ் மெம்பர். 'சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா'வில் க்ளார்க். திடீரென்று ஆஃபீஸர் ப்ரமோஷன் கொடுத்து, பம்பாய்க்கு அவனை ட்ரான்ஸ்பர் பண்ணி விட்டார்கள். பையன் ஸ்கூல் ஃபைனல் முடித்து விட, ஆர்டர் வந்த மூன்றாம் நாளே கிளம்பி விட்டான், பாலு.
' வெஜிடேரியன் வந்தா பரவாயில்ல..'
' வெஜ்ஜோ..நான்வெஜ்ஜோ.. அதுவா முக்கியம்? செட்டியாருக்கு டோக்,டோக்கா மாசம் ஐநூறு ரூபாய் வாடகை வந்தால் போறும். யாரு கொடுத்தா என்ன?'
' இப்ப, நம்ம பாலு வீட்டுக்கு அறு நூறு ரூபாய்க்கு ஆள் வந்தாச்சு.'
'அப்படியா'
' ஆள் வந்தாச்சா?'
' அறுநூறு ரூபாயா?'
' அச்சச்சோ ...அப்ப நமக்கும் நூறு ரூபாய் ஏத்திடுவாரே, செட்டியார்'
' யாரு வராங்களாம்?'
ஏக குரலில் கேட்டனர் ரகுவும், நாணாவும்.
' யாரோ லேடியாம்..'
' ஆஃபீஸ் கோயரா?'
' அவங்க ஆஃபீஸ் போக மாட்டாங்க. ஆனா, ஆஃபீஸ் அவங்களைத் தேடி வரும்' -நக்கலாகச் சொன்னான், கோண்டு.
' சமூக சேவகியா?'
' ஊஹும்..'
' அரசியல் வாதியா?'
' ஊஹூம்..'
' யாராக இருந்தால் என்ன? நம்ம ஸ்டோர் மொத்தத்தில நாறப் போறது..'
' கொஞ்ச நேரம் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டார்கள். வாலிபால் ஆட்ட
விறுவிறுப்பில் அது மறந்து போயிற்று.
ஒரு திங்கட்கிழமை, தெருவையே அடைத்துக் கொண்டு லாரி ஒன்று வந்து, அதிலிருந்து கண்டா, முண்டா சாமான்கள் இறங்கும் போது தான், பாலகிருஷ்ணன் வீடு பூட்டிக் கிடக்கும் விஷயமும், அந்த வீட்டிற்கு யார் குடி வரப் போகிறார்கள் என்கிற சுவாரஸ்யமும், மறுபடியும் வந்து ஒட்டி கொண்டது, அங்குள்ளவர்களுக்கு!
' யார் அவள்?'
' என்ன வயசு இருக்கும்?'
' பார்க்க எப்படி இருப்பாள்?'
ஆனால், வந்தது என்னவோ கட்டை, குட்டையாய் முண்டாசு கட்டிக் கொண்டு, இரண்டு,மூன்று ஆட்கள்!
பொறுப்பாக எல்லா சாமான்களையும் வீட்டினுள் எடுத்து வைத்து, பார்க்கும் எல்லார்
முகங்களிலும், அறைகிறார்போல், வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு சென்ற விதம், யார் அந்த வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்கிற ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தான் தூண்டி விட்டது.
' ரொம்ப வசதி பட்டவா போல இருக்கு' - இது பார்வதி மாமி.
' வசதிப் பட்டவான்னா, ஸ்டோருக்கு எதுக்கு வரணும்? தனி வீடு பார்த்துக்க வேண்டியது தானே..' - பேபி.
' என்னமோடிம்மா..தெரியாம சொல்லிட்டேன்' - பார்வதி மாமி சட்டென்று ஜகா வாங்கவும், ஒரு புதுச் சண்டையை எதிர்பார்த்து ஆவலோடு காத்துக் கொண்டிருந்த அத்தனை பேர் முகங்களிலும் 'பேஸ்து' வழிந்தது!
சாமான்கள் வந்து இறங்கி, கரெக்டாக பத்தாவது நாள், இரவு ஒன்பது மணிக்கு பால கிருஷ்ணன் வீட்டு 'லைட்' எரிந்தது.
காலையில் வீட்டைப் பார்த்தால் பெரிய பூட்டு!
ஒரு வாரமாகவே இப்படித்தான். இரவு ஒன்பது மணிக்கு வீடு திறக்கும். பன்னிரெண்டு மணி வரை லைட் எரிதல். காலையில் பூட்டிக் கிடக்கும். வீட்டில் யார்..யார்..இருக்கிறார்கள் ..எப்போது வருகிறார்கள்..எப்போது போகிறார்கள்..என்று ஒன்றும் புரியாத நிலை!
அப்புறம் ஒரு மாதம் பூட்டியே கிடந்தது.
பொதுவான லைட் ஒன்றிற்கு எலெக்ட்ரிக் சார்ஜ், தெரு கூட்டும் பெண்ணிற்கு மாசச் சம்பளம் போன்ற சில செலவுகளை 'காமனாக' செய்வார்கள். பாலகிருஷ்ணன் வீட்டைச் சேர்த்துக் கொள்வதா, வேண்டாமா என்கிற குழப்பம். யாராவது வீட்டில் இருந்தால் தானே... யாரிடம் போய் வசூல் செய்வதாம்?
வாடகை வாங்க வரும் செட்டியாரிடம், கேட்டுப் பார்த்தால், ' அதெல்லாம் நீங்களே சேர்த்துப் போட்டுக்குங்க..அவங்க கிட்ட யாரும், எதுவும் கேட்கக் கூடாது' என்று ஒரே போடாகப் போட்டார்.
செட்டியாரைப் பற்றி இங்கு ஒன்று சொல்ல வேண்டும். நாம் சொல்லும் குறைகளை பொறுமையாகக் கேட்பார். பிறகு 'இஷ்டம் இருந்தா இருங்க..இல்லாட்டி வீட்டைக் காலி பண்ணிடுங்க...ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வர எனக்கு ஆள் காத்துக்கிட்டு இருக்காங்க..யாரும் ரொம்ப கஷ்டப் பட்டு இங்கு இருக்க வேண்டாம்'னு கூலாக சொல்வார்.
அப்படிப் பட்ட செட்டியாரையே 'இம்ப்ரஸ்' பண்ற ஆள் யாராக இருக்கும்?
அங்குள்ளவர்களுக்கு ஆர்வம் இன்னமும் அதிகரித்தது.
குசுகுசுவென்று ஆண்கள் எல்லாரும் பேசிக் கொண்டார்கள். அவர்கள் ஆர்வம் அப்படியே பெண்களுக்கும் தொற்றியது.ஒரு வழியாய் சஸ்பென்ஸ் தீர்ந்தவுடன் 'அடச்சீ' என்றாகி விட்டது, எல்லாருக்கும்.
' வர வர செட்டியாருக்கு புத்தி பொடனியை விட்டு கீழே போயிடுத்துப் போல இருக்கு. நாலு பேர் கௌரவமாய் வாழற இடத்தில 'இவளை' குடி வைக்க எப்படி இவருக்கு மனசு வந்தது.... வாடகை வாங்க செட்டியார் வரட்டும்..நான் இதைக் கேட்காம விட மாட்டேன்..'
கோடி வீட்டுக் கோனார் குதிகுதியென்று குதித்தார்.
' நம்ம கிட்ட ஒத்துமை இல்ல..ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் அவர்ட்ட கோள் சொல்றோம். அவருக்கு அது சாதகமாப் போயிடுத்து. நம்ம கிட்ட ஒத்துமை இருந்தா, அவர் இப்படி செய்வாரா?'
ஆதங்கத்துடன் சொன்னார், அனந்து.
அனந்து சொல்வதிலும் நியாயம் இருக்கத் தான் செய்தது. நன்றுடையான் கோவிலில், விடிய விடிய மதுரை சோமு கச்சேரி கேட்டு விட்டு, விடிகாலை மூன்று மணி வாக்கில் சுவரேறி குதித்து, வீட்டிற்கு வந்ததை யாரோ செட்டியாரிடம் போட்டுக் கொடுத்து விட்ட வருத்தம் அவருக்கு!
எல்லாரும் கூடி ஒரு தீர்மானம் போட்டார்கள்.
யாரும் பாலகிருஷ்ணன் வீட்டில் பேசக் கூடாது. முக்கியமாக பேபி காஃபிப் பொடி கடன் கேட்டு அந்த வீட்டு வாசல் படி மிதிக்கக் கூடாது. செட்டியார் வேண்டுமானால் ஈஷிக் கொள்ளட்டும் ஈஷி!
' ஈஷிக் கொள்ளட்டும் ஈஷி! '
நாணி கோணிக்கொண்டு நாணா செட்டியார் மாதிரி 'மிமிக்ரி' பண்ணியது அனவரும் ரசிக்கும் படியாய் இருந்தது.
அந்த 'அவள்' ..அது தான் அந்த பாலகிருஷ்ணன் வீட்டில் குடி வந்தவளுக்கு யாரைப் பற்றியும்..எதைப் பற்றியும் கவலையில்லை. அவள் உண்டு..அவள் 'வேலை' உண்டு.. என்று இருந்தாள். எல்லாரும் சேர்ந்து உதாசீனப் படுத்தியதை, அவள் உதாசீனப் படுத்தியது அவர்கள் எல்லாருக்கும் மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது! எங்கிருந்தோ ஒருவன் வந்து அவள் வீட்டிற்கு பால் ஊற்றினான். கீரைக் காரி..பூக்காரி என்று அவள் வீட்டிற்கு மட்டும் புதிது,புதிதாய் ஆட்கள்!
' முறையில் வந்து தண்ணி பிடிக்கணும்கிற அவசியம் அவங்களுக்கு இல்ல..அவங்க எப்ப வந்தாலும், நீங்க தண்ணிக்கு விடணும்' என்று செட்டியார் ஆர்டர் போட்டு விட்டார். கரெக்டாக ஏழு இருபதுக்கு வேலைக்காரி வந்து இரண்டு குடம் தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அத்துடன் சரி..
பொச பொசவென்று வந்தது அத்தனை பேருக்கும். 'அவளுக்கு இருக்கிற ராங்கியப் பாரேன்' என்று ஆளாளுக்குப் பொருமினார்கள்.
செட்டியார் கூட அவளோட ' கஸ்டமரோ' என்று சந்தேகப் படவும் ஆரம்பித்தார்கள்.
அந்த ஸ்டோருக்கு அந்த 'அவள்' வருகையினால் வந்த நன்மை யாதெனில், அவரவர் தம்தம் வேற்றுமைகளை மறந்து ஒரு பொது எதிரியை ஒழித்துக் கட்ட ஒன்று கூடி நின்றது தான்!
எவ்வளவு நாள் அவளால் இங்கு தாக்கு பிடிக்க முடியும் என்று நினைத்தது போக, நாம இங்கு எவ்வளவு நாள் தாக்கு பிடிப்போம் என்று அவளுடைய அலட்சியம் ஒவ்வொருவரையும் நினைக்க வைத்தது. போதும் போதாததிற்கு செட்டியார் வீட்டை அவளிடம் விற்று விட்டார் என்று கூட ஒரு வதந்தி கிளம்பியது!
ஸ்டோரை விட்டு ' வாலி பால்' ஆட்டம் போயே போய் விட்டது. அவரவர் வீட்டு ஆண்களை, பெண்கள் பொத்தி,பொத்தி காத்து வந்தார்கள். ஆண்களோ, குடியரசு தின அணி வகுப்பின் போது, ஜவான்கள் வலது புறமாக சடாரென்று தலையை சாய்த்துக் கொண்டு 'பேரேடு' செய்வார்களே, அது போல ஆஃபீசுக்குப் போகும்போதும்.சரி...ஆஃபீஸ் விட்டு வரும்போதும்..சரி..அவள் வீடு இருந்த பக்கம் அனிச்சையாய் தலையை சாய்த்துக் கொண்டு, ஆஃபீஸ் நோக்கியோ...தம்தம் வீடு நோக்கியோ... சென்று கொண்டிருந்தார்கள்!
ஸ்டோரே கனத்துக் கிடந்தது!
தண்ணிச் சண்டை...பால் காரன் சத்தம்...காய்கறிகாரியுடன் பேரம்..'லஸ்மீ..கிஸ்ண மூர்த்தி..ப்போஸ்ட்ட்' என்ற போஸ்ட்மேன் கூவல்...'குருவை வணங்கக் கூசி நின்றேனோ..கொண்டவர் பாவத்தை சுமக்க மறந்தேனோ..பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ..' என்று வள்ளலார் போல பளிச்சென்று வெள்ளை உடை உடுத்தி, காலை சாய்த்துக் கொண்டு வருபவர்..
போச்சு!!
நேஷனல் ஹைஸ்கூல் க்ரவுண்டில் கீரன் கதை, தூப்புல் காலட்சேபம்..கும்பகோணம் சங்கர் பஜனை...ராதா கல்யாணம்..சீதா கல்யாணம்...பாகவத சம்மேளனம்...ஆச்சார்யரின் பட்டினப் ப்ரவேசம்..
எல்லாமே போச்சு!
இப்ப அந்த இடத்தில லேடீஸ் காலேஜ் கட்டப் போறாங்களாம்!
வடக்கு ஆண்டார் வீதியே தன் சுயத்தை இழந்து கொஞ்சம்,கொஞ்சமாய் மாறிக் கொண்டு வர, மாற விருப்பம் இல்லாதவர்கள், திசைக்கு ஒருவராய் பிரிந்து செல்ல ஆரம்பித்தார்கள்.
ஒரு கால கட்டத்தில், இந்த இடத்துக்கு இவள் தான் சாஸ்வதம் என்று எல்லாராலும் பேசப் பட்ட அந்த 'அவள்' கூட வீட்டைக் காலி செய்து கொண்டு போய் விட்டாள்!
மும்பை சென்ற பாலகிருஷ்ணன் அங்கேயே 'ரிடையர்டா'கி விட்டான். பையனுக்கும் அங்கேயே வேலை கிடைத்து விட்டது. வேலை.வெட்டி எதுவும் அவனுக்கு இல்லாததினால், மனசு பழைய நினைவுகளைப் புரட்டிப் பார்க்கும். ஸ்டோர் ஞாபகம் வந்து விடும், அடிக்கடி!
ஹாலில் மாட்டியிருக்கிறானே, இந்த பழைய 'வால் க்ளாக்' . இது இவனிடம் வந்ததே ஒரு தனிக் கதை!
ஒரு நாள் பக்கத்து வீட்டு மாலுக்குட்டி காணாமல் போய் விட்டாள். ஏக அமர்க்களம்..ஸ்டோரே அல்லோல..கல்லோலப் பட்டது. இரண்டு மணி நேர அலக்கழித்தலுக்குப் பிறகு, குழந்தை கிடைத்தவுடன் எல்லார் முகங்களிலும் நிம்மதி!
அடுத்த நாள் குழந்தை சொன்னாள்.
" இதோ பாருங்கோ,எல்லாரும்..நா இனிமே காணாமப் போக மாட்டேன்.."
" எப்படிடா, கண்ணு"
முகத்தை வெகு சீரியஸாய் வைத்துக் கொண்டு, 'நர்ஸரி ரைம்' போல் பாட ஆரம்பித்தாள்.
எம் பேரு மாலு..
எங்கப்பா பேரு பாலு..
முப்பத்தெட்டு பை மூணு..
மூக்கப் பிள்ள லேனு..
மணிவாசகம் ஸ்டோரு..
வடக்கு ஆண்டார் வீதி..
தெப்பக் குளம் போஸ்ட்டு..
திருச்சி ரெண்டு ....
" பாட்டு ஜோரா இருக்கே..யார் சொல்லித் தந்தா?"
" தோ...பால கிருஷ்ணன் அங்க்கிள். அப்பா
நான் இனிமே காணாமப் போயிட்டா, நீங்க யாரும் கவலைப் படாதீங்க..இந்த பாட்டை பாடினாப் போறும்..போலீஸ் மாமா இங்கு என்னை கொண்டு வந்து சேர்த்திடுவார்.."
குழந்தையை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான், அந்த பால கணேசன். மாலுக் குட்டியின் அப்பா!
இவன் ஸ்டோரைக் காலி செய்யும் போது அந்த பால கணேசன் ஒரு 'வால் க்ளாக்' ப்ரஸண்ட் பண்ணினான்.
அது தான் இது!
" ஹாலின் 'ரிச்னஸ்' க்கு இது திருஷ்டிப் பூசணிக்காய்' என்று மருமகள் சொன்னாலும், 'இது இங்க தான் இருக்கணும்'ங்கிற பால கிருஷ்ணனின் பிடிவாதமே வென்றது!
இங்கேயும் தான் மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் கிடையாது..அடுத்தவர் உதவியும் தேவை இல்லை...முகத்தை எப்போது பார்த்தாலும் இறுக்கமாக வைத்துக் கொண்டு...இயந்திர மனிதர்கள் !
ஃப்ளாட்டில் பக்கத்து வீட்டுக் காரர் பெயர் கூடத் தெரியாமல்..பத்து வருடங்களாக என்ன ஒரு ஜீவனே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!
பழையபடி, திருச்சிக்கே போய், அந்த ஸ்டோரிலேயே, 'செட்டில்' ஆகி விடலாமா என்று ஒரு நப்பாசை..
அந்த சமயம் பார்த்து, திருச்சியில் ஒரு கல்யாணம் வர, அப்பா, பிள்ளை இருவரும் கிளம்பி விட்டார்கள்.
பிரயாணத்தின் போது பையன் கேட்டான்:
' அப்பா..ஸ்டோர்ல உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருப்பாங்களா?'
' தெரியாதுப்பா..அப்பவே அனந்து பின்னவாசல் பக்கம் போயிடப் போறதா சொன்னார். கோனார் காலமாயிட்டார்னு தெரியும். பார்வதி மாமி இருக்க சான்ஸே இல்ல..நாணா, கோண்டு, பாச்சா, பேபி யாராவது இருக்கலாம்...இல்லாமலும் இருக்கலாம். ஆனா, அந்த ஸ்டோர் அங்க நிச்சயமா இருக்கும்'
கல்யாணம் முடிந்தவுடன், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ஆண்டார் வீதி வந்தார்கள், இருவரும்.
என்ன ஒரு ஏமாற்றம்!
அவன் குடி இருந்த இடத்தில் ப்ரம்மாண்டமாய் ஒரு அடுக்கு மாடி குடி இருப்பு!
அவனுக்காக அந்த ஸ்டோர் இன்னமும் காத்துக் கொண்டு இருக்கவில்லை. அந்த இடம்..சக மனிதர்களுடன் அவன் வாழ்ந்த அந்த இனிமையான நிகழ்வுகள்.. . ஒரு .ஒற்றை ரூபாய் நாணயம் உருண்டோடிப் போவது போல், போயே போய் விட்டது !
36 comments:
கீழ் மத்திய தரப்பின் முந்தைய தலைமுறையின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். இப்போதும் இந்த ஸ்டோர் குடித்தனங்கள் உள்ளதா?
பக்கத்து பிளாட்டில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாமலேயே வாழும் கலாச்சாரம் இன்றையது..
ஏதோ புருசன் பெண்ஜாதியாவது ஒருவொருக்கொருவர் தெரிந்து கொண்டு ஒரு வீட்டில் வாழ்கிறார்களே என்று சந்தோஷப் பட வேண்டியதுதான்!
ஒரு .ஒற்றை ரூபாய் நாணயம் உருண்டோடிப் போவது போல், போயே போய் விட்டது !
முத்தாய்ப்பான அந்த வரி.
ஆர்.ஆர்.ஆர் சார்.. கொஞ்ச நாழி ஸ்டோரில் குடியிருந்தது போல் இருந்தது. ஸ்டோர் குடித்தனத்தில் மக்கள் ரொம்ப அன்யோன்யமாக இருந்தார்களோ?
நிச்சயம் அவரவர்கள் இருந்த பழைய காலனி வீடுகளுக்கு நினைவு போயிருக்கும்...கூட்டு சேர்ந்து நெட்டு கட்டி வாலிபாலோ, சட்டிலோ விளையாடி மகிழ்ந்திருப்போம்... ஒரு பாலகிருஷ்ணன் வீடு நிச்சயம் இருக்கும்...இப்படியே ஒருவள் வந்திருப்பாள் என்றில்லாமல் , முசுடாகவோ முரடாகவோ ஒரு மாமா இருந்திருப்பார்..... அதன் பொருட்டு ஒரு கூட்டு கூடியிருப்போம்...... நிறைய உணர்ச்சிகளை கலவையாக எடுத்து வைத்துள்ளீர்கள்...ஒத்த ருபா நாணயம் உருட்டியது அருமை...
திளைக்க வைக்கும் நடை.
நிர்வாகம் மாறி, கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு விட்டாலும் பெயர் மட்டும் மாறாமல் இருப்பது, வடக்கு ஆண்டார் தெருவில் (1) அந்த “ராமா கஃபே” ஹோட்டல் (2) பழநி விலாஸ் நெய் ஸ்டோர் (3) அருகேயே உள்ள சுந்தர நிலையம் என்னும் ‘முடி திருத்தும் நிலையம்’. இந்த முடி திருத்தும் நிலையத்திற்கு சென்று அமர்ந்தால் போதும், ஊர் உலக விஷயங்கள், நாட்டு நடப்புகள், அரசியல் முதல் அன்றாட பிரச்சனைகள் வரை அனைத்தும் விவாதிக்கப்படும். சவர சுகத்துட்ன், செவிக்கும் நல்ல விருந்தாக அமையும். கத்தியை நம் முகத்தில் பதித்தபடி, உங்களுக்கு விஷயம் தெரியுமா என்று வெயிட் செய்யும் கஸ்டமரிடம் ஏதேதோ பேச ஆரம்பித்து விடுவார் அந்த வயதான பெரியவர். பேச்சு சுவாரஸ்யமாக எங்கெங்கோ சென்று வரும். சுழலும் நாற்காலியில் கண் மூடிய நிலையில் இவற்றை ரசித்த அன்று நான் ஸ்வர்க்கம் என்பது இது தானோ என்று நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு ரூபாய் நாணய்ம் போல உருண்டோடி விட்டது அந்த நாட்கள் .. உண்மை தான்.
அருமையான நடையில்! அருமையான நினைவலைகள் ! சூப்பர் !!!!!!!!!
இந்த ஒற்றுமையும் கூடலும் இப்போ இல்லையே.
ஒருவரையொருவர் நிமிர்ந்துகூடப் பார்க்க நேரம் கெட்ட வாழ்வு இப்போ.எங்கள் அப்பாவும் இதுபோல கூட்டுக்குடும்ப நினைவுகள் சொல்வார் !
ம்ம்ம் நல்லாயிருக்கு .... ஆர்.ஆர்.ஆர்
மறந்திட்டோமென்பது சும்மா ! ஒருவேளை மறந்தால் அது வியாதி .
நல்ல கதை .
லைன் வீடுகளில் இருந்த நினைவு வருகிறது. பத்துவீடுகள்.உற்சாகம்,சோகம் எல்லாம் சமமாகப் பகிர்ந்து கொண்டோம்.நாங்கள் பள்ளிக்கூட வயது என்றால்,கல்லூரிக்கு அடி எடுத்துவைக்கும் அண்ணாக்களும்,அக்காக்களும் திடீரென நடந்துகொள்வதில் அதிசயமும் நளினமும் காட்டுவார்கள். ஒரு திருமணம் கூட நடந்த நினைவு வருகிறது:)
முன்பொல்லாம் குடி"யிருப்பு",
இப்போ குடி'யேறுதல்'.
அப்போ மனம் திறந்த "பேச்சு",
இப்போ மனம் திறந்தா 'போச்சு'.
ஹும்..ம். பொருமூச்சுத்தான், வருது. உருண்ட ஒரு ரூபாய்,
தாத்தாவுக்கு, வெத்தலை வாங்க வைச்சிருந்தது.....
நானும் திருச்சிதான். ஸ்டோரில் குடியிருந்த அனுபவம் இல்லாவிட்டாலும், நண்பர்களின் அனுபவங்களை கேட்டதுண்டு. நல்லா எழுதியிருக்கீங்க. இன்னும் திருச்சியிலயா இருக்கீங்க?
மோகன்ஜி சொன்னது:
கீழ் மத்திய தரப்பின் முந்தைய தலைமுறையின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். இப்போதும் இந்த ஸ்டோர் குடித்தனங்கள் உள்ளதா?
பக்கத்து பிளாட்டில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாமலேயே வாழும் கலாச்சாரம் இன்றையது..
ஏதோ புருசன் பெண்ஜாதியாவது ஒருவொருக்கொருவர் தெரிந்து கொண்டு ஒரு வீட்டில் வாழ்கிறார்களே என்று சந்தோஷப் பட வேண்டியதுதான்!
நான் : என்ன செய்ய? நமக்கு அடுத்த ஜெனரேஷனை நினைத்துப் பாருங்கள். பயங்கரம்.
ரிஷபன் :ஒரு .ஒற்றை ரூபாய் நாணயம் உருண்டோடிப் போவது போல், போயே போய் விட்டது !
முத்தாய்ப்பான அந்த வரி.
நான் : பரவாயில்லையா? ஏதோ எழுத வருகிறதா, ரிஷபன்!
RVS :ஆர்.ஆர்.ஆர் சார்.. கொஞ்ச நாழி ஸ்டோரில் குடியிருந்தது போல் இருந்தது. ஸ்டோர் குடித்தனத்தில் மக்கள் ரொம்ப அன்யோன்யமாக இருந்தார்களோ?
நான்: அண்ணன் தம்பிகளாகப் பழகினோம். பாரத விலாஸ் படம் மாதிரி!
பத்மநாபன்:நிச்சயம் அவரவர்கள் இருந்த பழைய காலனி வீடுகளுக்கு நினைவு போயிருக்கும்...கூட்டு சேர்ந்து நெட்டு கட்டி வாலிபாலோ, சட்டிலோ விளையாடி மகிழ்ந்திருப்போம்... ஒரு பாலகிருஷ்ணன் வீடு நிச்சயம் இருக்கும்...இப்படியே ஒருவள் வந்திருப்பாள் என்றில்லாமல் , முசுடாகவோ முரடாகவோ ஒரு மாமா இருந்திருப்பார்..... அதன் பொருட்டு ஒரு கூட்டு கூடியிருப்போம்...... நிறைய உணர்ச்சிகளை கலவையாக எடுத்து வைத்துள்ளீர்கள்...ஒத்த ருபா நாணயம் உருட்டியது அருமை...
நான் : அட எல்லா ஸ்டோரிலும் ஒரு முரட்டு/முசுட்டு மாமா இருப்பார். கரெக்டாக சொல்றீங்களே!
கமலேஷ்:திளைக்க வைக்கும் நடை
நான் : வஞ்சனையே இல்லாமல் பாராட்டுகிறீர்களே,
கமலேஷ்!
வை.கோ:நிர்வாகம் மாறி, கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு விட்டாலும் பெயர் மட்டும் மாறாமல் இருப்பது, வடக்கு ஆண்டார் தெருவில் (1) அந்த “ராமா கஃபே” ஹோட்டல் (2) பழநி விலாஸ் நெய் ஸ்டோர் (3) அருகேயே உள்ள சுந்தர நிலையம் என்னும் ‘முடி திருத்தும் நிலையம்’. இந்த முடி திருத்தும் நிலையத்திற்கு சென்று அமர்ந்தால் போதும், ஊர் உலக விஷயங்கள், நாட்டு நடப்புகள், அரசியல் முதல் அன்றாட பிரச்சனைகள் வரை அனைத்தும் விவாதிக்கப்படும். சவர சுகத்துட்ன், செவிக்கும் நல்ல விருந்தாக அமையும். கத்தியை நம் முகத்தில் பதித்தபடி, உங்களுக்கு விஷயம் தெரியுமா என்று வெயிட் செய்யும் கஸ்டமரிடம் ஏதேதோ பேச ஆரம்பித்து விடுவார் அந்த வயதான பெரியவர். பேச்சு சுவாரஸ்யமாக எங்கெங்கோ சென்று வரும். சுழலும் நாற்காலியில் கண் மூடிய நிலையில் இவற்றை ரசித்த அன்று நான் ஸ்வர்க்கம் என்பது இது தானோ என்று நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு ரூபாய் நாணய்ம் போல உருண்டோடி விட்டது அந்த நாட்கள் .. உண்மை தான்.
நான் : ஆஹா.. நல்லா அனுபவிச்சு எழுதறீங்க, கோபு சார் !
வசந்த முல்லை:அருமையான நடையில்! அருமையான நினைவலைகள் ! சூப்பர் !!!!!!!!!
நான் : மிக்க நன்றி !
நல்ல ஒட்டுறவான வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறீர்கள்.
ஹேமா :இந்த ஒற்றுமையும் கூடலும் இப்போ இல்லையே.
ஒருவரையொருவர் நிமிர்ந்துகூடப் பார்க்க நேரம் கெட்ட வாழ்வு இப்போ.எங்கள் அப்பாவும் இதுபோல கூட்டுக்குடும்ப நினைவுகள் சொல்வார் !
நான் : ஆம்.. நெருங்கிய உறவுகள் கூட நீர்த்துத் தான் போய் விட்டன!!
சின்ன பாரதி:ம்ம்ம் நல்லாயிருக்கு .... ஆர்.ஆர்.ஆர்
மறந்திட்டோமென்பது சும்மா ! ஒருவேளை மறந்தால் அது வியாதி .
நல்ல கதை .
நான் : இளமைப் பருவம் யாரே மறக்க இயலும்?
வல்லி சிம்ஹன்:லைன் வீடுகளில் இருந்த நினைவு வருகிறது. பத்துவீடுகள்.உற்சாகம்,சோகம் எல்லாம் சமமாகப் பகிர்ந்து கொண்டோம்.நாங்கள் பள்ளிக்கூட வயது என்றால்,கல்லூரிக்கு அடி எடுத்துவைக்கும் அண்ணாக்களும்,அக்காக்களும் திடீரென நடந்துகொள்வதில் அதிசயமும் நளினமும் காட்டுவார்கள். ஒரு திருமணம் கூட நடந்த நினைவு
இருக்கிறது.
நான் : அட லைன் வீடுகளா? புதுசா இருக்கே!
வாசன் : முன்பெல்லாம் குடி"யிருப்பு",
இப்போ குடி'யேறுதல்'.
அப்போ மனம் திறந்த "பேச்சு",
இப்போ மனம் திறந்தா 'போச்சு'.
ஹும்..ம். பெருமூச்சுத்தான், வருது. உருண்ட ஒரு ரூபாய்,
தாத்தாவுக்கு, வெத்தலை வாங்க வைச்சிருந்தது.....
நான் : இது கூட சூப்பரா இருக்கே, வாசன் சார்!
அறிவிலி : நானும் திருச்சிதான். ஸ்டோரில் குடியிருந்த அனுபவம் இல்லாவிட்டாலும், நண்பர்களின் அனுபவங்களை கேட்டதுண்டு. நல்லா எழுதியிருக்கீங்க. இன்னும் திருச்சியிலயா இருக்கீங்க?
நான் : ஆமாம்..அ...( அறிவிலி என்று சொல்ல என்னமோ போல இருக்கு. நீங்கள்ளாம் அறிவிலின்னு
பேர் வைச்சுண்டா, நான் என்ன பேர் வைச்சுக்க?)
மாதேவி : நல்ல ஒட்டுறவான வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறீர்கள்.
நான் : மிக்க நன்றி, மேடம்!
//அவன் குடி இருந்த இடத்தில் ப்ரம்மாண்டமாய் ஒரு அடுக்கு மாடி குடி இருப்பு!
அவனுக்காக அந்த ஸ்டோர் இன்னமும் காத்துக் கொண்டு இருக்கவில்லை. அந்த இடம்..சக மனிதர்களுடன் அவன் வாழ்ந்த அந்த இனிமையான நிகழ்வுகள்.. . ஒரு .ஒற்றை ரூபாய் நாணயம் உருண்டோடிப் போவது போல், போயே போய் விட்டது !//
pala idangkal ippadith thaan irukkinrana. vaalththukkal. pakirvukku nanri.
A fantastic story that takes me back to my seventies...Angu pudhidhaaga vandhavalukku iththanai buildup thevaiya? moththathil aasai aasaiyaai asai poda vaitha kadhai...
மதுரை சரவணன்://அவன் குடி இருந்த இடத்தில் ப்ரம்மாண்டமாய் ஒரு அடுக்கு மாடி குடி இருப்பு!
அவனுக்காக அந்த ஸ்டோர் இன்னமும் காத்துக் கொண்டு இருக்கவில்லை. அந்த இடம்..சக மனிதர்களுடன் அவன் வாழ்ந்த அந்த இனிமையான நிகழ்வுகள்.. . ஒரு .ஒற்றை ரூபாய் நாணயம் உருண்டோடிப் போவது போல், போயே போய் விட்டது !//
pala idangkal ippadith thaan irukkinrana. vaalththukkal. pakirvukku nanri.
நான் : appadiaa?
lakshmiசொன்னது:A fantastic story that takes me back to my seventies...Angu pudhidhaaga vandhavalukku iththanai buildup thevaiya? moththathil aasai aasaiyaai asai poda vaitha kadhai...
நான் : யாரோ புதுசா வந்திருக்காங்களே! வாங்க..வாங்க..அடிக்கடி வந்து எழுதுங்க!!
Stored நினைவுகள்...
அருமை ராம்.. என்னோட பதிவை பாருங்க.. தீபாவளி மலருக்கு இன்று அல்லது நாளை படைப்பை அனுப்புங்க..
ஸ்ரீராம் : Stored நினைவுகள்...
நான் : ஸ்ரீ ராம், என்ன ஒரு அருமையான வார்த்தை ப்ரயோகம் Stored நினைவுகள் !!!! சூப்பர்!!!!!!!
தேனம்மை :அருமை ராம்.. என்னோட பதிவை பாருங்க.. தீபாவளி மலருக்கு இன்று அல்லது நாளை படைப்பை அனுப்புங்க.
நான் : இந்த கதையை ப்ரசுர சாத்யம் உண்டு என்று பத்திரிகைக்கு அனுப்பி, ஆறு மாதம் ஆகியும் நம்பிக்கையுடன் காத்திருந்து ஏமாந்தது தான் மிச்சம்!
2000ல் தீர்மானம் செய்து விட்டேன். இனி எந்த பத்திரிகைக்கும் கதை அனுப்பக்கூடாதென்று! மன்னிக்கவும்!!
அந்த ஏமாற்றத்தில் நான் எழுதிய கவிதை இது!
என் கதைகள்...
போரில் வீர மரணம்
எய்தும்,
போர்க் குதிரைகள்...
அல்ல..
என்னிடமே,
திரும்பி வரும்,
யாகக் குதிரைகள்...
அஸ்வமேத யாகக் குதிரைகள்!!!!
//என் கதைகள்...
போரில் வீர மரணம்
எய்தும்,
போர்க் குதிரைகள்...
அல்ல..
என்னிடமே,
திரும்பி வரும்,
யாகக் குதிரைகள்...
அஸ்வமேத யாகக் குதிரைகள்!!!//
தங்கள் கவிதை அருமை. அனுபவித்து எழுதியுள்ளீர்கள். எல்லா எழுத்தாளர்களுக்கும் உள்ள விரக்தியான அனுபவமே என்றாலும், அதையும் அஸ்வமேத யாகக்குதிரையாக மாற்றி, நகைச்சுவையாக உணரும் பக்குவம் உங்களுக்கு மட்டுமே உள்ளது, அது தான் உங்களின் தனிச்சிறப்பு.
என்னைவிட தங்களுக்கு சுமார் 10 வயது கம்மியாக இருப்பினும், 20 வருட அனுபவ முதிர்ச்சி பெற்றுள்ளீர்கள். எனக்கு இப்போது 2010 இல் ஏற்பட்டுள்ள பக்குவம் உங்களுக்கு 2000 த்திலேயே ஏற்பட்டுள்ளது. நமது படைப்புக்களை வெளியிட அந்தப் பத்திரிகைகளுக்கு கொடுப்பினை இல்லை என்று எடுத்துக்கொள்வோம்.
நான் : அப்படி அல்ல கோபு, சார். விரக்தியில் சொல்லவில்லை. என் எழுத்துகளுக்கு ப்ரசுர சாத்யம் இல்லை என்கிற யதார்த்தம் புரிந்ததினால் சொன்னேன்.
இது ஒரு information. அவ்வளவு தான். இதை சொல்ல எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை.
ஏன் என்றால், நான் எதற்கும் COMPROMISE செய்து கொள்வதில்லை!
Post a Comment