Tuesday, April 24, 2012

ஆக்கங்கெட்ட கூவே.....


“தாத்தா.....வ்வ்வ்...” “என்னலே?” ”நானும் மார்க்கெட்டுக்கு வருவேனாக்கும்” “சவட்டினேன்னா, மொகரை எகிறிப் போவும்..வீட்டுக் கணக்கைப் போடுலே” அப்பாதைக்கு விட்டு விட்டான், சட்டி மண்டை..ஒரு அரை மணி நேரம் கழித்து மெள்ள ஆரம்பித்தான்.. “தாத்தாவ்.. நானும் மார்க்கெட் வருவேன்” “ஏலே..அங்க வந்தா, நீ அத்த வாங்கித் தா, இத்த வாங்கித் தான்னு பிடிவாதம் பிடிப்பே..இப்ப மாசக் கடைசீல, துட்டு இல்ல..உனக்கு முறுக்கு வேணா இந்த தாத்தா வாங்கியாறேன்...” : ஊம்... நானும் உன்னோட வருவேன்...எனக்கு ஒண்ணும் வாங்கித் தர வேணாம்.. வேடிக்கை காட்டினாப் போறும்” சன்னாசி தாத்தா மன்றாடிப் பார்த்தார்..பய புள்ள விடுவதா இல்ல.. “ அட ஆக்கங் கெட்ட கூவே, வந்து தொலை!” தாத்தா கையைப் பிடித்துக் கொண்டு, ஜம்மென்று கிளம்பி விட்டான், சட்டி மண்டை. காளியக்கா விளை சந்தை! லவுட் ஸ்பீக்கர்..குடை ராட்டினம்...குழாய் பல்பு, என்று படு அமர்க்களமாய் இருந்தது, சந்தை. தாத்தாவ்...பஞ்சு மிட்டாய்.... “ஏல..பேசாமல் வா..கடசீல வாங்கித் தாரேன்..” தாத்தாவ்..எலந்த வடை.. “சொன்னேன்னில்ல..இதுக்குத் தான் உன்ன கூட்டியார மாட்டேன்னு சொன்னது” தாத்தா குச்சி ஐஸாவது வாங்கித் தா.... ”ஒண்ணும் கிடையாது” தாத்தா பலூன்... தரையில் விழுந்து..புரண்டு அழ ஆரம்பித்து விட்டான், சட்டி மண்டை. பொறுக்க முடியாமல் போய், முதுகில் ஒரு போடு போட்டார், தாத்தா.. விசும்பிக் கொண்டே வந்தான், சட்டி மண்டை. தாத்தாவுக்கே அவனைப் பார்த்தால், பரிதாபமாய் இருந்தது..இருக்கட்டும் என்று ஒரு பெரிய சைஸ் பாம்பே அப்பளம் வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தால், பய புள்ளயக் காணோம்.... கோச்சுகிட்டு எங்கிட்டாவது ஓடிப் போயிருக்குமோ, புள்ள.. எங்கே போயிருப்பான்? சல்லடைப் போட்டு தேடிப் பார்த்து விட்டார், சட்டி மண்டையைக் காணோம்! கிழவிக்கு என்ன பதில் சொல்வது? பயம் பிடித்துக் கொண்டு விட்டது, தாத்தாவுக்கு. ”ஏ..லே...சட்டி மண்ட...... ” தாத்தாவுக்கு அழுவாச்சியாய் வந்தது.. இங்கே.. பத்து கடை தள்ளி.... தா..த்...தாவ்....வ்.......... தாத்..........தாவ்......... தா..........த்தா வ்வ்வ்வ்வ்..... ஒருவர் பஞ்சு மிட்டாயோடு வந்தார்.. ”வாணாம் போ” கையை தட்டி விட்டான், சட்டி மண்டை. மற்றொருவர் கை நிறைய எலந்த வடையோடு வந்தார்.. ”இது வாணாம்....தாத்தா தான் வேணும்” “ தம்பி அளுவாதே, இந்தா குச்சி ஐஸ்..தாத்தாவை நான் பார்த்துட்டு வரேன்” “ குச்சி ஐஸ் வாணாம்” இன்னொருவர் கலர் கலராய் பலூன்களோடு வந்தார்... பலூன் வாணாம் போ..தாத்தா தான் வேணும்...தாத்தாவ்...” கதறிக் கொண்டு இருந்தான், சட்டி மண்டை! “ தா.....த்த்தா வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”

Sunday, April 22, 2012

அடுத்த ஜன்மத்தில் .......


”தமிழ் தெரியுமா?” என்ற என் கேள்விக்கு, “ஐ நொ டமிள்” என்று சொன்னவர்களைத் தான் எனக்குத் தெரியும்.. ஆனால், நீயோ ”நான் தமிழ் பெண் தான் சார்” என்று சொல்லி என்னை வியக்க வைத்தாய்... ” நீங்க செங்கிப் பட்டியிலிருந்தா வர்ரீங்க, நான் பார்த்தேன்.. பாவம் சார் நீங்க... எவ்ளோவ் தூரம்?” என்று வலிய அறிமுகம் ஆனாய்.. என் கவிதையை ரசிக்க வந்து என்னுள் சுனாமியாய் சுற்றிக் கொண்டாய் பாழும் மனம் தடுக்கிறதே.. கோட்,சூட் போட்டுக் கொண்டு, கலர் கலராய் பஞ்சு மிட்டாய், கம்மர் கட், இலந்த வடை எல்லாம் சாப்பிட முடியுமா? உன் அணுக்கம் தேவை தான்.. என்ன செய்வது? அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால், உன் மடியில் குழந்தையாக வாவது!........

Saturday, April 14, 2012

ஆனாலும் நீ கொஞ்சம் தாராளம் தான்!

என்னருமை ஏப்ரல் மாதமே! உன்னைச் சொல்லிக் குற்றமில்லை! முதல் நாளே முட்டாளாக்கப் பிறந்தவள் தானே நீ? அதனால் தான் என்னவோ, ஏப்ரல் என்றாலே எல்லாருக்கும் ஒரு......... அதை என்னவென்று சொல்வது? நல்ல வேளை ஞாயிறன்று பிறந்ததால்.... அகத்தில் மட்டுமே அனைவரும் முட்டாளானோம்? இந்த மாதம் தான், புனித வெள்ளி, மஹா வீர் ஜெயந்தி, தமிழ் வருட பிறப்பு, அம்பேத்கார் தினம்.. என்று வ ரி சை யா ய் விழாக்கள்... அதனால், நாங்கள் விழுந்து விட்டோம்... அதுவும் தொடர்ச்சியாய் சனி, ஞாயிறு தினங்கள் அருகில்... அரசு ஊழியர்கள் பாடு படு ஜாலி! வெளியூர்க் கார அரசு ஊழியர்கள் கூட, இரண்டு நாட்கள்...முதல் வாரம்..இரண்டாம் வாரம் லீவ் போட்டால் போதும்! வள்ளிசாக அந்த 14 நாட்களுக்கு, இரண்டு நாட்கள் ஆஃபீஸ் வந்தால் போறும்! எங்களைப் பாரேன்.... பொது ஜனங்கள் எவ்வளவு தவிக்க வேண்டியுள்ளது? ஒரு பேங்குக்கு போக... அரசு அலுவலகத்தை நாட... பென்ஷன் க்ளாரிபிகேஷன்... ரேஷன் காடு மாற்ற.. என்று எதற்கெல்லாம் அரசை நாட வேண்டியுள்ளதோ... அதற்கெல்லாம் போக முடியாமல், நாங்கள் தவிக்கிறோமே... இந்த மாதம் மட்டும் இவ்வளவு நாட்களா லீவ்? விட்டால் ‘கம் செப்டம்பர்’ போல் கம் ஏப்ரல்’ என்று அரசு ஊழியர்கள் பாட்டு பாடப் போகிறார்கள்... ஹூம்... அவர்களாவது எஞ்சாய் பண்ணட்டும் சும்மா சொல்லக் கூடாது....... ஆனாலும்,
நீ கொஞ்சம் தாராளம் தான்!

Thursday, April 12, 2012

நந்தனமே வருக..வருகவே...
கந்த மணம் கமழ,காய் கனிகள் புடை சூழ,
விந்தைகள் செய்விக்க, வந்துதித்த மாமணியே,
வந்தனமென வாய் மணக்கக் கூவுகிறோம்,
நந்தனமே வருக, வருகவே..!

*

வந்த உறவும்,வருகின்ற புது உறவும், சொந்த
பந்தமெல்லாம் ஆல் போல தழைத்தோங்க,
எந்த நாளும் இன்று போல் இன்புற்றிருக்க,
நந்தனமே வருக, வருகவே..!

*

எந்தையும், யாயும் மகிழ்ந்துலாவிட, பிணி
கந்தையும், வறுமையும் வெகுண்டிங்கு ஓடிட,
மந்தை,மந்தையாய் வளத்தினை நல்கிடும்,
நந்தனமே வருக,வருகவே..!

*

முந்தை வருடம் முழுதாய்ச் சென்றிட,
வந்த குழப்பமும் பனி போல் மறைந்திட,,
சிந்தையை இறை பால் வைத்திட,,
நந்தனமே வருக, வருகவே..!

Friday, April 6, 2012

உஷ்! பேசாதே!!பேசாதே என்று சொன்னால், அதைக் கேட்பவனுக்கு எவ்வளவு ஆத்திரமும், கோபமும் வரும் என்று தெரியுமா, உங்களுக்கு?
எனக்குத் தெரியும்.
அதுவும் நன்றாகவேத் தெரியும்..
இன்னொன்றும் தெரியும்....
எவ்வளவுக்கு எவ்வளவு பேசாமல் இருக்கிறோமோ..அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு மதிப்பு என்பது!
நம்மை புத்திசாலி என்றும்..அதிமேதாவி என்றும் ’ஸ்காலர்’ என்றும் ஒரேடியாய் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் நாம் பேசப் பேச, தம் அபிப்ராயத்தை கொஞ்சம்..கொஞ்சமாய் மாற்றிக் கொண்டு வருவார்கள் என்பதையும் அறிவோம்..
பேசாமல் இருக்க முடிகிறதா?
தவளைகளைப் பாருங்கள்!!
மழை பெய்தால்..தவளகளுக்கு ஏக குஷி! கொர்..கொர்..என்று கத்தி தீர்த்து விடும், அது எப்படி என்றால், பின்னால் பதுங்கியிருக்கும் பாம்பின் டிஃபன் பிரச்னையை நாம் தான் தீர்த்து வைக்கப் போகிறோம் என்று தெரிந்தோ..தெரியாமலோ, கடைசி வரை கத்தி..கத்தியே உயிரை விடும்..
அதனால் தான் என்னவோ, அதை மண்டூகம் என்று அழைக்கிறார்கள்?
இருந்தாலும், எங்கே பேசாமல் இருக்க முடிகிறது?
பேசுவதற்கு பேசித் தானே ஆக வேண்டும்?
அதுவும்,, நம்மை மதித்து பேசக் கூப்பிட்டு..ஒரு மைக் செட்..கேட்பதற்கு நாற்பது, ஐம்பது ஆட்கள் ...... பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை அப்ளாஸ் .....
என்ன செய்வீர்கள்?
இப்படித் தான் ஒரு முறை என்னை ஒரு கூட்டத்திற்கு பேசக் கூப்பிட்டார்கள்..
நானும் போயிருந்தேன்..
மழைக்கு கத்தும் தவளைகளைப் போல் ஆனந்தமாய் பேசினேன்..’பாம்பு’ வெகு அருகில் இருக்கிறது என்பது அறியாமலேயே.
ஆம்..
யார் பேச்சை நான் ஆயுளுக்கும் கேட்டுக் கொண்டிருப்பேனோ, அந்த நபர் அன்று என் பேச்சைக் கேட்க வந்ததை விதி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
இரவு சாப்பட்டிற்குப் பின்...
“ நீங்க அபப்டி பேசியிருக்கக் கூடாது..”
“ எப்படி பேசுவது?”
“ நீங்க பேசினது தப்பு?”
“ அது எப்படி?”
விவகாரம் நீ..............ண்..........................டு............. கொண்டே போய்,
கடைசியில் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
சுனாமி ஒன்று சுற்றி..சுற்றி...சுழற்றி..சுழற்றி அடித்தது!!
***********************************************************************************
பொழுது புலர்ந்தது...
யார்..யாரோ செய்த தவத்தால்..
பெரு மழை பெய்து ஓய்ந்தது போன்ற அமைதி!
அமைதியை குலைக்க வந்து சேர்ந்தார், நாராயண ராவ்!
ஓசிப் பேப்பர் வாங்க மட்டும் அவர் வரவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்..
நேற்று இரவு அவருக்கு ‘அவல்’ கிடைத்திருக்கிறது..விடுவாரா, அவர்!
யார் வென்றார்கள் என்பதைக் கண்டறிய ஆவல்!
ஹாலில் இருந்தாள், என் பெண்.
இதோ.. இதோ...
நாராயண ராவ் வந்து விட்டார்..வந்தே விட்டார்...
“ அம்மா...அப்பா இல்லையா?”
“ இந்தாங்க அங்க்கிள், பேப்பர் ”
எப்படி கேட்பது என்று ஒரு நிமிஷம் யோசித்தார்....
இங்கு என் பெண் பற்றி சொல்ல வேண்டும்..விஷயங்களை கசிய விடமாட்டாள்.. நம் ராணுவ தளபதி வி.கே. சிங்கிற்கு அவள் எவ்வளவோ தேவலை..
கடைசியில் கேட்டே விட்டார்...
“ நீங்க மதுரையா.?...சிதம்பரமா..?”
“திருவானைக்காவல்”

Tuesday, April 3, 2012

கவிஞனின் மனைவி அமைவதெல்லாம்.....


பொதுவாக பிரபல கவிஞர்களின் மனைவிகளைப் பற்றி நம்மில் யாருக்காவது தெரியுமா? குறைந்த பட்சம் அவர்கள் பெயராவது தெரியுமா? (ஒன்றிரண்டு பெயர்கள் தவிர.).
சாய்ந்த கதவருகில், ஒருக்களித்து..,கணவன் இடும் ஏவலை நிறைவேற்றக் காத்துக் கொண்டு இருக்கும்..மனதில் ஆசையின்றி ஏதோ ’இவரகத்தில் வந்து வாக்கப் பட்டு விட்டோம், யார் மனமும் கோணாமல், நம் செயல்கள் இருக்க வேண்டும் என்கிற ஜாக்கிரதை உண்ர்வுடன்..
எந்த வித விருப்பும், வெறுப்பும் இன்றி, ஸ்திதப்பிரக்ஞர்கள் போல்..மொத்தத்தில் ஒரு ரோபோ நடந்து கொள்வது போல்...
அந்த கவிஞனுக்கு அப்போது தான் பீறிட்டுக் கிளம்பும்..” அடியே, இவாளுக்கு காஃபி கொண்டு வா..அப்படியே கொறிக்க ஏதாவது கொண்டு வா..” இருக்கும் கால் லிட்டர் பாலில் அத்தனை பேருக்கும் காஃபி..இருக்கும் எண்ணையில் பொறித்த வடாம்.....தட்டை கைமுறுக்கு....இப்படி ஏதாவது ஒன்று.. எல்லாவற்றையும் தின்று விட்டு கவிஞனின் கவிதையைப் பாராட்டும் கும்பல்...
வீட்டு வேலை முடித்து அயர்ந்து போய் இருக்கும் அருமனைவியிடம் சண்டைக்குப் போகிறான் ஒரு கவிஞன்! அவன் பெண்மையின் மாண்பு பற்றி எழுதிய கவிதையை அவள் அப்போது பாராட்டவில்லையாம்!
வீட்டில் பத்திரப் படுத்தி வைத்த மணி அரிசிகளை காக்கை, குருவிகளுக்கு விசிறி எறிந்து விட்டு,’காக்கை, குருவி எங்கள் ஜாதி’ என்று பாடினான், ஒரு கவிஞன்..விதியே என்று கேட்டுக் கொண்டு இருப்பது கூட குந்தகமோ என்ற கவலையில் அவன் மனைவி!

..சிந்து நதி மிசை நிலவினிலே, சேர நன்னாட்டிளம் பெண்களுடனே.
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,தோணிகள் ஓட்டி விளையாடிடுவோம்..
என்ன ஆகும்?
ஜில்லென்ற காற்று உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் போய், ஜலதோஷம் .. மூக்கடைப்பு..என்று கடைசியில் அது ஒரு காய்ச்சலிலோ..ஜன்னியிலோ.. ஒற்றைத் தலைவலியிலோ தான் போய் முடியும்..
அப்பவும் அந்த கவிஞனுக்கு, பற்றற்ற அவன் மனைவி தான் பற்று போட வேண்டும்!
கவிஞர்களை குழந்தைகள் என்று சொல்வதா..காட்டு மிராண்டிகள் என்று சொல்வதா...ஊரோடு ஒத்துப் போகாதவர்கள் என்று சொல்வதா? போதாத குறைக்கு, வறுமை வேறு ’சயாமிய இரட்டையர்’ போன்று அவனுடன் கூடவே வர..
பாவம் அந்த மாதரசிகள்!
அகழ்வாரைத் தாங்கும் நிலம் கூட சமயத்தில் வெகுண்டு எழும்..பூகம்பமாய் வெடிக்கும்..சுனாமியாய் கடலிலிருந்து ஆர்ப்பரிக்கும்..
பொறுமையே பூஷணமாய் அணிந்த அந்த மாபெரும் கவிஞர்களின் மாதுகுல சிரோன்மணிகள் அதனினும் பொறுமை மிக்கவர்கள்....
உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.தாயே
நம் பாரத மாதா அருகில், தங்களுக்கான இருக்கைகள் போடப் பட்டுள்ளன..வாருங்கள்..
வந்து அமர வேண்டும் நீங்கள்...

Sunday, April 1, 2012

இறந்து போன இன்வெர்ட்டர்கள்!!!


ஆயிரம் வாட்ஸ்,ஐநூறு வாட்ஸ் என்று
அழகிய பெண்களை அலகிட்டு வாய்ப்பாடு கூறிய,
அத்தனை ‘ரோட் சைட் ரோமியோக்களும்,
ஆஃப் ஆகி விட்டார்கள்..
காரணம்,
கரெண்ட் கட்!!!
*********************************************
வீடு வரை விளக்கு,
வீதி வரை லாந்தர்,
காடு வரை கொள்ளி,
கடைசி வரை எதுவோ??
**********************************************
தொடரும் மின்வெட்டு..
உற்பத்தி பெருகியது,
குழந்தைகள்?????!!!!
**********************************************
மின் மயானத் திடலில்,
காத்திருக்கும் பிணம்
ஒன்று சொன்னது:
“விட்டு விட்டுப் போகுது கரெண்ட்,அது
வந்தவுடனே, என்னை
சுட்டு விடப் போகின்றார்,
சுற்றத்தார்!!!!”
************************************************
வளி மூலம்,
புனல் மூலம்,
அனல் மூலம்,
மின்சாரம் வராததால்,
அடங்கியது,
ஐம்புலன்ஸும்!!
*************************************************