Sunday, March 28, 2010

முரண்பாடு....


எதிலுமே......
ஒளிவு, மறைவு
இல்லா
கவர்ச்சி நடிகை
ஜிகினாஸ்ரீ
வீட்டில்
ஐ.டி. ரெய்ட்..
சிக்கியது,
மறைத்து
வைக்கப் பட்ட
கறுப்புப் பணம்!!!!
*********************
தண்டச் சோறு,
வெட்டிப் பயல்
என்று,
பெற்றோர்
ஒதுக்கி வைத்த
பிள்ளைக்கு,
வேலை கிடைத்தது,
முதியோர் இல்லக்
காப்பாளராக !!!!
**********************
பசுமையான
வயல்களை,
அழித்து...
புதிதாய் நகர்
ஒன்று
எழுந்தது..
'வாடிய பயிர்
கண்டு வாடினேன்'
என்று பாடிய
வள்ளலார் பெயரில்..!!!!
***************************

Saturday, March 27, 2010

சாராத்து அம்பி....


'வாத்யாராத்தில பிறந்து, வாத்யாராத்தில் வாக்கப் பட்டு என்ன சுகத்தைக் கண்டேன்...'
அம்மா தினம் தினம் புலம்புவாள். கணேச கனபாடிகளுக்கு பெண்ணாகப் பிறந்து, மூணாம் க்ளாஸ் வாத்தியார் வைத்தியனாதய்யருக்கு கழுத்தை நீட்டியதைத் தான் அப்படி சொல்லிக் கொள்வாள்.
"இதோ பாருடா,அம்பி, இந்த கூடத்தில தான் நெல்லு குதிர்,குதிரா வெச்சிருப்பா. அதோ அங்கே மாங்காயும், மாம்பழமும் கூடை,கூடையாய்... காய்கறிகளைச் சொல்லு? ஒண்ணா..இரண்டா..இது எல்லாம் போறாதுன்னு எங்க அம்மாக்கு தை மாசம் மூட்டை, மூட்டையா அரிசி,பருப்பு,வெல்லம், வண்டி நிறைய வாழைக் காய் எல்லாம் தோட்டத்தில விளைஞ்சது அவ அண்ணா, தம்பி கதிராமங்கலத்திலேர்ந்து அனுப்புவா. எங்கம்மா பணக்காரியாக்கும். எங்கம்மா பேர்ல அந்த காலத்திலேயே மஞ்சக் காணி சொத்து எழுதி வைச்சிருந்தா, எங்க தாத்தா.'
அம்மா அந்த காலக் கற்பனையில் மூழ்கி விட்டால், அவளை லேசில் எழுப்ப முடியாது.
' மாத்தூர் ரொம்ப செழிப்பான கிராமம்டா. அங்க நாம இருந்த வரை ஒரு குறையும் இல்லே..இங்க இப்படி சீப்படணும்னு, என் தலையெழுத்துடா அம்பி..என் தலையெழுத்து'
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அந்த கிராமத்தைப் பற்றித் தான் எப்போழுது பார்த்தாலும் புலம்பல். சாமினாதனும் மாத்தூரில் பத்து வருஷம் இருந்திருக்கிறான். இருந்தாலும், இவ்வளவு தூரம் அவனுக்குத் தெரியாது.
இதோ எதித்தாற்போல், வெத்தலை போட்டுண்டு உக்காந்துண்டு இருக்காரே, அவரும் திருச்சினாப்பள்ளி ஜங்ஷனிலிருந்து வந்துண்டு இருக்கார். இவரைப் பார்த்தாக் கூட, தஞ்சாவூர்க்காரர் மாதிரித் தான் இருக்கு. முகத்தில் ஒரு அலட்சியம்...வெத்தலையை மடிக்கறதுல ஒரு தனிக் களை..பத்து தேசக் காராள்ள, தஞ்சாவூர்க் காரனைத் தனியாக் கண்டுப் பிடிச்சுடலாமே...!
சாமினாதன் அவரைக் கவனித்துக் கொண்டிருந்ததினால் அவனைப் பார்த்து லேசாய் சிரிக்கிறார். பதிலுக்கு இவனும் சிரித்தான்.
' சாருக்கு எந்த ஊரு?'
'மெட்றாஸ். எம் பேரு பாலசுப்ரமணியம்'
நட்புடன் கை நீட்டினார்.
'நா சாமினாதன். இங்க திருச்சில இருக்கேன்'
' மெட்றாஸ் தான் சாருக்குப் பூர்வீகமா?'
ஏதோ சிலபேரைப் பார்த்தா, நாமே பேசணும் போலத் தோணும். அவாளை முன்னப் பின்னத் தெரியாது. இருந்தாலும் இவா நமக்கு அன்னியமில்லே. நம்மோட ஒருத்தர்ங்கற மாதிரி ஒரு உந்தல். அவாளோட, பேசறதில ஒரு உற்சாகம்...
'இல்லே சார்..எனக்கு வலங்கை மான் பக்கத்தில....'
' வலங்கை மான் பக்கத்தில எந்த ஊர் சார்?'
இவனுக்குச் சொன்னாப் புரியுமா என்பது போல ஒரு பார்வை பார்த்தார், அந்த பாலசுப்ரமணியம்.
' கதிராமங்கலம்னு ஒரு கிராமம்'
' அடடே! மாத்தூருக்குப் பக்கத்தில இருக்கே, அந்த ஊரா?'
அவ்வளவு பெரிய மனிதரை, அழுக்கு வேட்டி, அப்பளக் குடுமி சாமினாதனிடம் ஈர்க்கிறது என்றால் என்ன அர்த்தம். பக்கத்து,பக்கத்து ஊர்க் காரர்கள்!
' மாத்தூர்ல கொஞ்ச நா நாங்க இருந்தோம், ஸார்'
கொஞ்ச நாளா? அங்கேயே பொறந்து, வளர்ந்து எட்டு வயசுல அப்பாவைப் பறி கொடுத்து, ஒண்ணுமே இல்லாம, திருச்சிக்கு ஒண்டிண்டு வந்ததையெல்லாம் இப்ப எதுக்குக் கிளறணும்?
' அங்க யார் அகம்?'
' ஸார் அகம்' - சொல்ல நாக்குத் துடிச்சது சாமினாதனுக்கு. வேண்டாம்.இவர் நாம தேடிண்டு போறவராகக் கூட இருக்கலாம்.எதோ ஒரு வரட்டுக் கௌரவம் தடுத்தது.
'உங்க அப்பா அந்த கிராமத்தில என்னவா இருந்தாரோ?'
பாலசுப்ரமணியம் இழுத்தார்.
'பயிர்ச் செலவு பண்ணிண்டு இருந்தார். வைத்யனாதய்யர்னு பேரு'
'நீங்க என்ன பண்றேள்?'
' ஆண்டார் வீதியில நாராயண சாஸ்திரிகளுக்கு அசிஸ்டெண்ட் ஆக இருக்கே'ன்னு அவர்ட்ட சொல்லிக்க கூச்சம்.
'நானும் விவசாயம் தான்'
'மாத்தூர்ல நான் இருபது வருஷம் இருந்திருக்கேன் சார். அங்க வைத்யனாதய்யர்னு ஒருத்தர், உங்கப்பா பேர் தான்.பள்ளிக் கூடத்தில வாத்யாரா இருந்தார். உங்களுக்குத் தெரியுமா?'
'தூக்கி வாரிப் போட்டது.
'ஊகும்.. தெரியாது.'
ரொம்பவும் கஷ்டப் பட்டுச் சொன்னான், சாமினாதன்.'அப்பாவைப் பத்தி புள்ளை கிட்ட கேக்கறேளே..இது நியாயமா. நான் தான்..நான் தான்' என்று மார்ல பட படன்னு அடிச்சுக் கணும் போல ஒரு ஆத்திரம். எல்லாத்தையும் எதுவோ ஒண்ணு வந்து தடுத்தது.
நாராயண சாஸ்திரிகளுக்கு நாலைஞ்சு வீடு தான் உபாத்யாயம். ஆண்டார் வீதியிலே ப்ரணதார்த்தி, சப்தரிஷியெல்லாம் ஓஹோன்னு கொழிக்கும் போது முருங்க மரத்துக்கேத்த கம்பளிப் பூச்சி மாதிரி இவர்ட்ட நாம் ஒட்டிக்கணும்னு, நம்ம தலையில எழுதி இருக்கே.
..... தோழனோடும், ஏழமைப் பேசேல் னு
சொல்லுவா. முன்ன, பின்ன தெரியாதவர்கிட்ட
நம்ம கஷ்டத்த சொல்லி எதுக்கு அவரையும் கஷ்டப் படுத்தணும்?' .....
சரசு அடிக்கடி சொல்லுவா.யாரோ கதிராமங்கலத்துக் காரர் ஒருத்தர் பட்டணத்தில பெரிய வேலைல இருக்காளாமே. உங்கப்பா கூட அவருக்கு சின்ன வயசுல நிறைய உதவி பண்ணியிருக்காராமே. கேட்டுப் பாருங்கோ. பழைய விசுவாசம் இல்லாமலாப் போயிடும். ஏதாவது உதவி பண்ண மாட்டாரான்னு, சரசு தலைக்குத் தலை அடிச்சண்டதனாலே, இவனுக்கும் ஒரு நப்பாசை. யார்கிட்டயோ அட்ரஸ் வாங்கிண்டு, குசேலர் கிருஷ்ணனை பார்க்கப் போறாப்பல, தைர்யமா பட்டணம் கிளம்பிட்டான். ஒரு வித்யாசம். இந்த குசேலருக்குக் கிருஷ்ணனைத் தெரியாது. போய்த் தான் அறிமுகப் படுத்திக்கணும்.
ஆச்சு..இன்னும் அஞ்சு நாள்ல ஆண்டார் வீதிக்கு ஒரு முழுக்கு..நாராயண சாஸ்திரிகளுக்கு ஒரு முழுக்கு. கதிராமங்கலம் அம்பி கை தூக்கி விட மாட்டானா, என்ன?
..... நாம தேடி வந்தது, இவர் தான் போல இருக்கே. இங்கேயே கேக்கலாமா...இல்லாட்டா மெட்றாஸ் போய்ப் பார்த்துக்கலாமா?...
'மெட்றாஸில யாராவது சொந்தக் காரா இருக்காளா?'
' இல்ல சார். மைலாப்பூர்ல பால்ய சினேகிதன் ஒருத்தன் இருக்கான். பார்த்துட்டு வரலாம்னு தான்..'
' அப்படியா, நானும் கொஞ்ச நாள் மைலாப்பூர்ல இருந்தேன்..'
பழைய நினைவுகளில் மறுபடியும் ஆழ்ந்தார், பாலசுப்ரமணியம். ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் மல்லிகைப் பூ விற்பவர்கள் அவர்களுடைய மௌனத்தைக் கலைத்தார்கள்.
பக்கத்தில நரசிங்க மங்கலம்னு ஒரு ஊர். ரொம்ப விசேஷமா ஐயனாருக்குத் திருவிழா நடக்கும். ராப்பகலா நாடகம். பக்கத்து, பக்கத்து
கிராமங்களிலிருந்து ஜனங்க வந்துடும். அவனவன் டெல்லி,பாம்பே, கல்கத்தான்னு வேலைல இருப்பான். எப்படித் தான் தெரியுமோ? பங்குனி மாசம் 'டாண்ணு' வேஷம் போட்டுக்க வந்துடுவான்.தப்பு..தப்பு..அவனை எதுவோ நரசிங்க மங்கலத்துக்கு வரவழைச்சுடும். இப்ப நாடகமெல்லாம் போடறாளோ இல்லையோ..'
பாலசுப்ரமணியம் சொல்லிக் கொண்டு போனார்.
லால்குடி வந்தது. போனது!
' சாம்பார் அம்பி கேள்விப் பட்டிருக்கேளா?' - பால சுப்ரமணியம் கேட்டார்.
' இல்லையே சார்' - என்ன வந்து விட்டது இந்த சாமினாதனுக்கு? எல்லாம் தெரிஞ்சுண்டும், ஒண்ணுமே தெரியாத மாதிரி, எது கேட்டாலும் இல்லை..தெரியாது தானா?..
" கிராமத்தில நிறைய பசங்க பேர் அம்பி தான்.வித்யாசம் தெரியணும்கறதுக்காக ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு காரணப் பெயர். எம்பேர் சாம்பாரம்பி. ஏன்னா, பள்ளிக் கூடத்தில மத்யானம், எப்போதும் சாம்பார் சாதம் தான் கட்டிண்டு வருவேனாம். இதேப் போல, அந்த வாத்யாராத்திலேயும் ஒரு அம்பி . அவன் பேர் சாராத்து அம்பி! சார்..சார்னு அவர் மேல நாங்க உசிரையே வைச்சிருப்போம்..நான் சின்ன வயசில, ரொம்பக் கஷ்டப் பட்டவன்! எனக்கு அப்பா கிடையாது.எங்க அம்மா கிராமத்தில பத்து, பாத்திரம் தேய்ச்சு வயத்த கழுவிண்டு இருந்தா. மாசம் முழுக்க பத்து தேச்சாலும், இப்ப டவுன்ல பத்து ரூபா தானேத் தரா..நாப்பது, நாப்பதைந்து வருஷத்துக்கு முன்னால, அதுவும் கிராமத்தில என்ன கிடைக்கும்? நினைச்சுப் பாருங்கோ?'
' கஷ்டம் தான்'
' கஷ்டமா ....கொஞ்ச நஞ்சமில்ல..அப்ப சார் தான் தூணாய் இருந்தார். எங்கம்மா, ஏதோ கூடப் பிறந்த சகோதரன் மாதிரி அண்ணா..அண்ணாம்பா..எங்கம்மா மட்டுமல்ல..ஊரே அவரை அண்ணான்னு தான் சொல்லும்! எத்தனை நாள் சாராத்தில நானும், அம்மாவும் சாப்பிட்டிருக்கோம் தெரியுமா? பெரிய தர்மிஷ்டர், அவர். சங்கர மடத்தில முத்ராதிகாரியாக வேறு இருந்தார்....இந்த உடம்பு..இந்த பாலசுப்ரமணியம்...இன்னிக்கு பெரிய ஆடிட்டர்..ஆயிரமாயிரம் சம்பளம்...இரண்டு பசங்க 'ஸ்டேட்ஸ்'ல இருக்காங்கன்னா யாரு காரணம்? எல்லாம் அந்த பெரியவர் போட்ட பிச்சை தான் சார்!'
சாமினாதனுக்கு ஏகப் பெருமையாய் இருந்தது.
'எல்லாம் இருந்து என்ன ப்ரயோஜனம்? கழுத்து மட்டும் குறை இருக்கே.. இன்னிக்கு அந்த குடும்பம் ரொம்ப கஷ்டப் பட்டுண்டு இருக்காம். எப்படியாவது நன்றிக் கடனை இந்த ஜன்மத்திலேயே தீர்த்துடணும்னு நான் அவாளைத் தேடிண்டு அலையறேன்.. எங்கே அந்த அண்ணா குடும்பம் கஷ்டப் படறதோ தெரியல்லே...!'
கண்களைத் துடைத்துக் கொண்டார், பால சுப்ரமணியம்.
சாமினாதனுக்கும் ஜலம் முட்டி மோதிக்கொண்டு வந்தது. ஜன்னல் வழியாய் வெளியே பார்க்கும் சாக்கில் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
ஜன்னல் வழியாய் வெளியே பார்த்தான்.
அரியலூர் ஸ்டேஷன்!
இருவரும் காஃபி குடித்தார்கள். இவனே அவரை முந்திக் கொண்டு இருவருக்குமாய் காசு கொடுத்தான்.
' அதனால் என்ன சார், பரவாயில்ல..நம்மூர் காராளுக்கு இதுக் கூட செய்யக் கூடாதா நான்?'
சாமினாதன் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டான்.
'இங்கேயும் ஒரு மாத்தூர் இருக்கு. திருச்சி ஜில்லா கடேசில.. அங்க இறங்கலாம்னு இருக்கேன்..'
' என்ன திடீர்னு 'ப்ரோக்ராமை' மாத்திட்டேள். மெட்றாஸ் வல்லியா?'
' இல்ல சார்,இங்க பக்கத்து கிராமத்தில எங்க பெரியப்பா ஒருத்தர் படுத்த படுக்கையா கிடக்கார். அவரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. பார்த்துட்டு வரேன்.'
'இதை முன்னாடியே யோஜனைப் பண்ணியிருக்கக் கூடாதா? இப்ப மெட்றாஸ் சார்ஜ் நஷ்டமாயிடுத்தே...'
' அதனால என்ன சார், பரவாயில்ல..சின்ன சின்ன நஷ்டத்த எல்லாம் பார்க்கக் கூடாது. அதைப் பொருட்படுத்தாம இருக்கிறதே பெரிய லாபம்.'
பாலசுப்ரமணியத்துக்குப் புரியவில்லை. வினோதமாய் அவனைப் பார்த்தார்.
அவருக்கு புரியாவிட்டால் என்ன? சாமினாதனுக்குப் புரிந்து விட்டதே!
ரொம்பவும் சந்தோஷமாக வண்டியை விட்டு இறங்கிக் கொண்டிருந்தான், அந்த சாராத்து அம்பி!

(என் குறிப்பு: இந்த கதை நவம்பர் 1985 ஓம் சக்தி தீபாவளி மலரில் வெளி வந்தது)

Wednesday, March 24, 2010

வேர்கள் சிரித்தன...


பூஜைக்கு உகந்தது,
நாங்கள் தான்!
இறுமாப்புடன்
சொன்னது
மலர்கள்..
எங்களால் தான்
வழிபாடு
செய்கிறார்கள்..
பெருமையுடன்
பேசியது..
வில்வ,துளசி
இலைகள்...
நாங்கள்
ஆஹூதியில்
விழுந்து
உயிர்த் தியாகம்
செய்வதால்
அல்லவோ..
இறைவனுக்குப்
ப்ரீதியான..
யக்ஞயங்கள்
நடக்கின்றன..
கர்வத்துடன் சொன்னது,
சமித்துகள் (அரசு மரக் குச்சிகள்)
எல்லாவற்றையும்
கேட்டுக்கொண்டு,
நமட்டு சிரிப்பு
சிரித்துக் கொண்டிருந்தன,
வேர்கள் ....
வெளியில் தெரியாமலேயே!!!!!

Friday, March 19, 2010

மலரும் நினைவுகள்

எங்கள் ஆபீஸில் ஸ்ரீனிவாச கோபாலன் என்று ஒருவர் இருந்தார். ஆறு மாதங்களுக்கு முன் ரிட்டயர்டு ஆகி விட்டார். நேற்று ஆபீஸ் வந்திருந்தார். அவருடன் பேசினால் போதும், உம்மணாமூஞ்சிகளும் (நம்ம பழைய P.M.நரசிம்ம ராவ் போன்ற ஆட்களும்) கூட குலுங்க,குலுங்க சிரித்து விடுவார்கள்.
பார்க்க கச்சலாக இருப்பார்.கட்டை பிரம்மச்சாரி. நல்ல சிகப்பு.நெற்றியில் தீர்க்கமாய் ஸ்ரீசூர்ணம்.அந்த கால விகடனில் தில்லானா மோகனாம்பாள் தொடருக்கு வைத்தி என்கிற கேரக்டருக்கு கோபுலுவின் சித்திரம் போன்ற தோற்றம்!
அவரை முதன் முதலில் (இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு)எங்கள் ஆபீஸ் காண்டீனில் தான் பார்த்தேன். டிபனுக்காக Q வரிசையில் நின்று கொண்டிருந்தேன்,நான். எதித்தாற்போல் , அவர் வந்தார்.அப்போது அவர் உதிர்த்த முத்து.
" சார்..வழிய விடறீங்களா..இல்ல (சாம்பாரை) வழிய விட்டுடுவேன்"

அவர் 'ஸ்டெனோ' வாக ஜாயின் பண்ணின புதிது. அவருடைய மேனேஜருக்கும், அவருக்கும் நடந்த உரையாடல் இது.
மேனேஜர் : " whenever I am seeing you are
simply sitting?"
நம்ம ஆள் : "whenever I am sitting
you are seeing!"
மற்றொரு முறை,பொங்கல் சமயம். எல்லாரிடமும், பொங்கல் வாழ்த்துக்கள் சொன்ன அவர் மானேஜர் இவரிடம் வந்து ' wish you a happy maattu pongal' என்று கூற அதற்கு இவர் உடனே " wish you the same " என்று சட்டென்று சொல்ல அவருக்கு shame ஆகப் போய் விட்டது!


" சார்..உங்க ஆபீசில் ஸ்ரீரங்கம் சித்திரை வீதியிலிருந்து ஸ்ரீனிவாச கோபாலன் என்று ஒருவர் வேலை செய்கிறாரே, தெரியுமா என்று என்னை ஒருவர் கேட்க, ஸ்ரீரங்கம் சித்திரை வீதியிலிருந்து ஸ்ரீனிவாச கோபாலன் என்று ஒருவர் வருகிறார்.அவர் வேலை செய்கிறாரா என்று சொல்ல முடியாது என்று non commital ஆகப் பதில் சொல்லி பழி தீர்த்துக் கொண்டேன்!

எங்கள் காண்டீனில் பொங்கல் சாப்பிடுவது என்பது ஒரு பெரிய விஷயம்.அதை விட ஸ்ரீனிவாச கோபாலன் நம் எதிர்த்தாற்போல் நின்று, பேசிக்கொண்டு இருக்கும் போது நாம் பொங்கல் சாப்பிடும் போது என்பது அதை விட பெரிய விஷயம். எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுப்பது போல் கேள்வி ஒன்று கேட்டுத் தொலைத்தேன்!
நான் : " என்ன, ஸ்ரீனிவாச கோபாலன்,
வடை soft ஆ இருக்கா ?
அவர் : வடை சாப்டா(சாப்பிட்டால்) எப்படி
இருக்கும். தீர்ந்துப் போயிடும்!"


நான் க்ளார்க். அவர் எனக்கு அக்கவுண்டண்ட். என்னிடம் வேலை வாங்க அவர் 'ட்ரை' பண்ணும் போதெல்லாம், "ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் சீனியர் அக்கவுண்டண்ட் ஸ்ரீனிவாச கோபாலன் சித்தாள்களுடன் சித்து விளையாட்டுக்கள்" என்று எழுதப் போறேன் பாரு என்று மிரட்டி வைத்திருந்தேன். அப்போது அவர் வீடு கட்டிக் கொண்டிருந்த நேரம்!

நேற்று அவர் இங்கு வந்த போது மலரும் நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டிருந்தோம். கொஞ்சம் சுவாரஸ்யமாய் இருப்பதால், இதனை என் டயரியில் பதிவு செய்து viewers வுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
இதனை பப்ளிஷ் செய்ய விருப்பம் கிடையாது. ஆத்மார்த்தமான என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே விருப்பம்.

திண்ணைப் பேச்சு


ஞாயிற்றுக் கிழமை காலை எட்டு மணி வாக்கில், நாணா என்கிற நாராயணன், இரண்டாவது டோஸ் காஃபி குடித்து விட்டு, பொழுது போகாமல் வாசல் பக்கம் எட்டிப் பார்த்தான்.
பாச்சா!
கூடவே நட்டி, வெங்கு !!
"வாங்கடா...காஃபி சாப்பிடறீங்களா?"
ஒப்புக்குக் கேட்டு வைத்தான்.
" இப்ப தாண்டா 'மணீஸ் கேஃப்'ல் குடிச்சோம்"
" வாங்க ...... உட்காருங்க......"
திண்ணையில் உட்கார்ந்து கொண்டார்கள், நண்பர்கள்.
அந்த திண்ணைக்கு ஒரு வரலாற்றுப் பாரம்பர்யம் உண்டு. இந்த திண்ணயில் உட்கார்ந்து கொண்டு தான்,சீட்டு விளையாடி அவன் தாத்தா இரண்டு காணி நிலத்தை வித்தார்! அப்பா தன் பங்கிற்கு மேலத்தெரு வீட்டை வித்தார்!!
" என்னடா நியூஸ் ?" - நாணா.
" நம்ம மும்பை 'ப்ளாஸ்ட்'க்குக் காரணமான 'மாஸ்டர் மைண்டை' சிக்காகோவில் புடிச்சுட்டாங்களாம்!"
" 'இண்டர்போல்' உதவியோட இங்க கொண்டு வர வேண்டியது தானே.."
" இங்க கொண்டு வந்து.."
" என்னடா, இப்படி கேக்கறே? அவனை கிழி..கிழின்னு கிழிக்க வேண்டாம்!"
" அதான் கவர்ன்மெண்ட் லஅறிவிச்சிருக்காங்களே.."
" என்னன்னு..."
" அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்காங்க..நல்ல தண்டனையை மக்கள் யார் வேணா சொல்லலாம்னு அரசு அறிவிப்பு வந்திருக்கு"
" அட, பரவாயில்லையே..நம்ம அரசாங்கம் கூட நல்லா 'திங்க்' பண்றதே"
" அது மட்டும் இல்லப்பா... நல்ல தண்டனையை 'சஜஸ்ட்' பண்ணினவங்களுக்கு விருது தராங்களாம்"
" அடேங்கப்பா..."
" நாராயணா, ஒரு நல்ல ஐடியா குடு. அது 'த்ரூ' ஆனா உன் பேருக்கு முன்னால பத்மஸ்ரீன்னு போட்டுக்கலாம்"
" ஸாரிப்பா...பத்மபூஷணுக்குக் குறைஞ்சு எந்த விருதும் நான் வாங்கறதா இல்ல.."
" இந்த வெட்டிப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..வெங்கு...நீ எதாவது ஐடியா சொல்லேன்.."
வெங்கு மூக்கை ஒரு திருகு திருகிக் கொண்டான்.அவன் அப்படி செய்தால் தீர்க்கமாய் யோசிக்கிறான் என்று அர்த்தம்!
"டேய்...வெங்கு எதோ சொல்லப் போறாண்டா.."
" எனக்கு ஒரு ஐடியா" என்றான், நட்டி.
" என்ன...என்ன..."
" நம்ம ஊர் 'எலக்டிரிக் ட்ரைன்'லே..பீக் அவர்ல தாம்பரத்திலிருந்து பீச்.....பீச் லேர்ந்து தாம்பரம்னு நாலு தடவை அலைய விட்டா என்ன..?"
" மறுபடியும் குண்டு போட்டுட்டுப் போயிடுவான். ஒரு நல்ல ஐடியா சொல்லுங்கடான்னா..."
" எனக்கு ஒரு ஐடியா"
" என்ன..."
" நம்ம சங்கர் கேஃப் இட்லியை சட்னி, சாம்பார் இல்லாம ஒரு எட்டு திங்கச் சொன்னோம்னா, அவன் கொட்டம் அடங்கிடும்.."
" பரவாயில்லையே..அந்த கருங்கல் பதார்த்தத்தை சாப்பிடச் சொல்லலாம் போல இருக்கே.."
" அட போங்கப்பா..அந்த தீவிரவாதிங்கள்ளாம் பாறாங்கல்லக் கூட தின்னு ஏப்பம் விடற அளவுக்கு 'ட்ரைனிங்க்' எடுத்திருப்பாங்க..இந்த கருங்கல்லாம் அவங்களுக்கு ஜுஜுபி.."
" ச்சே..இந்த கவர்ன்மெண்ட் இவ்வளவு துரதிருஷ்டமாவா இருக்கணும்? ஒரு ஐடியாகூட
நமக்குத் தோணமாட்டேங்குதே.."
" கவர்ன்மெண்ட்டைச் சொல்லாதே..அவனுக்கு அதிர்ஷ்டம்னு சொல்லு"
" டேய் எனக்கு ஒரு ஐடியா" என்றான் நாணா.
" என்ன?"
"எங்க மேல் வீட்டில ஒரு குடும்பம் புதிசா வந்திருக்கு. அவங்க வந்ததிலிருந்து வீட்டில் குடி இருந்த தூக்கம் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடிப் போயிடுத்து."
" அப்படி என்ன அவங்க பண்றாங்க.."
" என்னப் பண்றாங்களா? நிம்மதியா தூங்கலாம்னுப் போனா, அந்தாளு எட்டு மணிக்கு மேல ஃப்ளூட் வாசிக்க ஆரம்பிக்கறான். அந்த நாராசத்தைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். அவன் கூவற கூவலுக்கு, அவன் பொண்ணு ..வீடே இடிஞ்சு விழறாப்பல தொம்தொம்னு ஆடுது. பரத நாட்டியம் கத்துக்கறதாம்"
" அதுக்கும்...இதுக்கும் என்ன சம்பந்தம்?"
" ராத்திரி தூங்காம இருந்தா அந்த தீவிர வாதி கண்ணு வீங்கி செத்துப் போயிட மாட்டானா?"
" அட போப்பா..அவன் வெளி நாட்டுக் காரன். இந்த நாராசத்தை அவன் ரசிக்க ஆரம்பிச்சுட்டான்னா.."
என்ன எழவுடா இது. ஒண்ணும் தோண மாட்டேங்குதே என்று எல்லாரும் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கும் போது....
" என்ன வெட்டிப் பேச்சு எப்பப் பார்த்தாலும்? இங்க வேலை தலைக்கு மேல இருக்கு..சித்த வந்துட்டுப் போங்க.."
ஒரு சிம்மக் கர்ச்சனை. அதைத் தொடர்ந்து விர்ரென்று ஒரு எவர்சில்வர் தட்டு எதிர் மூலையிலிருந்து ஸ்கட் ஏவுகணை போல்...
நாராயணின் எண்சாண் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக குறுக ஆரம்பித்தது. நண்பர் குழாமும் வெற்றிகரமாக வாபஸ் வாங்கலாமா என்று தத்தளித்துக் கொண்டிருக்க...
"டேய்..சூப்பர் ஐடியா" என்றான் நாணா அந்த வேளையிலும்...
" சொல்லுடா" என்றது நண்பர் குழாமும் விடாமல்.
" இந்த மாதிரி காட்டுக் கத்தலா கத்தி, அமர்க்களம் பண்ற ஒரு பரதேவதையை அவனுக்குக் கட்டி வைச்சா என்ன? அவன் பண்ணின காரியத்துக்கு இது ஆயுசுக்கும் தண்டனையாயிருக்கும் இல்ல... ஆனா நான் எந்த ஊர்ல குண்டு வெச்சேன்னு தெரியலே..."
வருத்தத்துடன் வீட்டினுள் நாணாசெல்ல..
'சண்டாளி..தாடகை...சூர்ப்பனகையைப் போல் வடிவு கொண்டாளைப் பெண்டாகக் கொண்டாயே நாணா' என்று அதை விட வருத்ததுடன் நண்பர் குழாம் கலைந்து சென்றது!!!

Monday, March 15, 2010

அவள்....!!!!


விவிலிய நூல்
கூற்றுப்படி,
அவள்
ஆணின் விலா
எலும்பிலிருந்து,
உருவான ஜீவன்
ஆனால்....
நம்முடன்
பயணிக்கும் போது....
ஆறாவது வயது.
பயத்துடன்,
கையால்,
காதைப்
பிடித்துக் கொண்டு
பேசினேன்......
'அவளுடன் பேசினால்,
காது அறுந்து விடுமாம்'
என்று அந்த வயது,
பயமுறுத்தல்கள்....
இருபதாவது வயதில்,
பார்க்கையில்,
ஒரு குறுகுறுப்பு!
அதுவே....
இருபத்தைந்தில்,
அப்பா ரிடய்ர்டாகி,
முடங்கிக் கிடக்க..
இந்த வேலை தான்
என் வாழ்வாதாரம்!!
ஆனால் ஒரு
பவுடர், ஸ்னௌக்காக,
தட்டிப் பறித்து,
விடுவாளோ?
அவளைக் கண்டவுடன்,
பயம் கலந்த வெறுப்பு!
இருபத்தியெட்டில்,
வேலைக்குப் போகும்..
இவள் கிடைத்தால்,
கொஞ்சம் சௌகர்யமாய்,
வாழ்வோமே என்கிற,
எதிர்பார்ப்பு !
முப்பத்தெட்டில்,
முதல் முதலாய்,
சிகரெட் குடித்து,
வீடு திரும்ப,
முகத்திலும்,கண்ணிலும்
புகை..கமறல்...
'என்ன எழவு இது'
என்று அவள்,
பார்த்த பார்வையில்,
பயம் கலந்த படபடப்பு !!
நாற்பத்தெட்டில்,
'என்ன வேலை வாங்குகிறாள்
இவள்..பசங்க அட்மிஷனுக்கு..
அலைய விடுகிறாளே....'
அவளைப்
பார்க்கையிலே ஒரு சலிப்பு!
அறுபத்தெட்டில்..
'பால் வாங்கிண்டு
வந்தால் தான் காஃபி..'
தீர்க்கமாய் சொன்னவளைப்
பார்க்கையிலே...
கையால் ஆகாத கோபம்!
WIDOW வை விட,
WIDOWER இங்கு,
COMPROMISE செய்து,
வாழ்வது கடினம்
என்கிற யதார்த்தம்
எண்பதில் சுட,
'இதுகள்ட்ட
ஒண்ணுமே தெரியாத,
என்னை
மாட்டி விட்டுட்டு
மஞ்சள்,குங்குமத்தோட,
போயிடாதேடீ'
கண்களில் பயத்துடன்
மன்றாடல்...
யார் சொன்னது...
அவளை WEAKER SEX என்று??
இந்த சமுதாயத்தில்
'அவன்' அல்லவோ
WEAKER SEX !!!!!!!!

Saturday, March 13, 2010

பிரமோஷன்......


நினைக்க நினைக்க, சந்தருக்கு நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. பதவி உயர்வுக்கான இண்டர்வியூவுக்குப் போன பத்து பேரில் அவன் யாருக்கும் சோடை போனது கிடையாது. கூடுதல் தகுதியாக ஒரு 'டிப்ளமா' வேறு கையில் வைத்திருந்தான்.
போதாத குறைக்கு தலைமை அதிகாரி அவனுக்குள் நம்பிக்கை விதை ஊன்றி, பிரமோஷன் கனவைச் செடியாக வளர விட்டிருந்தார். கடைசியில், கனவு கலைந்தபோது, " என்னால் முடிந்த அளவு செய்து விட்டேன்.ஐ'ம் ஸாரி...பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...." என்று சொல்லி கை விரித்து விட்டார்.
எரிச்சலாக வந்தது சந்தருக்கு. இந்த பிரமோஷனைக் குறி வைத்து ஒரு வருட காலமாகவே, தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தான். அடுத்த நாள் தலைமை அலுவலகத்துக்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டுமா? முதல் நாளே ' செக்சன் ஹெட்' டேபிளில் இவன் தயாரித்த ரிப்போர்ட் காத்துக் கொண்டிருக்கும். எந்த ஃபைலையும் தேங்க விட்டது கிடையாது. உடனுக்குடன் பைசல் செய்து அனுப்பி விடுவான். கடைசியில் அவனுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை.
தலைவலி மண்டையைப் பிளப்பது போல் இருந்தது. சூடாக ஒரு கப் காபி குடித்தால் தேவலை போல் தோன்றவே, கான்டீனுக்குச் சென்றான்.
கான்டீனில் அவனைப் பார்த்தவர்கள் 'குசுகுசு'வென்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் துணிந்து பக்கத்தில் வந்து "கவலைப் படாதீர்கள்...பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்றார்கள்.
'பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்'...... ' பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்'.....என்கிற வார்த்தைகள் பூதாகாரமாக விஸ்வ ரூபமெடுத்து, அவனைத் துரத்த ஆரம்பித்து விட்டது.' தோற்றுப் போன எவனைப் பார்த்தாலும், இந்த ' பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்' தானா? வேறு வார்த்தைகளே கிடையாதா? கீறல் விழுந்த கிராமஃபோன் ரிக்கார்டு போல .... சாவி கொடுத்த பொம்மை சொல்வது போல .....ச்சே....!'
வாழைப் பழத் தோலில் வழுக்கி விழுந்த வேதனையை விட, நாம் விழுந்ததைப் பார்த்து
'அச்சச்சோ' என்று நம் மீது (போலியாகவோ...நிஜமாகவோ)பரிதாபப் படும் பேர்வழிகளைக் கண்டால் எரிச்சல் வருமே..அது போன்ற எரிச்சல் வந்தது சந்தருக்கு !
ஏதோ ஒரு தைரியத்தில் எம்.டியை சந்தித்து நியாயம் கேட்க, ' அப்பாயிண்ட்மெண்ட்' வாங்கி விட்டான்.


"யெஸ் ப்ளீஸ்..."
தோரணையுடன் அழைத்த எம்.டி. அவனை உட்காரச் சொன்னார்.
" சார்... நான் சந்தர்..."
நட்புடன் கை குலுக்கினான்.
" ஓ..பர்ச்சேஸ் டிபார்ட்மெண்ட் சந்தரா?"
சந்தருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்!
கம்பெனியின் நெ.1, தன் கீழ் வேலைப் பார்ப்பவர் பெயர், டிப்பார்ட்மெண்ட் முதற்கொண்டு ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறாரே..!!
"சொல்லுங்க...."
கம்பெனிக்கு விசுவாசமாய் உழைப்பதைச் சொன்னான். கல்லூரி நாட்களில் தான் வாங்கிய விருதுகளைப் பட்டியல் போட்டுக் காட்டினான். பல்கலைக் கழக பட்டங்களையும், பட்டயங்களையும் குவித்துப் போட்டான்.
தீர்க்கமாய் அவனைப் பார்த்தார் எம்.டி!
"இவ்வளவு இருந்தும் உனக்கு ஏன் பிரமோஷன் கிடைக்கல்லேன்னு யோசிச்சுப் பார்த்தியா?"
" யோசிக்கவா.... கற்பனை பண்ணி பார்க்கக் கூட முடியலே சார்..."
விட்டால் அழுது விடுவான் போல இருந்தது.
" கூல் டௌன்...கூல் டௌன்...."
அவ்வளவு பெரிய மனிதர் நாற்காலியை விட்டு எழுந்து வந்து அவன் முதுகைத் தடவிக் கொடுத்தார்.
"ஞாபகம் இருக்கா...? இந்த இண்டர்வியூ நடப்பதற்கு ஒரு வாரம் முன்னாடி ஒரு நாள்.. சாயங்கால நேரம்... மணி நாலு,நாலரை இருக்கும்.."
"ஞாபகம் இல்லையே...."
உதட்டைப் பிதுக்கினான்,சந்தர்.
" நல்லா யோசிச்சுப் பாரு..அன்னிக்கு ஒரு முக்கியமான பேப்பரை 'பர்சனலாக'க் கொண்டு போய்க் கொடுக்க வேண்டியிருந்தது.."
" யெஸ் சார்... இப்போது ஞாபகம் வந்து விட்டது. 'டெண்டர் டாக்குமெண்ட்ஸ்.. சப்மிட்'
பண்ண அன்னிக்குத் தான் கடைசி நாள்...நமக்கு அந்த ஐம்பது லட்ச ரூபாய் ஆர்டர் கிடைத்தது சார்..."
" கரெக்ட்... அந்த டாகுமெண்ட்ஸ் எப்படிப் போச்சு?"
" பேய் மழை சார் அன்னிக்கு...டாகுமெண்ட்ஸ் பேப்பர் கொஞ்சம் கூட நனையாம இருக்க அதை ஒரு பாலிதீன் பையில போட்டு... அதுக்கு மேல துணிப்பை...
நம்ம ஆபீஸ்ல மாடசாமின்னு ஒருத்தர் .... அவர்ட்ட கொடுத்து..."
" மாடசாமி நனையாம இருக்க குடை கொடுத்தியா?"
"அதுவா சார், முக்கியம்? டாகுமெண்ட்ஸ் தான் சார் முக்கியம். நம்ப எல்லாருக்கும் சோறு போடற சங்கதி அந்த பேப்பரில இருக்கு...."
" ஸாரி...சந்தர்...இந்த ஒரு விஷயத்தில தான் நான் உன் கிட்ட இருந்து மாறுபடறேன். ' நீ எப்படி வேணாலும் போ ...எனக்கு கவலை இல்லே.. அந்த பேப்பர்ஸ் மட்டும் கொஞ்சம் கூட நனையாம கொண்டு போகணும்னு சொன்னியா?"
" அது வந்து...அது வந்து... அந்த டாகுமெண்ட்ஸ் எவ்வளவு முக்கியம்..அதனால தான்...."
வார்த்தைகள் வெளி வராமல் சிக்கிக்கொண்டு தவித்தன, அவன் வாயிலிருந்து!
" லுக்..மிஸ்டர் சந்தர் ...எப்பவுமே மெட்டீரியல் வால்யூஸ் முக்கியம் கிடையாது. மனித வால்யூஸுக்கு...அதாவது மனித உறவுகள்....உணர்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கணும். நான் பொறக்கும் போதே எம்.டி.யாப் பொறக்கலே..இந்த கம்பெனியும் எங்க அப்பன்,பாட்டன் தேடி வைச்ச சொத்து இல்ல...நான் படிப்படியா வாழ்க்கையில முன்னேறுவதற்க்கு மனித உணர்வுகளை படிக்கக் கத்துக்கிட்டதும் ஒரு காரணம். அன்னிக்கு கொட்டற மழையில நனைஞ்சுப் போய்க்கிட்டு இருந்த மாடசாமியை நான் தான் கார்லே 'ட்ராப்' பண்ணினேன்.தன் கூட வேலை பார்க்கிற ஆளுங்களோட சுக,துக்கங்களைப் பற்றித் துளிக்கூடக் கவலைப் படாதவன் மேல வந்து ஒரு பிரயோஜனமும் இல்லே..இந்த பிரமோஷன் உனக்குத் தான் என்று கிட்டத் தட்ட முடிவே செய்து விட்டோம். ஆனா, மத்தவங்களோட உணர்வுகளை மதிக்கத் தெரியாத உன்னுடைய குணமே, உனக்கு எதிரா வேலை செஞ்சிடுச்சு... ஸாரி...."
எம்.டி சொல்ல..சொல்ல...உண்மை உறைக்க ஆரம்பித்தது, சந்தருக்கு !!!!

என்னுரை: இந்த கதை ஆனந்த விகடன் 26.2.95 இதழில் வெளி வந்தது. அதுவல்ல செய்தி!
பத்து வருடம் கழித்து, TVS கம்பெனி என்னிடம் அனுமதி கேட்டு அவர்கள் HOUSE
JOURNAL ல் வெளி வந்த கதையாக்கும் இது..!

Friday, March 12, 2010

அண்ணலும் நோக்கி


அண்ணலும் நோக்கியா,
அவளும் நோக்கியா...
அப்பா மட்டும்,
'ஸோனி எரிக்ஸன்'!

*
சந்தில் புதிதாய்
போட்ட குழாயில்,
காற்று தான்,
வருகிறது !
'சந்திரனில் தண்ணீர்'
கண்டுபிடித்து விட்டனர்,
விஞ்ஞானிகள்..!!!!
*
ராமன் இன்று இருந்தால்...
ஒரு இல்,
ஒரு வில்,
ஒரு சொல்,
ஆனால்.....
இரு செல் ..!!!!!!

*

Thursday, March 11, 2010

DEMONSTRATION EFFECT!!!!!


இங்கு இருப்பவர்களை விட,
இல்லாதவர்கள் தான்
தான் அதிகம் பேர்
இருக்கிறார்கள்!


சிவிகையில் பயணிப்பவரை
விட சிவிகைதூக்கிகளே
அதிகம்!

இருப்பவர்கள் தன் இருப்பைக்
காப்பாற்றிக் கொள்வதை விட,
இல்லாதவர்கள்,
இருப்பவர்கள் சொத்தை,
பகிர்ந்து கொள்ளத்
துடிக்கிறார்கள்!

ஆண்டவா......
முடிந்தால் என்னைப்
பணக்காரனாக்கு...
முடியவில்லையா..?
அட்லீஸ்ட்,
என் பக்கத்து வீட்டுக் காரரை,
என்னை விட,
ஏழையாக்கி விடு !!!!!

என்னுரை : பக்கத்து சீட், பக்கத்து பெஞ்ச்,பக்கத்து வீடு என்று compare பண்ணியே, நம் வாழ்க்கை தட்டாமாலை சுற்றுவது போல் ஆகி விட்டது. இதையே பொருளாதார வல்லுனர்கள் ' DEMONSTRATION EFFECT' என்பர். விலைவாசி உயர்வு, inflation க்கு இதுவே காரணமாம் !!

Wednesday, March 10, 2010

என்னவள்.....


அழகாக உடை உடுத்தி,
அமைதியாக நான் இருந்தால்,
பக்கத்தில் வந்து நின்று,
பழிப்புதனைக் காட்டிடுவாள்.


மென்மைதனை இழைய விட்டு,
இனிமையாகப் பேசிடுவாள்,
இன்னல் பல வந்திடினும்,
மின்னல் என நீக்கிடுவாள்.


கண்களை சுழல விட்டு தன்,
விழிகளால் பேசிடுவாள், குறும்பு
விழிகளின் எழிலில் என்னை
விழிக்கும்படி வைத்திடுவாள்.


நான்சிரித்தால் தான் சிரித்து,
நான் அழுதால், தான் அழுவாள்.
வரப்பு உயர..நீர் உயர....
நான் உயர்ந்தால், தான் உயர்வாள்.


ஏங்க..ஏங்க ..வைத்து விட்டு,
எங்கேயோ சென்றிடுவாள்...
பார்த்தும் பாராதது போல்,
பாவையவள் நடந்திடுவாள்.


ஏட்டெழுதி....பாட்டெழுதி,
என் மனதை அதில் வடித்து,
காதலுடன் பாடுகின்றேன்,
கன்னியவள் கேட்கவில்லை !!!!!

Saturday, March 6, 2010

யானையால் ஓட முடியுமா?


(ஆராய்ச்சிக் கட்டுரை)

யானையால் ஓட முடியுமா, முடியாதா என்கிற இந்த கேள்விக்குப் பதில் இரண்டு தான். ஒன்று முடியும். இரண்டு முடியாது. ஆனால் தத்துவ ரீதியாய் சற்று 'ப்ராக்டிகலாக'ச் கூற வேண்டுமானால், சற்று அவகாசம் வேண்டும்.
மிகவும் பிரபல வெடர்னரி டாக்டர் ஸர். சாமுவேல் சன் கூறுகிறார் " யானை முக்கியமான சமயங்களில் மட்டுமே தன் ஓட்டத்தைப் பயன்படுத்தும். ஆண் யானைகளை விட பெண் யானைகள் தான் வேகமாக ஓடும்"
யானை ஆபத்து,பயம் போன்ற உணர்ச்சிகள் வந்தால் வேகமாக ஓடும். இரையைத் தேடி யானை ஒரு போதும் ஓடியதே கிடையாதாம். கூட்டம்,கூட்டமாய் மெதுவாய் நடந்து தான் செல்லுமாம்!
தண்ணீர் குடிக்கும் போது, அவை ஒன்றன் பின் ஒன்றாகச் செல்லும். குட்டிகளும் அவற்றைத் தொடர்ந்து வரும். குட்டிகளுடன் யானை நிற்கும் அழகே தனி!
யானை பொதுவாக கால்களால் தான் ஓடும் என்கிறார் ஏ.டபிள்யூ. மெகல்லன். முன்னங்கால்களை விட, பின்னங்கால்களால் தான் வேகமாக ஓடும். ஓடும் போது தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டே ஓடும். பெண் யானைகளை விட ஆண் யானைகள் தான் தும்பிக்கையை ஓடும் போது பயன்படுத்தும்!
யானையால் சுற்றி,சுற்றி ஓட முடியாது. நேராகத் தான் ஓட முடியும். ஒரு தடவை, முதுமலைக் காட்டில் ஒரு யானையிடம் மாட்டிக் கொண்ட பிரபல எழுத்தாளரும், ஃபோட்டோ க்ராபருமான பிலோ இருதயநாத் சுற்றி,சுற்றி ஓடி வந்தே யானையிடமிருந்து தப்பினாராம்!
ஆதலால், யானை துரத்தி வந்தால், அதனால் ஓட முடியுமா,முடியாதா என்று ஆராய்ச்சியெல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டாம்.சுற்றி,சுற்றி ஓடி வந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ளப் பாருங்கள்!
மலைக் கோட்டையையே, சுற்றி வந்த நமக்கு, யானை துரத்தினால், சுற்றி,சுற்றி ஓடி வருவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை !!

(என்னுரை) -
அப்போது ECONOMICS என்கிற SUBJECT அறிமுகமான புதிது. LECTURER
ரொம்பப் பிரமாதமாய் THEORY OF DIMINISHING MARGINAL UTILITY ஐ DIAGRAM போட்டு விளக்கிக் கொண்டிருந்தார்.
'அடப் பாவி மக்கா, இதைத் தான் நம்ம ஆளுங்க, அன்னிக்கே 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' ன்னு நச்சுனு சொல்லிட்டாங்களே. அதுக்குப் போய் இந்த வெள்ளைக் காரங்க இத்தனை மெனக்கெட்டு இதைக் கண்டு பிடிச்சு, நம்ம உயிரையும் வேற எடுக்கறாங்களே என்ற எரிச்சலில் விழுந்த கட்டுரை இது!)

Friday, March 5, 2010

அகட விகடம் !!


'திருடனை நேருக்கு நேர் பார்த்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் ? '
நான் என்ன செய்தேன், தெரியுமா?
சிறு வயதில் எங்கள் கிராமத்தில் மருதை என்று ஒருவன் இருந்தான். பரட்டைத் தலை..சிகப்பேறிய கண்கள்...அழுக்கு வேட்டி..
அந்த மருதை, தாத்தாவிடம் தேங்காய் விற்பான். அவனுடன் மல்லுக்கு நின்று, அடி மாட்டு விலைக்கு பேரம் பேசி, கொசுறாக இரண்டு தேங்காயும் வாங்கிக் கொண்டு வரும் தாத்தாவின் சாமர்த்தியமே சாமர்த்தியம்!
ஆனால், தோட்டத்திற்குப் போய் பார்த்தால் தான் தெரியும். நம் வீட்டுத் தென்னை மரங்கள்
ஆஸ்திரேலியாவிற்கு பிள்ளைகளைப் படிக்க அனுப்பிய பெற்றோர்களைப் போல், பரிதாபமாக நம்மைப் பார்த்து முழிக்கும் சங்கதி!
'நம் வீட்டுத் தேங்காய்களை நம்மிடமே விற்று,காசு பார்த்த மருதையைப் பாராட்டுவதா, அல்லது 'போனால் போகிறது, தேங்காய் பறிப்பவனுக்கு கூலி கொடுத்து மாளாது.இப்ப அது மிச்சம் தானே' என்று சமாளிக்கும் தாத்தாவைப் பாராட்டுவதா என்று எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பம்!
அந்த மருதை தான் நான் பார்த்த முதல் ஆள்.அதற்குப் பிறகு நர்ஸரி ஸ்கூல் நடத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன்... மளிகைக் கடைக் காரர்களைப் பார்த்திருக்கிறேன்...கார்ப்பரேஷன் ஆசாமிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது ஒரு புது வித அனுபவம்!
ஆறு மாதம் முன்பு,வீட்டைப் பூட்டி விட்டு, நவக்ரஹ சுற்றுலா முடித்துக் கொண்டு வீடு திரும்பினால், வீடு திறந்து கிடந்தது! பீரோவைத் உடைத்து, நகைகளை திருடிக் கொண்டுப் போயிருக்கிறான் ஒருவன்!
எங்கள் எல்லாருக்கும் மூச்சே நின்று விட்டது. பிறகு சுதாரித்துக் கொண்டு லிஸ்ட் போட்டோம். இரண்டு தங்க நகைகள் (கல் வைத்தது), வெள்ளியில் சின்ன குத்து விளக்கு. அம்மா அக்காவின் கல்யாணத்துக்கு எடுத்த அரதப் பழசான இரண்டு பட்டுப் புடவைகள், சின்னதாக ஒரு மோதிரம். மதிப்புப் போட்டுப் பார்த்தால், எல்லாமாகச் சேர்த்து, பத்தாயிரம் ரூபாய்க்குள் இருக்கும்.
முதலில் போலீஸ் ஸ்டேஷன் சென்று ஃஎப்.ஐ.ஆர். கொடுத்தேன்.அதற்கு ஆயிரம் கேள்வி கேட்டார்கள். நமக்கு ஆயிரத்தெட்டு அட்வைஸ்!
இது நடந்து எங்களுக்கு மறந்தே போய் விட்டது. திடுதிடுப்பென்று ஒரு நாள் போலீஸ்காரர் ஒருவர் வீட்டிற்கு வந்து, சம்மன் கொடுத்து விட்டுச் சென்றார். எண்பத்தைந்து வயது அப்பா..எழுபது வயது அம்மா உட்பட எல்லாரும் கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று அன்பாக மிரட்டி விட்டுச் சென்றார்!
கோர்ட்டுக்குப் போவதற்கு இரண்டு நாள் முன்பு அதே போலீஸ்காரர் வந்தார்.இப்போது கையில் ஒரு துணிப் பை. அதில் சில்லறை, சில்லறையாக சில தங்க காசுகள்,பெரிய மோதிரம் ஒன்று, இரண்டு தங்க வளையல்கள், காமாக்ஷி விளக்கு என்று இருந்தது.
'இந்த சாமான்கள் தான் தொலைந்தது' என்று கோர்ட்டில் சொல்லி கேசை புத்திசாலித் தனமாக முடிக்கப் பாருங்கள். கேசை இப்படியே இழுத்துக் கொண்டுப் போனால், உங்களுக்குத் தான் சிரமம் என்று அட்வைஸ் வேறு!
ஒரு வக்கீலைப் போய்ப் பார் என்று நண்பன் சொன்னான். அவன் பேச்சைக் கேட்டு ஒரு வக்கீலைப் போய்ப் பார்த்தோம். ஆனால், அவர் கேட்ட ஃபீஸோ எங்கள் வீட்டை விற்கும் அளவிற்கு இருந்தது!
வருவது வரட்டும் என்று இருந்து விட்டோம்.
அந்த நாளும் வந்தது. வயதானவர்கள் என்பதால்,ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு கோர்ட்டுக்குப் போனோம். பொய் சொல்லப் போகிறோமே என்கிற உறுத்தல் எங்கள் எல்லாருக்கும்! அம்மா எதாவது ஏடாகூடமாக உளறித் தொலைக்கப் போறோளோ என்கிற பயம்! ஒரே டென்ஷன் !!
ஆயிரம் தடவைக்கு மேல் ரிகர்சல் செய்து கொண்டு தான் போனோம். ஆனால் என்ன ஒரு துரதிருஷ்டம்! அன்று கேஸ் வாய்தா ஆகி விட்டது! அந்த ஜூரிஸ்டிக்ஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சம்மன் 'சர்வ்' செய்யப் படவில்லையாம்! மறுபடியும் டாக்ஸியில் வீடு திரும்பல்!
இந்த கேஸ் நல்லபடியாக முடிந்தால், மறுபடியும் நவக்ரஹ கோவில்களுக்கு வருகிறேன் அம்மா பிரார்த்தனை செய்து, அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டாள்!
இரண்டு வாரங்கள் தான் ஆகி இருக்கும். மறுபடியும் போலீஸ். போலீஸ் காரர்கள் அடிக்கடி வீட்டுக்கு வருவது எங்கள் எல்லாருக்கும் என்னவோ போல இருந்தது. இந்த முறை கேஸ் கட்டாயம் நடக்கும். அவசியம் எல்லாரும் வரவேண்டும் என்று அவர் வீட்டு விஷேசத்துக்கு அழைப்பது போல் வருந்தி, வருந்தி அழைத்தார்!
வயதானவர்களால் வர முடியாது.மெடிக்கல் ரிப்போர்ட் கொடுக்கிறோம் என்று சொன்னால் அதைக் கோர்ட்டார் ' CONTEMPT OF COURT' என்று எடுத்துக் கொள்வார்கள் என்று பயமுறுத்தி விட்டுச் சென்றார்.
வேறு வழி ? எல்லாரும் மன உளைச்சலுடன் சென்றோம்.ஆனால் விதி யாரை விட்டது. அன்றும் வாய்தா!
இப்படியாகத் தானே மூன்று, நான்கு 'சிட்டிங்' ஆகி விட்டது ! ஒவ்வொரு முறையும் வாய்தா !!
பொருட்களைப் பறி கொடுத்த வருத்தத்தில் நாம்... வெந்த புண்ணில் வென்னீரை ஊற்றுவது போல போலீஸ் காரர்கள்..அந்த போலீஸ்காரர்களையே கலங்க அடிக்கும் 'பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்... ஒவ்வொரு ஃபைலையும் க்ளோஸ் பண்ணுவதற்க்குள் அவர்கள் படுத்தும் பாடு...படும் பாடு.
ஆனால், இத்தனைக் கூத்துக்களையும் ஜாலியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ஒரு ஜீவன் !
அந்த திருடனைத் தான் சொல்கிறேன் !
அப்பப்பா...போதும்..போதும் என்றாகி விட்டது.
ஸ்ரீரங்கத்துக்கு ஒரு வேலையாக வந்து, அது முடிந்து, டோல்கேட் செல்ல , சமயபுரம் மினி பஸ்ஸில் பயணிக்கும் போது, கூட்ட நெரிசலில் என் பர்ஸை அடித்து விட்டான், ஒருவன்.பட்ட பகலில், நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இது நடந்தது!
நீங்கள் அந்த சமயத்தில் என்ன செய்வீர்களோ ? ஆனால் நான்ரொம்பவும் சந்தோஷமாகவே பஸ்ஸை விட்டு இறங்கினேன்!
அந்த அரதப் பழசான பர்சுக்கு ஒரு கௌரவம் கிடைத்ததே என்கிற சந்தோஷத்தை பீட் அடிப்பதுப் போல் ஒரு பெரிய சந்தோஷம் !
கோர்ட்டில் நடந்த அத்தனை அமர்க்களங்களுக்கும் காரணமான எதோ ஒரு திருடனை, அவனால் பாதிக்கப் பட்ட நம்மாலும் ஏமாற்ற முடிந்ததே என்பது தான் !!!!

Tuesday, March 2, 2010

மானுடம்.....


" நான் கூவியாகி விட்டது.இன்னுமா இந்த சூரியப் பயல் வரல்லே.." என்று தலையை நாலா பக்கமும் ஆட்டி, கர்வத்தோடு வானத்தைப் பார்த்துக் கொக்கரிக்கும் சேவல் போல நான்!
" நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க? 'புரோட்டினிக்ஸ்'க்கெல்லாம் 'மெடிக்கல் ரீ இம்பர்ஸ்மெண்ட்' கிடையாது. வேணா புக்ஸைப் பாருய்யா!" என்று ஒரு அப்பாவி 'ஒர்க்கரின்' வயிற்றில் நாற்பது ரூபாய்க்கு அடித்தேன்.'க்ளைம் ஃபாரத்தில்' நாற்பது ரூபாய்க்கு சிவப்பு பேனாவினால் நான் போட்ட சுழிப்பு என்னைப் பார்த்து சிரித்தது. 'புரோட்டினிக்ஸ்'க்குத் தான் கிடையாது. ஆனால் 'புரோட்டின்யூல்ஸ்'க்கு உண்டு என்கிற குறுக்கு வழிப் பாதை எனக்குத் தெரியும். எதற்குச் சொல்லணும்?
"சாமண்ணா, என்னோட 'பென்ஷன்' பேப்பரைக் கொஞ்சம் 'சட்' னு தள்ளேன்" போன மாசம் 'ரிட்டயர்ட்' ஆன ராமாமிர்தம் நாலைந்து தடவை வந்து விட்டார்....பயலுக்கு 'லம்ப்'பா வரப் போறது. கொஞ்சம் தான் அலையட்டுமே..!
"யோவ்..ஒங்கொப்பன் வூட்டுக் காசா கொடுக்கப் போறே...?" என்று ஆத்திரத்துடன் கத்தியவனிடம்..."தோ பாரு, எங்கிட்ட கத்தாதே. நானா சொல்றேன்? 'எஸ்டாபிளிஷ்மெண்ட் ரூல்ஸ்' பேசுதய்யா...ரூல்ஸ்னா...ரூல்ஸ்தான்.." என்று ரொம்பவும் கூலாகச் சொல்லும் லாகவம்...
சிகரம் வைத்தாற் போல, என் கீழ் வேலை பார்ப்பவனின் 'பி.எஃப். லோன் அப்ளிகேஷனை' 'ஃபார்வர்ட்' பண்ண, நான் எடுத்துக் கொண்ட பத்து நாட்கள்...பணத்தேவையினால் அவன் என்ன துடி துடித்திருப்பான்?
மன வக்கரிப்புகள் குடிசையின் கூரையாக ...அதன் மேல், கொக்கரித்துக் கொண்டு, சேவலாக நான்....

இதோ நிதர்சனம்!
கூரை சடசடவெனப் பிரிந்து,வெள்ளத்தில் அமிழ .... என்னில் புதைந்திருந்த மானுடம் என்னுள்...
' அடேய்... சாமண்ணா, எத்தனை பேர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருப்பாய்? படுபாவி! ஆக்சிடெண்ட்டிலே செத்துப் போனானே ஆறுமுகம்.. அவனோட இள வயது மனைவி..மூக்கு ஒழுகிக் கொண்டு மூன்று, நான்கு வயதுச் சிறார்கள்.. 'ஃபைனல் செட்டில்மெண்ட்டி'ற்கு எத்தனை முறை அலைய விட்டிருப்பாய்...!'
'ரூல்ஸ்னா...ரூல்ஸ்தான்..'
பலவீனமாக நான்.
'என்னடா பெர்ரீய ரூல்ஸ்? உனக்கு ரேஷன் கடையில் சாமான் வாங்கித் தரானே, பெரியசாமி - அவனுக்கு உன் ரூல்ஸ் செல்லாதா?'
' அது வந்து...'
' அதாவது ரூல்ஸ்களில் உள்ள ஓட்டைகளும்,'ரூல்ஸ்' என்ற ஃப்ரேமிலிருந்து சிறிதும் பிறழாமல், அதன் உள்ளே அடங்கிக் கிடக்கும் சௌகரியங்களும்.... சலுகைகளும்..'பெனிஃபிட் ஆஃப் டவுட்' என்று சொல்லப் படும் வார்த்தைப் பிரயோகங்களும் ...
உனக்கும்...உன்னைச் சார்ந்தவர்களுக்கும் தானே...?'
நிர்வாணப்பட்டு... உடம்பு சக்திகளெல்லாம் தீய்ந்து ... அசக்தனாகி...முகம் வெளுத்து....ப்ராணன் போகக் கூடிய அந்த சில நொடிகள் வரும் போது தான் பிராயச்சித்தம் எது என்று மனசு கிடந்து அலை பாய்கிறதோ?
தெரிந்தே செய்த தவறு ....
தெரியாமல் கால் மிதித்து...சிற்றுயிர்க்கு மோட்சம் கொடுத்த தவறுகள் எத்தனை எத்தனையோ ...!
எல்லாமாக விஸ்வரூபம் எடுத்து, என் முன்!
'துக்கம் கேட்கச் சென்றவர் நீரில் மூழ்கிச் சாவு..'
தினத்தந்தியில் நாலாம்பக்கம் அஞ்சாம் 'காலம்' சின்னதாக நாளைப் போடப் போகிறான்...
சிரிப்பு...கேனத்தனமான சிரிப்பு...
அழ வேண்டும்...இப்போது அழ வேண்டும் ...
கால்கள் தரையில் பாவாத நிலையில் ...இன்னும்...இன்னும்..என்று கீழே போய்க் கொண்டு...ப்ருஷ்டம்...மார்பு...கழுத்து.. என்று ஒவ்வொன்றாகக் காவு கொடுக்கும் நேரம் ....'ஐயையோ..காப்பாத்துங்க...காப்பாத்துங்க..!' என்று அலறத் தூண்டுகிறது மனசு. ஆனால்
வாய் எதை நினைத்தோ சிரிக்கிறது !!!'
வெங்கடா லாட்ஜ் இட்லி சாம்பார் ....நேற்று வாங்கி வந்திருந்த மரச்சீனி அப்பளம் ... புதிதாக ஆரம்பித்த நண்பர்கள் நாடகக் குழு .... அமெச்சூர் நடிகை ரூபாஸ்ரீயின் ரூஜ் கன்னம் ...அழகு மனைவி ....அன்புக் குழந்தைகள் ....எல்லாவற்றுக்கும் மேல் நான் பண்ணும் அலம்பலும் ... ஆரவார அதிகாரங்களும் ....
அட சட்!
ஆண்டவனை நினை !!
பிதாமகற்கும் ....பிரபிதாமகற்கும் ...பித்ருக்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள் ... சாமண்ணாவாகிய நான் இதோ ...இதோ..அமிழப் போகிறேன்....
ஓம் தத்சத் !!!!

" சாமண்ணா ...... ! சாமண்ணா ....!!"
கிணற்றுக்குள்ளிருந்து குரல்.
மெள்ள கண் திறக்கிறேன்.
பளிச்சென்று ஒரு வெளிச்சம் .... மின்சார ரயில் மாதிரி ....ஆனால் இது 'ரிவர்சில்!'
வெளிச்சத்தைத் தொடர்ந்து, நான்.
இருண்ட குகை. வெளிச்சம் செல்ல..செல்ல நான் தொடர்கிறேன்.
ஸ்பரிச உணர்வு ஏதுமின்றி, மிதப்பது போல ..... யாரோ என்னை வெளிச்சத்தின் எதிர்த் திசையில் இழுப்பது போல .....
மறுபடியும் குரல்.
வெளியே மனிதத் தலைகள்...
அத்தனையும் உறவு முகம்...
'வயத்திலே பால் வார்த்தியேடா கண்ணா!"
அம்மா கட்டிக் கொள்கிறாள்.
கைப் பிடித்தவள் அழவில்லை. உணர்ச்சிகளைக் கட்டுக்கு கொண்டு வரத் தெரிந்தவள் அவள். ஆனாலும் கண்களில் சோகம்.பக்கத்தில் பசங்கள்.
பிழைத்து விட்டேனா?????
ஆண்டவனின் கருணை கிரணங்களில் ஆயிரத்தில் ஒரு பகுதி என் மேல் விழுந்து விட்டதா...
இனி நான் மனிதன். மானுடம் அறிந்த மனிதன். அடுத்த மனிதனின் சுக துக்கங்களைத்
தனது போல ஏற்று ....
பழைய சாமண்ணா நீரில் மூழ்கி விட்டான். இவன் புதிது.
வேற்றுமை பாராட்டாமல், அனைவருக்கும் அவனால் முடிந்த உதவி..ஒரு வரம்பிற்குட்பட்டு..சட்ட விளிம்பிற்குள்..மனித நேயத்துடன்...
புதிய ஜனனம் ....புது வாழ்வு...வாழும் வாழ்க்கையில் ஒரு அர்த்தம்....புது ரத்தம் ....


"யாருய்யா அது ....? என்ன கலாட்டா..?
" இதோ பாருங்க சார்.."
" சும்மா இருய்யா ...மெடிக்கல் க்ளைம்ஸ்க்கு எவன்யா அலவன்ஸ் தருவான்? எவண்ட்ட வேணாப் போய் ரிப்போர்ட் பண்ணு. ரூல்ஸ்னா ....ரூல்ஸ் தான் !"
வெள்ளம் வடிந்து கூரை வெளியில் தெரிய - கொக்கரிப்பில் சேவல்....
மறுபடியும் ...!

என்னுரை : 'காயத்ரியின் 'நாணா'வைப்போல..'விளக்குகள் அணையும் போது உஸ்தாத் ஷாஹுல் ஹமீது ஸாஹேப்' போல இந்த 'சாமண்ணாவும் என்னால் மறக்க முடியாத பாத்திரம் தான்.

Monday, March 1, 2010

பணம் படுத்தும் பாடு !!கண்ணே....
மணியே....
கல்கண்டே.....
கனிரசமே....
என்று,
காதல் போதையில்,
கண்களை..
சொருகிக் கொண்டு,
பிதற்றி,
என்னை ஒரு வித ..
மயக்க நிலயில்
தள்ளி
போதை தெளிந்து
நான் ...
கண் விழித்துப்
பார்க்கும்போது,
என்னை விட,
ஒரு INCREMENT
கூட வாங்குபவனுடன்,
கூலாக,
ஓடிப் போனாள்!!!!!