Saturday, May 29, 2010

புரிந்தது.....


' ஹலோ நிஷா ஹியர்'
'எஸ்'
' நிஷா..நான் தான் நிரஞ்சன். சாயங்காலம் ஏதாவது 'ப்ரொக்ராம்' இருக்கா?'
'என்ன விஷயம்?'
'மெரினா போலாம்னு தான்...'
'இந்த நிரஞ்சனோட பெரிய 'இது'வா போயிடுத்து. ஆபீசுக்குப் போன் பண்ண வேண்டாம்னு, ஆயிரம் தடவை அடிச்சு சொன்னாலும் கேட்க மாட்டார். டெலிபோன் ஆபரேட்டர் ஜெயந்தி இதற்காகவென்றே இங்கே காதைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள்.
'...............................'
'என்னடா பேசாம இருக்கே?'
'...............ம்..................'
'அப்ப வைச்சுடட்டுமா?'
இவளும் போனை வைத்தாள்.நிரஞ்சனுடன் பேசுவதென்றாலே அவளுக்கும் கொள்ளை ஆசை. இருந்தாலும்...
ஒரு நிமிஷம் முன் தான் அவனைப் பார்க்க வேண்டும் என நினைத்தாள். இதோ அவனே போன் பண்ணி விட்டான். என்ன ஒற்றுமை?
' நிஷா..டாக் ரொம்ப வேகமாப் போய்க்கிட்டு இருக்கே..'
கண்களை சிமிட்டிக் கொண்டு குறும்பாகக் கேட்ட ஜெயந்தியை எரித்து விடுவது போல் பார்த்தாள், நிஷா.
'லீவ் வேகன்ஸி' பார்க்கிறோம் என்ற நிதர்சனமான உண்மை மெலிதாய் உறைக்க,பதில் பேசாமல் வேலையில் ஆழ்ந்தாள்.

நிரஞ்சனை முதன்முதலில் தன்னுடைய சித்திப் பெண் கல்யாணத்தில் சந்தித்தாள்,நிஷா. இளைஞர்களிலே தனி ரகமாகத் தெரிந்தான்,அவன்.
நலங்கில் சித்திப் பெண்ணுக்குப் பிண்ணனி இவளைப் பாடச் சொன்னார்கள். இவளும் பாடினாள்.
சோபில்லு...
ஜகன்மோகினி ராகம்..
அதற்குப் போட்டியாக மாப்பிள்ளைத் தோழன் நிரஞ்சன் ஒரு பாட்டுப் பாடினான்.
அவன் பாடலுக்கு ஆளுக்கு ஆள் அப்ளாஸ் செய்தார்கள்.
தனிமையான சந்தர்ப்பம் ஒன்று அந்த கல்யாண சந்தடியில் அபூர்வமாகக் கிடைத்தது இருவருக்கும்.
'ரொம்ப நன்னாப் பாடினேள். சங்கீதம் கத்துண்டுருக்கேளா..' - நிரஞ்சன் அவள் வாயைக் கிண்டினான்.
ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினாள், நிஷா.
' எனக்குத் தெலுங்கு தெரியாது. கீர்த்தனைகளுக்கு அர்த்தம் தெரிஞ்சதுன்னா இன்னும் நல்லாப் பாடியிருக்கலாம் உங்களை மாதிரி..'
ஊடுருவது போல அவளைப் பார்த்தான்.
குறும்புக்காரன். எல்லா விபரமும் தெரிந்து வைத்திருக்கிறான் போலிருக்கிறது.
உதடுகளைக் குவித்து அவனுக்குப் பழிப்புக் காட்டினாள், நிஷா.
பத்து நாட்கள் கழித்து பஸ்ஸில் ஒரு பார்வை பரிமாற்றம். மற்றொரு நாள் பாண்டி பஜாரில் தெரிந்து கொண்ட பாவனையில் புன்சிரிப்பு. பிறகு அப்பப்ப மெரினாவில் சந்திப்பு!
அன்று!
' என்ன நிஷா, வேலை ஜாஸ்தியா?'
' ....ம்.....' நெற்றியை கர்ச்சீப்பினால் ஒற்றிக் கொண்டாள். நிரஞ்சன் சுண்டல் பொட்டலங்களை வாங்கினான்.
' நிஷா, உனக்கு எப்ப ஆர்டர் போடுவாங்களாம்?'
' யார் கண்டா? இன்னும் பத்து நாளில் சுதா வந்துடுவா? என்ன பண்றாங்களோ தெரியலே..'
' ஒரு நல்ல வரன் வந்திருக்கு; பொண்ணு பேங்க்கில வேலை செய்யறா..அம்மா,அப்பாக்கும் புடிச்சுப் போச்சு..எனக்கும் தான்...'
திக்கென்றிருந்தது,நிஷாவிற்கு. கிண்டல் பண்ணுகிறானோ....
முகத்தை கூர்ந்து கவனித்தாள். சீரியஸாகத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
'... அடச்சீ..சராசரி ஆண்களைப் போலத் தானா நீயும்?....'
' அப்ப பண்ணிக்க வேண்டியது தானே.'
' நிஷா...நீயா சொல்றே?'
ஆச்சர்யம் அவன் குரலில் கொப்பளித்தது.
' வெரி குட் கேர்ள். இதை நீ எப்படி எடுத்துக்கப் போறியோன்னு தான், நான் பயந்துண்டு இருந்தேன்....'
' இதிலென்ன பயம்?'
' அதான்..எனக்குப் பின்னால அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,தங்கைன்னு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. எல்லாத்தையும் உதறித் தள்ளி விட்டு துண்டை உதறித் தோளில் போட்டுண்டு என்னால உன்னுடன் வந்துட முடியாது..'
'..உம்..அப்புறம்..' - ஏதோ கதை கேட்கும் ஆவலில் கேட்டாள்,நிஷா.
குரல் ரொம்பவும் தாழ்ந்து போன நிலையில் அவன் சொன்னான்:
' கல்யாணம் பண்ணிக்கப் போற பையன் தன் வருங்கால மாமனார் கொஞ்சம் வசதியுள்ளவரா இருக்கணும்னு நினைக்கறது தப்பா நிஷா?'
'தப்பே இல்லை'
நிஷா, சொல்லும் போதே, ரிடையர்டான அப்பா..தனக்குப் பின்னால் திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருக்கும் தங்கைகள், அவள் மனக் கண்ணில் நிழலாடினார்கள்.
' தியாகய்யர் கீர்த்தனைகளைக் கேட்க ரொம்ப சந்தோஷமாய் இருக்கே..அதனால வயிறு ரொம்புமோ.....'
'நிரம்பாது'
' ரொம்ப ப்ராடிக்கலா திங்க் பண்றே, நிஷா. உன்னோட 'வுட் பி' ரொம்ப கொடுத்து வைச்சவர். எனக்குத் தான் கொடுத்து வைக்கல..'
தொண்டைக் கமறலோடு சொன்னான், நிரஞ்சன்.
' நீ ஏதாவது மனசுக்குள்ள நினைச்சுண்டு ஏமாந்துடுவியோன்னு எனக்கு ரொம்பக் கவலையாய் இருந்தது. இவ்வளவு 'ஸ்போர்ட்டிவ்'வா எடுத்துண்டுட்டியே...எனக்குத் தான் நம்பிக்கைத் துரோகம் செஞ்சுட்டா மாதிரி ஒரு குடைச்சல்...'
'.....இதுக்குப் பேரு வேற என்னடா, மடையா....'
கொஞ்சம் விட்டால் அழுது விடுவாள் போல் இருந்தது. அவனுடன் முகம் கொடுத்துப் பசவே அவளுக்குப் பிடிக்கவில்லை. இந்த மாதிரி சமயத்தில் முகம் மட்டும் தொலைந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
ஒரு கணம்...
ஒரே கணம் தான்!
தன்னை சமாளித்துக் கொண்டாள்,நிஷா.
' நல்ல வேளை..நான் தப்பிச்சேன்'
' என்ன..நிஷா..'
' சும்மா விளையாட்டுக்குச் சொல்லலியே, நீங்க?'
' என்னப்பா, இப்படிக் கேக்கறே? ரொம்ப சீரியஸாத் தான் நான் பேசிக்கிட்டு இருக்கேன்....'
' அதுக்கில்லே...உங்க கிட்ட போனில் எப்படி சொல்றதுன்னு தான் நானும் தவிச்சுண்டு இருந்தேன். உங்களுக்கோ குறைச்ச சம்பளம்..நானும் வேலைக்குப் போனாத் தான் குடும்பம் மணக்கும். நான் பாக்கறதோ ஒரு இரண்டுங்கெட்டான் 'லீவ் வேகன்ஸி' எப்ப தூக்கி வெளியில போடுவான்னு சொல்ல முடியாது..சொற்ப சம்பளம் வாங்கற ஒரு க்ளார்க்கைக் கட்டிண்டு காலம் பூரா மாரடிக்கணுமேன்னு நானும், மனசுக்குள்ள ரொம்ப பயந்துண்டு இருந்தேன்..இதுல வேற பெரிய சம்சாரம்...எல்லாம் முடிஞ்சு, எனக்குன்னு மிஞ்சறது ஒரு முழம் மல்லிகைப் பூவோ..இல்ல அதுவும் இல்லையோ..நல்ல வேளை ஆண்டவன் எனக்கும் கண்ணை திறந்துட்டான்....'
' என்ன சொல்றே,நிஷா?'
' ஆமாம்..எனக்கும் இரண்டு நாளில நிச்சயம் பண்ணப் போறாங்க...அவர் பப்ளிக் செக்டார்ல பெரிய ஆஃபீசர்..வடக்கே அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர் ஆகுமாம். அதனால வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க....'
சொல்லும் போதே, கல்யாணம் ஆகப் போகிற பெண்களுக்கு வரும் வெட்கமும்...நாணமும்...போட்டிப் போட்டுக் கொண்டு வரவில்லை.
குபுக்கென்று துக்கம் தான் நெஞ்சை அடைத்தது!
நிரஞ்சன் என்ற அந்த ஈனமான சந்தர்ப்ப வாதியிடம் ஏமாற அவளுக்கே உரித்தான அந்த உயரிய பெண்மை இடம் கொடுக்க வில்லை!
ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டு,
நிஷா எழுந்தாள்.
நிரஞ்சன் நடந்தான்.
ஆனால்,
இருவர் சென்ற பாதைகளும் வெவ்வேறு!!

பின்குறிப்பு : இந்த சிறுகதை டிசம்பர் 1985 ஓம் சக்தி இதழில் வெளி வந்தது.

Sunday, May 23, 2010

விளிம்பு நிலை மனிதர்கள்


எம்பி..எம்பித் தான்
பார்க்கிறார்கள்,
அவர்களும்,
ஆனால்...
தொடக் கூட
முடியவில்லை...
வறுமைக் கோட்டை!!!!

இங்கு,
பிச்சைக் காரர்கள்,
தம் தம்,
தகரக் குவளைகளை
வீசி எறிந்து விட்டு,
சில்வர் தட்டை
எடுத்துக் கொண்டு,
சில்லறைக்கு,
ஏந்துகிறார்கள்,
கையை !!!!

ஓட..ஓட..விரட்டுவோம்..
என்று கோஷம் போட்ட,
அரசியல் வாதிகள்,
ஓய்ந்து விட,
வறுமை,
தன் போக்கில்,
நாட்டை விட்டு...
நடந்து செல்கிறது,
எருமை வேகத்தில்!!!!!!

கர்ப்ப வாச சிசு!


மூன்று வயதில்..
prekg,
நாலில் Lkg,
ஆறாம் வயதில்,
ஐந்து kg
புக்ஸ்,
கூடவே...
பாட்டு,மிருதங்கம்,
ஹிந்தி,கராத்தே..
க்ளாஸ்கள்..
பத்தாம் க்ளாஸ்
வரை
பதட்டம்...
பதினொன்று,
பன்னிரெண்டில்,
பரபரப்பு..
ரேஸ் குதிரைக்கு,
ஊட்டம் போல..
ட்யூஷன் க்ளாஸ்..
அதன் பிறகு,
engineering admission...
படிப்பு முடிந்ததும்,
campus selection..
அடக் கடவுளே....
நமக்கே நமக்காக,
இங்கு
வாழ முடியாதா?
வெளியில் நடக்கும்,
அவலங்களைப்
பார்த்து,
கர்ப்ப வாச சிசு
பயத்துடன்
கதறியது..
" அம்மா...என்னை
அழித்து விடு ....!!!!!"

Saturday, May 22, 2010

இன்றாவது.........


இலைகள் உதிர்வது
போல்,
ஒவ்வொரு நாளும்
உதிர்ந்து,
கொண்டு
இருக்கிறது...
காலக் கண்ணாடி
பெட்டகத்தின்,
முட்கள் வேகமாக,
நகருகின்றன..
பருவ நிலை,
காலத்திற்குத்
தகுந்தாற் போல்,
மாறுகிறது..
எதையும்
தடுக்க முடியாமல்,
அசக்தனாகி...
இயற்கையின் வேகத்துக்கு,
ஈடு கொடுக்க,
இயலாமல்
தேய்ந்து கொண்டிருக்கிறோம்..
நாமுமே...!!!!!!

Wednesday, May 19, 2010

அமெச்சூர் ஆகிய நான்....

எனக்கு கொஞ்சம் CARNATIC...கொஞ்சம் DRAWING ..கொஞ்சம் இலக்கியம் தெரியும்..அதை கொஞ்சம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். THANKS TO ENGALBLOG BLOGSPOT.COM
படம் WINDOWS PAINT ல் வரைந்தது. கொசுறாக என் பெண் நித்யாவின் ஹிந்தோளமும் கூட...
இங்கு க்ளிக் செய்யவும்.

http://engalblog.blogspot.com/2010/05/blog-post_7208.html
நித்யாவின் பாடலுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.

http://engalblog.blogspot.com/2010/05/blog-post_17.html
பொறுமையுடன் கேட்டதற்கு நன்றி உங்களுக்கும்...engalblog.blogspot.com க்கும் !!!

Wednesday, May 12, 2010

மன்னிக்கத் தெரிந்தவர்கள்....


தணிகாசலத்தினால் தாங்க முடியவில்லை!

முனுசாமியை கேட்டே விட்டார்!!

" என்ன முன்சாமி..நீ எனக்கு இரு நூறு ரூபா தரணும்"

முனுசாமிக்கு ஒன்றூம் புரியவில்லை. நாம எதுக்கு அவருக்கு கடன் தரணும். நாம தான் அவர்ட்ட அஞ்சோ..பத்தோ வாங்குவோம்... இப்ப சத்தியா ஒண்ணும் இந்த ஆள்ட்ட கடன் கிடன்.. வாங்கலியே...

" நான் தர அளவுக்கு உங்களுக்கு அப்படி என்ன சாரு..பண முடை?"

ஜிவ்வென்று ஏறி விட்டது, தணிகாசலத்துக்கு.

" ராஸ்கல் விளையாடறியா? வெத்தல பாக்கு வாங்க பத்து ரூபா கொடுத்தா, இரண்டு ரூபா வெத்தில போக மீதி காசு எங்கே? இருபத்தைஞ்சு நாளைக்கு ஒரு நாளைக்கு எட்டு ரூபா மேனிக்கு இரு நூறு நீ இல்ல எனக்குத் தரணும்? "

அடப் பாவி டிப்ஸ் கொடுத்தான்னு இல்ல நினச்சுக்கிட்டு இருந்தோம்! அதைப் போய் கூசாம இப்படி கேட்கறானே, இந்த ஆளு..இப்ப திடீர்னு கேட்டா நா எங்க போவேன்..காசுக்கு..

இயலாமையின் வெளிப்பாடு வார்த்தைகளை தடிக்க வைத்து விட்டது, முனுசாமிக்கும்!

" என்ன வார்த்தை நீளுது...பெரிசாச்சேன்னு பார்க்கிறேன்...என்னய்யா...ராஸ்கல்..கீஸ்கல்னு... நீ வைச்ச ஆளா ... நா உனக்கு வெத்தில வாங்கி தர்ர..அப்படியே வாங்கி தந்தாலும் மேம்போக்கா பாக்கி சில்லறையை நீயே வைச்சுக்கோன்னு நீ எனக்கு சொல்லலை..?

" எப்ப சொன்னேன்?"

" அடச்சீ...நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷன்? போய்யா..."

" போய்யாவா...யார்ட்ட பேசற நீ ? "

" உன்ட்ட தான்யா பேசறேன் ...போய்யா...போய்யா...போய்யா...."

வெறி பிடித்தாற் போல் முனுசாமி கத்த..மொத்த ஆஃபீஸும் அவரையேப் பார்க்க...

கூனிக் குறுகி நாற்காலியில் சாய்ந்தார், தணிகாசலம்!!

அந்த நாற்காலி.. அவர் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த டெப்டி தாசில்தார் நாற்காலி.....

அந்த காலத்தில்..அவர் வேலைக்குச் சேர்ந்த அந்த நாளில் இந்த டெப்டி தாசில்தார் நாற்காலி என்பது கிட்டத் தட்ட ஒரு ராஜா மாதிரியான பதவி. அதிகாரம் தூள் பறக்கும். வீட்டு வேலைக்கு ஒரு ஆள் .... தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்ற ஒரு ஆள்..கைக்குழந்தை இருந்தால் அதைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆள் என்று ஏக உபசாரம்..

ஆனால் ,இப்போதோ..தடுக்கி விழுந்தால் கூட,ஒரு தாசில்தார் மேல தான் நாம விழுந்தாகணும்! அவ்வளவு தாசில்தார்கள்! இவ்வளவு பேர் 'தாசில்' பண்ணினால் இந்த பூமி எப்படி தாங்கும்? எவன் நம்ம மதிக்கப் போகிறான்? முன்சாமி கூட முன்பல்லக் காட்டி கிண்டலா இளிச்சுட்டுப் போறான்...'

மெள்ள... தத்தி..தத்தி... ஒரு டெப்டி தாசில்தார் நாற்காலியில் இப்போது தான் அவர் உட்காருகிறார். முப்பத்து மூன்று வருடங்களை முழுசாய் சாப்பிட்டு விட்டு, பெரிய மனசு பண்ணி அந்த நாற்காலி இப்போது தான் அவரையே உட்கார அனுமதித்தது..

அதற்குள் இப்படி .... !!

முனுசாமி நம்ம கைத்தடி..நம் சொல் பேச்சு கேட்கும் பையன் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தாலும்..அது கொஞ்சம்..கொஞ்சமாக கரைந்து கொண்டே வந்து.... ரொம்ப இடம் கொடுத்து விட்டோமோ..என்கிற சந்தேகம் இன்று பயமாகி ..... இப்படியா வெடிக்கும் ?

ஏன் இப்படி?

எதனால் இப்படி ??

யோசிக்கவே முடியவில்லை..

ஒவ்வொரு நாளும் போலவே அன்றும் அந்த பத்து மணி சுமாருக்கு....

உள்ளிருந்து குரல்..

" தணிகாசலம் சார்.."

'... சார் உங்களை கூப்பிடறார்..' என்றார், பக்கத்து சீட்!

நாற்காலியை நன்றாக சுவற்றோடு சுவராக சாய்த்து உட்கார்ந்து கொண்டார், தணிகாசலம். அந்த ஆஃபீஸில் அவர் வேலைக்குச் சேர்ந்த அந்த நாளை அவர் மறந்தாலும், அவர் சாய்ந்து கொண்டிருக்கும் அந்த பழுப்பு கலர் சுவர் மறக்காது. அந்த சுவரில் வெள்ளை அடித்த நாள்..அவர் இங்கு வேலைக்கு சேர்ந்த நன்னாள்!

அவரை, அவ்வளவு சர்வீஸ் போட்ட வரை...ஒரு டெப்டி தாசிதாரை... நேற்று வந்த ஆபீசர் நாக்கு மேல பல்லு போட்டு கூப்பிடுவதாவது!

'இதோ வரேன்'னு சொல்லு..வர..வர..ஆபீஸ்ல வயசானவங்களுக்கெல்லாம் 'ரெஸ்பெக்டே' இல்ல..ஆளை விட்டு கூப்பிடறது..இல்லாட்டி உள்ளேர்ந்து கத்தறது..ஏதாவது சந்தேகம்னா இங்க வரலாமில்ல...துரை சீட்ட விட்டு நகர மாட்டாரு..நாம தான் சின்னப் புள்ள கணக்கா ஓடணும். ச்சீ...ஏண்டா, இந்த ஆபீஸ்ல வேலை பார்க்கறோம்னு தோணுது...'


தணிகாசலம் பிள்ளை லேசில் ஓய மாட்டார். இங்கு இருக்கும் ஆட்களிலேயே அவர் சீனியர் என்பதால் யாரும் அவரை ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அதை அவர் 'அட்வாண்டேஜ்' ஆக எடுத்து கொண்டு அப்பப்ப ஒரு சின்ன 'தர்பார்' நடத்தி விடுவார்.

' ஐயா.. உங்களை கூப்பிடறாருங்க..'- இது முனுசாமி.

'போறேம்பா..போறேன்..அந்த பச்சக் கலர் ஃபைலை இப்படி கொடு.....முன்சாமி..நீ என்ன பண்றே..அந்த மூலக் கடையிலப் போய் வெத்தல வாங்கியா..'

' டெஸ்பாட்ச் இருக்குங்க... ஐயா..'

' சொன்னாக் கேளு.. ஆஃபீஸ் வேலை ஓடியாப் போயிடும். இந்தா பத்து ரூபாய்...போய் வெத்தல வாங்கியா..அவன் கடைய சாத்திட்டு சாப்பிடப் போயிடப் போறான்..'

' எதாவது சொன்னா ஆஃபீஸ் வேலை இருக்குன்னு சால்ஜாப்பு சொல்றான். நாம சொல்றதை யாரு கேக்குறாங்க இந்த ஆஃபீஸ்ல...!!..நம்ம மரியாதைய காப்பாத்திக்கணும்னா நாம தான் கம்முனு இருந்துடணும்.'

புலம்பிக் கொண்டு உள்ளே சென்றார், தணிகாசலம்.

சப்-கலெக்டருக்கு விளக்கம் கொடுத்து விட்டு சீட்டில் வந்து உட்கார்ந்தார். கொஞ்ச நேரம் கழித்து முனிசாமி வெத்திலைப் பாக்கெட்டுடன் வந்தான். இப்போதும் பாக்கி சில்லறை தரவில்லை!

பத்து ரூபாய் நோட்டு கொடுத்தால், இரண்டு ரூபாய் வெத்திலைப் பாக்குப் போக, பாக்கி எட்டு ரூபாய் கொடுப்பது தானே முறை. இவராக பாத்து எதாவது கொடுத்தால் அது நியாயம். அவனாக எடுத்துக் கொண்டால்....

கணக்கு போட்டுப் பார்த்தார். இந்த மாதம் முழுக்க இப்படித் தான் செய்கிறான்! ஆக இருபத்தைந்து நாளுக்கு எட்டு ரூபாய் மேனிக்கு சுளையாய் விள்ளாமல்..விரியாமல்..இரு நூறு ரூபாய்..இரு நூறு ரூபாயா..!!!! அவரால் தாங்க முடியவில்லை!

அவரும் ...இன்று கேட்டு விட வேண்டும்..நாளை கேட்டு விட வேண்டும் என்று ஒவ்வொரு நாளாய் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விட்டார். இப்போது பார்த்தால் அது இரு நூறு ரூபாய் வரைக்கும் வந்து விட்டது!

என்றிலிருந்து இது ஆரம்பம்? யோசித்துப் பார்த்தார். ஆ...ஞாபகம் வந்து விட்டது! புது சப் கலெக்டர் வந்த நாள். பழம் தின்னு கொட்டை போட்ட ஆட்கள் அத்தனை பேரும்! வந்த ஆளைப் பார்த்தால் ரொம்ப சிறு வயசு!

முனுசாமி முதுகில் தட்டி சொன்னார், தணிகாசலம்.' முன்சாமி...புது ஆபிசரைப் பார்த்தியா டிப்பார்ட்மெண்ட்ல என் சர்வீசு அவர் வயசு.. என்னத்த பண்ணப் போறரோ..'என்று இவர் சொன்னதுக்கு சிரித்துக் கொண்டே போனவன் தான். சில்லறை கொடுக்கவில்லை!

அதை முனுசாமி 'அட்வாண்டேஜ்' எடுக்க..

அது இப்போது படீரென வெடிக்க..

விஷயம் ஸப்-கலெக்டர் காதுக்குப் போய் விட....

இருவரையும் அவர் ரூமுக்கு கூப்பிட..

முனுசாமிக்கு ஒரு வார்னிங் லெட்டர்...

" சார்...நான் அப்பாவிங்கோ...இவரு உங்களைப் பத்தி என்னல்லாம் சொன்னார் தெரியுமா...நீங்க ரொம்ப சின்ன வயசு ..திறமை போறாது..எப்படி சமாளிக்கப் போறார் பாரேன்னு எங்கிட்டேயே சவால் விட்டாருங்கோ...."

அடப் பாவி எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறானே...

முனுசாமி சொல்ல..சொல்ல... ....தணிகாசலத்துக்கு கால்கள் தரையிலிருந்து வெடவெடவென நழுவி, எதோ அதல பாதாளத்துக்கு போவது போல...

" ஸாரி..ஸார்..." என்றார் குரல் தழுதழுக்க..

" தட்ஸ் ஆல் ரைட் "


இப்பொழுதெல்லாம்..'தணிகாசலம் சார்' என்று குரல் வந்தால் போதும். வேஷ்டி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் உள்ளே ஓடுகிறார் தணிகாசலம்!

மன்னிக்கப் பட்டவரே, மன்னித்ததினால் முனுசாமிக்கு கொடுத்த அந்த 'வார்னிங்க் லெட்டரும் 'வித்ட்ரா'
ஆகி விட்டது இப்போது !!

ஒரு வாறாக முடிந்து விட்டது...!!!.

எல்லாமுமே.....!!!!

Saturday, May 8, 2010

பூக்களே சிரிக்காதீர்கள் !!!!


தோட்டத்திற்கு
சென்றேன்...
இன்று எத்தனை
மனிதரை
புண்படுத்தினாய்...
எத்தனை பேர்
மனதைக்
காயப் படுத்தினாய்...
எத்தனை பேரை
மொக்கை ஜோக்
கடி ஜோக்
சொல்கிறேன்
என்று
சொல்லி
சங்கடப்படுத்தினாய்..
சொல்.. மனிதா..சொல்..
என்று
கொல்லென்று
சிரித்தாள்
இயற்கை,
பூக்கள் வழியாக..!!!!!!!
*
இரண்டு பக்கமும்
பார்த்து,
வெகு ஜாக்கிரதையாய்...
தேசிய நெடுஞ்சாலையை,
கடந்து சென்றது
மாடு ஒன்று,
மனிதன் போல்
அல்லாமல்!!!!!!!
*
என்னை தூக்கிக் கொள்..
எடுத்துக் கொள்..
என்றன,
கடையிலிருந்து
காய்கறிகள்..
ஆனால்,
அதன் கோரிக்கைகள்
நிறைவேறவில்லை..
காரணம்......
என் பர்ஸ்,
பலவீனமாயிருந்தது,
அப்போது!!!

Friday, May 7, 2010

மனிதம்!!!


ஆசைக்கோ..
அளவில்லை!
ஒன்றை அடைய,
மனிதன் தான்
எவ்வளவு,
கீழ்த்தரமாய்...
கேவலமாய்...
போய்க் கொண்டிருக்கிறான் ?
நதிக் கரை
நாகரீகங்கள் எல்லாம்
எங்கே போயிற்று?
குழாயடி சண்டையாய்
குறுகி விட்டதோ?
இங்கு ....
திறந்து கிடக்கும்,
வாசக சாலைகள்
காற்று வாங்குகிறது..
பூட்டிக் கிடக்கும்
சிறைச்சாலைகள்
பிதுங்கி வழிகிறது...
ஆண்டவா...
அடுத்த ஜன்மம்
என்று ஒன்றிருந்தால்...
என்னை
மிருகமாய் படைத்துவிடு!
கொஞ்சமாவது
நாகரிகமாக..
பூமியில் வாழ்ந்து விட்டு..
புதைந்து போகிறேன்!!!

Sunday, May 2, 2010

அன்னை...கருவறையில்
பத்து மாதம் சுமந்த
போதும், சரி,
எண்ணங்களில்
எப்போதும்,
எங்களைப்
பற்றிய
நினைவுகளை
சுமந்து..
கொண்டிருக்கும்
போதும், சரி,
கண்ட நாள் முதல்,
என்ன சாப்பிடுகிறாய்,
என்று,
அன்புடன் கேட்கும்,
அன்னையே...
என்றாவது
ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
நான்
கேட்டிருக்கிறேனா..
என்ன சாப்பிடுகிறாய்
என்று
உன்னை???????????