Friday, November 27, 2009

ஈகைத் திருநாள்

தக்கலையிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது,
லாரி.வண்டியை ரொம்பவும் நிதானமாக ஓட்டி வந்தார் அமீர்பாய். இந்த காலத்து பசங்களைப்
போல,போட்டாபோட்டி போட்டுக்கொண்டு, அவருக்கு ஓட்டத் தெரியாது.எதிலும் நிதானம்
தான்.அதனால் தான், ரொம்ப காலமாக மல்லாரி அண்ணனுக்கு வண்டி ஓட்டிக் கொண்டு
இருக்கிறாரோ என்னவோ...
"என்னவே..அமீர்பாய் ? அவனவன் அஞ்சு ஆறு வருஷம் தான் 'டைவரா' இருக்கான். அப்புறம்
முதலாளி தலைல,மொளவாயை அரைச்சுட்டு, அவனே சொந்தமா லாரி வாங்கி ஓட்டறான்.
எல்லாப் பயல்களும், பம்மாத்து பயலுவ. நீரு என்னடான்னா, விடாம இருபது வருஷமா,
ஒரே வண்டியை ஓட்டறீரு..என்னவே சேத்தீரு ?"
கரீம் பாய் இடித்துக் காட்டும் போதெல்லாம் இரு கைகளையும் மேலே தூக்கி, ஒரு சிரிப்பு சிரிப்பார்.
" அல்லா இருக்கிறானாம்.பார்த்துக் கொள்வானாம்!"
அமீர் பாய்க்கு வயது ஐம்பது,ஐம்பத்தைந்து ஆகிறது. மகள் சல்மாக்கு போன ரஜப்
மாசத்தில தான் பந்தக் கால் நட்டு,'சேரா' கட்டி,மல்லிகைப் பூவினால் மணமகன் முகம்
மறைக்க, நிக்காஹ் முடித்து வைத்தார். மருமகன் தங்கமான புள்ள. தோவாளையில்
சொந்தமாக விறகுக் கடை வைத்து நடத்துகிறான். நம்ம 'மஹ்லா'வுல, அந்த மாதிரி
புள்ளயப் பார்க்கறது அபூர்வம்.
நிதானமாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கைச் சக்கரத்தில் சிறிது நாட்களாகவே
தடங்கல். ஒரு கவலையும் இல்லாத அமீர் பாய்க்கு, பணமுடை. ஒரு முன்னூறு ரூபாய்
தேவையாக இருக்கிறது. அது மட்டும் கிடைத்தால், அவர் நினைத்த காரியம் நடந்து
விடும். முதலாளியிடம் கேட்க மனம் வரவில்லை. அவராகத் தருகிறாரா.. பார்க்கலாம்.
இது தான் அவரிடம் ஒரு குணம். யாரிடமும் எதுவும் கேட்க மாட்டார். இது நாள் வரை
சம்பளத்தை உசத்த வேண்டும் என்று முதலாளியிடம் அவர் கேட்டதே இல்லை. மல்லாரி
அண்ணனாகப் பார்த்து, ஏதாவது கொடுத்தால் தான் உண்டு. அதையும், அப்படியே மகள்
சல்மாவிடம் கொடுத்து விடுவதுடன், அவர் கடமை முடிந்தது.
நாகர்கோவில் வந்து விட்டது. வண்டியை நிறுத்தினார்.
கொஞ்ச நாட்களாகவே, க்ளீனர் பையன் கமால் அவரை நச்சரித்துக் கொண்டு
இருக்கிறான். இவர் போய் முதலாளியிடம் சொல்ல வேண்டுமாம், அவனுக்கு ரம்ஜான்
ஈதுவிலிருந்து சம்பளத்தை உசத்த சொல்லி!
"அண்ணே" - தலையை சொறிந்து கொண்டு வந்தான் கமால், இப்பவும்.
" ராவுத்தரே கொக்காப் பறக்கறாராம். குதிரைக்கு கோதுமை அல்வா கேக்குதாங்
காட்டியும் ! போடா அப்பாலே.." என்று நாக்கைத் துருத்தியவாறே கையை ஓங்கிக்
கொண்டு வந்தார் அமீர் பாய். அவன் நகரவில்லை. அவனுக்குத் தெரியும் அவர்
அடிக்க மாட்டென்று.
" உம்ம மாதிரி நானும் நுப்பது வருஷம் வண்டியைக் களுவ வேண்டியது தான் ..."
முணுமுணுத்துக் கொண்டே வாளியுடன் சென்றான் கமால்.
அமீர் பாய் யோசித்துப் பார்த்தார். இந்தப் பயலுக்காவது, ஏதாவது கேட்கலாமென்று.
முதலாளி தப்பாக எடுத்துக் கொண்டால்....வேண்டாம்...வேண்டாம்..அவனுக்கும் நம்ம
மாதிரி கிடைக்கும் போது கிடைக்கட்டும்.
இது நாள் வரை மகள் சல்மா அவரை 'அத்தா..அதை வாங்கித் தா..இதை வாங்கித்தா..'
என்று வாய் திறந்து கேட்டதில்லை. எல்லாத்துக்கும்' உம்ம இஷ்டம்' என்கிற பதில் தான்
மகளிடமிருந்து வரும். தகப்பன் குணம்.
மறு நாள் ஈது பண்டிகை!
ஆண்டவனின் சன்னிதானத்திலே, ஆண்டி முதல், அரசன் வரை அனைவரும் சமம்
என்பது போல, பஞ்சப் பராரிகளுக்குப் பக்கத்திலேயே, பட்டாடை உடுத்திய கனவான்களும்
'அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...ஹம்து' என்று ஒருமித்து, ஏகநாயகனின் தெய்வீக
முழக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். புனித நோன்பினை முடித்த பெருமிதம், அத்தனை பேர்
முகங்களிலும் தெரிந்தது. கேவலம், மானிட இச்சைகளை முழுவதுமாக, முப்பது நாட்களுக்கு
வெறுத்துத் தள்ளுவேன்....ஏன் தள்ளியாகிவிட்டது ...என்ற உணர்வே அங்கே மேலோங்கி
இருந்தது. மனதுக்கு ஒவ்வாததை வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்ற நெஞ்சுரம்
தொழுகைக்கு வந்த அனைவரிடமும் பிரதிபலித்தது.
ஜமாத்தின் முதல் வரிசையிலேயே, மல்லாரி அண்ணனுக்குப் பக்கத்திலேயே, அமீர்பாய்
நின்று கொண்டிருந்தார்.எல்லாரையும் விட ஆண்டவன் தான் உயர்ந்தவன் என்பது போல
அனைவரும் மெய் மறந்து நின்றிருந்தனர்.
'சுஃபான ரப்பியுல் அலீம்!....'
மனதுக்குள் மனனம் செய்து...டவுன் ஹாஜியார் மண்டியிட, அனைவரும் உணர்ச்சிப்
பெருக்குடன் குனிந்து மண்டியிட்டார்கள்.
அமீர் கரடுமுரடானவர் தான் ! ஆண்டவனின் சன்னிதானத்திலே, சிறு குழந்தை போல
ஆகி விட்டார். இந்த 'ட்ரிப்பு' எப்படியாவது போயாவணும்... கண்களில் அவரையும் மீறி
கண்ணீர் வழிந்தோடியது.
ஹாஜி ஸாப் அடுத்த 'ரஹ்-ஆத்' துக்காக எழுந்து நின்றார். அமீர் பாயினால் எழுந்திருக்க
முடியவே இல்லை.
மிகவும் சிரமப் பட்டு எழுந்தார்.
'துஆ' முடிந்ததும், ஒருவரை ஒருவர் 'முலாக்கத்' செய்து கொண்டனர். முதலாளியும்,
தொழிலாளியும் அணைத்துக் கொண்டனர்.
"இங்க சித்த வாரும்.." மல்லாரி அண்ணனால் தாங்க முடியவில்லை. இவரை ஒதுக்குப்
புறமாக அழைத்துச் சென்றார்.
"நீரும் என்னண்ட விசுவாசமா இருந்திருக்கீரு... உமக்கு நா ஒண்ணும் செய்யலேங்கறது
என்னை உறுத்திக்கிட்டு இருக்கு...ஒம்ம மக நிக்காஹ்க்குக் கூட அஞ்சு நூறு தான்
கொடுத்தேன். நீரு இது வரை, எதையும் திருப்தியோடத் தான் வாங்கி இருக்கீரு ...கொறச்ச..
கூட என்கிற முணுமுணுப்பு உம்மண்ட கெடையாது. அதனால, நீரு ஓட்டற லாரியை உமக்கே
இந்த ரமலான் நாளிலே தரேன் எடுத்துக்கும்.." என்றார் அதே கண்டிப்புடன்!
" மொதலாளி.."
அமீர் பாயின் நா தழுதழுத்து, அவரைக் கூப்பிட்டது.
"என்ன?"
" ஒரு சின்ன விஷயம்"
இது நாள் வரை இல்லாமல், இன்று தான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார், அமீர் பாய்.
"சொல்லும்"
" அந்த கமால் பையனுக்கு நுப்பது ரூபா சம்பளம் கூட கொடுங்க"
" என்ன சுத்த கூறு கெட்ட ஆளா இருக்காரு...இவருக்கு ஏதாவது கேளுங்கன்னா..
அவனுக்கு கொடுக்க சொல்றாரு.." - மனத்துள் நினைத்தார் மல்லாரி அண்ணன்.
" சரி "
" எனக்கு ஒரு முன்னூறு ரூபா...கடனாகத் தாரும்.."
" எதுக்கு? இவருக்கு எதுக்கு முன்னூறு ரூபா.அதுவும் கடனாக?...."
கடன் வாங்கி போகக் கூடாது என்கிற விவரம் அமீர் பாய்க்கு நன்றாகவே தெரியும்.
ஏதோ உணர்ச்சிப் பெருக்கில் உளறிக் கொட்டி விட்டார்!
" ஹஜ்ஜுக்குத்தான்!!!"
" மாப்ளே.."
அவரை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார், மல்லாரி அண்ணன்.
" உம்ம பணம் மாப்ளே.உம்ம .நுப்பதாயிரம் ரூபா... சம்பளத்திலிருந்து ஹஜ்க்குப் போக பேங்க்ல
போட்டு வைச்சது கிடக்கு.. போயிட்டு வாரும்..வேணாம்..வேணாம்..என்னையும்
கூட்டிட்டுப் போங்க..."
ஒரு பத்தரை மாற்றுத் தங்கத்தை உரசிப் பார்த்து விட்டோமே!
குற்ற உணர்வில், பொது இடம் என்பதயும் மறந்து அழுது விட்டார், மல்லாரி அண்ணன்!
கண்ணீரின் ஊடே மிகவும் வெளிராகத் தெரிந்தார், அமீர் பாய்!

Tuesday, November 24, 2009

எலுமிச்சம் பழமும்,எதிர்த்த வீடும்...

'ஸ்கைப்'ஐ க்ளிக் செய்து 'வீடியோ கால்' போட்டு ஹெட் ஃபோன் பொருத்திக்
கொண்டான், ராகவன்.
ஸ்க்ரீனில் வந்தான் சரவணன்.
'சரவணா எப்படி இருக்கே?'
'ஃபைன்.. நீ எப்படி இருக்கே?'
'சூப்பர் ஃபைன்.."
' ஊருக்கு போனியா.. ஊரிலே என்ன விசேஷம்?'
' கோபி சி.ஏ. முடிச்சுட்டான்..'
'குட்..அப்புறம்..'
' நம்ம சீனுவுக்கு ஒரு 'கோர்' கம்பெனியில ஆஃபர் வந்திருக்கு. அடுத்த மாதம்
ஹைதராபாத் கிளம்பறான். பாபு தான், வெட்டியா ஊர் சுத்தறான். நாம மூணு பேரும்
உட்கார்ந்திருந்த அந்த பாலக்கட்டையில, இப்ப அவன் மட்டும் தனியா..தாடி வளர்த்துண்டு
ஊருக்கு கிளம்பும்போது பார்த்தேன். பாவமா இருந்தது. ஏதாவது பேசலாம்னா
அதுக்குள்ளே பஸ் வந்துடுச்சு..'
' ஐயோ பாவம்டா..அவன்! நம்ம மூணு பேர்ல நல்லா படிக்கிறவன் அவன் ஒருத்தன் தான்!'
' என்ன பண்றது..சுழின்னு ஒண்ணு இருக்கே..'
' நம்மூர்ல, விலைவாசியல்லாம் எப்படி?'
' அதை ஏன் கேட்கறே..விட்டா, துவரம் பருப்பை தூக்கி சாப்பிடும் போல் இருக்கு தங்கம்!
என்னடா உளர்றே?'
'இங்க..எலுமிச்சம் பழம் கெட்ட கேடு...ஒண்ணு அஞ்சு ரூபா..'
' ஒரு பழம் அஞ்சு ரூபாயா? இங்க கூட ஒரு டாலர் தாண்டா..'
' அது மட்டுமா.. காய்கறிகளெல்லாம் யானை விலை..குதிரை விலை. இது எல்லாத்தையும்
விட டிஜிடல் கேமரா வாங்கி....
' .டிஜிடல் கேமராவை வச்சுண்டு என்ன பண்றது?'
' டிஜிடல் கேமராவை வச்சு என்ன பண்றதா? எல்லா காய்கறிகளையும் ஃபோட்டோ
பிடிக்க வேண்டியது. அப்புறம் எல்லாத்தையும் பிரேம் பண்ணி ஹால்ல மாட்டி, அதைப்
பார்த்துக் கொண்டு வெறும் சாதம் சாப்பிடவேண்டியது தான்.. எஸ்.வி.சேகர் கூட ஒரு படத்தில பண்ணுவாரே... '
'சூப்பர் ஐடியாடா.. '
அது சரி..உன்னோட வேலை எப்படி இருக்கு?'
'ரொம்ப போர்டா, சரவணா..ஒவ்வொரு நா வீட்டுக்கு வர நைட் ஒன்பது,ஒன்பதரை
ஆகிறது. மீஞ்சூர் தாண்டி இருபது கிலோ மீட்டர் தள்ளி 'ப்ராஜக்ட்' . சாப்பாடு வேற சரியில்லை..சமைக்கவும் தெரியாது,எனக்கு.தம்பி ஊர்லேந்து, லீவுக்கு வரட்டுமான்னு
கேட்டான். வராதேன்னுட்டேன். நானே இங்கு சாப்பாட்டுக்கு கஷ்டப் பட்டுக்கிட்டு இருக்கேன். இவன் வேற வந்து கஷ்டப் படணுமா?'
'ச்சீ..அப்படி 'டைரக்டா' சொல்லக் கூடாதுடா..தப்பா எடுத்துக்கப் போறான்..'
'இதிலென்னடா தப்பு..நான் யதார்த்தத்தைச் சொன்னேன்! 'பப்ளிக் செக்டார்'னு
வந்து சேர்ந்தேன் பாரு..என்ன செருப்பால அடிக்கணும்.'ப்ரைவேட்' மாதிரி புழியறான்..
பாக்கி பசங்க எல்லாம் ஜாலியாத்தான் இருக்காங்க.என்ன மாதிரி 'சிவில் எஞ்சீனீர்' தான்
'எம் புக்','சைட்'டுன்னு லோல் படறான்.. இதுக்கா ஐ.ஐ.டியில 'சிவில்' படிச்சோம் ?
ஒவ்வொரு நிமிஷம் யோசிச்சுப் பார்த்தா.. வேலையை விட்டுடலாமான்னு தோணுது..'
'மடையா..அப்படி எதுவும் செஞ்சுடாதே..வேலை கிடைக்கிறதே குதிரைக் கொம்பா
இருக்கு இப்ப. நீயும் நம்ம பாபு மாதிரி, தாடி வச்சுண்டு பாலக்கட்டையில் போய்த்
தான் உட்காரணும்..பார்த்துக்கோ.. எனக்கே இங்க பயமாயிருக்கு. எதோ படிப்புன்னு
காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன். இங்க இருக்கிற 'ரிசஷன்'ல, படிச்சு முடிச்சதுக்கு அப்புறம்
என் கதி என்ன ஆகுமோ?... நினச்சாலே வயிற்றைக் கலக்குது!'
ஒரு நிமிடம் மௌனம்.
அதை உடைத்தான், ராகவன்.
' சரி...அமெரிக்காவுல என்னடா விசேஷம், சரவணா ?'
' ப்ச.. ஒண்ணுமில்ல... ம்....சொல்ல மறந்துட்டேனே..நேற்று நம்ம அப்துல் கலாம் இங்க
நியூ ஆர்லியன்சுக்கு 'கெஸ்ட் லெக்சர்' கொடுக்க வந்திருந்தார்..'
' வெரி குட். நீ போனியா?'
'இங்கிருந்து அறுநூறு கிலோ மீட்டர்டா..முன்னாடியே தெரிஞ்சாலும் போய் பார்த்திருக்கலாம். நம்ம 'இண்டியன் ஸ்டூடண்ட்ஸ் அஸோசியேஷன்' 'வார்ம் ரிஷப்ஷன்'
கொடுத்திருக்காங்க..சரி..அடுத்த தடவை வரும்போது பார்த்துக்கலாம்'
'சரி..குட் நைட் டா..'
'குட் மார்னிங்க்."
'ஓ..'
'சிஸ்டத்'தை அணத்து விட்டு, கீழே வந்தான். மனசுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.
நேற்றைக்கு அமெரிக்காவில் நடந்த விஷயம் இன்று நமக்கு தெரிகிறது!
அதை விட ஆச்சர்யம்!
எதிர்த்த வீட்டில் பளிச்சென்று லைட்!
'யார் ?'
ஆவலுடன் வாசலுக்கு வந்தான்.
ஏனென்றால், கடந்த ஆறு மாதமாக பூட்டிக் கிடந்த வீடு அது!
எதேச்சையாக எதிர் வீட்டுக் காரரும் வந்தார், கேட்டை பூட்ட..
சிரிப்பு ஒன்று சிரித்து வைத்தான்.
அவரும் சிரித்தார்.
' சார்..புதுசா குடி வந்திருக்கீங்களா?'
' ஆமாம் சார்..'
பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டார்கள்
' சார் இங்க குடி வந்து ஒரு வாரம் இருக்குமா?'
' இல்ல சார்.. இன்னியோட ஒரு மாசம் ஆச்சு..'
பக்கென்றது ராகவனுக்கு !

Friday, November 20, 2009

என்ன செய்யப் போகிறோம்....


எள்ளுத் தாத்தாக்கள்...
கொள்ளு தாத்தாக்கள்....
எல்லோரும்
காடுகள்...மலைகள்...
ஊருணி...கிணறுகள்...
மாசுப் படாத காற்று...
தூய்மையான நதிகள்...
இயற்கை விவசாயம்..
எல்லாவற்றையும் நமக்கு..
விட்டுச் செல்ல....
நாம்
சுயநலத்துக்காக..
எல்லாவற்றையும் அழித்து விட்டு..
நம் வீட்டுப் பிள்ளைகளை..
கத்திரிக் காய் கூட
சாப்பிட விடாமல்...
காவு கொடுத்து விட்டு..
கலங்கிப் போய்
நிற்கிறோம்!!!

Thursday, November 19, 2009

மேனகா..



"அம்மா, மேனகாவுக்கு என்ன ஆச்சு....?"
ஆபிசிலிருந்து, ஸ்ரீதர் கேட்டான்.
" கொஞ்சம் முன்னாடி நீ தான் போன் பண்ணினியா ?"
"ஆமாம்மா.. இன்னிக்கு ஒரு மீட்டிங்..வர கொஞ்சம் லேட்டாகும்.நீங்க சாப்பிடுங்க . அது சரி...
மேனகாவுக்கு என்ன ஆச்சு , ஏதோ ஆக்சிடெண்ட்டாமே ?"
" அதுக்குள்ளே உனக்கு யார் சொன்னா?"
" ஜானா தான். நீ சமையல் ரூமில் இருந்தியா அப்ப....."
"ஆமாம்..ஏதோ வேலையா இருந்தேன்"
" அது சரி..உன் கதை இருக்கட்டும்..மேனகாக்கு ஒண்ணும் ஆகலையே..?"
" பூனாவிலிருந்து அவளும், அவ பிரண்டும் 'ஆம்னி'யில் வந்திருக்கா. ஒரு கடன்காரன் சுமோவில் எதிர்த்தாற்போல வர,ரெண்டு வண்டியும் நேருக்கு நேர் மோதிண்டு..."
"ஐயைய்யோ...அப்புறம்...?"
" நல்ல வேளை அவ பின்சீட்டில இருந்தாளோ..பொழைச்சாளோ...அவ போன ஆம்னி
அப்பளமா ஆயிடுத்து. டிரைவருக்கு தலையில பலமாஅடி பட்டிருக்கு..உசிருக்கு
ஆபத்தில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார்.ஆக்சிடெண்ட் நடந்த இடம் ஏதோ
கிராமம் போல இருக்கு... எல்லா ஜனங்களும் உடனே கூடிட்டாங்க..ஆம்புலன்ஸ்க்கு,
போன் பண்ணி, அதுவும் வந்து, உடனே டிரைவரை அட்மிட் பண்ணினதாலே..அவர்
உசிருக்கு ஆபத்தில்லாம போச்சு.."
" சுமோ என்ன ஆச்சு?"
" சுமோக்கு என்ன, அது கல்லு மாதிரி இருக்கு...
" சுமோ டிரைவர்?"
" அங்க நிக்கறதுக்கு அவனுக்கு என்ன பைத்தியமா? ஓடியே போய்ட்டான்."
"சரிம்மா போனை வைச்சுடறேன்"
"சரி"
போன் இங்கும் வைக்கப் பட்டது.
ஸ்ரீதருக்கும், ஜானாவுக்கும் நடுவில் பிறந்தவள்தான் மேனகா. அவள் அதிர்ஷ்டம்
'இஞ்சீனியரிங்க்' படித்தவுடன் ஒரு நல்ல 'கோர்' கம்பெனியில் வேலை கிடைத்து
ஆறு மாதமும் ஆகி விட்டது. பூனாவில் 'போஸ்டிங்'. தினமும் இரவு எட்டு முப்பதுக்கு போன் செய்வாள். இரண்டு நாட்களாக அவளிடமிருந்து ஒரு போன் கூட வரவில்லை.
ஆனால், இவர்கள் இப்போது பேசுவது, அவர்கள் வீட்டுப் பெண் மேனகா அல்ல..பிரபல
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் "மேனகா" என்று ஒரு சீரியல் வருகிறது. அதில் வரும்
கதாநாயகியின் பெயரும் மேனகா தான். இவர்கள் பேசியது அந்த மேனகாவைப் பற்றி!
ஜானா,ஸ்ரீதர்,பார்வதி அம்மாள் மூவரும் டி.வி.யில் 'மேனகா' சீரியல் பார்த்துக் கொண்டு
ஒன்றாக சாப்பிடுவது வழக்கம். எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் சாப்பாட்டுக் கடை, முடிய ஒன்பது
ஆகி விடும்! கரெக்டாக எட்டரைக்கு 'அட்வர்டைஸ்மெண்ட்' அப்போது பூனாவிலிருந்து
போன் வரும். ஒரு பத்து நிமிஷம் பேச்சு. அங்கிருந்து அவள் போனை வைக்கவும்..இங்கு 'அட்வர்டைஸ்மெண்ட்' முடிந்து சீரியல் ஆரம்பிக்கவும் ரொம்பவே சரியாக இருக்கும்!
இரண்டு நாள் என்பது மூன்று நாள் ஆகியது.
மூன்று நாள் என்பது..ஐந்து நாள் ஆகி கிட்டத் தட்ட ஒரு வாரமும் ஆகி விட்டது!
மேனகாவிடமிருந்து போன் வரவில்லை!
இதை முதலில் கண்டு பிடித்தவன், ஸ்ரீதர்.
ஒரு எட்டரை மணி 'கேப்'பில் அவன் அம்மாவிடம் சொன்னான்.
உடனே அவள் 'செல்'லுக்கு அடித்துப் பார்த்தார்கள்.
'நோ ரெஸ்பான்ஸ்'
ஒரே கவலையாகப் போய் விட்டது, எல்லாருக்கும்!
' அவ பிரண்டோட போன் நம்பர் ஆபீசில இருக்கு. நாளைக்குப் பண்றேன்!'
மறு நாள் ஸ்ரீதர் மேனகா பிரண்டுக்கு போன் செய்தான். மேனகாக்கு ஜுரம்.
ஆஸ்ப்த்திரியில் அட்மிட் செய்திருக்கிறார்கள். கவலைப் படுவார்கள் என்பதால்
வீட்டில் சொல்ல வேண்டாம் என்று மேனகா சொன்னதால், அவர்கள் சொல்லவில்லை.
'என்ன உடம்புக்கு?'
" 'ஸ்வைன் ப்ளு' ஆனால், ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டதால் கவலைப்
பட வேண்டாம்"
ஸ்ரீதருக்கு மனசு கேட்கவில்லை. பூனா சென்று மேனகாவைப் பார்த்தான்.
ஆஸ்பத்திரியிலிருந்து 'டிஸ்சார்ஜ்' பண்ணி விட்டார்கள்.
ரெஸ்டில் இருந்தாள்.
நாட்கள் வெகுவேகமாய் ஓடியது.
திடுமென்று, ஒரு விடியற்காலை, சனிக்கிழமை வாக்கில்...பூனாவிலிருந்து அந்த
குடும்பத்தின் மீது இடி ஒன்று இறங்கியது!
மேனகாபோய் விட்டாள்!
அம்மா வாயிலும்,வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள்!
எல்லாம் முடிந்து விட்டது! எல்லாமே......! ப்ச...!
* * * * * * * * * * * *
ஆறு மாதம் ஆகிவிட்டது. ரணம் முழுதுமாக ஆறவில்லை, அந்த குடும்பத்
தில். இருந்தாலும்...
இன்று தான் எட்டு மணிக்கு அந்த மூன்று பேரும் ஒன்றாக ...
டைனிங் டேபிளில்....அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.
எதிர்த்தாற் போல் தொலைக் காட்சிப் பெட்டி!
அதில் அந்த 'மேனகா' சீரியல் !!
எதையோ நினைத்துக் கொண்டு அம்மா அழுதாள்.
"என்னம்மா..."
" என்னம்மா.."
பதறினார்கள் ஸ்ரீதரும்,ஜானுவும்..
'ஒண்ணுமில்லடா...' கண்களைத் துடைத்துக் கொண்டாலும் 'குபுக்'கென்று அழுகை
வந்து விட்டது,அம்மாவிற்கு.
ஒருவாறு, சமாளித்துக் கொண்டு சொன்னாள்:
' இனிமே நாம மேனகாவை டி.வி. சீரயல்ல தான் பார்க்க முடியும் !'
குலுங்கி குலுங்கி அழுதாள், அம்மா !
குடும்பமே குலுங்கியது!!!!

------ 0 --------

Tuesday, November 17, 2009

சுயம் இழந்தவள்!


அரக்கப் பரக்க அத்தனை வேலைகளும்
அந்த நாலு மணி நேரத்திற்க்குள் செய்து,
பஸ் பிடிக்க அவசரமாய்...
யாரோ ஒரு பயணி எழுந்திருக்க..
"சிஸ்டர் உட்காருங்க...'
பழகின கண்டக்டருக்கு
சகோதரி நான்..
மேடம்...அந்த ரிப்ளை ரெடியா..?
டெலக்ஸ் அனுப்பியாச்சா....
அலுவலக நண்பர்களுக்கு,
மேடம் நான்..
வெட்டியாய் பொழுதுப் போக்காமல்..
ஹோம் ஒர்க் எழுதி..
என்னைக் கண்டவுடன்..
களிப்புடன் ஓடி வந்து,
கால்களைக்கட்டிக் கொள்ளும்..
அந்த இரண்டு ஜீவன்களுக்கு,
அம்மா நான்..
ஹல்லோ.. அந்த ஹல்லோவில்
ஒரு அழுத்தம் கொடுத்து..
பாஸ் போர்ட்டுக்கு அப்ளைப்
பண்ண போட்டோ கேட்டேனே..
ரெடியா என்ற என்னவருக்கு..
ஹல்லோ நான்..
திடீரென்று, என்னுள்ளே..
ஒரு கேள்வி எழுந்தது..
ஆமாம்... நான் யார் ?

Sunday, November 15, 2009

ரெளத்ரம் பழகு...


1965ம் வருட வாக்கில், நாங்கள் கோதையாறு என்ற ஹைட்ரோ எலக்ட்ரிக் ப்ராஜக்டில் இருந்தோம். நாங்கள் என்றால் நான்,ஸ்ரீதர், கிரி,அண்ணா,அம்மா. அப்பாவை, நாங்கள்
அண்ணா என்று அழைப்போம். அம்மா அம்மா தான். அப்போது குரு,வாசு, ஹரி யாரும் பிறக்கவில்லை.
கோதையாறு என்கிற இடம் கன்யாகுமரி மாவட்டத்தில்.. நாகர்கோவிலிலிருந்து
பத்து, இருபது கி.மி. தொலைவில் இருக்கிறது. அம்பாடி எஸ்டேட் வழியாக போக
வேண்டும் என்று ஞாபகம்.அதை லோயர் கேம்ப் என்று அழைப்பார்கள். அண்ணா
இ.பி.யில் ஹெட் க்ளார்க். ஐந்து வீடுகள் கொண்டது ஒரு பிளாக். அப்புறம் கொஞ்சம்
மரம்,செடி கொடிகள்... அப்புறம் இன்னொரு பிளாக். இது போல் ஒரு வரிசைக்கு
இரண்டு அல்லது மூன்று பிளாக்குகள். அடுத்த வரிசைப் போக வேண்டு
மென்றால் பதினைந்து படிக்கட்டுகள் ஏறிப்போக வேண்டும்.
எங்கள் பள்ளிக்கூடம் எல்லா வரிசைக்கும் கீழே இருந்தது. எங்களுக்கெல்லாம் ஸ்கூல் போவது ஜாலி . ஏன் தெரியுமா? படிக் கட்டுகளுக்கு பக்கத்திலேயே 'ஸ்லொப்'பாக
இருக்கும். கோதையாறில் நிறைய 'ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்' ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும். ஆளுக்கு ஒரு குட்டிஷீட் எடுத்துக் கொள்வோம். ஸ்கூல் விட்டு வந்தவுடன், ஸ்கூல் பேக்குடன், அந்த ஷீட்டையும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நான்,ஸ்ரீதர்,நோட்டன், அவன் தம்பி
நெல்சன், ராஜாராமன், அவனோட தம்பி சீத்தாராமன் எல்லாரும் படிக்கட்டுகள் வழியே,
வந்து, அவரவர் வீட்டு வாசல் அருகே, அந்த ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டைக் கயிற்றால்,
கட்டி வைப்போம்.
அடுத்த நாள் காலை, அந்த ஷீட்டில் உட்கார்ந்து கொண்டு, சர்ரென்று,
சறுக்கி அடித்து, கீழேப் போவதில் ஒரு ஜாலி. அந்த ஷீட்டில் ஒரு ஓட்டைப் போட்டு,
அதில் குச்சி ஒன்றையும் செருகி விடுவோம். அது தான் எங்கள் பிரேக். சறுக்கி அடித்துக்
கொண்டு வரும்போது, திடீரென்று, பிரேக் போட்டு, தலைக் குப்புற விழுவது செம ஜாலி!
எங்கள் சார் பேரு ராசு. அஞ்சாம் க்ளாஸ் பூராத்துக்கும் அவர் தான். ஸ்ரீதர் மூணாம்
க்ளாஸ். அவங்களுக்கு டீச்சர். அவங்க பேரு கமலா. அண்ணாஆபீசில் வேலைப்
பார்த்த தெய்வ சிகாமணி அங்க்கிளின் பொண்ணு அவங்க.
மாலதியும், ஸ்ரீதரும் மூணாங்க்ளாஸ். நான், ராஜாராமன், நோட்டன் எல்லாரும் அஞ்சாம் க்ளாஸ். எங்கள் மூணு பேர்ல, ராஜாராமன் சாது. நான் ஒல்லி பிச்சான். நோட்டன் பலசாலி..
குண்டன். நான்னா அவனுக்கு தொக்கு!
ஒரு நாள் நோட்டன் என்னைக் கூப்பிட்டான்.
" டே..இங்க வாடா?"
" என்ன.."
" ஒம் பென்சிலைத் தா?"
" உம்ம்.. தர மாட்டேன்..."
அண்ணா புதுசா வாங்கித் தந்த பென்சில். எனக்குப் புடிச்ச 'நேவி ப்ளூ' கலர்.
" மரியாதையாய் தாடான்னா தர மாட்டே.. ரெண்டு வச்சா தான் சாரு தருவாரு.."
கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்தான்.
" இந்தா எடுத்துக்கோ.."
அழுது கொண்டே தந்தேன்.
ஸ்கூல்ல.. சார்ட்ட சொல்ல பயம். அண்ணாட்ட சொல்லவும் பயம். அம்மாட்ட மட்டும்
'நைசா' சொன்னேன்.
"புது பென்சில் தொலைஞ்சுடுத்து"
அம்மா நல்ல மூடில் இருந்தாள்.
" பீரோல இருக்கு.. எடுத்துக்கோ..."
பீரோவை நோண்டினேன். பச்சை,மஞ்சள்,சிகப்பு என்று மூணு கலர்லேயும்
பென்சில்கள்.
எனக்கு சந்தோஷமாய் போச்சு.'லபக்'கென்று சட்டைப் பையில் சிகப்பையும்,
பச்சையையும் சொருகிக் கொண்டேன். அப்படியே, ஸ்கூலுக்கு கிளம்பி விட்டேன்.
மத்யானம் எதேச்சையாய் சட்டைப் பையில் கை விட்டால், பென்சில்களைக்
காணோம்.
நோட்டன் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான்.
" டேய்.. என்னோட பென்சிலைத்தாடா... "
"என்ன... விளையாடறியா?...."
கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்தான்.
உடனே என் சுருதி மாறியது.
"டேய்...டேய்.. என் பென்சிலை எடுத்தா.. தாடா...ப்ளீஸ்..எங்க அப்பாக்குத்
தெரிஞ்சா அடிப்பாரு..."
" வாங்கிக்கோ..."
ரொம்பவும் தெனாவட்டாக சொன்னான்.
நான் சாரிடம்...அப்பாவிடம் ....சொல்ல மாட்டேன் என்பதை தெரிந்து கொண்டு
விட்டான், ராஸ்கல்..
சரி...வீட்டில் இன்னும் ஒரு பென்சில் இருக்கிறதே.. அதை வைத்துக் கொண்டு
சமாளித்து விடலாம் என்று நான் எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.
வீட்டுக்கு போனவுடன் பீரோவைத் தான் பார்த்தேன்.
அந்த பென்சிலும் காணோம்!
பேஸ்து அடித்தால் போச்சு என் முகம். தம்பி எடுத்துக் கொண்டு விட்டானோ!
அவனிடம் கேட்கலாமென்றால்..குட்டையை மேலும் குழப்பி, என்னை அடி
வாங்க வைத்து விடுவான்.
அண்ணா ஆபீஸ் விட்டு வந்தவுடன் கேட்ட முதல் கேள்வியே அது தான்..
"பென்சில் எங்கேடா?"
வழக்கமான பல்லவியையே பாடினேன்.
"மூணு பென்சிலையா ஒருத்தன் தொலைப்பான் ? அவ்வளவு என்ன கவனமில்லாம.."
விட்டார் ஒன்று செவுனியில்.......
கொஞ்ச நேரத்துக்கு 'ங்கொய்' என்றது, காது!
மறு நாள்...
ராசு சார் இல்லாத போது, நோட்டன் பெஞ்ச்க்குப் போனேன்.
"என் பென்சில கொடுடா..."
சிரித்தான்.
எப்படி செய்தேனோ, எனக்கே தெரியவில்லை..
விட்டேன் ஒரு 'ப்ஞ்ச்' அவன் தொப்பையில்...
நிலை குலைந்து போனான், நோட்டன்!
"என் பென்சிலை கொடுக்கிறயா.. இல்லையா..."
"என் பென்சிலை கொடுக்கிறயா.. இல்லையா..."
வெறி பிடித்தார் போல அடுத்தடுத்து மூன்று 'பஞ்ச்' கள்..
நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவேயில்லை...
எதிர்ப்பே இல்லை அவனிடம் !
அழுது கொண்டே அஞ்சு பென்சில்கள் கொடுத்தான்...
பெருந்தன்மையாக என் பென்சில்களை மட்டும் எடுத்துக் கொண்டு,
என் 'பெஞ்ச்'சுக்கு சென்றேன்....
அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவன் என்னிடம் வாலாட்டவேயில்லை!
இதிலிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயங்கள் ரெண்டு..
1. பயந்து..பயந்து...நாம் தான் குண்டு பசங்களை பெரிய ஆளாக ஆக்குகிறோம்.!
2. குண்டு பசங்க ஒல்லிப்பிச்சாங்களை விட பயந்தாங்கொள்ளி..!

-------

Wednesday, November 11, 2009

பிரிவு..


ஆபிசில், இரண்டாயிரத்து மூன்றாம் வாக்கில், விருப்ப
ஓய்வு பெற்ற சக பெண் ஊழியர் ஒருவரைப் பாராட்டி
வரைந்த மடல் இது .......

ஏணிக்குப் படி போல
போனுக்கு குரல் போல
கோனுக்குள் ஐஸ் போல
லோனுக்குள் நீ இருந்தாய் !
பி.எப். லோனுக்குள்
நீ இருந்தாய் !!

கடன் வேண்டும் - அதுவும்
உடன் வேண்டும் - என
'சடனா'க வந்து
நச்சரிக்கும் நண்பர் பலர் !

அம்மா அம்மாவென்று
அலறிடுமே ஒரு கும்பல்..
அத்தனையும் சமாளிக்கும்
வித்தகத்தை அறிந்திடுவார் !!

அலை அலையாய் அப்ளிகேஷன்
மலை போல குவிந்தாலும்,
சிலை போல மலைக்காமல்,
சிற்றெறும்பாய் உழைத்திடுவார் !

கடன் வழங்கும் கலங்கரை
விளக்கமாய் திகழ்ந்திடுவார்
உடனிருந்து உழைப்போரை..
உறவினராய் மதித்திடுவார் !!

விருப்ப ஓய்வு பெறும் அவரை,
விருப்பமின்றி அனுப்பி வைப்போம்
பல்லாண்டு,பல்லாண்டு,
பல்லாண்டு வாழ்ந்திடவே..
மன்றாடி இறைவன் தன்
தாளினையேப் பணிந்திடுவோம்

--- 0 ---

இதோ எனது முதல் கவிதை ..


பட்டத்தை பறக்க விட்டு,
பரதேசிப் போல்
முடி வளர்த்து..
பக்கவாட்டில் கிருதாவை..
பாங்குடனே
வளர்த்து விட்டு,
இஞ்சி தின்ற
குரங்கு போல்
எப்போதும்
முகம் தொங்கி...
நண்பர்கள்
புடை சூழ..
கடை வீதி
நடந்து சென்றால்..
ஜவுளிக் கடை
பொம்மை கூட
சட்டென்று
திருப்பிக் கொள்ளும் !!

----- ஃ ----

முரண்பாடுகள் .....

..... அவர்கள் வீட்டு
குப்பைத் தொட்டி
நேர்த்தியாக
இருந்தது.....

நான் வரைந்த ஓவியங்கள்...

மேதைகளும்....பேதைகளும்....





ஒரு சோம்பலான ஞாயிற்றுக்கிழமை. பொழுது போகாமல்,
அந்த வாரப் பத்திரிகையைப் பிரித்த அரவிந்தனுக்கு, ஆச்
சர்யம்! குழந்தைக் கலைஞர்களைப் பற்றிப் போட்டிருந்தார்
கள். பேட்டி காணப்பட்ட அந்தப் பிறவி மேதைகளின் மேத
மைக்கும், அவர்கள் பெற்றோர்களின் 'ஹாபி'க்கும் துளிக்
கூட சம்பந்தமில்லை! அப்படியானால் .......
சங்கீத ஞானம் இல்லாத பரம்பரையில் வந்த அரவிந்தன்
என்ற 'பாங்க் க்ளார்க்'கின் செல்ல குட்டி மூன்றாவது வயதி
லேயே ராகம் பாட ஆரம்பித்து விடுவாளா?
அந்த நினைப்பே பரவசப்படுத்தியது அவனை!
'வாவ்..' என்ற சந்தோஷத்துடன் "ஆனந்தி!" என்று அலறினான்.
அவனுக்கு கோபம் வந்தாலும் தாங்காது. சந்தோஷம் வந்தாலும்
தாங்காது.
"என்ன?" என்று சமையல் உள்ளிலிருந்து வந்தாள் ஆனந்தி.
உற்சாகத்துடன் அவன்சொன்னதை இடைமறித்து, "போறுமே!
உங்க பொண்ணு 'லயா' பாடற பாட்டை, நீங்களும், நானும் தான்
கேட்கணும்" என்று 'லயாவில்' ஒரு அழுத்தம் கொடுத்து உள்ளே
சென்று விட்டாள்.
வாஸ்தவத்தில் 'லயா' என்ற பெயர் அவளுக்குப் பிடிக்கவே
இல்லை. ஆசையா 'நியுமராலஜிஸ்'டிடம் கேட்டு 'வர்ஷா'
என்று பெயர் வைக்கலாம் என்று நினைத்தவளை ஒரேடியாக
அடக்கி விட்டான் அரவிந்தன். "வர்ஷா ஹர்ஷான்னு நர்ஸரி
ரைம் மாதிரி பேரா...!"
"வேண்டாங்க...'ஜெய லக்ஷ்மி' ன்னு பெயர் வச்சு'ஜெயா' ன்னு
கூப்பிடலாங்க. இந்த 'லயா'ங்கற பேர் வேண்டாம். என்னவோ
போல இருக்கு" என்றவளை,
"உனக்கு என்ன தெரியும்? எங்க 'சீனியர் மேனேஜரோட
பொண்ணு பேரு லயா. 'லயா'ன்னா என்னன்னு நினச்சே?
பூமா தேவின்னு அர்த்தம். லயாங்கிறது 'ப்யூர்' 'சான்ஸ்க்ரிட்'
'நேம்' என்றான் பூரிப்புடன்.
'போய்யா, நீயுமாச்சு, உன் பேருமாச்சு' என்று அப்போது
விட்டு விட்டாலும், ஆனந்திக்கு அந்த பெயர் பிடிக்கவே
இல்லை.
கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டான், அரவிந்தன்.
அந்த அலங்கார மேடையில், விஸ்தாரமாக ஒரு ராகத்தைப்
பாடியபடி அவன் பெண்,சென்னையில் பிரபல சங்கீத சபா
ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில், ஜாம்பவான்களெல்லாம்
அதிசயிக்க, அவனைப் பேட்டி கண்டார்கள் பத்திரிகை
நிருபர்கள்.
" உங்கள் பெயர்?"
சொன்னான்.
"செய்யும் தொழில்?"
சொன்னான்.
"லயா" என்பது முன்கூட்டியே தீர்மானம் செய்த பெயரா?"
என்று கேட்டதற்கு 'லயா' வின் பெயர்க் காரணம் சொன்னான்.
"லயாவுக்குத் தங்கை பாப்பா உண்டா?" என்று குறும்புடன் கேட்ட
ஒரு நிருபருக்கு,
"பிறக்கப் போகிறது. 'ஸ்ருதி' என்று பெயர் வைக்கப் போகிறோம்.
அந்தக் குழந்தைக்கும், நன்கு பயிற்சி கொடுத்து, ஸ்ருதி, லயா இருவரும்
சங்கீத உலகின் கண்கள் என்று சங்கீத விமரிசகர்கள் கூறப் போகிறார்
கள். அதுவே சங்கீத தேவதைக்கு, ஏழை, என்னால் முடிந்த சிறு
காணிக்கை என்று உணர்ச்சிவசப்பட்டு பேட்டி கொடுத்த அவன்
வயிற்றில் 'லொட்' டென்று காலைத் தூக்கிப் போட்டாள் லயா!
வேறொரு சமயமாயிருந்தால், அந்தக் காலை வேகமாக வீசி எறிந்தி
ருப்பான்."செல்லக் குட்டி, லயா குட்டி" என்று கொஞ்சிக் கொண்டு,
நச்சு, நச்சென்று முத்தங்களை வாரி, வாரி வழங்கினான், இப்போது.
"ஊ....ம்" என்று செல்ல சிணுங்கலோடு, குப்புற படுத்துக் கொண்டது,
லயா!
அடுத்து வந்த நாட்கள், லயாவுக்குப் போதாத காலம் என்று தான்
சொல்ல வேண்டும்.
'குழந்தை வளர்ப்புக் கலை' புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தான்,
அரவிந்தன். அதிசயமாகப் பார்த்த ஆனந்தியை அதட்டி, 'டயட் டைம் டேபிள்'
போட்டு, குழந்தைக்கு வேளாவேளைக்கு இன்னின்ன ஆகாரம் கொடுக்க
வேண்டும் என்று அறிவுறுத்தினான்.
'சங்கீத பால பாட' கேசட்டுகளை வாங்கி, குழந்தை வீறிட்டு அழும் வரை
'டேப்' போட்டான். "அப்பா ப்ளீஸ் போரடிக்குதப்பா'' என்று கெஞ்சிய
குழந்தை முதுகில் நாலு போடும் போட்டான்!
இளமையான மியூசிக் டீச்சரிடம் குழந்தை சலுகை எடுத்துக் கொண்டு
விடும் என பயந்து, பல்லு போன கிழவர் ஒருத்தரைப் பாட்டு வாத்யாராக
நியமித்தான்.
வாத்தியாரைப் பார்த்ததும் பாட்டு வரவில்லை, லயாவிற்கு. பயம் தான்
வந்தது.
'குழந்தையைச் சிரமப்படுத்தாதீர்கள் சார்" என்று வாய் வரை வந்த வார்த்
தைகளை ரொம்பவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார், அந்த முதியவர்.
எவன், அவருக்குச் சுளையாக மாதம் நூற்றைம்பது ரூபாய் தரப் போகிறான்?
ஆயிற்று இன்றுடன் சரளி வரிசை 'ஓவர்'. பிறகு ஜண்டை வரிசை. அதற்குப்
பிறகு அலங்காரம்...அப்புறம் கீதம்..அலங்கார மேடை...பத்திரிகை நிருபர்கள்..
சந்தோஷத்துடன் ஆபிசிலிருந்து வந்தவனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டி
ருந்தது.
'ராக்கம்மா கையைத் தட்டு' என்று ஒரு வாண்டு கீச்சுக் குரலில் பாட, 'பாட்டு
க்ளாஸ்' என்றாலே வேப்பங்காயாய் நினைக்கும், லயா, இடுப்பை அசைத்து,
உடம்பைக் குலுக்கி டான்ஸ் ஆட, சுற்றி நின்ற குழந்தைகள் கும்மி அடித்துக்
கும்மாளம் போட...
தன் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகப் போன நிலையில்...
ஆத்திரத்தில் கையை ஓங்கிய அரவிந்தன் ஒரு நொடி யோசித்தான்.
ஒரு நொடி தான்....
'விளக்கு உள்ளுக்குள் சுயமாக எரிய வேண்டும். அது சுடர் விட்டு எரியத்தான்
தூண்டல் வேண்டும், என்பது அவனுக்கு அப்போதுதான் புரிந்தது.

- நன்றி கல்கி 10.1.93 இதழ்

Monday, November 9, 2009

யார்?

குழலில் ஸ்வரங்களை அப்யசிக்கிறேன் ...
அதற்கு இனிமை கொடுத்தது யார்?
இளஞ்சூட்டில் புளி நீரில் உப்பு தூவுகிறேன் ...
அதற்கு சுவை கொடுத்தது யார்?
விசிறியால் புழுக்கம் மறைய விசிறுகிறேன் ...
அதற்கு குளுமை கொடுத்தது யார்?
மேலும் கீழும் கோடுகள் போடுகிறேன் ...
அதற்கு உருவம் கொடுத்தது யார்?

பொடி விஷயம் தான் ஆனால்.....




பொடி போடும் மனிதர்களை இப்பொழுதெல்லாம் யாராவது
பார்க்கிறீர்களா ? யாராவது ஒருவர், இருவர் கண்ணில்...
மூக்கில் எப்போதாவது படுவார்கள். அடியேனுக்கு இந்த
விஷயத்தில் ஒரு குருட்டு அதிர்ஷ்டம். ஒருவரல்ல.. இரண்டு
பேர் எனக்கு வெகு அருகில் இருந்தார்கள். அந்த இரண்டு
நபர்களுமே என்னிடம் வெகு ப்ரியமாகவே நடந்து கொண்டார்கள்.
எங்கள் நட்புக்கு பொடி ஒரு தடையாகவே இருந்ததில்லை.

நானும் எத்தனயோ துர்பழக்கம் உள்ளவர்களைப் பார்த்திருக்கிறேன்.
தண்ணி அடிப்பவர்களிடம் சகஜமான நல்லுறவு இருக்கும். இரண்டு,
மூன்று நண்பர்கள் 'ஜமா' சேர்ந்தால் அவர்களின் நடுவில் நிச்சயம் ஒரு
பாட்டிலாவது இருக்கும். அதைப் போல சிகரெட் குடிப்பவர்களிடம்
ஒரு நளினமான நட்பு இருக்கும். ஒருவர் மற்றவருக்கு 'பற்ற' வைக்கும்
போது அடடா... என்ன ஒரு கரிசனம்... ரொம்பவும் மென்மையாகவே
'பற்ற' வைப்பார்கள்.

ஆனால் இந்த பொடி போடும் நண்பர்களைப் பாருங்கள். அவர்கள் கண்க
ளில் எல்லாம் பயம் மின்னும்.எங்கே பொடி கேட்டு விடுவானோ என்ற கலக்கம்
அவர்களுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். அது அவர்களை
எப்பொழுதுமே ஒரு 'டிஸ்டன்சி'ல் வைத்திருக்கும். மற்ற துர்பழக்க
நண்பர்களைப் போல் அவர்கள் அவ்வளவு அன்யோன்யமாக இருக்க
மாட்டார்கள்.
அப்படித் தான் ஒரு நாள்......
ஒரு பழுத்த ராகு கால வேளையில் இவர் அவரிடம் பொடி கேட்டார்.
பதிலுக்கு அவர் இவரிடம் ஒரு துண்டு காகிதம் கொடுத்தார்.
அவர் வெகு கோபமாக இடத்தை காலி செய்தார்!

இருவர் நட்பிலும் ஒரு பெரிய விரிசலை உண்டு பண்ணி விட்டது, ஒரு
சின்ன பேப்பர்!
அப்படி என்னத் தான் அதில் எழுதி இருந்தது ?
அது இதோ....

ஓசிப் பொடி கேட்டு உபத்ரவம் செய்வோரை
பாசிப் படர்ந்த பாழ் கிணற்றில் தள்ளி,
தோசிப்பயல்..உதவாக்கரை என்று, நாம்
ஏசினால் போய் விடுமோ ஏழரை நாட்டுச் சனி!

போனவர் போனவர் தான்!

Sunday, November 8, 2009

முளைச்சு மூணு இலை விடறதுக்குள்ளே....


கொஞ்ச நாட்களாகவே ரம்யா சந்தோஷத்தைத்
தொலைத்து விட்டிருந்தாள்.

ஸ்கூல் விட்டு வந்தவுடன் பேக்கை ஒரு வீசல்....
யூனிபார்ம் போட்டது போட்டபடி... பால் குடிக்கச்
சிணுங்கல்... ஓவென்று ஒரு கத்தல்... தடதடவென்று
கால் உதைத்தல்... எல்லாமே போச்சு!
எதையோ இழந்துவிட்ட சோகம், கண்களில்... துளிக்கூட
எதிர்ப்பு இல்லாமல் பால் குடித்தல்.யூனிபார்முடன்
சுருண்டு படுத்துக்கொள்ளல்.ஆபிசிலிருந்து நான்
வந்தவுடன்,துள்ளிக்குதித்து ஓடி வந்து,கன்னத்தில்
'கிஸ்' கொடுப்பவள், என் வரவை லட்சியமே செய்யாமல்
கண்களை மூடிக்கொண்டு இருக்கிறாள்.

'குழந்தைக்கு ஜுரமாக இருக்குமோ' என்று அபர்ணா
டாக்டரிடம் போய்க்காண்பித்தாள்.'ஸ்கேன்' ஒன்று
தான் பாக்கி.எல்லா டெஸ்டுகளையும் எடுத்து விட்டு
சில மாத்திரைகள் எழுதி கொடுத்தார் டாக்டர்.சாதாரண
ஜலதோஷத்துக்குக்கூட 'உயிருக்கு ஆபத்தில்லை' என்று
பீடிகை போடும் டாக்டர் அவர் என்பது அபர்ணாவுக்கு
தெரியாமல் போனதுதான் என் துரதிருஷ்டம்.

மாத்திரைகளை ரம்யா விழுங்க, அந்த மாத்திரைகள்
என் பர்ஸை விழுங்கியதுதான் மிச்சம். குழந்தையின்
உடம்பு சரியாகவில்லை.

கவலையுடன் ரம்யாவின் அருகில் உட்கார்ந்து
அவள் உடம்பை வருடினேன்.இது என்ன கைகளில்...?

நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும்,கைகளைச்
சட்டென்று மறைத்துக்கொண்டாள் ரம்யா.கை பூராவும்
கீறல்கள்....
"என்னடி இது?"
"ஒண்ணுமில்லேப்பா."
கைகள் மறுபடியும் முதுகுப்புறம் மறைந்து கொண்டன.
தூண்டித் துருவிக் கேட்டதில் குழந்தை அழுதே விட்டாள்.

"ஸ்கூல்ல.. ரமேஷ்பாபுன்னு ஒரு பையன்.என்னை கிள்றாம்பா.
பென்சிலைப் பிடுங்கிக்கிறாம்பா.மிஸ் கிட்ட சொன்னா என்னைக்
கொன்னுடுவேன்னு பயமுறுத்தறான்ப்பா."
"அப்பாட்டே ஏன் சொல்லலை?"
"அடிச்சுடுவாம்பா.உங்கிட்ட சொன்னா, அவன் என்னைக் கிள்ளிடு
வான்!"
ரம்யாசொல்லும்போது பாவமாக இருந்தது.
கொஞ்சம் யோசித்துப்பார்த்ததில், இது ஒன்றும் நான் நினைப்பது
போல அவ்வளவு சின்ன விஷயம் இல்லை என்பது தெரிந்தது
பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக விசுவ ரூபமெடுத்து, என் கண்
முன்னே பரந்து விரிந்தது.

பையன் இந்த ஒண்ணாம்கிளாஸிலேயே இவ்வளவு முரட்டுத்தனமாக
இருக்கிறானென்றால் அதற்கு என்ன காரணம்? அவனது பெற்றோர்
இருவருமே ' ஆபீஸ் கோயர்ஸ்' ஆக இருந்து, குழந்தையைப் பார்த்துக்
கொள்ள நெருங்கிய சொந்தம் எதுவும் இல்லாமல்... வேலைக்கு வைத்துக்
கொள்ளப்படும் ஆயாவின் இரவல் உறவில், இடி பட்டு,உதை பட்டு
பெற்றோரின் அன்புக்கு ஏங்கி... அது கிடைக்காமல் போக... அதனால்
அந்த பிஞ்சு மனத்தில் 'டொக்'கென்று ஒரு பள்ளம் விழ... அதை நிரப்ப
வழி தெரியாமல் இந்த மாதிரி முரட்டுக் குழந்தையாக மாறி விட்டதா?

சரி விஷயத்துக்கு வருவோம்.'பேரண்ட்ஸ் மீட்டிங்'கில் இதைப் பற்றிச்
சொல்லலாமா? இதிலெல்லாம் நாங்கள் தலையிடமுடியாது என்று
அவர்கள் கை விரித்து விட்டால்... கன்ஸ்யூமர் கவுன்சிலில் ரிப்போர்ட்
செய்யலாமா? பழி வாங்கும் படலமாக, பாவம் அந்த சின்னக்
குழந்தைக்கு டி.சி. கொடுத்து அனுப்பி விட்டால்? ஓட்டு கேட்கும்
அரசியல்வாதி போல, வாயில் உள்ள பல் முழுவதும் தெரியச் சிரித்து
ஐயாயிரம் ரூபாய் காசு கொடுத்து, வாங்கிய சீட்டு! பையனுடய
அப்பாவுடன் 'காம்ப்ரமைஸ்' செய்து கொள்ளலாமா? அவர் ஒப்புக்
கொள்ளாவிட்டால்....

'இந்தச் சின்ன வயசிலேயே உனக்கு இப்படி ஒரு கஷ்டமா கண்ணம்மா?'
என்று மனதுக்குள் அழுதேன். இத்தனைக்கும் ஆள் பலம் இருக்கிறது
எனக்கு. பையனின் அப்பாவைத் தண்ணி இல்லாக் காட்டுக்குத் துரத்தி
விட முடியும் என்னால். அபர்ணாவுக்கு, போலீஸ் கமிஷனர் ஆபிசில்
வேலை. போலீஸ் 'இன்ப்ளூய்ன்ஸ்' ஐப் பயன்படுத்தி பயலை
'ஈவ் டீசிங்கி'ல் புக் பண்ணி விடலாம். அந்த ஆள் பிசினஸ்
பண்ணினாலும் பரவாயில்லை. 'கமர்ஷியல் டாக்ஸி'ல் ஆள் இருக்கிறது
எனக்கு.

ஆயிரம் இருந்து என்ன? மிகவும் மென்மையாக 'ஹேண்டில்' செய்யப்
பட வேண்டிய விஷயம் இது. ஒன்று கிடக்க ஒன்று நான் எதாவது
செய்யப் போக, அந்த பையனின் பிஞ்சு மனத்தில் என்னுடைய
செய்கை ஒரு மெல்லிய அதிர்வை உண்டாக்க அந்த அதிர்வு
காலப்போக்கில் மனச்சிதைவை ஏற்படுத்த, ஒரு சமூக விரோத
சக்தி இந்த நாட்டில் உருவாக நானும் ஒரு காரணமாக இருந்து
விடுவேனோ?

ரம்யா இரண்டாவது குழந்தை. படு ஸ்மார்ட்.. ஒரு கை தேர்ந்த
சிற்பியின் இரண்டாவது சிற்பம், முதல் சிற்பத்தை விட எப்படியோ
அற்புதமாக அமைந்து விடுவதைப் போல் எல்லார் வீட்டு
இரண்டாவது குழந்தைகளுமே அற்புதமாகத்தான் அமைந்து
விடுகின்றன. அப்படிப்பட்ட குழந்தைக்கு இப்படி ஒரு கஷ்டம்!
கடவுளே...

அபர்ணா வந்தாள்.

"ஸ்கூலுக்குப் போயிருந்தேன். ஜஸ்ட் 'பைவ்' மினிட்ஸ். மிஸ் கிட்ட
போய் விஷயத்தைச் சொன்னேன். அந்தப் பையனைக் கண்டிச்சா.
பாவம், அது அழுது டிராயர்லயே ஒண்ணுக்குப் போயிடுத்து.
இவளையும் இடத்தை மாத்தி உட்கார வைச்சுட்டா மிஸ்! இதுக்குப்
போயி பெரிசா மனசைக் குழப்பிட்டீங்களே.."

போய்யா... நீயும் உன்னோட ஊசிப்போன ஐடியாக்களும்!' என்பது
போல இருந்தது அவள் பார்வை.

நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். " இனி மேல் நியூஸ் பேப்பரே
படிக்கக் கூடாது !"

--- நன்றி சாவி இதழ் 10.11.93

Saturday, November 7, 2009

ஏன் ?????

சித்தனும், புத்தனும்
பிறந்த
இந்த திருநாட்டில்
சீர் திருத்த பள்ளிகளில்
ஏன்
சிறுவர்கூட்டம்?

####################################

நதிக்கரையில் தோன்றிய
நாகரீக பூக்களெல்லாம்
நதிநீர் பங்கீட்டால்
அநாகரீகமாய்
கருகிப்போனதேன்?

Friday, November 6, 2009

இன்றைய நிலை.....

இன்றைய நிலை.....

தகவல் தொழில் நுட்ப
புரட்சியால்
இந்தியாவில்
குடிசைக்குள்
செல் புகுந்துவிட்டது ....
... நெல் தான் புகவில்லை...

முதல் வார்த்தை!!!

இந்த வலைப்பூவில் எனது பயணத்தை ஒரு கவிதையோடு தொடங்குகிறேன்!!!