Saturday, April 30, 2011

ஆங்கரை டேஸ்!!!!!!

மீண்டும் ஆங்கரையின் ஒரு அழகிய அனுபவம்....

அப்போது நாங்கள் அக்ரஹாரத்தில் கிழக்கால இருந்தோம். நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஹரன்,குமார்,கட்ல இந்த மூன்று பேரும் ஃப்ரெண்ட்ஸ்..
இப்போது யார்..யார்...எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை..
இதில் ஹரன் எங்களுள் வசதியானவன். அப்பா இல்லை..அவன் தாத்தா தான் எல்லாமே! அவர் பெயர் ராமசர்மா! ஹரன் கொழுக்கு மொழுக்காக அமுல் பேபி கணக்காய் இருப்பான்.அவன் எழுத்தும் அழகாக குண்டு,குண்டாய் இருக்கும். அந்த காலக் கட்டத்தில். பேனா ஒருத்தன் வைத்திருந்தால் அவன் பெரிய ஆள் என்று அர்த்தம்.சிகரெட் குச்சி மாதிரி ஃபேஷனா ஒரு பேனா..அதை ஹரன் வைத்திருந்தான். எனக்கும், அவனுக்கும் ஒரு தடவை சண்டை வந்து,தெருவில் கட்டிப் புரண்டோம்.இந்த பேனா விஷயம் தான் என்று நினைக்கிறேன்.அதிர்ஷ்ட வசமாய் நான் ஜெயித்தேன்.(எப்போதும் நான் தான் அவனிடம் அடி வாங்குவது வழக்கம்)
தோத்துப் போன ஹரனுக்குப் ப்ரமாதமான ஆத்திரம்! அவன் அம்மா அப்போது வாசலுக்கு வரவே, என்னைப் பற்றி கோள் மூட்டி விட, நான் ஓடி வந்து விட்டேன்..
கொஞ்ச நேரத்தில் அவன் அம்மா எங்கள் வீட்டு வாசலில்!
“.. நான் வர வம்புக்கும் போக மாட்டேன்..வந்த வம்பையும் விட மாட்டேன்”
இந்த அற்புதமான வசனத்துக்கு எங்க அம்மா என்ன சொல்வார்களோ என்று ஆவலோடு நான் பார்க்க,
அம்மாவிற்கு இதற்கு “counter" போட தெரியாமல், நானும் அப்படித் தான் என்றூ சொல்ல சுவாரஸ்யமில்லாமல் போய் விட்டது. விஷயம் கேள்வி பட்டு, அம்மாவிடம் நான் வாங்கிய அடி இருக்கிறதே...
இதற்கு பேசாமல் ஹரனிடமே வாங்கியிருக்கலாம்!
(அடுத்த இரண்டாம் நாளில், நானும் ஹரனும் பேசி விட்டோம். ஆனால், எங்களால்,
ஜெய்யு மாமியுடன் அம்மாவுடனான நட்பு போய் விட்டது!)
குமாரோட அப்பா கணபதி மாமா வீட்டுப் பின்னால், ஹோட்டல் வைத்திருந்தார்.ஹோட்டல் காரரின் பையன் அநியாயத்திற்கு ஒல்லியாய் இருந்தான். அடுத்தவன் கட்ல..அவன் இயற் பெயர் நாகராஜன். படுத்துக் கொள்ளும் போது, வீட்டுக் கூரையிலிருந்து, கட்டு விரியன் குட்டி ஒன்று, அவன் மார்பில் விழ, அவன் குய்யோ, முறையோ என்று அலற, அன்று முதல் கட்ல ஆனான், அவன்!
சில பேரெல்லாம் வினோதமாய் இருக்கும்..
புலிக்குட்டி வைத்தி, ஆன்னிய வைத்தி, அன்பில் வைத்தி..இதெல்லாம் பெரியவர்கள் எங்கள் அளவில், லோலோ பாட்டி, வாத்தார், சிவன் கோவில் காக்கையன்..மீசை கிட்டு..அர்ஜுன மாமா...
சுந்தரம் என்கிற பெயரிலேயே நான்கு பேர் இருக்க, எங்கள் தாத்தா அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க ஒரு பாட்டு எட்டு கட்டினார்...

... மேலத்தெரு சுந்தரம், கீழத் தெரு சுந்தரம்,
நடுத்தெருவு சுந்தரம், குளத்து ராம சுந்தரம்....

எங்கள் நண்பர் குழாத்தில் கட்லையுடன், நாங்கள் ஜாஸ்தி வைத்துக் கொள்ள மாட்டோம்.அவனுக்கு எங்களை விட பலம் ஜாஸ்தி! பழயது ப்ளஸ் எருமைத் தயிரில் வளர்ந்த உடம்பு..அடித்தால், ’ங்கோய்’ என்று காது இரண்டு நாளுக்கு கேட்கும். யானை எப்படி எறும்பை விட்டு விடுமோ, அப்படி எங்களை மன்னித்து விடுவான்,கட்லை நாங்கள்
மறந்து போய் ஏதாவது குறும்பு செய்தால்......
அப்புறம்....
மணி மாமா!
தீபாவளி சமயம் எங்களுக்கெல்லாம் கந்தகம் சப்ளை செய்பவர்..ஒரு இரும்புக் குழாயில் அந்த கந்தகத் தூளைப் போட்டு, அதை திண்ணையில்( பக்கத்து வீடு) அடித்தால், எட்டு லக்ஷ்மி வெடி சத்தம்!
அவருக்கு ஒரு தம்பி!
கந்தன்!
கந்தன் எங்களுக்கெல்லாம் ட்ரீமர் மாதிரி..எங்களுக்கு பட்டம் செய்து கொடுப்பது...லால்குடியில் போய் கொக்கு குண்டு(கோலிக் குண்டை விட பெரியது)வாங்கித் தருவது, சிகரெட் அட்டை..அப்புறம் அந்த தீபாவளி பட்டாஸ் கட்டில் உள்ள வண்ண மிகு அவ்ரங் உட்டாங் படம் என்று ரொம்பவும் அட்டாச்டு!
பாவம் ஓரு நாள் சித்த சுவாதீனம் ஆகி, மேற்கால, கிழக்கால என்று தரதரவென்று ஓடி,,,அவனைப் பிடித்து, கட்டிப் போட்டு, குடம்..குடமாய் தலையில் ஜலம் ஊற்றி..
சின்னப் பசங்கள் எங்கள் எல்லாருக்கும் கந்தனைப் பார்த்து, ஓவென்று அழுகை வர..
அந்த கந்தன் .......
ஒரு நாள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிப் போய் விட,
இப்பாது கந்தனை நினைத்தாலும், மனதை என்னவே செய்யும்...
பாவம்...எல்லாருக்கும் உபகாரம் பண்ணும் ஜீவன்...
சித்த ப்ரமை தெளிந்து நன்றாக இருக்க, ப்ரார்த்தனை செய்வோம்!!!!!!

Wednesday, April 27, 2011

தங்க கப்பரை!!

மிருகங்களுக்கு
இயற்கையை,
சூழ் நிலையைப்
பேணிக்
காப்பாற்றுவதில்,
அக்கறை அதிகம்!
ஆறறிவு படைத்த
மனிதர்க்கு?
*
வறுமையை ஒழிக்க
முடியவில்லை....
ஆனால்
பிச்சைக் காரர்களுக்கு,
தங்க கப்பரை
தரும்
நாம் போடும்
திட்டங்கள்!!!
*
மூன்று வயது
சிறுவன் போல்,
முரண்டு பிடிக்கிறார்,
தாத்தா..
அவருக்கு,
முதியோர் இல்லம்
வேண்டாமாம்!

Tuesday, April 19, 2011

வாஷிங்டனுக்கு வா..!!!!!!



செல்ஃபோன் சிணுங்கவே எடுத்தேன்.
ஒபாமா....!!!!
" என்னப்பா, அங்கே எப்படி இருக்கு?"
அவருக்கு என் மீது ரொம்பவும் ப்ரியம். திருச்சி வந்தால் என்னைப் பார்க்காமல் போக மாட்டார். என்னை விட தமிழ் மீது ரொம்பவும் ப்ரியம்.இந்தோனிஷியாவில் படிக்கும் போது, தமிழ் கத்துக் கொண்டாராம்.
" எலக்சன் எப்படி போச்சு! "

இரண்டு மூன்று நாளா, அவர் அதை பற்றித் தான் கேட்கிறார்..மனுஷன் இவ்வளவு ஆர்வமாய் கேட்கிறதைப் பார்த்தால், யாரோ உள்ளூர் அரசியல் வாதியின் பினாமியா இருப்பாரோன்னு எனக்கு லைட்டா டவுட் வர ஆரம்பித்தது..
" வாஷிங்டன் எப்ப வரே?"
இங்க வாஷிங் சோடா வாங்கக் கூட,கையில காசு இல்லாம தவிக்கிற நேரத்தில இப்படி ஒரு ஆஃபர்...
" நீ இங்க வந்தா, நான் ஒரு நாலு நாள் லீவ் போட்டுட்டு, உன்னோட மொக்கைகளை நாள் பூரா ரசிச்சுட்டு இருப்பேன்..இங்க பொடாமக் நதிக் கரையாண்டே, பொட்டுக்கடலை தின்னுட்டு ஜாலியா பொழுது போக்கலாம்..உனக்கு இந்த ஊர் பூரா சுத்திக் காண்பிப்பேன்"
" வரும் போது, வரேன்"
பொத்தம் பொதுவாய் சொல்லி வைத்தேன்.
ஒபாமாக்கு அமுல் பிடிக்கும்..இங்கேர்ந்து ஒரு டின்னை எடுத்துண்டு போய் கொடுத்தா, நம்மூர் கிருஷ்ணர் அவல் திங்கறாமாதிரி அவர் அமுல் திங்க ஆரம்பிச்சா, என்னொட வொய்ட் ஹவுஸ் கூட வெள்ளை மாளிகை மாதிரி ஆகி விடும்.
அதுக்கு அங்க போகணுமே..
பஞ்சு,லல்லிக்கு (வாஷிங்டனில் திருமணம் பார்க்கவும்) அறுபதாம் கல்யாணத்துக்குப் போலாமென்றால், எனக்கு அம்மாஞ்சி மாதிரி வேதம் தெரியாது. எப்படி போறது?
'தோழனோடும் ஏழமை பேசேல்' என்ற பழமொழி என்னைத் தடுத்தது.
இல்லாவிட்டால், ஒரு வார்த்தை சொன்னால், அவர் ஃப்ளைட் டிக்கெட் அனுப்ப மாட்டாரா, என்ன?
அட...இன்னொரு ஃபோன்.
" ஹலோ"
" யாரு?"
" கடாஃபிப்பா.."
" அட, எப்படி இருக்கே"
" ஒண்ணும் சொல்றா மாதிரி இல்ல..ரொம்ப கஷ்டம்..நீ ஒபாமாவோட பேசினியா?"
" அட, இப்ப தான் அவர் பேசினார்!"
" வழக்கம் போல மறந்துட்டியா? சரி..அடுத்த தடவை வரும் போது சொல்லு.. நா உன் ஆளுன்னு"
கடாஃபியும், நானும் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடத்துப் பக்கத்து டீக் கடையில சிங்கிள் டீஐ சிப் பண்ணிக் குடிச்சவங்க..இன்னும் என்னை மறக்காம இருக்கான்.
அது சரி ஒரு மொக்கை உனக்கு இமெயில் பண்ணியிருக்கேன். படிச்சுப் பாரு"
உடனே லாப்டாப்பைத் திறந்தேன்.
அதில் வந்த மெயில்:
ஹெலிகாப்டர் : எப்படி அண்ணே, இவ்வளவு ஸ்பீடா உங்களால, பறக்க முடியுது?
ராக்கெட் : உனக்குப் பின்னால பத்திக் கிட்டு எரிஞ்சா, நீயும் அது மாதிரி பறப்பே, தம்பி!
லிபியா பத்திக்கிட்டு எரியும் போது கடாஃபி சொன்ன ஜோக் இது!
(பின் குறிப்பு: திரு ஆர்.ஆர்.ஆர். அவர்களின் ஆட்டோபயாக்ரஃபி " MY EXPERIMENTS WITH FALSE" என்ற நூலிலிருந்து திருடப் பட்டது)

Tuesday, April 12, 2011

ஆ(ஹா)ஸ்ய ஜோதி!



ஒரு மாதத்தின் சரி பாதி நாள் பதினைந்து. ஒரு வருடத்தின் சரி பாதி மாதம் ஆறு.ஒரு நூற்றாண்டின் சரி பாதி வருடம் ஐம்பது.இதனுடன் சுக்கிரனின் உச்சம் ஏழாம் நம்பரைச் சேர்த்தால் வருவது ஐம்பத்தி ஏழு!
வரலாற்று ஏடுகளை சற்றுப் புரட்டிப் பார்த்தோமென்றால்,இந்த பதினந்தாவது நாளில், ஆறாவது மாதத்தில், ஐம்பத்தி ஏழாம் வருடங்களில் மட்டும், அதி முக்கியமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. கொஞ்சம் பின்னோக்கி செல்வோமா ?
15.06.1557 அன்று,இங்கிலாந்து நாடு பிரான்ஸ் தேசத்துடன் போர் ப்ரகடனம் செய்தது. அந்த நாள் ராசியோ, என்னவோ, அது மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. அடுத்த நூறாவது வருடமான 15.06.1657 அன்று ஆலிவர் க்ராம்வெல் என்கிற மா வீரன், புகழ் பெற்ற ஜான் லேம்பர்ட்டை வீழ்த்தி, இங்கிலாந்து நாட்டின் தலை சிறந்த தளகர்த்தர் ஆனான். அடுத்த நூறாவது வருடம் 15.06.1757 அன்று, ராபர்ட் க்ளைவ் BATTLE OF PLASSY ல் வெற்றி வாகை சூடி,வங்கத்தைக் கைப்பற்றி, அழியாப் புகழ் பெற்றான். அடுத்து வந்த 15.06.1857 ல் சோஃபியா என்ற மாபெரும் அழகி ஸ்காண்டிநேவிய இளவரசன் ஆஸ்கார் II என்ற மாவீரன் கரம் பற்றிய பொன்னாள்! அடுத்து வந்த நூற்றாண்டு,15.06.1957. அன்று .......
ஆசியாவில் ஒரு ஜோதி! அதிலும் இந்தியாவில்,.... தென்னிந்தியாவில்... அதுவும் திருச்சிராப்பள்ளியில், அதிலும் அந்த ஊரின் மையப் பகுதியான கிலேதார் ஸ்டோர் என்கிற குடியிருப்பில் அந்த ஜோதி தோன்றியது. வானத்தில் பளிச்சென்று ஒரு மின்னல் வெட்ட, மழை பொழிய, வானத்தில் சப்தரிஷி மண்டலம் தெரிய, வான சாஸ்திரிகள் தேவன் வந்து விட்டான் என்று, குதூகலம் அடைந்தார்கள். அவர்கள் மட்டுமா? அகில உலகமே அந்த மாலை நேரத்தில் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. காரணம் அடுத்த நாள் ஞாயிறு!
அந்த குழந்தையின் தந்தை மின்வாரியத்தில் கணக்கராய் உத்யோகம்.குந்தா, பைகாரா, சாண்டினல்லா என்று ஹைட்ரோ எலக்ட்ரிக் ப்ராஜட்டுகளில் வேலை. அவருக்கு இந்தியும், உருதுவும் தண்ணீர் பட்ட பாடு. சிறந்த ஓவியர்.. நன்றாகப் பாடுவார்..யாரிடமும் கற்றுக் கொள்ளாமலேயே, அருமையாக ப்ளூட் வாசிப்பார்..வாலி பால் ப்ளேயர் (அமெச்சூர் தான்)
வரலட்சுமி விரதம் அன்று சுவற்றில் அவர் படம் போட வேண்டுமே!அவ்வளவு ஜோராக இருக்கும்.
தாயார் நன்றாக சமைப்பார்.அவருக்கு கண் கண்டதை கை செய்யும்! கோஷா நூலில் டென்னிஸ் பால்..எம்பிராய்டரி வேலை எல்லாம் செய்வார். இந்த எழுபத்தி ஏழாவது வயதிலும்,’ ஹால்ல லைஸாலோட டேபிள் ஸால்ட் ஒரு ஸ்பூன் போட்டுப் பாரு, தரை பளிச்னு இருக்குமாம்.மங்கையர் மலர்ல போட்டிருக்கான்’ என்று அமெரிக்காவில் இருக்கும் பேத்தியிடம் ஃபோன் செய்யும் அளவிற்கு நாலெட்ஜை அப்டேட் செய்து கொண்டு இருப்பவர்!
நாளோரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தான் குழந்தை. அந்த கால பிரபல உணவான COW & GATE ஐ அருந்தி, வாளிப்பாய் வளர்ந்தது அது. குழந்தைக்கு செல்லமாய் ஸ்ரீதர் என்று பெயர் வைத்தார்கள். அந்த பெயர் ராசியோ, என்னவோ, பக்கத்து வீட்டில் குடியிருந்த குமுதா என்ற மலேஷியா மாமியின் தம்பி ராமனை ஸ்ரீதர் என்ற பிரபல டைரக்டர் கொத்திக் கொண்டு போய் விட, அந்த ராமன் பின்னாளில் சினி ஸ்டார் ரவிச்சந்திரன் ஆனது பெரிய கதை!
குழந்தைக்கு ஐந்து வயதும் ஆனது. பள்ளி கூடத்தில் சேர்க்க அதன் தகப்பனாரும், தாத்தாவும் போனார்கள்.அன்று அந்த ஷண்முகா பாடசாலை பிள்ளைகள் எல்லாருக்கும் அவர்கள் குஞ்சு கை நிறைய ஆரஞ்ச் பப்பர்மிண்ட்.
வாத்தியாருக்கு தட்டு நிறைய கல்கண்டு, வெற்றிலைப் பாக்கு,பழம்,பத்து ரூபாய் தட்சிணை எல்லாம் வைத்தார்கள்..
குழந்தையின் பெயர் என்ன..
தாத்தா பெயர் அனந்த ராமன்..அவர் பெயர் வரவேண்டும் என்று ராம மூர்த்தி என்று நாமகரண்ம் ஆயிற்று!
ஒரு தாம்பாளத்தில், நெல்லை குவித்து, அரி ஓம் என்று வாத்தியார், குழந்தையின் கை பிடித்து எழுத ஆரம்பிக்க,
தாத்தாவும், அப்பாவும் போய் விட, அந்த கொழுக்கு, மொழுக்கு பெரிதாக அழுவதற்கு பயந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தது!!