Saturday, July 1, 2017

ம.ம.ச.

அந்த காலனியில் ப்ரதி இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை மாலை நாலரையிருந்து ஆறு ரகசியமாக ஒரு மீட்டிங் நடைபெறுகிறது. அந்த மீட்டிங்கில் எல்லாருக்கும் அனுமதியில்லை.ரொம்பவும் ஸ்க்ரீன் செய்து அவர்களுக்கு நம்பகமான ஆள் என்று எல்லாருக்கும் ஒட்டு மொத்தமாக தோன்றினால் தான் உள்ளே அனுமதிப்பார்கள்.
மிக மிக ரகசியமாக நடைபெற்றது அந்த கூட்டம்...பாதுகாப்பான இடத்தில் ...எப்படி என்றால் பக்கத்தில் 3 கி.மீ அருகில் உள்ள B2 போலீஸ் ஸ்டேஷனுக்கே தெரியாது இப்படி இங்கு ஒரு பயங்கரமான கூட்டம் நடைபெறுகிறதென்று!
       அந்த கூட்டத்தில் விறுவிறுப்பாக பேசக்கூடியவர்கள் நிறைய பேர் இருந்தாலும் கனல் தெறிக்குமாறு ஒருவன் பேசுவது ரொம்பவும் வீராவேசமாக இருக்கும். அவனுடைய பேச்சிற்கு அடிக்கடி கரகோஷம் கிடைக்கும்..கழுத்து பச்சை நரம்புகள் துடிக்குமாறு அவன் பேசுவதை கேட்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டு அவன் எது சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருந்தார்கள்...தீப்பொறி திருநாவுக்கரசு என்பது அவன் பெயர்.
        இப்படியாக ஒரு கொழுத்த ராகு காலத்தில் அந்த சங்கத்தின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.வழக்கம் போல் அனைவரின் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டுக் கொண்டிருந்தான் தீப்பொறி திருநாவுக்கரசு!
             திடீரென்று ஒரு சலசலப்பு....திமுதிமுவென கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலில் நிறைய  பெண்கள் ஆக்ரோஷத்துடன் பாய கூட்டத்தில் இருந்தவர்கள் தம் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். ஒரு சில நொடிகளில் கூட்டம் சிட்டாகப் பறந்து விட...
              அத்தனை அமர்க்களத்திலும் துளிக்கூட அசையாமல் மைக்கை பிடித்துக் கொண்டு கொஞ்சம் கூட பதட்டப் படாமல் ஒருக்களித்து  ஸ்டைலாக சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தான் நம் தீப்பொறி திருநாவுக்கரசு....
               " ஹா......இவ்ளவ் தைரியமா?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனை எல்லாரும் நெருங்க முன்னணியில் சென்றாள், அவன் மனைவி, மல்லிகா கையில் பூரி கட்டையோடு!
                'அடுத்து என்ன நடக்குமோ?' என்று ஒரு வித த்ரில்லோடு அனைத்து மனைவி மார்களும் 
கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க...
                அருகில் சென்றவுடன் தான் தெரிந்தது, பயத்தில் அப்படியே மயக்கமாகி விட்டான், அந்த 'மனைவியிடம் மருள்வோர் சங்க தீப்பொறி பேச்சாளன்' என்று!
          .......

திரும்பி பார்!

திரும்பி பார்க்கிறேன்..
*******************
போன வருடம் இந்த நாட்களில் US ல் இருந்தேன்..
பெண் வீடு!
எனக்கும்,சகதர்மணிக்கும் ஒரு ரூம்..எங்கள் சம்பந்திக்கு இன்னொரு ரூம்..
காலையில் ஆறரை மணி டு ஏழரை மணி வாக்கில் எழுந்திருக்க வேண்டியது..மாப்பிள்ளை ஐந்தரை மணிக்கே ஆபீஸ் போய் விடுவார்...பல் தேய்த்து காபி குடித்து விட்டு, நானும் எங்கள் சம்பந்தி சார் திரு Ramachandra Nagarajaan (He is my relative மட்டுமல்ல...ஒரு நல்ல நண்பரும் கூட!)
இருவரும் ஒரு ப்ரிஸ்க் வாக்கிங்..அந்த pleasant valley avenue வை இரண்டு தடவை சுற்றி வருவதற்குள்,அரை மணி நேரம் ஆகி விடும்...
பிறகு பெண் ஆபீஸ் கிளம்பல்...நாங்கள் டிபன் சாப்பிடுவது எல்லாம் முடிந்து டி.வி.யில் பழைய எம்.ஜி.ஆர்..சிவாஜி ..ரவிசந்திரன்..ஜெய் படம் என்று பார்க்க வேண்டியது..
ஒரு மூன்று மணி நேரம் ஓடி விடும்..பிறகு சாப்பாடு..
சின்னதாய் ஒரு தூக்கம்...மறுபடியும் காபி..சாயந்திரம் மாப்பிள்ளை ஐந்து ஐந்தரைக்கு வந்து விடுவார்...அரை மணி நேரம் கழித்து பெண் வருவாள்..அவர்களுக்கு காபி கொடுத்து விட்டு மறுபடியும் வாக்கிங்...இப்போது நானும் சகதர்மணியும்...அவர்களிருவருமாக வாக்கிங்..எங்கள் அகத்துக்கு பக்கத்திலேயே ஒரு பார்க்..அதில் நாங்கள் நாலு பேரும் கொஞ்சம் ரெஸ்ட்...பிறகு வீடு திரும்பல்..நியூஸ் பார்த்தல் ..டின்னர்..
அங்குள்ள தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவது..களை புடுங்குவது..என்ற அசைன்மெண்ட் 
சில நாட்களில்..
US ல் நிறையவே நடந்தோம்..
பொழுதும்  படு ஜாலியாக ஓடிக் கொண்டிருந்தது..
ஒரு நாள் கண் விழித்ததும் வழக்கம் போல ப்ரஷ் செய்ய பார்க்கிறேன்...முடியவில்லை..
ஏதோ unusual ஆக....
பற்களை தேடுகிறேன்...கிடைக்கவில்லை...
பதட்டத்துடன் கண்ணாடியில் பார்க்கிறேன்..
ஹா...என்ன ஒரு கோரம்..
முகம் தன் symmetrical stage லிருந்து கொஞ்சம்...(கொஞ்சமா?) விலகியிருந்தது..வலது கண்ணும்,வலது உதடும் கொஞ்சம் மேல்நோக்கி சென்றுபார்க்கவே விகாரமாக இருக்க..
பயத்துடன் கட்டிலுக்கு வந்து போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டேன்..
'..கடவுளே..கடவுளே..இது  கனவாக இருக்கக்கூடாதா?' என்கிற அசட்டு  நம்பிக்கையுடன் கண்ணாடியில் முகம் பார்க்க, முகம் மறுபடியும் அதே கோணலுடன் தான் இருந்தது..
வெட்கம் பிடுங்கி திங்க, ரூமுக்குள் அடைந்து கிடக்க..அப்புறம் எல்லோரும் வந்து பார்த்து தைர்யம் சொல்ல..
உடனே, பெண்ணும் மாப்பிள்ளையும் கார் எடுத்து டாக்டரைப் பார்க்கப் போனோம்..அதற்குள் மாப்பிள்ளை கூகுளில் சர்ச் செய்து வந்தது Bell's palsy என்று கண்டுபிடித்து விட்டார்..குளிரினாலோ..அல்லது ஏதாவது stress னாலோ அது வருமாம்...
'வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டு அனைவருக்கும் கஷ்டம் கொடுக்கிறோமே' என்கிற சங்கடம் எனக்குள்..
டாக்டர் கொடுத்த மரத்திரை, கண்ணுக்கு சொட்டு மருந்து,சின்ன சின்ன எக்ஸர்ஸைஸ் எல்லாம் செய்து முப்பது நாளில் சரியாகி விட்டது..
அந்த சமயம் முகவிகாரம் தெரியாமல் இருக்க நான் வளர்த்த தாடி!
அந்த முப்பது நாட்கள் ..
என் அனுபவம்..
உறவுகளின் அனுசரனை..எனக்கும் 'பாதுகாப்பாக நம் மனிதர்களுடன் இருக்கிறோம்' என்கிற ஜாக்கிரதை உணர்வு..
'உறவு என்பது ஒரு சுகமான அனுபவம்' என்று நீல பத்மனாபன் தான் எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறார்?
எவ்வளவு சத்தியமான வார்த்தை?
குழந்தைகளின் ப்ரெண்ட்ஸ்களின் அன்பான  விசாரிப்பு..
டல்லாஸில் இருந்து அடிக்கடி வந்த இளைய மகள்..
மூன்று மாத லீவ் முடிந்ததால், நான் திருச்சிக்கு வர..
இங்குள்ளவர்களுக்கு ' சும்மா பல் வலி ..முகம் வீக்கம்..' என்று சமாளித்து, ஆபீஸ் வருகிறேன்..
அங்கு பெற்றோர்களையும்,உற்றோர்களையும் பல் வீக்கம் என்று சொன்னது இங்கு எடுபடவில்லை..
என்னைப் பார்த்தவுடன் கொல்லென்று என்னை சூழ்ந்து கொண்ட தோழமைகள்..
சும்மாவா...
எங்களுடையது, ஒரு முப்பத்தாறு வருட நெடிய ரயில் பயணமல்லவா?
ஆளாளுக்கு அக்கறையுடன் என்னை விசாரிக்க..
'எனக்கு இப்படித்தான் இருந்தது..ஒரு சின்ன எக்சர்சைஸ்..நம்ம ஆஸ்பிடல்ல மசாஜ் செஞ்சுக்கோ..சரியாயிடும் ..'
' இதெல்லாம் சகஜமா வரது தான்.....'
'பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லையப்பா..'
' நம்ம அர்ஷத் நிச்சயத்துக்கு நாம எர்ணாகுளம் போறோம்..உனக்கும் சேர்த்து ரிசர்வ் பண்ணியாச்சு..'
நண்பர்களின் கனிவான விசாரிப்பு...
தென்னை மரம் ஏறும் போது,சறுக்கி, மாரில் தோல் வயண்டு போக,அதனால் ஏற்படும் எரிச்சலுக்கு, விளக்கெண்ணெய் தோய்த்து மயில் பீலியால் வருடும் சுகம் போல இருந்த ஆபீஸ் நண்பர்களின் அக்கறை..
அடாடா..
அன்பு சூழ் உலகு ஐயா, இது 
உண்மையிலேயே,
அன்பு சூழ் உலகு தான்!
...........