Thursday, December 29, 2011

குழந்தையும்,பொம்மையும்!


#
பள்ளிக்கூடத்திற்கு கூட்டிக்
கொண்டு போவேன் என்று
அடம் பிடித்த குழந்தையின்
முதுகில் லொட்டன்று
வைத்து அம்மா
இழுத்துக் கொண்டு போக
ஏக்கத்துடன் பார்த்தது,
பொம்மை!
##
இரண்டு குழந்தைகள்
ஒரு பொம்மைக்காக,
சண்டை போட்டன..
குஷி தாங்காமல்,
காற்றில் பறந்தது
பொம்மை!
###
பொம்மை சாப்பிட்டால்
தான் சாப்பிடுவேன்..
அடம் பிடித்தாள்
குழந்தை..
பொம்மையின் வாயில்
அம்மா ஓட்டை போட,
கண்ணீர் தளும்பியது
குழந்தைக்கு!
####
பொம்மை பெண்டாட்டியாம்..
காலால் எட்டி
உதைத்தான் குழந்தை..
மாலையில்..
காலையில் அம்மா
அப்பாவை திட்டியது
ஞாபகம் வர...

Saturday, December 24, 2011

தன் காலில் நின்றால் தான்!!!


” என்னங்க..உங்களைத் தானே, அந்த மந்திரியைப் போய் பாருங்க..’
’ அவருக்கு என்னை இன்னமும் ஞாபகம் இருக்குமா?”
” எப்பப் பார்த்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டு இருங்க..”
” அதுக்கில்ல..பார்வதி.. நம்ம பையன் நல்லா மார்க் வாங்கியிருக்கான்..எதுக்கு ஒருத்தர்ட்ட
சிபாரிசு போகணும்?”
” என்னங்க எடக்கு,மடக்கா பேசிக்கிட்டு..இருக்கிறது மூணு போஸ்ட் தானாம்..முன்னூறு பேர் அப்ளை பண்ணியிருக்காங்கன்னு தம்பி சொல்லுது..அந்த மந்திரி ’வட்டமா’ இருக்கும் போது நீங்க தானே வண்டி ஓட்டிக் கிட்டு இருந்தீங்க..உங்கள அவர் அவ்வளவு சீக்கிரம் மறந்துட மாட்டாரு..
சிபாரிசு செய்யச் சொல்லித் தான் கேட்டுப் பாருங்களேன்..கல்ல விட்டு எறிங்க..பளம் விளுந்தா சரி..இல்லாட்டி கல்லு போனாப் போவுது!”
.. அதானே..இந்த அப்பா எனக்காக சிபார்சு பண்ணினால் தான் என்னவாம்...அப்பா என்ன சொல்லப் போகிறார்..
வெளியிலிருந்து அவர்கள் பேசுவதை ஆர்வத்துடன், கவனித்தேன்..
”..பார்வதி.. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே.. நம்ம சரவணன மேல அக்கறை இருக்கிறதனால் தான் சொல்கிறேன்..என்னப் பாரு..சிபாரிசோட கூட லஞ்சமும் கொடுத்து கார்ப்பரேஷன்ல ட்ரைவரா சேர்ந்தேன்..வேலை எளிதா கிடைச்சதால, எனக்கு கஷ்டமும் தெரியாம..சொகுசா வாள்ந்துட்டு, இப்ப அதே ட்ரைவராவே ரிடையர்ட் ஆயிட்டேன்..என் பையனும் அதே தப்பை செஞ்சா, அவனுக்கும் கஷ்டம்னா என்னன்னு தெரியாது..காலம் பூரா க்ளார்க்கா இருந்தே, வாழ்க்கையில உசராம அப்படியே ரிடய்ர்டாயிடுவான்..அதனால..சிபார்சு இல்லாம போட்டியில இந்த வேலை அவனுக்கு கிடைக்கணும்..கிடைக்கட்டும்..”
’அதானே’ என்றேன், நான், அப்பாவைப் பற்றிய உயர்வான எண்ணத்துடன்!

Tuesday, December 20, 2011

ராவ் பகதூர் சிங்காரமும்..வைகுண்ட ஏகாதசியும்!

அந்த காலத்தில் தில்லானா மோகனாம்பாளுக்கும்..அதன் பிறகு வந்த ராவ் பகதூர் சிங்காரம் ஆகிய தொடர்களுக்குமாக வெள்ளிக்கிழமை எப்படா வரும் என்று காத்திருந்து,விகடன் வருவதற்க்குள் ஒரு போட்டா போட்டி..அது வந்தவுடன் ஆங்கரை அகத்தில் திண்ணையில் கழுகு போல் காத்து கிடக்கும் தாத்தா தன் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்தி விகடனை லபக்கென்று எடுத்துக் கொள்ள, முணுமுணுப்புடன் அம்மாவும்,சித்திகளும்,சித்தப்பாக்களும்.. அத்தைகளும் ரேழி உள்ளுக்குள் ஏக்கம் ப்ளஸ் கோபத்துடன் மறைய..அவர்கள் முகங்களை ’அதில் என்ன அப்படி?’என்று சின்னப் பிள்ளையான நான் புரியாமல் பார்க்க..பிறகு விபரம் தெரிந்த நாளில்....மணியனின் காதலித்தால் போதுமா.உமாவிற்காக.இதய வீணை..வனஜா..சுந்தரம்..கிரிக்காக ..என்று நானும் அவர்களுடன் அடித்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம்!
..அது ஒரு காலம்..இன்றைய மெகா சீரியல் இடத்தை..அன்றைய தொடர்கதைகள் பிடித்துக் கொள்ள..ஹூம்.. நான் கடைசியாய் படித்த தொடர்..அழகு..தாமரை மணாளன்..என்று ஞாபகம்..
தில்லானா மோகனாம்பாள் ..ராவ் பகதூர் சிங்காரம் ஒப்பிடவே முடியாது..தில்லானா மோகனாம்பாள் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீச..அது பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் ஆயிற்று..அந்த அளவுக்கு திரையில் விளையாட்டுப் பிள்ளை பரிமளிக்க வில்லை என்றாலும் கதையை பற்றி துளிக் கூட குறைவாகச் சொல்லி விட முடியாது..COMPARE பண்ண வேண்டும் என்று நீங்கள் கட்டாயப் படுத்தினால் இப்படி வேண்டுமானால் சொல்லலாம்!
தில்லானா மோகனாம்பாள் ஜாங்கிரி... ராவ் பகதூர் சிங்காரம் ஜிலேபி!
ராவ் பகதூர் சிங்காரம் ஒரு அருமையான தொடர்..எங்கள் பக்கத்து வீட்டு மாமி அதான் .. நிகிலாவின் அம்மா சொன்னது இன்னமும் ஞாபகத்திற்கு வருகிறது..கொத்தமங்கலம் சுப்பு..கோபுலு..போன்ற விகடன் குழு கதை நடந்த ஊருக்கு வந்து ஒரு ஆறு மாதம் கேம்ப் போட்டுக் கொண்டு கதை எழுதுவார்களாம்..அந்த மாமி மேல் மங்கலம்!
ஆரம்பம் படு ஜோர்..அந்த பஞ்ச பாண்டவர்கள் அறிமுகம் அருமை..சிங்காரம்..கில்லாடி முருகன்..பஞ்சாட்சரம்..கதுவாலி ராமன்..கூத்தாடி ரங்கன்..சிங்காரம் சித்தப்பா தர்மலிங்கம் அவர் பையன் வேலுச்சாமி..சாதாரண வேலுச்சாமி இல்லை கவாய் வேலுச்சாமியாக்கும்!
அந்த சுருளிபாறை..காளை மாடு நீல வேணி..ஜல்லி கட்டு உறங்காம் பட்டி பெரிய கருப்பன்..செங்கமலம்..அப்படியே பத்மினி ஜாடை..சிங்காரம் சிவாஜி ஜாடை கோபுலு கை வண்ணம்!
பபூன் பஞ்சு..ட்ரையினில் சீட்டு விளையாடி, பிடிபடும் போது..போலீஸ்காரரிடம் தம்பட்டம் அடிப்பது..அயன் ஸ்த்ரீபார்ட் அல்லி முத்து..அதற்கு சொல்லப் படும் வியாக்யானம்..கோலாலம்பூர் குயிலிசை கோபால் தாஸ் ..சின்ன..சின்ன பாத்திரங்கள் கூட..சிக்கென மனதினில் இடம் பிடித்து விடும் லாவகம் ..செங்கமலம் அப்பா முத்தப்பர் என்றவுடன்..அவரின் ரத்த கொதிப்பு..முன்கோபம்..அவர் ஃப்ரண்ட் காட்டுப் பாவா ராவுத்தர்..அவர் பாடும் குணங்குடி மஸ்தான் சாஹிப் பாடல்கள் எல்லாமே கூட வந்து விடும்!
அந்த நாட்டுப் புறப் பாடல்கள்..
”..முனுசாமியே முன் படுதாவை விடுடா..”
“ நாதாரி நாயைப் போல் நாரதனும்
நன்று இங்கு விகடமும் பண்ண வந்தாய்..”
அதற்கு..
“ நாயென்றும் பேயென்றும் பேசி, அடி
நாக்கு தடித்த மவராசி..
நாயெல்லாம் விசுவாசி..
அவை முன் நீ ஒரு தூசி”
என்ற பதிலடி..
(ராவ் பகதூர் சிங்காரம் படித்து அனுபவித்தவர்களுக்குத் தான் நான் எழுதுவது புரியும்..அவர்களுக்காகவே தான் இது எழுதுகிறேன்)
பரணை ஒழிக்கும் போது அங்கே கட்டு கட்டாக ராவ் பகதூர் சிங்காரம் தொடர் வந்த பக்கங்கள் ..பாலு சித்தப்பா பைண்ட் பண்ண சேர்த்து வைத்திருக்கிறார்! அப்புறம் பார்த்தால் காணோம்!
என்னுடைய இருபத்தைந்தாவது வயதில் அச்சு..அச்சாக கோபுலு படத்துடன்,வந்த தொடர்கதை பைண்டிங்கை..(தொடரை பைண்டிங்கில் படிப்பது பரம சுகம்) லைப்ரரியில் இருந்து சுட்டுக் கொண்டு வந்தேன் ஒரு long range Plan! என் ரிடையர்ட்மெண்ட் பீரியடில் படித்து சுவைப்பதற்காக பாதுகாத்து வைத்த அந்த பைண்டிங் புக்கை நான் என் முப்பதாவது வயதில் வெளியூர் ட்ரான்ஸ்பர் ஆக, அண்ணா அதாவது எங்கள் அப்பா அதை கன காரியமாய் பழைய புஸ்தகக் காரனிடம் போட்டு..காசு பார்த்து விட்டது வேறு கதை!
ரிடையர்ட் ஆனவுடன் படிக்க வேண்டுமென்று ஒரு ஜாபிதாவே வைத்திருக்கிறேன்.
விகடன் - தெருவிளக்கு( பழைய பைண்டிங்குடன்)
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்.
- துப்பறியும் சாம்பு - தேவன்
- மிஸ்டர் வேதாந்தம் - தேவன்
- காதலித்தால் போதுமா - மணியன்.
- தில்லானா மோகனாம்பாள் (ரிஷபனிடம் இருக்கலாம்)
- ராவ் பகதூர் சிங்காரம் ( இரண்டுமே “கலைமணி”)
குமுதம் - உயிரின் விலை பத்து லட்சம் ( யார் எழுதியது என்று தெரியவில்லை)
உடல் பொருள் ஆனந்தி - ஜாவர் சீதாராமன்.
அது சரி எதனால் திடீரென்று இப்போது இந்த ராவ் பகதூர் சிங்காரம் ஞாபகம்?
அதில் ஸ்ரீரங்கத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி பற்றியும் வருகிறது..
ஒருவன் நாடகம் நடக்கப் போகிறது என்று பறை அடித்துக் கொண்டு போக,ஆபத்துக்கு தோஷமில்லை ஒரு பத்து நிமிடம் கழித்து வைகுண்டம் போனாலும் பரவாயில்லை என்று மரணத்தின் விளிம்பில் இருக்கும் கிழவர்களும் அயன் ஸ்த்ரீ பார்ட அல்லி முத்து நாடகத்தை பார்க்க ஆவலுடன வ்ர..
அட... வைகுண்ட ஏகாதசியும் வரப் போகிறதே...
அதனால் இருக்குமோ?

Saturday, December 17, 2011

கருத்துள்ள விதைகள்!!


*
இனி ஒரு புத்தன்
பிறக்க மாட்டான்!
ஞானம் கொடுக்க
நம்மிடம்
மரமில்லை!

**
ஆறாயிரம் கிமீ தாண்டி,
உள்ள ஊருக்கு,
குமரியிலிருந்து
இருப்புப் பாதை போட்டு,
இதயங்களை இணைத்த
அதே வேளை,
முன்னூறு கிமீயில்,
இருக்கும் மூணாறு
போக முடியவில்லை,
முல்லை பெரியாரால்!
***
முன் ஜாமின் கொடுத்து,
வெளி வந்தவன்,
கொலை!
முன் விரோதம்!!
****
பிரசவ ஆஸ்பத்திரி
வழியாய் செல்லும்
டவுன் பஸ்ஸும்
நிறை மாத கர்ப்பிணியாய்!
*****
உனக்கும்,
பிக் பாக்கெட் காரனுக்கும்,
ஒரு வித்யாசம்!
அவன் கைகளால்
உள்ளதை எடுத்தான்!
நீ உன் கண்களால்
உள்ளத்தை எடுத்தாய்!!
*****

Tuesday, December 13, 2011

அழைப்பிதழ்!!


அந்த ஆஃபீஸ் அன்று சந்தோஷத்தை பேலாவிலிருந்து எடுத்து வாரி வாரி பூசிக் கொண்டது!
வனஜா அழைப்பிதழ் கொடுத்த நன்னாள் அல்லவா!
யார் அந்த வனஜா?
ஆஃபீஸில் புதிதாய சேர்ந்த அனைத்து யுவன்களும்..யுவதிகளும் அடுத்தடுத்த வருடங்களில் திருமணப் பத்திரிகை கொடுக்க..பாவம் வனஜாவிற்கு தான் தட்டி.. போயிற்று!ஏதோ ஃபேம்லி ப்ராப்ளமாக இருக்க வேண்டும்.
என்னம்மா?
எப்ப?
என்னாச்சு?
வாதஸ்ல்யத்துடன் தான் கேட்கிறார்கள் எல்லாருமே..ஆனால்,அந்த இளம் குருத்து மனம் என்ன புண்படும் என்பதை யார் அறிவார்?
எத்தனை தடவை அழுதிருக்கிறாளோ?
ஆச்சு..
அந்த வனஜாவும் முகம் நிறைந்த சிரிப்புடன், ஒவ்வொருவர் சீட்டிற்கும் சென்று
”அவசியம் ஃபேமிலியுடன் வரணும்” என்று கேட்டுக் கொண்டு, திருமண அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்
அந்த நாள் அல்லவா இது!
அனைவருக்கும் சந்தோஷம்..
யாரையாவது விட்டு விட்டோமா என்று பார்த்து..பார்த்து கொடுத்தாள்..ஆனால், சுந்தரத்தை மட்டும் ஏனோ தவிர்த்து விட்டாள்!
ஹெட்க்ளார்க் கூட கேட்டு பார்த்தார்...
“அம்மா..சுந்தரம்?”
அதற்கு பதில் ஒரு புன்னகை தான்!
பாவம்..மனசை காயப் படுத்தி இருப்பான் போல..
அந்த நாளும் வந்தது!
சுந்தரம் லீவ்!
அவர்களுக்குள் என்ன மனஸ்தாபமோ?
சுந்தரத்தைத் தவிர அனைவரும் கல்யாணம் அட்டெண்ட் செய்ய..
சுந்தரம் ஜம்மென்று,சம்பந்தி வீட்டு மக்களுடன் உட்கார்ந்திருந்தான்..
அவனுக்கு மட்டும்...
வி.ஐ.பி. உறவு என்று, வீடு தேடி பத்திரிகை கொடுத்திருந்தாள், வனஜா!

Sunday, December 11, 2011

ஊரார் தாத்தாவை ஊட்டி வளர்த்தால்..


”வைவஸ்வதன் லதாங்கிக்கு பொருத்தமானவன் தான்..இருந்தாலும்...”
”என்ன இருந்தாலும்..”
”அவன் அப்படி ஒரு கண்டிஷன் போட்டிருக்கக் கூடாது..”
”அதனால என்ன?”
”அதை அவளும் பொருட்படுத்தியிருக்க வேண்டாம்..”
”அதை வேணா சொல்லு..”
”பாரு..இந்த சாதாரண விஷயத்தினால், அவர்கள் காதல் தொங்கலில்!”
”யாராவது ஒருத்தர் ஒத்துக் கொண்டால் தான் என்ன?”
”ஆமாம்..அதைத் தான் நானும் சொல்கிறேன்..”
”ஆனால் அவன் தான் பிடிவாதமாய் இருக்கிறான்...”
”அவளாவது கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்..”
”இருக்கலாம்..சின்னஞ்சிறுசுகள் அவர்களுக்கு ஆசை இருக்காதா?”
”இருக்கட்டுமே..இது அவர்கள் வாழ்வில் எப்படி தடையாய் இருக்க முடியும்?”
”அதுவும் சரி தான்..”
அதோ வைவஸ்வதன்..ஓ லதாங்கியும்..
“அங்க்கிள்..ஆண்ட்டி.. நீங்க ரெண்டு பேரும் அவசியம் வரணும்..இருபதாம் தேதி எங்க நிச்சயதார்த்தம்!”
”உங்க ப்ராப்ளம்?”
”ஸால்வ்ட்”- வைவஸ்வதன்.
லதாங்கியைப் பார்த்தேன்..கண்களை சற்றே தாழ்த்தினாள்.சம்மதம் தெரிந்தது!
“எப்படி சாத்யம்,இது?”
தனிமையில் வைவஸ்வதனும்.. நானும்!
“கடவுள் க்ருபை அங்க்கிள்..அவள் ப்ரிய அப்பாவை அவள் அண்ணி முதியோர் இல்லத்தில் சேர்த்து விட...அந்த காயமே..என் உணர்வுகளை அவள் புரிந்து கொள்ள தோதாக அமைய..
ஆதரவு அற்ற எங்கள் அத்தையும் நம்முடன் இருக்க வேண்டும் எனற என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாள்..”
“காட் ப்ளஸ் யு”

Friday, December 9, 2011

டேய்..சீனாப் பயலே!!!!!!


(1962 ம் வாக்கில் இந்தியா, சீனா போர் நடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..இது உண்மையா...'உடான்ஸா’..என்பதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்)
ஒரு கால கட்டத்தில்,சீனாவின் பலம் ஓங்கி..உடும்பு விட்டால் போதும் என்கிற நிலை இந்தியாவிற்கு!
அந்த சமயம் மாசேதுங்கிற்கு ஒரு விபரீதமான ஆசை வந்ததாம்..இந்தியாவின் தெற்கு பகுதியை கைப்பற்ற வேண்டும் என்று!
ஆகவே, நன்றாகத் தமிழ் தெரிந்த ஒற்றனை, தட்சிணப் பகுதிக்கு அனுப்பினான்..அந்த ஒற்றனும், சென்னை,செங்கலப்ட்டு, காஞ்சிபுரம்,விழுப்புரம் என்று ஒவ்வொரு ஊராக வந்து கொண்டிருந்தானாம்.
வந்தவன்,திருச்சி பக்கம் வந்திருக்கிறான்..
வடக்கு ஆண்டார் வீதி!
”டேய் சீனாப் பயலே!..உன்னை விட்டேனாப் பார்” என்று கூவிக்கொண்டு ஒரு எழுபது வயது மதிக்கத் தக்க பாட்டி,அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்..
அப்படியே அந்த சீனன், நடுங்கிப் போய் விட்டான்,நடுங்கி!
நடந்தது என்ன தெரியுமா?
அன்று ஞாயிற்றுக்கிழமை!
அந்த காலத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஞாயிறு அன்று சிறு குழந்தைகளுக்கு,விளக்கெண்ணைய் கொடுப்பார்கள்..அன்றைக்கு, ஜீரா மிளகு குட் ரசமும்..பருப்புத் துவையலும் தான் மெனு!
குழந்தைகளுக்கோ விளக்கெண்ணெய் என்றால் பயம்..சம்பவம் நடந்த அன்று,காமு பாட்டி ”சீனாப் பயல்” என்று செல்லமாய் அழைக்கப் படும் பேரன் சீனுவாசனை விளக்கெண்ணெய் கொடுப்பதிற்கு, துரத்திக் கொண்டிருந்தாள்..அந்த ‘சீனாப் பயலோ’ தன் சிண்டு, பாட்டியின் கையில் சிக்க விடாமல் ஓடிக் கொண்டிருந்தான்.
அந்த சீனன் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், தலை தெறிக்க ஒரு பொடியன் ஓடிப் போய்க் கொண்டிருந்தது தெரியும்..
ஆனால் நாம் எல்லாரும் பண்ணிய புண்ணியம்
அவன் திரும்பிப் பார்க்கவேயில்லை..
”... வயசான கிழவிக்கே, இவ்வளவு ஆத்திரமும், வெறுப்பும் இருந்தால், இந்த பகுதியில் உள்ள வாலிபர்களுக்கு நம் இன மக்கள் மீது எத்தனை கோபம் இருக்கும் ..”
நினைத்த சீனன் உடனே செயலில் இறங்கினான்..எங்குமே நிற்காமல்,அவன், ஒரே ஓட்டமாய் ஓடி...சீனா போய், மாசேதுங் காதைக் கடிக்கவே,மருண்டு போன மாசேதுங்,மக்மோகன் எல்லை தாண்டி வரவே இல்லையாம்..!
பெரிய..பெரிய.. ராஜதந்திரிகளான ஜவஹர்லால் நேரு...கிருஷ்ண மேனன்..போன்ற ஜாம்பவான்களாலும் செய்ய முடியாத காரியத்தை, கேவலம் ஒரு பல்லு போன பாட்டி செய்து முடித்தாள்!
இப்படியாகத் தானே, அந்த காலத்தில் மங்கோலியாவிலிருந்து, படையெடுத்து வந்த, தைமூருக்கு ஒரு கிழவி உதவிய நீசச் செயலுக்கு, அது நடந்த ஆயிரம் வருடம் கழித்து, தட்சிணத்துக் கிழவி ஒருத்தி பரிகாரம் செய்தாளாம்!

Saturday, December 3, 2011

என் ஜாதி மக்களுக்கு நான் கொடுத்த விருந்து!
ஆரண்ய நிவாஸத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை, என் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு கொள்ளை ஆனந்தம் ....

படம் 1
சமீபத்தில் ஒடிஸா போயிருந்தேன்.அங்கு கார்த்திகை வியாழனன்று, நெல்லி மர இலைகளை வைத்துக் கொண்டு,லக்‌ஷ்மி பூஜை கோலாகலமாக நடந்தது.அதை என் சகதர்மிணி அவர் அம்மாவிடம் சொல்ல, அவர்கள் இருவருக்கும் ஆசை வந்து, எங்கள் வீட்டில் வளரும் நெல்லி மரத்தில்,கார்த்திகை ஞாயிற்றுக் கிழமை லக்‌ஷ்மி பூஜை பண்ணினார்கள்.. இது தான் மேலே உள்ள படம்.
மரங்களைப் போற்றுதும்!
மரங்களைப் போற்றுதும்!!


படம் 2
இதோ..இந்த வாழைமரம் குலை தள்ளியாகி விட்டது.பச்சை பசேலென்று இந்த இடமே மனசுக்கு ரம்யமாக இருக்கிறதல்லவா?


படம் 3
இந்த மரமும் கூடத் தான்!ஆனால் சூரியன் முந்திக் கொண்டு விட, என் கேமரா சற்றே பின் தங்கி விட்டது போலும்..அது தான் அந்த ப்ளாஷ்!

படம் 4

இந்த வாழையைத் தான் பாருங்களேன்!..குலை தள்ளிய வாழை தான் இதுவும்!ஆனால் இதை அப்படியே மரத்திலேயே பழுக்க வைத்து விட்டு, அந்த பழங்களை அப்படியே விட்டு விட்டோம்....எத்தனை பழம் தான் நாம் சாப்பிடுவது? எத்தனை பழம் தான் உறவுக் காரர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பது? ஒரு வாழைத் தாரை கடையில் விற்று, காசு பார்த்து விட்டோம்...
பழங்கள் அழுகி, பூச்சிகள் பல்கி பெருகி,அந்த இடம் அசிங்கமாய் போய் விடுமோ என்று உள்ளூர பயம்..இருந்தாலும், மரத்திலேயே பழங்கள் இருக்கட்டும் என்று ஒரு சங்கல்பம்..!
வாழைப் பழங்களும் பழுத்து விட்டது!
பெருமைக்காக சொல்லவில்லை!
நம் குருவிகளை பாருங்கள்!!
அழகாய் கூட்டம்.. கூட்டமாய் வந்து கூச்சலிட்டு..விளையாடி..பழங்களை சாப்பிட்டு ....
இடத்தை கொஞ்சம் கூட அசுத்தப் படுத்தாமல்....
அவற்றின் வருகை மனதுக்கு மிக..மிக.. சந்தோஷமாய்....
...இன்றைக்கு ஏன் தான் இந்த ஆனந்தமோ?

Sunday, November 27, 2011

காணாமல் போன கதலி!


அது ஒரு ப்ரும்மாண்டமான கோவில்..
தமிழின் ஒவ்வொரு மாதத்தின் பெயரிலும்
ஒவ்வொரு வீதி!
விஸ்தாரமான இடம்..
நந்த வனம்..தெப்பக் குளம்..யானை,குதிரை லாயங்கள்..
மடப்பள்ளி..பூக்கடை.
அர்த்த ஜாம மண்டபம்
.என்று சகல விதமான
செளகரியங்களுடன்..
சுற்றி வந்து இதோ கர்ப்பக்ருஹம்...
நிசப்தமான சூழலைக் கிழித்தாற்போல்,
என்ன சப்தம் அது?
உற்று கவனிக்கிறோம்!
அங்கு பலம்(பழம்),தளம்(இலை)
பத்ரம் புஷ்பங்களுக்குள் போட்டி,
யார் பெரியவன் என்று?
எல்லாம் பேசிப் பேசி
அசந்து போய் விட,
கதலி பலம் (வாழைப் பழம்)
மட்டும் கர்வத்துடன்
பேசியது..ஏன் கத்தியது..
உங்களில் அத்தனை பேரிலும்
நானல்லவோ சுவை உள்ளவன்..
நான் தான் பெரியவன்..
பம்மிக் கிடந்தன,
பாக்கி அத்தனையும்!
பகவானின் நிர்மால்ய தரிசனம்!
தளத்தை மாலையாக்கி,
பகவானின் கழுத்தில்
போட்டார்கள்......,
புஷ்பம் தலயில் சூடப் பட..
பாதார விந்தங்களில், பத்ரம்!
கலங்கிப் போய் கதலி நிற்க,
எங்கிருந்தோ வந்த எலி ஒன்று,
அதைக் கவ்விக் கொண்டோட,
கர்வத்துடன் பேசிய கதலி,
அங்கு,
காணாமல் போயிற்று!

மர்டர்..


”ஷஷாங்”
“எஸ்”
“ ஷஷாங்.. நான் தான் க்ரைம் பிராஞ்ச் மயில்வாகனன் பேசறேன்..இங்க பல்லாவரத்தில ஒரு கொலை நடந்துருக்குப்பா..”
“ சார்..சார்..இப்பத் தான் எனக்கும் ஷைலஜாவிற்க்கும் மேரேஜ் ஆகி, ஹனிமூன் கிளம்பிட்டிருக்கோம்..ப்ளீஸ்”
“ அட..உனக்கும்..ஷைலஜாவிற்கும் கல்யாணாமா சொல்லவே இல்லையே படவா....எனி ஹோ கங்க்ராட்ஸ்!எங்க ஹனிமூன் போறீங்க?”
“சார்..சார்...தப்பாவே புரிஞ்சிக்கிறீங்க..எனக்கும், அவளுக்கும் தனித் தனியா கல்யாணம்.
அவ புருஷனோட நைனிடால் போறா.. நான் என் வைஃபோட குலு மணாலி போறேன்.. நம்ம ஸ்னிஃபர் டாக் துப்பறியும் நிறுவனம் பத்து நாள் லீவ்!”
“ஷஷாங்..சின்ன வேலை தாம்ப்பா இது! நீ வந்தா அரை மணி நேரத்தில கண்டுபிடிச்சுடலாம்..
உங்க ஹனிமூன் செலவை டிபார்ட்மெண்ட் ஸ்பான்ஸர் செய்யும்..ப்ளீஸ்பா”
ஃபோன் வைக்கப் பட்டது.
“ஷைலு”
“எஸ். ஸார்..பல்லாவரம் போகணும்..மயில்வாகனன் சார் பேச்சு..சசி அண்ட் சேகர் சசிதரன் கொலை..கொலையா..தற்கொலையான்னு சந்தேகம்..பார்ட்னர் சேகர் சந்தேகப்பட்டு புகார் கொடுத்திருக்கார்..சந்தேகப் படும்படியாய் எதுவும் இல்ல..ஆனா, சசிதரன் சாரோட ட்ரைவர் சம்பவம் நடந்த அரை மணி நேரத்துல அப்ஸ்காண்டு ஆயிட்டாரு..போதுமா..
மூச்சு வாங்க ஷைலு சொல்லிக் கொண்டு போக, ஒரு ஸ்டேஜில் கண்களை மூடி கொண்டான், ஷஷாங்க்! சாரி...இது ஓவர்..கட்டின தாலி ஈரம் கூட காயல..அதுக்குள்ள துரோகம் பண்ணக் கூடாது..”
“அட”
அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் பல்லாவரத்தில்!
மயில்வாகனன் முன்னாலேயே வந்திருந்தார்.
ஃப்ரான்சிக் ரிப்போர்ட்..குறுக்கு விசாரணை....ஃபோட்டோ எல்லா சடங்குகளும் முடிந்தது.
சசிதரன் தலைமாட்டில் ஒரு பேப்பர், ஷஷாங்க் கவனத்தைக் கவர்ந்தது..
பக்கவாட்டில் ஒரு புத்தகம்.
துப்பறியும் சாம்பு.
“சார்..சேகர் சார் எங்கே?”
“இப்பத் தான்பா வீட்டுக்குப் போனார்..அங்க போனா பார்க்கலாம்..ஜீப் வேணுமா?”
“வேண்டாம்”
க்ரிங்..க்ரிங்..
சேகர் திறந்தார்..கண்கள் அழுதுக் கொண்டிருந்தன..
“வாங்க”
ஆஃபீஸ் ரூம் கூட்டிக் கொண்டு போனார்.
“ரொம்ப நல்லவர் சார் என் பார்ட்னர்..எங்களுக்கு விரோதிகளே இல்ல..பிசினஸ் நல்லா டெவலப் ஆயிட்டிருக்கும் போது, திடீரென்று தாழி உடைந்தாற் போல்..”
குலுங்கினார், சேகர்.
“ சார்..கூல் டெளன்..” சமாதானப் படுத்தினான், ஷஷாங்க்.
" அவரோட ட்ரைவர் எப்படி?”
“ நல்ல பையன் சார்..துருதுருன்னு இருப்பான்..இவரும் அவனை கண்ணான்னு தான் கூப்பிடுவார்..சந்தேகமே பட முடியாது, சார்”
பேசிக் கொண்டு இருக்கும் போது, சேகரின் கை ஏதோ பேப்பரில் கிறுக்கியது. காற்றில் அது பறந்து வந்து ஷஷாங் சட்டையில் ஒட்டிக் கொண்டது!
”அப்ப வரேன், சார்”
அடுத்த ஒரு மணி நேரம் ஆகி விட்ட நிலையில்,
க்ரிங்..க்ரிங்..
ஆஃபீஸ் ஃபோன்!
“ஷஷாங்.. நான் மயில் வாகனன்”
“ சார், கல்ப்ரிட்டைக் கண்டுபிடிச்சாச்சு”
“யாருப்பா?”
“ பார்ட்னர் சேகர்!”
“எப்படிப்பா சொல்றே? ரொம்ப மரியாதையான மனுஷர்பா அவர்!”
“ சார்..அவர் தான் கொலை பண்ணியிருக்கார்.அவர் இவருக்கு ஒரு புக் ப்ரெசண்ட் பண்ணியிருக்கார்..அதில ஒவ்வொரு முனையிலும் ஸ்லோ பாய்ஸன்..சசிதரனுக்கு ஒரு பழக்கம்.அவர் பக்கத்தை புரட்டும் போது,எச்சல் பண்ணித் தான் அடுத்த பக்கம் புரட்டுவார்..
அது..அந்த ஸ்லோ பாய்ஸன் கொஞ்சம் ..கொஞ்சமாய் உள்ள போய்..”
“அது சரி..அந்த புக்கை அவர் தான் கொடுத்தார்ங்கறதுக்கு என்ன ஆதாரம்?”
“ரொம்ப சிம்ப்பிள்! சேகருக்கு ஒரு பழக்கம். அவர் ஒரு இடத்திற்கு வந்தார்னா அங்க இருக்கிற பேப்பர்ல ஒரு கார்ட்டூன் வரைந்து விடுவார்..அந்த புக்கில் இரண்டு, மூன்று பக்கங்களில் கார்ட்டூன்!”
“ அப்ப அந்த ட்ரைவர்?”
“ சேகர் தான் அவருக்கு லீவ் கொடுத்து அனுப்பியிருக்கார்”
“வெரி குட்..அங்கியே இரு. செக் அனுப்பறேன்”
ஷைலூ.........
மெளனம்!
“சாரி சர்.. நான் அப்பவே எஸ்கேப் ..டேக் ஆஃப் டு நைனிடால்!”
ஷஷாங் செல் ஃபோன் கொஞ்சியது!

தொழில் தர்மம்!


”..லே மூக்கா..இங்க வாடாலே..”
“ந்தா”
ராக்கப்பனும், மூக்கனும் தோஸ்த். மூக்கனுக்கு ராக்கப்பன் பையன் வயசு இருக்கும்..தொழில்னு வந்துட்டா,அதெல்லாம் பார்க்க முடியாது..அப்ரசண்டியா... கிப்ரசண்டியா ...ஏதோ ஒண்ணு தொழில் கத்துக்க்ற சிஷ்யன்... மூக்கன்..என்ன தொழில்னு கேக்கறீயளா? வேறென்ன?
பிக்பாக்கெட்டு...திருடறது தான்..
கொள்ளைக்கு போனாலும் கூட்டு உதவாதுன்னு சொல்வாங்களேன்னு நீங்க முணுமுணுக்கிறது காதில விழறது..என்ன செய்ய?
வர,வர ராக்கப்பன்னுக்கும் வயசாயிட்டேப் போவுது..முன்ன மாதிரி முடியல..இந்த மூக்கன் பய மட்டும் கொஞ்சம் படிஞ்சான்னா, தன் பொண்ணு கழுத்தில மூக்கனை விட்டு மூணு முடிச்சு போடச் சொல்லிட்டு, கிருஷ்ணா..ராமான்னு ஏதாவது கோவில்லப் போய்..

திருட வேண்டியது தான்!

“அண்ணாத்தே..அண்ணாத்தே”
“என்னடாலே”
“இதைப் பாரு”
பெரிய வீடு..காவலில் நாய் இல்ல..கூர்க்கா குறட்டை விட்டுக் கொண்டிருந்தான்.
சரித்தான்..இன்னிக்கி யார் முவத்தில முழிச்சோமோ..
சந்தோஷமாய்
பம்மினான்..
பதுங்கினான்..
ராக்கப்பன்.
“ஏய் வாடாலே மூக்கா..”
திடீரென்று நின்றான், ராக்கப்பன்.
” என்ன அண்ணாத்தே?”
“உஷ்..கிளம்பு என்னோட”
கொழுத்த பசு மாடு ஒன்றை விட்டு விட்டு சிங்கம் ஏமாற்றத்துடன் செல்ல, குட்டியும் தொடர்ந்தது, ஏக்கத்துடன்!
”எதுக்கு அண்ணாத்தே கிளம்பிட்டீங்க?”
“வீடு ஆருது?”
“தெர்லே”
“..அது மந்திரி மாடசாமி வூடுடா”
“பயந்துட்டீகளா?”
“பயமா..எனக்கா? மந்திரின்னா ஆரு?”
”தெர்ல”
“ திருடன்டா மாப்ளே, திருடன்! திருடன் வீட்ல, திருடன் திருடக் கூடாது..அது தொளில் தர்மமில்ல..”
ஆங்கமாய் மூக்கன் தலயில் ராக்கு குட்டு ஒன்று வைக்க..
அக்...கா....ங் ன்று கத்தினான் மூக்கன் வலி தாங்காமல்!

Saturday, November 26, 2011

டாலரும்..ரூபாயும்!


என் நண்பனின் மகனிடம் ஸ்கைப்பில் பேசினேன்..
அடிக்கடி அவனுடன் பேசுவது வழக்கம் .மேலும் அவன் என் ஸ்டூடண்ட்.
அங்கு காஃபி இரண்டு டாலராம்..தோசை ஐந்து டாலராம்..
“என்னப்பா, காஃபி நூறு ரூபாயா? தோசை இரு நூற்றைம்பது ரூபாயா?”
இப்பொழுதெல்லாம் ஒரு டாலர் ஐம்பது ரூபா ஆகிறதே!
“அங்க்கிள்...எதையும் ரூபாயில் கன்வெர்ட் பண்ணாதீங்க..மயக்கம் தான் வரும்.
இது நடந்து ஒரு வாரம் ஆகியிருக்கும்.
சலூனுக்கு சென்றிருந்தேன்.
ஆவின் பால் கட்டண உயர்வு..பஸ் கட்டண உயர்வு அமுல்படுத்திய நேரம்.
முடிதிருத்துபவர் உணர்ச்சிவசப் பட்டு சொல்லிக் கொண்டிருந்தார்.
”என்னிக்கு பால் விலை ஏறும்னு சொல்லி வாய் மூடலை..அதுக்குள்ள டீக்ககடையில டீ விலை ஏத்திட்டான், சார்.பஸ் பாருங்க மெய்ன்கார்கேட்டுக்கு நாலு ரூபா..என்ன் அநியாயம்..
காய்கறி அது உச்சத்தில நிக்குது..”
பொறுமி தள்ளினார், அவர்.
பேசும் போது,என் தலையில் அவர் கத்தி விளையாடிக் கொண்டிருந்தது.
நான் ஏன் பதில் பேசுகிறேன்..
ஒரு வழியாய் முடித்தார்.
நூறு ரூபாய் நோட்டு நீட்டினேன்.
அவர் ஐம்பது ரூபாய் பாக்கி கொடுத்தார்.
என்னது..இருக்கிற நாலு முடியை வெட்ட ஐம்பது ரூபாயா..என்ன ஒரு அநியாயம்?
மனசு அடங்கவேயில்லை..
யாரிடமாவது சொல்லி ஆற்றி கொள்ள வேண்டும் போல் இருந்தது.
எதேச்சையாய் கண்ணன்..நண்பனின் மகன்... வந்தான் லைனில்..
“சொல்லுங்க, அங்க்கிள்.
நம்மூர் எப்படி இருக்கு?”
“கண்ணா..அதையேன் கேட்கறே? .இங்க.. விலை வாசி எக்கசக்கமா எகிறிடுச்சு.., பஸ் சார்ஜ்..பால் கட்டணம் எல்லாம் ஏறிடுச்சு இப்ப முடி வெட்டிக்க ஒரு டாலர் வாங்கறாங்க. நம்மூர்ல.”
“ஐயையோ ஐம்பது ரூபாயா அங்க்கிள்?”
“கண்ணா..எதையும் ரூபாயில கணக்குப் போடாதே!
மயக்கம் தான் வரும்!”

Friday, November 25, 2011

காலம்!


..அவன்..

லலிதாவா அது!
எவ்வளவு நாளாயிற்று, பார்த்து?
முப்பது வருடங்கள்..
நிச்சயமாய் இருக்கும்.
யதேச்சையாய், நாகர்கோவில் சம்பந்தி தம்பி பிள்ளை கல்யாணம்.
பார்த்தால், பச்சைக் கலர் பட்டுப் புடவையில்..
அவளுக்கு பச்சை என்றால் ரொம்பவும் பிடிக்கும்.
பச்சைக் கலர் தானே அவளை அடையாளம் காட்டியது.
காலம் போட்டுப் புரட்டியதில்,
ஒன்றிரண்டு வெள்ளி மயிர்களைத் தவிர,
அவளிடம் வேறு வித்யாசம் இல்லை.
பஸ்ஸில் பயணிக்கையில்,
அவள் பக்கத்தில் நின்று கொண்டு..
”..என் கண்மணி என் காதலி”- அந்த காலத்து
பிரபலமான அந்த பாடலை முணுமுணுக்க....
அவளும் மெலிதாய் பதிலுக்கு ஹம் செய்ய..
விதி விளையாட..எங்கெங்கோ பிரிந்து.
இப்போது லலிதா..
ஒரு சின்ன சபலம்..
நினப்பே ஒரு சுகமாய்..
அந்த சுகத்தில் ஒரு லயிப்பாய்..
எனக்காக காத்துக் கொண்டு இருக்கிறாளோ,
இன்னமும்?


..அவள்..

பார்த்தவுடனே தெரிந்து விட்டது,
அவர் ராம் தானென்று.
என்ன கொஞ்சம் தொப்பை போட்டு விட்டது..
வருடங்கள் ஆனால் தான் என்ன..
தலை வழுக்கை விழுந்து..
ஆனால் அந்த கண்கள்
மட்டும் இன்னமும் குறும்பாய்..
அது தானே அவரை
காட்டி க் கொடுத்தது?
அந்த இளம் வயது வசந்தத்தை,
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?
இப்படியும் இருக்குமோ?
எனக்காக..இன்னமும்..
அவர் காத்துக் கொண்டு இருக்கிறாரோ?

..பொது..

நீ... நீங்க லலிதா இல்ல?
ஆமாம்... நீங்க ராம் தானே?
அடுத்தது?
அதை..அதை..
எப்படி கேட்பது?
இருவருக்கும் மனத்துள்
ஆசாபாசத்துடன்..
அந்த கேள்வி எதிரொலிக்க..
திடீரென்று ஒரு குரல்!
தாத்தா என்று ஒரு சிறுமி,
ராமின் காலை கட்டிக் கொள்ள..
பாட்டி என்று ஒரு பொடிசு
லலிதாவைக் கட்டிக் கொள்ள..
யாருக்காகவும், யாரும் காத்துக்
கொண்டிருக்காத..யதார்த்தம்
இருவரையும்
கலகலவென சிரிக்க வைத்தது!

Wednesday, November 23, 2011

ஓரி காக்கை..


ராமாமிர்தத்திற்கு சந்தோஷமும் இல்லை..துக்கமும் இல்லை.. அவருடைய அபிப்ராயம் கேட்டால்,அவர் அந்த காலேஜ் ப்ரோபஸரின் மூன்றாவது பெண்ணைத் தான் செலக்ட் செய்வார்..ஆனால், லலிதாவிற்கு அந்த வரன் பிடிக்காது.. அந்த பேங்க் மேனேஜரின் பெண்ணைத் தான் அவள் தேர்வு செய்வாள்!ஏனென்றால், அவர்களுக்கு ஒரே பெண். ஆசை.. ஆசையாய் செய்வார்கள்.
”அம்மா, ஜோஸ்யர் சொல்லிட்டார்..இரண்டு வரனும் நன்றாகப் பொருந்துகிறது என்று” - இதை சொல்லி விட்டால், அவர் கடமை முடிந்தது.
விஷயம் இது தான்!
அவர்கள் பையன் சுனிலுக்கு பெண் பார்க்கிறார்கள்..தரகர் கொடுத்த வரன்களில், இரண்டு வரன்கள் அவர்கள் தகுதிக்குப் பொருத்தமாக இருந்தது..இப்போது இரண்டுமே பொருத்தம் என்று ஜோஸ்யர் சொல்லி விட்டார்.
பேங்க் மேனேஜருக்கு ஒரே பெண்..அவர் மனைவியும் அரசு உத்யோகம்.. நன்றாகவே செய்வார்கள்..மேலும் பெண் வேலை பார்க்கிறாள்.
புரபஸருக்கு நான்கும் பெண்கள்..இது மூன்றாவது பெண்..இன்னும் ஒரு பெண்ணை கரையேற்ற வேண்டும்..ஒரு சம்பளம்! இதில் உறவுகள் ஜாஸ்தி.தொண்ணூறு வயதில் கொள்ளு தாத்தா, பாட்டி இருக்கிறார்களாம், கல்யாணப் பெண்ணிற்கு! பெரிய குடும்பம்!
“ என்ன ஆச்சு?”-லலிதா.
“ இரண்டுமே நல்லா பொருந்தறதாம்..”
“ அப்படீன்னா, அந்த புரபஸரோட பெண்ணையே பார்க்கலாம்..”
“ என்ன லலிதா, அது பெரிய சம்சாரம்...கும்பல் சொல்லி மாளாது”
“ அது தான் நமக்கு வேணும்.. நான் ஓரி காக்கை..உங்க வீட்லயும் அப்படித் தான்.. நமக்கும் ஒரே பையன் தான்..இதுல பெரிய சம்சார குடும்பத்தில சம்பந்தம் வைச்சிட்டா தான், நமக்கு உறவுகளோட அருமையே தெரியும்..இந்த பொண்ணு, நம்ம பையனை நல்லா கவனிச்சுப்பா... நாம வயசானதும், நம்மளையும் பெத்த தாய், தந்தை போல் கவனிச்சுப்பா..உறவு தான் வேணும் பணம் வேண்டாம்”
லலிதா சொல்ல..சொல்ல அப்படியே மகிழ்ச்சியில் திக்கு,முக்காடி போனார், ராமாமிர்தம்!

Tuesday, November 15, 2011

வர வீணா...ம்ருது பாணீ..!!!


”வரச் சொல்லுங்க?”
வந்தேன்.
சோஃபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவர்கள்.
எனக்கு செம எரிச்சல்..லேசாய் பயம் வேறு.
“பாடச் சொல்லுங்க”
காலையிலிருந்தே தொண்டை சரியில்லை..போதாததிற்கு விஷயத்தை மோப்பம் பிடித்த
ப்ரண்ட்ஸ்களுக்கு ஐஸ்க்ரீம்..
அது மக்கர் செய்தது.
“வர வீணா..ம்ருது பாணீ”
கீச்சுக் குரலில் அந்த கத்தல் என்னையே என்னவோ செய்தது..
கேட்பவர்களுக்கு எப்படி இருக்கும்?
“ நேற்றிலிருந்து உடம்பு சரியில்ல..அதனால தான்”-
அப்பா சப்பை கட்டு கட்டினார்.
ரொம்பவுமே நெர்வஸாய் இருந்தார்,அவர்.
அம்மா அதற்கு மேல்!
இதுவும் தட்டிப் போய் விடுமோ என்கிற கவலை இருவருக்கும்!
“இப்ப எல்லாம் யாரு பாட்டு பாடறாங்க. ஏதோ சம்பிரதாயம், அவ்வளவு தான்”
என்றாள் என் அத்தை.
சற்று நேரம் மெளனம்!
அப்பா தான் மெளனத்தை கலைத்தார்.
“சமையல் செஞ்சா சூப்பரா இருக்கும்”
“அப்படியா?”
அடுத்தது பிஸ்கெட்..ஸ்வீட்..காரம்..காஃபி.
அப்புறம் இருக்கவே இருக்கிறது..
”கொஞ்சம் தனியாப் பேசணுமே”
“போய் லெட்டர் போடறோம்”
எதுவும் இல்லை இவர்களிடத்தில்!
பிடித்து விட்டது என்றார்கள்.
உடனேயே, முகூர்த்தத்திற்கும் நாள் குறித்தாகி விட்டது.
அவர்கள் போனதும், அப்பா சந்தோஷத்தில் குதித்தார்.
“வெள்ளிக்கிழமை ராகு காலத்துல அர்ச்சனை பண்ணிணது வீண் போகவில்லை”
சந்தோஷம் தாங்காமல்,அப்பா, அம்மா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தேன், நான்.
“டேய் பாலு, இனிமே உனக்கு ஒரு குறையும் இல்ல” என்று என்னை கட்டிக் கொண்டார்,ஐந்தாவது பிள்ளையான என்னை கரையேற்றி விட்ட அப்பா!

Tuesday, November 8, 2011

ஈகை திருநாள்....


தக்கலையிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது,
லாரி.வண்டியை ரொம்பவும் நிதானமாக ஓட்டி வந்தார் அமீர்பாய். இந்த காலத்து பசங்களைப்
போல,போட்டாபோட்டி போட்டுக்கொண்டு, அவருக்கு ஓட்டத் தெரியாது.எதிலும் நிதானம்
தான்.அதனால் தான், ரொம்ப காலமாக மல்லாரி அண்ணனுக்கு வண்டி ஓட்டிக் கொண்டு
இருக்கிறாரோ என்னவோ...
"என்னவே..அமீர்பாய் ? அவனவன் அஞ்சு ஆறு வருஷம் தான் 'டைவரா' இருக்கான். அப்புறம்
முதலாளி தலைல,மொளவாயை அரைச்சுட்டு, அவனே சொந்தமா லாரி வாங்கி ஓட்டறான்.
எல்லாப் பயல்களும், பம்மாத்து பயலுவ. நீரு என்னடான்னா, விடாம இருபது வருஷமா,
ஒரே வண்டியை ஓட்டறீரு..என்னவே சேத்தீரு ?"
கரீம் பாய் இடித்துக் காட்டும் போதெல்லாம் இரு கைகளையும் மேலே தூக்கி, ஒரு சிரிப்பு சிரிப்பார்.
" அல்லா இருக்கிறானாம்.பார்த்துக் கொள்வானாம்!"
அமீர் பாய்க்கு வயது ஐம்பது,ஐம்பத்தைந்து ஆகிறது. மகள் சல்மாக்கு போன ரஜப்
மாசத்தில தான் பந்தக் கால் நட்டு,'சேரா' கட்டி,மல்லிகைப் பூவினால் மணமகன் முகம்
மறைக்க, நிக்காஹ் முடித்து வைத்தார். மருமகன் தங்கமான புள்ள. தோவாளையில்
சொந்தமாக விறகுக் கடை வைத்து நடத்துகிறான். நம்ம 'மஹ்லா'வுல, அந்த மாதிரி
புள்ளயப் பார்க்கறது அபூர்வம்.
நிதானமாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கைச் சக்கரத்தில் சிறிது நாட்களாகவே
தடங்கல். ஒரு கவலையும் இல்லாத அமீர் பாய்க்கு, பணமுடை. ஒரு முன்னூறு ரூபாய்
தேவையாக இருக்கிறது. அது மட்டும் கிடைத்தால், அவர் நினைத்த காரியம் நடந்து
விடும். முதலாளியிடம் கேட்க மனம் வரவில்லை. அவராகத் தருகிறாரா.. பார்க்கலாம்.
இது தான் அவரிடம் ஒரு குணம். யாரிடமும் எதுவும் கேட்க மாட்டார். இது நாள் வரை
சம்பளத்தை உசத்த வேண்டும் என்று முதலாளியிடம் அவர் கேட்டதே இல்லை. மல்லாரி
அண்ணனாகப் பார்த்து, ஏதாவது கொடுத்தால் தான் உண்டு. அதையும், அப்படியே மகள்
சல்மாவிடம் கொடுத்து விடுவதுடன், அவர் கடமை முடிந்தது.
நாகர்கோவில் வந்து விட்டது. வண்டியை நிறுத்தினார்.
கொஞ்ச நாட்களாகவே, க்ளீனர் பையன் கமால் அவரை நச்சரித்துக் கொண்டு
இருக்கிறான். இவர் போய் முதலாளியிடம் சொல்ல வேண்டுமாம், அவனுக்கு ரம்ஜான்
ஈதுவிலிருந்து சம்பளத்தை உசத்த சொல்லி!
"அண்ணே" - தலையை சொறிந்து கொண்டு வந்தான் கமால், இப்பவும்.
" ராவுத்தரே கொக்காப் பறக்கறாராம். குதிரைக்கு கோதுமை அல்வா கேக்குதாங்
காட்டியும் ! போடா அப்பாலே.." என்று நாக்கைத் துருத்தியவாறே கையை ஓங்கிக்
கொண்டு வந்தார் அமீர் பாய். அவன் நகரவில்லை. அவனுக்குத் தெரியும் அவர்
அடிக்க மாட்டென்று.
" உம்ம மாதிரி நானும் நுப்பது வருஷம் வண்டியைக் களுவ வேண்டியது தான் ..."
முணுமுணுத்துக் கொண்டே வாளியுடன் சென்றான் கமால்.
அமீர் பாய் யோசித்துப் பார்த்தார். இந்தப் பயலுக்காவது, ஏதாவது கேட்கலாமென்று.
முதலாளி தப்பாக எடுத்துக் கொண்டால்....வேண்டாம்...வேண்டாம்..அவனுக்கும் நம்ம
மாதிரி கிடைக்கும் போது கிடைக்கட்டும்.
இது நாள் வரை மகள் சல்மா அவரை 'அத்தா..அதை வாங்கித் தா..இதை வாங்கித்தா..'
என்று வாய் திறந்து கேட்டதில்லை. எல்லாத்துக்கும்' உம்ம இஷ்டம்' என்கிற பதில் தான்
மகளிடமிருந்து வரும். தகப்பன் குணம்.
மறு நாள் ஈது பண்டிகை!
ஆண்டவனின் சன்னிதானத்திலே, ஆண்டி முதல், அரசன் வரை அனைவரும் சமம்
என்பது போல, பஞ்சப் பராரிகளுக்குப் பக்கத்திலேயே, பட்டாடை உடுத்திய கனவான்களும்
'அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...ஹம்து' என்று ஒருமித்து, ஏகநாயகனின் தெய்வீக
முழக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். புனித நோன்பினை முடித்த பெருமிதம், அத்தனை பேர்
முகங்களிலும் தெரிந்தது. கேவலம், மானிட இச்சைகளை முழுவதுமாக, முப்பது நாட்களுக்கு
வெறுத்துத் தள்ளுவேன்....ஏன் தள்ளியாகிவிட்டது ...என்ற உணர்வே அங்கே மேலோங்கி
இருந்தது. மனதுக்கு ஒவ்வாததை வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்ற நெஞ்சுரம்
தொழுகைக்கு வந்த அனைவரிடமும் பிரதிபலித்தது.
ஜமாத்தின் முதல் வரிசையிலேயே, மல்லாரி அண்ணனுக்குப் பக்கத்திலேயே, அமீர்பாய்
நின்று கொண்டிருந்தார்.எல்லாரையும் விட ஆண்டவன் தான் உயர்ந்தவன் என்பது போல
அனைவரும் மெய் மறந்து நின்றிருந்தனர்.
'சுஃபான ரப்பியுல் அலீம்!....'
மனதுக்குள் மனனம் செய்து...டவுன் ஹாஜியார் மண்டியிட, அனைவரும் உணர்ச்சிப்
பெருக்குடன் குனிந்து மண்டியிட்டார்கள்.
அமீர் கரடுமுரடானவர் தான் ! ஆண்டவனின் சன்னிதானத்திலே, சிறு குழந்தை போல
ஆகி விட்டார். இந்த 'ட்ரிப்பு' எப்படியாவது போயாவணும்... கண்களில் அவரையும் மீறி
கண்ணீர் வழிந்தோடியது.
ஹாஜி ஸாப் அடுத்த 'ரஹ்-ஆத்' துக்காக எழுந்து நின்றார். அமீர் பாயினால் எழுந்திருக்க
முடியவே இல்லை.
மிகவும் சிரமப் பட்டு எழுந்தார்.
'துஆ' முடிந்ததும், ஒருவரை ஒருவர் 'முலாக்கத்' செய்து கொண்டனர். முதலாளியும்,
தொழிலாளியும் அணைத்துக் கொண்டனர்.
"இங்க சித்த வாரும்.." மல்லாரி அண்ணனால் தாங்க முடியவில்லை. இவரை ஒதுக்குப்
புறமாக அழைத்துச் சென்றார்.
"நீரும் என்னண்ட விசுவாசமா இருந்திருக்கீரு... உமக்கு நா ஒண்ணும் செய்யலேங்கறது
என்னை உறுத்திக்கிட்டு இருக்கு...ஒம்ம மக நிக்காஹ்க்குக் கூட அஞ்சு நூறு தான்
கொடுத்தேன். நீரு இது வரை, எதையும் திருப்தியோடத் தான் வாங்கி இருக்கீரு ...கொறச்ச..
கூட என்கிற முணுமுணுப்பு உம்மண்ட கெடையாது. அதனால, நீரு ஓட்டற லாரியை உமக்கே
இந்த ரமலான் நாளிலே தரேன் எடுத்துக்கும்.." என்றார் அதே கண்டிப்புடன்!
" மொதலாளி.."
அமீர் பாயின் நா தழுதழுத்து, அவரைக் கூப்பிட்டது.
"என்ன?"
" ஒரு சின்ன விஷயம்"
இது நாள் வரை இல்லாமல், இன்று தான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார், அமீர் பாய்.
"சொல்லும்"
" அந்த கமால் பையனுக்கு நுப்பது ரூபா சம்பளம் கூட கொடுங்க"
" என்ன சுத்த கூறு கெட்ட ஆளா இருக்காரு...இவருக்கு ஏதாவது கேளுங்கன்னா..
அவனுக்கு கொடுக்க சொல்றாரு.." - மனத்துள் நினைத்தார் மல்லாரி அண்ணன்.
" சரி "
" எனக்கு ஒரு முன்னூறு ரூபா...கடனாகத் தாரும்.."
" எதுக்கு? இவருக்கு எதுக்கு முன்னூறு ரூபா.அதுவும் கடனாக?...."
கடன் வாங்கி போகக் கூடாது என்கிற விவரம் அமீர் பாய்க்கு நன்றாகவே தெரியும்.
ஏதோ உணர்ச்சிப் பெருக்கில் உளறிக் கொட்டி விட்டார்!
" ஹஜ்ஜுக்குத்தான்!!!"
" மாப்ளே.."
அவரை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார், மல்லாரி அண்ணன்.
" உம்ம பணம் மாப்ளே.உம்ம .நுப்பதாயிரம் ரூபா... சம்பளத்திலிருந்து ஹஜ்க்குப் போக பேங்க்ல
போட்டு வைச்சது கிடக்கு.. போயிட்டு வாரும்..வேணாம்..வேணாம்..என்னையும்
கூட்டிட்டுப் போங்க..."
ஒரு பத்தரை மாற்றுத் தங்கத்தை உரசிப் பார்த்து விட்டோமே!
குற்ற உணர்வில், பொது இடம் என்பதயும் மறந்து அழுது விட்டார், மல்லாரி அண்ணன்!
கண்ணீரின் ஊடே மிகவும் வெளிராகத் தெரிந்தார், அமீர் பாய்!
பின் குறிப்பு: 1. இது ஒரு மீள் பதிவு..
2. பத்திரிகை : தினமணி கதிர் (1980 வாக்கில்)
3. எழுதியவர் : “தரன்” என்கிற நான்.

Friday, November 4, 2011

அலாஸ்காவும்,ஐஸ் பெட்டியும்!!!பனி விழும் நாளில், ஊட்டியில் வாக்கிங் போவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!
எதிர்த்தாற் போல் மிஸ்டர் சுகவனேசன்...
சுகவனேசன் ஒரு விசித்ரமான பேர்வழி..என் மீது ஒரு ’பெரிய கம்பெனியில் மனித வள மேம்பாட்டுத் துறையில் பொறுப்பான உத்யோகம் பார்த்து இளைப்பாறுகிறவர்’ என்கிற மரியாதை உண்டு. மேட்டுப் பாளையத்தின் ஒரு பெரிய தொழில் அதிபர் இப்படி என்னுடன் வித்யாசமில்லாமல் பழகுகிறாரே என்று என்னுள்ளும் ஆச்சர்யம்!
இப்படித் தான் போன வாரம் நான் காரமடை ரங்கநாத பெருமாளை சேவித்து விட்டு வரும் போது,சர்ரென்று படகு போன்ற கார் ஒன்று என்னை இடிக்கிறார்போல் வந்தது..யாரடா என்று பார்த்தால், நம்ம சுகவனேசன்!
“ வாங்க சார்.. நம்ம ஆஃபீஸ்க்குப் போலாம்”
” என்ன விஷயம்?”
“ இன்னிக்கு ஒரு இன்ட்டர்வ்யூ..மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் செலக்‌ஷன்.. நீங்க இன்ட ர்வ்யூ கமிட்டி மெம்பர்..”
என் அனுமதி கோரப் படவில்லை..அவராகவே தீர்மானித்து அந்த க்‌ஷணமே அதை அமுல் படுத்தியும் விட்டார்!
அது தான் சுகவனேசன்!
இன்ட்டர்வ்யூ நடந்தது..வந்த பையன்களில் ஒரு பையன் எக்கசக்க ஸ்மார்ட்..அவன் ஒருவன் தான் டை கட்டியிருந்தான்..அவன் சொன்னது இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது..
“...சார்...தயவுசெய்து தற்பெருமை என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்! 'I AM ABLE TO SELL FRIDGES TO ESKIMOS..IT'S TRUE' என்றான்..அலாஸ்கா போன்ற தூந்திர பிரதேசத்தில் ஐஸ் பெட்டிகள் விற்பேன் என்று சொல்வதற்கு எவ்வளவு ’ஸ்மார்ட்னெஸ்’ வேண்டும்..அவனுக்குத் தான் மிக அதிகமான மார்க் கொடுத்திருந்தேன், நான்!
இதோ..இதோ...நெருங்கி விட்டார், சுகவனேசன்.
“ குட்மார்னிங், ராகவன்”
“ குட்மார்னிங் சார்..என்ன ஆச்சு இன்ட்டர்வ்யூ?”
“ செலக்சன் ஆச்சு”
” அந்த டை போட்ட பையன் தானே?”
“ சாரி..அவனில்ல.. நீங்க என்ன ..எல்லாரும் தான் அவனுக்கு ஜாஸ்தி மார்க் போட்டீங்க ..ஆனா, நான் செலக்ட பண்ணலே?”
“ ஏன்..ரொம்ப கெட்டிக் காரப் பையன்..அலாஸ்கால கூட ஐஸ் பெட்டி விற்பேன்னானே?”
“ அந்த ATTIDUDE தான் பிடிக்கல..தேவையில்லாத சாமானை கஸ்டமர் தலையில கட்டறது அவனோட தனிப்பட்ட சாமர்த்தியமா இருக்கலாம்....அதனால, ஷார்ட் ரன்ல வேணா நம்மோட டார்ஜெட் அச்சீவ் ஆகலாம்...ஆனா,கம்பெனிக்கு நல்லதா அது?லாங் ரன்ல பார்த்தா நம்மளோட குட்வில் இல்ல ERODE ஆயிடும்?....அதைத் தானே நாம பார்க்கணும்!
..அதனால தான் அவனை செலக்ட் பண்ணல..”
திகைத்து நின்றேன், நான்!

Saturday, October 29, 2011

மழை....


இப்பொழுதெல்லாம்,
எந்த குழந்தையும்,
RAIN RAIN GO AWAY
COME AGAIN ANOTHER DAY,
LITTLE TOMMY WANTS TO PLAY,
RAIN RAIN GO AWAY...
என்று பாடுவதில்லை,
மழையும் எதிர்ப்பு
இல்லாத நிலையில்,
வஞ்சனையின்றி,
பெய்கிறது!
*
யார் காட்டிலோ மழை!
*
கத்திக் கப்பல் செய்யக்
கற்றுக் கொண்ட நாளில்,
வானம் பார்த்தது பூமி!
இப்போது ஊரே,
வெள்ளக் காடு - ஆனால்,
கப்பல் செய்வது
மட்டும்,
மறந்து விட்டது!
*
மழை நீரும்,
சாக்கடையும்,
ஒன்றாகக் கலந்தன,
‘சமத்துவபுர’த்தில்!
*

Tuesday, October 25, 2011

தீபாவளி அகராதி!


அழைப்பு: தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குப் போகத் திட்டம் போட்டிருக்கும் மாப்பிள்ளைகள் இதை எதிர்பார்த்துத் தபால் காரனைத் தேடி தினம் வேட்டையாடுவது சகஜம்.
அமாவாசை: இருட்டுக்குப் பெயர் போனது.இது தீபாவளியைச் சூழ்ந்து கொள்வதால் தான் நாம் வாணங்கள்,மத்தாப்புக்கள் எல்லாவற்றையும் கொளுத்தி அதை விரட்டுகிறோம்.
ஆடம்பரம்: மாப்பிள்ளைகள் மாமனார்,மாமியாரைப் பம்பரம் மாதிரி சுற்றி வைக்க உபயோகிக்கும் தந்திரம்.
ஆகாச வாணம்: ஆகாயத்துக்கு அஞ்சி அடுப்பங்கரையிலேயே தன் கை வரிசையைக் காட்டும் ஒரு வித வாணம்.
ஊசிவெடி: சமயம் தெரியாமல் வந்து எட்டிப் பார்க்கும் மச்சினனை ‘நைசாக’ வெளியே அனுப்ப மாப்பிள்ளை இதில் ஒரு கட்டை உதிர்த்து அவன் கையில் கொடுத்துப் பார்க்கலாம்.
எண்ணெய்: தீபாவளியன்று எல்லார் முகத்திலும் வழியும் ஒரு திரவப் பதார்த்தம்.
ஏமாற்றம்: எவ்வளவு கட்டிக் கொண்டு வந்தாலும்,மாப்பிள்ளையின் தாயாருக்கு ஏற்படும் ஒரு உணர்ச்சி.
கங்காஸ்னானம்: தீபாவளி அன்று எல்லாராலும் சொல்லப் படும் ஒரு பொய் வார்த்தை.
காப்பி: ஒரு வகை ‘டானிக்’ தலைதீபாவளிக்குப் போகும் மாப்பிள்ளைக்கு அவர் மனைவியைத் தவிர வேறு யாரும் கொடுக்கக் கூடாது.
சம்பந்தி: பெண்வீட்டாருக்கும்,பிள்ளை வீட்டாருக்கும் பெயர் விஷயத்தில் இருக்கும் ஒரு மகத்தான ஒற்றுமை.
தலைதீபாவளி: இது வந்து விட்டால்,பெண் வீட்டாரின் தலைகள் பிள்ளை வீட்டில் கிடந்து உருளத் தான் வேண்டி இருக்கும்.
தீபாவளி: காசியிலிருக்கும் கங்கையை ஒரு பைசா செலவில்லாமல் நம்மிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சுபதினம்.
தூற்றல் : 1. தீபாவளிக் குழப்பம்.
2. பட்டாசின் பரம விரோதி.
பட்சணங்கள் : மங்கள ஸ்னானம் முடிந்ததும்,சாப்பிடப் படும் லேகியத்திற்கு சரியான வேலை கொடுக்க இவை அவசியமாகின்றன.
புஸ்வாணம் : மாப்பிள்ளையின் கோபம்!
மச்சினன்: மாப்பிள்ளைகளின் தலைதீபாவளி நாடகத்தின் சூத்ரதாரி.
மாப்பிள்ளை: இந்த பெயரைச் சொல்லி ஒரு துரும்பை கீழே போட்டாலும் அது துள்ளிக் குதிக்கும்.
மாமனார்: சதா மாப்பிளை எதிரில் பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கும் ஒரு ஆத்மா.இவரை மாப்பிள்ளைகளின் கஜானா என்றும் சொல்லலாம்.
மோதிரம்: தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்குப் போய் வந்ததற்கு அடையாளமாய்ப் போடப் படும் ஒரு முத்திரை.
லேகியம்: பட்சணத்தை ஒரு ‘பார்வை’ பார்க்கவும்.
வில் வண்டி: மாப்பிள்ளையை சட்புட்டென்று ஊருக்கு அனுப்ப மாமனார் அடிக்கடி வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு சாதனம்.
(பின்குறிப்பு: இதை எழுதி கிட்டத் தட்ட அறுபத்தியேழு வருடங்கள் ஆகி விட்டன. இன்னமும் அப்படியே அச்சு, அச்சாகப் பொருந்துகிறது பாருங்கள்.
எழுதியவர் : “கோபு”
பிரசுரம் : 1944 ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலர்.
தலை தீபாவளிக்கு பம்பரம் போல் ஆட்டி வைக்கும் மாப்பிள்ளை வீட்டார்களும், நொந்து நூடில்ஸாகிப் போன பெண் வீட்டுக் காரர்களும் அடியேனை மன்னிப்பார்களாக...)

Friday, October 21, 2011

செய்வினையும்,செயப்பாட்டு வினையும்...

எலுமிச்சை வியாபாரி ஏழுமலைக்கு கோபம் வந்தது.
”...எவனெவனோ, எதுஎதுவோ வாங்கறானுவ...எவனும் எளுமிச்சம் பளத்தை ஏறெடுத்தும் பாக்க மாட்டேங்கிறானே...”
எல்லாவற்றுக்கும்
எல்லார் மீதும்..எரிச்சலாய் வந்தது..
திடீரென ஒரு ஐடியா!
செயலாக்க, சைக்கிளை ஓங்கி மிதித்தார்.
”...என்னங்க, கேள்வி பட்டீயளா, சேதியை.. நம்ம செருதூர் செல்லாண்டி அம்மன் கண்ணில
ரத்தம் வருதாம்..”
செருதூர் செல்லாண்டி அம்மன் கண்ணில ரத்தம்!!!
காட்டுத் தீயாய் செய்தி பரவியது..
“ என்ன குத்தம் செஞ்சோமோ?”
” நா அப்பவே சொன்னேன்..தெய்வத்துக்கே அடுக்கல..”
“ எதனாலயாம்?”
“ கலி முத்திப் போச்சு”
ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள்.
“ வூட்ல, தலைச்சன் புள்ள இருந்தா, அவனுக்கு ஆகாதாமே இது?”
“ அப்படியா?”
“ என்ன செய்யறது...”
“ ஒண்ணும் கவலைப் பட வேண்டாம் மாமா..வெள்ளிக் கிழமை துர்க்கைக்கு ராகு கால அர்ச்சனை செய்து, ஒரு எலுமிச்சம் பள மாலை ஒண்ணு சாத்துங்க..வந்த துன்பம்..வர துன்பமெல்லாம்
ஓடியே போயிடும்”
எலுமிச்சம்பழ வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போக, ஏழுமலைக்கு ஏக குஷி!
சீட்டியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
“என்னாங்க, உங்களத் தானே?”
“ சொல்லு கண்ணு?”
“ கேள்விபட்டீயளா, நம்ம செருதூர் செல்லாண்டி அம்மன் கண்ணுல ரத்தம் வருதாம்..அதனால, தலைச்சன் புள்ளைக்கு ஆகாதாமில்ல.. நீங்க தலைச்சன் புள்ள தானே..பரிகாரம் செஞ்சேன்..”
“ என்ன புள்ள பரிகாரம்?” ஏதும் தெரியாதது போல் கேட்டார், ஏழுமலை..
” வூட்டு சொந்தக்கார பொண்டு புள்ள சனஙகளுக்கு, சேப்பு புடவையும், சேப்பு லவிக்கையும் வாங்கித் தரணுமாமில்ல.. நம்ம குடும்பத்துல தான் உங்க சொந்தம்..எங்க வூட்டு சொந்தம்னு ஒரு பதினைந்து டிக்கட் இருக்கே..அத்தனைக்கும் புடவை வாங்கிட்டேன்..”
ஹா..........ஹா.............
எலுமிச்சம் பழம் ஒன்று தடுக்கி விடவே, எக்கச் சக்கமாய் விழுந்த ஏழுமலை, அதன் பிறகு எழுந்திருக்கவேயில்லை!

Monday, October 17, 2011

மறுபடியும்.......


இன்று ஒரு தேர்தல்!
நாம் நம் உள்ளாட்சி
கவுன்சிலர்களையும்,
மேயர்களையும்..
தேர்ந்தெடுக்கப் போகும்,
நன்னாள்...
இவ்வளவு சதவீதம்
வாக்குப் பதிவு..
வன்முறை இல்லை..
கள்ள ஓட் இல்லை..
சகஜ நிலை..
என்று,
ஊடகங்கள் மார் தட்ட,
நம் கையில் ஊற்றிய,
மை நம் கண்ணை
மறைப்பது தெரியாமலேயே,
மறுபடியும்...
நாம்
ஏமாறப் போகிறோம்!?!?!?

Thursday, October 13, 2011

ரேஷன் கடை துரைக்கண்ணு!!


இப்ப எல்லாம் நம்ம துரைக்கண்ணு அனாவசியமான ஏன்..அவசியமான வம்பு தும்புக்கும் போறதுல்ல..தான் உண்டு..தம் வேலை உண்டு என்று கம்முனு இருக்கிறான்.
“ஏல... துரைக்கண்ணு என்னம்மா கண்ணு ஆச்சு?” என்று மேலத்தெரு சம்முகம் கேட்கும் போதும் ஒரு நமட்டு சிரிப்பு தான் அவனிடமிருந்து பதிலாக வரும்..
முன்னல்லாம் இவன் பேரே அடாவடி துரைக்கண்ணு தான்..
பய புள்ளக்கி கல்யாணம் ஆச்சு..அடாவடித் தனம் அடங்கிப் போய் ஒளுங்கா வேலைக்குப் போக ஆரம்பித்தான்...
ஆனா இப்ப ரொம்பல்ல அடங்கி போயிட்டான்..
ரேஷன் கடையில ஆளாளுக்குப் புலம்பும் போது சிரித்துக் கொண்டான், துரைக்கண்ணு.
அவன் அவஸ்தை அவனுக்கல்லவா தெரியும்?
இப்பத் தான் கம்சலை உண்டாயிருக்கா...இத்தனை நா களிச்சு..
வம்சம் தளைக்க வேணாமா?
இந்த சமயத்தில போயி எவன் வாயிலும் விள வேண்டாமே!
..ஏற்கனவே அந்த புதுக் கவித வேற அடிக்கடி வந்து பயமுறுத்துது!
அதனாலேயே, இப்பல்லாம் ரொம்ப ஜாக்ரதையாவே..ரேஷன் சாமானெல்லாம் கரீட்டா எடை போட்டு தரான், துரைக்கண்ணு!
நாள் நெருங்க..நெருங்க..ரொம்ப டென்ஷனாயிட்டான்...
மூலத் தெரு புள்ளாருக்கு, முழுசா மூணு தோப்புக்கரணம் போடறான், ரேஷன் கடைக்கு போறதுக்கு முன்னால...
யார் சிரிச்சாலும் கவலைப் படாமல்!
புள்ள நல்லா பொறக்கணுமே...
புள்ள நல்லா பொறக்கணுமே...
எவனெவன் வயிற்றெறிச்சலைக் கொட்டி கொண்டானோ..அத்தனை பயலுவலும் மனசுக்குள்ளாற வந்து மிரட்டித் தொலையாறுங்க..துரைக்கண்ணுவ..
அந்த நாளும் வந்தது!
”... இங்க யாருங்க துரைக்கண்ணு?”
“ நாந்தானுங்க..”
“ கங்கிராஜுலேஷன்ஸ்...உங்களுக்கு ஆம்பள புள்ள பொறந்திருக்கு..”
“ பார்க்கலாமுங்களா...சிஸ்டர்?”- தவிப்புடன் கேட்டான், துரைக்கண்ணு...
” சாரிங்க..குழந்தையை பெட்டியில வைச்சிருக்கு..இப்ப பார்க்க முடியாதுங்க?”
“ஏனுங்க?”
“ ஓவர் வெயிட்!”

Tuesday, October 4, 2011

நவராத்திரி கொலு !!!!!!!நவராத்திரி கொலு !!!!!!!
எல்லா பொம்மைகளையும் வை(த்)து விட்டு, சற்று நிமிர்ந்தேன்!
பெண்டு வாங்கி விட்டது, வேலை!
ஒரு கற்பனை..
எல்லா பொம்மைகளுக்கும் உயிர் இருந்தால் எப்படி இருக்கும்?
முதல்ல நம்ம உயிர் போகாது!
“...தா ஃபெரெண்ட்ஸ்..ஜம்னு வந்து உட்கார்ந்துக்கங்க...” என்று சொன்னால் போதும்,
பாதிக்கு மேல் நம் வேலை மிச்சம்!
அதுங்களாக வந்து அவரவர் இடத்தில் அமர்ந்தால், எவ்வளவு செளகர்யம்!
அது அப்படி இல்லாமல்...
பீக் அவரில் நாம் பஸ் பிடிக்க ப்ரயத்தனப்படுவது போல, பொம்மைகளும் சீட் பிடிக்க
ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது?
செட்டியார், பிள்ளையார் சுண்டெலியை எட்டி ஒரு உதை உதைக்க..
பிள்ளையார் கையில் கிடைத்ததை எடுத்து செட்டியார் மேல் போட...
கடையில் உள்ள துவரம்பருப்பு, கடலை பருப்புகளை
ஆடு,மாடுகள் வாய் வைக்க..
செட்டியார் பாரியாள் மீது,
புலி ஒன்று பாய..
பரசுராமன் அதை தடுக்க.......
பக்கத்தில் இருந்த நரசிம்மம் ஹிரண்யனை விட்டு விட்டு,
விவசாயியை ஹதம் செய்ய முயல...
லபக்கென்று பூனை ஒன்று எலிக்குட்டியை பிடிக்க...
சோல்ஜர் ஒருவன் தன் .303 ரைபிள் ’பட்’டால், பூனை கழுத்தில் ஒன்று போட,
கல்யாண செட்டில் ஏக களேபரம்..தூரத்து மாமா ஒருவர் ராத்திரி படுக்க தலைகாணி
தரவில்லை என்கிற சொத்தை காரணத்தால், மாப்பிள்ளை பையனை உசுப்பேற்ற..
அஷ்ட லட்சுமிகளுக்குள் புடவை விஷயத்தில் தகராறு வர..
நாயனம் வாசிப்பவரை கடம் விதவான் தவுல் கம்பால அடிக்க....
நல்ல வேளை ...
அத்தனைக்கும் உயிர் இல்லை...
பொம்மைகள் தான்!
சமர்த்தாக அதனதன் இடத்தில் அமர்ந்து கொண்டு...
அத்தனையும் அப்படி இருப்பதால்...
பூஜனைக்குரிய மரியாதையுடன்..
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சுண்டலுடன்...
இப்படி பொம்மைகள் போல..
நமக்கு இருக்கத் தெரியாமல் தானே...
பேசத்தெரியாமல் பேசிக்கொண்டு...
ஏட்டிக்குப் போட்டியாய்..
ஏதாவது செய்து தொலைத்து..
வாங்கி கட்டிக் கொள்கிறோம்!
அத்தனை பூஜையும் நமக்கு!!
ஒரு பொமமையை பார்த்தேன்...
சிரித்தது..
சிரிக்க முயன்றேன்...
முடியவில்லை!
காரணம்..
முதுகு வலி!!!!

Wednesday, September 28, 2011

செருப்பாலூரில்.......


செருப்பாலூர்!
உங்களுக்கு வேண்டுமானால் ஊரின் பெயர் வினோதமாய் இருக்கலாம்..ஆனால், எனக்கு..கிரிக்கு..சிகாமணி சித்தப்பாக்கு...பாலு சித்தப்பாக்கெல்லாம் ..செருப்பாலூர் என்று சொன்னால் போதும்..கண்களில் மின்னல் தெறிக்கும்..பேச்சில் குஷி பிறக்கும்..
சிகா சித்தப்பாக்கு அவருடைய ஃப்ரண்ட்ஸ் ஷாஹுல் ஹமீது..பாசித்... கிருஷ்ணன்..முத்துக்குமரன்..STO..ஹெட் க்ளார்க் சோம சுந்தரம்.. லஸ்கர் நேசையன்..என்று ஞாபகம் வரும்..
லஸ்கர் நேசையன் பற்றி..
PWD யில் லஸ்கர் வேலை.என்று பெயர்...ஆனால் முழுக்க..முழுக்க பாட்டிக்கு PET..பாட்டி எது சொன்னாலும் செய்வார்..எது வாங்கி கொண்டு வா என்றாலும் ..அது புலிப்பால் என்றாலும் வாங்கி வந்து விடுவார்.. சிகா சித்தப்பா தான் செக்‌ஷன் ஆஃபீசர்..அவரை ஆபீஸ் வேலைக்காக சித்தப்பா எதுவும் சொல்ல முடியாது..பாட்டி SHIELD ஆக இருந்து கொண்டு அவரை காப்பாற்றி விடுவார்..பாட்டியின் சிபாரிசில் சிகா சித்தப்பாவிடமே நேசையன் காரியம் சாதித்துக் கொண்டு விடுவார்..என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.. நேசையன் என் இன்னொரு பிள்ளை என்று பாட்டி அடிக்கடி சொல்லும் அளவிற்கு பாசம் உள்ளவர்.. நாங்கள் அங்கிருக்கும் போதே, அவருக்கு தக்கலைக்கு ட்ரான்ஸ்பர் ஆகி விட்டது. அதற்குப் பிறகு சதாசிவம் என்று ஒருவர் வந்தார்..அவர் எங்களுடன் அவ்வளவாய் ஒட்டவில்லை..
தாத்தாக்கு கோபால் பிள்ளை..(அவர் எங்களுக்கு ட்யூஷன் வாத்தியார்!) பாட்டிக்கு நேசையன்... நேசையன் கொண்டு வந்த சீனு என்கிற நாய்குட்டி!
எனக்கும்..கிரிக்கும்...செருப்பாலூர் என்றால் பெரிய லிஸ்ட் ஞாபகம் வந்து விடும்!
அயனிப் பழம்..கொல்லாம் பழம்..பேயன் வாழை..இதை அடுப்பில் சுட்டுத் தருவார் பாட்டி!
சிகா சித்தப்பா ஃப்ரீயா இருக்கும் போது, ஆஃபீஸ் ஜீப்பில் எங்களைக் கூட்டி கொண்டு செல்லும் இடங்களான பேச்சிப் பாறை..பெருஞ்சாணி டேம்..திற்பரப்பு ஃபால்ஸ்..பத்மனாப புரம் அரண்மனை..குலசேகரம் மார்க்கெட்..
செருப்பாலூர் எங்கிருக்கிறது என்று சரியாக ஞாபகம் வரவில்லை..ஆனால், மார்த்தாண்டத்திற்கும், குலசேகரத்திற்கும் நடுவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்..
திருச்சியிலிருந்து வந்த அந்த கூட்டுக் குடும்பம் இரண்டாகப் பிரிந்து...அண்ணா,அம்மா,பாலுசித்தப்பா,முரளி எல்லாரும் நாகர்கோவிலில்..தாத்தா..பாட்டி..சிகாமணி சித்தப்பா.. நான் ..கிரி..சகுந்தலா அத்தை..(அவர்களுக்கு கொஞ்ச நாளில் கல்யாணம் ஆகி மெட்ராஸ் போய் விட்டார்கள்)எல்லாரும் செருப்பாலூரில்!
நாங்களும் முதலில் அண்ணா,அம்மாவோடு தான் இருந்தோம்... நான் மூன்றாவதும்..கிரி ஒன்றாவதும் நாகர்கோவிலில் தான் படித்தோம்..ஆனால் அண்ணாவிற்கு ’கோதையார் லோயர் கேம்ப்’பிற்கு ட்ரான்ஸ்வர் ஆகி விட்டதால், அங்கு அப்போது ஸ்கூல் இல்லாத காரணத்தினால், நான் நான்காவதும், கிரி இரண்டாவதும் செருப்பாலூரில் தாத்தா, பாட்டியிடம் படித்தோம்.
சிகாமணி சித்தப்பா ராயல் என்ஃபீல்ட் வைத்திருந்தார்...பிரமாதமாய் ஜீப் ஓட்டுவார்..ஙோய்..ஙோய் சித்தப்பா... நானும் வரேன் சித்தப்பா என்று நானும்,கிரியும் அழுவோம்..அவர் எங்களை விட்டு ஆஃபீஸ் போனால்!
நாங்களும் எங்கள் ஃபெரண்ட்ஸ் ( வலது பக்கத்து வீட்டில் அம்பிகாபதி..அமராவதி அக்கா..ஒரு சின்ன தம்பி பெயர் மறந்து விட்டது ஹெட்க்ளார்க் சோமசுந்தரம் மாமா வீடு அது..இடது பக்கம் STO முத்துக் குமரன் சார் வீடு..அவர் பையன் ரமணி கிரி வயது)
எல்லாரிடமும் எங்கள் சிகா சித்தப்பா மோட்டார் சைக்கிள்..கார்..ஜீப்..ஏன் ஏரோப்ளேன்..ஹெலிகாப்டர் எல்லாம் சூப்பரா ஓட்டுவார் என்று சொல்ல..அவர்களூம் வாயில் ஈ புகுந்தது தெரியாமல் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்..
பெரிய பெரிய ஓட்டு வீடு..இன்ஸ்பெக்‌ஷன் பங்களா போல்! சுற்றிலும் பசுமை...ஆங்காங்கே ரப்பர் எஸ்டேட்..மரத்தை நேர்வகிடில் கத்தியால் கீறி..கொட்டாங்கச்சி வைத்திருப்பார்கள்..ரப்பர் பால் அதில் வடியும்!
பாடம் நடத்தியது போக கோபால் பிள்ளை ஒரு நாள் எங்களுக்கு கதை சொல்வார்..மறு நாள் காகிதத்தில் பந்து செய்ய கற்றுக் கொடுப்பார்..சிகாமணி சித்தப்பா கல்யாண ஃபோட்டோவில் கோபால் பிள்ளையை இன்னமும் அடையாளம் காட்டுவேனாக்கும் நான்!
தாத்தா,பாட்டி,சிகாமணி சித்தப்பா போயாச்சு!
அண்ணா,அம்மா,பாலு சித்தப்பா, நான்,கிரி எல்லாருமாய் ஒரு வண்டி எடுத்துக் கொண்டு நாகர்கோவில் வேப்பமூடு சித்ரா லாட்ஜில் ரூம் எடுத்துக் கொண்டு..
மறுபடியும் அந்த செருப்பாலூரைப் பார்க்க வேண்டும் என்று கொள்ளை ஆசை?
அப்படியே நேசையன்.. நாகர் கோவில் நாகராஜன் (இப்போது வாத்யாராம்..அங்கு புரோகிதரை வாத்யார் என்று சொல்வார்கள்)அவர்கள் சகோதரிகள் கீதா அக்கா..பாலா அக்கா எல்லாரையும்
பார்க்க வேண்டும் என்று ஆசை...முடியுமா?
ஹே..செருப்பாலூர்..என்கிற என் ஆருயிர் . நண்பனே...
உன்னை எப்போது காண்பேன், இனி?

Friday, September 23, 2011

INNINGS DEFEAT !!!!!


’குல்லா போட்ட நவாபு..செல்லாதுந்தன் ஜவாபு’
இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் பட்டோடி ஞாபகம் வந்து விடும்..
சிம்மம் என்றால் சிவாஜி!
டைகர் என்றால் பட்டோடி!!
அந்த பட்டோடி நவாப் ....
இனி இல்லை!!!
சித்தப்பாவுடன் கிரிக்கெட் பற்றி பேசும்பொதெல்லாம், அவர் பேச்சில் பட்டோடி வராமல் இருக்க மாட்டார்...
முதலில் பட்டோடி...
பிறகு நாரி காண்ட்ராக்டர்...
பட்டோடியின் ஃபோர்..சிக்ஸர்..அந்த பேட்டிங் ஸ்டைல்..சூப்பர் ஃபீல்டிங்!
எல்லார்க்கும் பிடிக்கும்...எமனுக்கும் பிடித்ததோ..
அவரின் அபாரமான நகைச்சுவை உணர்வு....
”PRIVY PURSE BILL" PASS ஆன சமயம், அவர் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்.
அவரின் நண்பர் ஒருவர் இதைப் பற்றி சொல்ல, அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
“ நவாப் ஆப் பட்டோடி என்று இல்லாவிட்டால் என்ன? ஜான் ஸ்மித் என்று கூப்பிடுங்களேன்....”
அந்த மெச்சூரிட்டி எத்தனை பேருக்கு வரும்?
ஒன்று தெரிகிறது..
இறைவனிடம் யாரோ நம்ம ஊர் கிரிக்கெட்டைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும்..
அதனால் அவருக்கு உடனே நம்ம பட்டோடி ஞாபகம் வந்திருக்க வேண்டும்..
ஏதோ நாம் சந்தையில் நல்ல கத்திரிக்காயை எடுக்கிறார் போல், அவரும் எழுபது வயது என்று கூட பாராமல் எடுத்துக் கொண்டு விட்டார்..
அவரை எடுத்துக் கொண்டு விடலாம்..
அவர் பற்றிய சுகமான நினைவுகளை எடுக்க முடியுமா, என்ன?
பலரை மரணம் வெல்கிறது..
ஆனால், ஒரு சிலரோ அந்த மரணத்தையே வெல்கிறார்கள்...
எங்கோ..தொலை தூரத்தில் ‘ குல்லா போட்ட நவாபு..செல்லாது உந்தன் ஜவாபு’ என்ற பாடல் கேட்கிறது....
சன்னமாக....
ஆனால்,
சோகமாக.......

Friday, September 16, 2011

மாத்தி யோசி...!


ஒரு ஊர்ல,அந்த ஊர் எல்லைல... ஒரு மரத்தடியில, ஒரு ஓல்ட் லேடி நிறைய வயர்களை வைச்சுண்டு எதையோ அசெம்பிள் பண்ணிண்டு இருந்தாளாம். அந்த சமயம் பார்த்து ஒரு காக்கா அங்க வந்துச்சாம்...
...’வந்து?’
அந்த ஓல்ட் லேடி அசந்திருக்கும் போது,அசெம்பிள் பண்ணி வைச்சிருந்த ஒரு ’பாம் டாப்பை’ லபக்னு தூக்கிண்டு பறந்து போயிடுச்சாம்.
“அச்சச்சோ அப்புறம்?”
அந்த காக்கா ஒரு உச்சாணி மரக்கிளையில உட்கார்ந்துண்டு அந்த ‘பாம் டாப்பில’ படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது,அந்த பக்கமா நரி ஒண்ணு வந்ததாம்....
“ நரி வந்து?”
...நரி வந்து..”காக்கா..காக்கா நீ நம்ம சாய் சரண் மாதிரி நல்லா பாட்டுப் பாடுவியாமே .ஒரு பாட்டு பாடேன்.. ” என்று சூப்பர் சிங்கர் ரேஞ்சுக்கு அதை கொம்பு சீவி
விட, நம்ம காக்காக்கு ஏக சந்தோஷம்.. நாமளும் அந்த ‘மாமா...மாப்ளே’ பாட்டை ட்ரை பண்ணிப் பார்க்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருந்தப்ப..”
” யோசிச்சிட்டு இருந்தப்ப..அந்த காக்கா என்ன பண்ணிச்சு? பாட்டு பாடிச்சா?”
” ... பாடலாம்னு தான் நினச்சது..ஆனா..”
“ என்ன ஆனா?”
“ இரு சொல்றேன்.. நரி உசுப்பேத்தி விட்டுச்சா..காக்காக்கு ஏக சந்தோஷம் நாம பாடற பாட்டையும் கேக்கிறதுக்கு ஒரு நாதரி பய இருக்கானேன்னு ...”
” காக்கா பாடிச்சா...?”
“ பாடலாம்னு தான் நினச்சது..அதுக்கு திடீர்னு அதோட தாத்தா சொன்னது ஞாபகம் வந்துச்சா..”
“ தாத்தா காக்கா என்ன சொல்லிச்சு?”
வாயில இருந்த பாம் டாப்பை காலுக்கு இடுக்கில வைச்சுகிட்டு நம்ம காக்கா அந்த நரி கிட்ட சொன்னது;
“ லே நரியே..உங்க தாத்தா எங்க தாத்தாட்ட வடை சுட்ட கதையை எங்கிட்ட விலா வாரியா சொல்லிட்டு..பேராண்டி..பேராண்டி நா ஏமாந்தா மாதிரி நீயும் ஏமாந்துடாதேன்னாரு..அதனால.. நாம் ஏமாற மாட்டேன்..உன் வேலையைப் பார்த்துட்டுப் போன்னு
சொல்லவே..அந்த நரியும் தலையை தொங்க போட்டுகிட்டு ஓடிப் போயிடுச்சாம்...”
இது தான் நரி பன்னு தின்ன கதை!!
எதுக்கு இவ்வளவ்.. பில்டப்னு கேக்கறீயளா?
எங்க பார்த்தாலும்..யாரைப் பார்த்தாலும் ”மாத்தி யோசி..மாத்தி யோசி”ன்னு உயிரை எடுக்கிறாங்க..
அதனால்ல.. நரி, பாட்டிட்ட காக்கா சுட்ட வடையை சுட்ட கதையை நாமளும் தான் எத்தனை நாளக்குத் தான் சொல்லிக்கிட்டு இருக்கிறது..?
அதான் கொஞ்சம் மாத்தி யோசிச்சுட்டோமில்ல..........

Tuesday, September 13, 2011

(5) குறளும், குறுங்கதையும்!!


பெரிய பாராட்டு விழாவாக்கும் அது!
மிகப் பிரபலமான விஐபிக்கள் அங்கு குழுமியிருந்தனர்.
ஒரு பெரிய கம்பெனியை நிர்வகிக்கும் வந்தனாவிற்குத் தான்
அந்த பாராட்டு!
அதுவும் மிகச் சிறிய வயதில்!
ஒரு சாதாரண காண்ட்ராக்டரின் பெண் உலகின் மிகப் பிரபலமான பத்து பெண்களில் ஒருவராய்,அதிலும் ஐரோப்பா கண்டத்தில் பவர்ஃபுல் ஆன தேசத்தின் பெண் முதல்வருக்கு அடுத்தபடியாய்... நம் வந்தனா அதில் ஆறாவது ரேங்க்!
ஒரு மேல் நாட்டுப் பத்திரிகை பட்டியலிட்டது!
அதற்குத் தான் இந்த பாராட்டு விழா!
வந்தனாவைப் பெற்றவரை பேசச் சொன்னார்கள்!
காண்ட்ராக்டர் ஏகாம்பரம் பேச ஆரம்பித்தார்.
ரத்னசுருக்கமான பேச்சு!
“ எனக்கு மேடையில் எல்லாம் பேச வராதுங்க ..இதுக்கல்லாம் காரணம் யார்னு நினைக்கிறீங்க..சாதாரண மரங்கள் தான் ..”
ஒரு நொடி அவர் மெளனிக்க....
மரமா....கூட்டத்தில் சலசலப்பு!
“ ஆமாம் பெரியவர்களே..வந்தனா ப்ளஸ் டூ முடிச்ச சமயம், எம்.பி.பி.எஸ் படிக்க ரொம்ப ஆசைப் பட்டாள்...அப்ப ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தாத் தான் சீட் கிடைக்குங்கிற நிலை..அதிர்ஷ்ட வசமாய் எனக்கு நம்ம புலிவார்டு ரோடில் மரம் வெட்டும் காண்ட்ராக்ட் கிடைத்தது..இது ஆண்டவனாப் பார்த்துக் கொடுத்ததம்மா.. நீ எம்.பி.பி. எஸ் தாராளமாய் படி என்று நான் சொல்ல, அந்த காண்ட்ராக்ட் நான் எடுக்கக் கூடாது என்று தீர்மானமாய் இருந்த பெண் தான் வந்தனா!அப்பா மழை வரணும்... நம்ம நாடு சுபிட்சமாய் இருக்கணும்னா, மரத்தை வெட்டக் கூடாது என்று பிடிவாதமாய் மறுத்து விட்டாள்..இந்த லாபத்தினால் தான் நான் டாக்டருக்குப் படிக்கணும்னா,எனக்கு அது வேண்டாம் என்றாள்..அதனாலேயே, என்னால் அவளை டாக்டருக்குப் படிக்க வைக்க முடியாமல் போயிற்று..ஆனால்..இன்று புகழின் உச்சாணி கிளைக்கு அவளைக் கொண்டு வந்தது அன்று வெட்டப் படாத மர்ங்கள் சிந்திய ஆனந்த கண்ணீர் தான்..”
ஒரு ஒற்றைக் கொட்டு அப்ளாஸ் முழங்க, தொடர்ந்து ஐந்து நிமிட கர ஒலிகள் அந்த இடத்தை..ஆக்கிரமித்தன அப்போது!

என் குறள் : விசும்பின் துளியும் இனி வீழாது, அடுக்கடுக்காய்
பசுமரங்கள் வெட்டப் படுங்கால்.

Wednesday, September 7, 2011

(4) குறளும், குறுங்கதையும்!!


அம்மா கூனிக் குறுகி நின்றாள்...
“ நாம் பாட்டுக்கு சொல்லிண்டே இருக்கேன்..பேசாம இருக்கியே..என்ன நெஞ்சழுத்தம் உனக்கு?”
“ நா என்ன பண்றது, அம்மு..என் கையில ஒண்ணும் இல்ல...”
அம்மாவின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலித்தது
“ அன்னிக்கு இதே வார்த்தையை நானும் சொல்லிட்டு துண்டை உதறித் தோளில போட்டுண்டு போயிருக்கலாமோல்யோ? ஏன் போகலை”
“ உனக்கு பெரிய மனசு அம்மு”
“ அதெல்லாம் ஒண்ணுமில்லே.. நான் ஏமாளி..அன்னிக்கு அப்பா இவர் கையைப் பிடிச்சுண்டு உங்கள நம்பித் தான் ஐந்து பெண் குழந்தைகளையும் விட்டுட்டுப் போறேன்னு சொன்னப்ப இவர் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கா...கவலையேப் படாதேங்கோ.. நான் பார்த்துக்கறேன்னு சொல்லி உங்க ஐந்து பேருக்கும் கல்யாணம் ஜாம்..ஜாம்னு பண்ணலியா..அதுக்கு இது தான் பிரதியுபகாரமா?”
“ அம்மு...எங்க மாமனார்..மாமியாரைக் கேட்க வேண்டாமா?”
“ பேஷாக் கேளு..அவா ஒண்ணும் சொல்ல மாட்டா..”
.....ஐயோ... நானா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு சொன்னேன்..ஏதோ அப்பா..தன் அந்திம காலத்துல அத்திம்பேர் கையைப் பிடிச்சு சத்தியம் வாங்கிண்டார்னா... நான் எந்த விஷயத்துல பொறுப்பு...அதுக்கு பர்த்தியா என் குழந்தையை சுவீகாரம் கேட்கறியே நீ....என்னால எப்படி அம்மு என் குழந்தையை பிரிஞ்சுட்டு இருக்க முடியும்?...
அம்மா பேசவில்லை..அம்மா கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் பேசியது.
புரிந்து கொண்ட நான் அம்மா புடவைத் தலைப்பை என்னுள் போர்த்தி கொண்டேன்.
”...டேய்..சீனு..இங்க வாடா..இனிமே நான் தான் உன்னோட அம்மா..” ஹிஸ்டீரியா வந்தது போல் கத்த,
“ இல்லை..இல்லை.. நீ பெரீம்மா.....”
ஹீனஸ்வரத்தில் நான் முனக, அம்மா அழ ஆரம்பித்தாள், அப்போது!

என் குறள் : எந்நன்றி சொன்னார்க்கும் உய்வுண்டாம்- உய்வில்லை
செய்நன்றி சொன்ன மகற்கு!

Wednesday, August 31, 2011

(3) குறளும், குறுங்கதையும் !!!!


இது கதையல்ல நிஜம்!
நேற்று இரவு..அதாவது 31.08.2011 இரவு எட்டு மணி வாக்கில்.. சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
செல்ஃபோன் அடிக்க,
“ மீனா...விஷயம் தெரியுமா? நம்ம சத்திக்கு ஆக்சிடெண்ட்..ஸ்பாட்லேயே...”
அழுகின்ற குரல் இங்கு நன்கு கேட்டது..
“ ஐயையோ..என்னம்மா இது? விளக்கமா சொல்லு?”
“ ஆறரை மணி வாக்கில மோட்டார் சைக்கிளில வெளியில ஃப்ரெண்டை பாக்க கிளம்பும்போது...யாரோ டவுன் பஸ் காரன் அடிச்சுட்டு...”
”என்னப்பா ..யாருக்கு என்ன ?”- நான்.
“ நம்ம சத்தி...”
அதற்கு மேல் எனக்கு விளக்கம் தேவையில்லை..சத்தி ரொம்பவும் நல்ல பொறுப்பான பையன்..எனது ஷட்டகரின் தம்பி..உறவை மீறிய நட்பு!...அன்பான மனைவி..சின்னஞ்சிறு பெண் குழந்தை...எல்லாரையும் இப்படி தவிக்க விட்டு விட்டு எப்படியடா மனம் வந்தது? .
ஆண்டவா நீ இவ்வளவு மோசமானவனா?
ஆறு மணி வரை படு கேஷுவலாய் டிவி. பார்த்துக் கொண்டிருந்தவன்..அடுத்த அரை மணி நேரத்தில் இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..........


குறள் :
ஒரு நாழிகை முன் உளனொருவன் இனி இல்லையெனும்,
சிறுமை உடைத்து இவ்வுலகு.


Friday, August 26, 2011

(2) குறளும், குறுங்கதையும் !!!!அந்த அஞ்சாம் க்ளாஸ் ஆசிரியர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
காலாண்டு தேர்வு முடிந்து கடைசி நாளன்று இவ்வாறு சொன்னார்:
” புள்ளைங்களா? லீவ் முடிஞ்சு, ஸ்கூல் வரும் போது, கேள்வித் தாள்களுக்கு பதில் எதுவும் எழுதிட்டு வர வேண்டாம்..எந்த கட்டுரையும் எழுத வேண்டாம்...சிம்பிளா ஒண்ணே ஒண்ணு!
லீவில, என்ன ’ஹோம் ஒர்க்’னா,கடவுள எல்லாரும் பார்த்துட்டு வாங்க..உங்க அனுபவத்தை நீங்க சொன்னா போதும்..அதையும் ஒரு பக்கம்...ஒண்ணரை பக்கம்னு எழுத வேண்டாம்..வெறுமன...வாயால சொன்னாப் போதும்..”
உய்யென்று ச்ந்தோஷமாய் கத்திக் கொண்டு ஓடின பிள்ளைகள், இன்று தான் ஸ்கூலுக்கு வந்திருக்கின்றன..
ஆசிரியர் ஒவ்வொருவரையும் கேட்க ஆரம்பித்தார்.
“கோபு.. நீ கடவுளப் பார்த்தியா?”
“ பார்த்தேன் சார்..லீவுக்கு திருச்சி போயிருந்தேன்..அங்கே, உச்சிப் பிள்ளையார் சாமியைப் பார்த்தேன்”
“ பாபு... நீ?”
“ சார்... நான் சென்னை போயிருந்தேன் சார்...அங்க பார்த்தசாரதி கோவில்ல..பெருமாளைப் பார்த்தேன்..”
“ சீனு?”
“ சார்.. நான் லீவுக்கு எங்கேயும் போகலை..ஆனா.. நம்மூர் சாமியை வெள்ளிக்கிழமை போய் பார்ப்பேன்..”
” ரகு... நீ கடவுளப் பார்த்தியா?”
“ சார்... நான் பார்க்கலை சார்?”
” ஏம்ப்பா?”
“ சார்.. நான் எந்த ஊருக்கும் போகலை..உள்ளூரில போயும் சாமியைப் பார்க்கலை..ஆனா, சாமியைப் பார்த்தவனை நான் பார்த்தேன்..சார்..”
“ என்னப்பா சொல்றே?”
“ அம்மா..தீனி வாங்கிக்க காசு கொடுத்தாங்க..தீனி வாங்க கடைக்குப் போறப்ப, ஒருத்தர் பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தார்..அவரைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்துச்சு.. நான் அம்மா தந்த காசுக்கு ஒரு பன் வாங்கி, அவர்ட்ட கொடுத்தேன்..அப்ப அவர் கண்ணைப் பார்க்கணுமே? அந்த கண்ணில நான் சாமியைப் பார்த்தேன், சார் ”
ரகுவை அப்படியே ஆசிரியர் கட்டிக் கொள்ள, ஒவ்வொருவராய் கை தட்ட ஆரம்பிக்க, அந்த கரகோஷம் அடங்க முழுசாய் ஐந்து நிமிடம் ஆகியது!!!

குறள்:

அரிசி,உப்பு,புளி,பருப்பு,எண்ணெய் இவ்வைந்தும்,
பஞ்சாட்சரமாகுமாம் பசித்தவர்க்கு.

Wednesday, August 24, 2011

(1) குறளும், குறுங்கதையும் !!!


(முன் குறிப்பு: திருக்குறள் கதைகள் என்று அந்த காலத்தில் ஆனந்த விகடனில் வந்தது, உங்களுக்கு நினைவிருக்கலாம்.இது அது போல் அல்ல! ஆனால், இதற்கு நீங்கள்ஆதரவு அளித்தால், தொடர்வேன் நிச்சயமாய்)
* * * * * * * * * * * *

ஒரு சந்தோஷ சமாச்சாரம்!
ஆனாலும் சுணங்கியே கிடந்தான், சுந்தர்.
ஆஃபீஸில் உள்ள அனைவருமே அவனைப் பாராட்டினார்கள். கொடுத்த ஸ்வீட்டுக்கு நன்றி கூறினார்கள்.இருந்தாலும் எதையோ பறி கொடுத்தவனைப் போல் இருந்தான், சுந்தர்.
”என்ன சுந்தர்..கங்க்ராட்ஸ்.. அந்த காலேஜ்ல பையனைச் சேர்த்தியே...அங்க தான் நிறைய கம்பெனிங்க காம்பஸ் இண்டர்வ்யூக்கு வருவாங்களாம்...வேலையைப் பற்றி கவலை இல்லையாம்”
”.....ம்...”
“ என்னப்பா, ஜாலியா இருக்க வேண்டிய நேரத்தில சோகமா இருக்கே? சிஸ்டர்க்கு உடம்பு சரியில்லையா?”
“ அதெல்லாமில்லப்பா”
“ அப்ப சொல்லு, உம் பிரச்னை தான், என்ன?”
” ஐந்து லட்சம் கேப்பிடேஷன் கேட்டாங்க..”
“ கொடுத்துட்டே இல்ல..”
“ இல்லப்பா..ஒரு பத்து உதைக்குது..என்ன பண்றதுன்னு தெரியலே!”
“ இப்ப யார்ட்டப்பா இருக்கும்..எல்லாரும் அட்மிஷன்ல இருப்பாங்க..அதுலேயும் மாசக்
கடைசி வேற..”
” என் கிட்ட இல்லப்பா..”
“ ஸாரிடா..கண்ணு...”
“ ஸாரிடா ராஜா..சிஸ்டர் கல்யாணத்துக்கு இப்பத் தான் பிஃப்லேர்ந்து எடுத்துட்டேன்”
அவனை ஒத்தவர்கள்..அவனை விட நிறைய சம்பளம் வாங்குபவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராய் கழன்று கொள்ள.....
மிஞ்சியவர்கள் அவனும், கணேசனும் தான்!
கணேசன் ஒரு அட்டெண்டர்..குறைச்ச சம்பளக் காரன்!
” கவலையேப் படாதே, சுந்தர்..பத்து ரூபாய் தானே..ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணு. நான் தரேன் உனக்கு”
சொன்னார்போல் அடுத்த அரை மணியில் பத்தாயிரம் ரூபாய் பணத்துடன் வந்தான், கணேசன்.
ஆனால், அவன் காதில் உள்ள கடுக்கன்கள் மிஸ்ஸிங்!
சுந்தர் பரிதாபமாய் அவன் வெற்றுக் காதுகளைப் பார்க்க, கணேசன் சொன்னான்..
“ கடுக்கனை அடகு வைச்சேன்..பையனைப் போய் சேர்த்துட்டு வா, ராஜா..இப்ப இதுவா முக்கியம்..இரண்டு மாசம் கழிச்சு நீ காசு தந்தா, மீட்டுட்டுப் போறேன்”
அவன் கைகளை அப்படியே எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்டான், சுந்தர்.

குறள் : உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே,
கடுக்கன் களைவதாம் நட்பு!

Thursday, August 18, 2011

ஒபாமாவும், நானும் !


பஸ். அதிலுள்ள நாற்பது பேர்களில் நானும் ஒருவன்!
பக்கத்து சீட் காரரின் செல் கிளிக்கியது.
இங்கு நான் என் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன்.
..பக்கத்து வீட்டுக்கு வந்த கடிதம்..பக்கத்து வீட்டுச் சண்டை..இதையெல்லாம் கேட்பதோ..பார்ப்பதோ கொஞ்சம் கூட நாகரீகமற்ற செயல் என்றாலும் நாம் நியாண்டர்தால் மனிதன் காலத்திலிருந்து இதைத் தான் செய்து கொண்டுதான் இருக்கிறோம்,கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்! அந்த வரிசையில் இப்போது செல்ஃபோன் பேச்சும் சேர்ந்து விட்டது! கேட்க வேண்டும் என்ற விருப்பு இல்லாமலிருந்தாலும் அது நம் காதுகளில் விழத் தான் செய்கிறது.. நம் மக்களுக்கும் கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் அந்தரங்கத்தையெல்லாம், அரங்கிற்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்! நாமும் அந்த கண்ராவிகளை எல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டி இருக்கிறது..
செல் ஃபோன் தொடர்ந்தது.
“என்னப்பா..ஆளையே காணோம்..ரிடய்ர்டாயிட்டா அவ்ளோவ் தானா?”
”அதில்லை ஸார்......கொஞ்சம் பிசி.. மாதங்கி என்ன பண்றாங்க?
”LKG சேர்த்தாச்சு..உம் ரெண்டாவது பொண்ணு என்ன பண்றா?”
“அவளும் அமெரிக்கா போயாச்சு..”
“ ரெண்டு குழந்தைகளையும் அமெரிக்கா அனுப்பிட்டு.. என்ன மனுஷன்பா நீ?”
“ அட நீங்க ஒண்ணு.. நம்ம ஊர் கோயமுத்தூர் போறதும் ஹூஸ்டன் போறதும் ஒண்ணு தான்! கோயமுத்தூர் போனா செல்லில் பேசத் தான் முடியும்..ஹூஸ்டன்னா..இங்க ஸ்கைப்ல பார்த்துக்கலாம்!”
”அப்புறம்”
“படிக்கணும்னு ஆசைப் பட்டா..இனிமேல் உங்க ரெண்டு பேருக்கும் ஒபாமா தான் ஒப்பா..அம்மான்னு மனசைக் கல்லாக்கிக்கிட்டு அனுப்பிச்சுட்டேன்”
”என்னமோப்பா”
...மனுசன் நகைச்சுவை உணர்வு உள்ளவர் போல இருக்கிறது..ஒபாமா என்றவுடன் எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது..
அசட்டுத் தனமாய் உடம்பு குறைவதற்கு நாம எல்லாரும் பாடுபடுகிறோமே..அதற்கு பதிலாய் ...
இப்படி செய்தால் என்ன?
எப்படியாவது BMI ஐ அதாவது BODY MASS INDEX மெயிண்டெய்ன் பண்ணனும்.அதுக்கு எதுக்கு உடம்பைக் குறைக்கணும்..கொஞ்சம் வித்யாசமா யோசிக்கலாமே.?
என்ன பண்ணலாம்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப சிம்பிள்..உடம்பைக் குறைக்கறதுக்குப் பதிலாய், உயரத்தை ஜாஸ்தியாக்கினா என்ன?
ஏன்...ஏன்...ஏன்.. அட ஏன் சார் இதுக்குப் போய் முறைக்கிறீங்க? நான் சொன்னதைத் தான் ஒபாமாவும் சொல்றார்..செலவைக் குறைக்க முடியாது..கடன் வேணா கூட வாங்கலாம்னு..அதைப் போய் பெரிசா பேப்பரில போடறீங்க.. நான் சொன்னா மட்டும் இப்படி கோச்சுக்கிறீங்களே?...
முனியாண்டி விலாஸ் மூட்டைப் பூச்சி கூட முட்டை பரோட்டா செய்கிறார் போல...
பக்கத்து சீட்டில் நகைச்சுவை உணர்வுடன் ஒருவர் அமர்ந்தாலே, நமக்கும் அது தொற்றிக் கொண்டு விடுகிறதே?
இன்னமும் அந்த நகைச்சுவை மனிதர் நண்பருடன் செல்லில் பேசிக் கொண்டு இருக்க..
அவரை அப்படியே அம்போ என்று விட்டு விட்டு, நான் மட்டும் பஸ்சை விட்டு இறங்கினேன், மனதை கல்லாக்கிக் கொண்டு!
ஏனென்றால், நான் இறங்கும் ஸ்டாப் வந்து விட்டது!!

"அது சரி..உம்

Sunday, August 14, 2011

முதல் கவிதை!!


பட்டத்தைப் பறக்க விட்டு,
பரதேசி போல் முடி வளர்த்து,
பக்கவாட்டில் கிருதாவைப்
பாங்குடனே வளர்த்து விட்டு,
இஞ்சி தின்ற குரங்கு போல்,
எப்போதும் முகம் தொங்கி,
கடை வீதி நடந்து சென்றால்,
ஜவுளிக் கடை பொம்மை கூட
சட்டென்று திருப்பிக் கொள்ளும்!
(மீள் பதிவு)

Saturday, August 13, 2011

இன்னும் ஒரு பெரியார் வேண்டும்!இன்னும் ஒரு பெரியார் வேண்டும்,
இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்..
பகுத்தறிவு பாசறை மூடியிருப்பதால்..
போக வழி தெரியாமல்
பிரச்னைகளைக் கொட்ட..
கோவிலுக்கு வந்து விடுகிறார்கள்..
அது என்ன கோவிலா.
.குப்பை மேடா?
இதில் பேரம் வேறு!
மேலும்,
சாமியைப் பார்க்க,
கட்டண சேவை!
கசாப்புக் கடையில் கூட,
கொசுறு கிடைக்கும்..
ஆனால்,
கோவிலில் கிடைப்பதில்லை..
கேட்டால் பூக் காண்ட்ராக்ட்,
முப்பது லட்சமாம்..
எங்கே சொல்ல..
நூறு ரூபாய் கொடுத்து,
தரிசனம் செய்து ..
மீண்டு வந்தால்,
மிஞ்சுவது..
நெஞ்சில் வேர்வை
மட்டும் தான்!!
ஆகவே இனி ஒரு பெரியார்
வந்து பகுத்தறிவு
வாசலைத் திறந்தால்..
பாதிக்கு மேல் ஓடி விடும்
பக்தர்கள் கும்பல்!!!

Tuesday, August 9, 2011

ஏ.கே.47 ம், கடவுளும்!!!


ராமன் கையில் வில்,
காளி கையில் திரிசூலம்,
விஷ்ணுவிற்கோ சக்ராயுதம்,
முருகன் கையிலோ வேல்,,
அனுமனுக்கு கதை,
பட்டாக் கத்தியுடன்
எல்லைத் தெய்வம்..
பக்கத்திலொரு குதிரை..
அதனருகில் தொப்பியணிந்த
துரைசாமி தெய்வம்,
கையிலோ .303 ரைபிள்!
எல்லாவற்றையுடன்
கண்டவுடன் என்னுள்,
எழுந்ததே கேள்வி....
ஏ. கே. 47 வுடன்,
ஏன் இன்னமும் ஒரு
தெய்வத்தைப் படைக்கவில்லை,
மனிதன்???????????

Thursday, August 4, 2011

" ஒரு சிகரெட்டின் கேள்வி?’’


என் உயிரினும் மேலான இனிய உலக மக்களே

என்னை எறிவீர்களா???????
அல்லது,
என்னுடன் எரிவீர்களா!!!!!

இப்படிக்கு,
xxxx

Tuesday, August 2, 2011

காத்திருத்தல்!!!

” இது வாணாம் போ ”
சின்னஞ்சிறு குழந்தையால்
புறந்தள்ளப் பட்ட அதற்கு
அழக் கூடத் தெரியவில்லை..
அதனால்,
நிராகரிக்கப் பட்ட அது,
இன்னொரு குழந்தைக்காக,
காத்துக் கொண்டு இருக்கிறது,
பொறுமையாய்........

Saturday, July 30, 2011

மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!


ரொட்டீனாகப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் முதலில் பல் வலி வரும்..அதை rupar, அல்லது zupar போட்டு ஓரளவு சமாளிப்பேன்.மாத்திரை ஜாஸ்தி வாங்க மாட்டேன்..மூன்று தான் வாங்குவேன்..அதற்கு முடியாமல் போனால் தான், டாக்டரிடம் போவேன்..இந்த மாத்திரை ப்ளஸ் கார்கில் (அதாவது உப்பு வென்னீர் போட்டு கொப்பளிப்பது) செய்து சமாளித்து விடுவேன்.
அதிலிருந்து தப்பித்து விட்டால்,அடுத்து வருவது வயிற்று வலி! முன்னே மாதிரி காரம் எல்லாம் சாப்பிட முடிவதில்லை..ஆந்திரத்து சகோதரர்களுடன் ஊறுகாயை பச்சிடி என்று செல்லப் பேரிட்டு கபளீகரம் பண்ணிய நாட்களெல்லாம் GONE! ஹோட்டலுக்குச் சென்றால், சர்வருக்கு போதுமான டிப்ஸ் கொடுத்து, எங்கள் டேபிளில் சாம்பாரை வாளியுடன் பக்கத்தில் வைத்துக் கொள்வோம். நாங்கள்....இப்போது எல்லாம் போய் விட்டது..வயிற்றை கடபுடா பண்ணினால் கை வைத்தியம் தான்.கொஞ்சம் ஜீரகத்தை மெல்வேன்.அது அகத்தை(வயிறை!) சீராக்கி விடும்! இருக்கவே இருக்கிறது இஞ்சிச் சாறு..அல்லது சுண்டைக் காய் சூரணம்!அன்று மெனுவே தயிர்சாதமும், நார்த்தங்காய் ஊறுகாயும் தான்.வயிறு ஆட்டோமேட்டிக்காக சரியாய் போய் விடும்..டாகடரிடம் இதற்காக போய் அவருக்கு அனாவஸ்யமாக எல்லாம் தொந்தரவு கொடுக்க மாட்டேன்!
எனக்கு டாக்டர் என்றாலே அலர்ஜி!அதை விட அலர்ஜி இந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக் காரர்கள்! டாக்டரிடம் சாதாரண தலைவலிக்குப் போனால், உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்று தான் ஆரம்பிப்பார்கள்!(எனது followers யாராவது டாக்டராக இருந்தால் மன்னிக்கவும்! நான் சொல்வது எதுவும் உங்களுக்குப் பொருந்தாது.அது கண்டிப்பாக உங்களைத் தவிர்த்துத் தான்!!)ஆனால் இந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக் காரர்கள் இருக்கிறார்களே அவர்கள் ... அப்பப்பா..எடுத்த உடனேயே”..ஸார்...உங்களுக்கு ஏதாவது திடீரென்று..”என்று தான் அபசகுனமாக ஆரம்பித்துத் தொலைப்பார்கள்! இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்காரர்களைப் பார்க்கும் போது அந்த எமன் கூட தேவலாம் போல இருக்கிறது! அவன் ஒரு தடவை தான் உயிரை எடுப்பான்!
சரி..சரி..விஷயத்துக்கு வருவோம்..இந்த பல் வலி..வயிற்று வலி..இது ரெண்டும் போய்ச் சேர்ந்த சில நாட்களில் வாழ்க்கையே போரடித்துப் போனால் என்ன செய்வது? அதற்குத் தான் இருக்கவே இருக்கிறது மூட்டு வலி! .வாராது வந்த மாமணி போல் சமயத்தில் வரும்!மூட்டு வலியை அவ்வளவாய் நான் பொருட்படுத்துவதே இல்லை..காரணம் கை வைத்தியத்தாலே காலை சரிப் படுத்திக் கொண்டு விடுவேன்...தினம்..தினம் கால் மூட்டுகளில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் மூட்டு வலி போய் விடுமாம்..யாரால் முடிகிறது, அந்த காரியம்!அதை சட்டை பண்ணாமல் விட்டு விட,அது அவ்வப்போது வந்து நானும் இருக்கிறேன் என்று சொல்கிறது..அதுவும் பல் வலி போல் தான்! முடியாமல் போனால் தான் டாக்டரிடம் போவேன்..டாக்டரும் ரொம்பவும் பக்கத்தில்... கால் கோடியில் தான் இருக்கிறார்!
அது சரி..தலைப்புக்கும் உன் வலிகளுக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்பீர்கள்..அதை கடைசியில் சொல்லலாம் என்றால் அதைச் சொல்ல முடியாமல் போய் விடுமோ என்கிற பயத்தில் இப்போதே சொல்லி விடுகிறேன்...மும்தாஜும் என்னைப் போல் மூட்டு வலியால் ரொம்பவும் சிரமப் பட்டவளாம்.மஹாராஜா ஷாஜஹானுக்கு எவ்வளவு கருணை உள்ளம் பாருங்கள்..அந்த அழகு ராணி கஷ்டப் படக் கூடாது என்று தான் தாஜ்மஹாலில் குறுகலாய் படிகள் வைத்தானாம் என்று ஒரு செவி வழிச் செய்தி!
இப்படித் தான் ஒரு நாள் என் கை வைத்தியத்திற்கு கேட்காமல் போகவே, டாக்டரிடம் போனேன்!
மூன்றாவது டோக்கன் தான்....முப்பது நிமிஷங்களில் டாக்டர் ரூமில் நான்!
டாக்டர்: முன்னாடியே வந்திருக்கீங்களா?
நான் : மூன்று மாசம் முன்னாடி வந்திருக்கேன்.
( லாப்டாப்பில் ஏதோ பார்க்கிறார்...இப்போதெல்லாம் எந்த டாக்டர் ஸ்டெத் வைத்துக் கொள்கிறார்? எல்லாமே லாப்டாப் தான்!)
டாகடர் : ( தலையை தூக்கி) என்ன பண்றது?
நான் : மூட்டு வலி டாக்டர்.
டாக்டர் : எத்தனை நாள்?
நான் : ஒரு வாரமா..
டாக்டர் : வெயிட் பார்க்கலாமா?
( பார்த்தார்...எழுபத்தி நான்கு கிலோ!)
டாக்டர் : வெயிட் கொஞ்சம் குறைக்கணும்..இது ஓவர் வெயிட்..இன்னும் ஐந்து கிலோ கூடினால் ‘ஒபிசிடி’ ஆயிடும். அதனால...
நான் : அதனால?????
டாக்டர் : பால் சேர்த்துக்கக் கூடாது.....
நான் : சரி டாக்டர்..
டாக்டர் ; அரிசி சாதத்தை குறைக்கணும்..கோதுமை சேர்த்துக்கலாம்.. நைட் சப்பாத்தி எடுத்துக்குங்க...எல்லாம் அளவு குறைச்சலா இருக்கணும்..
நான் : சரி..சப்பாத்திக்கு உருளைகிழங்கு மஸால் தொட்டுக்கலாமா?
டாக்டர் : கூடவே..கூடாது..உருளைக்கிழங்கை அடியோட மறந்துடணும்..டால் சைட் டிஷ்ஷா சேர்த்துக்கலாம்..
நான் : (மனத்துள்>>உருளைகிழங்கு மேல் உயிரையே வைச்சிருக்கேன்..இப்படி தொடவேக் கூடாதுங்கறாரே..) சரி டாக்டர்...
டாக்டர் : அப்புறம் அந்த வாழைக்காய்...
நான் : போச்சுடா?
டாக்டர் : எண்ணெய்யில் பொரிச்சது எதையும் தொட்டுக் கூட பார்க்காதீங்க..கரு வடாத்தையெல்லாம் கட்டோட மறந்துடணும்..
நான் : அடக் கண்றாவியே!
டாக்டர் : இந்த மாத்திரையை எழுதித் தரேன்..இரண்டு நாளைக்குப் போட்டுக்குங்க..
அப்புறம் இரண்டு நா கழிச்சு வாங்க..சில எக்ஸர்ஸைஸ் சொல்லித் தரேன்..
நான் : வரேன், டாக்டர்.
நான் ஏன் அங்கு போறேன்? மூட்டு வலியே தேவலை என்ற முடிவுக்கு வந்து மூன்று நாட்களாகிறது!!!!!

Wednesday, July 27, 2011

பகைவனுக்கும் அருள்வாய்!!!ரஃப்பான நம் பக்கத்து வீட்டில்,
ஹைனா ரப்பானி!!!
அன்பு ததும்பும் கண்கள்..
அறிவுச் சுடரென முகம்..
பெண்மையை போற்றுதும்!
பெண்மையை போற்றுதும்!!
பெண்கள் பேசட்டும்..
பெண்களே பேசட்டும்..
அன்பு அங்கு பொங்கட்டும்...
பண்பு கொஞ்சம் பரவட்டும்...
இரக்கம் எழும்பட்டும்..பிரச்னையின்,
ஆணிவேரையே அவர்கள்
அசைத்திடுவர்
தம் ஆற்றலிலே..
நட்பு எங்கும் பெருகட்டும்..
வன்முறையும் ஒழியட்டும்..
பயங்கரவாதமெனும் பெருஞ்சுடர்..
பைய..பைய...
அணையட்டும்...
வளமை நம்முள் பெருகட்டும்..
நம்மை பிடித்த அந்த பிசாசு,
நன்றாக ஓடட்டும்!!
ஆசியா கண்டத்தில்..
அற்புத ஜோதியாய்,
பாரதம் மிளிரட்டும்...
அதன் புகழ்
பாரெங்கும் பரவட்டும்!!!

Sunday, July 24, 2011

கர்ச்சீஃப் காதல்!!!!!!


மக்குப் பிளாஸ்திரிக்கு,
பக்கத்து வீட்டுப் பெண் பணிவுடன் எழுதிக் கொள்வது. நான் எங்கள் வீட்டுக் கொடியில் உலர்த்திய என்னுடைய கர்ச்சீஃப்பைக் காணவில்லை.உங்கள் வீட்டில் தான் யாரோ மறதியாக எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள். திருப்பி அனுப்பவும்.
இப்படிக்கு,
அபீதா.
அன்புள்ள அபீத குஜாம்பா அவர்களுக்கு,
கர்ச்சீஃப்பா...யாரிடம் கேட்கிறீர்கள் கர்ச்சீஃப்.. பருத்தி பறித்து வந்தீரா? துணி நெய்து கொடுத்தீரா..?எதற்குக் கேட்கிறீர் கர்ச்சீஃப்? கப்சிப்!!
(பி.கு.: “பாண்ட் எய்ட்” கம்பெனியில் வேலை செய்வதால் “மக்குப் பிளாஸ்த்திரி“ என்று என்னைக் கூப்பிட வேண்டாம். இதோ என்னைப் பற்றிய “பயோ டேட்டா”)
பெயர் : கணேஷ்.
உயரம் : ஆறு அடி ஒண்ணரை அங்குலம்.
தொழில் : மெடிக்கல் ரெப்.
சம்பளம் : கிட்டத் தட்ட ஆயிரத்து ஐநூறு!
( வாவ் என்று வாயைப் பிளக்காதீர்கள்!)
வயது : இருபத்தி எட்டு
குறிப்பு : இன்னும் திருமணம் ஆகவில்லை :(
அன்புடன்,
கணேஷ்.
கணேஷுக்கு,
உங்கள் காயலாங்கடை கட்டபொம்மன் வசனமெல்லாம் எனக்கு எதற்கு? நீங்கள் “பாண்ட் எய்ட்” கம்பெனியில் வேலை பார்த்தால் எனக்கு என்ன? ”பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸி”ல் வேலை பார்த்தால் எனக்கு என்ன? எனக்கு தேவை என்னுடைய தொலைந்து போன கர்ச்சீஃப்! மரியாதையாய் கொடுத்து அனுப்பவும்!
பி.கு.: அபீதா என்று கெஜட்டில் பெயரை மாற்றி ஐந்து வருடங்களாகி விட்டது.இனியும் பழைய பெயரில் கூப்பிடாதீர்கள்...
விசும்பலுடன்,
அபீதா.
அன்பே அபீதா,
அழாதே! எனக்கு சத்தியமாக உன் பெயர் தெரியாது.உங்கள் வீட்டு வாண்டுப் பயல் தான் அவ்வாறு சொன்னான். நிற்க..எங்கள் வீட்டில் மேற்படி கர்ச்சீஃபை யாரும் மறந்து கூட எடுத்துக் கொண்டு வரவில்லை..திருட்டு குணம் எங்களுக்கு கிடையாது.
இப்படிக்கு,
கணேஷ்.
ஐயோ,
உங்களை யார் இப்போது திருடன் என்று சொன்னது? உங்கள் வீட்டில் எங்காவது தவறுதலாக விழுந்திருக்கும்..கொஞ்சம் தேடித் தான் பாருங்களேன்..ப்ளீஸ்..அன்பே..கின்பே என்று எழுதாதீர்கள்..அண்ணாவிடம் சொல்லி விடுவேன்..ஜாக்கிரதை!
எச்சரிக்கும்,
அபீதா.
நச்சரிக்கும் அபீதாவிற்கு,
உங்கள் கர்ச்சீஃப் எங்கு தொலைந்து போயிருக்கும் என்று எனக்குத் தெரியாது..எப்படியும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் (ஸாரி.. டாக்டர்களிடம் பழகி..
பழகி..எதற்கும் இருபத்தி நான்கு மணி நேரம் வாய்தா கொடுத்து பழக்கமாகி விட்டது!)கர்ச்சீஃபைத் தேடித் தருகிறேன். கவலை வேண்டாம்.அண்ணாவிடம் சொல்லி விடுவேன்..மன்னியிடம் சொல்லி விடுவேன் என்ற பயமுறுத்தல் எல்லாம் என்னிடம் வேண்டாம்.. நான் ஒன்றும் சின்ன பப்பா இல்லை!
வீரன்
கணேஷ்.
கணேஷ் என்ற வீரருக்கு,
உங்கள் பிரதாபத்தை எல்லாம் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்..எனக்கு என்னுடைய கர்ச்சீஃப் வந்தாக வேண்டும். அண்ணாவிடம் சொல்ல மாட்டேன்..சும்மா உங்களை பயமுறுத்தினேன்..அவ்வளவு தான்..
இப்படிக்கு,
அபீதா.
அபீதா அம்மையாருக்கு,
கர்ச்சீஃப்..கர்ச்சீஃப்..கர்ச்சீஃப்....ச்சே!!! எப்பப் பார்த்தாலும் கர்ச்சீஃப் தானா? இவ்வளவு ’சீப்’பாக நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்று எனக்கு தெரியாது. போலீஸ் நாய் போல் மோப்பம் பிடித்துக் கொண்டு போனதில் மூக்கை சுவரில் இடித்துக் கொண்டு ரத்தம் வந்தது தான் மிச்சம்..ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்......சே!
இனி மருந்துக்குக் கூட உங்கள் வீட்டுப் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்!
நஷ்ட ஈடு கோரும் நண்பன்,
கணேஷ்.
கணேஷ் ஸாருக்கு,
மூக்கிலிருந்து ரத்தம் வருகிறதா? சாரி..மன்னித்துக் கொள்ளுங்கள்..எவ்வளவு கஷ்டம்..ஏதாவது தொலைந்து போனால்,அது கிடைக்கும் வரை எனக்கு நிம்மதி இருக்காது.கடவாய் பல்லில் மாட்டிக் கொண்ட கடுகு துணுக்கை எடுக்க நாக்கு எவ்வளவு கஷ்டப் படுமோ, அப்படி மனம் கிடந்து அலை பாயும்...பாவம் என்னால் உங்களுக்குத் தான்
எவ்வளவு சிரமம்.
அழுது கொண்டே,
அபீதா.
அபீதா,
கண்டேன் கர்ச்சீஃப்பை! மறுபடியும் அழாதே.இதோ..இதோ...உன்னுடைய கர்ச்சீஃப்பினால் கண்ணை துடைத்துக் கொள்..இதெல்லாம் ஒரு சிரமமா? அது சரி..சார்..மோரெல்லாம் ஒரே தடபுடலா இருக்கு?
அன்பன்,
கணேஷ்.
கணேஷுக்கு,
கண்டு கொண்டேன் கர்ச்சீஃப்பை! ரொம்ப சந்தோஷம்..வேறு ஒன்று தொலைந்து போய் விட்டது. கண்டு பிடித்துத் தருகிறீர்களா?
குறும்புடன்,
அபீதா.
அம்மா பரதேவதை,
ஆளை விடு..வேறு வீட்டுக்கு குடி மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அப்பாவி கணேஷ்.
அப்பாவி கணேஷுக்கு,
ப்பூ...இது கூட தெரியவில்லையா..இத்துடன் என் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன்..
உங்கள் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு திருவானைக் காவல் ஜோஸ்யரிடம் போய்ப் பார்க்கவும். எல்லாம் நல்ல படியாக முடிந்தால், நீங்கள் வாடகையே கொடுக்க வேண்டாம், இனிமேல்!
வேறு வீட்டிற்கு குடி போகும் ஆசையை விட்டு விடுங்கள்..உங்கள் சம்பளம் முழுவதும் வாடகையாகவே எடுத்துக் கொண்டு விடுவார்கள்..ஜாக்கிரதை!
என்றும் உங்கள்,
அபீதா.
அபிதா கண்ணிற்கு,
கண்ணே! மக்கு பிளாஸ்திரி என்று மறுபடியும் சொல்லாமல் சொல்லி விட்டாய்..
பரவாயில்லை..ஜாதகம் கிடைத்தது.இதோ..இப்போதே ஜோஸ்யர் வீட்டிற்கு போய் விட்டு உன் அப்பாவைப் பார்க்கிறேன், என் அம்மாவோடு! வேறு வேலை?
கிளம்பி கொண்டேயிருக்கும்,
கணேஷ்.
( நான் எழுதிய அச்சில் வந்த முதல் சிறுகதை இது! நவம்பர் 1984 குங்குமம் இதழில் வெளி வந்தது)

Wednesday, July 13, 2011

மூன்று...மூன்று....மூன்று...


( நான் பாட்டுக்கு ‘தேமே’ன்னு தான் இருந்தேன்..இந்த ரிஷபன் இருக்காருங்களே..அவுரு தான் என்ன உசுப்பேத்தி விட்டிட்டாருங்கோ..பாவம் ... நானில்லே!!! நீங்க தான்!)

1)விரும்பும் மூன்று விஷயங்கள்?
அ) டிரஸ் ஆ) சிட்ரஸ் ஃப்ரூட்ஸ் இ) க்ளாஸிகல் ம்யூஸிக்.

2) விரும்பாத மூன்று விஷயங்கள்?
அப்படி எதுவும் இல்லை.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
அ) பொய் ஆ)புறம் கூறுதல் இ) நரஸ்துதி

4) புரியாத மூன்று விஷயங்கள்:
அ) ஒன்றுக்கும் உதவாதவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவது !
ஆ) திறமைசாலிகளை மட்டம் தட்டுவது !!
இ) முன்னேற்றத்திற்கும், உழைப்பிற்கும் உள்ள தொடர்பின்மை!!!

5) மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
அ) கைப் பேசி;
ஆ) SOFTWARE ENGINEERING BY ROGER PRESSMAN;
இ) MAGIC JACK.

6)சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லது மனிதர்கள்?
அ) நான் ! ஆ) நானே !!இ) நானே தான் !!!

7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?அ) AICWA FINAL படிக்க ஆயத்தம் செய்து கொண்டு இருக்கிறேன்;
ஆ) நச்சென்று எல்லாரும் திரும்பி பார்க்கும் விதமாய் நான்கே நான்கு வார்த்தைகளில் ஒரு ஹைகூவிற்கு வார்த்தைகள் தேடிக் கொண்டு இருக்கிறேன்.
இ)ஒரு ட்வீட் போடப் போகிறேன் இன்று இரவிற்குள் ( ie., 13.07.2011)

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
அ)காளிதாஸனின் சாகுந்தலம் மூலம் சிதையாமல் சமஸ்க்ருதம் தெரிந்த பண்டிதருடன் ஒரு இலக்கிய உரையாடல் தினம் ஒண்ணரை மணி நேரம்..ஒரு வருட காலம்;
ஆ)என் குழந்தைகளுடன் ஒரு நாற்பது நாட்கள் WEST EUROPE TOUR;
இ) ஜெயகாந்தன்..தோப்பில் முகமது மீரான் ஆகிய இருவரிடமும் என் சிறுகதைகளைப் பற்றிய கருத்துக் கீறல்கள்;

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
அ)மோகன்ஜி, சுந்தர்ஜி,ஆர்.வி.எஸ்,ரிஷபன் ஆகியவர்களுடன் காரில் ஒரு கேரளா டூர்; ஆ)என்னைச் சுற்றி ஒரு சந்தோஷ அலை எப்போதுமே சுற்ற வைத்துக் கொண்டிருத்தல்;
இ) நாம் இழந்த கூட்டுக் குடும்பம் பற்றி பத்தே..பத்து நிமிடத்தில் ஒரு ART FILM மிக..மிகக்குறைந்த வசனங்களுடன்!!

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
அ)உறவுகளின் துயரம்; ஆ) தற்பெருமை இ)பிழையான தமிழ்.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
அ) எளிமை; ஆ) அடக்கம் இ) ஸ்திதப்ரக்ஞம்.

12) பிடித்த மூன்று உணவு வகை?
அ) பழைய சாதம்-தொட்டுக் கொள்ள எரிச்சக் குழம்பு;
ஆ) நெய்முறுகலுடன் முருங்கக் கீரை அடை+ மிளகாய்ப் பொடி எண்ணெய்;
இ) ஐயங்கார் புளியாதரை+உருளைக்கிழங்கு கறி+ கருவடாம்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
அ)தண்டபாணி தேசிகரின் ’என்னப்பனல்லவா’..
ஆ)’பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா?’
இ)’அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேண்டும் கேளம்மா?’
14) பிடித்த மூன்று படங்கள்?
அ)கெளவரம் ஆ)வியட்னாம் வீடு இ) புதிய பறவை

15)இது இல்லாமல் வாழ முடியாதென்று சொல்லும்படியான மூன்று விஷயங்கள்?
அ) சோப்பு; ஆ)சீப்பு ; இ) கண்ணாடி.
16)வாழ்வின் லட்சியங்கள்..
அ) பெற்றோரை ஒவ்வொரு கணமும் சந்தோஷமாய் வைத்துக் கொள்ளுதல்;
ஆ) பெரியவள் நோபல் பரிசு வாங்க வேண்டும்;
இ) சிறியவள் HARVARD ல் STRATEGIC MANAGEMENT ல் P.hd. (ரொம்ப பேராசையோ?)
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
அ) ஹரிணி ஆ) அப்பாத் துரை இ)பாஸ்டன் ஸ்ரீ ராம்!

Thursday, July 7, 2011

அங்கார...இங்கார.....(3)


கடிதத்தை வார்டன் படித்து முடித்ததும், ஒரு கனத்த மெளனம்!
அது ஒரு ஐந்து வினாடி..
ஐந்தே வினாடி தான்!
அதை பிச்சுவையர் கலைத்தார்.
பிறகு ஒவ்வொருவராய் பேச ஆரம்பித்தார்கள்...
”...பாவம், இந்த வயசுல, இப்படி ஒரு ஏமாற்றம் கூடாது!”-ஒருவர்.
“நம்பிக்கைத் துரோகமில்லையா?” - இது இன்னொருவர்.
“பெண்டாட்டி செத்துப் போனவுடனே என்ன பண்ணுவான், மனுஷன்..அதுவும் அவ்வளவு பெரிய வீட்டில..வீட்டின் ஒவ்வொரு அசைவும் அவங்க ஞாபகமா இருக்கும் போது...”
“ பையன் குடும்பம் வந்தது...கடைய வித்த பணத்தை டெப்பாசிட்டா வைச்சிருந்தார்..அதை கொடுத்ததோட நிறுத்தியிருக்கலாம்..இத்தனைக்கும் பாட்டி பேரைக் கூட வைக்கலை, பேத்திக்கு”.
“ பையன் ஏதோ பிஸினஸ் பண்றேன்னு கேட்டதுக்குத் தானே கொடுத்தாரு?”
” ஆமா....மாம்....’இப்ப கம்பெனி வேலையில நான் இல்ல..சொந்தமா சிலிக்கன் வேலில, பிஸினஸ் ஆரம்பிக்கப் போறேன்னு கேட்டதுக்குத் தான் கொடுத்தார். நீங்க சொன்னா மாதிரி அத்தோட நிறுத்தியிருக்கலாம்”
”அசட்டுத்தனம் பண்ணிட்டார்”
“அப்படின்னு சொல்ல முடியாது..அந்த சமயத்தில என்ன தோணிச்சோ தெரியல...பையனை இனிமே, எப்ப பார்ப்போமான்னு ஆயாசமா இருக்கும்.. அதனால நாம நல்ல நிலையில.. அதாவது.. நம்ம உடம்பு நல்ல நிலையில இருக்கும் போதே. வீட்டை பையன் பேருக்கு ரிஜிஸ்டர் பண்ணியிருக்கலாம்னு தோணியிருக்கும். அதனால் மாற்றிக் கொடுத்திருப்பார்..”
”அது தப்பில்லையே..எல்லாரும் பண்றது தானே அது!”
“ஆமாம்...ஆமாம்..அதுக்காக, ’அப்பா நாங்க ஊருக்குப் போனவுடன் நீ இங்கே தனியா இருக்க வேண்டாம். உனக்கு உடம்புக்கு ஏதாவது வந்தாக்கூட என்னால அங்கேர்ந்து உடனே வர முடியாது..அதனால, இரண்டு நா கழிச்சு இந்த வண்ணாரப் பேட்டை கடைசீல, ஒரு ‘ஓல்ட் ஏஜ் ஹோம்’ இருக்கு..அதில போய் ’ஜாய்ன்’ பண்ணிடு.. நான் அதுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டேன்..சாவியை நாடார் கடையில் கொடுத்துட்டு போ...இந்த வீட்டை, வாடகைக்கு விட்டுடலாம்..ஆளை நானே ஏற்பாடு பண்ணிட்டேன்..’ன்னு பையன் உடனேயே சொல்லியிருக்கவும் வேண்டாம்...இவரும்,’பரவாயில்லையே..பையன் நல்லா ’திங்க்’ பண்றானேன்னு சந்தோஷப் படவும் வேண்டாம்..”
“ஆமா...ம்”
“ இவரும், அவங்க போன கையோட, நம்ம விடுதிக்கு வந்திருந்தா, நல்லா மணக்க மணக்க ...இருந்திருப்பாரு..ஹூம்....பாழும் விதி....”
“ கரெக்டா சொன்னீங்க..இவர், அவங்க அமெரிக்கா போனதும், உடம்பு சரியில்லாம படுக்கணுமா...பேச்சு மூச்சில்லாம இருந்தவரைப் பாக்க நாதி இல்ல...பத்து நாள் கழிச்சு, கண் முழிச்சுப் பார்த்தா..திடீரென்று ஒரு லாரி நிறைய சாமான்கள் வந்திறங்க..இவரு நினைச்சிருக்காரு.. நம்ம பையன் வாடகைக்கு ஏற்பாடு பண்ணிண ஆள் அவங்க தான்னு ”
“ ஆனா, வந்தவங்க...இவரையும்...இவரோட முண்டாசையும்..திண்ணையில கிடந்த அந்த கயிற்றுக் கட்டிலையும் பார்த்துட்டு, ’வாட்ச்மேன் நாங்க வீடு வாடகைக்கு வல்ல..உங்க எசமான் எனக்கு வீட்டை வித்துட்டாரு...இத்தனை நாள் பார்த்துக் கொண்டதிற்கு நன்றி..இந்தாங்க நூறு ரூபாய்..இனிமே எங்களுக்கு ஆள் வேண்டாம்னு சொன்ன வுடனே....”
“பாவம்..என்ன ஒரு ’ஷாக்’காயிருக்கும்! அந்த ஏமாற்றம் தான் மனசு ஒடிஞ்சிருக்கும் போல..”
“ நம்பிக்கைத் துரோகமில்லையா இது?பையன் அவரை ‘கன்ஸல்ட்’ பண்ணியிருந்தாக் கூட’ஓக்கே’ன்னு தான் சொல்லியிருப்பாரு..ஆனா, இப்ப ஏமாந்தாப் போலத் தானே ஆச்சு!”
“ அதான் நேற்று நடு ராத்திரி நினைச்சு.. நினைச்சு..அழுதிருக்கார்..பாவம்!”
” நம்மோட முடிவு நெருங்கிடுச்சுன்னு தோணியிருக்கும்..அதான், அந்த லெட்டர் கடைசியில்,எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா..பையனுக்குத் தெரியப் படுத்த வாணாம்..வீணாக் கஷ்டப் படுவான்னு எழுதியிருக்கார்...தன் மரணத்தில கூட பையனுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு என்ன ஒரு நல்ல எண்ணம்?..”
“ பாவம்.. நல்ல் ஆத்மா..”
“ அது சரி..இப்ப என்ன பண்றது?”
“ அதான் அவரோட கடைசி ஆசைப் படி, மெடிக்கல் காலேஜ்க்கு ‘டொனேட்’ பண்ணிட வேண்டியது தான்..”
வார்டன் அடுத்து நடக்கும் விஷயங்களை ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வர அவர்கள் ஒவ்வொருவரும் ’அவரை’..சாரி..அந்த ‘பாடியை’ ’டிஸ்போஸ்’ பண்ணும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தார்கள்..
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன்!