Tuesday, March 27, 2012

கிணறு..!!!


பேருந்திலிருந்து
இறங்கியவுடன்
பொடி நடை நடந்தால்,
தெரு வந்து விடும்..
வீட்டிற்குப் போவதற்கு முன்,
அந்த கிணற்றுப் பக்கவாட்டுச்
சுவற்றில் நண்பர்கள்..
“ கோட்டைலேர்ந்து வரே..
என்ன வாங்கிண்டு வந்துருக்கே?”
பையில் உள்ள வேர்க்கடலை..
வெள்ளரிப் பிஞ்சு, பஜ்ஜிப்
பொட்டலங்கள் அபேஸ்!
கொஞ்சம் சினிமா..கொஞ்சம் அரசியல்..
அழகாகப் போகும் மாலை நேரங்கள்!
ஆனால், இப்போது..
இருபது வருடம் கழித்து,
சென்றால்...
தொலந்து விட்டது எங்கள் ஊர்..
நண்பர்கள் டி.வி.பெட்டிகளில்
புதைந்து கொள்ள,
கிரிக்கெட் விளையாடிய தோப்பு,
கைக்கெட்டா விலை நிலங்களாய்
உருமாற,
எங்கே ஓடிப் போய் ஒளிந்து கொண்டதோ,
எங்கள் அக்ரஹாரக் கிணறு!

Saturday, March 24, 2012

விழிக்குத் துணை !!!!!

“கண்ணிலான் பெற்றிழந்தான்,என உழந்தான்” என்கிறான், கம்பன்..இராமபிரான் காட்டுக்குப் போகிறேன் என்று சொல்லும் போது,தயரதனுக்கு பெற்ற கண்கள் போனது போல துன்பம் இருந்ததாம்..
வள்ளுவனும் கண்களைப் பற்றி நிறைய எழுதி விட்டான்.
“கண்ணானால் நான் இமையாவேன்” என்றான், அறுபதுகளில் ஒரு கவிஞன்!
“கண்கள் இருந்தால்..” என்று கேட்கிறான், இன்றைய கவிஞன்!
ஆக,
ஐம்புலன்களில் கண் என்பது இன்றியமையாதது..அது மட்டும் இல்லை என்றால்?
அது எத்தனை கஷ்டம்?
கண் தானம் என்பது எவ்வளவு உயர்ந்த விஷயம்?
..எங்கள் அலுவலகத்தில் செல்வராஜ் என்கிற மனிதர் இருக்கிறார்..அவர் பெயரே ”கண் தானம்” செல்வராஜ். எத்தனையோ மனிதர்களுக்கு கண் தானம் செய்வதின் அவசியத்தை எடுத்துரைத்திருக்கிறார்..அவரால் பயன் பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ!இறந்தவர்கள் எத்தனையோ பேர் இருப்பவர்களைக் கொண்டு இவ்வுலகைப் பார்க்கிறார்கள் என்றால் அதற்கு அசைக்க முடியாத கிரியா ஊக்கி நம் செல்வராஜ்!
அவருடன் ஒரு பத்து நிமிடம் பேச வாய்ப்பு கிடைத்தது..செயற்கரிய செய்து பெற்ற இம்மானுடப் பிறப்பை எவ்வளவு அழகாக அவர் உபயோகப் படுத்திக் கொண்டு வருகிறார் என்று அறிந்து அசந்து போய் நின்றோம், நாம்!

“ஆனந்தா, என் கண்ணையே ஒப்படைக்கிறேன்” என்று ஒரு படத்தில் சிவாஜி ஜெமினியிடம் சொல்வார்..அது போல, ”என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்று நம்மிடம் சொல்லி விட்டு ஒருவர் சிதம்பரத்தில் ஆனந்த கூத்தாடுகிறார்..மற்றவரோ நிம்மதியாக பாற்கடலில் பள்ளி கொள்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது எமக்கு!

கண்களைப் பெற்ற ஒருவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்களேன்..

கைகளில் டக்டக் கென்று ஒரு குச்சியைத் தட்டிக் கொண்டு செல்லும் அவஸ்தை இல்லை. ரோடில் போவோர்,வருவோரை வழி கேட்டு இனி வறுத்தெடுக்க வேண்டாம்..”என்ன பாவம் செய்தோம்,இப்படி ஒரு பிறவி பிறப்பதிற்கு?” என சுய இரக்கம் கொள்ள வேண்டாம்..
கண்கள் கொடுக்க நம் ‘கண் தானம் செல்வராஜ்” நம்முடன் இருக்கும்போது நாம் ஏன் கவலைப் பட வேண்டும்?

கழி வேண்டாம் கையில் யாரையும், இனி
வழி கேட்கும் விசனம் வேண்டா,’பூவுலகில்
பழி என் செய்தோம்?’என வருந்திடல் வேண்டா,
விழி தரும் செல்வன் ஈங்கிருக்குங்கால்!

Tuesday, March 20, 2012

பாரம்பரியம்!!


நூற்றி இருபது வருட பாரம்பரிய மிக்க ஜவுளிக்கடை கல்லாவில் அமர்ந்திருந்தார், முதலாளி தணிகாசலம்.
மூட்டைப் பூச்சி கடித்தது கையில்! தட்டினார்..தப்பி விட்டது..கை எரிச்சலில் டேபிளில் கையை தேய்த்தார்..எரிச்சல் அடங்க வில்லை..அதை விட கண்களில் எரிச்சல்..
நேற்று ஒரு சாதாரண ப்ளவுஸ் மேட்சிங் கடை போட்டவன், ஷர்ட்..பிட்டு என ஆரம்பித்து இரண்டு பக்கத்து பக்கத்து கடைகளை வாங்கிப் போடும் அளவிற்கு வளர்ந்து விட்டான்.. ..அந்த எரிச்சல் தான்!
“ஏலே..கல்லாவை பார்த்துகலே..தோ வா..ரே...ன்”
வீட்டுக்கு ஓடினார்..முகம் கொள்ளுமளவு உள்ள மீசையை மழித்தார்..ஒரு சிவப்பு காசித் துண்டை முண்டாசு போல கட்டி,முகத்தை முக்கால் வாசி மறைத்துக் கொண்டு சடாரென எதிர்க் கடையில் நுழைந்தார்..
செம கூட்டம்..அந்த ஜனத்திரளிலும் அவரை வரவேற்றான் ஒரு பையன்..
” ... வாங்க அப்பூ..என்ன வாங்கறீக..டேய் சாருக்கு சேர் போடு”
இவர் கடையில் ஒருவனிடம் ஐந்து கஸ்டமர்ஸ் வியாபாரம் செய்தால்,பக்கத்துப் பையன் தேமேனென்று நின்று கொண்டிருப்பான்..க்ரைம் நடந்தாலும் நம்ம ஜூரிஸ்டிக்‌ஷன்ல வராத போலீஸ் ஸ்டேஷன் போல்!
தணிகாசலத்திற்கு வியர்த்துக் கொட்டியது..பய புள்ளக்கி நம்மள தெரிஞ்சிடுத்தோ..
” உங்களைத் தெரியாதா ஐயா...உங்க தலைப்பா காட்டிக் கொடுத்துடுச்சே.. நீங்க நம்ம திருநெல்வேலி பக்கம்னு.. நாம் கூட அம்பாசமுத்திரம் தான்”
“அப்பாடா..” பெருமூச்சு விட்டார் தணிகாசலம்.
தாகத்திற்கு ஜில்லென்று ஐஸ் வாட்டர்..
கனிவான உபசரிப்பு..
நூறு ரூபாய்க்கு வாங்கலாம் என திட்டம் போட்டவர் பட்ஜெட் அந்த கடைக் காரனின் உபசரிப்பில் ஐநூறாக எகிறியது..
போதாதிற்கு கட்டை பை ..இவர் பார்த்த பார்வையில், இவரின் விருப்பமறிந்து இன்னொரு கட்டைப் பை வேறு!
இவர் கடையில் ஆயிரம் ரூபாய்க்குத் தான் அந்த கட்டைப் பை..அதுவும் கஸ்டமர் கேட்டால் தான் தருவார்கள்!
விஷயம் புரிந்து விட்டது!
எதிர்க் கடைக் காரனுடன் மல்லுக்கு நின்று தன் எனர்ஜியை வீணடிக்க விரும்பவில்லை..
மூட்டைப் பூச்சியைத் தவிர்க்க வீட்டை மாற்றுவது போல்,அடுத்த ஐந்தாம் நாளே, நூற்றி இருபது வருட பாரம்பரிய மிக்க ஜவுளிக்கடையை அடுத்த சந்திற்கு மாற்றி விட்டார்.

Thursday, March 15, 2012

என்ன ஆயிற்று இந்த அப்பாவிற்கு?


செங்கல்வராயன் பெரிய தொழில் அதிபர்.அவர் பெயரில் ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்..ஒரு இஞ்ஜினீயரிங் காலேஜ் எல்லாம் இருக்கிறது..இருந்து என்ன பயன்? அவரின் ஒரே வாரிசு..அவர் பெண்... படிப்பது பாடாவதி அரசு கல்லூரியில்!இத்தனைக்கும் அவளுக்கு எல்.கே.ஜி.யிலிருந்து ப்ளஸ் டூ வரை ஊரிலேயே பெரிய கான்வெண்ட்டில் தான் சேர்த்தார்கள்..
இப்போது என்ன வந்து விட்டது அவருக்கு?
ஒரு சாதாரண கல்லூரியில் சேர்த்து விட்டார். அதுவும் அவராக சேர்க்கவில்லை..இவள் வாங்கிய மார்க்குக்கு அந்த கல்லூரி தான் கிடைத்தது.அதையும் ” எனக்கு வேலை இருக்கிறது.. நீயே போய் சேர்ந்து கொள்..வேண்டுமானால், உன் அம்மாவை கூட்டிக் கொண்டு போ” என்று சொல்ல, தேஜா தான் வீம்பாக தானே அக்கல்லூரியில் சேர்ந்தாள்.
அவர் நினைத்திருந்தால், அவளை ஹார்வர்டில் சேர்த்திருக்கலாம்..அதில்லை என்றால், அவர் காலேஜிலேயே ஒரு நல்ல கோர்சில் சேர்த்திருக்கலாம்..அவ்வளவு பாசமாய் இருந்த அப்பா ஏன் இப்படி திடீரென்று மாறி விட்டார்?
எல்லாவற்றையும் விட இது தான் கொஞ்சம் ஓவர்..ஹாஸ்டல் செலவுக்கு முதல் இரெண்டு மாதம் சுளையாக மூவாயிரம் ரூபாய் அனுப்பியவர், நான்காம் மாதத்திலிருந்து வெறும் ஆயிரம் ரூபாய் தான் அனுப்புகிறார்..
என்ன ஆயிற்று இந்த அப்பாவிற்கு?
செமஸ்டர் லீவிற்கு வந்தவளுக்கு அப்பாவுடன் பேசவே பிடிக்கவில்லை.. அவரும் அவள் வந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..”வா” என்கிற ஒற்றைச் சொல்லோடு சரி!
முதல் வேலையாய் அம்மாவிடம் புலம்பி தீர்த்து விட்டாள்.
ஒரு சாவதானமான ஞாயிற்றுக்கிழமை!
நியூஸ் பேப்பருக்குள் தலையை புதைத்துக் கொண்டிருந்தார் செங்கல் வராயன்.
“ என்னங்க...உங்களுக்கே இது நல்லா இருக்கா? தேஜா நம்ம ஒரே பொண்ணு..அதை நம்ம காலேஜிலே சேர்க்கல..கேட்டா, அப்புறம் சொல்றேன்னு சொல்றீங்க..புள்ளையோட ரொம்ப பேச்சை குறைச்சுட்டீங்க..அதாவது பரவாயில்ல..செலவுக்கு பணத்தையும் வேற குறைச்சுட்டீங்களாம் ...தேஜா சொல்லி அழுதா..யாருக்காக நீங்க சேர்க்கப் போறீங்க? ஏன் இப்படி இருக்கீங்க..”
பொலுபொலுவென பிடித்துக் கொண்டாள், பார்வதி.
“பார்வதி நம்ம புள்ள மேல பாசம் இல்லாமலா இருக்கு எனக்கு? அளவுக்கு மேல அது இருக்கிறதினால தான் நான் இப்படி இருக்கேன்”
“என்ன சொல்றீங்க?”
“ நான் யார் ஒரு பெரிய பிஸினஸ் மேக்னட்.. நான் என்ன பிறவியிலேயே பெரிய பணக்காரனா? இல்லையே..எஸ்.எஸ்.எல்.ஸி ஃபெயில் ஆனதினால, வீட்டில யாருக்கும் சொல்லாம, திருட்டு ரயிலேறி பட்டணம் வந்து, படாத பாடு பட்டு இன்னிக்கி ஒரு பெரிய ஆலமரமா வளர்ந்து இருக்கேன்..இந்த ஆலமர நிழல்ல இன்னொரு ஆலமரம் வளராது..அதோட நிழல் அந்த செடியை வளர விடாது..அதனால தான், என் பொண்ணும் அவ சுயமா நிற்கணும்னு தான் பல்லக் கடிச்சுண்டு இப்படி இருக்கேன்..அவளும் என்னை மாதிரி பசியை உணரணும்..ஒரு ஆலமரமா வளருணும்னு நான் ஆசைப் படறது தப்பா, பார்வதி?”
”தப்பே இல்லை”
எதேச்சையாய் பக்கத்து ஹாலுக்கு வந்த தேஜா தனக்குள் சொல்லிக் கொண்டாள், தன் கண்களில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே...

Sunday, March 11, 2012

போகிற போக்கில்...!!!


ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஆயிரம் ஆண்களுக்கு, தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு பெண்கள் தான் இருக்கிறார்களாம்!
எந்த ஒரு ப்ராடக்டுமே, SCARCE ஆக இருக்கும் போது,அதற்கு DEMAND ஜாஸ்தி என்பது சாதாரண மார்க்கெட்டிங் தியரி! இதில் SCARCE ஐ விட DEMAND க்கு DEMAND ஜாஸ்தி! பாருங்களேன் SCARCEக்கு ஆறு எழுத்துக்கள் ஆனால், DEMANDக்கு வெறும் ஐந்து எழுத்துக்கள் தான்!
எதற்கு சொல்கிறேன் என்றால், காலையில் சாவதானமாக எழுந்திருந்து, பல் தேய்த்து (பல் தேய்க்கும் பழக்கம் இருந்தால்) காஃபி குடித்து, சோம்பல் முறித்து, ஹிண்டு பேப்பரை அதன் பன்னிரெண்டு பக்கங்களையும் அக்கு வேறு..ஆணி வேறாக ..அலசி, சலித்து,பார்த்து படித்து..ஆராய்ந்து பின் குளிக்கலாமா, வேண்டாமா என்று பூவா, தலையா வேறு போட்டு, குளிக்கப் போய், கொட்டு வாக்கில் ஷூ லேஸை மாட்டிக்கொண்டு, ‘என்ன டிஃபன் ரெடியா?’ என்று உள்ளே அதிகாரம் இடும் ஆசாமி நீங்களா இருந்தால், சாரி..மாற்றிக் கொள்ளுங்கள் ..உங்கள் ஆணவம்..ஆர்ப்பாட்டம் எல்லாம் இனி கொஞ்ச நாட்கள் தான்!
கல்யாணச் சந்தையில் ஆண்களின் ஜாதகங்கள் தேங்குகின்றன..இருபத்தி நான்கே வயதான ஆண் வரன் ஒன்று சும்மாக் கிடக்காமல் M.COM., MBA., MCA., ACA,AICWA,ACS, BGL என்று எல்லாம் படித்து விட்டு, மாதம் ஒன்றிற்கு சுமார் ஒரு லகரம் சம்பளம் வாங்கி கொண்டு, வருஷக் கணக்காக ஒரே ஒரு பெண்ணிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது!இதுவே இப்படி என்றால், சாதாரண குமாஸ்தாக்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை!
முதிர் கன்னிகள் போய் முதிர் காளைகள் கல்யாண சந்தையை முட்டுகின்ற காலம் இது! MATRIMONIAL ஐ PATRIMONIAL ஆக மாற்றப் போகிறார்களாம்!
சந்தையில் காத்துக் கொண்டிருக்கும் ஆண் வரன்கள் பெண் வரன்களை ஈர்க்க, கோலம், சமையல், சங்கீதம் என்று கற்றுக் கொள்கிறார்கள்...
வருடத்திற்கு இரண்டு மகளிர் தினங்கள் வரப் போகிறது!ஜாக்கிரதை!
நான் சொல்கிறது நூற்றுக்கு நூறு உண்மை..எப்படி சொல்கிறேன் என்றால், நம்ம நாராயண ராவே நான் சொன்னதை ஒத்துக் கொண்டு விட்டாராக்கும்...
எது சொன்னாலும் ’நாட் தட்’ என்று ARGUE செய்யும் எதிர் வீட்டு நாராயண ராவ் நான், ’பெண்களின் கை ஓங்கிக் கொண்டே போகிறது’ என்று சொன்னதிற்கு ”ஆமாம் ஓய், நீங்கள் சொல்வது ரொம்ப சரி’ என்று சட்டென்று, தன் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டே
ஒத்துக் கொண்டார்!
அப்போது அவர் தலை விண்ணென்று புடைத்துக் கொண்டு இருந்தது!!

Tuesday, March 6, 2012

நேர் நேர் பாமா....


மிருகக் காட்சி சாலையில்..
பட்ஜெட் வரப் போவதை,
ஞாபகப் படுத்தின,
வரிக் குதிரைகள்!
**************************
வரப் போகிறது தேர்தல்..
இதில்,
யாருக்குத் தேறுதல்?
யாருக்கு ஆறுதல்??
**************************
முற்பிறவியின் செயல்
இப்பிறவியில் தொடரும்
என்பது மூட நம்பிக்கை..
புத்தக மூட்டையை,
முதுகில் சுமக்கும், நம்
அத்தனை பிள்ளைகளுமா,
நத்தைகளாய் பிறந்திருப்பார்கள் ?
*****************************
# சித்திரை, வைகாசி
வீதி உலா வரும் சாமிகள்,
இப்பொழுது மாசியிலேயே,
வர ஆரம்பித்து விட்டன..
கர்ப்ப கிருகத்திலுமா
கரெண்ட் கட்?
******************************
அலகிட்டு வாய்ப்பாடு
கூறும் போது,
”நேர் நேர் பாமா”-என்றான்,
அந்த பாமாவைக் காதலித்தவன்!
*******************************
# “இனிப் பொறுப்பதில்லையண்ணே,
எரிதழல் கொண்டு வா”
விளக்கினை ஏற்றிடுவோம்!!
********************************
(பின் குறிப்பு: # “இறந்து போய் விட்ட இன்வெர்ட்டர்கள்” என்ற என் கவிதைத் தொகுப்பிலிருந்து..)

Friday, March 2, 2012

திருடா...திருடா........!!இந்த என்க்கெளண்டர் சமாசாரம் எல்லாம் இப்பத் தானே..அந்த காலத்துல நடந்த விஷயங்கள்...
நான் கேள்விப் பட்ட அந்த இரண்டு திருட்டுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
ஒன்று செவிவழிச் செய்தியாய் கேள்விப் பட்டது..அடுத்தது எங்கள் தாத்தா, அவர் பிறப்பதற்கு முன்னால் நடந்ததாம்..(அவர் பிறந்தது 1902ல்) சொன்னது....
முதலில் ‘செவி’க்கு வருவோம்!
ஆங்கரை கிராமத்து அக்கிரஹாரத்தில் ஒரு வயசான பாட்டி..அந்த பாட்டியின் பிள்ளைகளும்..பேரன், பேத்திகளும்..மும்பை, கல்கத்தா என்று சம்பாதித்து, பாட்டிக்கு அவர்களை வளர்த்த பாசத்திற்கு ஒரு அடையாளமாய், பணம் அனுப்பிக் கொண்டு இருக்க..பாட்டி அந்த பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதித்துக் கொண்டு..பாட்டிக்கு அந்த காலத்திலேயே கை நிறைய பென்ஷன்..இந்த பணம் உபரி வருமானமாய் சேர்ந்து கொள்ள..
இதை நோட்டம் போட்டான், ஒரு திருடன்.. நைசாய் ஒரு அமாவாசை அன்று,’தேட்டை’ போட தீர்மானித்து..சமையல் அறை வெளிச் சுவரில், கன்னக் கோலால் ஓட்டைப் போட்டான்..
அந்த நிசப்தத்தில் டொக் டொக் கென்று இரவு பன்னிரெண்டு மணி சப்தம் பாட்டியை எழுப்பி விட்டது..பாட்டிக்கு பாம்பு செவி..அரிக்கேன் லாந்தரை எடுத்து, அடுப்பை பற்ற வைத்தாள்..அது விறகடுப்பு..அந்த அடுப்பின் வாசலில், இலுப்பக் கரண்டியை சுட வைத்தாள்..திருடன்..கன்னம் போட்டு,..அதாவது சுவரில் தலையை நுழையும் அளவு ஓட்டை போட்டு..மெள்ள தலையை நுழைக்க..
சுரீரென்று கழுத்தின் மேல்..பக்கவாடு..கீழ் இங்கெல்லாம் நெருப்புக் கங்குகள் பட்டது போன்ற உணர்வு..
என்ன நடந்தது?
சுட்ட இலுப்பக் கரண்டியால், பாட்டி அவன் கழுத்துப் பகுதியில் மோஹன ராக வர்ணத்தை ..வரவீணா ம்ருது பாலி என்று ‘பிடில்’ வாசிக்க..
எதிர்பாராத இந்த தாக்குதலால், நிலை குலைந்த அவன் போட்ட கூச்சலில் அவனே மாட்டிக் கொள்ள.. ஊரே விழித்துக் கொண்டு அவனைப் பிடித்து ..போலீஸில் குடுக்க..
பாட்டியின் சமயோசித செயலுக்கு போலீஸ் மெடலுடன், ரொக்கமும் பரிசாகக் கிடைத்ததாம்!
அது சரி..பணம் பணத்தோடு தானே சேரும்!
அடுத்த செய்தி..எங்கள் தாத்தா சொன்னது, இது..
எங்கள் வம்சத்தில்..அதாவது தண்டவாள சுப்ரமணிய ஐயர்..இவர் எங்கள் பெரிய தாத்தா..அவரின் அத்தை ராத்திரி ஒரு மணிக்கு ஏதோ சத்தம் கேட்டு கொல்லைப் புறம் செல்ல..அங்கு ஒரு திருடன் எங்கள் அத்தை பாட்டிxபாட்டிxபாட்டியை மிரட்ட, அவர் ’அட..கட்டேலப் போறவனே’ என்று அலாக்காக அவனை தூக்கி வீட்டு உள் தூணில் கட்டி வைத்து ..சும்மா ரெண்டு தட்டு தட்ட..
மூன்றாவது தட்டுக்கு அந்த திருடன் இல்லையாம்!
பரலோகம் போய் விட்டானாம்!!
அந்த தோஷம் போக இவர்கள் ஏதோ யாகம் செய்தார்களாம்!
1896ல் இது நடந்ததாய் கேள்வி!
விண்ணை முட்டும் நிலையில் விலவாசி பறந்து கொண்டிருக்க, நாம் சம்பாத்தித்த பணம் எல்லாமே, வைசியருக்கும்...வைத்தியருக்கும்..அரசுக்கு வரியாகவும் போய்க் கொண்டிருக்கும் இந்த நாளில், திருடனுக்கு கொடுக்க என்ன இருக்கப் போகிறது..
துப்பாக்கி ரவைகள் தவிர...
பாவம் திருடர்கள்!!!