Thursday, March 31, 2011

அக நாற்பது (1)


(அக நானூறு,புற நானூறு போல், என் தமிழணங்கிற்கு அக நாற்பது, புற நாற்பது என இரு பாமாலைகள் தொடுக்க ஆசை..முடியுமா? இதோ முதல் இதழ்)

ஆள் தையிலே எனை மணந்த மணவாளன்,
மீள் துயிலில் எனை ஆழ்த்தி,புறம் ஏக,
தேன் சிந்தும் மலரிதென மயங்கிய வண்டு,
துயின்ற இதழ் இன்று ஈக்கள் மொய்க்க,
பத்து கழஞ்சு பொன் ஈட்ட பட்ட பாடு ...
பாழ் நிலத்தில் அதனால் ஏது பயனென்று
பார்த்தால் சொல், தோழி - சேர்த்த
பொருள் போதும்,சிக்கனமாய் வாழ்ந்து,இனி
அறத்தையும், இன்பத்தையும் ஒருங்கே
துய்த்திட வா,என் கண்ணாளா என
சொல்லடி பைங்கிளியே, பசலை வந்து,
பாழ் பட்டு நிற்கிறேனடி, சகியே...

Tuesday, March 29, 2011

டைவர்ஸ் துரைசாமி!!

” ஹல்லோ..துரைசாமி சாரா...”
“ ஆமா... நீங்க....”
” நான் தான் சார்..”
“ அட நீங்களா?, எப்படி சார் இருக்கீங்க?”
“ நல்லா இருக்கேன்... நீங்க?”
“ ஏதோ இருக்கேன்..”
“ உங்க எழுத்தப் பார்த்து ரொம்ப நாளாச்சு? ஏன் சார் எழுதலை?”
“ அதை கேக்கறீங்களா..அது ஒரு சோக கதை சார்..”
“ அந்த கதையை ப்லொக்கில எழுதுங்க, சார்..படிக்கிறோம் ”
“ கதையே அதைப் பற்றித் தான் சார்”
“ என்ன சார், அப்படி?”
” கம்ப்யூட்டர்ல கவுத்துக்கிட்டு என்ன பண்றீங்கன்னு வூட்ல டெய்லி திட்டு..ஏதாவது வருமானம் வந்தாலும் பரவாயில்ல..ஒரு பைசா ப்ரயோஜனமில்ல..என்ன ஒரேயடியா மூழ்கிப் போறீங்கன்னு..அப்படீன்னு டெய்லி சண்டை..போதாத குறைக்கு பொண்ணு வேற..அப்பா எனக்கு இது தான் ப்ரட்.லைஃப் ப்ரச்னை...ஒன் பொழுது போக்குக்கு சிஸ்டத்தை எடுத்துக்கிட்டா, என்னால எப்படி ப்ராஜக்ட் பண்ண முடியும்னு அவ கத்தல்...மெயில் செக் பண்றதுக்குக் கூட கெஞ்ச வேண்டியிருக்கு ”
“ அடப் பாவமே!”
“ அதை ஏன் கேக்கறீங்க...உணர்ச்சியைக் கொட்டி எழுதறோம்..உங்கள மாதிரி ப்லாக்கர்ஸ்கிட்டயிருந்து ஒரு ஷொட்டு கிடைச்சா, மனசுக்கு ஏக சந்தோஷம்..அது எவ்வளவு காசு கிடைச்சாலும் வராதுங்கறது யாருக்கும் தெரிய மாட்டேங்குது.”
“அதுக்காக எழுதறத விடாதீங்க சார்..உங்க விசிறி நான்”
“ என்ன பண்றதுன்னு தெரியலே..ஒவ்வொரு குடும்பத்தில எல்லாருமே எழுதறாங்க..அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்.அட்லீஸ்ட் அவங்க எழுத வேண்டாம்.. நாம எழுதறதை ரசிச்சாலே போறும்..இதனால வீட்டில நிம்மதி போயிட்டது...”
“ அடாடா..”
“ ரொம்ப கஷ்டமாயிருக்கு சார்...பொறுத்து பொறுத்துப் பார்ப்பேன்..முடியாம போச்சுன்னா..
டைவர்ஸ் பண்ணிடலாம்னு கூட தோணுது”
“சிஸ்டரையா?”
“சிஸ்டத்தை!”

Tuesday, March 22, 2011

ஜெயந்தி சிவக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்

(கவிதாயினி ஜெயந்தி சிவக்குமார் ஹைக்கூ கவிதைகளைப் படித்தேன்.அதில் உள்ள கருத்தாழம் என்னை மெய்சிலிர்க்க வைக்க, நம் மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)

**

மரங்களை விற்று,
அப்பா வாங்கினார்,
மின் விசிறி !!!

***

வீட்டிற்கு வந்த,
விருந்தாளிகளை,
விடியலில் எழுப்பியது,
கோழி ஒன்று,
நாம்
விருந்தாவோம்
என்று
அறியாமலேயே!!!

****

மழை வரம் வேண்டி,
பூஜை செய்தது,
இலைகளை உதிர்த்து,
மரங்கள்!!!!

*****

யார் கண் பட்டதோ?
சுக்கு நூறாய் உடைந்தது,
திருஷ்டிப் பூசணிக்காய் !!!!!

******

கடைசியில்,
கடவுள் கண் திறந்தார்,
சிற்பியின் உளியினால் !!!!

******

இஸ்திரி போடுபவரின்,
வயிற்றில்,
வறுமை ஒரு
கோடாய் இழுக்க,
துணிகளுக்கு,
கிடைத்தது,
கஞ்சி!!!!!

Friday, March 18, 2011

நான் அவனில்லை.....!

அந்த வழியாய் தான் எப்போதும் புருஷோத்தமன் ஆஃபீஸ் விட்டு வருவது வழக்கம். இன்றும் அவன் இருக்கிறானா என்று பார்த்தான். அனிச்சையாய் கை இடது பேண்ட் பாக்கெட்டில் சென்றது.நல்ல வேளை பேண்ட் பாக்கெட்டில் ஐந்து ரூபாய் ‘காயின்’ இருந்தது.
புருஷோத்தமனுக்கு பொதுவாக பிச்சைக் காரர்களைப் பிடிக்காது. அப்படியே ரொம்பவும் கெஞ்சினால்,ஒரு எட்டணா காசை தட்டில் போட்டு விட்டு அவன் திட்டும் திட்டு காதில் விழுவதற்குள் ஓடி விடுவான். இப்போது எட்டணாவும் இல்லை..பிச்சைக் காரர்களும் அவ்வளவாய் கண்ணில் படக் காணோம்.
..ஐந்து ரூபாய்...சும்மாவா..எவன் போடுவான்? ’சாமி தர்மதுரை நீங்க நல்லா இருக்கணும்’னு வாழ்த்தத் தான் போறான்....
’காயினை’ப் போட்டு விட்டு, புருஷோத்தமன் நகர,
”ஸார்”
.. அந்த கால எட்டணாவுக்கு உள்ள மதிப்பு தானா இப்ப் உள்ள ஐந்து ரூபாய் காயினுக்கு? திட்டப் போறானோ?
புருஷோத்தமனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.
“ என்னப்பா?”
“ ஸார் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.. நான் தரை வியாபாரிங்க..சினிமா பாட்டுப் புத்தகம் வியாபாரம் பண்றேன்..அந்த கால ’ப’ சீரீஸ் பாட்டுப் புத்தகங்கள் இருக்கு..
கண்ணதாசன்..மருத காசி எதாவது வேணாப் பாருங்க, சார்”
அப்போது தான் கவனித்தான். அவனைச் சுற்றி பாட்டுப் புத்தகங்கள்..அட.. நாம தான்
தப்பா புரிஞ்சிக்கிட்டோம்..இருந்தாலும் கொடுத்த காசை..
“ எனக்கு பாட்டுப் புத்தகமெல்லாம் வேண்டாம்..அதை டீ குடிக்க வைச்சுக்கப்பா”
“ சார்..மன்னிக்கணும்...இந்தாங்க”
காசை அவன் திருப்பிக் கொடுக்கவே, பொடனியில் பொளேரென்று அடித்தது போல் இருந்தது, புருஷோத்தமனுக்கு!!

Saturday, March 12, 2011

ஆழிப்பேரலை!!


உறுமி வரும் ஆழிப்பேரலையே...
உந்தன் ஆட்டத்தை நிறுத்திக் கொள்!
ஊழிக் காற்று போல உந்தன் ஆட்டம்,
நாழிப் பொழிதினில் ஜப்பானை நடுக்குதடி!
போதும் உன் விளையாட்டு..
உன் குழந்தைகள் இனி தாங்காது..
தாயல்லவா நீ....தயை புரிந்து,
தரணியில் எம்மை வாழ விடு...
உந்தன் சீற்றம் போதும்,
அடங்கடி மா காளி!!!
அருள் புரிவாய் ஜல மாதா!!!!
ஊழிக் கால ஆட்டமா...
உனக்கிதில் இனி நாட்டமா??
தாயல்லவா நீ,
தயை புரிவாய் மஹா சக்தி!!

Tuesday, March 8, 2011

கல்யாண சமையல் சாதம்..........

( மனோ சாமிநாதன் அவர்கள் சாப்பாடு பற்றிய தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார். அதன் விளைவு இதோ!)

கேள்வி 1 : தங்களுக்கு அம்மா சமையல் பிடிக்குமா..மனைவி சமையல் பிடிக்குமா?
பதில் : சந்தேகம் இல்லாமல் மனைவி சமையல் தான். அவங்க தான் எனக்கு பிடிக்கும்னு
உருளைக் கிழங்கு சேர்ப்பாங்க..அது என்னைப் பிடிக்கும்!
கேள்வி 2 : தங்களுக்கு சமையல் தெரியுமா?
பதில் : என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். நம் ஆடவர்கள் தான் சமையலில் EXPERT.
நளன்..பீமன் என்று! அவர்கள் பெயருக்கு என்னால் களங்கம் வராதது போல்,
சூப்பராய் வென்னீர் வைக்கத் தெரியும்!
கேள்வி 3 : குளிக்கவா..? குடிக்கவா..?
பதில் : அட..அட...இதானே வாணாம்?
கேள்வி 4 : சாப்பாட்டினால் கஷ்டப் பட்டதுண்டா?
பதில் : நிச்சயமாய்..பேப்பர் படித்துக் கொண்டும்...டி.வி. பார்த்துக் கொண்டும் ஞாயிறுக்
கிழமை மத்யானம் இரண்டு மணிக்கு சாப்பிடுவோம். சுவாரஸ்யத்தில் அளவுக்கு
அதிகமாய் சாப்பிட்டு, ஆடு விழுங்கின மலைப் பாம்பு மாதிரி மல்லாந்து
கிடப்பேன். செய்வது தப்பு என்று தெரியும். வேறு வழி!
கேள்வி 5 : புஸ்தகம் படிச்சுகிட்டு சாப்பிடாதீங்கன்னு வீட்டில சொல்ல மாட்டாங்களா?
பதில் : சொல்வாங்களே... நிறைய சொல்வாங்க..புஸ்தகம் படிச்சுகிட்டு சாப்பிட்டா,
சாப்பாட்டோட டேஸ்ட் தெரியாதும்பாங்க...டேஸ்ட் தெரிஞ்சிடக் கூடாதுங்கிறது
க்காகத் தான் நான் புஸ்தகமே படிக்கிறேன்னு சொல்ல மாட்டேன்..மனதுக்குள்ள
நினைச்சுக்குவேன்!
கேள்வி 6 : சாப்பாடு விஷயமாய் எதாவது துயரம்?
பதில் : இருக்கே... நண்பன் ஒருவன் கல்யாணத்திற்கு சென்றேன். எல்லாரும்
முகூர்த்தம் முடிந்ததும்,பந்திக்கு முந்தினார்கள். நான் ரொம்ப கித்தாப்பாக
மக்கள் ஏன் இவ்வள்வு மட்டமாய் நடந்து கொள்கிறார்கள். இன்று நாம் ஒரு
எடுத்துக் காட்டாய் இருக்க வேண்டும் என்று நினைத்து, கொஞ்ச நேரம் கழித்து
சென்றால், ஆட்டம் க்ளோஸ்..படுதா காலி!இதைப் பார்த்த நண்பன் மண
மேடையிலிருந்து கண்களால் ’ஏய் சாரிடா,உன்னோட மொய் கவர் வேணா
இந்தாடா’என்று சொல்ல,வேண்டாம்டா’ என்று அதே கண்களால் சொல்லி
வீராப்போடு வந்தால், நான் கல்யாணத்தில் சாப்பிட்டு விட்டு வந்திருப்பேன் என்று
எல்லாவற்றையும் ஒழித்துப் போட, ‘ சரி, ஒழியட்டும் சனி’ என்று அந்த
வேளைக்கு வயிற்றை காயப் போட்டேன்..என்ன ஒரு ட்ராஜிடி!
கேள்வி 7 : உணவில் ஏதாவது கட்டுப் பாடு?
பதில் : நிறைய படித்திருக்கிறேன். ஆனால், உடம்புக்கு ஒவ்வாது என்று நாம் ஒதுக்கித்
தள்ளுவோம் என்றால் அது நம் நாக்கிற்கு பிடித்துத் தொலைக்கிறது. நாக்கு,
நம் வீட்டு மருமகள் காம்பவுண்டு சுவரில் சாய்ந்து கொண்டு பக்கத்து வீட்டு
மருமகளிடம் நம்மைப் பற்றி வம்பு பேசுவது போல,அதற்கு பிடித்ததை
சாப்பிடாவிட்டால், வம்பு செய்கிறது..
ஒரு தடவை டாக்டரிடம் செல்ல, “உங்களுக்கு ஒபிசிடி இல்லை..
இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.என்ன ஆயில் யூஸ்
பண்றீங்க?” என்று கேட்க, நான் டக்கென்று “கோல்ட் வின்னர்” என்று
சொல்ல, அதை ”சாப்பிடாதீங்க” என்று அவர் சொல்ல, “ இல்லை,
டாக்டர், டிவி.ல கூட ஒரு டாக்டர் தான் கோல்ட் வின்னரை” ப்ரிஸ்க்ரைப்
செய்கிறார்” என்று நான் மறுதலிக்க, “ அவர் ரியல் டாக்டர் இல்லே..
நான் தான் ஒருஜினல் டாக்டர், நான் சொன்னதை கேளுங்க” என்றார்!
ரொம்ப சிம்ப்பிள்..எதெல்லாம் நாக்குக்குப் பிடிக்கிறதோ, அதெல்லாம்
உடம்புக்குக் கெடுதல்.. நாக்குக்கு பிடிக்காதது எல்லாம் உடம்புக்கு நல்லது!
கேள்வி 8 : விரதம் இருப்பீர்களா?
பதில் : ஊஹூம்.. அன்று நண்பன் வீட்டுக் கல்யாணத்தில் இருந்த விரதம் தான்
எனக்கு நினைவு தெரிந்து..
கேள்வி 9 : முடிவாய் சாப்பாட்டைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
பதில் : உணர்வுகளுக்கும், சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு உண்டு.இதோ மகாபாரதம்!
அம்பு படுக்கையில் இருந்த பிதாமகர் பீஷ்மர் பக்கத்தில் எல்லோரும்
அமர்ந்து கொண்டிருக்க, அவர் உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ’களுக்’கென்று சிரிப்பு!
பீஷ்மர் : யாரம்மா, சிரித்தது?
பாஞ்சாலி : நான் தான் தாத்தா?
தர்மர் ( கோபத்துடன்) : என்ன திரெளபதி, இது?
பீஷ்மர் : தர்மா... நீ பேசாமல் இரு..போகட்டும் ஏனம்மா, சிரித்தாய்?
பாஞ்சாலி : இப்ப இவ்வளவு நியாய, தர்மம் சொல்றீங்களே..அன்று துரியனின்
சபையில் இதையே சொல்லியிருந்தால் இவ்வளவு மனக்கஷ்டம்..
உயிர் விரயம் தடுத்திருக்கலாமே?
( எல்லாரும் திரெளபதியை கோபத்தோடு பார்த்தார்கள்.மனுஷன் மரணப்
படுக்கையில் கிடக்கிறார்..என்ன கேலி...கிண்டல்..இது?)
---- ஒரு நிமிடம் ம் மெளனம் அங்கு கோலோச்சியது. அதனை உடைத்தார்,
பிதாமகர்)
பாஞ்சாலி : .. நீ சொல்வது சரிதான்.ஆனால் அப்போது நான்
சாப்பிட்டது துரியன் போட்ட உணவு.அந்த தீயவனின் உணவு
என் மதியை மழுங்கச் செய்தது.அவன் செய்தது சரியே என்று
அன்று நினைத்தேன். ஆனால், செரிக்கப் பட்ட அந்த தீய உணவு
எல்லாம்,உன் பர்த்தா பார்த்தன் என் மேல் வீசிய கணைகளால்,
ரத்தமாய் வெளியேற, இன்று தான்...இப்போது தான்... எது
நியாயம் என்று தெரிகிறதம்மா....!

Wednesday, March 2, 2011

” சாப்பித மாத்தேன் போ !”


” சாப்பித மாத்தேன் போ !”
” சாப்பித மாத்தேன் போ !”
” சாப்பித மாத்தேன் போ !”
பல்லைக் கடித்துக் கொண்டு,முதுகில் ’ணங்’கென்று ஒன்று வைக்க வேண்டும் என்று வந்த கோபத்தை ரொம்பவும் கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டாள்,வனஜா.
இந்த சுந்தரம் என்னடாவென்றால்,வாசலில் வைத்து குழந்தைக்கு சாதம் ஊட்டாதே
என்கிறான்.அது அவ்வளவு ’ஹைஜீனிக்’ இல்லையாம்.இதுவானால் சாப்பிடவே மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறது.
சுந்தரத்தைப் பற்றி இங்கு சொல்லித் தான் ஆக வேண்டும்.ரொம்ப சுத்த,பத்தம் பார்ப்பவன்.பாத்திரத்தில் கொஞ்சம் கறி, கூட்டு மீந்தால் கூட,’கையால் எடுக்காதே..கரண்டி,ஸ்பூன் ஏதாவது ஒன்றால் எடுத்துப் போடு’ என்பான்.இதாவது பரவாயில்லே..சுட்ட அப்பளத்தைக் கூட கையால் எடுக்கக் கூடாதாம். அதற்கென்று ’ஹேண்டில்’ ஒன்று வாங்கியிருக்கிறான்.
கொஞ்சம் ‘ஓவரா’த்தான் இருக்கு..
என்ன செய்வது..வனஜா பழகி கொண்டு விட்டாள்.ஆனால், இந்த ‘கோட்டான்’ தான் இப்படி பிடிவாதம் பிடிக்கிறது.
” சாப்பித மாத்தேன் போ !”
சுந்தரத்திற்கு இது கேட்டிருக்க வேண்டும்.
“சாப்பிடாட்டிப் போ” என்றவன்,
”பேசாம விடு..வயறு காஞ்சா, தன்னைப் போல சாப்பிட வருவா..”என்றான்,இவளிடம்!
”போ..உம் பேச்சு..டூ....கா...உம் பேச்சு டூக்கா.போ..”
குழந்தை ’உர்’ரென்று முறைத்தாள், சுந்தரத்தைப் பார்த்து.
”நீங்க கொஞ்சம் பேசாம இருக்கீங்களா” என்றவள் குழந்தையைப் பார்த்துக் கேட்டாள்.
“ஏம்மா சாப்பிட மாட்டே?”
“ நாக்கு நாணாம் “
“ நாக்கு நாணாமா, ஏன்?”
இந்த சுவாரஸ்யமான உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தான், சுந்தரம்.
“அதான் ஏன்னு கேக்கிறேன்னில்லே”
” சாப்பித மாத்தேன் போ !”
கொஞ்சம் மாற்றி யோசித்தாள், வனஜா.
“ அப்ப எங்க தான் சாப்பிடுவே?”
“ தோ..” - குழந்தை வாசலைக் காண்பித்தது.
“ ஏன்?”
“ ஏன்னா..அங்க காக்கா இக்கு.. நாக்குத்தி இக்கு..அங்கப் போனா, அதும் நம்மோட சாப்பிதும்..அதுக்கென்ன அம்மா இக்கா..இப்பதி சாதம் ஊத்த?”
குழந்தையின் பதிலைக் கேட்டு விக்கித்து நின்றான், சுந்தரம்!
வனஜாவும் தான்!!