Wednesday, February 20, 2013

குடியைக் கொடுத்த குடி !

"ம்மா அப்பா வருது !"
ஐயோ ..ஒண்ணும் இல்லையே ..அந்த எளவெடுத்தவன் வந்து அடிக்கப் போறானே என்கிற பயத்தில் கத்தினாள் மாரி !
"...ஏல மகேசு ஓடிப் போடா உங்கப்பன் வரதுக்குள்ள .."
"யம்மா நீ !"
"போடா சனியனே !  ..குடிச்சு ...குடிச்சு உங்கப்பன்
ஒடம்புல சத்தே இல்ல...அடி வலிக்காது ..நான் சமாளிச்சுக்குவேன்..நீ பச்ச மண்ணு ..ஓடிப் போ அப்பாலே !" - எரிச்சலுடன் கத்தினாள் மாரி.
   தண்ணி வண்டி வருவது போல் தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தான்
மருதை ...
   அவனுக்கு சரக்கடிக்க  காசு வேணும் ..அது தீர்ந்து போனா வீடு நியாபகம்
வந்துடும் ..இங்கன வந்து மாரியை  மிரட்டி..அடித்து .காசு வாங்கிக் கொண்டு
போவான் ..இப்போது சில நாட்களாக வீட்டிலும் பணம் பெயருவதில்லை ..
   எப்படி பெயரும் ?
   குந்து மணி தங்கத்தையும் வைத்து குடித்தாகி விட்டது ..முன்னெல்லாம்
மாரி வயல் வேலைக்குப் போய்க் கொண்டு தான் இருந்தாள்...கொஞ்ச நாளா அவளுக்கும் உடம்பு முடியவில்லை ..காசு எங்கிருந்து கிடைக்கும் ?
    போன தடவை வந்த போது மகேஸ்  கையில அரிசி வாங்க கொடுத்து வைத்த காசைப பிடிங்கிக் கொண்டு போய்  குடித்தான்....இந்த தடவை என்ன கிடைக்கப் போகுது ...
     நினைப்பு தந்த வெறுப்பில் தள்ளாட்டம் கொஞ்சம் கூடவே ஆனது ..
    "காசு தாடீ"
    "எங்கன இருக்கு?"
    வந்த ஆத்திரத்தில் பாத்திரங்களை காலால் உதைத்தான் அவள் தலைமயிரைப்  பிடித்துக் கொண்டு ஒரு  எத்து எத்தப் பார்ப்பதற்குள் ....
   "யப்பா அம்மாவை வுடு !"
    காட்டுக் கத்தலாக கத்தின மகேஸ் அப்பனைத் தள்ளினான் ...
    சுதாரித்து அவன் எழுவதற்குள் அவன் கையில் காசைத் திணித்தான் ..
    "போ...குடி...இங்ஙன வராதே"
     பணத்தைக் கண்டவுடன் மாரியை மறந்தான் ..மகனையும் மறந்தான் ...
ஓடிப் போய் விட்டான் குடிக்க ...
    அந்த வெறி அடங்கியவுடன் தான் அவனுக்கு புத்தி வேலை செய்ய ஆரம்பிக்க ..பையனிடம் அவ்ளாவ் பணம் ஏது எனக் கேட்கத் தோன்றியிருக்க வேண்டும் !
     திருடியிருப்பானோ ..என்று பயமாக இருந்தது மருதைக்கு.
 அடுத்த நாள் ..
" மகேசு எங்கே ?"
" இன்னாத்துக்கு ?"
"ஏன் புள்ள அவன்  இசுக்கூலுக்குப் போல?"
"இனிமே அவன் அங்ஙனப் போக  மாட்டான்"
"ஏம் புள்ள .." மருதைக்கு லேசான கலக்கம் ..பய புள்ள திருடிட்டு
தாணாக் காரன் கிட்ட மாட்டிக் கிட்டானோ !
  "என் உடம்புல முன்ன மாதிரி வலு இல்ல..ஒனக்கு குடிக்க காசு வேணும்
அவன் என்ன பண்ணுவான் ?மாடு மேய்க்கப்   போய்ட்டான்யா....நேத்து அவன் உனக்கு காசு கொடுத்தானே அது அவன் புஸ்தகத்தை வித்த பணம் "
   குலுங்கி குலுங்கி அழுதாள் மாரி.
   மருதையும் தான்!
   இப்போதெல்லாம் .அந்த எளிய குடிசையில் அடுப்பங்கரையில் பூனை தூங்குவதில்லை ...மாரி காலையில் சமையலை ஆரம்பிக்க ..பையன் படித்து விட்டு இசுக்கூலுக்குப் போக மருதையும்  ரொம்பவே மாறி விட்டான் ..காலையில் போனால் சாயந்திரம் தான் வருகிறான் .. உடம்பிலும் அந்த பழைய தள்ளாட்டம் இல்லை ..ஏனென்றால் அவன் இப்போதெல்லாம் குடிப்பதில்லை .
    அவன் மனம் திருந்தி வேலைக்கும்  போக ஆரம்பித்து விட்டான்.
    எங்கே என்று கேட்கிறீர்களா  ?
    டாஸ்மாக்கில் !

   

                             

Wednesday, February 6, 2013

SWOT ANALYSIS

ஆங்கிலத்தில் தலைப்பா  என்று திகைக்க வேண்டாம் ...நம் தமிழில் புத்தி மான் பலவான் என்று சொல்கிறார்களே ..அதைத் தான் அவர்கள் SWOT ANALYSIS என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள் ...
     நம் சிறு வயது கதை ஒன்று ஞாபகம் வரணுமே ..ஒரு நாகம்  காகம் பொந்தில உள்ள முட்டைகளை தினம் தினம் தின்ன, வலு இல்லாத அந்த  காகம் அங்கு வந்த நரியின் ஐடியா கேட்டு, அதன் படி ராணி ஆற்றங்கரைக்கு குளிக்க வரும் போது, அவள் கழற்றி வைத்த நகைகளை தன்  பொந்தில் போட, வீரர்கள் அந்த பொந்தை ஈட்டியால் குத்த, புஸ்ஸென நாகம் சீற, வாளால் அதைக் கொன்று, நகையை மீட்டதாக கதை !
     பஞ்ச தந்திர கதைகளில் வரும்  !
     அது மாதிரி உண்மையில் நடந்த நிகழ்ச்சி இது !
     வட கொரியாவிலிருந்து சீனாவிற்கு ஷூக்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது ..எல்லாம் வழக்கம் போல் நடந்து கொண்டு தான் இருந்தது ..
திடீரென்று  ஷூவிற்கான  கஸ்டம்ஸ் டூட்டியை 40% லிருந்து 150% க்கு சீனா ஏற்றி விட்டது. இதனால் ஷூ விற்பனை பாதிக்கப் படும். ஏற்றுமதியைக்
குறைக்க சீனா செய்த தந்திரம் இது !
      அந்த கொரியன் கம்பெனி என்ன செய்தது?
      சீனாவின் BUDGET NOTIFICTIONS ஐ அக்கு வேறு, ஆணி வேறாக படித்துப்
பார்த்தது. அதில்  ஒரு நம்பிக்கை கீற்று லேசாகத் தெரிந்தது ..அது என்னவென்றால், PARTLY FINISHED SHOES க்கு அதே 40% தான் வரி! அந்த சின்ன நூல் கண்டை பிடித்துக் கொண்டு போனதில் ஒரு விஷயம் தெரிந்தது..அதாவது  PARTLY FINISHED SHOES  க்கு  அர்த்தம் என்ன என்று பார்த்தால், SHOES WITHOUT LACE ARE DEFINED AS PARTLY FINISHED SHOES என்று இருந்தது ..அது போதாதா அந்த கொரியன் கம்பெனிக்கு! WITHOUT LACE உடன் SHOES அனுப்பி அந்த வருஷத்து விற்பனையைத் தக்க வைத்துக் கொண்டனர் !
       இது எப்படி இருக்கு ?
       அது போல் இன்னொன்று பாருங்கள் !
       ஒரு டூத் பேஸ்ட் கம்பெனியில் SALES ANALYSIS செய்ததில், அவர்கள் விற்கும்  டூத் பேஸ்ட் சரியாக ஒவ்வொரு நாலு பேர் கொண்ட குடும்பத்திற்கு
ஒரு மாசம் வருகிறது ..விற்பனையைக் கூட்ட அந்த கம்பெனி என்ன செய்தது தெரியுமா?
       விளம்பரத்திற்கு அதிகமாய் செலவழிக்கவில்லை...கொடுத்த காசிற்கு 50 கிராம் கூட பொருளைத் தரவில்லை...விலையையும் குறைக்க வில்லை ..
வேறு என்ன தான் செய்தது ?
        டூத் பேஸ்ட் வாயின் முகத் துவாரத்தை ஒரு 2 mm DIA அதிகமாக்கியது
அவ்வளவு தான் !  
         பிய்த்துக் கொண்டு போயிற்று விற்பனை !
         இது பிசினஸ் உலகில் மட்டுமல்ல ..சாதாரண நடைமுறை  வாழ்க்கையில் செயல் படுத்தி செம்மையாய் வாழலாம் !
         குள்ளமாய் தான் இருக்கிறோம் என்கிற குறையையே ஒரு  ப்ளஸ் பாயிண்டாக எடுத்துக் கொண்டு நகைச்சுவை உலகில் முடி சூடா மன்னனாய்
ஒளிரவில்லையா   அந்த   நகைச்சுவை நடிகன்!
        ஆகவே எவனொருவன் ’உள்’ளில் உள்ள குறையை, நிறைவாகவும் ‘வெளி’யில் உள்ள ஆபத்தை அனுகூலமாகவும் மாற்றுகிறானோ அவனைக் கண்டு நமனும் அஞ்சுவான் என்பது புது மொழி!