Thursday, December 29, 2011

குழந்தையும்,பொம்மையும்!


#
பள்ளிக்கூடத்திற்கு கூட்டிக்
கொண்டு போவேன் என்று
அடம் பிடித்த குழந்தையின்
முதுகில் லொட்டன்று
வைத்து அம்மா
இழுத்துக் கொண்டு போக
ஏக்கத்துடன் பார்த்தது,
பொம்மை!
##
இரண்டு குழந்தைகள்
ஒரு பொம்மைக்காக,
சண்டை போட்டன..
குஷி தாங்காமல்,
காற்றில் பறந்தது
பொம்மை!
###
பொம்மை சாப்பிட்டால்
தான் சாப்பிடுவேன்..
அடம் பிடித்தாள்
குழந்தை..
பொம்மையின் வாயில்
அம்மா ஓட்டை போட,
கண்ணீர் தளும்பியது
குழந்தைக்கு!
####
பொம்மை பெண்டாட்டியாம்..
காலால் எட்டி
உதைத்தான் குழந்தை..
மாலையில்..
காலையில் அம்மா
அப்பாவை திட்டியது
ஞாபகம் வர...

Saturday, December 24, 2011

தன் காலில் நின்றால் தான்!!!


” என்னங்க..உங்களைத் தானே, அந்த மந்திரியைப் போய் பாருங்க..’
’ அவருக்கு என்னை இன்னமும் ஞாபகம் இருக்குமா?”
” எப்பப் பார்த்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டு இருங்க..”
” அதுக்கில்ல..பார்வதி.. நம்ம பையன் நல்லா மார்க் வாங்கியிருக்கான்..எதுக்கு ஒருத்தர்ட்ட
சிபாரிசு போகணும்?”
” என்னங்க எடக்கு,மடக்கா பேசிக்கிட்டு..இருக்கிறது மூணு போஸ்ட் தானாம்..முன்னூறு பேர் அப்ளை பண்ணியிருக்காங்கன்னு தம்பி சொல்லுது..அந்த மந்திரி ’வட்டமா’ இருக்கும் போது நீங்க தானே வண்டி ஓட்டிக் கிட்டு இருந்தீங்க..உங்கள அவர் அவ்வளவு சீக்கிரம் மறந்துட மாட்டாரு..
சிபாரிசு செய்யச் சொல்லித் தான் கேட்டுப் பாருங்களேன்..கல்ல விட்டு எறிங்க..பளம் விளுந்தா சரி..இல்லாட்டி கல்லு போனாப் போவுது!”
.. அதானே..இந்த அப்பா எனக்காக சிபார்சு பண்ணினால் தான் என்னவாம்...அப்பா என்ன சொல்லப் போகிறார்..
வெளியிலிருந்து அவர்கள் பேசுவதை ஆர்வத்துடன், கவனித்தேன்..
”..பார்வதி.. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே.. நம்ம சரவணன மேல அக்கறை இருக்கிறதனால் தான் சொல்கிறேன்..என்னப் பாரு..சிபாரிசோட கூட லஞ்சமும் கொடுத்து கார்ப்பரேஷன்ல ட்ரைவரா சேர்ந்தேன்..வேலை எளிதா கிடைச்சதால, எனக்கு கஷ்டமும் தெரியாம..சொகுசா வாள்ந்துட்டு, இப்ப அதே ட்ரைவராவே ரிடையர்ட் ஆயிட்டேன்..என் பையனும் அதே தப்பை செஞ்சா, அவனுக்கும் கஷ்டம்னா என்னன்னு தெரியாது..காலம் பூரா க்ளார்க்கா இருந்தே, வாழ்க்கையில உசராம அப்படியே ரிடய்ர்டாயிடுவான்..அதனால..சிபார்சு இல்லாம போட்டியில இந்த வேலை அவனுக்கு கிடைக்கணும்..கிடைக்கட்டும்..”
’அதானே’ என்றேன், நான், அப்பாவைப் பற்றிய உயர்வான எண்ணத்துடன்!

Tuesday, December 20, 2011

ராவ் பகதூர் சிங்காரமும்..வைகுண்ட ஏகாதசியும்!

அந்த காலத்தில் தில்லானா மோகனாம்பாளுக்கும்..அதன் பிறகு வந்த ராவ் பகதூர் சிங்காரம் ஆகிய தொடர்களுக்குமாக வெள்ளிக்கிழமை எப்படா வரும் என்று காத்திருந்து,விகடன் வருவதற்க்குள் ஒரு போட்டா போட்டி..அது வந்தவுடன் ஆங்கரை அகத்தில் திண்ணையில் கழுகு போல் காத்து கிடக்கும் தாத்தா தன் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்தி விகடனை லபக்கென்று எடுத்துக் கொள்ள, முணுமுணுப்புடன் அம்மாவும்,சித்திகளும்,சித்தப்பாக்களும்.. அத்தைகளும் ரேழி உள்ளுக்குள் ஏக்கம் ப்ளஸ் கோபத்துடன் மறைய..அவர்கள் முகங்களை ’அதில் என்ன அப்படி?’என்று சின்னப் பிள்ளையான நான் புரியாமல் பார்க்க..பிறகு விபரம் தெரிந்த நாளில்....மணியனின் காதலித்தால் போதுமா.உமாவிற்காக.இதய வீணை..வனஜா..சுந்தரம்..கிரிக்காக ..என்று நானும் அவர்களுடன் அடித்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம்!
..அது ஒரு காலம்..இன்றைய மெகா சீரியல் இடத்தை..அன்றைய தொடர்கதைகள் பிடித்துக் கொள்ள..ஹூம்.. நான் கடைசியாய் படித்த தொடர்..அழகு..தாமரை மணாளன்..என்று ஞாபகம்..
தில்லானா மோகனாம்பாள் ..ராவ் பகதூர் சிங்காரம் ஒப்பிடவே முடியாது..தில்லானா மோகனாம்பாள் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீச..அது பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் ஆயிற்று..அந்த அளவுக்கு திரையில் விளையாட்டுப் பிள்ளை பரிமளிக்க வில்லை என்றாலும் கதையை பற்றி துளிக் கூட குறைவாகச் சொல்லி விட முடியாது..COMPARE பண்ண வேண்டும் என்று நீங்கள் கட்டாயப் படுத்தினால் இப்படி வேண்டுமானால் சொல்லலாம்!
தில்லானா மோகனாம்பாள் ஜாங்கிரி... ராவ் பகதூர் சிங்காரம் ஜிலேபி!
ராவ் பகதூர் சிங்காரம் ஒரு அருமையான தொடர்..எங்கள் பக்கத்து வீட்டு மாமி அதான் .. நிகிலாவின் அம்மா சொன்னது இன்னமும் ஞாபகத்திற்கு வருகிறது..கொத்தமங்கலம் சுப்பு..கோபுலு..போன்ற விகடன் குழு கதை நடந்த ஊருக்கு வந்து ஒரு ஆறு மாதம் கேம்ப் போட்டுக் கொண்டு கதை எழுதுவார்களாம்..அந்த மாமி மேல் மங்கலம்!
ஆரம்பம் படு ஜோர்..அந்த பஞ்ச பாண்டவர்கள் அறிமுகம் அருமை..சிங்காரம்..கில்லாடி முருகன்..பஞ்சாட்சரம்..கதுவாலி ராமன்..கூத்தாடி ரங்கன்..சிங்காரம் சித்தப்பா தர்மலிங்கம் அவர் பையன் வேலுச்சாமி..சாதாரண வேலுச்சாமி இல்லை கவாய் வேலுச்சாமியாக்கும்!
அந்த சுருளிபாறை..காளை மாடு நீல வேணி..ஜல்லி கட்டு உறங்காம் பட்டி பெரிய கருப்பன்..செங்கமலம்..அப்படியே பத்மினி ஜாடை..சிங்காரம் சிவாஜி ஜாடை கோபுலு கை வண்ணம்!
பபூன் பஞ்சு..ட்ரையினில் சீட்டு விளையாடி, பிடிபடும் போது..போலீஸ்காரரிடம் தம்பட்டம் அடிப்பது..அயன் ஸ்த்ரீபார்ட் அல்லி முத்து..அதற்கு சொல்லப் படும் வியாக்யானம்..கோலாலம்பூர் குயிலிசை கோபால் தாஸ் ..சின்ன..சின்ன பாத்திரங்கள் கூட..சிக்கென மனதினில் இடம் பிடித்து விடும் லாவகம் ..செங்கமலம் அப்பா முத்தப்பர் என்றவுடன்..அவரின் ரத்த கொதிப்பு..முன்கோபம்..அவர் ஃப்ரண்ட் காட்டுப் பாவா ராவுத்தர்..அவர் பாடும் குணங்குடி மஸ்தான் சாஹிப் பாடல்கள் எல்லாமே கூட வந்து விடும்!
அந்த நாட்டுப் புறப் பாடல்கள்..
”..முனுசாமியே முன் படுதாவை விடுடா..”
“ நாதாரி நாயைப் போல் நாரதனும்
நன்று இங்கு விகடமும் பண்ண வந்தாய்..”
அதற்கு..
“ நாயென்றும் பேயென்றும் பேசி, அடி
நாக்கு தடித்த மவராசி..
நாயெல்லாம் விசுவாசி..
அவை முன் நீ ஒரு தூசி”
என்ற பதிலடி..
(ராவ் பகதூர் சிங்காரம் படித்து அனுபவித்தவர்களுக்குத் தான் நான் எழுதுவது புரியும்..அவர்களுக்காகவே தான் இது எழுதுகிறேன்)
பரணை ஒழிக்கும் போது அங்கே கட்டு கட்டாக ராவ் பகதூர் சிங்காரம் தொடர் வந்த பக்கங்கள் ..பாலு சித்தப்பா பைண்ட் பண்ண சேர்த்து வைத்திருக்கிறார்! அப்புறம் பார்த்தால் காணோம்!
என்னுடைய இருபத்தைந்தாவது வயதில் அச்சு..அச்சாக கோபுலு படத்துடன்,வந்த தொடர்கதை பைண்டிங்கை..(தொடரை பைண்டிங்கில் படிப்பது பரம சுகம்) லைப்ரரியில் இருந்து சுட்டுக் கொண்டு வந்தேன் ஒரு long range Plan! என் ரிடையர்ட்மெண்ட் பீரியடில் படித்து சுவைப்பதற்காக பாதுகாத்து வைத்த அந்த பைண்டிங் புக்கை நான் என் முப்பதாவது வயதில் வெளியூர் ட்ரான்ஸ்பர் ஆக, அண்ணா அதாவது எங்கள் அப்பா அதை கன காரியமாய் பழைய புஸ்தகக் காரனிடம் போட்டு..காசு பார்த்து விட்டது வேறு கதை!
ரிடையர்ட் ஆனவுடன் படிக்க வேண்டுமென்று ஒரு ஜாபிதாவே வைத்திருக்கிறேன்.
விகடன் - தெருவிளக்கு( பழைய பைண்டிங்குடன்)
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்.
- துப்பறியும் சாம்பு - தேவன்
- மிஸ்டர் வேதாந்தம் - தேவன்
- காதலித்தால் போதுமா - மணியன்.
- தில்லானா மோகனாம்பாள் (ரிஷபனிடம் இருக்கலாம்)
- ராவ் பகதூர் சிங்காரம் ( இரண்டுமே “கலைமணி”)
குமுதம் - உயிரின் விலை பத்து லட்சம் ( யார் எழுதியது என்று தெரியவில்லை)
உடல் பொருள் ஆனந்தி - ஜாவர் சீதாராமன்.
அது சரி எதனால் திடீரென்று இப்போது இந்த ராவ் பகதூர் சிங்காரம் ஞாபகம்?
அதில் ஸ்ரீரங்கத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி பற்றியும் வருகிறது..
ஒருவன் நாடகம் நடக்கப் போகிறது என்று பறை அடித்துக் கொண்டு போக,ஆபத்துக்கு தோஷமில்லை ஒரு பத்து நிமிடம் கழித்து வைகுண்டம் போனாலும் பரவாயில்லை என்று மரணத்தின் விளிம்பில் இருக்கும் கிழவர்களும் அயன் ஸ்த்ரீ பார்ட அல்லி முத்து நாடகத்தை பார்க்க ஆவலுடன வ்ர..
அட... வைகுண்ட ஏகாதசியும் வரப் போகிறதே...
அதனால் இருக்குமோ?

Saturday, December 17, 2011

கருத்துள்ள விதைகள்!!


*
இனி ஒரு புத்தன்
பிறக்க மாட்டான்!
ஞானம் கொடுக்க
நம்மிடம்
மரமில்லை!

**
ஆறாயிரம் கிமீ தாண்டி,
உள்ள ஊருக்கு,
குமரியிலிருந்து
இருப்புப் பாதை போட்டு,
இதயங்களை இணைத்த
அதே வேளை,
முன்னூறு கிமீயில்,
இருக்கும் மூணாறு
போக முடியவில்லை,
முல்லை பெரியாரால்!
***
முன் ஜாமின் கொடுத்து,
வெளி வந்தவன்,
கொலை!
முன் விரோதம்!!
****
பிரசவ ஆஸ்பத்திரி
வழியாய் செல்லும்
டவுன் பஸ்ஸும்
நிறை மாத கர்ப்பிணியாய்!
*****
உனக்கும்,
பிக் பாக்கெட் காரனுக்கும்,
ஒரு வித்யாசம்!
அவன் கைகளால்
உள்ளதை எடுத்தான்!
நீ உன் கண்களால்
உள்ளத்தை எடுத்தாய்!!
*****

Tuesday, December 13, 2011

அழைப்பிதழ்!!


அந்த ஆஃபீஸ் அன்று சந்தோஷத்தை பேலாவிலிருந்து எடுத்து வாரி வாரி பூசிக் கொண்டது!
வனஜா அழைப்பிதழ் கொடுத்த நன்னாள் அல்லவா!
யார் அந்த வனஜா?
ஆஃபீஸில் புதிதாய சேர்ந்த அனைத்து யுவன்களும்..யுவதிகளும் அடுத்தடுத்த வருடங்களில் திருமணப் பத்திரிகை கொடுக்க..பாவம் வனஜாவிற்கு தான் தட்டி.. போயிற்று!ஏதோ ஃபேம்லி ப்ராப்ளமாக இருக்க வேண்டும்.
என்னம்மா?
எப்ப?
என்னாச்சு?
வாதஸ்ல்யத்துடன் தான் கேட்கிறார்கள் எல்லாருமே..ஆனால்,அந்த இளம் குருத்து மனம் என்ன புண்படும் என்பதை யார் அறிவார்?
எத்தனை தடவை அழுதிருக்கிறாளோ?
ஆச்சு..
அந்த வனஜாவும் முகம் நிறைந்த சிரிப்புடன், ஒவ்வொருவர் சீட்டிற்கும் சென்று
”அவசியம் ஃபேமிலியுடன் வரணும்” என்று கேட்டுக் கொண்டு, திருமண அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்
அந்த நாள் அல்லவா இது!
அனைவருக்கும் சந்தோஷம்..
யாரையாவது விட்டு விட்டோமா என்று பார்த்து..பார்த்து கொடுத்தாள்..ஆனால், சுந்தரத்தை மட்டும் ஏனோ தவிர்த்து விட்டாள்!
ஹெட்க்ளார்க் கூட கேட்டு பார்த்தார்...
“அம்மா..சுந்தரம்?”
அதற்கு பதில் ஒரு புன்னகை தான்!
பாவம்..மனசை காயப் படுத்தி இருப்பான் போல..
அந்த நாளும் வந்தது!
சுந்தரம் லீவ்!
அவர்களுக்குள் என்ன மனஸ்தாபமோ?
சுந்தரத்தைத் தவிர அனைவரும் கல்யாணம் அட்டெண்ட் செய்ய..
சுந்தரம் ஜம்மென்று,சம்பந்தி வீட்டு மக்களுடன் உட்கார்ந்திருந்தான்..
அவனுக்கு மட்டும்...
வி.ஐ.பி. உறவு என்று, வீடு தேடி பத்திரிகை கொடுத்திருந்தாள், வனஜா!

Sunday, December 11, 2011

ஊரார் தாத்தாவை ஊட்டி வளர்த்தால்..


”வைவஸ்வதன் லதாங்கிக்கு பொருத்தமானவன் தான்..இருந்தாலும்...”
”என்ன இருந்தாலும்..”
”அவன் அப்படி ஒரு கண்டிஷன் போட்டிருக்கக் கூடாது..”
”அதனால என்ன?”
”அதை அவளும் பொருட்படுத்தியிருக்க வேண்டாம்..”
”அதை வேணா சொல்லு..”
”பாரு..இந்த சாதாரண விஷயத்தினால், அவர்கள் காதல் தொங்கலில்!”
”யாராவது ஒருத்தர் ஒத்துக் கொண்டால் தான் என்ன?”
”ஆமாம்..அதைத் தான் நானும் சொல்கிறேன்..”
”ஆனால் அவன் தான் பிடிவாதமாய் இருக்கிறான்...”
”அவளாவது கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்..”
”இருக்கலாம்..சின்னஞ்சிறுசுகள் அவர்களுக்கு ஆசை இருக்காதா?”
”இருக்கட்டுமே..இது அவர்கள் வாழ்வில் எப்படி தடையாய் இருக்க முடியும்?”
”அதுவும் சரி தான்..”
அதோ வைவஸ்வதன்..ஓ லதாங்கியும்..
“அங்க்கிள்..ஆண்ட்டி.. நீங்க ரெண்டு பேரும் அவசியம் வரணும்..இருபதாம் தேதி எங்க நிச்சயதார்த்தம்!”
”உங்க ப்ராப்ளம்?”
”ஸால்வ்ட்”- வைவஸ்வதன்.
லதாங்கியைப் பார்த்தேன்..கண்களை சற்றே தாழ்த்தினாள்.சம்மதம் தெரிந்தது!
“எப்படி சாத்யம்,இது?”
தனிமையில் வைவஸ்வதனும்.. நானும்!
“கடவுள் க்ருபை அங்க்கிள்..அவள் ப்ரிய அப்பாவை அவள் அண்ணி முதியோர் இல்லத்தில் சேர்த்து விட...அந்த காயமே..என் உணர்வுகளை அவள் புரிந்து கொள்ள தோதாக அமைய..
ஆதரவு அற்ற எங்கள் அத்தையும் நம்முடன் இருக்க வேண்டும் எனற என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாள்..”
“காட் ப்ளஸ் யு”

Friday, December 9, 2011

டேய்..சீனாப் பயலே!!!!!!


(1962 ம் வாக்கில் இந்தியா, சீனா போர் நடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..இது உண்மையா...'உடான்ஸா’..என்பதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்)
ஒரு கால கட்டத்தில்,சீனாவின் பலம் ஓங்கி..உடும்பு விட்டால் போதும் என்கிற நிலை இந்தியாவிற்கு!
அந்த சமயம் மாசேதுங்கிற்கு ஒரு விபரீதமான ஆசை வந்ததாம்..இந்தியாவின் தெற்கு பகுதியை கைப்பற்ற வேண்டும் என்று!
ஆகவே, நன்றாகத் தமிழ் தெரிந்த ஒற்றனை, தட்சிணப் பகுதிக்கு அனுப்பினான்..அந்த ஒற்றனும், சென்னை,செங்கலப்ட்டு, காஞ்சிபுரம்,விழுப்புரம் என்று ஒவ்வொரு ஊராக வந்து கொண்டிருந்தானாம்.
வந்தவன்,திருச்சி பக்கம் வந்திருக்கிறான்..
வடக்கு ஆண்டார் வீதி!
”டேய் சீனாப் பயலே!..உன்னை விட்டேனாப் பார்” என்று கூவிக்கொண்டு ஒரு எழுபது வயது மதிக்கத் தக்க பாட்டி,அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்..
அப்படியே அந்த சீனன், நடுங்கிப் போய் விட்டான்,நடுங்கி!
நடந்தது என்ன தெரியுமா?
அன்று ஞாயிற்றுக்கிழமை!
அந்த காலத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஞாயிறு அன்று சிறு குழந்தைகளுக்கு,விளக்கெண்ணைய் கொடுப்பார்கள்..அன்றைக்கு, ஜீரா மிளகு குட் ரசமும்..பருப்புத் துவையலும் தான் மெனு!
குழந்தைகளுக்கோ விளக்கெண்ணெய் என்றால் பயம்..சம்பவம் நடந்த அன்று,காமு பாட்டி ”சீனாப் பயல்” என்று செல்லமாய் அழைக்கப் படும் பேரன் சீனுவாசனை விளக்கெண்ணெய் கொடுப்பதிற்கு, துரத்திக் கொண்டிருந்தாள்..அந்த ‘சீனாப் பயலோ’ தன் சிண்டு, பாட்டியின் கையில் சிக்க விடாமல் ஓடிக் கொண்டிருந்தான்.
அந்த சீனன் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், தலை தெறிக்க ஒரு பொடியன் ஓடிப் போய்க் கொண்டிருந்தது தெரியும்..
ஆனால் நாம் எல்லாரும் பண்ணிய புண்ணியம்
அவன் திரும்பிப் பார்க்கவேயில்லை..
”... வயசான கிழவிக்கே, இவ்வளவு ஆத்திரமும், வெறுப்பும் இருந்தால், இந்த பகுதியில் உள்ள வாலிபர்களுக்கு நம் இன மக்கள் மீது எத்தனை கோபம் இருக்கும் ..”
நினைத்த சீனன் உடனே செயலில் இறங்கினான்..எங்குமே நிற்காமல்,அவன், ஒரே ஓட்டமாய் ஓடி...சீனா போய், மாசேதுங் காதைக் கடிக்கவே,மருண்டு போன மாசேதுங்,மக்மோகன் எல்லை தாண்டி வரவே இல்லையாம்..!
பெரிய..பெரிய.. ராஜதந்திரிகளான ஜவஹர்லால் நேரு...கிருஷ்ண மேனன்..போன்ற ஜாம்பவான்களாலும் செய்ய முடியாத காரியத்தை, கேவலம் ஒரு பல்லு போன பாட்டி செய்து முடித்தாள்!
இப்படியாகத் தானே, அந்த காலத்தில் மங்கோலியாவிலிருந்து, படையெடுத்து வந்த, தைமூருக்கு ஒரு கிழவி உதவிய நீசச் செயலுக்கு, அது நடந்த ஆயிரம் வருடம் கழித்து, தட்சிணத்துக் கிழவி ஒருத்தி பரிகாரம் செய்தாளாம்!

Saturday, December 3, 2011

என் ஜாதி மக்களுக்கு நான் கொடுத்த விருந்து!
ஆரண்ய நிவாஸத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை, என் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு கொள்ளை ஆனந்தம் ....

படம் 1
சமீபத்தில் ஒடிஸா போயிருந்தேன்.அங்கு கார்த்திகை வியாழனன்று, நெல்லி மர இலைகளை வைத்துக் கொண்டு,லக்‌ஷ்மி பூஜை கோலாகலமாக நடந்தது.அதை என் சகதர்மிணி அவர் அம்மாவிடம் சொல்ல, அவர்கள் இருவருக்கும் ஆசை வந்து, எங்கள் வீட்டில் வளரும் நெல்லி மரத்தில்,கார்த்திகை ஞாயிற்றுக் கிழமை லக்‌ஷ்மி பூஜை பண்ணினார்கள்.. இது தான் மேலே உள்ள படம்.
மரங்களைப் போற்றுதும்!
மரங்களைப் போற்றுதும்!!


படம் 2
இதோ..இந்த வாழைமரம் குலை தள்ளியாகி விட்டது.பச்சை பசேலென்று இந்த இடமே மனசுக்கு ரம்யமாக இருக்கிறதல்லவா?


படம் 3
இந்த மரமும் கூடத் தான்!ஆனால் சூரியன் முந்திக் கொண்டு விட, என் கேமரா சற்றே பின் தங்கி விட்டது போலும்..அது தான் அந்த ப்ளாஷ்!

படம் 4

இந்த வாழையைத் தான் பாருங்களேன்!..குலை தள்ளிய வாழை தான் இதுவும்!ஆனால் இதை அப்படியே மரத்திலேயே பழுக்க வைத்து விட்டு, அந்த பழங்களை அப்படியே விட்டு விட்டோம்....எத்தனை பழம் தான் நாம் சாப்பிடுவது? எத்தனை பழம் தான் உறவுக் காரர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பது? ஒரு வாழைத் தாரை கடையில் விற்று, காசு பார்த்து விட்டோம்...
பழங்கள் அழுகி, பூச்சிகள் பல்கி பெருகி,அந்த இடம் அசிங்கமாய் போய் விடுமோ என்று உள்ளூர பயம்..இருந்தாலும், மரத்திலேயே பழங்கள் இருக்கட்டும் என்று ஒரு சங்கல்பம்..!
வாழைப் பழங்களும் பழுத்து விட்டது!
பெருமைக்காக சொல்லவில்லை!
நம் குருவிகளை பாருங்கள்!!
அழகாய் கூட்டம்.. கூட்டமாய் வந்து கூச்சலிட்டு..விளையாடி..பழங்களை சாப்பிட்டு ....
இடத்தை கொஞ்சம் கூட அசுத்தப் படுத்தாமல்....
அவற்றின் வருகை மனதுக்கு மிக..மிக.. சந்தோஷமாய்....
...இன்றைக்கு ஏன் தான் இந்த ஆனந்தமோ?