Saturday, February 26, 2011

மரங்களை நேசிப்பவன்!!!


... நான்,
மரங்களை நேசிப்பவன்,
சிறு வயதில்,
ஆசிரியர் அடித்தபோது,
பள்ளிக்கூட மரத்தைக்
கட்டிக் கொண்டு,
அழுதேன்...அது
அம்மா போல,
இலைகளை அசைத்து,
ஆறுதல் சொன்னது!
கடும் வெயிலில்,
வீட்டில் உள்ள,
வாழை மரத்தைக்
கட்டிக் கொள்வேன்,
அது இலவசமாய்,
எனக்கு ஏ.ஸி. தந்தது!
பெரிய ஆல மர நிழலில்,
கான்க்ரீட் பெஞ்ச்சில்,
பாடல் கேட்கப் பிடிக்கும்..
எல்லாவற்றையும் விட,
அகழ்வாரைத் தாங்கும்
நிலத்தை விட,
அதில் வளரும் மரங்கள்,
பெருமை...பொறுமை...
அதிகம் தான்!
அவை வெட்ட வருபவனிடம்
கூட கருணைக் காட்டும்,
கற்பக விருட்சங்கள்!
நிழல் கொடுக்கும்...
பசியாற கனி கொடுக்கும்..
அதனினும் மேலாய்..
அபிரிமிதமாய் ஆக்ஸிஜன்...
வெட்ட வருபவனுக்கு,
ப்ராணன் தரும் மரங்களே..
வள்ளுவனின் நிலத்தினை விட
மேலாய் இருப்பதினால்,
வானவளாவிய மரங்களே..
நம் வாழ்க்கைத் துணையாய்
இருக்கட்டும்!!!!

Tuesday, February 22, 2011

ஸார் வாள்!!!

கச்சலாய் .. நெற்றியில் ஸ்ரீ சூர்ணம்..பற்கள் கணிசமான அளவில் போயிருக்க வேண்டும் போல இருக்கிறது. பற்கள் இல்லாததை அந்த டொக்கு விழுந்த கன்னம் காண்பித்துக் கொடுத்தது.உற்சாகமான முகம். வாய் எப்போது பார்த்தாலும் ஏதோ கீர்த்தனை ஒன்றை முணுமுணுத்துக் கொண்டு இருக்க...
” ஸார் வாள் உங்க ஆஃபீஸா?”
என் நண்பன், கல்யாணமொன்றில் அவரை அறிமுகப் படுத்தி வைக்க, அவர் கேட்டது இது!
திருநெல்வேலி பக்கம் போல இருக்கிறது. அங்கு தான் இப்படி “ஸார் வாள்’ என்று கூப்பிடுவார்கள்.
அவர் பக்கத்தில் அமர்ந்து உண்ணும் சந்த்ர்ப்பம் கிடைத்தது. மனுஷர் விடவில்லையே..எல்லா ஐட்டங்களையும் இரண்டு தடவை..மூன்று தடவைக் கேட்டு வாங்கி சாப்பிட்டார்! துளிக் கூட லஜ்ஜை படாமல்!
ஷுகர்,அல்சர்,ப்ரஷர் என்று ஒரு மினி சூப்பர் மார்க்கெட்டையே உடம்பில் வைத்திருந்த எனக்கு அது ஒரு அதிசயமாக இருந்தது!எங்கு சாப்பிட சென்றாலும் கூடவே பயம் வந்து விடும்! எல்லாமே ரொம்ப ’லிமிட்’டாகத் தான் சாப்பிடுவேன் நான்.அவர் சாப்பிடுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து,பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவி சொன்னாள்: ‘இப்படி சாப்பிடுவது கூட ஒரு வித வியாதி என்று!’ நண்பன் சொன்னான் ’அவர் நல்ல வேலையில் இருந்தவராம். பிள்ளைகள் எல்லாவற்றையும் நன்றாகப் படிக்க வைத்து நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்ததில் எல்லா ‘ஐவேஜும்’ கரைந்து விட்டது! மனைவியும் கண்ணை மூடி விட தனியராகிப் போனார். அப்பாவிடம் ஒன்றுமில்லை என்று தெரிந்ததும், பசங்களும் கை கழுவி விட, இப்போது சாப்பாட்டுக்கே கஷ்டமாம்!பென்ஷன் எதோ ஆயிரத்து ஐநூறு வருமாம்! அவருடைய ரேஞ்ச்க்கு அது ஒரு வார சாப்பாட்டிற்கே பத்தாது. நல்ல வேளையாய் மனுஷனுக்கு நெருப்பு பெட்டி போல வீடு ஒன்று இருந்ததோ, பிழைத்தார்.’
எனக்கு அவரை ரொம்பப் பிடித்து விட்டது. ரொம்பவும் விதூஷகமாய் பேசுவார்.ஏதோ சில பேரைப் பார்த்தாலே (அவர்களை முன்னே..பின்னே கூடப் பார்த்திருக்க மாட்டோம்)அப்படியே அப்பிக் கொண்டு விட வேண்டும், நாள் பூராய் பேசிக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஒரு பாசம்...ஆசை. சில பேரைப் பார்த்தால் காரணமில்லாமலே கோபம்..எரிச்சல் எல்லாம்.. .முன் ஜென்ம பந்தம் தொடர்கிறதோ? என்னவோ?
”ஸார் வாள் என்ன பார்க்கிறேள்..என்னது இது இப்படி சாப்பிடறானேன்னு பார்க்கிறேளா?
பாழும் வயிறு இருக்கே..என்ன பண்றது சொல்லுங்கோ?”
திகைப்பூண்டை மிதித்தாற் போல துடித்துப் போய் விட்டேன்...”ஸாரி..ஸார்..ஸாரி ஸார்” என்று ஏனோ நாக்கு குழறியது ஏகத்துக்காய்!
“அதுக்குப் போய் எதுக்கு ஸாரி சொல்றேள்?, அம்பி கொஞ்சம் ரஸம் இந்த தொன்னையிலே விடேன்’ என்று தன் வேலையைக் கவனிக்க ஆரம்பிக்க, நான் கை கழுவிக்
கொண்டேன்.
இது நடந்து ஒரு பத்து நாள் இருக்கும். ஏதோ வேலையாய் ராமனாதன் ஆஸ்பிட்டல் பக்கம் போய்க் கொண்டிருந்தேன். எதிர்த்தார்போல் ஸார் வாள்!
அவருக்கு நான் ஸார்வாள்! எனக்கு அவர் ஸார்வாள்!
“ அடேடே..ஸார்வாளா, செளக்யமா?”
“ செளக்யம் ஸார்.. நீங்க இங்க எப்படி?” எனக்கும் அவரைப் பார்த்ததில் பரம சந்தோஷம்!
” எங்க வேணா இருப்பேன் சார், நான்” என்று சொன்னவர் “ ஸார் ஒரு காஃபி சாப்பிடலாமா” என்றார்.
எனக்கு அவருடன் பேச வேண்டும் என்று கொள்ளை ஆசை.
“ காஃபி என்ன ..டிபனே சாப்பிடலாம்”
பக்கத்தில் மணீஸ் கஃபேக்குள் நுழைந்தோம்.
“ என்ன சார் வேணும்?” என்றார் சர்வர்.
“ சார் நீங்க” என்றார் சார்வாள்.
“ சார் நீங்க சொல்லுங்கோ.. நீங்க தான் என் கெஸ்ட்” என்றேன் பெருமையுடன்!
“ அப்பா..ரெண்டு இட்லி..மஸால் தோசை..ஆனியன் ஊத்தப்பம் ரெண்டு..பொங்கல் வடை...” மனுஷர் சொல்லிக் கொண்டே போனார். நல்லவேளை அப்போது தான் பேங்குக்கு போய் விட்டு வந்திருந்தேன்..கையில் வேணும்கிற அளவுக்கு பணம் இருந்தது!
என்னை துளிக் கூட ஏறெடுத்தும் பார்க்காமல் மனுஷன் சாப்பிட்டார். எனக்கு ஒரு லோட்டா ஷுகர்லெஸ் காஃபி மட்டும்!
கிட்டத் தட்ட பில் முன்னூறு ரூபாய்க்கு பழுத்து விட்டது! எவ்வளவு சார் ஆச்சு என்று ஒப்புக்குக் கூட கேட்கவில்லை மனுஷன்! எனக்கு அது விகல்பமாயும் தெரியவில்லை! ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்தால் தானே ஏமாற்றம்!
மனம் மிக மிக திருப்தியாய் இருந்தது எனக்கு!
அடுத்த நான்காவது நாள் கரந்தையில்!
பத்தாவது நாள் சாந்தப் பிள்ளை கேட்!!
பதினைந்து நாள கழித்து, பழைய பஸ் ஸ்டாண்ட்!!
இப்போது எனக்கு நிஜமாகவே எரிச்சல் வந்து விட்டது. கையில் காசு இல்லை.பக்கத்தில் ஏ.டி.எம் . இருந்ததால், பிழைத்தேன்!
” என்ன மனுஷர் இவர்...கொஞ்சம் கூட வெட்கப் படாமல்? இப்படி இருந்தால் எந்த பிள்ளை தான் வைத்துக் கொள்வான்?”
நான் செய்த புண்ணியம் கொஞ்ச நாள் மனுஷர் கண்ணில் படவில்லை!
காய்கறி வாங்க மார்க்கெட் பக்கம் நான்!
எதிர்த்தாற் போல ஸார் வாள்!
”அடேடே ஸார் வாள்..” உத்ஸாகமாய் அவர் என்னைப் பார்த்து வர, எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை..வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, நடையைக் கட்டினேன்.
“ஸார் வாள்..ஸார் வாள்...ஸார்.... ஸார்..”
குரல் தேய்ந்து கொண்டே வந்தது..
நான் ஏன் திரும்பிப் பார்க்கிறேன்? என்ன ஒரு ஈன ஜன்மமோ?
ஆனால் இரவு எனக்கு தூக்கம் வரவில்லை! ஏதோ தப்பு செய்தது போல் ஃபீலிங்! முதலில் அவரை எண்டெர்டெயின் பண்ணினது நான் தானே..ஒரு சகோதரன் போல
உரிமையில் தானே சாப்பிட்டார்..
எனக்கு இதற்கு என் செயலுக்கு ஒரு ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும் என்கிற ஆசை...அது சூரிய உதயத்தில் வெறியாகிப் போக...
அவர் இருந்த இடமெல்லாம் தேடினேன்.
ஊஹூம்..அவரைக் கண்ட பாடில்லை!
“ என்ன சார் பார்க்கிறீங்க..அவருக்கு ஆக்ஸிடெண்ட்.. நேற்று ராத்திரி லாரிக் காரன் ஒர்த்தன் அடிச்சுட்டுப் போய்ட்டான்.ஆள் ஸ்பாட்டிலேயே அவுட்!”
”ஐயையோ...”
ஒடுங்கிப் போய் விட்டேன், ஒடுங்கி!
ஒருவாறு சமாளித்துக் கொண்டு, பக்கத்து ஐயர் கடையில் பொங்கல் பொட்டலம் ஒன்று வாங்கி, என் வீட்டு காம்பவுண்ட் சுவற்றில் வைத்து விட்டுக் காத்துக் கொண்டிருந்தேன்.
” கா..கா...க்கா...”
நாபியிலிருந்து என்னை அறியாமல் கத்தி...கதறிக் கொண்டிருந்தேன். ஒரு காகம் சடாரென வந்து, அந்த பொட்டலத்தை காலால் தட்டி விட்டுச் சென்றது!
“ ஸார் வாளுக்கு எம் மேல இன்னுமா கோபம் தீரலே”
என் கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர்!

Monday, February 14, 2011

காதலில் விழுந்’தேன்’!!!

பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன்.
நான் கதையைத் தேடி எங்கும் போவதில்லை!
செல்போனில் யாரோ,யாருடனோ பேசினால் கூட எனக்கான கதை அங்கு காத்திருக்கும்.
”சார்..எப்படி இருக்கீங்க..உங்களோட பேசி ரொம்ப நாளாச்சு”
“..........”
“ எப்ப டில்லி போகப் போறீங்க?”
“ உடம்ப ஜாக்ரதையாப் பார்த்துக்குங்க. அங்க இப்ப ரொம்ப குளிரு”
“................”
இப்படியாகத் தானே பேச்சு நடந்து கொண்டிருந்தது. என் பின்சீட்டிலிருந்து!
“ அப்ப நான் சொர்ணாங்கறவங்களை லவ் பண்றேன்..அவங்களும் என் கேஸ்ட் தான். சப் செக்ட் கூட எங்களுது தான். எங்க அப்பா ஸ்டேட் கவர்ன்மெண்ட்.அவங்க அப்பா சென்ட்ரல்
கவர்ன்மெண்ட்.”
’அப்ப செம்புலப் பெய நீரார் போல அன்புடை நெஞ்சம் தாம கலந்ததுவேன்னு லவ் பண்ண வேண்டியது தானே’- நான் மனத்துள் நினைத்துக் கொண்டேன்.
‘ரொம்ப படபடப்பா இருந்துச்சு. அப்பா என்ன சொல்வாங்களோ..அம்மா என்ன சொல்வாங்களோன்னு..ஆனா என்ன ஆச்சர்யம்! எல்லாரும் க்ரீன் சிக்னல் காட்ட எனக்கு
ச்சேன்னு ஆயிடுத்து.லவ்வுன்னா ஜிவ்வுன்னு ஏறணும்.ஆனா நம்ம கேசில் அது ஜவ்வு மாதிரி போயிடுத்து..’
நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன் நான்!
“ நாம லவ் பண்ற பொண்ணுக்கு அக்கா இருந்தா நல்லதுங்க..அது பேரச் சொல்லி கொஞ்ச நாள் ஓட்டலாம். அக்காக்கு கல்யாணம் ஆனதும் நம்ம கல்யாணம் வைச்சுக்கலாம்னு சொல்லி ஒரு இரண்டு, மூணு வருஷம் ஓட்டலாம்..”
“ ...உடனே கல்யாணம் பண்ணிக்கக் கூடாது.கொஞ்ச நா ஜாலியா இருந்துட்டுத் தான் தாலியே கட்டணும். இப்பவே கல்யாணம் கட்டிக்கிட்டா லைஃப் சப்புனு போயிடும். நம்மளை சைட் அடிக்க விட மாட்டாளுக! ஜவுளிக் கடை நுழைந்தால் நமக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிடும். அது தான் கொஞ்ச நா கழிச்சு கல்யாணம்னு சொல்லியிருக்கேன்..”
எனக்கு துக்கம் துக்கமாய் வந்தது.இதோ என் ஸ்டாப். நான் இறங்கணுமே..
எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்கிறது போலும்!
“ சரிங்க .என் ஸ்டாப் வந்தாச்சு.. நான் இறங்கணும். அப்புறம் பேசலாம்”
அவனும் ஸ்டாப்பில் இறங்கினான்.
அவனை தீர்க்கமாகப் பார்த்தேன்..கச்சலான உடல். மனுசனை வசீகரம் செய்ய எந்த சங்கதியும் அவனிடம் இல்லை..குச்சி..குச்சியாய் கை கால்கள். போதாக் குறைக்கு தாடி வேறு?
தவிர காதலுக்கு கண்ணில்லை என்பார்களே..அதைப் போல் இவனிடம் எதைப் பார்த்து அவள் மயங்கினாளோ?
மேலும் இந்த காலத்து இளைஞர்களுக்கு காதலில் விழுந்தேன் என்று சொல்வதே ஒரு சிற்றெறும்பு தேனில் விழுந்த சுகம் தரக் கூடியதோ?
நாலு அடி தான் போயிருப்பான். மறுபடியும் ஒரு ஃபோன்!
காதல்... என்பது எவ்வளவு அந்தரங்கமான விஷயம்! அதைப் போய் நாலு பேர் கேட்கும் படியாய் பஸ்...ரோடு போன்ற பொது இடங்களில் உரக்கப் பேசுகிறானென்றால்..
எனக்குள் ஒரு மின்னல்!
அட ..இவனே எதாவது கற்பனை பண்ணிக் கொண்டு அது ஏன் கட்டுக் கதையாய் இருக்கக் கூடாது?
இவன் ஒரு அன் எம்ப்ளாய்ட் யூத்! வீட்டில் வேளாவேளைக்கு திட்டு!
அன்பைத் தேடி அலைகையில் அதற்கு காதல் என்று பூச்சூட்டி...
மாஸ்லோவின் SELF ESTEEM EGO க்கு அடுத்தபடி இளைஞர்கள் ‘காதலில் விழுந்தேன்’
என்று சொல்வதே ஒரு மேனியாவோ?
எங்கோ “ வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மீளாக் காதல் நோயாளன் போல்’ என்கிற ஆழ்வார் பாசுரம் கேட்டது.
அட இன்றைக்கு வாலேண்டேன்ஸ் டே!

Friday, February 11, 2011

ஆறு ஓடுகளும், நான்கு சவுக்கு மரங்களும்!!

கொலை!
திட்டமிட்டு ஒரு கொலை!
மன்னிக்கவும்...
ஒரு கொலை அல்ல..
நான்கு கொலைகள்!
பட்டபகலில்...
அதுவும்..
ஆரண்ய நிவாஸத்தில்!
கேவலம் ஒரு
முன்னூற்று ஐம்பது ரூபாய்
கூலிக்காசுக்காக..
இரண்டு ஆட்கள்
நான்கு கொலைகளை,
சர்வ சாதாரணமாய்,
செய்து விட்டுப் போக,
அந்த நான்கு ‘பாடி’களும்
DISPOSE செய்யப் படாமல்,
கட்டையாய் வாசலில்,
ஒரு வாரமாய்
பரிதாபமாய்..
காத்துக் கொண்டிருக்க,
ஒருவர் கூட,
இந்த அநியாயத்தைத்
தட்டி கேட்காமல்..
அவரவர் காரியமாய்
போய்க் கொண்டிருக்க,
எந்த இ.பி.கோ.
செக்‌ஷனாலும்
சுட்டிக் காட்ட முடியாதபடி
ரத்தம் என்பது
துளிக்கூட சிந்தாமல்,
ஒரு க்ரைம்!
ஏற்பாடு செய்த நான்
துளிக் கூட குற்ற உணர்ச்சி
இல்லாமல்!
ஆனால்,
வாசலில் கிடந்த
அந்த ‘சவம்கள்’
என் இரும்பு மனதை
கொஞ்சம் கொஞ்சமாய்
பிசைய ஆரம்பிக்கவே,
இதோ உங்கள் முன்..
நான் ’சரண்டர்’
ஆகி விட்டேன்!
விஷயம் இது தான்!
’வாடிய பயிர்
கண்டு வாடினேன்’
என்ற வாடிய
பயிருக்கே வாடிய
வள்ளலார் வாழ்ந்த
மண்ணில்,
வாடாமல்,
தளதள வென்று
நன்றாகவே வளர்ந்து
கொண்டிருந்த நான்கு
சவுக்கு மரங்களை,
கேவலம் அவை
காற்றில் ஆடி,
மாடி ஓடுகளை
கீழே தள்ளி விடுகிறது,
என்கிற அற்பமான
காரணத்தினால்,
வெட்டி வீழ்த்தியுள்ளேன்!
தன் கை கண்ணை
குத்துவதால் யாராவது,
கை தனை வெட்டுவார்களா..
என்னைத் தவிர?
அந்த படு பாதகச்
செயல் செய்த
மாபாவி நான்!
மரங்களை
நேசிக்கிறேன்,
ஸ்வாசிக்கிறேன்
என்று உங்கள் முன்
மார் தட்டி
பெருமையாய் சொன்ன,
அதே ஆர்.ஆர்.ஆர்.
இப்போது,
உங்கள் முன்
தலை குனிந்து!!!!!!

Tuesday, February 8, 2011

இழக்கக் கூடாதது!

".... புல்லாக்குழலை எடுத்து வாசிப்பது தேவ குணம்..வாசிக்கத் தெரியாவிட்டால் பெட்டியில் வைப்பது மனித குணம்.அதை வைத்து அடுப்பு ஊதுவது..?"

* * * * *
கடிதத்தைப் பிரித்தான் பார்த்திபன்.
முத்துமுத்தான கையெழுத்து, அவனுக்கு இனம் காட்டியது. காயத்ரி!
' சஹ ஹ்ருதயருக்கு.."
என்று ஆரம்பித்தது அந்தக் கடிதம்!
மேலும் படித்தான்.
' காயத்ரி எழுதுவது. இங்கு வந்து ஆறு மாதங்களாகி விட்டது. இன்னமும், உங்களிடமிருந்து ஒரு லெட்டர்..கேவலம் ஒரு கார்டு கூட வராத நிலையில் எழுதுகிறேன். இது பரிதவிப்போ..ஆசையோ..உங்கள் மீது கரிசனமோ..அல்லது என் இயலாமையின் வெளிப்பாடோ.. இல்லை!
..கடிதம் என்றவுடன் ஞாபகம் வருகிறது. திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் என் அப்பா லெட்டர் போட்டிருந்தார். ' யார் உனக்கு லெட்டர் எழுதியது' என்று துருவி,துருவி நீங்கள்
கேட்டது எனக்கு விழுந்த முதல் அடி!
' என் அப்பா' என்று நான் சொன்னதுக்கு அதை நம்பாமல் கல்யாணப் பத்திரிகை எடுத்து பெயரை...இனிஷியலை verify செய்தீர்களே?
இது எனக்கு கிடைத்த இரண்டாவது அடி!
(... என்னடா பெரிய இழவாப் போச்சு! புருஷங்காரன் பொண்டாட்டிக்கு லெட்டர் வந்தா, என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டானா?)
மேற்கொண்டு படித்தான், பார்த்திபன்.
' போகட்டும்..கல்யாணமாகி இரண்டு வருடங்களாகிறதே..எங்காவது வெளியில் ஒரு சினிமா..ட்ராமா..என்று கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று தோன்றியதா உங்களுக்கு ? வெட்கத்தை விட்டுக் கேட்டால், கல்யாணத்துக்கு முன்பு கண்டவனுடன் வெளியில் சுற்றியிருப்பாய்..அதெல்லாம் இங்கு நடக்காது என்று சம்பந்தா,சம்பந்தமில்லாமல் பேசினீர்களே..தெருவிலே என்னைப் பார்ப்பது அபூர்வம் என்று என் தோழியரே சொல்லிக் கேடிருக்கிறேன்...எனக்கு இந்த பேச்சு தேவை தானா? ஒரு படித்த, பண்புள்ள ஆண்மகன் பேசும் பேச்சா இது?'
( ஆமாம்..அப்படித் தான் பேசுவேன்..கோபத்தினால் பற்களை நற நறவென கடித்தான். நெற்றிப் பொட்டு இலேசாக துடிக்க ஆரம்பித்தது.)
'..ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு. நம் 'மேரேஜ் டே' அன்று புதுப் புடவை கட்டிக் கொண்டு, உங்களை வரவேற்க ஆவலுடன் வாசலில் காத்து இருந்தேன். அன்று கூட ' எவன் இன்று வருகிறான்/' என்று நக்கலாய் கேட்டீர்கள்.பொறுக்க முடியாத எரிச்சலில் ' இப்ப எம்புருஷன் வர்ர நேரம். அவனை நாளைக்கு வரச் சொல்லத் தான் காத்துக் கிட்டு இருக்கேன்' என்று நான் சொன்னதுக்கு, பழுக்க பழுக்க இரும்புக் கரண்டி கொண்டு காய்ச்சி இழுத்தீர்களே, பாவி...'
( என்னடி மரியாதை குறையுது? ஆயிரம் மைல் தள்ளி நின்னா, என்னவேணாலும் எழுதலாங்கிற தைரியமா? இங்க தானே வந்தாகணும்.....உன்னை..கழுத்திலுள்ள பச்சை நரம்பு புடைத்து, கைகளை ஒரு விதமாக முறுக்கிக் கொண்டான், பார்த்திபன்)
கடிதம் மேலும் தொடர்ந்தது.
'...அப்பப்பா...என்ன அவஸ்தை? உங்களுடன் குப்பைக் கொட்டிய அந்த நரக நாட்களை இப்போது நினைத்தாலும் போதும்..உடம்பு முழுவதும் நூறு கரப்பான் பூச்சிகள் ஊர்வது போல் ஒரு அருவெறுப்பு!
தன்னம்பிக்கை குறைந்து..எனக்கு நானே பேசிக் கொண்டு..என்ன அவஸ்தை இது? சமயத்தில் குறை உங்கள் மீதா..அல்லது என் மீதாஎன்று எனக்கே சந்தேகம் வந்து விடும்? அவ்வப்போது ஜன்னல் வழியே ( வாசல் கதவைத் திறக்க முடியாது.பூட்டி விட்டு சாவியை ஆஃபீசுக்கு எடுத்துக் கொண்டு சென்று விடுவீர்களே!) தெருவில் போகும் மனிதர்களைப் பார்த்து, குறை என் மீது இல்லை என்று எனக்கு நானே சமாதானப் படுத்திக் கொள்வேன்.
புல்லாங்குழலை எடுத்து வாசிப்பது தேவ குணம். வாசிக்கத் தெரியாவிட்டால், அதற்கு உரிய மரியாதை கொடுத்து, உள்ளே பெட்டியில் வைப்பது மனித குணம். அதை வைத்து அடுப்பூதுவது அரக்க குணம்.ஆனால் அந்த புல்லாங்குழலையே நெருப்பில் போட்டு பொசுக்குவதை என்னவென்று சொல்வது?
வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண்..கேட்டதெல்லாம் கிடைப்பதால், செல்லம் கொடுத்து, வளர்க்கப் பட்ட பெண்களுக்கே உரித்தான திமிரும்..பிடிவாதமும் இல்லாத நற்குணம்...பெண் விடுதலைப் பற்றி கல்லூரி பேச்சுப் போட்டிகளில் பரிசு வாங்கிய திறமை..படிப்பில் முதல் மூன்று ரேங்க்குக்குள் வரும் புத்திசாலித்தனம்...
எல்லாமே உங்களிடம் வந்து இப்படி பஸ்மமாகிப் போய் விட்டதே!
இந்த கடிததின் ஆரம்பத்தில் சஹ ஹ்ருதயரே என்கிற 'ஸல்யூட்டேஷன்' கூடஒரு சராசரி இந்தியப் பெண்ணின் மேன்மையை தன் பதி பற்றி குறிப்பதற்காகத் தான்!
(கடிதத்தை மேலும் தொடர்ந்தான், பார்த்திபன்.)
கடைசியாக ஒன்றே ஒன்று.
உங்களிடம் இத்தனை வருடம் குடித்தனம் நடத்தியதில் இழக்கக் கூடாத ஒன்றை இழந்து விட்டேனோ என்று தோன்றுகிறது.
தாலி கட்டிய கணவனிடமே ஒரு பெண் தான் சோரம் போய் விட்டதாகக் கருதினால் அது எவ்வளவு பெரிய சோகம் என்பது தங்களுக்குப் புரிகிறதா, மிஸ்டர் பார்த்திபன்!?'

இந்நேரம் கடிதத்தைப் படித்துக் கொண்டிருப்பானோ என்கிற நினைப்பு வர,
மனம் குமைந்து குலுங்கி,குலுங்கி காயத்ரி அழுதுக் கொண்டிருக்க.....
அதே சமயம், அந்த கடிதத்தை சுக்கு நூறாய் கிழித்துக் கொண்டிருந்தான், பார்த்திபன்!
(பின் குறிப்பு: இந்த சிறுகதை ராஜம் ஆகஸ்ட் 1993 இதழில் வந்தது)