Monday, June 5, 2017

விமர்சனம்...

விமர்சனம்...
----------
விமர்சனம் என்று தலைப்பிட்டாலும்,இது விமர்சனமல்ல...ஒரு அறிமுகம்...
அறிமுகம் என்றாலும் அது நமது நண்பர் திரு மோகன்ஜிக்கான அறிமுகம்
அல்ல..அவர் எழுதிய 'பொன் வீதி' என்கிற இந்த சிறுகதை தொகுப்பிற்கு!
சரி விமர்சனத்துக்கு வருவோமா?
ஒரு சிறுகதையின் பலமே,அது முடிந்தது என்று தெரிந்தும் இந்த
மடமனது,ஆவலுடன் அடுத்த பக்கத்தில் ஏதோ ஒரு ஆர்வத்தில் தேடும்,ஏதாவது
பாக்கி இருக்கிறதா,என்று?
இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் அப்படிப் பட்டவை..
'சமர்ப்பணம் ஜெயகாந்தனுக்கு' என்று போடும் போதே நினைத்தேன்.
ஆசிரியர்,என்னை ஏமாற்றவில்லை!
அவருடைய 'வானவில் மனிதன்' என்கிற ப்லாக்கில் வந்த சிறுகதைகள் தான் இவை!
இருந்தாலும் படிக்க படிக்க வாசிப்பவனை தூண்டுமாறு அமைந்த சிறுகதைகள்..
காதல் என்பது ஒரு மெல்லிய, நுண்ணிய சிக்கல் சிறிதுமிலா ஒரு
உணர்விழை...அந்த இழை அறுந்து விடாமல் வெகு ஜாக்கிரதையாக
கையாளப்பட்டிருக்கிறது, இவர் கதைகளில்.
எல்லா உறவுகளும் நீர்த்துப் போய் விட்ட பரபரப்பான இந்நாளில் பவித்தரமான
காதலும் தேய்ந்து கட்டெறும்பாகத் தான் போய் விட்டது..உணர்வுகளின்
சங்கமமாய் இருந்த காதல் கடிமணமானது, தேவைகள் என்று அளவிற்கு
சுருங்கி,இப்போது பேராசை எனும் மாய சிலந்தி வலைக்குள் சிக்கி, Usha of
HCL weds Ramesh of TCS என்று ஒரு business merger என்கிற அளவிற்கு
விகாரப்பட்டுத் தான் போய். விட்டது.இருந்தாலும், நல்ல வேளையாக இந்த
தொகுதியில் உள்ள சிறுகதைகள் எல்லாமே இக்காலகட்டத்திற்கு முற்பட்டவை
என்பது ஒரு ஆறுதலான விஷயம்...
இருபத்தொன்று சிறுகதைகள் ஒவ்வொன்றையும் விமர்சிக்க ஆரம்பித்தால்,
வாசகனின் சிரத்தை குறைந்து விடும்,என்பது என் பயம்..அதனால் தான் இந்த
பொதுவான விமர்சனம்..
திரு மோகன்ஜியிடம் ஒரு விண்ணப்பம்..இந்த சிறுகதை தொகுதியின் தலைப்பு
கதையான இந்த 'பொன் வீதியை' ஒரு கதை சொல்லியாக என் வீடியோ க்ளிப்பிங்கில்
கொண்டு செல்ல ஆசை...அனுமதி தருவீர்களா ஜீ?
'நம்மிடம் பிரிந்து செல்லும் பணத்தை விட கிடைக்கும் பொருளின் மதிப்பு
அதிகமாக இருக்க வேண்டும்' என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு வாசகனையும்
,நாம் செலவு செய்யும் 125 ரூபாய்க்கு இந்த சிறுகதை தொகுதி ஏமாற்றவில்லை
என்று அடித்து சொல்லுமாறு மனிதர் வெகு அழகாக கையாண்டிருக்கிறார்!
அந்த ஒரு 'ரிச்னஸ்'காகவே,என் இலக்கிய நண்பர்களுக்கு இதை பரிசாக
அளிக்கலாமென்றிருக்கிறேன்..
எழுதியவர் வேறு எங்கும் இல்லை..
உங்கள் விரல் நுனி mohanji.ab@gmail.com என்று அடிக்கும் தூரத்தில் தான்
இருக்கிறார்...
கடைசியாக ஒன்று..
கமாஸ் என்றொரு ராகம்..ஆலாபனைக்கு முன் உங்களை 'சுகமா..சுகமா' என்று
கேட்டு கொண்டு தான் ஆரம்பிக்குமாம்..அது போல, இந்த புத்தகத்தை தொடுவதற்கு
முன், ஏதாவது வேலை இருந்தால், அதை முடித்து விட்டு மனதை ரிலாக்ஸ்டா ஆக
வைத்து விட்டு படிக்க ஆரம்பியுங்கள்,ப்ளீஸ்.
ஏனென்றால்,பாதியிலேயே நிர்கதியாய் இதை விட்டு விட்டு வேறு வேலை பார்க்க
உங்களால் இயலாது...படிக்க ஆரம்பித்து விட்டால் இதை முடித்து விட்டு தான்
மறு வேலை பார்க்கும்படியாக இருக்கும்..
ஆம்,

என் அனுபவம் அப்படி!

Wednesday, May 17, 2017

"நம்ம வேணுவோட அப்பாவா போயிட்டார்....அடப்பாவமே!"
"ஆமாம்....கொஞ்ச நாளா படுத்த படுக்கையாக இருந்தார்.."
"இப்படி ஒரு க்ரூஷியல் டயத்திலேயா போகணும்.."
"அவன் ஒரு கஞ்சப் பிசினாறி..நல்ல டாக்டர்ட்ட அப்பாவை காமிக்கலாமில்லையா?"
"எதுக்கு..நம்ம கம்பெனி ஆஸ்பத்திரி தான் இருக்கே?"
"நான் அதுக்கு சொல்லலைப்பா..நல்ல 'ரிச்'சா ட்ரீட்மென்ட் கொடுத்தா,ஒரு பத்து பதினைஞ்சு
நாளாவது தாங்குவாரோன்னோ..அதுக்குத் தான் சொன்னேன்"
"கேட்டேனே..மெடிகல் இன்ஸ்யூரன்ஸ் அப்பாக்கு எடுத்திருக்கானாம்..நம்பர்  ஒன் ஆஸ்பிடல்ல
தான் ட்ரீட்மென்ட் பண்ணினாம்..நல்லாத் தான் கவனிச்சிண்டாங்களாம்.."
"பாவம்..அவனுக்கு தான் கொடுத்து வைக்கலை!"
"ஐயையோ..இந்த விஷயத்தை அவனிட்ட சொல்லிட்டியா, நீயி?"
"டேய்..அவனே ஹார்டு பேஷண்ட்..ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுத்துன்னா.."
"அவ்ளவ் மடையனாடா, நான்? பக்குவமாத் தான் சொன்னேன்.....'டேய் வேணு..அதிர்ச்சி அடையக்கூடாது..மனசை திடப்படுத்திக்கோ..நம்ம எல்லார்லியும் உன் ஒருத்தனுக்கு மட்டும் தான் இப்படி ஆகணுமான்னு
நாங்க எல்லாரும் ரொம்பவே வருத்தப்பட்டோம்னு ரொம்ப பீடிகை போட்டுண்டு  தான் அவன்ட்ட இந்த விஷயத்தை  பக்குவமா சொன்னேன்.."
"அதுக்கு அவனோட ரிஆக்‌ஷன் எப்டி இருந்தது?"
"'ஆண்டவனே..நான் ஒருத்தன் மட்டும் என்ன பாவம் பண்ணினேன்..இந்த ஒலகத்திலேயே எனக்கு மட்டும் ஏன்  இப்படி அடி மேல அடியா துக்கம் வரணும்னு' அவன் சொல்லிண்டே இருக்கும் போது கரகரன்னு அவன் கண்ணிலேர்ந்து தண்ணி..பக்கத்துல இருக்கறவா கூட 'அவன் அப்பா போனதுக்குக் கூட இப்படி வருத்தப்பட படலே..என்ன விஷயம் சொன்னேள்னு என்னை பிலுபிலுன்னு பிடிக்க ஆரம்பிச்சுட்டா..அவாள்ட்டேயும் அதை சொன்னவுடனே, 'அட துரதிர்ஷ்டம் பிடிச்சவனே!'ன்னு அவனை பரிதாபமா பார்த்தா எல்லாருமே!"
"சரி..சரி..இந்த மாதிரி சமயத்திலியா அவன் அப்பா போணும்?பாவம்டா அவன்!"
"நாங்கள்ளாம் காலைல வரோம்னு சொன்னியா?"
"சொல்லிட்டேன்...ஜாஸ்தி பேசாம நீங்க எல்லாருமே ரொம்ப ஜாக்ரதையா அவன் அப்பா போன துக்கம் மட்டும், கேட்டுட்டு வந்துடுங்கோ!"
"ஆமாமா.. மறுபடியும் இதை  அவன்ட்ட சொல்லி அவன் வேதனையை யாரும் கிளற வேண்டாம்.. அவன் அதிர்ஷ்டம் .பத்து நாள் உயிரை கைல பிடிச்சுண்டாவது அவன் அப்பா இருந்திருக்கலாம்..என்ன பண்றது?
நம்ம வேணு கொடுத்து வச்சது அவ்ளவ் தான்!
நம்ம மேனேஜர் பத்து நாள் மும்பைக்கு டூர் போன சமயத்திலா அவன் அப்பாவும் இப்படி உயிரை விடணும்?"

.......

Tuesday, May 9, 2017

என்சைகிளைபிடிஐயா!

என்னை என்றுமே சைக்கிள் ஈர்த்ததில்லை ...
கையில் கொஞ்சம் காசு கிடைத்தால்,(அதாவது ஆங்கரை கிராமத்திலிருந்து செருதூரில் உள்ள LBHS செல்ல, பஸ்ஸிற்கு கொடுக்கும் பத்து காசு..நாங்கள் நடந்தே ஸ்கூல் போய் சேமிக்கும் பத்து பத்து காசுகள்!) அதை வாடகை சைக்கிள் காரனிடம் குடுத்து முட்டியை பெயர்த்து கொள்ளும் ஆசையெல்லாம் எனக்கு எப்பவுமே  கிடையாது..அந்த காசுகளை சேர்த்து, கிராமத்தில் ஒரு வீட்டு திண்ணையில் நண்பர்களுடன் கடை பரப்புவோம்..சாக்பீஸ் துண்டுகளை சம்பளமாக கொடுத்து சின்ன பசங்களை 'லவா லவா லக்கி ப்ரைஸ்' என்று கூவ செய்வோம்..
ஒரு பெரிய கார்டு போர்ட்..அதில் பாதி ஏரியாவுக்கு window display!
அதாவது, ஒரு ஸிம்பன்சி வால் பேப்பர்...ஒரு ஜீப்...கலர் சாக்பீஸ்..கொக்கு குண்டு (கோலி குண்டின் பெரியம்மா!)என்று பரிசு பொருட்கள் அலங்கரிக்க,மறு பாதியில் கலர் பேப்பர் எட்டு துண்டுகளாக மடிக்க வைக்கப்பட்டிருக்கும். ஐந்து பைசா குடுத்து ஒரு பேப்பர் எடுக்கலாம்..பிரித்து பார்த்தால் முக்கால் வாசி மடித்து வைக்கப்பட்ட பேப்பரில் NP ( no prize) என்று எழுதி இருப்போம்..ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணினவர்களுக்கு ஆரஞ்சு பெப்பர்மெண்ட் வேண்டுமானால் கிடைக்கலாம்..அடுத்த சான்ஸ்க்கு இன்னொரு ஐந்து பைசா கொடுத்து தம்தம் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்த்துக்  கொள்ளலாம்...
எங்களிடம் ஏமாந்த எங்கள் கிராமத்தை சேர்ந்த சீமாச்சு என்கிற ஶ்ரீநிவாசன் ஐ ஐ டி யில் படித்து அமெரிக்காவில் வேலை கிடைத்து, க்ரீன் கார்ட் வாங்கி, லாஸ் வேகஸ் காஸினோகளில் ஏமாந்திருக்கிறான் என்பது நான் உங்களுக்கு அளிக்கும் உபரி தகவல்!
     சேமித்து வைத்த காசுகள் இந்த முறையில் recycle ஆகுமேதவிர, மற்றபடி எனக்கும் சைக்கிளுக்கும் வேறு எந்த விதமான ஸ்நானப்ராப்தியும்   கிடையாது!
எதற்கு இவ்வளவு பில்டப் என்கிறீர்களா?
   ஏதோ சைக்கிளை பற்றி எழுத வேண்டுமென தோன்றிற்று!

Thursday, April 13, 2017

டிக்...டிக்.....டிக்.....
 எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி கடிகாரம் செவ்வனே தன் கடமையை செய்து
கொண்டிருந்தது.
 குழுமியிருந்த யாரும் பேசவில்லை.
 ஒரு மெல்லிய சோகம் எல்லார் முகங்களிலும்!
 ஆழ்மௌனத்தை கலைத்தான் ஒருவன்.
  "இன்னும் இரண்டு மணி நேரம் தாங்கினாலே ஜாஸ்தி"
 கட்டிலைப் பார்த்தோம். அவன் சொன்னது சரி. மூப்பு கொஞ்சம் கொஞ்சமாக
ஆக்கிரமித்து கொண்டிருக்க, அதனால், கொஞ்சம்,கொஞ்சமாக குறுகிக் கொண்டிருக்க....
  "எப்டி dispose பண்றது?"
   ச்சே ....என்ன மனுஷன் இவன்...
    " It will take it's own course"
    இன்னும் விடியவில்லை...
    நேரம் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருந்ததை எல்லாராலும் உணர முடிந்தது.
     கவிந்திருந்த சோகத்தை சட்டென்று புறம் தள்ளுவதைப் போல...      "க்வா....க்வா...."            அனிச்சையாய் ஒரு வித உற்சாகம்
     கவ்விக் கொள்ள......
     குரல் வந்த திசையை நோக்கி எல்லாரும் ஓட...
      அதே சமயம்,
       "It will take it's own course" என்று
      சொன்னதிற்கு ஏற்றார் போல்.....
      கற்பூர கட்டி காற்றில் கரைவது மாதிரி....
       கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது துர்முகி!
       
          
       
        

     
      
    

Thursday, January 5, 2017

நெய்யாற்றங்கரையில் குடும்பம் இருந்தது. நாகர் கோவிலில் வேலை.வேப்பமூடில் ரூம் எடுத்து தங்கி இருந்தான்.அடிக்கடி, 'ட்ரவேண்டரம் போட் மெயிலி'ல்  பயணிப்பான்.க்யூ இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அந்த இரண்டாவது கவுண்டருக்குத் தான் வருவான்.அதிலும் ஒரு டசன் பேர்கள் பின்னாடி நின்றிருந்தாலும், அவர்கள் அத்தனை பேருக்கும் பெருந்தன்மையாய் வழி விட்டு, கடைசி ஆளாய் தான் டிக்கெட் வாங்குவான்.அதை அந்த கவுண்டரில் இருந்த அந்த பெண்ணும்  நன்றாக தெரிந்து வைத்திருந்தாள்.
அப்படித் தான்  அவன், ஒரு சாவதானமான புதன் கிழமை மதியம் நாகர் கோவில் ரயில்வே ஜங்ஷன் வந்த போது....
"நெய்யாற்றங்கரை தானே?"
"அட..எப்டீ கண்டுபிடிச்சீங்க?"
"அதான்,நெத்தீல எழுதி ஒட்டியிருக்கே.."
நெற்றியை பொய்யாய் தடவி பார்த்துக் கொண்டான். கவுண்டரில் இருந்த அந்த பெண்ணும் அதைப் பார்த்து சிரித்தாள்.
"சரி..ஊரை சொல்லிட்டீங்க...ஒங்க பேரு?"
"மேரி"
"........................."
"'வில் யு மேரி மீ'ன்னு ஒடனே, மனசுக்குள்ள மத்தாப்பு பறக்குமே?"
"அட...ஆமாங்க!"
"ஞானஸ்னானம் பண்ணிப்பீங்களா?"
"கங்காஸ்னானம் பண்ணுவேன்...அதுவும் தீபாவளிக்கு தீபாவளி தான்..என்னைப் போய்.."
"பயப்படாதீங்க....நாங்க முஸ்லிம்"
"நீங்க ஸ்லிம்மா இருக்கும் போதே தெரிஞ்சுகிட்டேன்..நாங்க மாப்ளாஸ்"
"அட!"
சந்தோஷத்தில் அவள் ஹம் செய்தாள்..
'உளறி கொட்டுகிறோமோ' என்று பயமாக இருந்தது.இருந்தாலும் தொடர்ந்தான்..
"ஏங்க...இது, பைரவி தானே?"
"எப்டீ கண்டுபிடிச்சீங்க?"
"கொஞ்சம் கொஞ்சம் க்ளாஸிகல் ம்யூஸிக் தெரியும்ங்க...நமக்கு அந்த பீல்டுல ப்ரெண்ட்ஸ்ங்க ஜாஸ்தி!"
"ஓ"
"ஒங்களுக்கு பைரவி நல்லா வருதுங்க!"
"நாலு பிஸ்கட்ட காசு குடுத்து, கடைல வாங்கி, நடுத்தெருல போட்டுப் பாருங்க..ஒங்களுக்கும் பைரவி வரும்!"
"கலாய்க்கறீங்களா?"
"ஊகூம்!"
"உண்மையை சொல்லுங்க..நீங்க?"
"நாங்க தேசிகர்ம்பாங்க.."
"அட...நாங்களும் தேசிகர் தாங்க...கேரளாக்கு புலம் பெயர்ந்துட்டோம்..தண்டபாணி தேசிகர் கூட எங்களுக்கு..."
"டிஸ்டண்ட் ரிலேட்டிவ் ம்பீங்களே,ஒடனே!"
"ஆமாங்க...ஒரு இருநூத்தைம்பது  கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ் .."
"ஹா...ஹா.."
"அது சரி, இந்த 'செவன்த் பே கமிஷன்'ல ஒங்களுக்கு நல்ல ஹைக் தானே!"
"இல்லீங்க, வேலைக்கு சேர்ந்து ஒண்ணரை வருஷம் தான் ஆறது..அப்பா திடீர்னு காலமாயிட்டாரு...அஞ்சாறு தம்பி தங்கைங்க..இந்த வேலை கூட 'கம்பாஸினேட் க்ரவுண்ட்'ல கிடைச்சது தான்..அம்மாக்கு அப்பாவோட பென்ஷன் வரதுனால, ஏதோ காலம் ஓடுது...நீங்க?"
"அதை ஏன் கேக்கறீங்க? எங்க வீட்ல எல்லாரும் செட்டில் ஆயிட்டாங்க..நான் ஒர்த்தன் தான் வீணா போயிட்டேன்..கால் டாக்ஸி ட்ரைவரா ஏதோ பொழைப்பு ஓடிகிட்டு இருக்கு!ஹூம்!"
       ஆழ் மௌனம், ஒன்று அநிச்சையாய் அவர்கள் இருவருக்கும் இடையே குறுக்கே புகுந்தது.
       மௌனத்தை கலைத்தான், அவன்.
       "வரேங்க!"
       "ம்"
.............................
      அடுத்த முறை ஜங்ஷன் வரும் போது, ஏனோ அவன்  அந்த இரண்டாவது கவுண்டர் பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை!
       அவள் அதை எதிர்பார்க்கவும் இல்லை!!
 

............
    

"