Sunday, January 29, 2012

டேய் ஸ்ரீதர் மாமா.......!!!!!


அந்த ஏழு நாட்கள் வந்த புதிது!
அதில் பாக்யராஜை ஆசான் என்று கூப்பிடுவார்கள்.அதே போல் வினு என்னை ஆசான் என்று கூப்பிடுவான்..அந்த பட தாக்கத்தில்! அவனுக்கு நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன்..இந்த காலத்தில் ஒவ்வொரு ரெளடிக்கும் கைத்தடிகள் இருக்கிறார்போல், எனக்கு வினு! அவன் தங்கைகள் சபிதா, விஜி என்று இருவர். சபிதாவும் என்னோட ஒட்டுதல்! ஆனால், இந்த விஜி இருக்கிறாளே கெட்டிக்காரி..அவ எங்க அம்மாட்டே,”இந்த பாத்திரத்துல என்ன இருக்கு”ன்னு கேட்க,அது வெறும் பாத்திரம் எங்க அம்மா பதிலுக்கு “அந்த சம்படத்தில பட்சணம் வெச்சிருக்கே’ன்னு சொல்ல,அதற்கு அந்த விஜி சொன்னது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.” மாமி, நீங்க பொய் சொல்றேள்..பட்சணம் வைச்சிருந்தா இது கனக்குமே இது வெறும் பாத்திரம் தானே” என்று சொல்லும் அந்த பொல்லாது..அப்ப அது எல்கேஜி! அந்த விஜியைத் தான் என்னால ’இம்ப்ரெஸ்’ பண்ண முடியவில்லை..எல்லாரும் என்னோட உட்கார்ந்து பேசும் போது, அவள் மட்டும் வர மாட்டாள்..கூப்பிட்டால், பழிப்பு காட்டுவாள்! “ஏண்டா வினு, உன் தங்கை விஜி இப்படி இருக்கா”ன்னு நான் கேட்டால், அதற்கு அவன்,”விட்டுத் தள்ளுங்கோண்ணா, நீங்க யாரு? அவ சின்ன குழந்தை தானே ...அவளோட போய் நீங்களும் சின்னக் குழந்தை மாதிரி சண்டை போட்டுண்டு?”
என்று பெரிய மனுஷன் மாதிரி பேசுவான்..
அது சரி, வினு யார்னு சொல்லலியே..முப்பத்தெட்டு பை மூணு...மூக்கப்பிள்ளை லேனு..மணிவாசக ஸ்டோரில் எங்கள் பக்கத்து வீட்டிற்கு குடி வந்தார், மிஸ்டர் ராமமூர்த்தி..அவருடைய பையன் தான் இந்த வினு!
ஆஃபீஸிலிருந்து வந்தவுடன், காஃபி சாப்பிட்டு, ஒரு ஏழு..ஏழரை வாக்கில், ஸ்கூல் ஹோம் ஒர்க்கெல்லாம் முடித்து விட்டு வினு வருவான்..கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருப்பேன்..அவனோட தாத்தாவும் எங்க ஃபெரெண்ட் தான்..ஜாலியா பொழுது போகும்..சனிக் கிழமை எங்க ’டாக்’ கொஞ்சம் நீட்டிக்கும்..அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமைங்கறதாலே!
எனக்கு ராமகுண்டம் ட்ரான்ஸ்ஃபர் ஆன பின்னும், எனக்கு அம்மா, அப்பா தம்பி,தங்கை ஞாபகம் வருவது போல்,வினுவின் ஞாபகமும் வரும், குறிப்பாய் அந்த சனிக்கிழமை மாலையும், இரவும் சந்திக்கும் பொழுதுகளில்!
எனக்கு ராஜ கோபாலன் என்றோரு நண்பன்..எங்கள் ஆஃபீஸ் தான்..எங்கள் வீட்டிற்கு வருவான்..ஊர் தில்லைஸ்தானம்..இங்கு மதுரா லாட்ஜில் ரூம் எடுத்துக் கொண்டிருந்தான்.வினுவை ஆன மட்டும் மசிய வைக்கப் பார்த்தானே..ஊஹூம்..
“வினு கண்ணா, கடலை மிட்டாய் வாங்கி தரேன்..உனக்கு கம்மர் கட்..பஞ்சு மிட்டாய் எல்லாம் தரேன்..’டேய் ஸ்ரீதர் மாமா’ன்னு...ஒரு தரம்..ஒரே தரம் தான்.. சொல்லிட்டு ஆத்துக்கு ஓடிடு..என்று ஆசை காட்ட,”வேணா, ஆசான்னு சொல்லட்டுமா” என்று வினு அவனை பதிலுக்கு வெறுப்பேற்றினான்!
இன்று வினுவை பார்த்தேன்..மிகவும் சந்தோஷமாய் இருந்தது.. நெடுநெடு வென வளர்ந்து விட்டான், அந்த காலத்தில் அவன் அப்பா மிஸ்டர் ராமமூர்த்தி இருந்தது போல்!ஒரு வாழைக் குருத்து ஆளுயர வளர்ச்சியில்..பக்கத்தில் தாய் வாழை கொஞ்சம தளர்ந்து! அது போல,பக்கத்தில் அவன் அப்பா.ராம மூர்த்தி சார்.பழைய மிடுக்கு போய்.. ..
ஆனால், முகம் மட்டும் எக்கச்சக்க மலர்ச்சியில்!
இருக்காதா....
வினுவிற்கு இன்று கல்யாணமாச்சே!

Tuesday, January 24, 2012

முதியோர் விடுதியும்...முனுசாமி தாத்தாவும்...


”முனுசாமி தாத்தா எப்பவுமே ஜாலி தான்! அதுக்காக இப்படியா?”
”அப்படீன்னா?”
”ஒண்ணுமில்லீங்க..எப்பவும் ஜாலியா இருக்கிற தாத்தா,இப்பவும் ஜாலியாத் தான் பேசறாரு.. .அதுவும் முதியோர் இல்லம் போறதை..யாராவது இதுக்குப் போய் இப்படி அலட்டிப்பாங்களா? போறவங்க, துண்டால மூஞ்சைப் பொத்திக்கிட்டு தளும்பி வர கண்ணீரை அடக்க முடியாம அடக்கிக்கிட்டு, மூக்கை சிந்திக் கிட்டு.. ...போயிட்டு வரேன்..போறேன்னு சொல்லக்கூடாதுன்னு சலம்பிக்கிட்டே போவாங்க..இவரு என்னடான்னா..எங்கியோ ஃபாரின் போறாப்பல எல்லார்ட்டேயும் பெருமையா வேற சொல்லிட்டு போறாரு..”
” அப்படீயா?”
” என்னங்க, அப்படியான்னு கேட்கறீங்க..இத்தனை நா முனுசாமி தாத்தா தயவும்,முத்து லச்சுமி பாட்டி தயவும் தேவையா இருந்தது, அவுகளுக்கு..இப்ப பேரப் புள்ளங்க படிச்சு வேலைக்கும் போயாச்சு..அவரு மகனும் இப்ப ரிடயர்ட் ஆகப் போறாரு..காமாட்சி அளகா காயை நகர்த்தி, கிளவங்களை வெளியே துரத்தறா..இந்த புள்ள...உங்க ஃப்ரெண்டுக்காவது அறிவு வேணாம்..இப்படியா அவரும் மனசை கல்லாக்கிக்கணும்?”
“எப்படி சொல்றே?”
“ உங்க ஃப்ரெண்ட் மூஞ்சிலே துளிக்கூட வருத்தம் காணோமே,இப்படி ஆஞ்ஞான் முதியோர் இல்லம் போறாரேன்னு?”
“எதுக்கு வருத்தப் படணும்?”
“என்னங்க இப்படி சொல்றீங்க?”
“கலகலப்பா இருந்த வூடு புள்ள அது! பேரப் புள்ளைங்க றக்கை முளைச்சு பறந்ததுனால,அந்த குஷால் போயிடுச்சு, இப்ப..கிளவனும், கிளவியும் ஒர்த்தர் மூஞ்சை ஒர்த்த்ர் எத்தனை நாள் தான் பாத்துப்பாங்க..அங்க போனா, வயசாளிங்க நாலு பேர பார்த்தாவது பொளுது போவும்..இங்க காமாச்சிக்கும் இன்னும் மூணு வருடம் சர்வீஸ் இருக்கு...தனியா பொளுது போகணுமில்ல..”
” அதுக்காக...உங்க ஃப்ரெண்ட் இந்த மாசம் ரிடய்ர்ட் ஆகறாரில்ல..அப்பனும்,ஆத்தாளும், புள்ளையுமா இருக்கலாமில்ல..”
“அதுக்கு தானே போறாங்க..”
“என்ன உளர்றீங்க?”
“மூதி..அந்த முதியோர் இல்ல மேனேஜரே நம்ம கிட்டு தாண்டி..பயலுக்கு ரிடய்ர்டானதும் அங்க வேலை கிடைச்சிருக்கு!”

Friday, January 20, 2012

கல்யாண ராமன் பிரதாபங்கள்......(2)


பிறகு கல்யாண ராமனின் அப்பா மலைக்கோட்டையில் வீடு வாங்கிக் கொண்டு போக,
அவனுக்கு ஜோசப் காலேஜில் சீட் கிடைக்க, ஐயா பிள்ளை
காலரை தூக்கி விட்டுக் கொண்டு நடப்பார்..அப்போதெல்லாம், ஜோசப் காலேஜ் ஸ்டூடண்ட் என்றால் தனி மரியாதை!
இருந்தாலும் பழகிய பாசம் விட்டுப் போகுமா? லீவ் நாளில், அவன் வீட்டிற்கு நானும், கிரியும் போவோம்..பயலுக்கு இஞ்ஜினீயரிங் மூளை! ஒரு பல்ப்..பெரிய லாண்டிரிக்குப் போட்ட வேட்டி..கொஞ்சம் துண்டு பிலிம்கள்..படம் காட்டி விடுவான்..கிரி டிக்கெட் கிழித்து கொடுக்க, நான் கல்லாவில் காசு கட்ட, அரை மணி நேரம் படம் ஓடும்..அந்த காசை எடுத்துக் கொண்டு நாங்கள் மூன்று பேரும்,சினிமா கிளம்பி விடுவோம்!சினிமா விற்ற காசு சினிமாவிற்கே!
திடீரென்று அவன் அப்பாவிற்கு தஞ்சை ட்ரான்ஸ்பர் ஆக, அங்கு படிக்க சென்று விட்டான்.லீவ் நாட்களில் திருச்சி வருவான்..அண்ணா அவனை கல்லாணம் என்று செல்லமாக கூப்பிடுவார்..அவன் எங்கள் அகத்து மனிதர்களுடன் ரொம்பவும் பாசமாய் பழகுவான்..அவன் அப்பாவிற்கு நானென்றால் உயிர்!ராமூர்த்தி...ராமூர்த்தி என்று பாசமாய் பழகுவார்.அது ஒரு காலம்!
ஒரு வழியாய் பி.காம் முடித்தோம், இருவரும்!..1977ல் என்று ஞாபகம்..அப்போது,வாண்டு என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம்..VANDU..VISUALISERS ARTISTS NOVELISTS DRAMATISTS UNION என்பதின் சுருக்கமே வாண்டு! கிரி நல்ல ஆர்ட்டிஸ்ட்..கையெழுத்து மணி,மணியாய் இருக்கும்.. நான் கெஞ்சினால், அவன் படம் போட மாட்டான்..இந்த கல்யாணம் என்ன மாய மந்திரம் போட்டானோ..அவனுக்கு இந்த கிரி(என் தம்பி!) விழுந்து விழுந்து வேலை செய்வான்!கிரி படம் மட்டுமல்ல..அழகாய் கதையும் எழுதுவான்..கல்யாணமும் கதை எழுதுவான்..அவன் எழுதிய கதையில் தஞ்சாவூர் சாந்த பிள்ளை கேட் இருக்கும்..இப்பொழுதெல்லாம் தஞ்சாவூர் அடிக்கடி போகிறேன்..அந்த சாந்த பிள்ளை கேட் எங்கே இருக்கிறது என்று தெரியாது..தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்... மேலும் அவன் மாமா தேச ஊழியன் என்றோரு பத்திரிகை நடத்தி வந்தார்..அதிலிருந்து சில பிளாக்குகளை நாங்கள் எங்கள் வாண்டுவில் உபயோகப் படுத்திக் கொண்டோம்..
அப்புறம் ஒரு நாளிதழில் எனக்கு சொல்ப சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்க, கொஞ்ச நாளில் கல்யாணமும் அங்கு வந்தான்!. நான் ஆடிட் அஸிஸ்டெண்ட்..ஸார் கேஷியர்!
லஞ்ச் அவரில் ஒரு நாள், நான் கோதையாறு லோயர் கேம்ப்பில் நடந்த நிகழ்வினை கதை கட்ட,ஒரு குடுமி அங்க்கிள் அப்படியா..அப்படியா ..என்று தலையை அப்படியும்,இப்படியும் ஆட்ட, குடுமி எதிர்த் திசையில் ஆட்டம் போட,ஒரே வேடிக்கை..
>>>> கோதையாறிலிருந்து, நாகர் கோவிலுக்கு EB OFFICE TRUCK போயிட்டிருந்தது..அப்ப.. எதிர்த்தாற்போல, ஒரு பெரிய மலைப் பாம்பு! எவ்வளவு பெரிசு தெரியுமா?அதன் தலை ஒரு குளத்தில். நடு உடல் ரோடில்..வால் ஒரு மரக்கிளையில்! டிரக் ட்ரைவர் சடக்கென்று ப்ரேக் போட்டார்.. அந்த ட்ரக் மட்டும் அந்த மலைப்பாம்பு மேல் ஏறியிருந்தால்..அது ஒரு சுருட்டு சுருட்டி, அந்த ட்ரக்கையே தள்ளி விட்டு விடும்>>>> நான் ஏகத்துக்கு ரீல் விட, அந்த அங்க்கிள் அப்புறம்..என்ன ஆச்சு..என்ன ஆச்சு.. என்று சுவாரஸ்யமாய் தலையை ஆட்ட, நான் சொன்னேன்: “எல்லாருக்கும் செம பயம்..கந்தா..கடம்பா..கதிர்வேலா..என்று கந்த சஷ்டி கவசத்தை பய பக்தியுடன் எல்லாரும் சொல்லிண்டே வர..., அந்த பாம்பு சட்டென வழி விட்டதாக்கும்..”
பொறுக்க முடியாமல் கல்யாணம் கத்தினான் :”டேய்..எவனாவது குடுமி வைச்சுண்டு இருப்பான் அவனிடம் சொல்லு உன் கதைய..”
அதற்கும் அந்த அங்க்கிள் தலை ஆட்ட அவர் குடுமியும் எதிர்திசையில் ஆட, அவனுக்கு பயம் வந்து விட்டது, நிஜமாவே..!
லஞ்ச் டைம் முடிஞ்சு, அவரவர் வேலைக்கு திரும்பினோம்..அவன் என்னையும், அவரையும் மாறி..மாறிப் பார்த்துக் கொண்டே இருந்தான்..அப்புறம் நைசாய் என் சீட் வந்து ”ஏய்..அந்த மாமாட்ட போய் மன்னிப்பு கேட்கலாமா..வர்ரியா” என்று சொல்ல, நான்,” பேசாம சீடல உட்கார்ந்து வேலையைப் பார்..அவருக்கு நீ சொன்னது தெரியாது.. நீயாக ஏதாவது உளறிக் கொட்டிக் கிளப்பாதே” என்று அவனைக் காப்பாற்றினேன்..ஆனால், என்னடா இவ்வளவு தூரம் நம்மைக் காப்பாற்றினானே என்பது துளிக்கூட இல்லாமல், அந்த பழி என் கல்யாணத்திற்கு வரவில்லை..ஆனால், தஞ்சாவூரில் நடந்த கிரி கல்யாணத்திற்கு மட்டும் வந்திருந்தான்..என்ன இருந்தாலும் கிரி கிரி தான்..அவனுக்கு மட்டுமல்ல..இப்ப இருக்கிற என் ஃப்ரெண்ட் சீனுவும் அப்படி தான்! கிரின்னா போய் ஈஷிப்ப்பான்..ஈஷி!
என்ன செய்ய.. நாம வாங்கிண்டு வந்த வரம் அப்படி!!!
சரி தான் !!!!

Saturday, January 14, 2012

பத்மப்ரபோதாயனே வருக ..வருகவே...


எங்கு பார்த்தாலும் இருட்டு..பனி...உடம்பு நடு நடுங்குகிறது..வெப்பத்திற்கு மனசும், உடலும் ஏங்குகிறது...இதோ...துளி வெளிச்சம்...பனித்துளிகள் மறைய ஆரம்பிக்கின்றன......கொஞ்சம்..கொஞ்சமாய் சூடு பரவ...வெப்பம் எட்டிப் பார்க்க...குளத்திலுள்ள, பத்மங்களை (தாமரை) உயிர்ப்பிக்க, ஆதவன் வந்து கொண்டிருக்கிறான்..ஆ..வந்து விட்டான்...பத்ம ப்ரபோதாயனே வருக..வருக.......
காட்சி : 1
மஹா பாரததின் ஹிதோபதேசம் போல், இங்கும் ஒரு உபதேசம் நடந்துள்ளது..ஆனால் இங்கு பகவான் தடுமாறுகிறார்..அவருக்கு தைரியம் சொல்பவர் அகஸ்திய மாமுனி!
எதிரில், பத்து தலையுடன் ராவணன்!
ராவணன் ஒரு உருவம் அவ்வளவு தான்..ஐந்து கர்ம இந்திரியங்களும், ஞான இந்திரியங்களும் சேர்ந்த ஒரு கலவை..இந்த பத்தும் ஒன்று சேர்ந்தால், அங்கு,ஆணவம், செருக்கு,பழி பாவத்திற்கு அஞ்சாத தைர்யம்.....எல்லாம் ஒன்று சேர்ந்து விடும். அதனை எதிர்க்க ஒரு யுத்தமே அவசியம் ஆகிறது அப்போது!
அந்த பத்து இந்திரியங்களை எதிர் கொள்ள, அகஸ்திய மஹா முனிவர் ஆதித்ய ஹ்ருதயம் என்றொரு மந்திரத்தை ராமனுக்கு உபதேசிக்கிறார்..அது ஒரு சூர்ய உபாஸனா மந்திரம்..அது நிறைய பலன்கள் கொடுக்கும் ஒரு அற்புதமான சஞ்சீவி....
... ஸர்வ மங்கள மாங்கல்யே ஸர்வ பாப ப் ப்ரஹாசனே..
சிந்தா சோகப் ப்ரஸமனம் ஆயுர் வர்த்தன உத்தமம்....
மனம் தெளிந்த ராமன், ராவணனை வென்றதை அறிவோம்..அதுபோல, இப்போதும் நாம் எதிர்கொள்ளும் நம் அன்றாட வாழ்வில் வரும் சங்கடங்கள் எத்தனை எத்தனை!! கோபம்..பாபம்..சண்டாளம்..ஊழல்...துஷ்ப்ரயோகம்...காமம்..களவு ...ஆகிய அத்தனையையும் எதிர்கொள்ள அகஸ்தியர் வேண்டாம்...அவர் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் போதும்..அந்த பானுமூர்த்தியின் கடைக் கண் பார்வை பட்டால், அனைத்தும் கடந்து போம்!
...பூஜயஸ்வை நமோகாக்ர: தேவதேவம் ஜகத்பதிம்...
ஏகத்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயஷஷி..
ஆம்..இன்றைய நடைமுறை வாழ்வில் எல்லாவற்றுடனும், யுத்தம் செய்ய வேண்டிய கால கட்டத்தில் தான் நாம் இருக்கிறோம்!
காட்சி : 2
இங்கு ஒரு வயதான மாதா ஆசனத்தில் அமர்ந்து உள்ளாள்..எதிரில் ஒரு மன்னவன்..அந்த வயதான ஸ்த்ரீயைப் பார்த்தால்,ஏதோ ராஜமாதா போல் ஒரு கம்பீரம்..அவர் இந்த ராஜாவிடம் ஒரு காரியத்திற்கு வந்திருக்கிறாள் போல இருக்கிறது.
என்னவென்று பார்ப்போம்...
மாதா : கர்ணா நான் யார் தெரிகிறதா?
மைந்தன் : தெரிகிறது தாயே!
மாதா : உன் பகைவர்களின் தாய்..
மைந்தன் : யாராயிருந்தால் என்ன...தாய் தாய் தானே?....
மாதா : (மனத்துள்) மகனே உன்னை ஈன்ற தாயும் நான் தான்!
தனக்கும் சூர்யதேவனுக்கும் பிறந்த புத்திரன் என்று உண்மையை உரைக்கிறாள்..மகனுக்கு விஷயம் விளங்குகிறது..’உன் ஐந்து சகோதரர்களுடன், ஆறாவதாக சேர்ந்து விடு..சோர்வுற்ற என் மனம் ஆறும்’ என்று சொல்ல,கர்ணனின் பதில் இது! சொல்கிறான்...
மதமா மழ களிற்றான் மற்றெனக்குச் செய்த
உதவி உலகறியுமன்றே - உதவிதனை
நன்று செய்தோர் தங்கட்கு நானிலத்தில் நல்லோர்கள்..
குன்றுவதோ செய் நன்றி கூறு?
என்று சொல்லி, இன்னொரு நிகழ்வினை எடுத்தியம்புகிறான்..
’இந்த பக்கம் பானுமதி, துரியனின் பத்னி.. அந்த பக்கம் நான் - சொக்கட்டான் விளையாடுகிறோம்.. அவள் திடீரென எழ, தோற்பதினால் எழுகின்றாள் என்றெண்ணி, இழுக்க அவள் கழுத்தில் உள்ள மணி மாலை அதனால், கழன்று விழ, என் பின்னால் துரியன்! அவன் வருகிறான் என்று மரியாதை நிமித்தம் அவள் எழுந்திருக்கிறாள். எனக்கு அது தெரியவில்லை
இன்னொருவன் என்றால் என்ன செய்திருப்பான்? துரியன் மனதில் களங்கமில்லாமல் சொன்னான் :
”......அற்று விழுந்த அறுமணிகள் மற்றவற்றை கோக்கேனோ என்றுரைத்த மன்னவர்க்கே என்னுயிரை போக்கேனோ வெஞ்சமத்து புக்கு..” என்று கூறி, ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு..போய் வா..” என்றான் தன்னை ஈன்றெடுத்த தாயைப் பார்த்து!
சூர்ய குமாரன் அல்லவா அவன்!
இன்று சூர்ய தினம்! சூர்ய குமாரனும் நம் நினைவிற்கு வருகிறான்!!
* * * * * * * * * * *
சூரியன் என்ற ஒன்று இல்லை என்றால் என்ன நிகழும்?
நினைத்துப் பார்க்கவே அச்சமாய் இருக்கிறது..அவன் அருமை உணர்ந்த இளங்கோ அடிகள் அதனால் தான் சொன்னாரோ...
இந்த பொங்கல்..மகர சங்கராந்தி நன்னாளில், நாமும் சொல்வோமா?
”ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்.......!!”

Wednesday, January 11, 2012

கல்யாண ராமன் பிரதாபங்கள்......


அடுத்து வருபவர் கல்யாண ராமன். அவர் நம் ஸ்டோர் வாசி இல்லை..பக்கத்தில் உள்ள மூக்கப் பிள்ளை சந்து..எனக்கு பதினொன்றாம் வகுப்புத் தோழன்!அந்த கால SSLC!
கல்யாணம் பரோபகாரி..பழகுவதற்க்கு இனிய நண்பன்.போன வாரம் கூட பேசிக் கொண்டிருந்தோம்..திரும்பவும் அந்த பழைய லைஃப் வராதா என்கிற ஏக்கம் எங்கள் இருவருள்ளும் எதிரொலித்தது..
லூட்டின்னா லூட்டி ..அவ்வளவு லூட்டி அடித்தோம்..இரண்டு பேருக்கும் ALGEBRA என்றால் காப்ரா தான்!அது வேறு எங்கள் இருவரையும் இணைத்து தொலைத்தது! ARITHMETICS ஐ ஆழ்ந்து படித்தோமானால், அல்ஜிப்ரா காலை வாரி விடும்..அல்ஜிப்ராவை ஊன்றி..ஊன்றி படித்தோமானால், ARITHMETICS ஊத்திக் கொண்டு விடும்..இரண்டு பெண்டாட்டிக் காரன் கதை தான்! ..
SSLC FINAL பரிட்சைக்கு படிக்கிறோம் என்று அவன் அம்மா எங்களுக்கு டீ போட்டு கொடுப்பார்..ராத்திரி பதினொன்று மணிக்கு மேல் தான் எங்களுக்கு மூட் கிளம்பும்..அது வரை படிப்பது போல் பாசாங்கு பண்ணும் நாங்கள் எல்லாரும் தூங்கியவுடன் அரட்டை அடிக்க ஆரம்பிப்போம்! கல்யாண ராமனிடம் என் வாழ் நாளிலேயே இரண்டே இரண்டு கதைகள் சொல்லியுள்ளேன்..ஒன்று ஸ்கூல் ஃபைனல் படிக்கும் போது..மற்றோன்று, நாங்கள் B.COM முடித்து விட்டு, திருச்சி நாளிதழ் ஒன்றில் வேலை பார்க்கும் போது!
இந்த கதைக்கு வருவோம்! நான் எட்டாவது படிக்கும் போது, ஒரு கடுகடு ஹெட் மாஸ்டர். அவர் மத்யானம் டாய்லெட் போகும் போது விஷமக்காரப் பயல்கள் கதவை மூடி விட்டனர்.திறந்து பார்க்கிறார்..முடியவில்லை..யாரடா அது என்று பயங்கரமாய் கத்துகிறார்..உறுமுகிறார்..படபடவென்று கதவை தட்டிப் பார்த்தார்..ஊஹூம்..கடைசியில் அவருக்கு பயம் வந்து விட்டது..ஃப்ரண்ட்ஸ்..ஃப்ரண்ட்ஸ்.....கதவைத் திறங்க பிரண்ட்ஸ் என்று கெஞ்சும் போது,டக் என்று ஒரு சப்தம்!
“என்ன?” என்றான், கல்யாணம்.
”என்னமோ சத்தம் டக்னு கேட்டது”- நான்.
இரண்டு பேரும் புஸ்தகத்தை மூடி விட்டு, சமையல் உள்ளில் பார்த்தால்...
ஒரு எலி பொறியில் மாட்டிக் கொண்டது..அந்த சத்தம் தான் அது!
கொஞ்சம் நூலை எடுத்து, அதை எலியின் காலில் கட்டி, மற்றொரு நுனியை கதவில் கட்டி, எலிப் பொறியை திறந்து விட்டோம்..ஆசையொடு ஓடி வந்த எலி,ஒரு ஸ்டேஜ்க்கு மேல் ஓடமுடியாமல், காலில் நூல் கட்டியதால்,பெண்டுலம் போல் ஆடியது..இப்படியும்..அப்படியும் அது ஆட, நாங்கள் இருவரும் அதனருகில் சென்று ’ஃப்ரெண்ட்ஸ்..ஃப்ரெண்ட்ஸ் காலை அவுத்து விடுங்க ஃப்ரெண்ட்ஸ்’ என்று கெஞ்ச...
அந்த வருடம் நாங்கள் SSLC யில் வாங்கிய மார்க்
நான் 396/600.
கல்யாணம் 408/600.

(பி.கு.: ஜாக்கிரதை!! கல்யாண ராமன் பிரதாபங்கள் 20.1.2012 அன்றும் தொடரும்!)

Saturday, January 7, 2012

முப்பத்தொன்பது பை மூணு! மூக்கப்பிள்ளை லேனு!!


திருச்சிராப்பள்ளி வடக்கு ஆண்டார்வீதி நடுவில்...இடிச்சுவிட்ட வாசல் படிக்கு அடுத்தது பொன்னம்மாள் டாக்டர் பிரசவ ஆஸ்பத்திரி!பக்கத்தில் மூக்கப்பிள்ளை லேன்!அதில் மணிவாசகம் ஸ்டோர்!
1969 வாக்கில், எங்கள் குடும்பம் தாத்தா, பாட்டியுடனான கூட்டுக் குடும்பத்தை விட்டு, எங்கள் படிப்பிற்க்காக திருச்சி வந்தது காலத்தின் கட்டாயம்.கிராமத்தில் இருந்தால் முன்னேற முடியாது என்று டவுனுக்கு வந்து கூடாரம் போடும் வேலையை நாங்கள் அன்றே செய்து விட்டோம்! ஆனால் முன்னேற்றம் தான் மிஸ்சிங் இந்த MIGRATION இல்!
ஆங்கரையில் பெரிய வீடு..இது டவுன். வாடகை முப்பது ரூபாய்! எப்படி இருக்குமோ.. நாம நிறைய பேர் இருக்கோமே..வீடு பத்துமா..என்று அந்த சிறு வயதிலேயே எனக்கு ஏகப் பட்ட கவலை!
அதற்கேற்றார் போல தான் இருந்தது மணி வாசகம் ஸ்டோர் வீடும்! ஒரு சிறிய திண்ணை..ரேழி..வலது பக்கம் சமையல் உள். நடுவே.பத்துக்கு எட்டு சின்ன ஹால்.கதவைத் திறந்தால்..இன்னொரு கதவு..அதை பாத்ரூமாக இருக்கும் என்று நினைத்து திறந்தால் அங்கு இருந்தது பத்து குடித்தனங்கள்!
பயத்தில் ஜூரம் வந்து விட்டது.
என்ன செய்வது? ஸ்டோர் லைஃப்க்கு எங்களை கொஞ்சம்..கொஞ்சமாய் தயார் படுத்திக் கொண்டோம்.. நானும், கிரியும் முறையே 9ம் கிளாசும்..7ம் கிளாசும் E.R.HIGH SCHOOL லில்..ஜெயந்தி, ராஜு, மோகன் அங்கேயே பக்கத்தில் உள்ள ஒரு சின்ன ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள்..அண்ணாவிற்கு ஆஃபீஸ் ஜங்ஷன்..EB காமராஜ் பில்டிங்! சைக்கிளிலேயே ஆஃபீஸ் போய் விடுவார். எல்லார்க்கும்..பக்கத்து பக்கத்தில் அலுவல்..ஆனால் வீடு மட்டும் புறாக்கூண்டு! அங்கு ஆங்கரையில் எல்லாமே தூரம்..ஆனால் வீடு பெரிசு!
நாங்கள் இருந்த கதவுஇலக்க எண் 39/3..இப்படி வலது பக்கம் ஆறு வீடு..இடது பக்கம் ஆறு வீடு..மூன்று வீடுகள்..எல்லாம் நெருப்பு பெட்டி சைஸில்! அதிலும்,எஙக்ள் 39/3ம், எதிர்வீடு 40/1ம் இன்னும் சின்ன நெருப்பு பெட்டி!
ஒரு சின்ன அறிமுகம்!
நாங்கள்..எதிர் வீடு பஞ்சு, ராஜி, ..பஞ்சு பெயருக்கேற்றார் போல் பஞ்சு போல் லேசு இல்ல..குண்டு..செம குண்டு நம்ம அப்புசாமி,சீதா பாட்டி குடும்பத்துல வர பீமா ராவ் சைஸ்! அடுத்த வீடு சாஸ்திரிகள் வீடு..அந்த மாமிக்கு நாங்கள் வைத்த பெயர் லிட்டர் மாமி..அந்த மாமி முறை வைத்து தண்ணீர் பிடிக்கும் போது, யாராவது கூட பிடித்தால், தான் ஒன்றும் சொல்ல மாட்டாள்..எங்களையோ..அல்லது வேற யாரையோ கூப்பிட்டு..”உஷ்..அவாத்துல, ஒரு குடம் கூட பிடிக்கிறா..என்று ’வத்தி’வைக்க, அதை நம்பி நாங்கள் வீராவேசமாய் சண்டை போட,அதை ஜோராய் வேடிக்கை பார்ப்பாள், அந்த மாமி!எதேச்சையாய் அந்த மாமியை நாம் பார்த்தோமென்றால்,முகத்தில் விளக்கெண்ணைய் வழியும் லிட்டர் கணக்கில்! அதனால் தான் லிட்டர் மாமி என்று பெயர்!
முப்பது வருடங்கள் முன்னாடியே முல்லை பெரியார் வந்து விட்டதாக்கும் எங்கள் ஸ்டோரில்!
அடுத்த வீடு லட்சுமி மாமி வீடு..மாமா கிருஷ்ண மூர்த்தி மாமாவிற்கு ரயில்வேயில் உத்யோகம்..லட்சுமி மாமி ’வாராயோ வெண்ணிலாவே’ என்று ஏதாவது ஒரு பாட்டு பாடிக் கொண்டே வீட்டு வேலைகள் செய்ய,கிருஷ்ண மூர்த்தி மாமா இருமல் தாத்தா மாதிரி இருமிக் கொண்டே இருப்பார்..
அடுத்த வீடு ராதா கிருஷ்ண மூர்த்தி.இருவருமே டீச்சர்ஸ்..அடுத்த வீட்டில் உள்ள அத்தனை பேரும் நெட்டை கொக்குகள்.. முகம் செவ்விந்தியர் போல் இருக்கும்..அவர்களுக்கு வைத்த பெயர் பெடகோணியன்ஸ்..அவர்கள் வீட்டு கடைசி பெண் குஷி வந்து விட்டால், சர்ரென்று திண்ணை இரும்பு தூண் மேல் ஏறுவாள் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே!
பெடகோணியன் வீட்டிற்கு எதிர்த்தாற்போல், அர்த்தனாரி மாமா! அவர் பார்ட் டைம் ஜாப் டைப்பிங்.பெடகோணியன் ஃபுல் டைம் ஜாப் டைப்பிங்..மணிவாசகம் ஸ்டோர் மணியான இரவுகளை அவர்கள் இருவரும் லொட்லொட்டென்று டைப் மெஷினை தட்டியே பங்கு போட்டுக் கொள்வார்கள்..
பாக்கி ஆட்கள் அவ்வளவு ஸ்வாரஸ்யமில்லை..
”..ஸ்லோகப் புத்தகங்கள்...வெங்கடேச சுப்ரபாதம் என்று கூவிக் கொண்டு புஸ்தகம் விற்பவர் வருவார்..மற்றபடி கோபால்,சுப்ரமணி பால்..பத்து தேய்க்கும் பாப்பா..தனம்..
ஸ்டோரின் கட்டோ கடைசியில் கிணறு..அந்த கிணறு சொல்லும் கதைகள் பல..எங்களுக்கு அது தான் மெரினா!
இப்போது வருபவர் நம் நண்பன் கல்யாண ராமன்..நம்ம ஸ்டோர் ஆசாமி இல்லை..பக்கத்து மூக்கப் பிள்ளை சந்து!
(பி.கு.: இதன் தொடர்ச்சி வருகிற 11.1.2012ல் வெளி வரும்..)