Sunday, December 29, 2013

டிக்...டிக்.....டிக்....

டிக்...டிக்.....டிக்.....
 எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி கடிகாரம் செவ்வனே தன் கடமையை செய்து
கொண்டிருந்தது.
 குழுமியிருந்த யாரும் பேசவில்லை.
 ஒரு மெல்லிய சோகம் எல்லார் முகங்களிலும்!
 ஆழ்மௌனத்தை கலைத்தான் ஒருவன்.
  "இன்னும் இரண்டு மணி நேரம் தாங்கினாலே ஜாஸ்தி"
 கட்டிலைப் பார்த்தோம். அவன் சொன்னது சரி. மூப்பு கொஞ்சம் கொஞ்சமாக
ஆக்கிரமித்து கொண்டிருக்க, அதனால், கொஞ்சம்,கொஞ்சமாக குறுகிக் கொண்டிருக்க....
  "எப்டி dispose பண்றது?"
   ச்சே ....என்ன மனுஷன் இவன்...
    " It will take it's own course"
    இன்னும் விடியவில்லை...
    நேரம் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருந்ததை எல்லாராலும் உணர முடிந்தது.
     கவிந்திருந்த சோகத்தை சட்டென்று புறம் தள்ளுவதைப் போல...      "க்வா....க்வா...."            அனிச்சையாய் ஒரு வித உற்சாகம்
     கவ்விக் கொள்ள......
     குரல் வந்த திசையை நோக்கி எல்லாரும் ஓட...
      அதே சமயம்,
       "It will take it's own course" என்று
      சொன்னதிற்கு ஏற்றார் போல்.....
      கற்பூர கட்டி காற்றில் கரைவது மாதிரி....
       கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது 2013.
       
         
       
       

     
     
    

Thursday, December 19, 2013

இலக்கிய விருந்து.....

குன்று போல் யானை பல தழுவி,வாள் சுழற்றி
கன்று போல் துள்ளி சமர் புரிந்த நாயகனை,
என்றுமிலா போதை விழி பாய்ச்சி,வீழ்த்தி விட்டு
'இன்று போய் நாளை வா' என்றாள், இனிந்து!          போரில் குன்று போன்ற யானைகளைத் தழுவி, தன் கூர்மையான வாளை நாலாபக்கமும் சுழற்றி தாய் பசுவின் மடி
கண்ட கன்று போல் துள்ளி குதித்து போர் புரிந்து எதிரிகளின் தலைகளை சாய்த்து, எல்லை இல்லா களிப்புடன்
தலைவியைக் காண வருகிறான் தலைவன். அப்போது வெற்றி பெற்ற செருக்கால் அவன் கால்கள் சற்றே 
தடுமாறுகின்றன.தன் பிரதாபங்கள் அத்தனையையும் அவள் முன் கொட்டி விட வேண்டும் என்கிற அவசரம்
அவனுக்கு.
    தாபத்துடன் காத்திருக்கிறாள் தலைவி. அவள் முன் தோழி வந்து அவனுடைய வீர, தீர பராக்ரமங்களை
இயம்ப, சட்டென தலைவி துணுக்குற்றாள்.' என்ன இது? அவருக்காகவே காத்திருக்கும் என்னைப் பற்றி
ஏதாவது பேசுவாரோ என்கிற ஏக்கத்தில் இங்கு நான் இருக்க,வெற்றி பெற்ற தாக்கத்தால் தன்னைப்
பற்றி பேசத் தான் வருகிறாரோ...' 
   அச்சம் ஊடலாக மாறியது உடனே! 
   'போகட்டும்....வெற்றி எனும் போதை தெளியட்டும். பொறுத்தது தான் பொறுத்தோம். இனி ஒரு நாள்
பொறுப்போம்' என தீர்மானம் செய்து கொண்டிருக்கும் போதே தோழி வந்து 'தலைவன் வந்து விட்டான்'
எனக் கூறுகிறாள்.
  தலைவி விரைகிறாள் வாசலுக்கு...
 அதோ தலைவன் வந்து கொண்டிருக்கிறான்....
  வந்தே விட்டான்....
  தலைவன் நோக்கினான்; தலைவியும் நோக்கினாள்.
  ஆ....இதென்ன, 
தாபத்தின் முன் பிரதாபம் எங்கே போய் விட்டது?
   கூர் விழி பார்வையின் முன் வாள் முனை மழுங்கி விட்டதா?
எதிரிகளை சாய்த்த கரங்கள் இதோ சாய்ந்து விட்டதே!
 விழிகளின் எழிலில் வீரம் தான் விடை பெற்றுக் கொண்டதோ?
இதைத் தான் 'புறத்தினை புறமுதுகு காட்டிடும் அகம்' என்கிறார்களோ தமிழறிந்த சான்றோர் பெருமக்கள்!
தடுமாறி நின்ற தலைவனைப் பார்த்து, தலைவி கூறுகிறாள்.
'வத்ச, களைத்துப் போய் இருக்கிறீர்கள்..களைப்பாற்றிக் கொண்டு நாளை வாருங்கள்!'
              கண் முன் விரிந்த இவ்வரிய காட்சியை ஒரு வெண்பாவில் வடிக்க முயன்ற என் சிறுமதியைத் தான்

என்னவென்பது?

Wednesday, December 4, 2013

MISSING........


விடியல் நாலு மணி.
கனத்த சூட்கேஸ்கள் புடை சூழ, அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள் பரபரப்புடன்
நுழைந்தான், ஜிம்.
"ஹலோ....ஹலோ....இங்க இன்ஸ்பெக்டர் யாரு?"
"எஸ் ப்ளீஸ்" 
"என்னோடது தொலைந்து போய் விட்டது"
"எது?"
இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் சொன்னதை அவன் சுத்தமாக காதில் வாங்கிக் கொள்ளவே
இல்லை.
"ரொம்ப ஜாக்கிரதையாகத் தான் இருந்தேன், இன்ஸ்பெக்டர். இங்க இருந்தவரைக்கும்
என் கிட்ட தான் இருந்தது அது"
"எது என்று சொன்னால் தானே கண்டு பிடிக்...  " - மிகவும் கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டார்,
இன்ஸ்பெக்டர் லாரன்ஸ்.
"ம் சொல்லுங்க."
இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் பொறுமைக்கு பெயர் போனவர்.போதாததிற்கு போன வாரம் தான் 
'போலீஸ் உங்கள் நண்பன்' அவார்ட் வாங்கியுள்ளார்.
"ம்ம்ம்ம்ம்...    எதுல விட்டேன்" என்று யோசித்தவனுக்கு ஞாபகம் வந்து விட்டது."ஆங்..ஆமா,
நடுவில தோஹா வந்தது....அப்பவே எனக்கு லைட்டா சந்தேகம்..மனப் பிராந்தின்னு 
விட்டுட்டேன்...."
'.....பிராந்தியா......தண்ணி கிண்ணி போட்டுட்டு வந்திருக்கானோ...'
"இன்ஸ்பெக்டர் கேட்கறீங்களா?"
"ம்...சொல்லுங்க"
"HOUSTON போய் 'லேண்ட்' ஆகி, நம்மூருக்கு செல்லில பேசின அப்புறம் தான் 'கன்பர்ம்' ஆச்சு..."
"அங்கேயே கம்ப்ளைண்ட் கொடுத்திருக்க வேண்டியது தானே..."
'.........ஏன்யா சாவு கிராக்கி நான் தான் உனக்கு கிடைச்சேனா.... ' மனசுக்குள் நினைத்துக் கொண்டார்
அந்த இன்ஸ்பெக்டர்.
"பண்ணியிருக்கலாம் தான்... ஆனா நம்மூரு மாதிரி அங்க 'ப்ராப்பரா ரெஸ்பான்ஸ்' பண்ணுவாங்கன்னு
தோணல" என்றவன் மேலும் தொடர்ந்தான்.
 "பத்தாயிரம் ரூபாய்க்கு வத்தி பெட்டி வாங்கினா பாரின் டூர்
இலவசம்னு சொன்னாங்க...  எல்லாம் சரியாகத் தான் போய்க் கிட்டு இருந்தது...18ம் தேதி விடியல்
காலை நாலு மணிக்கு ப்ளைட். அங்க லேண்ட் ஆகும் போது 19 ம் தேதி மாலை நாலரை. நம்மூர்ல டைம்
கேட்டா, 20 ம் தேதி விடிகாலை நாலரைங்கறான்.அன்னிக்கு மட்டுமில்ல....அங்க இருந்த அத்தனை
நாளும் கார்த்தால ஏழு மணின்னா,நம்மூர்ல சாயங்காலம் ஏழுங்கறாங்க.....அங்ஙன சாயங்காலம் ஏழுன்னா,
இங்ஙன அடுத்த நாள் காலலை ஏழு மணி.ஆபீஸ் போய்ட்டிருக்கேன்...டிஸ்டர்ப் பண்ணாதே ப்ளீஸ்ங்கறான்.
ஒரு நாள்.... ரெண்டு நாள் இல்லை...டெய்லியே பன்னிரெண்டு மணி நேரம் எங்கே போச்சுன்னே
தெரியல....காணாமல் போன என்னோட அந்த பன்னிரெண்டு மணி நேரத்தை கண்டுபிடிச்சு தாங்க
இன்ஸ்பெக்டர் ப்ப்.ளீ.ஸ்"
சட்டென்று, நாற்காலியை விட்டு எழுந்து பரபரவென இன்ஸ்பெக்டரின் தோள்களை குலுக்கினான்,ஜிம்.
சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டரின் பொறுமை எல்லை மீறி போய் விட்டதால் பொளேரென்று பிடரியில்
ஒன்று போட்டார்.
திடீரென விழுந்த தாக்குதலினால் நினைவு தப்பியஜிம்மிற்கு  "யோவ் 109, இந்த விடியா மூஞ்சியை
கீழ்ப் பாக்கம் ஹாஸ்பிடல்ல சேர்த்துடு"என்று நூறு டெசிபல்லுக்கு மேல் போன அந்த இன்ஸ்பெக்டரின்
அலறல் நல்ல வேளையாகக் காதில் விழவில்லை!