Monday, January 4, 2010

நியாயம்


இன்றைக்கு ஏனோ மனம் மிகமிக சந்தோஷமாக இருக்கிறது.
குழந்தைகள் 'மன்த்லி டெஸ்ட்'டில் நல்ல மார்க்கா?
ஊகூம்....

பொதிகையில் காலை ஐந்தரை மணிக்கு ப்ளூட் ரமணியின்
'சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மாவா'
இல்லை.
நெடுநாள் பிரிந்த தோழி யாரையாவது பார்த்தோமா?
கிடையாது. கடிதப் போக்குவரத்து அடியொடு நின்று விட்டது.உறவுக்காரர்
கள் எல்லார் வீட்டிலும் ஃபோன்!
பிறகு எதுவாக இருக்கும்!

நானும் காலையிலிருந்து மூளையைக் கசக்கிக்கொண்டு இருக்கிறேன்.
ஒன்றும் தெரியவில்லை.ஆனால்,மனம் மிக மிக சந்தோஷமாக
இருக்கிறது என்பது நிஜம்.
கண்,மண் தெரியவில்லை எனக்கு.நவராத்திரி, ப்ளஸ் தீபாவளிக்கு என்று,
வாங்கிய இரண்டு செட் புடவைகளில்,ஒன்றை, இன்றே கட்டிக் கொண்டேன்.
என்னவோ தெரியவில்லை. தீபாவளிக்கு வேறொன்று வாங்கிக் கொண்டால்
போகிறது. புதுப்புடவைக்கு மேட்ச்சாக ப்ளவுஸ் கிடைத்தது இன்னொரு
சந்தோஷம்!

மேரிக்கு அவள் விரும்பியபடி மதுரைக்கு 'ட்ரான்ஸ்பர்' கிடைத்து விட்டதே?
அதுவா?
அவளுக்கு, போன வாரமே ஆர்டர் வந்து விட்டதே? இந்த சந்தோஷம்
காலையிலிருந்து தானே!
'மேரேஜ் டே'யா ?
'பர்த் டே'யா ?
ஆளாளுக்குக் கேட்டார்கள். எல்லாவற்றுக்கும் சந்தோஷமாகத் தலையை
அசைத்து வைத்தேன்.
'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ', மெள்ள 'ஹம்' செய்தேன். அதனுடன்
'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' என்ற கோபால கிருஷ்ண பாரதியின்
பாடலும், 'மா தமதா தஸ தம ததஸா' என்ற ஆபோகி ராக வர்ணத்தின் சரணமும்
அனிச்சையாய் கலந்தது மற்றொரு சந்தோஷம்!
என்ன ஆகி விட்டது எனக்கு?
மனத்துள் ஒரே சிரிப்பு ப்ரவாகம்.ஜாலியாய் அரை நாள் லீவு போட்டு, வீட்டுக்குப்
போய் நாள் முழுவதும் சிரிப்போமா?
பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைத்துக் கொள்ளப் போகிறார்கள், அக்கம்
பக்கத்து வீடுகளில்!

'இன்னும் பத்தே நாட்களில் அரியர்ஸ் பணம் வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பிற்கு
இன்னும் வலு ஜாஸ்தியாக இருந்தது. அதைப் போல, ' எதனால் இந்த சந்தோஷம்'
என்று மனது மெள்ள, மெள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியாக அசை போடுகிறதே, அந்த
அனுபவம் 'ஒரிஜினல்' சந்தோஷத்தை விட, சந்தோஷமாக இருக்கிறது, எனக்கு!
என்னடா இது? வயது ஆக ஆக மறதி ஜாஸ்தியாகி விட்டதா? இன்னும் என்னால்
கண்டுபிடிக்க முடியவில்லை? இவ்வளவு மோசமாகவா போய் விட்டேன்? ஞாபக
சக்திக்கென்று, பள்ளிக் கூடத்தில் சர்டிபிகேட்டுகள் குவிந்த காலம், அந்த காலம்!
'ஏய் எதாவது மாத்திரை சாப்பிடறயா? வல்லாரை கீரை சாப்பிடறயா?' என்று
தோழிகள் ஆவலுடன் வினவுவார்கள். அப்படி ஒரு ஞாபக சக்தி எனக்கு!
ஆனால் இன்று ...
எல்லாமே பஸ்மமாய் போய்விட்டது.
என் திறமைகள் எல்லாமே.
கல்யாணத்துக்குப் பிறகு...
இவரைக் கைப் பிடித்த பிறகு.....
மனுஷன் பல்வலி என்று என்ன பாடு படுத்திவிட்டார்? பார்க்கப் போனால், அது
பல்வலி கூட கிடையாது. ஈறுகளில் வலி. உப்பு, வென்னீர் போட்டுக் கொப்பளித்தால்
சரியாகப் போய் விடும். அதற்கு அவர் படுத்திய பாடு இருக்கிறதே.. துளிக் கூட
பொறுக்க முடியாத ஜன்மம்.
சின்னக் குழந்தை என்றால் இரண்டு அடி வைத்து விடலாம். இவ்வளவு பெரிய ஆளை
என்ன செய்வது?
'நல்ல நாளிலேயே நாழிப்பால். இப்போது கேட்கவே வேண்டாம். பல் வலி என்று
குப்புற படுத்துக் கொண்டு ...ச்சே....'
இதையாவது பொறுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் டிங்குவும்,டிட்டுவும் சுவாரசியமாக
டீ.வி. பார்த்துக் கொண்டு இருக்கும்போது, படீரென்று குழந்தைகள் முதுகில் அறைந்து...
என்ன ஒரு காட்டுமிராண்டித்தனமான சுயநலம். தாம் கஷ்டப் படும் போது, எல்லாரும்
மௌனமாக, துக்கம் காக்க வேண்டும் என்ற ஈனத்தனமான எதிர்பார்ப்பு.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் ... சப்பாத்தி கட்டையை டீ.வி.யின் மீது வீசி...
சிலீரென்று ஸ்க்ரீனின் கண்ணாடித் துண்டுகள் ஹாலில் சிதற.....
விக்கித்துப் போய் விட்டன குழந்தைகள்.
ஏன், நானும் தான்.
புதிதாக வாங்கிய கலர் டீ.வி.
அரியர்ஸ் பணத்தில் வாங்கியது.
இவருக்கு வேலைக்குப் போய் சம்பாதித்துக் கொடுத்து, சமையலும் செய்து,
குழந்தைகளுக்குப் பாடமும் சொல்லித் தந்து.....
ஆபீஸ் செல்லும் பெண்கள் எல்லாரும், போன்சாய் மரங்கள் தான். மரங்களைக்
குறுக்கி, பழங்களைப் பறிப்பது போல, பெண்மை என்னும் மகா சக்தியைக் குறுக்கி,
அவளிடமிருந்து பலன் பெறும் சுயநலமிகள் தானே இந்த ஆண்கள்.
தகப்பனாக... கணவனாக...மகனாக... அவளுக்கு எப்போதுமே, இந்த மூவரில் ஒருவரைச்
சார்ந்து நிற்கும் நிலை.
போன மாதம் எனக்குக் கைகளில் நகச்சுற்று வந்தது. என்ன..ஏது..என்று ஒரு வார்த்தை
ஆதரவாகக் கேட்கவில்லை, மனிதர். வலியுடனே எல்லா வேலைகளும் செய்ய வேண்டி
இருந்தது. லீவும் போட முடியாத சூழ்நிலை.. இரண்டு பக்கமும் மண்டை இடி!
வாங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. 'ஐவா' கலர் டீ.வி. அதற்குள் படீர் என்று
நெஞ்சில் அடி!
டீ.வி.பெட்டியை உடைக்கும் அளவுக்கு என்ன ஒரு குரூரம்? பார்த்துக் கொண்டிருக்கும்
குழந்தைகளின் மனநிலை எவ்வளவு தூரம் பாதிக்கப் படும்?
இதைத் தான் 'வீட்டு வன்முறை' (டொமஸ்டிக் வயலன்ஸ்) என்று சொல்கிறார்களோ?
பெண்கள்..குழந்தைகளுக்கு ... எதிராக பலாத்காரம்.... வன்முறை...வீடுகளிலேயே
நடக்கிறது. எங்கு செல்ல முடியும்? ஊமை அழுகையாய் அழுது, கரைந்து போக
வேண்டியது தானோ?
அட... சந்தோஷம் ...ஞாபகம் வந்து விட்டதே!
காலையில் செய்தித் தாளில் படித்தது.
'மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில், பல்வலி தாங்க முடியாமல் போனதால்,
ஒருவன் தன் மனைவியை பெல்ட்டால் அடித்து நொறுக்க, விவகாரம் போலீஸ் வரை
போக,அவனுக்கு எட்டு மாத சிறைத் தண்டனை.
எம் போன்ற பெண்களுக்கு, இந்த பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு
வகையில் ஒரு நியாயம் கிடைத்து விடுகிறதே!
அட!
அந்த செய்தி தான், என் ஜீவனில் கலந்து, என்னுள் பரவசம் உண்டாக்கி, அந்த
ஆனந்தத்தை இத்தனை நேரமும் சுவாசித்து வந்திருக்கிறேனோ!
மனம் நிம்மதி கொள்கிறது.
காரணம் தெரிந்த களிப்பில்!!

8 comments:

இராகவன் நைஜிரியா said...

மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் என்ற உணர்தல்... அழகாகச் சொல்லிவிட்டீர்கள். கடைசியாய் காரணம் படிச்சப் போது சூப்பர்.

ஒரு சின்ன சஜெஷன். இன்னும் கொஞ்சம் அலைன் பண்ணி, பத்தி பிரிச்சு கொடுத்தீங்கன்னா படிக்கும் போது வசதியா இருக்கும். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என மனதில் தோன்றியது சொல்லிவிட்டேன்.

Chitra said...

அவளிடமிருந்து பலன் பெறும் சுயநலமிகள் தானே இந்த ஆண்கள்.
தகப்பனாக... கணவனாக...மகனாக... அவளுக்கு எப்போதுமே, இந்த மூவரில் ஒருவரைச்
சார்ந்து நிற்கும் நிலை. ...................சந்தோஷப் படறதுக்கு காரணம் ரொம்ப தேவை இல்லையோ..... நல்ல கதை. ராகவன் சார் suggestion ஐ நானும் வழி மொழிகிறேன்.

ரிஷபன் said...

கொன்னுட்டீங்க கடைசி வரில.. பின்னி பெடலெடுக்கற பதிவு..

வி. நா. வெங்கடராமன். said...

அருமையான பதிவு சார். ஒரு பெண்ணின் வலியை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

--
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
www.venkatnagaraj.blogspot.com

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ரொம்ப மகிழ்ச்சி..தங்கள் வருகைக்கும்...
பதிவிற்கும்.. என்னுடைய 'ஒரு விடியல்'
கவிதை படித்தீர்களா?

Sangkavi said...

அழகான பதிவு... பெண்ணின் மன வலியை அழகா சொல்லி இருக்கறீர்கள்..

ரிஷபன் said...

nice

VAI. GOPALAKRISHNAN said...

இந்த பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு வகையில் ஒரு நியாயம் கிடைத்து விடுகிறதே!
அட! அந்த செய்தி தான், என் ஜீவனில் கலந்து,என்னுள் பரவசம் உண்டாக்கி, அந்த
ஆனந்தத்தை இத்தனை நேரமும் சுவாசித்து வந்திருக்கிறேனோ! மனம் நிம்மதி கொள்கிறது.
காரணம் தெரிந்த களிப்பில்!
inthappeNkaLin aananthame visiththiramaanathu thaan. athaRku neengal koduththuLLa mikapperiya "built up" ennavo etho endru payanthuvitten.