Sunday, January 10, 2010

விமர்சனம்


"இனிய உதயம்" என்று ஒரு மாத இதழ். நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சப்தம் போடாமல் ஒரு இலக்கிய பணி செய்து வருகிறது.ரொம்ப நாட்களாகவே அந்த இதழ் பத்து ரூபாய் தான்.இப்போது பதினைந்து ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள். படித்துப் பார்த்தால் அதற்கு மேலும் கொடுக்கலாம் என்பீர்கள். ரவீந்திரநாத தாகூர், மாப்பசான், வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரப் பிள்ளை, லியோ டால்ஸ்டாய் போன்ற ஜாம்பவான்களை இனிய..எளிய ..தமிழில் நமக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். அதில் எப்போதோ வெளி வந்த முகுந்தன் என்ற மலையாள
இலக்கிய கர்த்தாவின் "வசுந்தரா" என்ற நாவலைப் படித்தவுடன் என்னுள் எழுந்த சிந்தனைச்சிதறல்களை ஒரு டைரியில் எழுதி வைத்தேன். அதனை இப்போது உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்வடைகிறேன்.
* * * *
விமர்சனம் பார்ப்போமா....

" ..... வித்யாசமான கரு. மிக மிக ஜாக்கிரதையாகக் கையாளப் பட வேண்டிய ஒன்று. மிக மிக ஜாக்கிரதையாகக் கையாளப் பட்டு இருக்கிறது. ஆபாசத்திற்கும், மெல்லிய, மிக உயர்ந்த ரசனைக்கும் இடையே உள்ள இடைவெளி மிகக் குறுகியது. அதனைக் கருத்தில் கொண்டு, சமுதாயப் பொறுப்புணர்வுடன் வரையப் பட்ட புதினம் இது.
வசுந்தராவை புதுமை கருத்துக்களைக் கொண்ட யுவதி என்றோ, மிகத் துணிச்சல் உடையவர் என்றோ அல்லது எல்லாமே சேர்ந்த கலவை என்றோ விவரிப்பது கடினம்.
ஒரு அல்ப விஷயம் எனக்கு ஞாபகம் வருகிறது.
நான் அப்போது 'டிகிரி பைனல்' படித்துக் கொண்டு இருந்தேன். நாங்கள் இருந்தது ஒரு 'ஸ்டோர்'. எதிரும், புதிருமாக ஆறு குடியிருப்புகள். காலை எட்டு மணி சுமார் இருக்கும். காரே,பூரே என்று புரியாத பாஷையில் கத்திக் கொண்டு, கைக்குழந்தையுடன் பிச்சைக் காரி ஒருத்தி வந்தாள்.' ஐயா, காசு தா..,உணவு தா..பசி ப்ராணன் போகுது. உடுத்திக் கொள்ளக் கூட கிழிசல் துணி தான்' என்று துணியை விலக்கினாள். எனக்கு பகீரென்றது! கண்களை மூடிக் கொண்டு,சட்டென்று திரும்பி விட்டேன். ஐயோ பாவம் என்ற இரக்கத்தினால் அல்ல அது! என்னைப் பார்க்கத் தூண்டிய...அல்லது..நான் பார்க்க விரும்பிய அவளுடைய அந்தரங்கத்தை, நான் பார்க்கும் போது, என்னை யாராவது
பார்த்து விடுவார்களோ என்கிற பயம் !
ஒரு விதத்தில் நாம் எல்லாருமே, மனிதத் தோல் போர்த்திக் கொண்ட மிருகங்கள் தான். இதனை வசுந்தராவும் உணர்ந்து இருப்பார்.அப்படி இருந்தும், அவர் நடிக்க ஒத்துக் கொண்டது, அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. மோதிரம் மாற்றிக் கொண்ட இந்த நிலையில், அவரின் முடிவு, ரசிகர்கள் பால் அவருக்கு இருந்த அசைக்க முடியாத மரியாதையைக் காட்டுகிறது! 'ஜே. கே.' யின் அக்னிப் பிரவேச நாயகி 'கங்கா'வை விஞ்சி நிற்கிறார், முகுந்தனின் 'வசுந்தரா' !
எனக்கு இனி மகள் பிறக்க சாத்யம் இல்லை.இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து, பேத்தி பிறந்தால், வசுந்தரா என்று கட்டாயம் பெயர் சூட்டுவேன். அந்த அளவு 'தாக்கம்' கொண்ட கதாபாத்திரம் இது!
நாராயணன் 'ஸ்க்ரிப்ட்'டைக் கொளுத்தும் போது, கோகுல் போட்ட மோதிரத்தை
வசுந்தரா நெருப்பினில் வீசவில்லை. மிருக..காம...உணர்ச்சி கொண்ட நம் ஒவ்வொருவர் மீதும் வீசுகிறார். நிர்வாணம் இங்கு நடைமுறை சாத்யமில்லை என்ற வெறுமையின் வெளிப் பாடாகக் கூட அது இருக்கலாம். அது நம் ஒவ்வொருவர் மீதும் வீசிய,..வீசும்..சவுக்கடி என்று கொள்வோமாக .....! "

----- 0 -------

4 comments:

Chitra said...

நிர்வாணம் இங்கு நடைமுறை சாத்யமில்லை என்ற வெறுமையின் வெளிப் பாடாகக் கூட அது இருக்கலாம். அது நம் ஒவ்வொருவர் மீதும் வீசிய,..வீசும்..சவுக்கடி என்று கொள்வோமாக .....! "
.......................well, யோசிக்க வேண்டிய விஷயம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆடையைத் துறப்பது மட்டும் நிர்வாணம்
அல்ல. 'பிறவா வரம் வேண்டும் பெம்மானே'
என்று பாடிய கவிஞனின் மனதினில் மெலிதாக ஒரு ஆசை ஒளிந்திருந்தது. ஆனால், " ஆசைகள் அறுமின்
ஆசைகள் அறுமின்
ஈசனோடாயினும்
ஆசைகள் அறுமின்"
என்று சொல்லிப்பாருங்கள். எந்த எதிர்பார்ப்புமில்லா உங்கள் மனத்தை
ஒரு பரிபூரணத்வம் ஆட்கொள்ள த்
தொடங்கி, பேதங்கள் மறைந்து,
அனைத்தும் நம்மைக் கடந்துப் போம்.
அனைத்தையும் நம்மை கடந்து போக
அனுமதித்தால்...
நாமே கடவுள்!
நாம் கடவுள் !!
இந்தப் புதினத்தின் நாயகி வசுந்தரா
பேதம் கடந்தவள். ஆனால் சுற்றி உள்ள
மனிதர்களின் வக்ர உணர்வுகளினால்,
பெண் என்கிற முகமூடி அணிந்து மறுபடியும்
ஆசாபாசம் கொண்ட சாதாரண மனுஷியானாள் !
அந்த கடவுளுக்கு நன்றி !!

thendral said...

Inya Udayam come on online...

www.nakkheeran.in

வை.கோபாலகிருஷ்ணன் said...

என்னைப் பார்க்கத் தூண்டிய...அல்லது..நான் பார்க்க விரும்பிய அவளுடைய அந்தரங்கத்தை, நான் பார்க்கும் போது, என்னை யாராவது
பார்த்து விடுவார்களோ என்கிற பயம் !

IPPADI UNMAI PESUM UNGKALAI ENAKKU UNMAIYILEYE PITITHTHUPPOY VITTATHU