Tuesday, January 19, 2010

விளக்குகள் அணையும் போது...


கைகளும், கால்களும் கட்டப் பட்ட
நிலையில் தனது அகன்ற மார்புடன் படுத்துக்
கிடந்தார், உஸ்தாத் ஷாஹுல் ஹமீது சாஹேப் அவர்கள். அறுபது வருடங்கள்
அவருக்காக உழைத்த அந்த உடம்பு ஓய்வு
எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது. இராமநாத
புரம் மாவட்ட மண் போல, கடினமான அவருடைய முகம் இறுகிப் போய்க் கிடந்தது. வாய் ஓரங்களில், ஈக்கள் குளிர்
கால பார்லிமெண்ட் கூட்டத்தொடரை
நடத்திக் கொண்டிருந்தன. நான்கு நாட்கள்
வயதான தாடி,அந்த முகத்திற்கு கம்பீரத்தையே கொடுத்தது.
' இதோ பாருய்யா, பேப்பர்காரன் உனக்கு
மருவாதி கொடுத்துப் போட்டிருக்கான்" என்று செல்லி அவர் மீது தினசரியை வீசினாள்.அதில் " குத்து சண்டை வீரர் ஷாஹுல் ஹமீது மாரடைப்பினால் காலமானார்.அன்னாருக்கு வயது அறுபத்து மூன்று" என்ற விளம்பரம் வந்திருந்தது. இன்னமும், அவர் மீது விசுவாசமுள்ள, யாராவது சிஷ்யப் பிள்ளை, பத்திரிகைக்கு
அனுப்பி இருப்பான்.இருக்கும் வரை கவனிக்காமல், இறந்த பிறகு கூப்பாடு போடும் உலகம் தானே இது!
'மௌத்தாகி' தன்னுடைய கடைசி காரியத்துக்குக் கூட ஏழை செல்லியை எதிர்பார்க்கும் நிலயில் இருந்த போதும்,
அந்த முகம் தெளிவாகவே இருந்தது. அவருக்குத் தெரியும், செல்லி எந்த குறையும்
வைக்க மாட்டாளென்று!
ராத்திரி முழுக்க செல்லி, அந்த கட்டில்
காலையேப் பிடித்துக் கொண்டு, கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருந்தாள்.எந்த வித பயமும், அருவருப்பும் இல்லாமல் !
'உம்... காலம்' என்று அலுப்புடன் எழுந்தவள்,
தன்னுடைய குடிசையை விட்டு வெளியே வந்து பார்த்தாள். வானம் பொல பொலவென்று விடிந்திருந்தது.
அவர் வந்து எத்தனை நாட்கள் இருக்கும்? கணக்குப் போட்டுப் பார்த்தாள்,செல்லி. நேற்றைய தினத்தை சேர்த்து, நாற்பது நாட்கள் ஆகியிருந்தது. செல்லிக்கு அவரை
ஆரம்பத்தில் அடையாளம் தெரியவில்லை. மேட்டுத்தெருவில், கட்டிட வேலை முடிந்து, திரும்பிக் கொண்டிருந்தாள் அவள். கையில் ஒரு கிழிந்துப் போன சூட்கேஸுடன் அவர் வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.
என்னமோ, அவரைப் பார்த்தவுடனே,கேட்கவேண்டும் போலத்
தோன்றியது, அவளுக்கு.
'எங்கே போகணும், பெரீவரே' என்று அவள் கேட்டவுடன்,'எங்கேன்னு தெரியலே,
தாயி' என்று பரிதாபமாக அவர் பதில் சொன்னதை நினைத்துக் கொண்டாள்.
தினமும் இரண்டு ரூபாய்க்கு குறைவாகவே
சம்பாதிக்கும் சித்தாள் செல்லி, அவருடைய
பதிலைக் கேட்டதும், தன்னுடைய வீட்டிலேயே அவருக்கு தங்க இடம் கொடுத்தாள். அப்போது கூட அவளுக்குத்
தெரியவில்லை.
இரண்டு,மூன்று நாட்கள் கழித்து, அவளுக்கு லேசாக சந்தேகம் வர, அவரைக்
கேட்டாள்.' ஆமா தாயி, நான் தான் அது' என்று சொல்லும்போதே, அவருக்கு கையும், காலும் நடுங்கின. 'எப்படி இருந்த உடம்பு,
இப்படி ஆயிடுச்சேய்யா' என்று சொல்லி கண் கலங்கும் போதும், அவருடைய வரண்ட கண்களிலிருந்து, பொட்டுக் கூடக் கண்ணீர் வராது.
" உம்...நுப்பது வருஷம் வாள்ந்தவங்களும் இல்லே. நுப்பது வருஷம் தாள்ந்தவங்களும் இல்லேன்னு தெரியாமலா சொன்னாங்க..."
என்று குடிசைக்குள்ளே, திரும்பியவள், அந்த சிம்னி விளக்கைப் பற்ற வைத்தாள்.'குபுக்'கென்று எரிந்த விளக்கு, சிறிது நேரத்திலேயே, உஸ்தாது போலவே உயிரை விட்டது. 'அடச்சீ...' என்று கெட்ட
வார்த்தை சொல்லி விளக்கைத் திட்டியவள்,
அவருக்குக் கேட்டிருக்குமோ என்று பயந்து
கொண்டு கட்டிலைப் பார்த்தாள்.'நீ தான் செத்துப் பூட்டியே, உனக்கு எப்படி கேக்கும். நா ஒரு மடச்சி' என்று தனக்குள், அலுத்துக் கொண்டாள். 'இந்த நாப்பது நாளா, ஏதாவது,வாய் தவறிசொல்லிவிட்டு, கட்டிலப் பார்க்கறது பளக்கமா இல்லே போயிடுச்சு'
என்றாள்.
'யாருக்காவது சொல்லி அனுப்பனுமா' என்று யோசித்துப் பார்த்தாள், செல்லி. அவருக்கு நெருங்கிய சொந்தமென்று யாரும் கிடையாது என்று அவரே சொல்லியிருக்கிறார். 'ஏன்யா, உனக்கு புள்ள குட்டி எதாவது இருக்கா' என்று அவள் கேட்டதற்கு, 'பொண்டாட்டியே இல்ல தாயி''
என்று தன் பொக்கை வாய் தெரியச் சிரித்திரிக்கிறார், அவர்.
'பேச்சிமுத்து பயகிட்ட சொல்லியாகணும்' என்று நினத்தவளுக்கு உடனே 'பேச்சிமுத்து
என்ன செய்வான் என்பதுமில்லை தெரிஞ்சு
கிடக்கு' என்று இழுத்தாள்.ரெண்டு ரூபா காசைக் கொடுத்து,'ஏதாவது பண்ணிக்கோ, ஆயா, ஆள விடு' என்று கூசாமசொல்லிடுவானே அந்த பாவிப் பய.
உஸ்தாது வந்த புதிதில், பேச்சிமுத்துக்கு அவரைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று ஆவலோடு அவன் குடிசைக்குள் ஓடினாள் செல்லி. 'தோ பாரு நீ ஏதாவது வெவரம் கெட்டத்தனமா அந்தாள் கிட்ட சொல்லிடாதே' என்று அவளுடைய உற்சாகத்துக்கு 'ஃபுல் ஸ்டாப்' வைத்தவன்,
இரண்டு,மூன்று நாட்கள் கழித்து அவரைப் பார்க்க வந்தான். வந்தவன் சாதரணமாக வரவில்லை. ஏகக் கூச்சலுடன் வந்தான்.'பாயி, எனக்கு நல்ல பொளப்பை குடுத்தே. உனக்கு என்னால ஒண்ணும் செய்ய முடியாத நிலையில் இருக்கேனேன்னு ஏக அழுகை அழுதான். அத்தனையும் நடிப்பு. சொந்தமாக சைக்கிள் ரிக் ஷா. பொண்டாட்டியத் தவிர இரண்டு கூத்தியாரு வேற. அவனாலயா முடியாது...விசுவாசம் கெட்ட பய !
செல்லி, பேச்சிமுத்து போன்றவர்கள் தயவை நாடிக் கொண்டிருக்கும் உஸ்தாத் ஷாஹுல் ஹமீது சாஹேப் ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்தவர் தான். சுழன்று கொண்டிருக்கும் காலச்சக்கரம் மேலே இருப்பவரை கீழே தள்ளி விட்டது!
ஒரு இருபது,இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு குத்துச்சண்டை
உலகில் கொடி கட்டிப் பறந்தவர் இந்த உஸ்தாத். உடல் பயிற்சி சாலை ஒன்று வைத்திருந்தார். இவரிடம் குஸ்தி பயின்ற பையன்கள் ஒருவரும் சோடைப் போகவில்லை.
போட்டி, பந்தயம் என்று கலந்து கொண்டு,
எல்லாரையும் வெற்றி வாகைசூடி கொண்டு வருவார் உஸ்தாத். கலந்து கொண்டால், வெற்றி இவருக்குத் தான் என்ற நிலை இருந்தது. அந்த காலத்தில் பரிசுப் பணத்தை
ஏகமாகக் குவித்த அவர், அத்தனையும் தனக்காகச் செலவழித்து விடவில்லை. எத்தனையோ பிள்ளைகளுக்கு, ஸ்கூல் பீஸ் கட்டியிருக்கிறார். எத்தனையோ ஏழைகளுக் க்குச் சாப்பாடு போட்டிருக்கிறார். வெறும் சோற்றாளாகத் திரிந்து கொண்டிருந்த இந்த பேச்சிமுத்துவை, அதட்டி,உருட்டிப் பணிய
வைத்து, சைக்கிள் ரிக் ஷா வாங்கிக் கொடுத்து, அவன் வீட்டில் விளக்கெரியச் செய்திருக்கிறார்.
' நாம சாப்பிடற சாப்பாடு, நம்ம சாப்பாடு இல்ல தாயி, குர்பானி கொடுக்கிறதைத் தான்
பிறகால, நாமே சாப்பிடறோம்'னு வாய் ஓயாம சொல்லுவியே அந்த சொல்லு, உன் வாழ்க்கையிலே பொய்யாப் போச்சேய்யா என்று கட்டில் காலில் ' மொடேர் மொடேர்'
என்று அடித்துக் கொண்டாள், செல்லி. உஸ்தாதிடம் கை நீட்டிய ஒருவரும் அவருக்குக் கை கொடுக்கவில்லையே. வாஸ்தவம் தானே!
இந்த நாற்பது நாள் பழக்கத்தில செல்லியும்
உஸ்தாதும் ரொம்பவும் அன்னியோன்யமாகப் போய்விட்டார்கள்.
இருவருக்கும் மனுஷ ஆதரவு தேவை. ஆண்டவன் சேர்த்து வைத்தான்.
உஸ்தாது சொல்லுவார்,' நாம ஒதவி செஞ்சவங்ககிட்ட, ஒதவியை எதிர்பார்க்கக்
கூடாது. அந்த மாதிரி பிறகால உதவும்னு நினைச்சுக்கிட்டே உதவி எதுக்குச் செய்யணும்? அதுக்கு தென்ன மரத்த வளர்க்கலாமே'ன்னு.
'இப்பக் கூடப் பாரு தாயி, உஸ்தாது இந்த
மாதிரி ஒரு குடிசையில கஷ்டப் படறான்னு பேப்பரில ஒரு வார்த்தை போட்டாப் போறும். அத்தனை பயலுவளும் கதறிண்டு வந்துடுவானுங்க. பேச்சி முத்துவைப் பாத்தியா, தன்னால உதவ முடியல்லேன்னு எப்படி அழுதான்'னு அவர் சொல்ல கேட்கும் போது, செல்லி மனதுக்குள், குமைந்து கொண்டிருப்பாள்.
'அதெல்லாம் அந்த காலம்யா. இப்பல்லாம்
ஏற வைச்ச ஏணியை எட்டி உதைக்கிற காலத்தில இல்ல நாம பொழப்பை நடத்திக் கிட்டு இருக்கோம்....'
உஸ்தாது ஒவ்வொருத்தர்போல பழைய காலத்தை நினைத்து குமைந்து கொண்டிருக்க
மாட்டார். போன பொருளைப் பற்றி அவர் துளிக்கூட கவலைப்படவில்லை. ஆனால் புகழ் என்னும் போதைக்கு அவரும் அடிமை ஆனார்.
'இதோ பாரு தாயி, அந்த சூட்கேசை எடு, தொள்ளாயிரத்து அறுபதில தினமணிலே என் போட்டோவைப் போட்டிருக்கான் பாத்தியா
அறுபத்தி அஞ்சிலே தந்தில, என்னைப் பத்தி எழுதியிருக்கான் என்று அந்த 'பேப்பர் கட்டிங்'கை யெல்லாம் எடுத்து செல்லிக்கு காட்டுவார். செல்லியும் ஒவ்வொரு எழுத்தாக, எழுத்துக் கூட்டி அவருடைய பெருமைகளைப் படிப்பாள்.
' அந்த காலத்துல நான் பெரிய ஆளு. நம்ம சந்தில, நான் வந்தேன்னா..ஒரு பயலும் பேச மாட்டானுங்க. அவ்வளவு மரியாதி. நான் என்ன சொல்லப் போறேன்னுட்டு அத்தனை
ஜனங்களும், காத்துக் கிட்டு இருக்கும் தெரியுமா' என்று அவர் ஆரம்பித்தால், செல்லி திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பாள். செல்லிக்கு உஸ்தாது சீரும், சிறப்புமாக வாழ்ந்த விதம் தெரியாமலா இருக்கும். இருந்தாலும், அவர் சொல்லி, அதைக் கேட்பதில் ஒரு ஆனந்தம்.
நேற்று மதியத்திலிருந்து சாப்பிடவில்லை. ஆதலால் ஏகமாக பசி எடுத்தது செல்லிக்கு.இரண்டு பொறைக்கும், ஒரு டீ க்கும் அவளிடம் காசு இருக்கிறது.இருந்தாலும், 'அவரை' வைத்துக் கொண்டு சாப்பிடத் தோன்றவில்லை. வயிற்றை புரட்டுகிறார்போன்ற பசியை அடித்துத் துரத்தியது துக்கம்.
'ஏதாவது சில்லறை தேறுமா' என்று உஸ்தாதைப் புரட்டினாள் செல்லி. குற்ற உணர்வு நெஞ்சை அமுக்க,' எல்லாம் உன் காரியத்துக்குத் தான்யா' என்று உதட்டைப்
பற்களால் கடித்துக் கொண்டு, புரட்டினாள்.தலை மாட்டிலிருந்து நாலு ஐந்து ரூபாய் நோட்டுகள் விழுந்தன.பேச்சிமுத்துக்கு விவரத்தைத் தெரிவிக்க ஓடினாள். அவனுடைய இரண்டு ரூபாயும் அப்போது தேவையாக இருந்தது.

நன்றி : 11.5.1986 தினமணிகதிர்

9 comments:

ரிஷபன் said...

இலக்கியத் தரமான சிறுகதை.. படிக்கும்போதே நெகிழ்கிறது நெஞ்சம்..

Chitra said...

இது சிறுகதையா? நிஜத்தின் உணர்வுகளை அருமையா சொல்லி இருக்கீங்க.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இருபத்தினான்கு வருடம் ஆகி விட்டது,இதை எழுதி!

வசந்தமுல்லை said...

'மௌத்தாகி' தன்னுடைய கடைசி காரியத்துக்குக் கூட

intha varththai oru muslim family kooda palagirunthalthan theriyum. oru muslimaga mari oru muslim kathai eluthiya nayam migavum arumai!!!!!!!

கமலேஷ் said...

அருமையான பதிவு...வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan said...

அருமையான கதை

தினமணிகதிரில் வெளிவந்து இருக்கிறதே பாராட்டுக்கள் ராமமூர்த்தி

ப்ரியமுடன் வசந்த் said...

ஏழ்மை குடித்தன வாழ்க்கை, அதனூடே நிகழும் வாழ்க்கை முறை...

நல்லா எழுதியிருக்கீங்க சார்

வை.கோபாலகிருஷ்ணன் said...

Very Great, Sir. You have proved it. "Salaam maale Gum" to my dear Ramamoorthy.
Vai. Gopalakrishnan

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அனைவரின் வருகைக்கும் மிக்க நன்றி. முகம் தெரியா
என் மீது இவ்வளவு பாசமா? உங்கள் அனைவரின் நட்பினால் நான் மிகமிக ஆசிர்வதிக்கப் பட்டவன்!!