Sunday, November 8, 2009

முளைச்சு மூணு இலை விடறதுக்குள்ளே....


கொஞ்ச நாட்களாகவே ரம்யா சந்தோஷத்தைத்
தொலைத்து விட்டிருந்தாள்.

ஸ்கூல் விட்டு வந்தவுடன் பேக்கை ஒரு வீசல்....
யூனிபார்ம் போட்டது போட்டபடி... பால் குடிக்கச்
சிணுங்கல்... ஓவென்று ஒரு கத்தல்... தடதடவென்று
கால் உதைத்தல்... எல்லாமே போச்சு!
எதையோ இழந்துவிட்ட சோகம், கண்களில்... துளிக்கூட
எதிர்ப்பு இல்லாமல் பால் குடித்தல்.யூனிபார்முடன்
சுருண்டு படுத்துக்கொள்ளல்.ஆபிசிலிருந்து நான்
வந்தவுடன்,துள்ளிக்குதித்து ஓடி வந்து,கன்னத்தில்
'கிஸ்' கொடுப்பவள், என் வரவை லட்சியமே செய்யாமல்
கண்களை மூடிக்கொண்டு இருக்கிறாள்.

'குழந்தைக்கு ஜுரமாக இருக்குமோ' என்று அபர்ணா
டாக்டரிடம் போய்க்காண்பித்தாள்.'ஸ்கேன்' ஒன்று
தான் பாக்கி.எல்லா டெஸ்டுகளையும் எடுத்து விட்டு
சில மாத்திரைகள் எழுதி கொடுத்தார் டாக்டர்.சாதாரண
ஜலதோஷத்துக்குக்கூட 'உயிருக்கு ஆபத்தில்லை' என்று
பீடிகை போடும் டாக்டர் அவர் என்பது அபர்ணாவுக்கு
தெரியாமல் போனதுதான் என் துரதிருஷ்டம்.

மாத்திரைகளை ரம்யா விழுங்க, அந்த மாத்திரைகள்
என் பர்ஸை விழுங்கியதுதான் மிச்சம். குழந்தையின்
உடம்பு சரியாகவில்லை.

கவலையுடன் ரம்யாவின் அருகில் உட்கார்ந்து
அவள் உடம்பை வருடினேன்.இது என்ன கைகளில்...?

நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும்,கைகளைச்
சட்டென்று மறைத்துக்கொண்டாள் ரம்யா.கை பூராவும்
கீறல்கள்....
"என்னடி இது?"
"ஒண்ணுமில்லேப்பா."
கைகள் மறுபடியும் முதுகுப்புறம் மறைந்து கொண்டன.
தூண்டித் துருவிக் கேட்டதில் குழந்தை அழுதே விட்டாள்.

"ஸ்கூல்ல.. ரமேஷ்பாபுன்னு ஒரு பையன்.என்னை கிள்றாம்பா.
பென்சிலைப் பிடுங்கிக்கிறாம்பா.மிஸ் கிட்ட சொன்னா என்னைக்
கொன்னுடுவேன்னு பயமுறுத்தறான்ப்பா."
"அப்பாட்டே ஏன் சொல்லலை?"
"அடிச்சுடுவாம்பா.உங்கிட்ட சொன்னா, அவன் என்னைக் கிள்ளிடு
வான்!"
ரம்யாசொல்லும்போது பாவமாக இருந்தது.
கொஞ்சம் யோசித்துப்பார்த்ததில், இது ஒன்றும் நான் நினைப்பது
போல அவ்வளவு சின்ன விஷயம் இல்லை என்பது தெரிந்தது
பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக விசுவ ரூபமெடுத்து, என் கண்
முன்னே பரந்து விரிந்தது.

பையன் இந்த ஒண்ணாம்கிளாஸிலேயே இவ்வளவு முரட்டுத்தனமாக
இருக்கிறானென்றால் அதற்கு என்ன காரணம்? அவனது பெற்றோர்
இருவருமே ' ஆபீஸ் கோயர்ஸ்' ஆக இருந்து, குழந்தையைப் பார்த்துக்
கொள்ள நெருங்கிய சொந்தம் எதுவும் இல்லாமல்... வேலைக்கு வைத்துக்
கொள்ளப்படும் ஆயாவின் இரவல் உறவில், இடி பட்டு,உதை பட்டு
பெற்றோரின் அன்புக்கு ஏங்கி... அது கிடைக்காமல் போக... அதனால்
அந்த பிஞ்சு மனத்தில் 'டொக்'கென்று ஒரு பள்ளம் விழ... அதை நிரப்ப
வழி தெரியாமல் இந்த மாதிரி முரட்டுக் குழந்தையாக மாறி விட்டதா?

சரி விஷயத்துக்கு வருவோம்.'பேரண்ட்ஸ் மீட்டிங்'கில் இதைப் பற்றிச்
சொல்லலாமா? இதிலெல்லாம் நாங்கள் தலையிடமுடியாது என்று
அவர்கள் கை விரித்து விட்டால்... கன்ஸ்யூமர் கவுன்சிலில் ரிப்போர்ட்
செய்யலாமா? பழி வாங்கும் படலமாக, பாவம் அந்த சின்னக்
குழந்தைக்கு டி.சி. கொடுத்து அனுப்பி விட்டால்? ஓட்டு கேட்கும்
அரசியல்வாதி போல, வாயில் உள்ள பல் முழுவதும் தெரியச் சிரித்து
ஐயாயிரம் ரூபாய் காசு கொடுத்து, வாங்கிய சீட்டு! பையனுடய
அப்பாவுடன் 'காம்ப்ரமைஸ்' செய்து கொள்ளலாமா? அவர் ஒப்புக்
கொள்ளாவிட்டால்....

'இந்தச் சின்ன வயசிலேயே உனக்கு இப்படி ஒரு கஷ்டமா கண்ணம்மா?'
என்று மனதுக்குள் அழுதேன். இத்தனைக்கும் ஆள் பலம் இருக்கிறது
எனக்கு. பையனின் அப்பாவைத் தண்ணி இல்லாக் காட்டுக்குத் துரத்தி
விட முடியும் என்னால். அபர்ணாவுக்கு, போலீஸ் கமிஷனர் ஆபிசில்
வேலை. போலீஸ் 'இன்ப்ளூய்ன்ஸ்' ஐப் பயன்படுத்தி பயலை
'ஈவ் டீசிங்கி'ல் புக் பண்ணி விடலாம். அந்த ஆள் பிசினஸ்
பண்ணினாலும் பரவாயில்லை. 'கமர்ஷியல் டாக்ஸி'ல் ஆள் இருக்கிறது
எனக்கு.

ஆயிரம் இருந்து என்ன? மிகவும் மென்மையாக 'ஹேண்டில்' செய்யப்
பட வேண்டிய விஷயம் இது. ஒன்று கிடக்க ஒன்று நான் எதாவது
செய்யப் போக, அந்த பையனின் பிஞ்சு மனத்தில் என்னுடைய
செய்கை ஒரு மெல்லிய அதிர்வை உண்டாக்க அந்த அதிர்வு
காலப்போக்கில் மனச்சிதைவை ஏற்படுத்த, ஒரு சமூக விரோத
சக்தி இந்த நாட்டில் உருவாக நானும் ஒரு காரணமாக இருந்து
விடுவேனோ?

ரம்யா இரண்டாவது குழந்தை. படு ஸ்மார்ட்.. ஒரு கை தேர்ந்த
சிற்பியின் இரண்டாவது சிற்பம், முதல் சிற்பத்தை விட எப்படியோ
அற்புதமாக அமைந்து விடுவதைப் போல் எல்லார் வீட்டு
இரண்டாவது குழந்தைகளுமே அற்புதமாகத்தான் அமைந்து
விடுகின்றன. அப்படிப்பட்ட குழந்தைக்கு இப்படி ஒரு கஷ்டம்!
கடவுளே...

அபர்ணா வந்தாள்.

"ஸ்கூலுக்குப் போயிருந்தேன். ஜஸ்ட் 'பைவ்' மினிட்ஸ். மிஸ் கிட்ட
போய் விஷயத்தைச் சொன்னேன். அந்தப் பையனைக் கண்டிச்சா.
பாவம், அது அழுது டிராயர்லயே ஒண்ணுக்குப் போயிடுத்து.
இவளையும் இடத்தை மாத்தி உட்கார வைச்சுட்டா மிஸ்! இதுக்குப்
போயி பெரிசா மனசைக் குழப்பிட்டீங்களே.."

போய்யா... நீயும் உன்னோட ஊசிப்போன ஐடியாக்களும்!' என்பது
போல இருந்தது அவள் பார்வை.

நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். " இனி மேல் நியூஸ் பேப்பரே
படிக்கக் கூடாது !"

--- நன்றி சாவி இதழ் 10.11.93

2 comments:

aarvie88 said...

nalla irunthathu kadhai. seekaram matha kadhaigalum post pannu.

ரிஷபன் said...

இயல்பான கதை ஓட்டம் பொருத்தமான முடிவு நாமாக குழப்பி கொள்ளும் விஷயங்களில் எப்படி யதார்த்தமாய் தீர்வு காணலாம் என்பதில் கதை மனதில் இடம் பிடித்து விடுகிறது