Friday, December 9, 2011

டேய்..சீனாப் பயலே!!!!!!


(1962 ம் வாக்கில் இந்தியா, சீனா போர் நடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..இது உண்மையா...'உடான்ஸா’..என்பதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்)
ஒரு கால கட்டத்தில்,சீனாவின் பலம் ஓங்கி..உடும்பு விட்டால் போதும் என்கிற நிலை இந்தியாவிற்கு!
அந்த சமயம் மாசேதுங்கிற்கு ஒரு விபரீதமான ஆசை வந்ததாம்..இந்தியாவின் தெற்கு பகுதியை கைப்பற்ற வேண்டும் என்று!
ஆகவே, நன்றாகத் தமிழ் தெரிந்த ஒற்றனை, தட்சிணப் பகுதிக்கு அனுப்பினான்..அந்த ஒற்றனும், சென்னை,செங்கலப்ட்டு, காஞ்சிபுரம்,விழுப்புரம் என்று ஒவ்வொரு ஊராக வந்து கொண்டிருந்தானாம்.
வந்தவன்,திருச்சி பக்கம் வந்திருக்கிறான்..
வடக்கு ஆண்டார் வீதி!
”டேய் சீனாப் பயலே!..உன்னை விட்டேனாப் பார்” என்று கூவிக்கொண்டு ஒரு எழுபது வயது மதிக்கத் தக்க பாட்டி,அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்..
அப்படியே அந்த சீனன், நடுங்கிப் போய் விட்டான்,நடுங்கி!
நடந்தது என்ன தெரியுமா?
அன்று ஞாயிற்றுக்கிழமை!
அந்த காலத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஞாயிறு அன்று சிறு குழந்தைகளுக்கு,விளக்கெண்ணைய் கொடுப்பார்கள்..அன்றைக்கு, ஜீரா மிளகு குட் ரசமும்..பருப்புத் துவையலும் தான் மெனு!
குழந்தைகளுக்கோ விளக்கெண்ணெய் என்றால் பயம்..சம்பவம் நடந்த அன்று,காமு பாட்டி ”சீனாப் பயல்” என்று செல்லமாய் அழைக்கப் படும் பேரன் சீனுவாசனை விளக்கெண்ணெய் கொடுப்பதிற்கு, துரத்திக் கொண்டிருந்தாள்..அந்த ‘சீனாப் பயலோ’ தன் சிண்டு, பாட்டியின் கையில் சிக்க விடாமல் ஓடிக் கொண்டிருந்தான்.
அந்த சீனன் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், தலை தெறிக்க ஒரு பொடியன் ஓடிப் போய்க் கொண்டிருந்தது தெரியும்..
ஆனால் நாம் எல்லாரும் பண்ணிய புண்ணியம்
அவன் திரும்பிப் பார்க்கவேயில்லை..
”... வயசான கிழவிக்கே, இவ்வளவு ஆத்திரமும், வெறுப்பும் இருந்தால், இந்த பகுதியில் உள்ள வாலிபர்களுக்கு நம் இன மக்கள் மீது எத்தனை கோபம் இருக்கும் ..”
நினைத்த சீனன் உடனே செயலில் இறங்கினான்..எங்குமே நிற்காமல்,அவன், ஒரே ஓட்டமாய் ஓடி...சீனா போய், மாசேதுங் காதைக் கடிக்கவே,மருண்டு போன மாசேதுங்,மக்மோகன் எல்லை தாண்டி வரவே இல்லையாம்..!
பெரிய..பெரிய.. ராஜதந்திரிகளான ஜவஹர்லால் நேரு...கிருஷ்ண மேனன்..போன்ற ஜாம்பவான்களாலும் செய்ய முடியாத காரியத்தை, கேவலம் ஒரு பல்லு போன பாட்டி செய்து முடித்தாள்!
இப்படியாகத் தானே, அந்த காலத்தில் மங்கோலியாவிலிருந்து, படையெடுத்து வந்த, தைமூருக்கு ஒரு கிழவி உதவிய நீசச் செயலுக்கு, அது நடந்த ஆயிரம் வருடம் கழித்து, தட்சிணத்துக் கிழவி ஒருத்தி பரிகாரம் செய்தாளாம்!

16 comments:

வெங்கட் நாகராஜ் said...

உண்மையில் நடந்த நிகழ்வோ, அல்லது கற்பனையோ, நன்றாக இருந்தது என்பது தான் முக்கியம்... :)

சீனாப் பயலால், நமக்கு ஆதயம் தான்....

Rathnavel said...

அருமை.

ஸ்ரீராம். said...

:)))))

ரிஷபன் said...

அந்த காலத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஞாயிறு அன்று சிறு குழந்தைகளுக்கு,விளக்கெண்ணைய் கொடுப்பார்கள்..அன்றைக்கு, ஜீரா மிளகு குட் ரசமும்..பருப்புத் துவையலும் தான் மெனு!

super! படம் உங்க கை வண்ணமா!
கற்பனை அபாரம்.

அப்பாதுரை said...

தேவன் எழுத்தைப் படித்தது போல ஒரு உணர்வு.

மோகன் குமார் said...

சார் தலைப்பை பார்த்து பதிவுலகில் யார் வம்புக்கும் போகாத சீனா சாரை எதிர்த்து ஒரு பதிவா என உள்ளே வந்தேன். பாட்டியின் காமெடி கதையால்ல இருக்குது :)))

Arun Ambie said...

சீனாக்காரன், காஞ்சிபுரம் என்றெல்லாம் சொன்னதும் ஏழாம் அறிவு ரேஞ்சுக்கு இருக்குமாக்கும்னு நெனச்சேன். சிறுகதை....ஆனாலும் நல்லாருக்குதுங்கோவ்.

RAMVI said...

நல்ல வேடிக்கை.

புலவர் சா இராமாநுசம் said...

உண்மையா கற்பனையா ?
என்பதல்ல!
பதிவு அருமை!

புலவர் சா இராமாநுசம்

கோவை2தில்லி said...

அருமையாய் இருந்தது சார்.

S.Raman,Vellore said...

மிகப் பெரிய சர்ச்சை என்று எதிர்பார்த்து உள்ளே வந்தால், சுவாரஸ்யமான பதிவாக இருந்தது. வாழ்த்துக்கள்

நிலாமகள் said...

ந‌ல்ல‌ க‌தை!
:-))

Rishvan said...

nice to read... thanks for sharing the information.. Please read my tamil kavithaigal in www.rishvan.com

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதையில் வரும் சீனாப்பயல் என்ற பொடியனும், அவனின் பாட்டியும், எங்கள் திருச்சி வடக்கு ஆண்டார் தெருவில் வசித்தவர்கள் என்பதே மிகவும் சந்தோஷமும் வீர உணர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

//அன்றைக்கு, ஜீரா மிளகு குட் ரசமும்..பருப்புத் துவையலும் தான் மெனு!//

ஆஹா நாக்கில் ஜலம் ஊறுகிறதய்யா!

ஆனாலும் விளக்கெண்ணெய் படுபோர் தான்.

மூக்கை இறுக்கிப்பிடித்து, காதைத்திருகியபடி எப்படியோ உள்ளே செலுத்தி விட்டு, பிறகு அனைத்தையும் சப்ஜாடா வெளியேறச் செய்து விடுவார்களே!

கில்லாடிப் பாட்டிகள்!! ;)))) vgk

cheena (சீனா) said...

அன்பின் ராம மூர்த்தி - வலைச்சரம் மூலமாக வந்தேன் - நல்லதொரு நகைச்சுவை -மிக மிக் இரசித்தேன் - மோகன் குமாரின் மறு மொழியினை அப்படியே வழி மொழிகிறேன். நானே ஒரு நிமிடம் அப்படித் தான் நினைத்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரி said...

சிரிக்கவைக்கும் கதைக்குப் பாராட்டுக்கள்..

இன்றைய வலைச்சர
அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...