Tuesday, November 15, 2011

வர வீணா...ம்ருது பாணீ..!!!


”வரச் சொல்லுங்க?”
வந்தேன்.
சோஃபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவர்கள்.
எனக்கு செம எரிச்சல்..லேசாய் பயம் வேறு.
“பாடச் சொல்லுங்க”
காலையிலிருந்தே தொண்டை சரியில்லை..போதாததிற்கு விஷயத்தை மோப்பம் பிடித்த
ப்ரண்ட்ஸ்களுக்கு ஐஸ்க்ரீம்..
அது மக்கர் செய்தது.
“வர வீணா..ம்ருது பாணீ”
கீச்சுக் குரலில் அந்த கத்தல் என்னையே என்னவோ செய்தது..
கேட்பவர்களுக்கு எப்படி இருக்கும்?
“ நேற்றிலிருந்து உடம்பு சரியில்ல..அதனால தான்”-
அப்பா சப்பை கட்டு கட்டினார்.
ரொம்பவுமே நெர்வஸாய் இருந்தார்,அவர்.
அம்மா அதற்கு மேல்!
இதுவும் தட்டிப் போய் விடுமோ என்கிற கவலை இருவருக்கும்!
“இப்ப எல்லாம் யாரு பாட்டு பாடறாங்க. ஏதோ சம்பிரதாயம், அவ்வளவு தான்”
என்றாள் என் அத்தை.
சற்று நேரம் மெளனம்!
அப்பா தான் மெளனத்தை கலைத்தார்.
“சமையல் செஞ்சா சூப்பரா இருக்கும்”
“அப்படியா?”
அடுத்தது பிஸ்கெட்..ஸ்வீட்..காரம்..காஃபி.
அப்புறம் இருக்கவே இருக்கிறது..
”கொஞ்சம் தனியாப் பேசணுமே”
“போய் லெட்டர் போடறோம்”
எதுவும் இல்லை இவர்களிடத்தில்!
பிடித்து விட்டது என்றார்கள்.
உடனேயே, முகூர்த்தத்திற்கும் நாள் குறித்தாகி விட்டது.
அவர்கள் போனதும், அப்பா சந்தோஷத்தில் குதித்தார்.
“வெள்ளிக்கிழமை ராகு காலத்துல அர்ச்சனை பண்ணிணது வீண் போகவில்லை”
சந்தோஷம் தாங்காமல்,அப்பா, அம்மா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தேன், நான்.
“டேய் பாலு, இனிமே உனக்கு ஒரு குறையும் இல்ல” என்று என்னை கட்டிக் கொண்டார்,ஐந்தாவது பிள்ளையான என்னை கரையேற்றி விட்ட அப்பா!

15 comments:

raji said...

ஆஹா!சூப்பர் சார்.இனி இப்பிடி நடந்தாலும் ஆச்சர்யப் படறதுக்கில்லைதான்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எனக்கு அஞ்சு பொண்ணும்மா..அந்த பயத்துல ஏதோ உளறினேன்...

ரிஷபன் said...

எனக்கு பயத்துல இப்ப பாடவே வரல!

manichudar blogspot.com said...

மாற்றி யோசித்தல் இது தானோ . நல்ல கற்பனை , அபாரம போங்கள்,

வை.கோபாலகிருஷ்ணன் said...

எங்க வீட்டுப் பிள்ளை என்ற எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் படத்தில், ஹீரோயின் சரோஜாதேவியின் அப்பாவான ரெங்காராவ், பயந்த சுபாவமுள்ள பெரிய பணக்காரரான கோழை எம்.ஜி.ஆரை மாப்பிள்ளை பார்க்க வருவார்கள்.

”உங்கள் பெயர் என்ன, பாடத்தெரியுமா?” என சரோஜா தேவி ஆசையாகக் கேட்டதும், நம்பியார் எம்.ஜி.ஆரைப்ப் பார்த்து முறைப்பார்.

எம். ஜி. ஆர். பயந்து கொண்டே ராமு என்ற தன் பெயரை மிகவும் வெட்கத்துடன் தன் வாய்க்குள்ளேயே முணகுவார்.

அப்போது எம். ஜி. ஆரின் அக்கா புருஷனான M N நம்பியார் ”அவ்ர்கள் பக்கத்தில் போய் உரக்கச்சொல்லுடா” என்றதும், மிரண்டு போய் ஒரு டான்ஸ் ஆடி, டிரேயில் வைத்திருக்கும் காஃபியை, சரோஜா தேவியின் புடவை மேல் கொட்டி விடுவார்.

அதற்கு ரெங்காராவ் மிகவும் கேஷுவலாக, ”பலே மாப்பிள்ளை பாட்டுத்தெரியுமா என்று கேட்டதும், ஒரு டான்ஸ்ஸே ஆடிக்காட்டி விட்டாரே” என்பார்.

சரோஜாதேவி ”இந்த மாப்பிள்ளை வேண்டாம், புறப்படுங்கள் அப்பா” என்று சொல்லி கிளம்பிவிடுவாள்.

”ஆஹா! புறப்பட்டுவிட்டால் போச்சு” என்று சொல்லி ரெங்காராவும் அவள் பின்னாலேயே கிளம்பி விடுவார்.

அந்த ஞாபகம் வந்தது எனக்கு, இதைப்படித்ததும்.

நல்ல நகைச்சுவையான பதிவு.
vgk

Yaathoramani.blogspot.com said...

அருமையான கற்பனை
அசத்தலான பதிவு
இப்படியும் நடக்கவேண்டும் என
மனம் ஏனோ விரும்புகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

ஸ்ரீராம். said...

ரிவர்ஸ் ஸ்டோரியா...முன்பெல்லாம் குமுதத்தில் இது மாதிரி கதைகள் ஒரு பக்கக் கதைகளாக வரும்! வர வீணா பாடல் வர வேணாம் என்று பட்டிருக்குமோ என்னமோ,,,பாட்டு செலெக்ஷன்தான் தப்பு!!!...எப்படியோ பாலு கரை ஏறிட்டார் !

RAMA RAVI (RAMVI) said...

ஆஹா.. இப்படி நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
சுவாரசியமான கற்பனை சார்.

ADHI VENKAT said...

ரொம்ப வித்தியாசமா இருந்தது சார்.
நாளை இப்படியும் நடக்கும்....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சபாஷ் சபாஷ்.சீக்கிரமே இது நடக்கும்.

Easwaran said...

இப்போதைய சூழ்நிலையில், இது கதையல்ல! நிஜம்! நல்ல வீட்டுக்கு அடங்கிய பசங்களுக்கு பொண்ணு கிடைக்க மாட்டேங்குது சார்!

வெங்கட் நாகராஜ் said...

இது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை மூவார் முத்தே.... :)

நல்ல கற்பனை....

அப்பாதுரை said...

ரொம்ப நாளாச்சு இப்படி நறுக் படிச்சு.
ரிஷபன் க்மெந்ட் வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

ஹ ர ணி said...

அப்படித்தர்ன் இருக்கு சார்.. வந்துவிடும் வெகு சீக்கிரம். ஆனாலும் பல இடங்களில் பாடுவதற்குப் பதிலாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள் (பின்பு என்ன ஏது காரணம் என்று அறியாமல்). காரணத்தோடு ஒரு சின்ன எடுத்துக்காட்டு எனக்குத் தெரிந்த உறவினர். திருமணமாகி குழந்தைகளே இல்லை. காரணம் மனைவி தகுதியில்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டார். கணவன் மனைவி மனம் துன்பபப்படுவாளே என்று தன்மேல் குறை இருப்பதாக சொல்லிக்கொண்டான. ஒவ்வொரு நாளும் அந்தப் பெண் அவள் குடும்பமும் அந்த பையனை படுத்துகிற பாடு யாராலும் சகித்துக்கொள்ளமுடியவில்லை. இத்தனைக்கு அவன் அன்பு மாறாதிருக்கிறான்.

கோமதி அரசு said...

ஆஹா! அருமை.

இப்படியும் நடக்கலாம் வருங்காலம்.

பெண் குழந்தை வேண்டாம் என்று செய்ததில் பெண் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஆண்களுக்கு பெண் கிடைப்பது கஷ்டம்.

முன்பு மாதிரி காளையை அடக்குதல், வட்ட கல்லை தூக்குதல், ஆடல், பாடலில் வல்லவர் என்று சொன்னால் தான் என்று ஆனாலும் ஆகலாம்.