Thursday, July 7, 2011

அங்கார...இங்கார.....(3)


கடிதத்தை வார்டன் படித்து முடித்ததும், ஒரு கனத்த மெளனம்!
அது ஒரு ஐந்து வினாடி..
ஐந்தே வினாடி தான்!
அதை பிச்சுவையர் கலைத்தார்.
பிறகு ஒவ்வொருவராய் பேச ஆரம்பித்தார்கள்...
”...பாவம், இந்த வயசுல, இப்படி ஒரு ஏமாற்றம் கூடாது!”-ஒருவர்.
“நம்பிக்கைத் துரோகமில்லையா?” - இது இன்னொருவர்.
“பெண்டாட்டி செத்துப் போனவுடனே என்ன பண்ணுவான், மனுஷன்..அதுவும் அவ்வளவு பெரிய வீட்டில..வீட்டின் ஒவ்வொரு அசைவும் அவங்க ஞாபகமா இருக்கும் போது...”
“ பையன் குடும்பம் வந்தது...கடைய வித்த பணத்தை டெப்பாசிட்டா வைச்சிருந்தார்..அதை கொடுத்ததோட நிறுத்தியிருக்கலாம்..இத்தனைக்கும் பாட்டி பேரைக் கூட வைக்கலை, பேத்திக்கு”.
“ பையன் ஏதோ பிஸினஸ் பண்றேன்னு கேட்டதுக்குத் தானே கொடுத்தாரு?”
” ஆமா....மாம்....’இப்ப கம்பெனி வேலையில நான் இல்ல..சொந்தமா சிலிக்கன் வேலில, பிஸினஸ் ஆரம்பிக்கப் போறேன்னு கேட்டதுக்குத் தான் கொடுத்தார். நீங்க சொன்னா மாதிரி அத்தோட நிறுத்தியிருக்கலாம்”
”அசட்டுத்தனம் பண்ணிட்டார்”
“அப்படின்னு சொல்ல முடியாது..அந்த சமயத்தில என்ன தோணிச்சோ தெரியல...பையனை இனிமே, எப்ப பார்ப்போமான்னு ஆயாசமா இருக்கும்.. அதனால நாம நல்ல நிலையில.. அதாவது.. நம்ம உடம்பு நல்ல நிலையில இருக்கும் போதே. வீட்டை பையன் பேருக்கு ரிஜிஸ்டர் பண்ணியிருக்கலாம்னு தோணியிருக்கும். அதனால் மாற்றிக் கொடுத்திருப்பார்..”
”அது தப்பில்லையே..எல்லாரும் பண்றது தானே அது!”
“ஆமாம்...ஆமாம்..அதுக்காக, ’அப்பா நாங்க ஊருக்குப் போனவுடன் நீ இங்கே தனியா இருக்க வேண்டாம். உனக்கு உடம்புக்கு ஏதாவது வந்தாக்கூட என்னால அங்கேர்ந்து உடனே வர முடியாது..அதனால, இரண்டு நா கழிச்சு இந்த வண்ணாரப் பேட்டை கடைசீல, ஒரு ‘ஓல்ட் ஏஜ் ஹோம்’ இருக்கு..அதில போய் ’ஜாய்ன்’ பண்ணிடு.. நான் அதுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டேன்..சாவியை நாடார் கடையில் கொடுத்துட்டு போ...இந்த வீட்டை, வாடகைக்கு விட்டுடலாம்..ஆளை நானே ஏற்பாடு பண்ணிட்டேன்..’ன்னு பையன் உடனேயே சொல்லியிருக்கவும் வேண்டாம்...இவரும்,’பரவாயில்லையே..பையன் நல்லா ’திங்க்’ பண்றானேன்னு சந்தோஷப் படவும் வேண்டாம்..”
“ஆமா...ம்”
“ இவரும், அவங்க போன கையோட, நம்ம விடுதிக்கு வந்திருந்தா, நல்லா மணக்க மணக்க ...இருந்திருப்பாரு..ஹூம்....பாழும் விதி....”
“ கரெக்டா சொன்னீங்க..இவர், அவங்க அமெரிக்கா போனதும், உடம்பு சரியில்லாம படுக்கணுமா...பேச்சு மூச்சில்லாம இருந்தவரைப் பாக்க நாதி இல்ல...பத்து நாள் கழிச்சு, கண் முழிச்சுப் பார்த்தா..திடீரென்று ஒரு லாரி நிறைய சாமான்கள் வந்திறங்க..இவரு நினைச்சிருக்காரு.. நம்ம பையன் வாடகைக்கு ஏற்பாடு பண்ணிண ஆள் அவங்க தான்னு ”
“ ஆனா, வந்தவங்க...இவரையும்...இவரோட முண்டாசையும்..திண்ணையில கிடந்த அந்த கயிற்றுக் கட்டிலையும் பார்த்துட்டு, ’வாட்ச்மேன் நாங்க வீடு வாடகைக்கு வல்ல..உங்க எசமான் எனக்கு வீட்டை வித்துட்டாரு...இத்தனை நாள் பார்த்துக் கொண்டதிற்கு நன்றி..இந்தாங்க நூறு ரூபாய்..இனிமே எங்களுக்கு ஆள் வேண்டாம்னு சொன்ன வுடனே....”
“பாவம்..என்ன ஒரு ’ஷாக்’காயிருக்கும்! அந்த ஏமாற்றம் தான் மனசு ஒடிஞ்சிருக்கும் போல..”
“ நம்பிக்கைத் துரோகமில்லையா இது?பையன் அவரை ‘கன்ஸல்ட்’ பண்ணியிருந்தாக் கூட’ஓக்கே’ன்னு தான் சொல்லியிருப்பாரு..ஆனா, இப்ப ஏமாந்தாப் போலத் தானே ஆச்சு!”
“ அதான் நேற்று நடு ராத்திரி நினைச்சு.. நினைச்சு..அழுதிருக்கார்..பாவம்!”
” நம்மோட முடிவு நெருங்கிடுச்சுன்னு தோணியிருக்கும்..அதான், அந்த லெட்டர் கடைசியில்,எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா..பையனுக்குத் தெரியப் படுத்த வாணாம்..வீணாக் கஷ்டப் படுவான்னு எழுதியிருக்கார்...தன் மரணத்தில கூட பையனுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு என்ன ஒரு நல்ல எண்ணம்?..”
“ பாவம்.. நல்ல் ஆத்மா..”
“ அது சரி..இப்ப என்ன பண்றது?”
“ அதான் அவரோட கடைசி ஆசைப் படி, மெடிக்கல் காலேஜ்க்கு ‘டொனேட்’ பண்ணிட வேண்டியது தான்..”
வார்டன் அடுத்து நடக்கும் விஷயங்களை ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வர அவர்கள் ஒவ்வொருவரும் ’அவரை’..சாரி..அந்த ‘பாடியை’ ’டிஸ்போஸ்’ பண்ணும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தார்கள்..
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன்!

12 comments:

வெங்கட் நாகராஜ் said...

மனதைக் கலங்கடித்த மகன்... தற்போது நிறைய மகன்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். கடிதத்தில் என்ன இருக்கப்போகிறதோ என்ற ஆர்வத்தில் இருந்த எனக்கு இந்த முடிவு வருத்தத்தினையே வரவழைத்தது. நல்ல சிறுகதை பகிர்வுக்கு நன்றி.

மோகன்ஜி said...

உங்களுக்கு இப்போ என்னை அழவச்சுப் பாக்கணும்.. அவ்வளவு தானே? அழ விட்டாச்சு இல்ல? கிளம்புங்க..

அருமையான கதையோட்டம்.. நெகிழ வச்சுட்டீங்க மூவார்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் மனது கலங்கிப்போச்சு இராமமூர்த்தி சார். ஏன்னா எனக்கும் வயசாகுதில்லே. பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க! மொத்தத்தில் இந்தக்கதையாலே எல்லோரையும் அப்படியே அழ வைச்சுப்புட்டீங்க. நல்ல நடை.

[சூடா பஜ்ஜி சாப்பிட வருவீங்கன்னு நினைச்சுக் காத்திருந்தேன். கடைசியிலே பஜ்ஜியும் ஆறிப்போச்சு, நீங்களும் வரவில்லை]

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

ரொம்ப நல்ல கதை ராமமூர்த்தி சார், இப்படி நிறைய பிள்ளைகள் இருப்பதால்தானோ என்னவோ நிறைய ஒல்டு ஏஜ் ஹோம்கள் ஆரம்பிக்கப்படுகிறது...

A.R.ராஜகோபாலன் said...

கண்களில் கண்ணீர் கசிவதை
தடுக்க முடியலையே சார் ...................
களத்தின் எதார்த்தம் இதுதான் சார்
நன்றி

இராஜராஜேஸ்வரி said...

ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன்! யதார்த்தக் கதையல்ல நிஜம்.

ADHI VENKAT said...

இப்படியும் ஒரு மகனா! கல்நெஞ்சக்காரன்....
மனம் கலங்க வைத்து விட்டீர்கள் சார்.

ஸ்ரீராம். said...

இப்படி எல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா...

ரிஷபன் said...

மனசு விண்டு போச்சு.. இப்படியுமா மனுஷங்க இருப்பாங்க..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இப்படி இருப்பதற்குப் பெயர் கூடக் கொடுக்கிறார்கள்-ப்ராக்டிகல் பெர்சனாலிட்டி என்று.

சக்கரம் சுழல்கிறது.அது எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்.

நெகிழ்ச்சியான கதை ஆர்.ஆர்.ஆர்.சார்.

ஜீவி said...

முதலில் ஒன்றைச் சொல்லி விட வேண்டும். ஆரம்பம் அட்டகாசம். கதையை எழுதிய போக்கும் நன்றாக இருக்கிறது; அதாவது ஓரிடத்தில் ஆரம்பித்து விட்டு, பிறர் உரையாடல் மூலம் நடந்தைச் சொல்லி நகர்த்திக் கொண்டு வந்து, கடைசியில் ஆரம்ப இடத்திற்குக் கொண்டு முடித்த விதம். அதுவும், அந்த இறுதிக் கட்டத்தில், 'வாட்ச் மேன்' வார்த்தை பிரயோகத்திற்குப் பின் சோகம் கூடத்தான் செய்கிறது.

ஆனால், அயல்தேசத்திற்குப் பிழைக்க வேலை தேடிப் போன பெரும்பாலான இளையோர் இந்த மாதிரி தான் இருப்பார்கள் என்கிற பொத்தாம் போக்கான கருத்தை இந்தக் கதையும் பிரதிபலித்தது தான் கதைக்கு ஒரு வலு சேர்க்க முடியாமல் போய்விட்டது. சொந்த நாட்டிலேயே, பெற்றோரை ஒதுக்கி வைத்துவிட்டுத் தனிக்குடித்தனம் நடத்துவோர் போன்றவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

உண்மையில் பெற்றோரை விட்டான பிரிதலின் இழப்பு, வேறு நாடுகளுக்கு வேலைக்குப் போன இளைஞர்களிடம் கூடுதலாகத் தான் இருக்கிறது.
அந்தந்த தேசத்திற்கான சட்டதிட்டங்கள், பெற்றோர்களையும் தங்களுடன் வைத்துக் கொள்ள முடியாத நடைமுறை சாத்தியமின்மை தான் அவர்களை செயல்படமுடியாமல் செய்கிறதே தவிர அடிப்படையில் பெற்றவர்கள் தங்கள் கூட இருந்தால் தங்கள் தனிமை தொலைந்து சந்தோஷம் கூடத் தான் செய்யும் உண்மையிலேயே நினைக்கவும் செய்கிறார்கள். அங்கான வாழ்க்கை முறையில் இவர்கள் கூட இருப்பது பல விஷயங்களில் செளகரியத்தைக் கொடுக்கவும் செய்யும் என்று யதார்த்த நிலையை உணரவும் செய்கிறார்கள்.