Wednesday, September 15, 2010

ஒரு மனைவியின் மறு பக்கம் !


வழக்கம் போல் 'ஹிண்டு'வை ஒரு ''க்ளான்ஸ்' புரட்டி விட்டு சாப்பிட உட்கார்ந்தான்,தியாகு. சாப்பிடும் போது தான் இருவருக்கும் குருக்ஷேத்திரம் நடக்கும். மனதை சந்தோஷமாக வைத்துக் கொண்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட சாப்பாடு ஒட்டும் என்று அவளும் சொல்லிச் சொல்லி அலுத்து விட்டாள்.
" ஏண்டி, புருஷனுக்கு இருக்கிற ரோஷம் போறும்னுட்டு தீர்மானம் பண்ணிட்டியா?'
காட்டுக் கத்தலாகக் கத்தினான், தியாகு.
"என்ன ஆச்சு..ஏன் இப்படி கத்தறீங்க?"
" ஆமாம்..நான் அலர்றது மட்டும் தெரியுதாக்கும். சாம்பார்ல, உப்பே போடல்லே"
" உப்பு இல்லாட்டி போடறேன். அதுக்கு இப்படி கத்தணுமா? அண்டை அசல்லே மனுஷங்க இருக்காங்க..மெதுவாத் தான் பேசுங்களேன், ப்ளீஸ் !"
இதையும் அவள் பயந்து கொண்டு தான் சொன்னாள்.
அவளை ஒரு முறை முறைத்தான், தியாகு.
" சம்பாதிக்கிற திமிர்டி, உனக்கு. பேச மாட்டே நீ ? இருக்கிற இடத்தில உன்னை வைச்சிருந்தா தெரியும்?"
" எல்லாம் இருக்கிற இடத்தில தான் இருக்கேன்"
மெல்ல முணுமுணுத்தாள். அவனுக்கு அது கேட்டிருக்க வேண்டும்.
" சமைக்க வக்கு இல்லாத கழுதைக்கு பேச்சு வேறயா.....?"
ஆத்திரத்துடன் சாப்பாட்டுத் தட்டை வீசி எறிந்தான். கத்தரிக்காய் 'தான்'கள் மொசைக் தரையில் சிதறிக் கொண்டு ஓடின. எரிச்சலுடன் குழம்பு பாத்திரத்தை எட்டி ஒரு உதை விட்டான்.
.... எங்கிருந்து தான் நமக்குன்னு இப்படி ஒண்ணு வாய்ச்சிருக்கோ.. சனியன்..இத்தனை அண்ணன்,தம்பி,தங்கைகளோடு பிறந்தாளே..அவளை யாரும் 'டீ' போட்டுப் பேசியதே கிடையாது.
விக்கித்து நின்றாள், மாலதி. ஒரு வினாடி நேரம் தான். பிறகு என்ன தோன்றியதோ..கண்களை புறங்கையால் துடைத்து விட்டு, பொங்கி எழுந்த விசும்பலையும் அடக்கிக் கொண்டு ஒரு வித வீராப்புடன் பாத்திரங்களை ஒழுங்கு படுத்தி வைத்தாள்.
" என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு? கேள்வி கேட்கிறவன் என்ன மடையனா? வேலையை 'ரிசைன்' பண்ணிட்டு ஒழுங்கா வீட்டு வேலையைப் பாரு. நீ சம்பாதிச்சு குப்பைக் கொட்டினது போதும்"- தியாகு வெடித்தான்.
"இரண்டு பேர் சம்பாதிக்கும் போதே, கஷ்டமா இருக்கு. வேலைலேர்ந்து நின்னா இன்னும் கஷ்டப் படுவோம்."
" ஏதாவது எதிர்த்துப் பேசினே, பல்லை உடைச்சுடுவேன், ராஸ்கல்" கையை ஓங்கிக் கொண்டு வந்தான்.
" கலர் டிவி.,ஃப்ரிட்ஜ்,ஃப்ளாட் இதுக்குத் தவணை கட்டத் தான் உங்க சம்பளம் வரும். சாப்பாட்டுக்கு திருவோடு ஏந்திகிட்டுப் போக வேண்டியது தான்"
யதார்த்தமாய் சொன்னாள், மாலதி.
" சரி தான் வாயை மூடுடி..உள்ள சம்பளத்துல குடித்தனம் பண்றதுக்கு வக்கில்லே. உனக்கு பேச்சு ஒரு கேடு?"
உறுமியவாறு ஆஃபீசுக்குக் கிளம்பி விட்டான், தியாகு.

லஞ்ச் அவர்!
சக அலுவலர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான், தியாகு.திடீரென்று அவனை 'பாஸ்' கூப்பிட்டதால் சற்றே கலந்தது அந்த அரட்டைக்குழு.
தயங்கியவாறே ரூம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான், தியாகு.
" எஸ். கம். இன்.."
சேரில் பட்டும், படாமலும் உட்கார்ந்தான், தியாகு.
" அந்த விஜய் அண்ட் கம்பெனி லெட்டரை "டைப்" பண்ணிட்டீங்களா, மிஸ்டர் தியாகு?"
" இல்ல..."
" இன்னும் பண்ணலியா? நாளைக்குப் போயாகணும், மிஸ்டர். முதல்ல அதைப் பாருங்க."
மெள்ள எழுந்து கொள்ள எத்தனித்தான்.
" பொறுங்க..அந்த பாட்லிபாய் காண்ட்ராக்டர் பில்லைப் 'பாஸ்' பண்ணியாச்சா?"
" பண்ணிடறேன்.."
சொல்லும் போதே குரல் பிசிறியது, தியாகுவிற்கு.
" சரி..அந்த விவேக் கம்பெனி டெண்டர் டாக்குமெண்ட்ஸை ஃபோட்டோ காப்பியாவது எடுத்தாச்சா? மூன்று நாள் முன்னால சொன்னது, அது ?"
இயலாமையுடன் பார்த்தான், தியாகு.
" என்ன மேன், பார்க்கறீங்க? வெட்டிப் பொழுதைப் போக்கிட்டு, வெத்திலையைப் போட்டுக்க ஆஃபீஸில சம்பளம் தரல்லே..இன்னிக்குள்ள இந்த மூணு வேலைகளும் முடிச்சாகணும். என்ன பண்ணுவீங்களோ தெரியாது. அப்புறம் எம்மேல வருத்தப் பட்டுப் பிரயோசனமில்ல.."
பொரிந்து தள்ளினாள், மாலதி. அவன் ஹவுஸ் பாஸ் !
" எஸ் மேடம் "
வெளிறிய முகத்துடன், வெளியே வந்து விழுந்தான், தியாகு !!

பின் குறிப்பு: அச்சில் வெளிவந்த என் இரண்டாவது கதை இது.03.02.1985 தாய் இதழில் வெளி வந்தது.

21 comments:

பத்மநாபன் said...

ஓ....அதுதான் வாய்ப்பு கிடைத்தபொழுது அவ்வளவு எரிச்சலா... அய்யன் இதைத்தான் , செல்லுமிடத்து சினம் என்றாரோ...

அதை புரிந்த,மனையாளின் இல்லத்து அடக்கமும் குறிப்பிடத்தக்கது..

சாந்தி மாரியப்பன் said...

கதை சூப்பர்..

Chitra said...

அருமையான கதை. தாய் இதழில் வெளிவந்தது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

ஸ்வர்ணரேக்கா said...

//அவன் ஹவுஸ் பாஸ்//

ஹா... ஹா...

நல்ல நடை..

சின்னபாரதி said...

சிறப்பு நல்லாயிருக்கு திரு, ஆர்.ஆர்.ஆர்

RVS said...

முற்பகல் முறைத்தால் பிற்பகல் முறைப்பாள்.... நன்றாக இருந்தது ஆர்.ஆர்.ஆர். சார்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

"ஒரு மனைவியின் மறுபக்கம்”
தலைப்பே அருமை.
நினைத்து நினைத்து மகிழ்ந்தேன்.
கதையும் அருமை.
மறுபக்கம் என்பது எப்போதுமே அருமை தான் என்பதை மறுக்கவே முடியாது ஸார் !

மாதேவி said...

சூப்பர் "மறுபக்கம்".

ரிஷபன் said...

இதுக்குதான் அடக்கி வாசிக்கணும் எப்பவும்

vasan said...

அலுவ‌ல‌க‌த் தாக்க‌ம் தான், அதிகாலையில் அப்ப‌டி காலைத் தூக்கி ஆட‌வைத்த‌தோ?
ஆர‌ம்ப‌த்தில் என்ன‌யிது, ஆட்ட‌ம் சாய்த்தியாயிருக்கேன்னு பார்த்தேன். நச்சென்ற‌ முடிவு.(அலுவ‌ல‌க‌த் தாக்க‌ம் தான், அதிகாலையில் அப்ப‌டி காலைத் தூக்கி ஆட‌வைத்த‌தோ?
ஆர‌ம்ப‌த்தில் என்ன‌யிது, ஆட்ட‌ம் சாய்த்தியாயிருக்கேன்னு பார்த்தேன். நச்சென்ற‌ முடிவு.)

vasan said...

டைப் ப‌ண்ண‌ சொல்லும் போதே க‌தை ப‌ழ‌சுன்னு தெரிந்சிருச்சு.

Thenammai Lakshmanan said...
This comment has been removed by the author.
Thenammai Lakshmanan said...

செம சூப்பர் கதை ஆர் ஆர் ஆர்.. கதையை கடை என டைப் செய்து விட்டேன் முதல் கமெண்ட்ஸில் .. எனவே டெலீட் பண்ணிட்டேன் ஆர் ஆர் ஆர்

வசந்தமுல்லை said...

அருமை !!! ஒருவரை அனுசரித்து போயிருந்தால் இப்படியெல்லாம் நடக்காது!!!!!!!!!!!!!!!! நம் பொது வாழ்விலும் இப்படித்தான் இருக்கணும் பொறுமையாக!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... இப்படி எதிர் பாக்கல... nice write up

Muniappan Pakkangal said...

Nice story Aranya Niovas RR.

வெங்கட் நாகராஜ் said...

அருமை. நல்ல முடிவு! தாய் இதழில் முன்பு வந்தது பற்றி மகிழ்ச்சி!

வெங்கட்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பத்மநாபன் சொன்னது:
“ஓ....அதுதான் வாய்ப்பு கிடைத்தபொழுது அவ்வளவு எரிச்சலா... அய்யன் இதைத்தான் , செல்லுமிடத்து சினம் என்றாரோ...

அதை புரிந்த,மனையாளின் இல்லத்து அடக்கமும் குறிப்பிடத்தக்கது.”
மிக்க நன்றி பத்மநாபன்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அமைதிச் சாரல் சொன்னது:
“கதை சூப்பர்.
thanks!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மல்லாக்காக படுத்துக்கொண்டு, ஓரிருவருக்கு மட்டும் நன்றி கூறிவிட்டு, குப்புறப் படுத்துவிட்ட உம்முடைய மறுபக்கமும், கருத்தளித்த மற்ற அனைவருக்கும் புரிந்திருக்கும். (தமாஷுக்காக எழுதியது - தவறாக நினைக்க வேண்டாம்)

நிலாமதி said...

நல்லாயிருக்குங்க. வித்தியாசமான் கதை.