Friday, March 19, 2010

திண்ணைப் பேச்சு


ஞாயிற்றுக் கிழமை காலை எட்டு மணி வாக்கில், நாணா என்கிற நாராயணன், இரண்டாவது டோஸ் காஃபி குடித்து விட்டு, பொழுது போகாமல் வாசல் பக்கம் எட்டிப் பார்த்தான்.
பாச்சா!
கூடவே நட்டி, வெங்கு !!
"வாங்கடா...காஃபி சாப்பிடறீங்களா?"
ஒப்புக்குக் கேட்டு வைத்தான்.
" இப்ப தாண்டா 'மணீஸ் கேஃப்'ல் குடிச்சோம்"
" வாங்க ...... உட்காருங்க......"
திண்ணையில் உட்கார்ந்து கொண்டார்கள், நண்பர்கள்.
அந்த திண்ணைக்கு ஒரு வரலாற்றுப் பாரம்பர்யம் உண்டு. இந்த திண்ணயில் உட்கார்ந்து கொண்டு தான்,சீட்டு விளையாடி அவன் தாத்தா இரண்டு காணி நிலத்தை வித்தார்! அப்பா தன் பங்கிற்கு மேலத்தெரு வீட்டை வித்தார்!!
" என்னடா நியூஸ் ?" - நாணா.
" நம்ம மும்பை 'ப்ளாஸ்ட்'க்குக் காரணமான 'மாஸ்டர் மைண்டை' சிக்காகோவில் புடிச்சுட்டாங்களாம்!"
" 'இண்டர்போல்' உதவியோட இங்க கொண்டு வர வேண்டியது தானே.."
" இங்க கொண்டு வந்து.."
" என்னடா, இப்படி கேக்கறே? அவனை கிழி..கிழின்னு கிழிக்க வேண்டாம்!"
" அதான் கவர்ன்மெண்ட் லஅறிவிச்சிருக்காங்களே.."
" என்னன்னு..."
" அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்காங்க..நல்ல தண்டனையை மக்கள் யார் வேணா சொல்லலாம்னு அரசு அறிவிப்பு வந்திருக்கு"
" அட, பரவாயில்லையே..நம்ம அரசாங்கம் கூட நல்லா 'திங்க்' பண்றதே"
" அது மட்டும் இல்லப்பா... நல்ல தண்டனையை 'சஜஸ்ட்' பண்ணினவங்களுக்கு விருது தராங்களாம்"
" அடேங்கப்பா..."
" நாராயணா, ஒரு நல்ல ஐடியா குடு. அது 'த்ரூ' ஆனா உன் பேருக்கு முன்னால பத்மஸ்ரீன்னு போட்டுக்கலாம்"
" ஸாரிப்பா...பத்மபூஷணுக்குக் குறைஞ்சு எந்த விருதும் நான் வாங்கறதா இல்ல.."
" இந்த வெட்டிப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..வெங்கு...நீ எதாவது ஐடியா சொல்லேன்.."
வெங்கு மூக்கை ஒரு திருகு திருகிக் கொண்டான்.அவன் அப்படி செய்தால் தீர்க்கமாய் யோசிக்கிறான் என்று அர்த்தம்!
"டேய்...வெங்கு எதோ சொல்லப் போறாண்டா.."
" எனக்கு ஒரு ஐடியா" என்றான், நட்டி.
" என்ன...என்ன..."
" நம்ம ஊர் 'எலக்டிரிக் ட்ரைன்'லே..பீக் அவர்ல தாம்பரத்திலிருந்து பீச்.....பீச் லேர்ந்து தாம்பரம்னு நாலு தடவை அலைய விட்டா என்ன..?"
" மறுபடியும் குண்டு போட்டுட்டுப் போயிடுவான். ஒரு நல்ல ஐடியா சொல்லுங்கடான்னா..."
" எனக்கு ஒரு ஐடியா"
" என்ன..."
" நம்ம சங்கர் கேஃப் இட்லியை சட்னி, சாம்பார் இல்லாம ஒரு எட்டு திங்கச் சொன்னோம்னா, அவன் கொட்டம் அடங்கிடும்.."
" பரவாயில்லையே..அந்த கருங்கல் பதார்த்தத்தை சாப்பிடச் சொல்லலாம் போல இருக்கே.."
" அட போங்கப்பா..அந்த தீவிரவாதிங்கள்ளாம் பாறாங்கல்லக் கூட தின்னு ஏப்பம் விடற அளவுக்கு 'ட்ரைனிங்க்' எடுத்திருப்பாங்க..இந்த கருங்கல்லாம் அவங்களுக்கு ஜுஜுபி.."
" ச்சே..இந்த கவர்ன்மெண்ட் இவ்வளவு துரதிருஷ்டமாவா இருக்கணும்? ஒரு ஐடியாகூட
நமக்குத் தோணமாட்டேங்குதே.."
" கவர்ன்மெண்ட்டைச் சொல்லாதே..அவனுக்கு அதிர்ஷ்டம்னு சொல்லு"
" டேய் எனக்கு ஒரு ஐடியா" என்றான் நாணா.
" என்ன?"
"எங்க மேல் வீட்டில ஒரு குடும்பம் புதிசா வந்திருக்கு. அவங்க வந்ததிலிருந்து வீட்டில் குடி இருந்த தூக்கம் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடிப் போயிடுத்து."
" அப்படி என்ன அவங்க பண்றாங்க.."
" என்னப் பண்றாங்களா? நிம்மதியா தூங்கலாம்னுப் போனா, அந்தாளு எட்டு மணிக்கு மேல ஃப்ளூட் வாசிக்க ஆரம்பிக்கறான். அந்த நாராசத்தைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். அவன் கூவற கூவலுக்கு, அவன் பொண்ணு ..வீடே இடிஞ்சு விழறாப்பல தொம்தொம்னு ஆடுது. பரத நாட்டியம் கத்துக்கறதாம்"
" அதுக்கும்...இதுக்கும் என்ன சம்பந்தம்?"
" ராத்திரி தூங்காம இருந்தா அந்த தீவிர வாதி கண்ணு வீங்கி செத்துப் போயிட மாட்டானா?"
" அட போப்பா..அவன் வெளி நாட்டுக் காரன். இந்த நாராசத்தை அவன் ரசிக்க ஆரம்பிச்சுட்டான்னா.."
என்ன எழவுடா இது. ஒண்ணும் தோண மாட்டேங்குதே என்று எல்லாரும் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கும் போது....
" என்ன வெட்டிப் பேச்சு எப்பப் பார்த்தாலும்? இங்க வேலை தலைக்கு மேல இருக்கு..சித்த வந்துட்டுப் போங்க.."
ஒரு சிம்மக் கர்ச்சனை. அதைத் தொடர்ந்து விர்ரென்று ஒரு எவர்சில்வர் தட்டு எதிர் மூலையிலிருந்து ஸ்கட் ஏவுகணை போல்...
நாராயணின் எண்சாண் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக குறுக ஆரம்பித்தது. நண்பர் குழாமும் வெற்றிகரமாக வாபஸ் வாங்கலாமா என்று தத்தளித்துக் கொண்டிருக்க...
"டேய்..சூப்பர் ஐடியா" என்றான் நாணா அந்த வேளையிலும்...
" சொல்லுடா" என்றது நண்பர் குழாமும் விடாமல்.
" இந்த மாதிரி காட்டுக் கத்தலா கத்தி, அமர்க்களம் பண்ற ஒரு பரதேவதையை அவனுக்குக் கட்டி வைச்சா என்ன? அவன் பண்ணின காரியத்துக்கு இது ஆயுசுக்கும் தண்டனையாயிருக்கும் இல்ல... ஆனா நான் எந்த ஊர்ல குண்டு வெச்சேன்னு தெரியலே..."
வருத்தத்துடன் வீட்டினுள் நாணாசெல்ல..
'சண்டாளி..தாடகை...சூர்ப்பனகையைப் போல் வடிவு கொண்டாளைப் பெண்டாகக் கொண்டாயே நாணா' என்று அதை விட வருத்ததுடன் நண்பர் குழாம் கலைந்து சென்றது!!!

11 comments:

ரிஷபன் said...

இந்த மாதிரி காட்டுக் கத்தலா கத்தி, அமர்க்களம் பண்ற ஒரு பரதேவதையை அவனுக்குக் கட்டி வைச்சா என்ன? அவன் பண்ணின காரியத்துக்கு இது ஆயுசுக்கும் தண்டனையாயிருக்கும் இல்ல... ஆனா நான் எந்த ஊர்ல குண்டு வெச்சேன்னு தெரியலே..."

இப்படி எழுதவும் ஒரு ‘குண்டு’ தைரியம் வேண்டும்.

வசந்தமுல்லை said...

நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது வரும் தொல்லை " என்ன வெட்டிப் பேச்சு எப்பப் பார்த்தாலும்? இங்க வேலை தலைக்கு மேல இருக்கு..சித்த வந்துட்டுப் போங்க.."அழகாக விவரித்தீர்கள் ராமூர்த்தி !!

Chitra said...

நாராயணின் எண்சாண் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக குறுக ஆரம்பித்தது. நண்பர் குழாமும் வெற்றிகரமாக வாபஸ் வாங்கலாமா என்று தத்தளித்துக் கொண்டிருக்க...

........எப்படி எல்லாம் பேச்சு போகுது? :-)

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... திண்ணைப் பேச்சுல இவ்வளவு விஷயம் இருக்கா?

அது சரி... இந்த காலத்தில் திண்ணை என்றால் என்னவென்று எத்தனைப் பேருக்குத் தெரியும்?

Unknown said...

இதான் ஒரிஜினல் திண்ணை பேச்சு

Thenammai Lakshmanan said...

நல்ல திண்ணைப் பேச்சு ராமமூர்த்தி நீங்க என்ன தஞ்சாவூர்ப் பக்கமா

வை.கோபாலகிருஷ்ணன் said...

திண்ணைப்பேச்சு வெகு சுவாரஸ்யமாக போய்க்கொண்டு இருந்தபோது அந்த ஸ்கட் ஏவுகணை போன்ற எவர்சில்வர் தட்டு பறந்து விழுந்ததில், சட்டென்று முடிந்து விட்டதே என்ற வருத்தம் ஏற்பட்டது. நல்ல ஜோரான கற்பனை.உங்கள் வீட்டில் திண்ணை உள்ளதா ? நான் வரலாமா ?

Lavanya said...

வாங்க ஸார் தாராளமா வாங்க..வீட்டுக்கு வெளியில் திண்ணை இருக்கு..வீட்டுக்கு உள்ள நிற்ற்ற்ற்ற்ய்ய்ய்ய்...ய தட்டும் இருக்கு? எப்ப வரதா உத்தேசம்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கோபால கிருஷ்ணன் ஸார்...தப்பா எடுத்துக்காதீங்க..அந்த ஸ்ரீராம் வேறு யாரும் இல்ல..
என் தம்பி பையன் தான். ஏண்டா குழந்தே ஸ்ரீராம், உனக்கு நான் என்னடா தப்பு பண்ணினேன்?யாரையும் இப்படியெல்லாம் பயமுறுத்தக்கூடாதுடா அம்பி!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்பு சின்னத்தம்பி ஸ்ரீராம் அவர்களுக்கு, தங்கள் அழைப்பிதழ் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றிகள்.

அன்பு பெரியத்தம்பி ராமமூர்த்தி அவர்களுக்கு, இதில் தப்பா எடுத்துக்கொள்ள என்ன இருக்கிறது? ஸ்ரீராம் என்னை பயமுறுத்தவும் இல்லை. நான் பயப்படவும் இல்லை. நான் உங்கள் வீட்டுத்திண்ணைக்கு வர விரும்பியதே, தட்டுகள் பறக்கவிடப்படும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியைக் காணும் ஆவலில் தானே!

விரைவில் வர முயற்சிக்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

விரைவில் “ஹெல்மெட்டுடன்” வர முயற்சிக்கிறேன் என்று என்னுடைய கடைசி வாக்கியத்தை திருத்திக்கொள்ளவும்.