Friday, March 5, 2010

அகட விகடம் !!


'திருடனை நேருக்கு நேர் பார்த்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் ? '
நான் என்ன செய்தேன், தெரியுமா?
சிறு வயதில் எங்கள் கிராமத்தில் மருதை என்று ஒருவன் இருந்தான். பரட்டைத் தலை..சிகப்பேறிய கண்கள்...அழுக்கு வேட்டி..
அந்த மருதை, தாத்தாவிடம் தேங்காய் விற்பான். அவனுடன் மல்லுக்கு நின்று, அடி மாட்டு விலைக்கு பேரம் பேசி, கொசுறாக இரண்டு தேங்காயும் வாங்கிக் கொண்டு வரும் தாத்தாவின் சாமர்த்தியமே சாமர்த்தியம்!
ஆனால், தோட்டத்திற்குப் போய் பார்த்தால் தான் தெரியும். நம் வீட்டுத் தென்னை மரங்கள்
ஆஸ்திரேலியாவிற்கு பிள்ளைகளைப் படிக்க அனுப்பிய பெற்றோர்களைப் போல், பரிதாபமாக நம்மைப் பார்த்து முழிக்கும் சங்கதி!
'நம் வீட்டுத் தேங்காய்களை நம்மிடமே விற்று,காசு பார்த்த மருதையைப் பாராட்டுவதா, அல்லது 'போனால் போகிறது, தேங்காய் பறிப்பவனுக்கு கூலி கொடுத்து மாளாது.இப்ப அது மிச்சம் தானே' என்று சமாளிக்கும் தாத்தாவைப் பாராட்டுவதா என்று எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பம்!
அந்த மருதை தான் நான் பார்த்த முதல் ஆள்.அதற்குப் பிறகு நர்ஸரி ஸ்கூல் நடத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன்... மளிகைக் கடைக் காரர்களைப் பார்த்திருக்கிறேன்...கார்ப்பரேஷன் ஆசாமிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது ஒரு புது வித அனுபவம்!
ஆறு மாதம் முன்பு,வீட்டைப் பூட்டி விட்டு, நவக்ரஹ சுற்றுலா முடித்துக் கொண்டு வீடு திரும்பினால், வீடு திறந்து கிடந்தது! பீரோவைத் உடைத்து, நகைகளை திருடிக் கொண்டுப் போயிருக்கிறான் ஒருவன்!
எங்கள் எல்லாருக்கும் மூச்சே நின்று விட்டது. பிறகு சுதாரித்துக் கொண்டு லிஸ்ட் போட்டோம். இரண்டு தங்க நகைகள் (கல் வைத்தது), வெள்ளியில் சின்ன குத்து விளக்கு. அம்மா அக்காவின் கல்யாணத்துக்கு எடுத்த அரதப் பழசான இரண்டு பட்டுப் புடவைகள், சின்னதாக ஒரு மோதிரம். மதிப்புப் போட்டுப் பார்த்தால், எல்லாமாகச் சேர்த்து, பத்தாயிரம் ரூபாய்க்குள் இருக்கும்.
முதலில் போலீஸ் ஸ்டேஷன் சென்று ஃஎப்.ஐ.ஆர். கொடுத்தேன்.அதற்கு ஆயிரம் கேள்வி கேட்டார்கள். நமக்கு ஆயிரத்தெட்டு அட்வைஸ்!
இது நடந்து எங்களுக்கு மறந்தே போய் விட்டது. திடுதிடுப்பென்று ஒரு நாள் போலீஸ்காரர் ஒருவர் வீட்டிற்கு வந்து, சம்மன் கொடுத்து விட்டுச் சென்றார். எண்பத்தைந்து வயது அப்பா..எழுபது வயது அம்மா உட்பட எல்லாரும் கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று அன்பாக மிரட்டி விட்டுச் சென்றார்!
கோர்ட்டுக்குப் போவதற்கு இரண்டு நாள் முன்பு அதே போலீஸ்காரர் வந்தார்.இப்போது கையில் ஒரு துணிப் பை. அதில் சில்லறை, சில்லறையாக சில தங்க காசுகள்,பெரிய மோதிரம் ஒன்று, இரண்டு தங்க வளையல்கள், காமாக்ஷி விளக்கு என்று இருந்தது.
'இந்த சாமான்கள் தான் தொலைந்தது' என்று கோர்ட்டில் சொல்லி கேசை புத்திசாலித் தனமாக முடிக்கப் பாருங்கள். கேசை இப்படியே இழுத்துக் கொண்டுப் போனால், உங்களுக்குத் தான் சிரமம் என்று அட்வைஸ் வேறு!
ஒரு வக்கீலைப் போய்ப் பார் என்று நண்பன் சொன்னான். அவன் பேச்சைக் கேட்டு ஒரு வக்கீலைப் போய்ப் பார்த்தோம். ஆனால், அவர் கேட்ட ஃபீஸோ எங்கள் வீட்டை விற்கும் அளவிற்கு இருந்தது!
வருவது வரட்டும் என்று இருந்து விட்டோம்.
அந்த நாளும் வந்தது. வயதானவர்கள் என்பதால்,ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு கோர்ட்டுக்குப் போனோம். பொய் சொல்லப் போகிறோமே என்கிற உறுத்தல் எங்கள் எல்லாருக்கும்! அம்மா எதாவது ஏடாகூடமாக உளறித் தொலைக்கப் போறோளோ என்கிற பயம்! ஒரே டென்ஷன் !!
ஆயிரம் தடவைக்கு மேல் ரிகர்சல் செய்து கொண்டு தான் போனோம். ஆனால் என்ன ஒரு துரதிருஷ்டம்! அன்று கேஸ் வாய்தா ஆகி விட்டது! அந்த ஜூரிஸ்டிக்ஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சம்மன் 'சர்வ்' செய்யப் படவில்லையாம்! மறுபடியும் டாக்ஸியில் வீடு திரும்பல்!
இந்த கேஸ் நல்லபடியாக முடிந்தால், மறுபடியும் நவக்ரஹ கோவில்களுக்கு வருகிறேன் அம்மா பிரார்த்தனை செய்து, அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டாள்!
இரண்டு வாரங்கள் தான் ஆகி இருக்கும். மறுபடியும் போலீஸ். போலீஸ் காரர்கள் அடிக்கடி வீட்டுக்கு வருவது எங்கள் எல்லாருக்கும் என்னவோ போல இருந்தது. இந்த முறை கேஸ் கட்டாயம் நடக்கும். அவசியம் எல்லாரும் வரவேண்டும் என்று அவர் வீட்டு விஷேசத்துக்கு அழைப்பது போல் வருந்தி, வருந்தி அழைத்தார்!
வயதானவர்களால் வர முடியாது.மெடிக்கல் ரிப்போர்ட் கொடுக்கிறோம் என்று சொன்னால் அதைக் கோர்ட்டார் ' CONTEMPT OF COURT' என்று எடுத்துக் கொள்வார்கள் என்று பயமுறுத்தி விட்டுச் சென்றார்.
வேறு வழி ? எல்லாரும் மன உளைச்சலுடன் சென்றோம்.ஆனால் விதி யாரை விட்டது. அன்றும் வாய்தா!
இப்படியாகத் தானே மூன்று, நான்கு 'சிட்டிங்' ஆகி விட்டது ! ஒவ்வொரு முறையும் வாய்தா !!
பொருட்களைப் பறி கொடுத்த வருத்தத்தில் நாம்... வெந்த புண்ணில் வென்னீரை ஊற்றுவது போல போலீஸ் காரர்கள்..அந்த போலீஸ்காரர்களையே கலங்க அடிக்கும் 'பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்... ஒவ்வொரு ஃபைலையும் க்ளோஸ் பண்ணுவதற்க்குள் அவர்கள் படுத்தும் பாடு...படும் பாடு.
ஆனால், இத்தனைக் கூத்துக்களையும் ஜாலியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ஒரு ஜீவன் !
அந்த திருடனைத் தான் சொல்கிறேன் !
அப்பப்பா...போதும்..போதும் என்றாகி விட்டது.
ஸ்ரீரங்கத்துக்கு ஒரு வேலையாக வந்து, அது முடிந்து, டோல்கேட் செல்ல , சமயபுரம் மினி பஸ்ஸில் பயணிக்கும் போது, கூட்ட நெரிசலில் என் பர்ஸை அடித்து விட்டான், ஒருவன்.பட்ட பகலில், நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இது நடந்தது!
நீங்கள் அந்த சமயத்தில் என்ன செய்வீர்களோ ? ஆனால் நான்ரொம்பவும் சந்தோஷமாகவே பஸ்ஸை விட்டு இறங்கினேன்!
அந்த அரதப் பழசான பர்சுக்கு ஒரு கௌரவம் கிடைத்ததே என்கிற சந்தோஷத்தை பீட் அடிப்பதுப் போல் ஒரு பெரிய சந்தோஷம் !
கோர்ட்டில் நடந்த அத்தனை அமர்க்களங்களுக்கும் காரணமான எதோ ஒரு திருடனை, அவனால் பாதிக்கப் பட்ட நம்மாலும் ஏமாற்ற முடிந்ததே என்பது தான் !!!!

9 comments:

Rekha raghavan said...

//கோர்ட்டில் நடந்த அத்தனை அமர்க்களங்களுக்கும் காரணமான எதோ ஒரு திருடனை, அவனால் பாதிக்கப் பட்ட நம்மாலும் ஏமாற்ற முடிந்ததே என்பது தான்!//

நல்லாவே எமாத்தியிருக்கீங்க திருடனை. விறுவிறுப்பான பதிவு.

ரேகா ராகவன்.

Chitra said...

ஆனால், இத்தனைக் கூத்துக்களையும் ஜாலியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ஒரு ஜீவன் !
அந்த திருடனைத் தான் சொல்கிறேன் !

.........உங்கள் சோகத்தை கூட நல்ல நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் தாத்தாவின் குணம் போலும். பதிவு ரொம்ப நல்லா இருந்தது. .

இராகவன் நைஜிரியா said...

அது சரி... போகலைன்னா கண்டம்ப்ட் ஆஃப் கோர்ட்டா...

கிழிஞ்சது கிருஷ்ணகிரி..

என்னவெல்லாம் ஆட்டம் போடறாங்கப்பா..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அவசியம் எல்லாரும் வரவேண்டும் என்று அவர் வீட்டு விஷேசத்துக்கு அழைப்பது போல் வருந்தி, வருந்தி அழைத்தார்!

அந்த அரதப் பழசான பர்சுக்கு ஒரு கௌரவம் கிடைத்ததே என்கிற சந்தோஷத்தை பீட் அடிப்பதுப் போல் ஒரு பெரிய சந்தோஷம் !

வாய் விட்டுச்சிரித்தேன். நன்றி.

ரிஷபன் said...

காலை வேளையில் சிரித்துக் கொண்டு இருந்தால் வீட்டில் ஒரு தினுசாகப் பார்க்கிறார்கள்..

Unknown said...

வந்தோம் ,வாசித்தோம்

வசந்தமுல்லை said...

arumai !!!

Thenammai Lakshmanan said...

//இந்த கேஸ் நல்லபடியாக முடிந்தால், மறுபடியும் நவக்ரஹ கோவில்களுக்கு வருகிறேன் அம்மா பிரார்த்தனை செய்து, அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டாள்!//

sr always like this....hahaha

வெங்கட் நாகராஜ் said...

அருமை. பட்ட கஷ்டத்தையும் நகைச்சுவையாக சொன்ன விதம் மிக மிக அழகு.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி