Saturday, March 13, 2010

பிரமோஷன்......


நினைக்க நினைக்க, சந்தருக்கு நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. பதவி உயர்வுக்கான இண்டர்வியூவுக்குப் போன பத்து பேரில் அவன் யாருக்கும் சோடை போனது கிடையாது. கூடுதல் தகுதியாக ஒரு 'டிப்ளமா' வேறு கையில் வைத்திருந்தான்.
போதாத குறைக்கு தலைமை அதிகாரி அவனுக்குள் நம்பிக்கை விதை ஊன்றி, பிரமோஷன் கனவைச் செடியாக வளர விட்டிருந்தார். கடைசியில், கனவு கலைந்தபோது, " என்னால் முடிந்த அளவு செய்து விட்டேன்.ஐ'ம் ஸாரி...பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...." என்று சொல்லி கை விரித்து விட்டார்.
எரிச்சலாக வந்தது சந்தருக்கு. இந்த பிரமோஷனைக் குறி வைத்து ஒரு வருட காலமாகவே, தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தான். அடுத்த நாள் தலைமை அலுவலகத்துக்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டுமா? முதல் நாளே ' செக்சன் ஹெட்' டேபிளில் இவன் தயாரித்த ரிப்போர்ட் காத்துக் கொண்டிருக்கும். எந்த ஃபைலையும் தேங்க விட்டது கிடையாது. உடனுக்குடன் பைசல் செய்து அனுப்பி விடுவான். கடைசியில் அவனுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை.
தலைவலி மண்டையைப் பிளப்பது போல் இருந்தது. சூடாக ஒரு கப் காபி குடித்தால் தேவலை போல் தோன்றவே, கான்டீனுக்குச் சென்றான்.
கான்டீனில் அவனைப் பார்த்தவர்கள் 'குசுகுசு'வென்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் துணிந்து பக்கத்தில் வந்து "கவலைப் படாதீர்கள்...பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்றார்கள்.
'பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்'...... ' பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்'.....என்கிற வார்த்தைகள் பூதாகாரமாக விஸ்வ ரூபமெடுத்து, அவனைத் துரத்த ஆரம்பித்து விட்டது.' தோற்றுப் போன எவனைப் பார்த்தாலும், இந்த ' பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்' தானா? வேறு வார்த்தைகளே கிடையாதா? கீறல் விழுந்த கிராமஃபோன் ரிக்கார்டு போல .... சாவி கொடுத்த பொம்மை சொல்வது போல .....ச்சே....!'
வாழைப் பழத் தோலில் வழுக்கி விழுந்த வேதனையை விட, நாம் விழுந்ததைப் பார்த்து
'அச்சச்சோ' என்று நம் மீது (போலியாகவோ...நிஜமாகவோ)பரிதாபப் படும் பேர்வழிகளைக் கண்டால் எரிச்சல் வருமே..அது போன்ற எரிச்சல் வந்தது சந்தருக்கு !
ஏதோ ஒரு தைரியத்தில் எம்.டியை சந்தித்து நியாயம் கேட்க, ' அப்பாயிண்ட்மெண்ட்' வாங்கி விட்டான்.


"யெஸ் ப்ளீஸ்..."
தோரணையுடன் அழைத்த எம்.டி. அவனை உட்காரச் சொன்னார்.
" சார்... நான் சந்தர்..."
நட்புடன் கை குலுக்கினான்.
" ஓ..பர்ச்சேஸ் டிபார்ட்மெண்ட் சந்தரா?"
சந்தருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்!
கம்பெனியின் நெ.1, தன் கீழ் வேலைப் பார்ப்பவர் பெயர், டிப்பார்ட்மெண்ட் முதற்கொண்டு ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறாரே..!!
"சொல்லுங்க...."
கம்பெனிக்கு விசுவாசமாய் உழைப்பதைச் சொன்னான். கல்லூரி நாட்களில் தான் வாங்கிய விருதுகளைப் பட்டியல் போட்டுக் காட்டினான். பல்கலைக் கழக பட்டங்களையும், பட்டயங்களையும் குவித்துப் போட்டான்.
தீர்க்கமாய் அவனைப் பார்த்தார் எம்.டி!
"இவ்வளவு இருந்தும் உனக்கு ஏன் பிரமோஷன் கிடைக்கல்லேன்னு யோசிச்சுப் பார்த்தியா?"
" யோசிக்கவா.... கற்பனை பண்ணி பார்க்கக் கூட முடியலே சார்..."
விட்டால் அழுது விடுவான் போல இருந்தது.
" கூல் டௌன்...கூல் டௌன்...."
அவ்வளவு பெரிய மனிதர் நாற்காலியை விட்டு எழுந்து வந்து அவன் முதுகைத் தடவிக் கொடுத்தார்.
"ஞாபகம் இருக்கா...? இந்த இண்டர்வியூ நடப்பதற்கு ஒரு வாரம் முன்னாடி ஒரு நாள்.. சாயங்கால நேரம்... மணி நாலு,நாலரை இருக்கும்.."
"ஞாபகம் இல்லையே...."
உதட்டைப் பிதுக்கினான்,சந்தர்.
" நல்லா யோசிச்சுப் பாரு..அன்னிக்கு ஒரு முக்கியமான பேப்பரை 'பர்சனலாக'க் கொண்டு போய்க் கொடுக்க வேண்டியிருந்தது.."
" யெஸ் சார்... இப்போது ஞாபகம் வந்து விட்டது. 'டெண்டர் டாக்குமெண்ட்ஸ்.. சப்மிட்'
பண்ண அன்னிக்குத் தான் கடைசி நாள்...நமக்கு அந்த ஐம்பது லட்ச ரூபாய் ஆர்டர் கிடைத்தது சார்..."
" கரெக்ட்... அந்த டாகுமெண்ட்ஸ் எப்படிப் போச்சு?"
" பேய் மழை சார் அன்னிக்கு...டாகுமெண்ட்ஸ் பேப்பர் கொஞ்சம் கூட நனையாம இருக்க அதை ஒரு பாலிதீன் பையில போட்டு... அதுக்கு மேல துணிப்பை...
நம்ம ஆபீஸ்ல மாடசாமின்னு ஒருத்தர் .... அவர்ட்ட கொடுத்து..."
" மாடசாமி நனையாம இருக்க குடை கொடுத்தியா?"
"அதுவா சார், முக்கியம்? டாகுமெண்ட்ஸ் தான் சார் முக்கியம். நம்ப எல்லாருக்கும் சோறு போடற சங்கதி அந்த பேப்பரில இருக்கு...."
" ஸாரி...சந்தர்...இந்த ஒரு விஷயத்தில தான் நான் உன் கிட்ட இருந்து மாறுபடறேன். ' நீ எப்படி வேணாலும் போ ...எனக்கு கவலை இல்லே.. அந்த பேப்பர்ஸ் மட்டும் கொஞ்சம் கூட நனையாம கொண்டு போகணும்னு சொன்னியா?"
" அது வந்து...அது வந்து... அந்த டாகுமெண்ட்ஸ் எவ்வளவு முக்கியம்..அதனால தான்...."
வார்த்தைகள் வெளி வராமல் சிக்கிக்கொண்டு தவித்தன, அவன் வாயிலிருந்து!
" லுக்..மிஸ்டர் சந்தர் ...எப்பவுமே மெட்டீரியல் வால்யூஸ் முக்கியம் கிடையாது. மனித வால்யூஸுக்கு...அதாவது மனித உறவுகள்....உணர்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கணும். நான் பொறக்கும் போதே எம்.டி.யாப் பொறக்கலே..இந்த கம்பெனியும் எங்க அப்பன்,பாட்டன் தேடி வைச்ச சொத்து இல்ல...நான் படிப்படியா வாழ்க்கையில முன்னேறுவதற்க்கு மனித உணர்வுகளை படிக்கக் கத்துக்கிட்டதும் ஒரு காரணம். அன்னிக்கு கொட்டற மழையில நனைஞ்சுப் போய்க்கிட்டு இருந்த மாடசாமியை நான் தான் கார்லே 'ட்ராப்' பண்ணினேன்.தன் கூட வேலை பார்க்கிற ஆளுங்களோட சுக,துக்கங்களைப் பற்றித் துளிக்கூடக் கவலைப் படாதவன் மேல வந்து ஒரு பிரயோஜனமும் இல்லே..இந்த பிரமோஷன் உனக்குத் தான் என்று கிட்டத் தட்ட முடிவே செய்து விட்டோம். ஆனா, மத்தவங்களோட உணர்வுகளை மதிக்கத் தெரியாத உன்னுடைய குணமே, உனக்கு எதிரா வேலை செஞ்சிடுச்சு... ஸாரி...."
எம்.டி சொல்ல..சொல்ல...உண்மை உறைக்க ஆரம்பித்தது, சந்தருக்கு !!!!

என்னுரை: இந்த கதை ஆனந்த விகடன் 26.2.95 இதழில் வெளி வந்தது. அதுவல்ல செய்தி!
பத்து வருடம் கழித்து, TVS கம்பெனி என்னிடம் அனுமதி கேட்டு அவர்கள் HOUSE
JOURNAL ல் வெளி வந்த கதையாக்கும் இது..!

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதையின் கருத்து என்னமோ வெகு அருமையாகத்தான் உள்ளது.
சந்தரின் வலியையும் (பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்று கேட்ட அனுபவத்தாலோ என்னவோ) என்னால் நன்கு உணரமுடிகிறது.
நீங்களும் அனுபவித்துத்தான் எழுதியிருப்பீர்களோ ?
எது எப்படியோ, நீங்க எழுத்துலகில் ஜொலிப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

Chitra said...

அருமையான கதை. வாழ்த்துக்கள்! Congratulations!

இராகவன் நைஜிரியா said...

சக தொழிலாளர்களை மதிக்காதவர்களால் மேலே வர இயலாது என்பதை மிக அழகாக விவரித்துவிட்டீர்கள்.

வசந்தமுல்லை said...

நான் பிரமோசன் கிடைக்காமல் பட்ட வேதனைகளை சந்துரு மூலம் விளக்கிவிட்டீர்கள்! நன்றி ! விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை ! கிடைத்தது 'பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்'...... ' பதில் மட்டும்தான் !!!!!!!!!!!

கே. பி. ஜனா... said...

கதைக்கும் பிரமோஷன்! நன்று!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆனந்த விகடனில் கதை வெளிவந்தது கேட்க மிகவும் ஆனந்தமாக உள்ளது. அதைவிட ஆனந்தம் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து TVS house journal இல் வெளியிட்டது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள். (மேலும் ஒரு செய்தி இந்த comments முதன் முதலாக என்னால் நேரிடையாக தமிழில் அடிக்கப்படுகிறது - உதவி என் மகன் ஸ்ரீதர்)

ரிஷபன் said...

ஒரு அருமையான பேனா மீண்டும் துளிர்ப்பது பார்க்க எத்தனை சந்தோஷம்...இதே போல தொடரட்டும் எழுத்து தரும் வர்ண ஜாலம்.

aazhimazhai said...

nalla kathai neengalum romba nalla eluthiyathaala nalla aarvama padikka mudinthathu... Valuthukkal...

Thenammai Lakshmanan said...

இருமுறை பிரசுரிக்கப்பட்ட கதையா அருமையாக இருக்கு ராமமூர்த்தி

k.ramesh said...

simple &super.really such attitude only elevate the person to high.nothing else. k.ramesh post office