Tuesday, March 2, 2010

மானுடம்.....


" நான் கூவியாகி விட்டது.இன்னுமா இந்த சூரியப் பயல் வரல்லே.." என்று தலையை நாலா பக்கமும் ஆட்டி, கர்வத்தோடு வானத்தைப் பார்த்துக் கொக்கரிக்கும் சேவல் போல நான்!
" நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க? 'புரோட்டினிக்ஸ்'க்கெல்லாம் 'மெடிக்கல் ரீ இம்பர்ஸ்மெண்ட்' கிடையாது. வேணா புக்ஸைப் பாருய்யா!" என்று ஒரு அப்பாவி 'ஒர்க்கரின்' வயிற்றில் நாற்பது ரூபாய்க்கு அடித்தேன்.'க்ளைம் ஃபாரத்தில்' நாற்பது ரூபாய்க்கு சிவப்பு பேனாவினால் நான் போட்ட சுழிப்பு என்னைப் பார்த்து சிரித்தது. 'புரோட்டினிக்ஸ்'க்குத் தான் கிடையாது. ஆனால் 'புரோட்டின்யூல்ஸ்'க்கு உண்டு என்கிற குறுக்கு வழிப் பாதை எனக்குத் தெரியும். எதற்குச் சொல்லணும்?
"சாமண்ணா, என்னோட 'பென்ஷன்' பேப்பரைக் கொஞ்சம் 'சட்' னு தள்ளேன்" போன மாசம் 'ரிட்டயர்ட்' ஆன ராமாமிர்தம் நாலைந்து தடவை வந்து விட்டார்....பயலுக்கு 'லம்ப்'பா வரப் போறது. கொஞ்சம் தான் அலையட்டுமே..!
"யோவ்..ஒங்கொப்பன் வூட்டுக் காசா கொடுக்கப் போறே...?" என்று ஆத்திரத்துடன் கத்தியவனிடம்..."தோ பாரு, எங்கிட்ட கத்தாதே. நானா சொல்றேன்? 'எஸ்டாபிளிஷ்மெண்ட் ரூல்ஸ்' பேசுதய்யா...ரூல்ஸ்னா...ரூல்ஸ்தான்.." என்று ரொம்பவும் கூலாகச் சொல்லும் லாகவம்...
சிகரம் வைத்தாற் போல, என் கீழ் வேலை பார்ப்பவனின் 'பி.எஃப். லோன் அப்ளிகேஷனை' 'ஃபார்வர்ட்' பண்ண, நான் எடுத்துக் கொண்ட பத்து நாட்கள்...பணத்தேவையினால் அவன் என்ன துடி துடித்திருப்பான்?
மன வக்கரிப்புகள் குடிசையின் கூரையாக ...அதன் மேல், கொக்கரித்துக் கொண்டு, சேவலாக நான்....

இதோ நிதர்சனம்!
கூரை சடசடவெனப் பிரிந்து,வெள்ளத்தில் அமிழ .... என்னில் புதைந்திருந்த மானுடம் என்னுள்...
' அடேய்... சாமண்ணா, எத்தனை பேர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருப்பாய்? படுபாவி! ஆக்சிடெண்ட்டிலே செத்துப் போனானே ஆறுமுகம்.. அவனோட இள வயது மனைவி..மூக்கு ஒழுகிக் கொண்டு மூன்று, நான்கு வயதுச் சிறார்கள்.. 'ஃபைனல் செட்டில்மெண்ட்டி'ற்கு எத்தனை முறை அலைய விட்டிருப்பாய்...!'
'ரூல்ஸ்னா...ரூல்ஸ்தான்..'
பலவீனமாக நான்.
'என்னடா பெர்ரீய ரூல்ஸ்? உனக்கு ரேஷன் கடையில் சாமான் வாங்கித் தரானே, பெரியசாமி - அவனுக்கு உன் ரூல்ஸ் செல்லாதா?'
' அது வந்து...'
' அதாவது ரூல்ஸ்களில் உள்ள ஓட்டைகளும்,'ரூல்ஸ்' என்ற ஃப்ரேமிலிருந்து சிறிதும் பிறழாமல், அதன் உள்ளே அடங்கிக் கிடக்கும் சௌகரியங்களும்.... சலுகைகளும்..'பெனிஃபிட் ஆஃப் டவுட்' என்று சொல்லப் படும் வார்த்தைப் பிரயோகங்களும் ...
உனக்கும்...உன்னைச் சார்ந்தவர்களுக்கும் தானே...?'
நிர்வாணப்பட்டு... உடம்பு சக்திகளெல்லாம் தீய்ந்து ... அசக்தனாகி...முகம் வெளுத்து....ப்ராணன் போகக் கூடிய அந்த சில நொடிகள் வரும் போது தான் பிராயச்சித்தம் எது என்று மனசு கிடந்து அலை பாய்கிறதோ?
தெரிந்தே செய்த தவறு ....
தெரியாமல் கால் மிதித்து...சிற்றுயிர்க்கு மோட்சம் கொடுத்த தவறுகள் எத்தனை எத்தனையோ ...!
எல்லாமாக விஸ்வரூபம் எடுத்து, என் முன்!
'துக்கம் கேட்கச் சென்றவர் நீரில் மூழ்கிச் சாவு..'
தினத்தந்தியில் நாலாம்பக்கம் அஞ்சாம் 'காலம்' சின்னதாக நாளைப் போடப் போகிறான்...
சிரிப்பு...கேனத்தனமான சிரிப்பு...
அழ வேண்டும்...இப்போது அழ வேண்டும் ...
கால்கள் தரையில் பாவாத நிலையில் ...இன்னும்...இன்னும்..என்று கீழே போய்க் கொண்டு...ப்ருஷ்டம்...மார்பு...கழுத்து.. என்று ஒவ்வொன்றாகக் காவு கொடுக்கும் நேரம் ....'ஐயையோ..காப்பாத்துங்க...காப்பாத்துங்க..!' என்று அலறத் தூண்டுகிறது மனசு. ஆனால்
வாய் எதை நினைத்தோ சிரிக்கிறது !!!'
வெங்கடா லாட்ஜ் இட்லி சாம்பார் ....நேற்று வாங்கி வந்திருந்த மரச்சீனி அப்பளம் ... புதிதாக ஆரம்பித்த நண்பர்கள் நாடகக் குழு .... அமெச்சூர் நடிகை ரூபாஸ்ரீயின் ரூஜ் கன்னம் ...அழகு மனைவி ....அன்புக் குழந்தைகள் ....எல்லாவற்றுக்கும் மேல் நான் பண்ணும் அலம்பலும் ... ஆரவார அதிகாரங்களும் ....
அட சட்!
ஆண்டவனை நினை !!
பிதாமகற்கும் ....பிரபிதாமகற்கும் ...பித்ருக்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள் ... சாமண்ணாவாகிய நான் இதோ ...இதோ..அமிழப் போகிறேன்....
ஓம் தத்சத் !!!!

" சாமண்ணா ...... ! சாமண்ணா ....!!"
கிணற்றுக்குள்ளிருந்து குரல்.
மெள்ள கண் திறக்கிறேன்.
பளிச்சென்று ஒரு வெளிச்சம் .... மின்சார ரயில் மாதிரி ....ஆனால் இது 'ரிவர்சில்!'
வெளிச்சத்தைத் தொடர்ந்து, நான்.
இருண்ட குகை. வெளிச்சம் செல்ல..செல்ல நான் தொடர்கிறேன்.
ஸ்பரிச உணர்வு ஏதுமின்றி, மிதப்பது போல ..... யாரோ என்னை வெளிச்சத்தின் எதிர்த் திசையில் இழுப்பது போல .....
மறுபடியும் குரல்.
வெளியே மனிதத் தலைகள்...
அத்தனையும் உறவு முகம்...
'வயத்திலே பால் வார்த்தியேடா கண்ணா!"
அம்மா கட்டிக் கொள்கிறாள்.
கைப் பிடித்தவள் அழவில்லை. உணர்ச்சிகளைக் கட்டுக்கு கொண்டு வரத் தெரிந்தவள் அவள். ஆனாலும் கண்களில் சோகம்.பக்கத்தில் பசங்கள்.
பிழைத்து விட்டேனா?????
ஆண்டவனின் கருணை கிரணங்களில் ஆயிரத்தில் ஒரு பகுதி என் மேல் விழுந்து விட்டதா...
இனி நான் மனிதன். மானுடம் அறிந்த மனிதன். அடுத்த மனிதனின் சுக துக்கங்களைத்
தனது போல ஏற்று ....
பழைய சாமண்ணா நீரில் மூழ்கி விட்டான். இவன் புதிது.
வேற்றுமை பாராட்டாமல், அனைவருக்கும் அவனால் முடிந்த உதவி..ஒரு வரம்பிற்குட்பட்டு..சட்ட விளிம்பிற்குள்..மனித நேயத்துடன்...
புதிய ஜனனம் ....புது வாழ்வு...வாழும் வாழ்க்கையில் ஒரு அர்த்தம்....புது ரத்தம் ....


"யாருய்யா அது ....? என்ன கலாட்டா..?
" இதோ பாருங்க சார்.."
" சும்மா இருய்யா ...மெடிக்கல் க்ளைம்ஸ்க்கு எவன்யா அலவன்ஸ் தருவான்? எவண்ட்ட வேணாப் போய் ரிப்போர்ட் பண்ணு. ரூல்ஸ்னா ....ரூல்ஸ் தான் !"
வெள்ளம் வடிந்து கூரை வெளியில் தெரிய - கொக்கரிப்பில் சேவல்....
மறுபடியும் ...!

என்னுரை : 'காயத்ரியின் 'நாணா'வைப்போல..'விளக்குகள் அணையும் போது உஸ்தாத் ஷாஹுல் ஹமீது ஸாஹேப்' போல இந்த 'சாமண்ணாவும் என்னால் மறக்க முடியாத பாத்திரம் தான்.

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சாமண்ணாவின் தலைகனம் சேவலின் கொண்டைபோல மீண்டும் சிவப்பேறி டேஞ்ச்சராகத் தெரிகிறதே கதையின் கடைசியில் ... எங்கும் எதிலும் பிறர்மேல் கருணை காட்டுதல் வேண்டும்.
ரூல்ஸ் ஆவது புடலங்காயாவது .... நாமாகவே சமயத்திற்கு தகுந்தபடி, ஆளுக்குத்தகுந்தபடி வகுத்துக்கொள்வது தானே ரூல்ஸ் ....... மனித நேயமே மகத்தானது என்றும் எப்போதும்.
{ ராமமூர்த்தி சார், ரிடயர்ட் ஆகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், எனக்கு வரவேண்டிய 2008-2009 க்கான போனஸ் பணம் இன்னும் வந்தபாடில்லை. எப்போது தருவார்கள் நமது அக்கவுண்ட்ஸ் ஆசாமிகள் ? }

Chitra said...

:-) நல்ல பகிர்வு.

ரிஷபன் said...

ரூல்ஸ்னா ....ரூல்ஸ் தான் !"
வெள்ளம் வடிந்து கூரை வெளியில் தெரிய - கொக்கரிப்பில் சேவல்....
மறுபடியும் ...!
இதுதான் மனுச புத்தி..

வெங்கட் நாகராஜ் said...

கொக்கரிப்பில் சேவல்...
மறுபடியும்...!

என்னதான் நடந்தாலும் இது போன்ற ரூல்ஸ் மனிதர்கள் திருந்துவதில்லை. நல்ல ஒரு பதிவு.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

வசந்தமுல்லை said...

nice & fantastic!!!!!!!!!!!!!