Friday, December 18, 2009

ஊதி ஓடும் ரயில்....


நாங்கள் ஆங்கரையில் இருந்த காலம் ..... நாங்கள் என்றால்,
நான்,கிரி,ஜெயந்தி,ராஜு,மோகன்,அண்ணா( நாங்கள் அப்பாவை
அண்ணா என்று அழைப்போம்.),அம்மா,தாத்தா, பாட்டி,
பாலு சித்தப்பா. சிகாமணி சித்தப்பாக்கு கல்யாணம் ஆன புதிது. மண்டபம் கேம்ப்பில்
PWD யில் இருந்தார். தாத்தா,பாட்டி,பாலு சித்தப்பா என்று அந்த108ம் நெ. வீட்டில்
மொத்தம் பத்து டிக்கெட்! பக்கத்து வீடு சுப்ரமணிய மாமா. அவர் வீட்டுக் கொல்லையில்
ரோடு வந்து விடும். அங்கு அவருடைய சின்ன ஹோட்டல்!
காலையில் சுப்ரமணிய மாமா கடையில் போய் ஒரு மொக்கு மொக்கிவிட்டு வருவோம் எல்லாரும் ! வியாழக்கிழமை கடப்பா போடுவார்கள். ருசியான.ருசி..தோசைக்கு
கடப்பாவா அல்லது கடப்பாவுக்கு தோசையா என்று சொல்ல முடியாது. பின்னிப் பிடுவோம்..பின்னி! ஆனால் காசு கிடையாது. எங்கள் வீட்டு பசு மாட்டுப் பால் பூராவும் அந்த கடைக்குத் தான் கொடுப்போம். 'காசு வேண்டாம்..குழந்தைகள் வந்தால் டிபன் கொடுங்கோ' என்று அண்ணா, அம்மா சொல்லி விடுவார்கள். தவிர பக்கத்து வீட்டுக் குழந்தைகளான எங்களைக் கண்டால் அவருக்கும் உயிர்!
வீட்டுக் கொல்லைப்புரம்....
ஒரு கிணறு...அதன் பக்கத்தில் துளசி மாடம்.
நான்கைந்து தென்னைமரங்கள்...ஒரு சின்ன கொட்டில்..அதில் இரண்டு பசு மாடுகளும்,
அதன் கன்னுகுட்டிகளும்!
அந்த இடத்தில் நாங்கள் அடித்த லூட்டிகள் ...............
ஏதாவது விசேஷம் நடந்தால், அடுத்த நாள் நிறைய 'தான்'களுடன் மிஞ்சும்
பழங்குழம்பை சுட வைத்து, அதில் அச்சு வெல்லம் போட்டு எரிச்சக் குழம்பாக்கி,
பழைய அமுதுடன், வாழைப்பூ மடலில், எங்களுக்கெல்லாம் பாட்டி பரிமாறிய இடம்!
தாத்தா, பாட்டியுடன் நாங்கள் பல்லாங்குழி ஆடிய இடம்!
கோடை நாளில் வடாம் இடுவார்கள். அப்போது கை நிறைய வடாம் மாவு கிடைக்கும். அதைத் தவிர காக்கா வராமல் காவல் காக்கிறோம் என்று நாங்கள் திருடித் தின்னும் வெயிலில் பாதி காய்ந்துக் கொண்டிருக்கும் வடாம்! அந்த கொல்லைப் புரம் தான் வடாம் இடும் இடம்!
பாட்டி கால்களை நன்கு நீட்டி, வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு தலை வாரிப்
பின்னி, பூச்சுட்டும் இடம் !
"இச்சா...இனியா...
காயா...பழமா..."
என்று தன் குட்டி தலையை அண்ணாந்து பார்த்து, நெற்றியில் ஒரு ஓட்டு சில் வைத்து,
அதை கீழே விழ விடாமல், 'பேலன்ஸ்' பண்ணிக் கொண்டு,பச்சைப் பாவாடையை, நாலு 'இன்ச்சு'க்கு மேல் தூக்கி, போட்ட கோட்டினை மிதிக்காமல், கண்களை மூடி, தன் குஞ்சு கால்களால் லாவகமாக நடை பயிலும் கோமளிப் பாப்பாவுடன் நாங்கள் பாண்டி விளையாடிய இடம் !

நான்.. கர்ணன்..கிரி அர்ஜுனன்..குரு....கண்ணன்!
"டேய்...இவன் விழ மாட்டான் போல இருக்கு. கமர்கட் எல்லாத்தையும் கொடுத்து
தொலைடா..' குரு ஆத்திரத்தில் கத்த..கிரி கொடுத்த அத்தனை கமர்கட்டையும் ட்ராயரில் போட்டுக் கொண்ட பிறகு தான், கர்ணனாகிய நான் கீழே விழுவேன்!....
நான் விழுவதற்காகவே இது வரைக்கும் காத்துக் கொண்டிருந்து விட்டு,
" உள்ளத்தில் நல்ல உள்ளம்..உறங்காதென்பது...
வல்லவன் வகுத்ததடா..கர்ணா வருவதை எதிர் கொள்ளடா..'
என்று கைகளை இப்படியும், அப்படியும் ஆட்டி, கீச்சுக் குரலில், உச்சஸ்தாயியில், குரு கத்த ஆரம்பிக்க, சக்ரவாக ராகத்தில் அமைந்த அந்த அருமையான பாடல் அவனிடம் படாத பாடு படும்!
தென்னை மட்டைகள் சிதறி கிடக்கும். அதன் ஈர்க்குச்சிகளால் வில், அம்பு தயார் செய்து கர்ணன்,அர்ஜுனன் விளையாட்டு விளையாடிய இடம் அது !


* * * * * * * * *
" டேய் ஸ்ரீதர்,கொஞ்சம் நகர்ந்துக்கடா,ப்ளீஸ் கிரிக்கு வழி விடுடா"
வாசல் திண்ணையில் எங்கள் எல்லாருக்கும் " LILIPUT" கதை சொல்லிக்கொண்டிருக்கும், பாலு சித்தப்பா, திடீரென்று சம்பந்தமில்லாமல் பேச, எல்லாரும் பேந்த, பேந்த விழிக்க, நான் சட்டென்று உஷாராகி, வாசலில் போய்க் கொண்டிருந்த பெரிய எருமை மாட்டைப் பார்த்து
" சரி சித்தப்பா" என்று சொல்லிவிட்டு, என் சிண்டு, சித்தப்பா கைக்கு கிடைக்கு முன், நான் ஓடிப்போய் விட, அப்போது தான் எல்லாருக்கும் தெரியும், சித்தப்பா ரோடை அடைத்துக் கொண்டு வரும் நாலு எருமைக் கன்னுகுட்டிகளில் ஒன்றைப் பார்த்து ஸ்ரீதர் என்று கிண்டல் பண்ணியிருக்கிறார் என்று!
அந்த சித்தப்பாக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். முப்பத்து மூன்று செல்லப் பெயர்கள்
வைத்திருந்தார், எனக்கு.
..சங்கர்.....பொப்புலி மஹாராஜா...... முகமது அலி..இன்னும் என்னவெல்லாமோ.....!
( பாலு சித்தப்பா ஒரு பத்து வருடம் முன்னால் ASST. COMMISSIONER ஆக ஒரு
STATE GOVT. DEPARTMENTலிருந்து ரிடயர்டு ஆனார்.அப்போது அவர் சொன்னார்:
" ஸ்ரீதர், AC ங்கறதினால ரெண்டு,மூணு லேடீஸ் காலேஜில 'லெக்சர்' கொடுக்க கூப்பிட்டுருக்காங்க... இப்பன்னுப் பார்த்து மூணு மாசத்துல, ரிடயர்மெண்ட் வருது !")
சரி, விஷயத்துக்கு வருவோம்!

ஆவணி அவிட்டத்திற்கு எல்லாரும் ஆங்கரை வீட்டுக்கு வந்து விடுவார்கள்.
அஞ்சு வீடு தள்ளி உள்ள அத்தை வீட்டு பசங்களும் வந்து விட, வீடே அதிரும்!
அப்போது பார்க்க வேண்டுமே, ! சித்தப்பாக்களும் வேறு சேர்ந்து கொண்டு, அடிக்கும் லூட்டி .......சண்டிக் கீரை என்று தேக்கு இலைபோல் உள்ள கீரை. அந்த இலைக்குள் பருப்பு உசிலி ஃப்ரையை வைத்து , சுருட்டி..அதை ட்வைன் நூலால் கட்டி..அதை இட்லிப் பானையில் வேகவைத்து... அடடா..சாப்பிட்டுப் பார்த்தால் தான் தெரியும் அதன் ருசி!
தாத்தா பாடசாலையில் கனம் படித்தவர். வேதத்தில் கனம் என்று ஒரு பிரிவு. அதனை
பாடமாக படித்தவர்கள் கனபாடிகள். தாத்தா கனபாடிகள். விஷயம் தெரிந்தவர்.. வயதானவர்
என்பதால் அவருக்கு கிராமத்தில் தனி மரியாதை. ஊரே ஐயன் வாய்க்கால் அரச மரத்தடியில்
அவரிடம் பூணல் போட்டுக் கொள்ள காத்துக் கொண்டிருக்கும்.
நாங்கள் .......?
நாங்கள் ஏன் அங்கு போகிறோம் ?
அடுத்தது என்ன ?
ரயில் விளையாட்டு தான்!
ஒரு பெரிய சாக்கு எடுத்துக் கொள்வோம். அந்த பக்கம் சிகாமணி சித்தப்பா, இந்த
பக்கம் பாலு சித்தப்பா. நடுவில் .. நான்,கிரி,குரு,ராஜு,மோகன்,
இந்திரா,ஜெயந்தி,சசி,சுரேஷ், உஷா,ரமா எல்லாருமே...
சிகா சித்தப்பா பாட ஆரம்பிப்பார்......
" ஊதி ஓடும் ரயில்...
இந்த ஊரில் நிக்காது மெயில்...
இதன் நீளம் ஒண்ணரை மைல்...
இழுக்கறேன்...இழுக்கறேன்....
இழுக்கறேன்....."
என்று சாக்கை இழுக்க ஆரம்பிக்க...
நாங்களும் கோரஸாக அபஸ்வரத்தில் கத்துவோம்...
ரயில் வண்டியில் யார்,யாரெல்லாம் பயணம் செய்கிறார்கள்?
ஆனைக்குட்டி ரெண்டு.....
அல்சேஷன் பன்னிரெண்டு....
( இதை கிரி பன்னி... ரெண்டு என்று ஸ்பெஷலாக அழுத்தம் கொடுக்க அதற்கு
ஓன்னு சிரிப்பு! ...)
மந்திரிமார்கள் மூணு...
மகராஜாக்கள் தொண்ணூறு....
டிக்கெட்டில்லா 'வித்தவுட்டு'
ட்ரெயினுக்குள்ளே பதினெட்டு...
இழுக்கறேன்...இழுக்கறேன்..
இழுக்கறேன்...
' ரயில் எங்கேடா இன்னும் ஸ்டேஷனுக்கு வல்லே ?' - சித்தப்பா கேட்க...
நான் ஆரம்பிப்பேன்..
எருமை மாடு ஒண்ணு
கண்ணுகுட்டியைப்
போட்டிருப்பதாலே...
குட்டியைப் போட்டிருப்பதாலே..(இது கிரியும்,குருவும்)
எவனோ ஒருவன்
இசுக்குரு (SCREW) ஆணியைப்
பேர்த்திருப்பதாலே... (இது நான்)
ஆணியைப் பேர்த்திருப்பதாலே... (இது கிரியும்,குருவும்)
(இப்போது எல்லாருமே கோரஸாக கத்துவோம்)
அரை மணி நேரம் லேட்....
அடைச்சிருக்குது கேட்....
அப்பாடா! ஒரு வழியா ரயில் ஸ்டேஷனுக்குள் வந்து விட்டது !!
காப்பி...காப்பி..காப்பி..சூடா காப்பி.... (இது கிரி)
உப்மா...உப்மா..உப்மா...(இது குரு)
ட்டீ.....ட்டீ.....ட்டீ.....சூடா ட்டீ.... (இது நான்..)
ஹிண்டூ....எக்ஸ்ப்ரஸ் .... ஆனந்த விகடன்.....(கோரஸாக உஷாவும்,ரமாவும்)
"ஏய்...தாத்தா வந்தாச்சு..தாத்தா வந்தாச்சு...ஓடுங்கடா...சீக்கிரம்."
"பஞ்ச பாத்திரம் எடுத்துக்கோ... எனக்கு ஒண்ணு தா..தாம்பாளம் எங்கேருக்கு? "
இரண்டு சித்தப்பாக்களும் தட்டு தடுமாற...
" என்னடா, எல்லாரும் சந்தி பண்ணியாச்சா..பூணல் போடலாமா?"
வெளி வேலைகள் முடித்து தாத்தா அங்கு வர.. நாங்கள் எல்லோரும்
எஸ்கேப் !
நன்றாக மாட்டிக் கொண்டார்கள் சித்தப்பாக்கள்!!
* * * * * * * * * *
ஆம்... உறவுகள் ஒரு சுகமான அனுபவம்!!
இப்பவும் வருடம் ஒரு முறை, ஆவணி அவிட்டம் வந்து கொண்டுதான் இருக்கிறது
ஆனால்.......
அவ்வளவு சுவாரஸ்யமாக அல்ல !!!!

18 comments:

ரிஷபன் said...

ஆம்... உறவுகள் ஒரு சுகமான அனுபவம்!!
ஆஹா.. என்ன ஒரு ரசமான பதிவு.. ராமகிருஷ்ணன் தினமணி கதிரில் எழுதுவார்.. இம்மாதிரி இலக்கியம் சார்ந்த சுவையான கட்டுரைகள் படிக்க படிக்க திகட்டாதவை.. ரசித்த வரிகளை எழுத நினைத்தேன்.. பதிவை அப்படியே திருப்பிப் போட வேண்டும்.. சந்தோஷமாய் இருக்கிறது

வசந்தமுல்லை said...

"ஆமாம் உறவுகள் சுகமானவையே !! ராணிப்பேட்டையில் இருக்கும்போது கூட, இப்படி அனுபவித்ததில்லை .மாமா , மச்சான் , தங்கைகள் , அம்மா , தம்பி,பிள்ளைகள் என உறவுகளிடம் பாசம் , நேசம், கோபம், கூடல் என வித்தியாசமான பழகும்போது , சொல்லத் தெரியவில்லை!!!!!!!, அனைத்தும் சுகமானவையே................... !!!"

வசந்தமுல்லை said...
This comment has been removed by a blog administrator.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என் உயிர் நண்பர்கள் ரிஷபனுக்கும்,
வசந்த முல்லைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
என் எழுத்துக்கு வளம் சேர்ப்பதே தங்களின்
உயிரோட்டமுள்ள COMMENTS தான்!!
உங்களைப் போன்ற நல்ல நண்பர்களின்
ஆதரவு இந்த ஒரு மாதமே வளர்ந்த இலக்கிய
செடிக்கு உரம்!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபன் எழுதுவது என்பது புதிதல்ல..எனது
எழுத்துலக ஆசான் அவர்.அது சரி..இவ்வளவு
அருமையான விமர்சனம் எங்கு எழுதக்
கற்றுக்கொண்டீர்கள் வசந்த முல்லை? REALLY WONDERFUL.இதை இப்படியே தொடருங்கள்! எழுத்து உங்கள் வசப்படும்! ரசிகர்களை வசப்
படுத்தும்!!

Chitra said...

"இச்சா...இனியா...
காயா...பழமா..."
என்று தன் குட்டி தலையை அண்ணாந்து பார்த்து, நெற்றியில் ஒரு ஓட்டு சில் வைத்து,
அதை கீழே விழ விடாமல், 'பேலன்ஸ்' பண்ணிக் கொண்டு,பச்சைப் பாவாடையை, நாலு 'இன்ச்சு'க்கு மேல் தூக்கி, போட்ட கோட்டினை மிதிக்காமல், கண்களை மூடி, தன் குஞ்சு கால்களால் லாவகமாக நடை பயிலும் கோமளிப் பாப்பாவுடன் நாங்கள் பாண்டி விளையாடிய இடம் ! ...............ரசித்து........ அனுபவித்து ......... ஒன்றி போய் .......... மீண்டும் நினைவுகளில் வாழ்ந்து ........... ஏங்கி போய் எழுதிய வரிகள். அருமை.

இராகவன் நைஜிரியா said...

// வியாழக்கிழமை கடப்பா போடுவார்கள். ருசியான.ருசி. //

ஏங்க இத வேற இப்ப ஞாபகப் படுத்திவிட்டுடீங்க. ம் அதெல்லாம் ஒரு காலம்... கடப்பா அப்படின்னா கடப்பா அவ்வளவுதான் சொல்ல முடியும்...

இராகவன் நைஜிரியா said...

// பழங்குழம்பை சுட வைத்து, அதில் அச்சு வெல்லம் போட்டு எரிச்சக் குழம்பாக்கி,
பழைய அமுதுடன், வாழைப்பூ மடலில், எங்களுக்கெல்லாம் பாட்டி பரிமாறிய இடம்! //

அண்ணே தாங்க முடியல.. இப்பவே ஊருக்கு போயிடணும் போல இருக்கு...

சரி ஊருக்கு போனாலும் இப்ப எல்லாம் இது கிடைக்காதே..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சித்ரா மேடம்,
என் 'அசை போடலை' விட தங்கள் 'கமெண்ட்ஸ்' பிரமாதம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சூழ்நிலையை கலகலப்பாக்குவதில் ராகவன்
EXPERT போல இருக்கிறது. அது தான் எல்லாருக்கும் பிடிக்கும். Though Sivaji Ganesan had more versatality than MGR,
we do accept that he superceded Sivaji, by
his ' Mass pulling'. வெறும் கைகளை இப்படியும், அப்படியும் ஆட்டியே மொத்த
ஜனங்களையும் காந்தம் போல் கவர்ந்து விடுவார், அவர். அது போல் 'எழுத்துலக MGR'
ஆக திரு ராகவன் வர வாழ்த்துக்கள்! ஒன்று ஞாபகம் வருகிறது. வீரப் பாண்டிய கட்டபொம்மன் பார்த்து விட்டு ஒரு பட்டிக்
காட்டு மூதாட்டி சொன்னாராம்: " சிவாசி
கட்டப்பொம்மனா நடிச்சதினால தான் தோத்துப்
போய் தூக்குல தொங்கினாரு. எங்க எம்.சி.ஆர்
மட்டும் நடிச்சிருந்தா, அம்புட்டு வெள்ளக் காரனையும் சுட்டு
பொசுக்கி சுண்ணாம்பா ஆக்கியிருப்பாரு!"

Rekha raghavan said...

அருமையான பதிவு. நானும் கடப்பாவின் ருசிக்கு அடிமையானவன். அதை செய்வது எப்படி என்று இங்கே ஒரு பதிவே போட்டிருக்கிறேன்.

ரேகா ராகவன்.
http://rekharaghavan.blogspot.com/2009/09/blog-post_06.html

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றி திரு கல்யாணராமன் ராகவன்...
தங்களின் வருகைக்கும்..விமர்சனத்துக்கும்..

--- அன்புடன் ஆர்.ஆர்.

Lavanya said...

நிம்பள் பதிவு நம்பள்க்கு ரொம்ப பிடிச்சிருந்தது அண்ணே! நிம்பள் எழுத்து நம்பளை அந்த காலத்துக்கே கொண்டு போய்ட்டது!! இன்னா சொல்வேன் ? எப்படி சொல்வேன் ?? அது சரி ‘ஊதி ஒடும் ரயில் சினிமா பாட்டா இல்ல நம்ப குடும்ப பாட்டாங்கண்ணே?

Anonymous said...

சிலரால் மட்டுமே வாக்கியங்களை மனக்கண் முன் தோற்றுவிக்க முடியும்.. தங்கள் ஃப்ளாஷ்பேக் படிக்க படிக்க ஆனதத்தையும் பொறாமையயும் மிகுதிப் படுத்துகிறது..


வணக்கத்துடன்,

ஸ்ரீராம் ஸ்ரீதரன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாங்க ஸ்ரீதர்ஸ்ரீராம்..அனுபவித்து எழுதி உள்ளீர்கள் ..மிக்க நன்றி..

தங்கள் விமர்சனம் என் எழுத்துப் பணிக்கு நிச்சயம் உரமூட்டும்...

வர வேண்டும் அடிக்கடி!

கோமதி அரசு said...

ரசித்த வரிகளை எழுத நினைத்தேன்.. பதிவை அப்படியே திருப்பிப் போட வேண்டும்.. சந்தோஷமாய் இருக்கிறது//
ரிஷ்பன் அவர்கள் சொன்னது உண்மை. அத்தனையும் குறிப்பிடபட வேண்டிய வரிகள் தான்.
ரயில் பாட்டு அருமை. கண்முன் வந்து நிற்கிறது.
கர்ணன், கமர்கட் ஒ! அருமை.
பசுமையான இளமை நினைவுகள் மனதை விட்டு நீங்காது. இந்த பதிவு எனக்கும் மனதை விட்டு நீங்காது. இன்று வலைச்சரத்தில் இந்தபதிவை குறிப்பிட்ட மனோ அவர்களுக்கு நன்றி. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

வணக்கம்
அண்ணா

20,012013இன்று உங்களின் படைப்பு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமானது பாராட்டுக்கள் அருமையான பதிவு அண்ணா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

ஆம்... உறவுகள் ஒரு சுகமான அனுபவம்!!

ஊதி ஓடும் ரயிலில் அழைத்துச்சென்ற மலரும் நினைவுகள்..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..