Tuesday, December 1, 2009

சர்வே

சர்வேஸ்வரன் என்றால் அது பரமேஸ்வரனைக் குறிக்கும் என்று சின்னக் குழந்தையைக் கேட்டாலும் சொல்லும் என்று சொல்வார்கள். சின்னக் குழந்தை தான் சொல்லும். என்னைப் போன்ற அறிவு ஜீவிகளிடம் இதே கேள்வியை கேட்டுப் பாருங்கள்! பதில் வேறு விதமாக இருக்கும். அது சாட்சாத் ஸ்ரீ மகாவிஷ்ணுவைக் குறிக்கும் என்பேன்,நான். ஏன் என்றால்,அவர் தான் மகாபலி சக்ரவர்த்தி கொடுத்த நிலத்தை தமது காலால் 'சர்வே' செய்தவர். இந்த சர்வே எடுக்க அவர் வாமனன் என்று ஒரு அவதாரமே எடுக்க வேண்டி இருந்தது. ஆகவே அவரை சர்வேஸ்வரன் என்று சொல்வது தான் சரி.
இப்போது நாம் பேசும் போது திடீரென்று, இங்கு 'சர்வே' ஏன் வந்தது என்று கேட்கிறீர்
களா? அதற்கு காரணம் இல்லாமல் இல்லை..ஸ்வாமி!
எங்கள் 'ஆரண்ய நிவாஸில்' சர்வே நடந்தது. வந்தவர் ஒரு மாதிரியான ஆசாமி! படு ஜாக்கிரதையான பேர்வழியும் கூட! நான் யார்? இந்த வீட்டின் குடும்பத் தலைவன் ! என்னை அவர் துளிக் கூட லட்சியம் செய்தாரில்லை. மாறாக, அலட்சியமே செய்தார்! இங்கு நான்
ஒருவன் இருக்கிறேன் என்பதையே மறந்து விட்டார் போலும்! எனக்கு அஸாத்யமான கோபம் வந்தது. ஏதாவது செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்வதற்குள் அவர் செய்த செய்கை என்னை அப்படியே மடக்கிப் போட்டு விட்டது. தகதகவென்று தகித்துக் கொண்டிருக்கும் நெருப்புக் கங்குகள் மேல் தண்ணீர் ஊற்றினால் அது குளிர்ந்து போகுமே, அது போல் குளிர்ந்து
போகும் படியான காரியம் ஒன்று செய்தார், அவர்! அப்படியே, குளிர்ந்தும் போய் விட்டேன்
நான்!
அப்படி என்ன தான் செய்தார்,அவர் ?
எங்கள் வீட்டில் என்னை விட அதிகப் படியான அதிகாரம் உள்ள நபர் ஒருவர் இருக்கிறார். அது என் சகதர்மிணி என்று நான்சொல்லித் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை ! மேலும் நான் சொல்ல வந்த விஷயமும் அதுவல்ல!
பின் ...............????
வந்த ஆசாமிஅவரையும்... ஏன்..அவரையே..அலட்சியம் செய்து விட்டார்!!
என்ன ஒரு மகாதைரியம்?
சர்வே எடுக்க வந்தவர் சரியான போக்கிரி போல இருக்கிறது என்று மனதுக்குள் நினத்துக் கொண்டேன்!
இப்போது அவரிடம் எனக்கு கோபம் இல்லை. நான் கனவிலும் செய்ய இயலாத ஒரு காரியத்தை, மிக மிக அனாயாசமாக செய்ததினால், அவர் மீது எனக்கு ஒரு 'ஹீரோ ஒர்ஷிப்'
வந்து விட்டது.
என்ன தான் செய்கிறார் என்று பார்ப்போமே !
வந்தவரின் மூக்கு, ஊசி நுனி போல் கூர்மையாக இருந்தது. அதை இங்கும், அங்குமாய்
திருப்பி,எதையோ தேடிக் கொண்டிருப்பவர் போல் இருந்தது அவர் செய்கை. சர்ரென்று பறந்து மூன்றாவது சவுக்கு மரக் கிளையின் மீது அமர்ந்தார்!
ஆம்...
ஒரு சிட்டுக் குருவி தான் அது !
அட...இடம் கண்டுபிடித்தாகி விட்டது. வரிசையாக ஐந்து சவுக்கு மரங்கள் உள்ள இடத்தில், மூன்றாவது மரத்தை தேர்வு செய்து..அதில் ரொம்ப மேலேயும் போகாமல், அதல பாதாளமும் இல்லாமல், மேலிருந்து இரண்டு அடி கீழே தள்ளி அடுத்த அரை மணி நேரத்தில் நேர்த்தியாக
கூடு ஒன்றும் கட்டியாகி விட்டது!
எனக்கு அப்போது 'நேஷனல் ஹைவேஸ்' அருகில் மனை வாங்கி ,வீடும் கட்டி,அரசாங்கத்திலிருந்து 'நோட்டீஸ்' வந்தவுடன் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் ஆறறிவு படைத்த மனிதனின் ஞாபகம் ஏனோ வந்து தொலைத்தது !
இரண்டு குஞ்சு குருவிகள், தாய் குருவி, தகப்பன் குருவி என்று அளவான குடும்பம். அந்த
பெரிய குருவிகள் இரண்டும் ஓடி..ஓடி.. இரை கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டும்!
குஞ்சுகளும் சமர்த்தாக சாப்பிடும்.
விடுமுறை நாட்களில் இது தான் என் பொழுது போக்கு. அவ்வப்போது நெல், பொரி
என்று ஏதாவது போட்டு அவற்றுடன் ' ஃப்ரண்ட்ஷிப்' வைத்துக் கொண்டேன். அதுகளும்
நான் ஆபத்தில்லாதவன் என்பதைப் புரிந்து கொண்டு, எனக்கு மிக அருகில்
விளையாடும். குருவிகள் இவ்வளவு பாசமாக இருக்கிறதே என்று நினக்கும் போது ....
அதீத உணர்ச்சியினால் என் கண்கள் பனித்து......எனக்கு காகங்கள் நினைப்பு வந்து விட்டது.
இந்த காகங்களும் தான் இருக்கிறதே! ச்சே...!
எதற்கு இதை சொல்கிறேன் என்றால், 'ஆரண்ய நிவாஸ்' வருவதற்கு முன்பு 'சிட்டியில்'
நாங்கள் அடுக்கு மாடி வீட்டில் குடி இருந்தோம். காலை நேரத்தில் சில வீடுகளில் காகத்திற்கு சாதம் வைப்பார்கள். ஆயிரம் யோஜனை பண்ணிக் கொண்டு ஒரு காகம் ...அதுவும் ஒரே ஒரு காகம் தான்.... வரும். அப்போது துணிகளை உலர்த்த நான் மாடிக்கு வருவேன். சாப்பிடும்
காகத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ரொம்பவும் ஜாக்கிரதையாக துளிக்கூட சத்தம் போடாமல் துணிகளை உலர்த்துவேன். இருந்தாலும் அந்த காகம் நான் வந்தவுடன் சட்டென பறந்து போய் விடும்.
ஒரே ஏமாற்றம்!
இத்தனைக்கும் ' என்னங்க..எவ்வளவு தடவை சொல்றது, துணிகளை உலர்த்தறத்துக்கு
முன்னால ஒரு உதறு உதறுங்கன்னு...காய்ந்த துணியெல்லாம் இப்ப சுருங்கி போய் இருக்கு'
என்று என் மனைவி திட்டுவாள் என்று தெரிந்தும், அந்த காகத்தை 'டிஸ்டர்ப்' செய்யக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தானே அவ்வாறு செய்தேன் ?
அந்த முட்டாள் காகத்திற்கு ஏன் அது தெரியவில்லை!
சரி... போய் தொலையட்டும்..
நானும் அன்பானவன் தான் என்று, இங்கு என் இருப்பில் கூடு கட்டி, என் நட்பை அங்கீகாரம்
செய்தனவே குருவிகள்....
அது போதும் எனக்கு !!

------ 0 --------

4 comments:

ரிஷபன் said...

நகைச்சுவை வழிந்தோடுகிறது முழுமையாக.. என்ன ஒரு இயல்பான சடையர்.. தேவன்..பாக்கியம் ராமசாமி போல வரலாம் தொடர்ந்து யோசித்தால்.. வாசகர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும்.. மனப் பூர்வமான பாராட்டுகள்

வசந்தமுல்லை said...

nalluthu. unmaiyana ramamurthy neril parthal ennna pesuvara athuve nadayil vanthullathu.keep it up aranyanivasramamurthy.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றி, வசந்த முல்லை அவர்களே...
தங்கள் வருகைக்கும்..விமர்சனத்திற்கும்...

Unknown said...

Good Writings. Arivai thoondum ezhuthu. Congrats!!