Friday, August 6, 2010

உன்னை அறிந்தால்......


அந்த காலத்தில் இவ்வளவு கோவில்கள் இருந்தாலும், கோவில்களில் இவ்வளவு கூட்டம் கிடையாது. விச்ராந்தியாய் கோவிலுக்குப் போவோம், தரிசனம் முடிந்து வருவோம் என்றிருக்கும். இப்போது கோவிலுக்குப் போனால், குறைந்தது சினிமா பார்க்கும் நேரம் ஆகி விடுகிறது. செலவும் அப்படித் தான்!
பிரதோஷ காலம் இருக்கிறதே..எங்கிருந்து தான் மக்கள் புற்றீசல் போல வருவார்களோ தெரியவில்லை. வெறிச்சோடிக் கொண்டிருக்கும் கிராமத்து சிவன் கோவில் கூட அன்று சற்று சுறுசுறுப்பாய் காணப்படும்!
பௌணர்மி அன்று இன்னும் மோசம். கையில் ஊதுபத்தி ஏந்திக் கொண்டு ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டு நம்மை குத்தி விடுவது போல அன்பர்கள் வருவார்கள். நாம் தான் ஜாக்கிரதையாய் ஊதுபத்தியின் தாக்குதலுக்குத் தப்பித்துக் கொண்டு போகவேண்டும்.
விசேஷ காலங்களில் தரிசனம் பண்ண ஸ்பெஷல் கட்டணம்.நாம் நூறு ரூபாய் கொடுத்து கட்டண சேவைக்குச் சென்றால், நம் அதிர்ஷ்டமும் நம் கூட வரும். தர்ம சேவைக் கும்பல் விறுவிறு என்று போய்க் கொண்டிருக்கும் அப்போது !
இப்படித் தான் ஒரு ஆடி வெள்ளியன்று நானும் கோவிலுக்குக் கிளம்புவோமென்று கிளம்பினேன். சரியான கூட்டம். எங்கெங்கெல்லாமோ தடுப்பு போட்டு வைத்திருந்தார்கள். ஆர்டினரி கட்டண சேவை..ஸ்பெஷல் கட்டண சேவை..தர்ம சேவை.. என்று அது பாட்டுக்கு ஜரூராய் போய்க் கொண்டிருந்தது.
எப்படியடா போய் தரிசனம் பண்ணப் போகிறோம் என்று நாம் மலைத்த போது, நண்பர் இரண்டு பத்து ரூபாய் டிக்கெட்டுகளுடன் வந்தார். ஆனால் பத்து ரூபாய் க்யூ மலைப் பாம்பு வால் போல் செம நீளம்! நண்பர் செயற்கரிய காரியம் ஒன்று செய்தார். 'பேசாம என்னோட வாங்க' என்று அன்பு கட்டளை இட, அகத்திக் கீரைக் கட்டைக் கண்ட பசு மாடு போல் நானும் ஆசையுடன் தொடர்ந்தேன் !
வடக்கு வாசல் குறுக்கே அவர் செல்ல, நானும் தொடர, 'சார், பத்து ரூபாய் க்யூ அங்கே' என்று ஒரு போலீஸ்காரர் கை காட்ட 'நாங்க இந்த தெருக்காரங்க' என்று சொல்லிவிட்டு நண்பர் நுழைய நானும் நுழைந்து அடுத்த அரை மணி நேரத்தில் வெகு சுலபமாய் திவ்ய தரிசனம்!
ஆனால் என்ன பிரயோசனம்! 'பிளாக்'கில் சினிமா பார்த்தது போன்ற உணர்வு என்னுள்! 'ஒரு ஸ்வாமி தரிசனம் கூட உன்னால் ஸ்ரத்தையாய் செய்ய முடியவில்லை பார்' என்று மனம் வேறு குத்திக் காண்பித்தது!
ஏன் இவ்வளவு கூட்டம்?
ஆன்மீகத்தில் நம் மக்களுக்கு இவ்வளவு ஈடுபாடா என்றால் ...ஊஹூம்....பிறகு கோவிலில் அப்படி என்ன தான் நடந்து கொண்டு இருக்கிறது என்கிறீர்களா?
' என் பையனுக்கு எஞ்சினீயரிங்க் சீட் கிடைத்தால் நூறு தேங்காய் உடைக்கிறேன்..அந்த ஆஸ்பத்திரி அவ்வளவு ராசியானதாய் இல்லை என்று தான் அங்கு அட்மிட் பண்ணினோம். போகிற போக்கைப் பார்த்தாள் பிழைத்து விடுவாள் போல இருக்கிறதே, மாமியார் மண்டையை போட்டால், இரு நூறு தேங்காய் உடைக்கிறேன் என்று பேரம் நடந்து கொண்டிருக்கும்.

இதைப் பார்க்கும் போது கோவிலுக்கு வந்திருக்கிறோமா இல்லை , மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறோமா என்று நமக்குள் ஒரு சம்சயம்!

தானாக வந்தது...நாம் இழுத்துக் கொண்டு வந்தது என்று பலவித பிரச்னைகள் மனிதனை சூழ்ந்து கொள்ள அவன் என்ன தான் செய்வான், பாவம்!
இன்றைய காலக் கட்டத்தில் எளிமையாய் வாழ்வதே ஒரு தவம் தான்! யார் எளிமையாய் வாழ்கிறார்கள்...யார் எளிமையாய் வாழ ஆசைப் படுகிறார்கள்?
ஆடம்பரமாய் வாழ வேண்டியது..அதனால் வரும் அடுக்கடுக்கான தொல்லைகளை சமாளிக்க முடியாமல் திணறி, அதனை இறக்கி வைக்க ஒன்று சாமியார்களை நாடுகிறார்கள். இல்லாவிட்டால் கோவில்களுக்குப் படையெடுக்கிறார்கள். இப்போது மீடியாக்கள் சாமியார்களைத் தோலுரித்துக் காட்ட, மனத்துள் பயம் வர கோவில்களில் கூட்டம் அதிகப் படியாய்!
இந்த கண்றாவிகளைக் காணச் சகியாமல் தான் ஆண்டவனும் கல்லாய் போய் விட்டான், போலும்!

இந்த கூத்துக்கு என்ன தான் முடிவு?

1. எளிமையாய் வாழ எண்ணுவோம். எண்ணமே செயலுக்கு ஆதாரம்.(உதாரணம்: அறம் செய் என்று ஒளவை சொல்லவில்லை. அறம் செய விரும்பு என்று தான் சொல்கிறாள்)

2. பேதமின்றி அனைத்து உயிர்க்கும் அன்பு செய்வோம்!

3. மனதில் உள்ள அழுக்குகளை அகற்றுவோம். தூய்மை ஆக்குவோம்.

4. தூய்மையான ஆழ்மனத்துள் முங்கிக் குளிப்போம்.தெய்வீகமெனும் முத்துக்களை அள்ளுவோம்......உள்ளுக்குள் ஆனந்திப்போம்...........

5. ஒவ்வொரு செங்கல்லாய் மனம் என்னும் பீடத்தில் பதிய வைப்போம்! சிறுக..சிறுக ..கல் சேர்த்து, பூசலார் நாயனார் போல, மனத்துள் பிரம்மாண்டமானதொரு கோவில் கட்டுவோம்! இறைவனை அதில் ப்ரதிருஷ்டை செய்வோம்!!

இன்று நாம் படும் பாடு அன்றே திருமூலருக்குத் தெரிந்திருக்கிறது. இல்லாவிட்டால் அவர் தான் இப்படி ஒரு பாடல் பாடியிருப்பாரா?

" நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சாற்றியே,
சுற்றி வந்து
மொணமொணவெமன்று,
சொல்லும் மந்திரம் ஏனடா?
நட்ட கல்லும் பேசுமோ,
நாதன் உள்ளிருக்கையில்...
சுட்ட சட்டி சட்டுவம்,
கறிச்சுவை அறியுமோ???.."

ஆம்...
வெளியே கஷ்டப்பட்டு தேடுவதை விட்டு விட்டு நம்முள்ளே சுலபமாய் இறைமையைத் தேட இன்று முதல் ஆரம்பிப்போமா??

11 comments:

ரிஷபன் said...

அகத்திக் கீரைக் கட்டைக் கண்ட பசு ...
அருமையான உதாரணம்..
கடவுள் வழிபாடும் இப்போது பேஷனாகி விட்டது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாஸ்தவம் தான். இன்று கோவில்களில் கும்பல் மிகவும் அதிகம் தான். நீங்கள் சொல்லுவது போல ஒரு வித மனப்பக்குவம் ஏற்பட ஒவ்வொருவருக்கும் பல்வேறு அனுபவங்களும், மன முதிர்ச்சியும், உடம்பில் பலகீனமும் ஏற்பட வேண்டும். பிறகு தான் “சீ..சீ..இந்தப்பழம் புளிக்கும்” என்ற நரி போல, ஒரே இடத்தில் இருந்து மன்க்கோயில் கட்ட ஆரம்பிப்பார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரார்த்தனை, ஒவ்வொரு நம்பிக்கை, ஒவ்வொரு ஆதாயம், ஒவ்வொரு எதிர்பார்ப்பு, கூட்டமாகக் கூடுகிறார்கள். கூடட்டும். கூடிவிட்டுப்போகட்டும். இந்தக்கூட்டத்தினால் பிழைப்பவர்கள் ஏராளம்.

இராகவன் நைஜிரியா said...

மனசாட்சியை விற்று காசக்கி, அதனால் வரும் துன்பங்களை அனுபவிக்கும் போது ஆண்டவன் நினைவு வருகின்றது..

vasu balaji said...

வெளியே கஷ்டப்பட்டு தேடுவதை விட்டு விட்டு நம்முள்ளே சுலபமாய் இறைமையைத் தேட இன்று முதல் ஆரம்பிப்போமா?//

இதான் பண்ணனும்.:)

Ramesh said...

அருமை. கடவுள் பற்றி எனது கருத்துக்களோடும் இணைகிறீர்கள் நண்பா.

Ramachandranwrites said...

" நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சாற்றியே,
சுற்றி வந்து
மொணமொணவெமன்று,
சொல்லும் மந்திரம் ஏனடா?
நட்ட கல்லும் பேசுமோ,
நாதன் உள்ளிருக்கையில்...
சுட்ட சட்டி சட்டுவம்,
கறிச்சுவை அறியுமோ???.."

மன்னிக்கவும் - இது திருமூலர் பாடலா ? தயவு செய்து சரி பார்க்கவும்

vasan said...

கொடுமை, கொடுமைன்னு,
கோவிலுக்குப் போன‌, அங்க‌வொரு,
கொடுமை அம்மண‌மா நின்னுச்சாமுன்னு
ஒரு கிராம‌ச் சொல்லாட‌ல் கேட்டிருக்கிறீர்க‌ளா
ஆர் ஆர் ரா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அன்புள்ள ராமமூர்த்தி சார்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

பத்மநாபன் said...

ஸார், கேளிக்கை, தொலைக்காட்சி , வலையுலகில் பல்சமுக அரட்டை பொழுதுபோக்கு, சினிமா, இவை தாண்டி கோவிலுக்கு மக்கள் வருவதே பெரிய விஷயம். வரட்டுமே ...பக்தி , பணிவு தாண்டி உண்மை ஞானம் பெறட்டுமே என்பது எனது பணிவான கருத்து.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ராமச்சந்திரன் சார். you are right. அது சிவவாக்கியர் அருளியது. தவறுக்கு மன்னிக்கவும்...

CS. Mohan Kumar said...

உங்களின் இந்த பதிவு பற்றி வலைச்சரத்தில் எழுதி உள்ளேன். இயலும் போது வாசியுங்கள்.

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_15.html