Friday, December 11, 2009

ரயில் திருடர்கள்??


அந்த பகல் நேர பாசஞ்சர் வண்டியில் நானும்,என் நண்பனும்.
எதிர்த்தாற்போல் இரண்டு நபர்கள். அந்த கம்பார்ட்மெண்ட்டே அவ்வளவு தான்.மேலும் 'ஒர்க்கிங்க் டே' என்பதால் வண்டியில் கூட்டம் அதிகம் இல்லை. நாங்களும் அப்போது தான் வேலைக்குச் சேர்ந்த புதுசு. எங்கள் எல்லாருக்கும் ஊரும் புதுசு.கவலையே இல்லாத வாழ்க்கை. படு ஜாலி.
நாங்கள் ஐந்து பேர் ஒரு ஸ்டோரில் வாசம். ஒரு காபி குடித்து விட்டு,காலை ஆறறைக்கே கிளம்பி விடுவோம். குளியல் ! பெப்சி உங்கள் சாய்ஸ் தான்! நினத்தால் குளிப்போம்.
மூடு இல்லாவிட்டால் இல்லை.கையில் கிரிக்கெட் பேட், பந்து சகிதம் கிளம்பி விடுவோம். பத்தே நிமிஷத்தில் செயிண்ட் மேரீஸ் காலேஜ் வந்து விடும். கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடுவோம். கரெக்டாக ஏழு மணிக்கு ஸ்டோர் வாண்டுகள் வந்து விடும். அதுகளுடன்
கொஞ்ச நேரம் விளையாடுவோம். ஏழரைக்கு ஆபீஸ் பஸ் அங்கு வரும் எங்களை
'பிக்கப்' செய்ய.. இது தான் எங்கள் வாராந்திர 'ரொட்டீன் லைஃப்'! சனி, ஞாயிறு ஆபீஸ் லீவ்!
முதல் வார சனியன்று, சொந்த ஊருக்குப் போய் விடுவாம். இரண்டாம் வார சனியன்று ஏதாவது பக்கத்து ஊருக்குப் போய் வருவோம். அங்குள்ள கோவில், மார்க்கெட் என்று ஊர் சுற்றுவோம். சமர்த்தாக அன்றிரவே ஊர் திரும்பி விடுவோம். சமயத்தில், ஜமா சேர்ந்தால், பாண்டி,பெங்களூர் என்று 'தீர்த்த' யாத்திரை செல்வதும் உண்டு. அப்போது
சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் கூத்தடித்து விட்டு, நல்ல பிள்ளைகளாக திங்கள் காலை
'டாணே'ன்று ஆபீஸ் வந்து விடுவாம்.
இந்த முறை நானும், சங்கரும் தான் பாக்கி. எல்லாருக்கும் ஒவ்வொரு 'அசைன்மெண்ட்'.
எங்கள் பஞ்ச பாண்டவரில் பாச்சாவும், நட்டும் ஆபீசில் ஓவர்டைம் பார்க்கப் போய்
விட்டார்கள். சுந்தாச்சு பெண் பார்க்க ஊரில் கூப்பிட, கம்பி நீட்டி விட்டான் !
சங்கர் கேட்டான்.
'லீவுக்கு என்னடா பண்ணலாம். எல்லாரும் போயாச்சு.?'
' அரவிந்த ஆஸ்ரமம் போலாமா?'
' போடா போ..இப்படியே போனோம்னா கூடிய சீக்கிரம் நாமளே சாமியாராப்
போயிடுவோம்! வேற எங்காவது போலாம்.'
' எங்கே போலாம்..நீயே சொல்லு?'
' பெங்களூர்'
' பெங்களூரா?'
' ஏன்?'
'சரி'
சங்கர் குடிக்க மாட்டான். சும்மா ஜாலிக்காக ஃப்ரெண்ட் ஜமா சேர்ந்தால் அவனுடைய
மேக்சிமம் தைரியமே ஒரு சின்ன 'பெக்' தான்! ஆனால் சிகரெட் குடிப்பான் ஓயாமல் ! இவன்
மட்டும் கொஞ்சம் முன்னால் பிறந்திருந்தால் ராமர் இலங்கையைக் கடக்க சிரமப்
பட வேண்டாம். இவன் குடித்துப் போட்ட சிகரெட் டப்பாவை சேர்த்து வைத்தால் போதும்!
தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு ஜம்மென்று பாலம் கட்டி விடுவார்!!
இப்படியாகத் தானே நானும்,சங்கரும் வெள்ளிக் கிழமை மத்தியானமே ஆபீசர் வராததினால்
'பங்க்' அடித்து கிளம்பி விட்டோம். இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம் இந்த
பகல் நேர பாசஞ்சர் வண்டியில்!
இந்த வண்டி ஒரு 'லொங்கடா' வண்டி. பெருமூச்சு விட்டுக்கொண்டு ஒவ்வொரு ஸ்டேஷனாக
நின்றுப் பின் மெதுவாக யோசித்துச் செல்லும். விடிகாலை ஆறேமுக்காலுக்கு பெங்களூர்
செல்லும். நாங்கள் பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ் வண்டியில் போய் தாலியா கட்டப் போகிறோம்.
ஆகவே இதில் வந்தோம்.
எதிர்த்தாற்போல் இருந்த இருவருமே பாராமுகமாக இருந்தார்கள். எங்களுடன் பேசாமலே
வந்தார்கள். நாங்களும் 'பிசினஸ் லைக்'காகவே இருந்தோம். எங்களுக்கு உள்ளூர பயம்.
எதாவது காலிப் பசங்களாக இருக்குமோ! இப்போது தான் ரயிலில் பிஸ்கெட் கொடுத்து,
அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு போய் விடுகிறார்களே!
அவர்கள் பார்வையே சரியில்லை. எங்களையே உற்று..உற்றுப் பார்த்தார்கள். நாங்கள்
பார்க்காத போது அவர்களிருவரும் நயன பாஷையில் வேறு பேசிக் கொண்டார்கள்.
எனக்கோ அடி வயிற்றைக் கலக்கியது. தேவையில்லாமல் கழுத்தில் உள்ள மைனர் செயினை
தொட்டுப் பார்த்துக் கொண்டேன். சங்கருக்கும் அப்படித் தான் போலும். பாவம் அவன்
அப்போது தான் புதிதாக 'கோல்ட் ப்ரேஸ்லெட்' ஒன்று வாங்கி கையில் கட்டிக் கொண்டிருந்தான்.
அவனுக்கும் பயமாக இருந்திருக்க வேண்டும். சோதனையாக எங்கள் பெட்டியில் வேறு யாருமே
ஏறவில்லை.அது வேறு கலக்கம்!
அவர்கள் எங்களை தாக்க வந்தால் 'செயின் புல்' செய்வது என்று தீர்மானம் செய்து
கொண்டோம். ராத்திரி முச்சூடும் தூங்காமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. அந்த
தடிப் பயல்களும் பெங்களூர் வரை வருவார்கள் போல இருக்கிறது! அடக் கடவுளே!
என்னத் தான் 'அலெர்ட்டாக' இருந்தாலும், எங்களையும் மீறி அசத்தி விட்டது.
சூரியனின் கதிர்கள் கண்களைத் தாக்கவே முழித்துக் கொண்டோம். பார்த்தால் எதிர்
சீட்டு காலி. அனிச்சையாக, எங்கள் கண்கள் கைகளையும், கழுத்தையும் பார்த்தன.
மைனர் செயின் காணேம்!
ப்ரேஸ்லெட்டையும் காணேம்!!
அலறி அடித்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் ஓடினேன்!!!
பயல்கள் அங்கு பதுங்கி இருப்பார்களோ... அங்கே.....
' சங்கரா........'
என் அலறல் கேட்டு அவனும் ஓடி வந்தான்.
'என்னடா...என்ன..'
பாத்ரூம் கதவு திறந்திருந்தது. உள்ளே...கண்ணாடியில் மழிக்கப் படாத என் முகம் !
ஏற்கனவே கறுப்பு...இதில் கறுப்பு ஜெர்கின்ஸ் வேற.. என்னப் பார்த்தா எனக்கே
பயமா இருந்தது.... சங்கர் என்னை விட மோசம்!! ஆள் சுத்தமா தீவிரவாதி மாதிரி
இருப்பான். அவனும் கறுப்பு ஜெர்கின்ஸ்!!
'அப்ப நம்ம நகைங்க...'
' மறந்துப் போய்ட்டியா..நாம தான் தலகாணிக்கு அடியில் பத்திரமா வைச்சிருக்கோமே'
நகைகளை எடுத்து வந்தான், சங்கர்.
அடப் பரதேசி நாய்ங்களா...எங்களைப் பார்த்து தான் களவாணிப் பசங்கன்னு
பயந்துப் போய்ட்டீங்களா!!!
விழுந்து விழுந்து சிரித்தோம், நாங்கள்!!!!

25 comments:

வசந்தமுல்லை said...

sumarthan paravaillai

இராகவன் நைஜிரியா said...

நீங்க சொல்லும் வண்டி நாகூர் - பெங்களூர் பாஸ்ட் பாசஞ்சருங்களா? அதுதான் இப்படி ஓவ்வொரு ஸ்டேஷனிலும் நின்னு ஆடி அசைஞ்சு, எதிர்த்தாப்புல வரும் அனைத்து வண்டிகளுக்கும் வழி கொடுத்துகிட்டு போகும்.

பாம்பு மனுஷனை ஏன் கடிக்குதுன்னா... பாம்பைப் பார்த்து மனுஷனுக்கு பயம், மனுஷனைப் பார்த்து பாம்புக்கு பயம்..

இது மாதிரி ஆயிடுச்சுங்களே உங்க நிலைமை... :-)

இராகவன் நைஜிரியா said...

// மேலும் 'ஒர்க்கிங்க் டே' என்பதால் வண்டியில் கூட்டம் அதிகம் இல்லை //

ஹாலிடேவா இருந்தாலும் அவ்வளவுதாங்க சில வண்டிகளில் கும்பல் இருக்கும்

இராகவன் நைஜிரியா said...

// நாங்கள் ஐந்து பேர் ஒரு ஸ்டோரில் வாசம். //

ஏங்க ஸ்டோரில் வாசம் பண்ணீங்க. ஒரு நல்ல வீடா பார்த்து, குடியிருக்க கூடாது.

இராகவன் நைஜிரியா said...

// ஏற்கனவே கறுப்பு...இதில் கறுப்பு ஜெர்கின்ஸ் வேற.. என்னப் பார்த்தா எனக்கே
பயமா இருந்தது....//

வீட்டுக்கு வந்து சுத்திப் போடச் சொன்னீங்களா... பயந்து போனதுக்கு வேப்பிலை அடிச்சாங்களா?

இராகவன் நைஜிரியா said...

// விழுந்து விழுந்து சிரித்தோம், நாங்கள்!!!!//

விழுந்ததில் அடி ஒன்னும் படலையே..

இராகவன் நைஜிரியா said...

உங்க வலைப்பூவில் வந்து கும்மி அடிச்சுட்டேன். கோச்சுக்கமாட்டீங்க அப்படின்ற நப்பாசையில்..

தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க..

கும்மி அடிப்பது நமக்கு ஒரு ஹாபி.. அதான்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்கள் வருகைக்கு நன்றி. வசந்த முல்லைக்கும்
ராகவனுக்கும். அது சரி..நான் வரைந்த அந்த கார்ட்டூன் எப்படி
அதுவும் சுமார் தானா!

இராகவன் நைஜிரியா said...

// ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
தங்கள் வருகைக்கு நன்றி. வசந்த முல்லைக்கும்
ராகவனுக்கும். அது சரி..நான் வரைந்த அந்த கார்ட்டூன் எப்படி
அதுவும் சுமார் தானா! //
கார்ட்டூன் ப்ரமாதம்.

அது சரி அதுல நீங்க யாரு?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அந்த கார்ட்டூனில் நல்ல வேளையாக நான் இல்லை

ரிஷபன் said...

சங்கர் யாரு.. உங்களுக்கு?! சரியான நகைச்சுவை

பூங்குன்றன்.வே said...

//விழுந்து விழுந்து சிரித்தோம், நாங்கள்!!!!//

நானும் தான்..நல்ல நகைச்சுவையான பதிவு.வாழ்த்துக்கள் பாஸ்.

Chitra said...

அடப் பரதேசி நாய்ங்களா...எங்களைப் பார்த்து தான் களவாணிப் பசங்கன்னு
பயந்துப் போய்ட்டீங்களா!!! ................. super comedy! Thank you very much for making us laugh.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

THANKQ CHITRA MADAM,
இந்த நிகழ்வில் 'நான்' இல்லை. இதில் வரும் 'நான்' என்பது சங்கரின் நண்பன் காந்தியை குறிக்கும். இது நடந்து கிட்டதட்ட முப்பது வருடம் இருக்கும்.நண்பர் காந்தி
RETIRED ஆகி விட்டார். சங்கர்,காந்தி,சீனு,
நான் எல்லாரும் LUNCH HOUR ல்,
மரத்தடியில் கதைத்துக் கொண்டிருக்கும்போது,
PF SETTLEMENTக்கு OFFICE வந்த காந்தி
எதேச்சையாக எங்களைப் பார்த்து விட்டு அங்கு வந்தார்.அப்போது 'அந்த நாள் ஞாபகம் வந்ததே
நண்பனே..நண்பனே..' என்கிற பாணியில்,
காந்தி அவர்கள் சங்கருடன் பெங்களூர் போன கதையை MONOACTING செய்ய, அதை அப்படியே வரி வடிவில் கொடுக்க முயற்சித்துள்ளேன். கடைசியில் அந்த
CLIMAX ன் போது, நம்ம வடிவேலு காமெடி
ஞாபகம் வந்து விட்டது.அவ்வளவு தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அது சரி, ராகவன். கும்மி அடிப்பது என்பது
இது தானா? நான் என் நண்பனின் வலைப்
பூவில் கும்மி அடிக்கத் தெரியாமல் அடித்து,
கடைசியில் அது 'டம்மி'யாகி விட்டது.
'ஒலிம்பிக்ஸ்' ல் கும்மி என்ற 'கேம்' சேர்க்கப்
பட்டால்...உங்களுக்கு 'GOLD MEDAL' லே
கொடுக்கலாம்!
" HATS OFF MR. RAGAVAN !! "

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சங்கர்,காந்தி,சீனு,
நான் எல்லாரும் LUNCH HOUR ல்,
மரத்தடியில் கதைத்துக் கொண்டிருக்கும்போது,
PF SETTLEMENTக்கு OFFICE வந்த காந்தி......
இதில் காந்தி என்பதற்குப் பதில் பாஸ்கர்
என்றிருக்க வேண்டும். பிழை பொறுத்தருள்க!!

ரிஷபன் said...

காந்தி சொன்ன கதைகள் நிறைய்ய.. அதுல ஒண்ணு இது.. அடுத்தத நான் சொல்லவா என் வலைப்பூல?!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

SOLLU SEENU SOLLU !

வசந்தமுல்லை said...

cartoon migavum arumai. computeril pottatha ?

வசந்தமுல்லை said...

அய்யா, ராமமூர்த்தி நீங்கள் வரைந்த கார்ட்டூன் மிகவும் நன்றாக இருந்தது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அந்த கார்ட்டூன் ஸிஸ்டத்தில் உள்ள "பெயிண்ட்" என்ற "அப்ளிகேஷன்" மூலம்
வரைந்தது! நன்றி வசந்த முல்லை தங்கள் வருகைக்கும் மற்றும் விமர்சனத்துக்கும்!

Kannan said...

நல்லா இருக்குங்க...தொடர்ந்து எழுதி வர வாழ்த்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப தேங்க்ஸ், கண்ணன்.
தங்கள் வருகைக்கும்....
பதிவிற்கும்...

பா.ராஜாராம் said...

இங்கு மற்றொரு உலகம் உள்ளது.எனக்கு தாமதமாகிவிட்டது!

கொழுத்துகிறீர்கள் ஆர்ஆர்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றி திரு ராஜாராம் அவர்களே!
தொடருங்கள்...தொடர்கிறேன்!!