Wednesday, June 1, 2011

சும்மா கிடந்த சங்கை.....

அன்றொரு நாள் சரியான மழை..சூடாக கடை வீதியில் பக்கோடா வாங்கிக் கொண்டு வீடு வந்தேன். வந்ததும், கை,கால் அலம்பி, காஃபியுடன் பக்கோடா பொட்டலத்தை அவிழ்த்தேன். எனக்கு ஒரு பழக்கம். முதலில் பக்கோடா பேப்பரை படிப்பேன்..அப்புறம் தான் பக்கோடா!
அது போல் தான், அம்மா கொடுத்த காஃபி ஆறிக் கொண்டு இருக்க, அந்த பக்கோடா பேப்பரைப் படித்தேன். அதில் இருந்த ஒரு துணுக்கு என்னைக் கவர்ந்தது.அதாவது, திருமணத்திற்கு முன்,மேலை நாடுகளில் பாதாதி கேசம் வரை ’தரோவாக’ ’மெடிக்கல் செக்கப்’ செய்து கொள்வார்களாம்.எனக்கும் அது சரியெனப் பட்டது. திருமணம் நிச்சயம் ஆகி, இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது திருமணம் ஆக! நாமும் அந்த மாதிரி ’மெடிக்கல் செக்கப்’ செய்து கொண்டால் என்ன என்று தோன்றியது.ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆனால், இப்போதே அவர்களிடம் சொல்லி விடலாமே..அனாவஸ்யமாக ஒரு பெண்ணின் பாவத்தைக் கொட்டிக் கொள்ள வேண்டாமே’ என்கிற நல்லெண்ணம் தான் காரணம்!
எப்படா அண்ணா ஆஃபீஸிலிருந்து வருவார் எனக் காத்திருந்து, அண்ணா வந்ததும் “காஃபி குடிச்சுட்டு உடனே வா, சீக்கிரம் ஒரு இடத்திற்குப் போகணும்” என்றேன்.(என்னுடைய நிகழ்வுகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும் நாங்கள் அப்பாவை அண்ணா என்று தான் கூப்பிடுவோம் என்று!)
“ எங்கேடா, அண்ணா வந்ததும், வராததுமா?” - இது அம்மா.
“ வந்து சொல்றேன்” - இது நான்.
போகும் போதே அண்ணாவிடம் சொல்லி விட்டேன்..என்னை ஒரு மாதிரி பார்த்த அண்ணா ஒன்றும் சொல்லவில்லை.
எங்கள் தெருக் கோடியில் உள்ள டாக்டர் டிஸ்பென்ஸரிக்குச் சென்றோம்.
என் முறை வந்தது.
டாக்டரிடம் “ எனக்கு திருமணம் நடக்க இருக்கின்றது. அதற்கு முன், ஒரு ‘மெடிக்கல் செக்கப்’ செய்து கொள்ளலாம் என்று வந்திருக்கிறேன்’ என்று நான் சொல்ல, அவரும், ஒரு அரை மணி நேரம் முன்பு, அண்ணா பார்த்த மாதிரியே என்னைப் பார்த்தார்!
இருந்தாலும் டாக்டர் அல்லவா? உடனே சமாளித்துக் கொண்டு, “குட்..குட்..அப்படித் தான் இருக்கணும்” என்று சொல்லி விட்டு, “ நர்ஸ்” என்று ஒரு கூச்சல் போட, அதிரூப சுந்தரியாகவும்,அவலட்சணமாக இல்லாமலும் சற்று சுமாரான தோற்றத்துடன் ஒரு நர்ஸ் அங்கு பிரசன்னமானார்!
”சாருக்கு எல்லா டெஸ்டும் எடுக்கணும்.”
ப்ளட்?
ஷுகர்?
கொலஸ்ட்ரால்?
சால்ட்?
ஓகே!
ஓகே!!
ஓகே!!!
டாக்டருக்கு பரம திருப்தி..எனக்கும் மகிழ்ச்சி!
”இருங்க ஒண்ணே ஓண்ணு தான்!”
திடீரென்று விலாவில் ஒரு அழுத்து அழுத்தினார். பிறகு கேட்டார்.
“ வலிக்குதா?”
அழுத்தினால் வலிக்காதா?
“ வலிக்கிறது” என்றேன்.
சற்றே பரபரப்பான டாக்டர்,இன்னும் சற்று அழுத்தி,” இப்ப” என்றார்.
வலித்தது..
“வலிக்கிறது”
இன்னும் கூடுதலாய் பரபரப்பான, டாக்டர் வேறோருவரிடம் ஃபோனில் பேசினார்..உடனே அட்மிட் பண்ணிடுங்க” என்றெல்லாம் அவர் பேச்சில் அடி பட்டது
“என்ன சார்” என்று கவலையுடன் நானும், அண்ணாவும் ஒரு சேரக் கேட்டோம்.
“ சார் உங்க பையனுக்கு ’க்ரானிக் அப்பெண்டிசிடீஸ்’ இருபத்தி நாலு மணி நேரத்துக்குள்ள ஆப்பரேஷன் பண்ணியாகணும்..இல்லாட்டி..அவ்வளவு தான் சொல்ல முடியும் இப்ப ”
கனத்த இதயத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்..வீடு வரும் வரை அண்ணா ஒன்றும் பேசவில்லை!
வீட்டுக்கு வந்தவுடன் சரியான மண்டகப் படி!
’இந்த பைத்தியக் கார ஆட்டத்திற்கு நான் வரல்லே’ என்று அண்ணா சொன்னதினால், நான் மட்டும் இந்த டாக்டர் REFER செய்த அந்த ஸ்பெஷலிஸ்ட்டிடம் சென்றேன், சோகமாய்!
பத்து நிமிடம் காத்திருத்தல்!
பிறகு அழைப்பு.
“வாங்க”
“டாக்டர்... நான் ...இந்த ..”
“கொஞ்சம் பேசாம இரு, எனக்கு எல்லாம் தெரியும்” என்ற இந்த ஸ்பெஷலிஸ்ட் அந்த டாக்டர் பண்ணிய மாதிரியே விலாவை அழுத்தினார்.
“வலிக்குதா?”
வலித்தது.இருந்தாலும் சொன்னேன்.
“வலிக்கவில்லை”
உதட்டைப் பிதுக்கிக் கொண்ட அவர் இன்னும் பலமாக குத்தினார்.
“இப்ப?”
“ஊஹூம்”
இன்னும் பலமாய்....
“இப்ப சொல்லுங்க?”
கன்னா பின்னாவென்று வலித்தது.வலியில் அழுகையே வந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சொன்னேன்.
“வலிக்கவே இல்லையே!”
டாக்டருக்கு பிரமாதமான கோபம். என்னை வைத்துக் கொண்டே,அந்த டாக்டரை ஃபோனில் திட்ட, ஒரு வழியாய் வெளியே வந்து விழுந்தேன்!
அதற்குப் பிறகு?
அதற்குப் பிறகா??
அதற்குப் பிறகு தான் உங்களுக்குத் தெரியுமே.. நான் எப்போது பக்கோடா வாங்கினாலும், அது சுற்றியுள்ள பேப்பரை கண்ணை மூடிக் கொண்டு ’டஸ்ட் பின்’னில் போட்டு விடுவேன் என்பது!!!

21 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பதிவு பூராவும் அருமையாக நகைச்சுவையாக விறுவிறுப்பாக இருந்தது.

//நர்ஸ்” என்று ஒரு கூச்சல் போட, அதிரூப சுந்தரியாகவும்,அவலட்சணமாக இல்லாமலும் சற்று சுமாரான தோற்றத்துடன் ஒரு நர்ஸ் அங்கு பிரசன்னமானார்!//

இதைப்படித்ததும் நான் அப்படியே சொக்கிப்போய் விட்டேன், இராமமூர்த்தி சார். பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள். அன்புடன் vgk

மோகன்ஜி said...

மூவார்! கலக்கிட்டீங்க போங்க. உங்க விலாவுல டாக்டர்களெல்லாம் நல்லா வயலின் வாசிச்சிருக்காங்க..
பொட்டலம் கட்டின பேப்பர்ல சமயத்துல ரத்தினமாய் செய்து கிடைக்கும்.

கண்ணதாசன் வாங்கிய வேர்கடலைப் பொட்டல பேப்பரில், "கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?" இன்னும் வரிகள் இருந்தன..

அவ்வரிகள் கிளர்த்திய பாடல் "பார்த்தேன் சிரித்தேன் பக்கம்வர துடித்தேன்.. என்று படித்திருக்கிறேன்.
அடுத்தமுறை பக்கோடா வாங்கும் போது, பேப்பரை நீங்க படிங்க.. பக்கோடாவை நான் பாத்துக்கிறேன்

மோகன்ஜி said...

சின்னத்தப்பு மேல சொன்னதுல..
அந்த பாட்டு "அத்தான்.. என்னத்தான் அவர் என்னைத்தான் எப்படி சொல்வேனடி.."ஆகும்
"பார்த்தேன் சிரித்தேன் பக்கம்வர துடித்தேன்.. அல்ல. பக்கோடா நினைவில் நேர்ந்த பிழை பொறுத்து அக்காடாவென மேலே படிக்கவும்...

வசந்தமுல்லை said...

அருமையான ஹாஷ்யம்!!!!!!!!. வாய் விட்டு சிரித்தேன் !!!

manichudar blogspot.com said...

நடந்துக் கொண்டிருக்கும் அவலம் நகைச்சுவை இழையோடும் நல்ல பதிவு.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

இராஜராஜேஸ்வரி said...

முதலில் பக்கோடா பேப்பரை படிப்பேன்..அப்புறம் தான் பக்கோடா!.....//
Super.

குறையொன்றுமில்லை. said...

இன்னமும் பக்கோடா பேப்பரிலா வாங்குரீங்க?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நகைச்சுவை... ரொம்ப குத்திட்டாரோ டாக்டர்... சில சமயங்களில் நல்ல விஷயங்கள் கிடைக்கும் இது போன்ற பேப்பர்களில்...

படித்தேன்... ரசித்தேன்....

முனைவர் இரா.குணசீலன் said...

சமூக அவலத்தை நகைச்சுவை கலந்து அழகாகச் சொல்லியிருக்கீங்க..
அருமை.

முனைவர் இரா.குணசீலன் said...

//திருமணத்திற்கு முன்,மேலை நாடுகளில் பாதாதி கேசம் வரை ’தரோவாக’ ’மெடிக்கல் செக்கப்’ செய்து கொள்வார்களாம்.எனக்கும் அது சரியெனப் பட்டது.//

இதுபோல சிந்தனை கொண்டவர்களுக்கும் நல்லதொரு அறிவுறுத்தலாக இவ்விடுகை அமைகிறது.

முனைவர் இரா.குணசீலன் said...

இன்றைய மருத்துவமனைகளுக்கு ஒருவர் இப்படி சோதனைக்குச் சென்று ஒருகுறையும் இல்லாதவர், நலமானவர் என்று அறிக்கையுடன் வருகிறார் என்றால் அது ஒரு அரசு மருத்துவமனையாக இருக்கலாம் இல்லாவிட்டால் அந்த மருத்துவருக்கு உங்களைவிட பெரிய வருமானம் காத்திருக்கிறது என்று பொருள்.

middleclassmadhavi said...

ஒரு நல்ல ஐடியா, டாக்டர்களின் வியாபாரத்தனத்தால் கைவிடப்பட்டிருக்கிறது!!
:-))

ADHI VENKAT said...

படித்து ரசித்தேன். டாக்டர்களே இப்படித்தான்!
பக்கோடா எப்படி இருந்தது சார்?

ரிஷபன் said...

ஒரு டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாதுன்னு எந்த பக்கோடா பேப்பரும் சொல்லலியா.. பாவம்.. அவர் கற்றுக் கொண்ட சர்ஜரி வித்தையை பின் எங்கேதான் பயன்படுத்துவார்?!

A.R.ராஜகோபாலன் said...

ஒரு சராசரி இந்தியனின் மனநிலையை அப்படியே பிரதிபலித்த அற்புத பதிவு ராமமூர்த்தி சார் ,

இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சொன்னேன்.
“வலிக்கவே இல்லையே!”

ரசிக்காமல் இருக்க முடியலையே சார்

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

உங்களோட அநியாய நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு, சார்...

அப்பாதுரை said...

நகைச்சுவைக்குள்ளே புதைந்திருக்கும் நடைமுறை.அருமை.

[மெடிகல் செகப் ரிபோர்ட் இல்லாமல் மேரேஜ் லைசென்சு கிடைக்காது, என்ன செய்ய?]

நிலாமகள் said...

சிரிக்க‌வும் சிந்திக்க‌வும் செய்த‌ ப‌திவு!

மாதேவி said...

சிரிக்கவைத்தது. தப்பித்தீர்கள்.

பூந்தளிர் said...

வலைச்சர அறிமுகம் பார்த்து உங்க பக்கம் வந்து பின்னூட்ம்( கதையைப்படிச்சுட்டுத்தான்) போடுரேன். என் பின்னூட்டம் ஆஸ்கார் அவார்டை விட உசத்தி தானே?;;;;