Monday, January 10, 2011

கர்ணனும், நாகர்கோவிலும்!

இன்னமும் தெளிவாய் ஞாபகம் இருக்கிறது. நாகர்கோவிலில் நாங்கள் குடியிருந்த வீடு! 1963-64 வாக்கில் என நினைக்கிறேன். அன்று எங்கள் குடும்பம் அண்ணா,அம்மா, நான்,கிரி,முரளி அப்புறம் பாலு சித்தப்பா.
தாத்தா,பாட்டி,சிகாமணி சித்தப்பா,சகுந்தலா அத்தை எல்லாரும், குலசேகரம் பக்கத்தில் செருப்பாலூர் என்கிற ஊரில் இருந்தார்கள். அப்போது, இரவு டெய்லி சப்பாத்தி தான். உருளைக் கிழங்கு சப்ஜி சித்தப்பா செய்ய,அம்மா சப்பாத்தி இட, அண்ணா அதை ரோஸ்ட செய்ய,அந்த கால கட்டம் செம ஜாலி!
நாங்கள் இருந்த இடம் பெயர் வடிவீஸ்வரம்.இரண்டு பக்கமும் வீடுகள். எதிர்த்த பக்கத்தில் கால் மனை.எங்கள் பக்கம் அரை மனை என்பார்கள்.எங்கள் வீட்டுக்கு பத்து வீடு தள்ளி ஒரு பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரை எல்லாரும் ஊர் மாமா என்று அன்போடு அழைப்பார்கள். எல்லாருக்கும் நல்லது செய்வாராம், அவர்.
எங்கள் பக்கத்து வீட்டில் நாராயண வாத்யார் இருந்தார். பெரிய பையன் அந்த காலத்திலேயே, துர்காபூருக்கு போனதினால், கணேசன் அண்ணா எங்களுக்கு அவ்வளவாய் பழக்கம் கிடையாது. நாகராஜண்ணா செம ஜாலி.அப்புறம் கீதா, பாலா அக்காக்கள்.
’அம்மா உனக்கு காஃபிபொடி..அப்பாக்கு மூக்குப் பொடி மாமீ உங்களுக்கு என்ன
வேணும்’ என்று அந்த நாகராஜண்ணா நீட்டி முழக்கிக் கேட்பது எங்களுக்கெல்லாம் வேடிக்கையாய் இருக்கும்.
அங்கு பேர்களே வேடிக்கையாய் இருக்கும் .அடிக்கடி குழந்தை பிறந்து, இறந்தால்,அந்த குழந்தை தக்க, நம் பக்கத்தில் பிச்சை என்று பெயர் வைப்பார்கள். நாகர்கோவில் பக்கம் மண்ணாங்கட்டி என்று பெயர் வைப்பார்கள். இப்படியும் வினோதமாய் ஒரு பெயர்.மூக்காண்டி! என் ஃப்ரெண்ட் ஒருத்தன் பேர் மூக்காண்டி!
இந்த பக்கம் வீட்டில் யாரோ செட்டியார் இருந்தார்கள் என்று மங்கலாக ஞாபகம். அந்த வீட்டில் ஒரு சிறிய பெண் செத்துப் போய் விட்டாள்.அப்போது தான் எனக்கு சாவு என்றால் என்னவென்றே தெரியும். இன்னமும் எனக்கு பசுமையாய் ஞாபகம் இருக்கிறது. இறந்து போன அந்த பெண்ணைப் போல், ஒரு பெண்ணை நாங்கள் ரெயிலில் திருச்சி வரும் போது நான் பார்த்தேன்.செம ஆச்சர்யம். அடித்துச் சொல்வேன்.அதே பெண்! ரயில் மணியாச்சி..கடம்பூர் என்று போய்க் கொண்டிருக்கும் போது,அந்த குடும்பம் டிஃபன் பாக்ஸைத் திறந்தது.. தயிர் சாதம்(கடுகு தாளித்தது), தொட்டுக் கொள்ள எலுமிச்சை ஊறுகாய்!
பங்குனி உத்தரமோ அல்லது ஏதோ ஒரு திரு நாள். அன்று சாஸ்தாவைக் கொண்டாடுவார்கள். பக்கத்தில் ஒரு கிருஷ்ணன் கோவில்! அங்கிருந்து ஒவ்வோர் வீட்டிற்கும் எண்ணெய் கொடுப்பார்கள்.அதைத் தேய்த்து குளித்து,மடியாய் கிருஷ்ணன் கோவில் வருவோம். பூஜை நடக்கும். பூஜை முடிந்ததும் வடை,பாயசத்தோடு,முக்கனிகள் சேர்த்து, ஒரு சாப்பாடு போடுவார்கள்.அடேங்கப்பா..அத்தனைப் பதார்த்தங்கள்! மலைத்துப் போகும் அளவிற்கு விருந்து, திரட்டுப் பாலோடு!
ஆயுத பூஜை அன்று தடபுடலாய்,பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் விஜய தஸமி கொண்டாடுவார்கள். நிஜமாகவே, ஒரு பெண்ணை லக்‌ஷ்மி தேவி போல் அலங்காரம் செய்து,
ஒரு தாமரைப் பூ செட் செய்து,லைட்கள் அமர்க்களப் படுத்த...பிரமாதம்!
நாகராஜா கோவில் போனது ஞாபகம் வரவில்லை.
கீதா அக்கா, பாலா அக்காக்களோடு நானும், கிரியும் கர்ணன் படம் போனது இன்னமும்
தெளிவாய் இருக்க... மனம்,
‘இரவும், பகலும் மலரட்டுமே...
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே’
என்று ஏக்கத்துடன் அசை போட..வாவ் என்ன ஒரு அருமையான நாட்கள் அவை!!!!

15 comments:

ரிஷபன் said...

மகாராஜன் உலகை ஆளுவான் இந்த மகாராணி அவனை ஆளுவாள்.. பாடல் இன்னமும் ரீங்கரிக்கிறது..
பழைய நினைவுகளில் முத்துக் குளித்து எங்களுக்கு விருந்து வைக்கிறீர்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அப்போது ஒரு பத்து வயதுக்குள் தான் இருந்திருப்பீர்கள். நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு.

அப்பாதுரை said...

ரெயில் பெண் பற்றி இன்னும் சொல்வீர்களென்று நினைத்தேன்

மனோ சாமிநாதன் said...

பழைய நினைவலைகளுக்குத்தான் எத்தனை வலிமை! இன்று நினைக்கும்போது கூட மனதைக்குளிவிக்கிறது!!

Chitra said...

அருமையான பகிர்வு.... இனிய நினைவுகள்....

வெங்கட் நாகராஜ் said...

பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவதில் உள்ள ஆனந்தம்... ஆஹா... நல்ல பகிர்வு சார்.

ADHI VENKAT said...

அழகான நினைவலைகள். அதை இன்றும் நினைவில் வைத்திருப்பதில் ஆச்சரியம். பகிர்வுக்கு நன்றி.

மாதேவி said...

உங்கள் இனிய நினைவலைகள் எம்மையும் மகிழ்விக்கின்றன.

சிவகுமாரன் said...

\\\இறந்து போன அந்த பெண்ணைப் போல், ஒரு பெண்ணை நாங்கள் ரெயிலில் திருச்சி வரும் போது நான் பார்த்தேன்.செம ஆச்சர்யம். அடித்துச் சொல்வேன்.அதே பெண்!///

....எதோ பேய்க்கதை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். சப்பென்று ஆகிவிட்டதே.

குறையொன்றுமில்லை. said...

ஆமா,எப்பவுமே ஓல்ட் இஸ் கோல்ட்தான்.

கே. பி. ஜனா... said...

எங்கள் ஊரில் உங்கள் பால்ய வாழ்க்கை பற்றிய கட்டுரை பிரமாதம். ரசித்துப் படித்தோம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கர்ணனின் நினைவுகளோடு சேர்ந்த உங்கள் பின் திரும்பல் என்னையும் என் பால்யத்துக்குத் திருப்பியது.

போய்வா மகளே போய்வாவும், கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கேவும், உள்ளத்தில் நல்ல உள்ளமும் என்னைத் துரத்திக்கொண்டிருக்கின்றன ஆர்.ஆர்.ஆர்.சார்.

vasan said...

Nostalgia is a wonderful remedy to the current comedy

சாந்தி மாரியப்பன் said...

மூக்காண்டின்னு பேரிட்டவங்களுக்கு மூக்கு குத்தி வளையமும் போட்டிருப்பாங்க.

நாரோயிலுக்கு ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துட்டேன் :-))