Monday, January 24, 2011

திண்ணை பேச்சு!


கண்ணே ! கண்மணியே !
கற்கண்டே ! கனி ரசமே!
உந்தன் பாட்டன், முப்பாட்டன்,
காலத்தில் செல்விருந்தும்,
வரு விருந்தும்....
மேனி சிலிர்க்குதடா...
உள்ளம் விம்முதடா...
தொன்னையிலே நீர் மோராம்,
துணைக்குக் கொஞ்சம்
வெள்ளரி பிஞ்சாம்...
பக்கத்தில் பானகமாம்,
பானை நீரும் அங்குண்டாம்!
களைத்து வந்த வழிப் போக்கன்,
அத்தனையும் அருந்தி விட்டு,
களிப்புடனே செல்வதை நான்
கண் குளிரப் பார்த்திருக்கேன்,
கண் மணியே மேலும் கேள்!
மதிய நேரம் வந்து விட்டால்,
மனம் குளிர விருந்துண்டு!
தாம்பூல உபசாரம்
தடபுடலாய் நடக்குமிங்கே!
உன் தந்தை காலத்தில்,
என்னை சிறை வைத்து,
ஏக்கத்துடன் வெறிப் பார்வை,
பார்க்க வைத்து விட்டானே!
இன்னுமா தெரியவில்லை கண்ணே!
திண்ணை என்று அழைப்பார்கள் என்னை!!

18 comments:

ரிஷபன் said...

உண்மையிலேயே நான் அடிக்கடி ஏங்கும் ‘திண்ணை’
இப்போது எவர் வீட்டிலும் திண்ணை இல்லை.. அதுவும் எத்தனை விதமாய் தலைக்கு உசரம் வைத்த திண்ணைகள்.. பெருமூச்சுதான் இப்போது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சூப்பர் சார்! சூப்பரா எழுதி இருக்கீங்க! திண்ணை பேசுவதாய் என்ன ஒரு கற்பனை!

raji said...

ஆஹா!அற்புதம்,எனக்கு நான் சிறியவளாய் இருந்த போது
வீட்டில் இருந்த திண்ணை ஞாபகம் வருகிறது

***********************
நீங்கள் கேட்ட துரியனின் சகோதரர்கள் பெயரை எனது பதிவில்
வெளியிட்டிருக்கிறேன்,படித்துப் பார்க்கவும்

மனோ சாமிநாதன் said...

"தொன்னையிலே நீர் மோராம்,
துணைக்குக் கொஞ்சம்
வெள்ளரி பிஞ்சாம்...
பக்கத்தில் பானகமாம்,
பானை நீரும் அங்குண்டாம்!
களைத்து வந்த வழிப் போக்கன்,
அத்தனையும் அருந்தி விட்டு,
களிப்புடனே செல்வதை நான்
கண் குளிரப் பார்த்திருக்க"

அருமையான வரிகள்!

அந்த காலத்தில் எப்படியெல்லாம் சாதாரண வழிப்போக்கனுக்கே உபசரிப்பு இருந்திருக்கிறது! திண்ணையின் பெருமூச்சு நியாயம் தானே?

இன்னும் நிறைய கிராமங்களில் பழமையின் சின்னமாய் இந்த திண்ணை இருக்கிறது!

வெங்கட் நாகராஜ் said...

இப்போதெல்லாம் திண்ணை வைத்த வீடே இல்லாமல் போய்விட்டது. கிராமத்தில் கூட அடுக்குமாடி குடியிருப்பு! நெய்வேலியில் இருந்தபோது எங்கள் வீட்டில் கூட திண்ணை இருந்தது!

Muniappan Pakkangal said...

Nice Kavithai with nice words placed nicely.

சாந்தி மாரியப்பன் said...

திண்ணை.. காணாமல் போன விஷயங்களில் இதுவும் ஒண்ணு.

அப்பாதுரை said...

சுவாரசியம்

Chitra said...

வாவ்! நெல்லை பக்கம் உள்ள கிராமங்களுக்கு செல்லும் போது, சில வீடுகளில் பார்த்து இருக்கிறேன். உங்கள் பதிவை வாசித்ததும், ரொம்பவும் மிஸ் பண்ண வைத்து விட்டீர்கள். அருமையான பதிவு.

Philosophy Prabhakaran said...

சூப்பர் சார்... திண்ணைக்கும் ஒரு கவிதை எழுத தோன்றிய உங்கள் கிரியேட்டிவிட்டியை வியக்கிறேன்...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

திண்ணையோடு வாழ்ந்தவர்களால்தான் இப்படிக் கவிதையெழுத முடியும்.

திண்ணை என்கிற கான்செப்ட்டே நாம் இரவில் தூங்கிய பின்னும் தங்க தூங்க இடம் தேடி யாரும் அலையக் கூடாது என்கிற பரந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான்.

மன்னர்கள் தங்கள் உயரத்தைக் கோயில்கள் கட்டி வெளிப்படுத்தினார்கள்.

மக்களுக்குத் திண்ணைகள்.

அடுத்த கவிதை எதைப் பத்தி ஆர்.ஆர்.ஆர்.சார்?

குறையொன்றுமில்லை. said...

திண்ணை பேசுவதுபோல கற்பனை சூப்பர்.

ADHI VENKAT said...

வெயிலில் இளைப்பாற, வழிப்போக்கர்கள் படுத்துறங்க, தாக சாந்தி செய்து கொள்ளவென்று இருந்த திண்ணை காணாமல் போனதில் வருத்தம் தான். திண்ணைக்காக ஒரு கவிதை அருமை சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

திண்டு வைத்த திண்ணையில் படுப்பதே தனி சுகம் தான். திருச்சி டவுனில் என் வீட்டருகே உள்ள மாயவரம் லாட்ஜில், என் மகன் திருமண சமயம், ஒரு மாதம் ஏ.ஸீ. ரூம் எடுத்துத் தங்கினோம். (வீட்டில் சற்று இட நெருக்கடியாக இருந்ததால்). அந்த ஏ.ஸீ. ரூமை விட, அங்குள்ள பொதுப்பாதையில், கட்டப்பட்டுள்ள நீண்ட திண்ணைகளில் அமர்ந்து, மிகப்பெரிய திண்டுனில் சாய்ந்து அமர்ந்து, லாட்ஜுக்கு வருவோர் போவோரை வேடிக்கை பார்ப்பதில், ஒரு தனி சுகமே உண்டு.திண்ணையா அப்படியென்றால் என்ன என்று கேட்கும் குழந்தைகளை, இப்போதைக்கி, இந்த மாயவரம் லாட்ஜுக்குத் தான் நாம் கூட்டிச் செல்ல வேண்டும்.

Kavi said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

vasan said...

அப்போ திண்ணை பேச்சு,
இப்போ திண்ணை போச்சு.
ம‌னித‌த்தின் ப‌ரிண‌ம‌ வ‌ள‌ர்ச்சி.

சிவகுமாரன் said...

என் சிறு வயதில் கோடையில் திண்ணையில் படுத்துக் கொள்ள எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும். அந்த திண்ணையும் போச்சு. சண்டையும் போச்சு. சந்தோசமும் போச்சு.
அருமையான கவிதை சார்.

சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 said...

திண்ணை உண்மையிலேயே என்னை இக்கவியில் அமரவைத்துவிட்டது.


நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com