Sunday, January 16, 2011

எங்கே போகிறோம்????

எல்லாவற்றையும் சமன் செய்கிறது இயற்கை. அதோடு ஒத்து வாழ்ந்தால் ஒரு துன்பமும் கிடையாது.வயலில் விளை பொருள்..அதைத் தின்ன எலிக் கூட்டம்..எலியை பலகாரம் பண்ண பாம்பு என்று ECOLOGY BALANCE ஆகப் போய்க் கொண்டு தான் இருக்கிறது. மனிதன் சும்மா இருந்தாலே போதும். இவன் போய் பாம்பை அடிக்க,எலிகள் பல்கி பெருகி,அதனால் விளைச்சல் பாழ்!

எல்லாம் பேலன்ஸ் ஆகி விடும். இவன் போய் மரத்திற்கு ஆசை பட்டு காடுகளை அழிக்க, யானைக்கூட்டம் இருப்பிடம் தொலைந்தமையால், நகர்ப் புறம் வந்து
துவம்சம் செய்ய.. நமது முன்னோர்களுக்கு இது நன்றாகவே தெரியும். அவர்கள் இயற்கையோடு வம்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள். நாம் தான் அதை சீண்டிப் பார்த்து
சீரழிந்துக் கொண்டு இருக்கிறோம்!
NATIONAL HIGHWAY போட்டு மரங்களையெல்லாம் வெட்டி எறிந்து விட்டோம். BOULEWARD ROAD என்றால் இருபுறமும் அடர் மரங்கள் அடர்ந்த சாலை என்று அர்த்தம்.இன்று BOULEWARD ROAD இருக்கிறது. ஆனால் மரங்கள் தான் இல்லை!
தார் ரோடு மரங்களில்லாமல் தார் பாலைவனமாய் காட்சி அளிக்கிறது!ரோடின் இரு மருங்கிலும் பூச்செடிகள் வைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.இந்த NH ரோட்டினால் தான் எத்தனை சிரமம்? கிராம மக்கள், ஸ்கூல் பிள்ளைகள் என்று கிராமத்தில் இருக்கும் எல்லாருக்கும் ரொம்பவும் கஷ்டம்! முன்னைப் போல் ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு ஒரு சிறு வியாபாரி கிராமத்திலிருந்து நகர்ப் புரம் அவ்வளவு சுலபமாய் இப்போதெல்லாம் வர முடியாது. நகர்ப் புற மக்கள் சுலபமாய் போய் வர,கிராமங்களை காவு
கொடுத்துக் கொண்டிருக்கிறோம்!
எல்லா தரப்பினருக்கும் அது சினிமா என்றாலும் சரி..அரசு அலுவலகம் என்றாலும் சரி..
எல்லாமே நகர வாசிகளுக்குத் தான்! கிராமத்து மக்கள் இரண்டாம் பட்சம்!அவர்களும் இதை பெரிசாக எடுத்துக் கொள்ளாமல், வெகு சுலபமாய் நகரத்துப் பக்கம் MIGRATE ஆகி விடுகிறார்கள்! இதனால் நகர்ப் புற வாசிகளுக்கு சுமை மேலும் கூடி, கடைசியில் அது க்ளோபல் வார்மிங்கில் போய் முடிகிறது!
முதலில் இயற்கையைத் தொலைத்தோம்.. கிராமங்களைத் தொலைத்தோம்.. ...இருப்பது எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் தொலைத்துக் கொண்டு....
யோசித்துப் பாருங்கள்..ஆரோக்யமான மனிதர்கள் என்ன ஆனார்கள்? பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்!
நம்மிடம் இருந்த...............
சுவையான குடி நீர் போயிற்று!
ஆரோக்யமான காற்று போயிற்று!!
விஸ்தாரமான இடம் போயிற்று!!!
விவசாய நிலங்கள் போயிற்று !!!!
இழப்பதற்கு ஏதுமில்லாத சூழ் நிலையில்....
எங்கே தான் போகிறோம், நாம் ?

34 comments:

ரிஷபன் said...

பொங்கலுக்கு எங்கள் கிராமத்துக்குப் போய் வந்தோம்.. உற்சாகம் இப்போதும் மனசுக்குள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இங்கேயே இருக்கப் போவதான பாவனையுடன் எல்லாவற்றையும் துவம்சம் செய்துவிட்டுப் போகிறோம்.

அடுத்த தலைமுறைக்கு நிறையப் பள்ளங்களை விட்டுச் செல்கிறோம்.

நிரப்பக்கூடுமோ அவர்களால்?

Chitra said...

சுந்தர்ஜி said...

இங்கேயே இருக்கப் போவதான பாவனையுடன் எல்லாவற்றையும் துவம்சம் செய்துவிட்டுப் போகிறோம்.

அடுத்த தலைமுறைக்கு நிறையப் பள்ளங்களை விட்டுச் செல்கிறோம்.

நிரப்பக்கூடுமோ அவர்களால்?


... true.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிரச்சனைகளின் அடி வேர்களை சும்மா புட்டுப்புட்டு வைத்து விட்டீர்கள்.

இன்றும் சில கிராமங்கள் தங்களின் தனித்தன்மையை இழக்காமல், ஓரளவு ஒரு சில நவீன வசதிகளும் பெற்று, மனிதாபிமானம் மிக்க மனிதர்களுடன் காட்சி தருவது சற்று ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது.

நல்லதொரு சிந்திக்கத் தூண்டும் பதிவு தான்.

ஆனாலும் இன்றைய ஜனப்பெருக்கம், தேவைகள், தேவைப்படும் வசதிகள், அனைவருக்கும் எதிலும் ஒரு அவசரம்/அவசியம், நேரமின்மை என்ற சூழ்நிலையில் மாற்றங்களும் தேவையாகத் தானே உள்ளது! என்ன செய்ய முடியும்?

சிவகுமாரன் said...

\\இழப்பதற்கு ஏதுமில்லாத சூழ் நிலையில்....
எங்கே தான் போகிறோம், நாம் ?//

நம்பிக்கை இருக்கிறது இறையிடம் மட்டும் . வேறென்ன செய்ய ?

ஹ ர ணி said...

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

raji said...

முதலில் இயற்கையைத் தொலைத்தோம்.. கிராமங்களைத் தொலைத்தோம்.. ...இருப்பது எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் தொலைத்துக் கொண்டு....


இறுதியில் நாமே தொலைந்து போனவர்களாகத்தான் மாறிக் கொண்டிருக்கின்றோம்

vasan said...

"பார்வையை விற்று சித்திர‌ம் வாங்கும்" ம‌ட‌மையை, பார‌தி அப்போதே சொல்லிவிட்டான்.

அன்புடன் நான் said...

மிக நல்ல கண்ணோட்டம்தான்.... ஆனா காலம் வேகமா மாறிகொண்டே போகிறது..... ஏக்கம் தான் மிஞ்சும்
உங்க சமுதாய பார்வை மிக தெளிவு... பாராட்டுக்கள்.

அன்புடன் நான் said...

விவேகமான பேச்சுக்கு ஏன் வெட்டி பேச்சின்னு போட்டிருக்கிங்க? முடிந்தால் மாற்றுங்க..... ஏன்னா இந்த கருத்து நாளைக்கு வெட்டி பேச்சின்னு தேடுனாதான் கிடைக்கும்..... உலக வெப்ப்ம்... நவீன வாழ்வு.... இப்படி ஏதாவது போடுங்க.

அப்பாதுரை said...

எனக்கென்னவோ இது புலம்பல் போல் படுகிறது. மன்னிக்கவும்.
மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் தொட்டே, வரும் சந்ததி முன் சந்ததியை விட சிறப்பாகத் தான் இருந்திருக்கிறது. நம் பாட்டனார்கள் இருந்த உலகத்தை விட நம் நிலை உயர்ந்தே இருக்கிறது. மரங்களை வெட்டி மாளிகை கட்டுவதை ஏற்க முடியாவிட்டாலும், பெண்களை வீட்டில் அடைத்து, சாதிப்பெயரில் மக்களை அமுக்கி, இன்னும் என்னென்னவோ கொடுமைகள் செய்த நம் முன்னோர்களின் சமூகக் காடுகளையும் வெட்டித் தான் சரித்திருக்கிறோம். ஆக்கமும் அழிவும் ஒரே வட்டத்தின் எதிர் முனைகள். ஒன்றை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றதை மறந்துவிடுவது முறையல்ல என்றாலும்... இயற்கையே.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அப்பாத்துரை. இது எப்படிப் புலம்பலாகத் தெரிகிறது?
புரியவில்லை.

மனிதன் தனக்குத் தெரிந்ததாக நினைத்துக் கொண்டு இயற்கைக்கு எதிராக தன் அறிவைக் காட்டி மிரட்டுகிறான்.அது ஒரே வார்த்தையில் பதிலளித்துவிட்டு அடுத்த அடி கொடுக்கக் காத்திருக்கிறது.

பறவைகளும் விலங்குகளும் செடி கொடிகளும் இயற்கைக்கு எதிராய் அல்ல.அதற்கேற்றாற் போல்தான் தங்களை வடிவமைத்துக் கொள்கின்றன.

மனிதன் விஞ்ஞானம் என்ற பெயரில் எலிகளிடமும் குரங்குகளிடமும் உரிமையற்று சோதித்த தன் அரைவேக்காட்டுப் பரிசோதனையை மனிதனிலும் செலுத்தி ஐம்பது ஆண்டுகள் கழித்து அந்தச் சோதனையே தப்பு என்று சர்வ சாதாரணமாய் சொல்லிவிட்டு நகர்கிறான்.

ஒரு அலைபேசிக் கோபுரத்திடம் கூட தனக்கு ஒவ்வாதது எனத் தெரிந்து குருவிகளும் காக்கைகளும் அவற்றைத் துறக்கப் பழகுகின்றன.

குறைந்த பட்சம் கேடு விளைவிக்கும் ”மானாட
மயிலாட”வைக்கூட தன் குடும்பத்திற்கு வைக்கும் உலை என்று தெரியாமல் துறக்காது ரசிக்கிறான் மனிதன்.

அப்பாதுரை said...

பாயிண்டு தான் சுந்தர்ஜி.
நீங்க சொல்ற ஒவ்வொரு அழிவுக்குப் பின்னால் (முன்னால்?) ஒரு மாபெரும் ஆக்கமும் இருக்கு இல்லையா? அலைபேசியினால் எத்தனையோ கோடி மக்கள் நெருங்க முடிந்திருக்கே? எலிகளைச் சோதனைக்குப் பயன்படுத்தியதால் எத்தனை மனித உயிர்கள் குழந்தைகள் பிற்கால சாதனையாளர்கள் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கின்றன? வளர்ச்சிக்குச் சிறிது அழிவு ஏற்படுவதும் இயற்கை தானே? மனித மனம் முதிரும் பொழுது அழிவற்ற அல்லது அழிவு குறைந்த முறையில் வளரும் முறைகளையும் காணும். இதற்கு உதாரணங்கள் இருக்கு. பிலேஸ்டிக் உபயோகத்தைக் குறைக்கத் தொடங்கியிருக்கிறோம், உதாரணத்துக்கு. காகித உபயோகத்தைக் குறைக்கத் தொடங்கியிருப்பது இன்னொரு உதாரணம்.
நான் புலம்பல்னு சொல்றது அழிவை ஆதரிக்கும் கருத்தோடு அல்ல. அழிவின் மறுபுறம் வளர்ச்சியும் இருக்கிறது என்பதால். எல்லாவற்றுக்கும் மேலாக, 'எங்கே போகிறோம்?' என்ற கேள்வியில் தான் புலம்பல் தொனியைக் காண்கிறேன். நம் சந்ததி நம்மை விட அதிகம் சாதிக்கும் அழிவைக் குறைக்கும் என்பதில் தீவிர நம்பிக்கை இருக்கிறது - நம் முன்னோர்களை விட நம்முடைய ஆக்கப்பார்வை அதிகம் தான் என்று நினைக்கிறேன். (மரத்தை மட்டும் பார்க்காமல் from a holistic view of life and society)
ரொம்பப் புலம்புறேனோ?

அப்பாதுரை said...

புரியலையே சார்?
>>>மானாட மயிலாட”வைக்கூட தன் குடும்பத்திற்கு வைக்கும் உலை

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அப்பாதுரை.

வளர்ச்சி என்று எதைக் கருதுகிறோமோ அதில் கண்ணுக்குப் புலப்படாத பல உணர்வுகளை இழக்கிறோம்.

ஒரு தனி அறையில் மின் சாதனங்களின் துணையின்றி ஒருநாள் இருக்கும் பொறுமை எனக்கு இருந்தது.இருக்கிறது.என் மகனுக்கு இல்லை.

எல்லாவற்றிற்கும் எப்போதும் போல் நேரமிருக்கிறது.ஆனால் பொறுமையற்ற எதையும் காது கொடுத்துக் கேட்கும் கவனிக்கும் அக்கறை குறைந்துவிட்டது.

வேகமான வாழ்க்கை வாழும் சூழலை வளர்ச்சி என்ற பெயரில் சிதைத்துக் கொண்டு விட்டோம்.எந்த யோகா வகுப்புக்களுக்கும் போகமலேயே ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.

தவிர பௌதீக ரீதியான மாற்றம் அல்லது வளர்ச்சி எல்லா வகைகளிலும் நமக்கு குணநலன்களில் மாறுதலை ஏற்படுத்தாது போய்விட்டது.

இரண்டாவது வார்த்தையிலேயே கோபம் வந்துவிடுகிறது.விட்டுக் கொடுப்பது குறைந்துபோய்விட்டது.மற்றவர் மீதான அக்கறையும் சுத்தமாக இல்லை.விஞ்ஞான வளர்ச்சி இதையெல்லாம் திருப்பிக் கொடுக்குமா?அல்லது தன் தோல்வியை ஒப்புக் கொள்ளுமா?

நான்கு சுவர்களுக்குள் கூட்டுக்குடும்பங்களின் சந்தோஷமும் இருந்தது.சண்டைகளும் இருந்தது.அவை பெரியவர்களோடு பகிரப் பட்டு சமாதானமடைந்தது.உரிமை என்கிற பெயரில் குறைகளைப் பெரிது பண்ணும் குணத்தை விஞ்ஞான வளர்ச்சி கொடுத்திருக்கிறது.

மானாட மயிலாட பற்றிப் புரியாத அளவுக்கு நான் எழுதியிருப்பதாக நினைக்கவில்லை அப்பாதுரை.

அப்பாதுரை said...

சுந்தர்ஜி நீங்க சொல்றது எல்லாம் சரி. நம்ம குணம் குறைஞ்சு போச்சுன்னா அதுக்கு விஞ்ஞான வளர்ச்சியை எப்படி பழி போடுறது? எத்தனையோ நிறைகளுக்கும் அது தானே காரணம்? இருந்தாலும் வளர்ச்சியின் மறு பக்கம் அழிவு அதை மறக்கக் கூடாதுங்கற உங்க வாதம் ஏற்க வேண்டியது தான்.

மானாட சத்தியமா புரியலை சார். எனக்குப் புரியலேனா அது உங்க தவறாகாது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபனுக்கு நான்: ஒன்றிரண்டு கிராமங்கள் பழமை
மாறாமல் தான் இருக்கிறது..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்கள் கேள்வி சுடுகிறது சுந்தர்ஜி, உண்மையாகவே!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பார்த்தீங்களா? சித்ரா மேடம் கருத்தும் அதே தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வை கோ ஸார்..மாற்றம் தேவை தான். ஆனால் ஏமாற்றத்தை அல்லவா கொடுக்கிறது அது!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நம்முடைய நம்பிக்கையை வைத்து என்ன செய்ய முடியும் சிவகுமாரம்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஸாரி..சிவகுமாரன்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எஸ்...’தீதும் நன்றும் பிறர் தர வாரா..’
சரியாகச் சொன்னீர்கள், ஹரிணி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ராஜி சொல்வது நூற்றுக்கு நூறு கரெக்ட்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பாரதி காலம் போய்..கண்ணதாசனும் போய்..பா.விஜய்
யில் நிற்கிறோம்! என்ன ப்ரயோஜனம், வாஸன்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கருணாகரசு சொல்வதற்கு மன்னிக்கவும்! இது வெறும் வெட்டிப் பேச்சு தான்! நீ...ண்...ட ..உறக்கத்தில் இருக்கும் இந்த சமுதாய்ம் நான் ஊதிக் கொண்டிருக்கும் குறைந்த டெஸிபல் சத்தம் கொண்ட சங்கால் முழித்துக் கொள்ளவா போகிறது? என் எழுத்து எந்த அசைவையும் ஏற்படுத்தாத போது அது வெறும் வெட்டிப் பேச்சு தானே, கருணாகரசு?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்பாதுரை, நான் ECOLOGICAL BALANCING பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. நீங்கள் SOCIOLOGICAL
BALANCING பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சுந்தர்ஜி உங்கள் பேச்சில் பாரதியின் சீற்றம் தெறிக்கிறது..அது என்ன மானாட மயிலாட..அப்படி ஒரு ப்ரோக்ராம் சன் டிவியில் நடக்கிறது என்று நினைக்கிறேன்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்பாதுரை உங்களுக்கும் சுந்தர்ஜிக்கும் நடுவில் நான் வந்ததற்கு மன்னிக்கவும்..எங்கே நான் புலம்புகிறேன்?
இந்த சமுதாயத்தைச் சார்ந்து வாழ்பவன் என்கிற தொடர்பில், அதற்கு நான் எதாவது செய்ய வேண்டும் என்கிற் பொறுப்பில், என்னுடைய அதீத கவலையை உங்கள் எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிறேன். புலம்பல் இயலாமையின் வெளிப்பாடு.இது ஒரு பகிர்தல் அவ்வளவே!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சுந்தர்ஜி..அப்பாதுரை இங்க கொஞ்சம் பார்க்கறீங்களா?
நாம் பெறுவதை விட இழப்பது அதிகம் என்கிறேன்...
அதை ஒத்துக் கொள்கிறீர்களா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆக்கமும்..அழிவும் ஒரு VICIOUS CIRCLE..அது போய் கொண்டே இருக்கும்..என் ஐயப்பாடு யாதெனில்,
இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப் படுவோமா என்று தான்?

இது கூட ஒரு த்ரெளபதி வஸ்த்ராபரணம் தான்!
ஆனால், இங்கு துச்சாதனன் மட்டும் துகிலுறியவில்லை!பீஷ்மனும், விதுரனும் கூட துகிலுறிகிறார்கள்...
பாரதியின் பாஞ்சாலி சபதம் போல கூட ஒன்று எழுதலாம் இதை வைத்து! அவ்வளவு விஷயம் இருக்கிறது, இதில்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இது நம் பதிவுலக நண்பர்கள் மத்தியில் ஒரு சிறிய சலனம் உண்டு பண்ணினாலும் அது ஒரு பெரிய வெற்றி தான், இல்லையா நண்பர்களே?

அப்பாதுரை said...

ராமமூர்த்தி சார், புலம்பல் கெட்ட வார்த்தையாக இருந்தால் மன்னிக்கவும். புலம்பலும் இயல்பான எண்ண வெளிப்பாடு என்று நினைத்ததால் அந்த சொல்லை உபயோகித்தேன். நானும் ecology கருத்தில் தான் சொன்னேன். பெறுவதை விட இழப்பது அதிகம் என்பதை ஏற்க முடியவில்லை.
இதுல குறுக்கே வரதுல என்ன இருக்கு? என்னவோ நானும் சுந்தர்ஜியும் தனி விவாதம் பண்ற மாதிரி இல்லே சொல்றீங்க? நல்ல கருத்தை எழுதியிருக்கீங்க; அது இன்னும் கொஞ்சம் பரந்த சிந்தனை/விவாதங்களை வளர்க்குது, அவ்வளவு தானே?
இழப்பதற்கு ஒன்று இல்லாத நிலையில் பெறுவதற்கும் ஒன்றும் இருக்காது என்பது என் கருத்து.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஸார்..அப்பாதுரை, நான் இங்கு வேறுபடுகிறேன்..இங்கு இழப்பதும் இருக்கிறது..பெறுவதும் இருக்கிறது..ஆனால்,பெறுவதை விட இழப்பது அதிகம் என்பது என் தாழ்மையான கருத்து,அவ்வளவே!