Wednesday, March 20, 2013

காணாமல் போனவர்கள் !!!!


”மாமி, எங்கம்மா ஒரு டம்ளர் காஃபி பொடி உங்காத்திலேர்ந்து வாங்கிண்டு வரச் சொன்னா, 
ஒண்ணாம் தேதி வந்ததும் கண்டிப்பா தருவாளாம்” என்று உரிமையுடன் காஃபி பொடி கடன் கேட்டு வரும் பக்கத்து வீட்டுச் சிறுமி........
************************************************
“ என்னடா அப்படிப் பார்க்கிறே.. கண்ணாடி சீசால தண்ணி கலந்து ‘சிரப்’னு சொல்லி ஏமாத்தற என்னையே உங்கப்பா ஏமாத்திட்டார்..”
“எப்டி டாக்டர்?”
“அப்ப அரச மரத்தடி தெரு மாடில என் க்ளினிக் இருந்தது..உங்கப்பா அப்ப குந்தால வேலை..ஊட்டிலேர்ந்து உங்களுக்கு ஸ்பெஷலா உருளைக் கிழங்கு வாங்கி வந்திருக்கேன்’னு சொல்லி கீழே வாசல்ல கடை போட்டிருந்தவன்ட்ட வாங்கி என் தலையில கட்டிட்டார்டா..”
“உங்களுக்கு எப்டி டாக்டர் தெரியும் அது?”
“ நான் மாடி ஜன்னலேர்ந்து பார்த்துக் கிட்டு இருந்தேன்லே...ஹஹ்ஹா”
பேஷண்டிடம் சினேகபாவத்துடன் இருக்கும் டாக்டர்
************************************************
“என்ன மாமி பாப்பா, பட்டணத்திலேர்ந்து வந்திருக்கா?”
“ ஆமா செட்டியார்”
“ நல்ல சமாசாரம் தானே”
“ ஆமா...முழுகாம இருக்கா”
“ கவலையேப் படாதீங்க... நம்ம தாய்மானவர் இருக்காரு...வாளத் தார் ஒண்ணு சாத்தறேன்னு வேண்டிக்குங்க..சுகப் பிரசவமாயிடும்” என்று சொல்லிக் கொண்டு வாத்ஸல்யத்துடன் வீசைக் கல்கண்டை மளிகைக் கடை சாமான்களுடன் இலவசமாய் கொடுக்கும் மளிகைக் கடைக் காரர்...
************************************************
”சாமண்ணா, ஒரு அல்வாத் துண்டு, நெய் ரோஸ்ட், ஒரு காஃபி என் கணக்கில எழுதிக்க “ என்று முதலாளியிடம் ஜம்பமாய் சொல்லிக் கொண்டே வெளியே வரும் ஹோட்டலில் ’அக்கவுண்ட்’ வைத்துக் கொண்டிருக்கும் ஆசாமி..
************************************************
“சார் போஸ்ட்... தம்பி உனக்கு நாளைக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தரேன் என்று வேலைக்கான ஆர்டர் வரும் என்கிற நம்பிக்கையில் தனக்காக காத்திருக்கும் வேலை இல்லா பட்டதாரியிடம் கனிவாய்ச் சொல்லும் போஸ்ட்மேன்!
************************************************

அம்பிப் பயலுக்கு விளக்கெண்ணையை புகட்டுவதற்குப் பாடுபடும் தாத்தா,பாட்டி, அத்தை,அத்திம்பேர் மற்றும் குடும்ப நபர்கள்.மூக்கைப் பிடித்துக் கொண்டு அடம் பிடிக்கும்
அந்த அம்பிப் பயல்.அவன் படும் பாட்டைக் கண்டு அழும் பாக்கி வாண்டுகள்... சின்னக் குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் கொடுக்கும் வைபவம் இப்போது 
இருக்கிறதா?   
************************************************
ஒரு முப்பது,முப்பத்தந்து வருடங்களுக்கு முன்னால் இருந்த இவர்கள் எல்லாம் இன்றைய கால கட்டத்தில் எங்கே போய் விட்டார்கள்?

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லோருமே இப்படி அநியாயமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போய் விட்டார்களே! ;(

நினைத்தால் சற்று வருத்தமாகத்தான் உள்ளது.

அப்பாதுரை said...

ஏமாத்து டாக்டர் இன்னைக்கும் இருக்காரு - சினேகம் மட்டும் தொலைஞ்சு போச்சு.
மத்தவங்க.. பெருமூச்சு.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

super

வெங்கட் நாகராஜ் said...

நியாயமான கேள்வி....

பலரை இழந்து கொண்டேயிருக்கிறோம்! :(

திண்டுக்கல் தனபாலன் said...

...ம்... வருத்தமாக இருக்கிறது...

உஷா அன்பரசு said...

ம்.. காணாம போன இதை எல்லாம் நினைச்சி ஏக்க பட்டுக்க வேண்டியதுதான்!

G.M Balasubramaniam said...


அந்த நாளும் வந்திடாதோ. மனிதம் மறைந்து வருகிறது.

கோமதி அரசு said...

காணாமல் போனவர்களை நினைக்க வைத்துவிட்டீர்கள் விளக்கெண்ணெய் கொடுக்க பாட்டி பேரனை துரத்தும் படம் அழகு.

அந்த நாளும் வந்திடாதோ! என நினைக்க வைக்கிறது பதிவு.

Babu said...

என்றும் மகிழ்வாய் நெகிழ வைக்கும் எழுத்துக்கள். நிச்சயம் வெட்டி வேலை அல்ல. நல்ல உணர்வைத்தந்தது . மிகவும் நன்றி